இலங்கை பொருளாதார நெருக்கடி (பகுதி -1)

ஏகாதிபத்திய நாடுகள் உருவாக்கிய முதலாளித்துவ நெருக்கடியே!

இலங்கை பொருளாதார நெருக்கடி (பகுதி -1)

இலங்கையில் கடந்த சில ஆண்டுகளாகவே நீடித்து வந்த பொருளாதார மந்தநிலையானது (Recession), அண்மையில் ஒரு பெரும் பொருளாதார நெருக்கடியாக வெடித்துள்ளது. கடந்த ஆண்டு (2021) செப்டம்பர் மாதம் பொருளாதார அவசர நிலையை (Economic Emergency) கோத்தபயா - மகிந்த ராஜபக்சே கும்பல் அறிவித்ததிலிருந்து சிங்கள மக்கள் போராடத் துவங்கி விட்டனர். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களைக் கூட இறக்குமதி செய்ய முடியாத அளவிற்கு இலங்கையில் அந்நிய செலாவணி கையிருப்பு வற்றிவிட்டது. ஆகவே அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி பன்மடங்கு உயர்ந்துள்ளது. 13 முதல் 15 மணிநேரம் வரை மின்வெட்டால் பொதுமக்கள் மட்டுமின்றி, சிறு குறு தொழில்களும், பெரும் தொழில்களும், தொலைத்தொடர்பு மற்றும் வணிக நிறுவனங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றன. அடித்தட்டு வர்க்கம், நடுத்தர வர்க்கம் மட்டுமின்றி சிங்கள மேல்தட்டு வர்க்கம் கூட லட்சக்கணக்கில் திரண்டு பக்சே கும்பலைப் பதவி விலகக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுடன் கொழும்பு வாழ் தமிழர்கள், முஸ்லீம்கள், பௌத்த பிக்குகளும் போராடுகின்றார்கள். உணவு கலகங்கள் (Food riots) வெடிக்கும் அளவிற்கு நிலைமைகள் உருவாகியுள்ளன. மக்கள் போராட்டங்களை நசுக்குவதற்குப் பாசிச பக்சே கும்பல் ஏப்ரல்-1, 2022 முதல் முழு எமர்ஜென்சி நிலையை அறிவித்துள்ளது. பக்சே கும்பலின் அடக்குமுறைகளையும், தடுப்பரண்களையும் கால்களால் எட்டி உதைத்து விட்டு மக்கள் போராடி வருகின்றனர்.

 

கோத்தபயா - மகிந்த ராஜபக்சே கும்பல் ஆட்சியில் பதவி வகித்து வந்த பெரும்பாலான அமைச்சர்கள் பதவி விலகி விட்டனர். தேசிய அரசு அமைக்க வருமாறு பக்சே கும்பல் விடுத்த கோரிக்கையை எதிர்க்கட்சிகள் நிராகரித்து விட்டன. அக்கட்சிகள் நெருக்கடியைப் பயன்படுத்தி தமது ஆட்சியை நிறுவத் திட்டமிட்டு வருகின்றன. நெருக்கடிக்குப் பொறுப்பேற்று பதவி விலகுமாறு மக்கள் விடுத்த எச்சரிக்கையை பக்சே கும்பல் மதிக்க தயாரில்லை. ஆட்சியைத் தக்கவைக்க எதிர்க்கட்சி உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் சதிகளில் இறங்கியுள்ளது. பக்சே கும்பல் ஆட்சியை அகற்றாமல் வீடு திரும்ப போவதில்லை என வீதிகளில் சிங்கள மக்கள் முழங்குகின்றனர். வீட்டில் மின்சாரம் இல்லை; சமையல் செய்ய எரிவாயு இல்லை; வீட்டிற்குச் சென்று என்ன செய்யப்போகிறோம்? என்கின்றனர். கொழும்பில் வசிக்கும் பெண்மணி ஒருவர் இவ்வாறு கூறுகிறார் "சமையல் பொருட்கள் சரிவரக் கடைகளில் கிடைப்பதில்லை. அவ்வாறு கிடைத்தாலும் அவற்றை வாங்கி சமைக்க எரிவாயு இல்லை. இருக்கும் எரிவாயுவில் சமைத்து வைத்துச் சாப்பிடலாம் என்றாலும் அவற்றைக் கெடாமல் வைப்பதற்கு 13 மணி நேர மின்வெட்டு காரணமாக குளிர்சாதனப்பெட்டி வேலை செய்யவில்லை" என்கிறார். கொழும்பில் வசிக்கும் நடுத்தர, மேல் நடுத்தர வர்க்க குடும்பங்களின் நிலைமையே இதுதான் எனும்போது உழைக்கும் வர்க்கத்தின் துயரம் பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை. மண்ணெண்ணெய் இல்லாததால் சிங்கள மீனவர்கள் படகுகளை இயக்க முடியாமல்; வருமானம் இல்லாமல் பட்டினியில் வாடுகின்றனர். பெட்ரோல், டீசல், எரிவாயு வாங்க நீண்ட வரிசையில் நின்ற பலர் மாண்டு விட்டனர். பட்டினிச் சாவுகள், தற்கொலைகள் பெருகிவிட்டன. ஆனால் ஆளும் வர்க்கக் கட்சிகளை (ஆளும் கட்சி, எதிர்க்கட்சி) சேர்ந்த அரசியல்வாதிகள், அமைச்சர்கள், சிங்கள ஆளும் தரகு வர்க்க கட்சிகளை அண்டிப்பிழைக்கும் பாராளுமன்றவாத தமிழ்த் தேசிய கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் பெரும் தரகு முதலாளிகளின் வீடுகளுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் மின்வெட்டிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் எவ்வித தடையுமின்றி தொடர்ந்து அவர்களுக்கு மட்டும் உத்தரவாதப்படுத்தப் பட்டுள்ளது.

 

கடந்த சில ஆண்டுகளாகவே நீடித்து வந்த பொருளாதார மந்த நிலை குறித்து எவ்வித அக்கறையும் காட்டாமல், நெருக்கடியே இல்லை என்று மறுத்து வந்த கோத்தபயா ஆட்சி, 2021 செப்டம்பர் மாதம் தான் பொருளாதார எமர்ஜென்சியை அறிவித்தது. தமது ஏகாதிபத்திய ஆதரவு அரசியல் பொருளாதார கொள்கைகளால் உருவான நெருக்கடியை மூடி மறைத்துவிட்டு கோவிட் பொதுமுடக்கம்தான் நெருக்கடிக்குக் காரணம் என கோத்தபயா ராஜபக்சே கும்பல் கூறிவருகிறது. அண்மையில் நாடு திவால் நிலைக்குச் சென்று விட்டதை ஒப்புக் கொள்ளும் விதமாக அந்நிய கடன்களை தற்போது கட்ட முடியாது (Default) என்று அறிவித்துள்ளது.

 

இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு காரணங்கள் என்ன?

 

இலங்கை பொருளாதார நெருக்கடி என்பது அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சீனா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளின் ஏகபோக நலன்களையும், சிங்கள ஆளும் தரகு வர்க்க முதலாளிகள் நலன்களையும் பாதுகாக்கும் புதிய காலனிய அரசியல் பொருளாதார கொள்கைகளால் உருவான முதலாளித்துவ நெருக்கடி ஆகும். ஆகவே நெருக்கடிக்கான காரணங்களாகப் பின்வருவனவற்றைக் கூறலாம்:

 

1. அமெரிக்க, ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளின் நலன்களுக்கான புதிய பொருளாதாரக் கொள்கைகளை அமல்படுத்தியது;

2. புலிகளின் தலைமையிலான தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நசுக்குவதற்காக இலங்கை பொருளாதாரம் இராணுவ பொருளாதாரமாக மாற்றியமைக்கப்பட்டது;

3. 2000ம் ஆண்டுகளுக்குப் பிறகு சீன நிதி மூலதனத்தை உள்கட்டமைப்பு, வேளாண்மை, வர்த்தகம் மற்றும் ஜவுளி துறைகளில் அனுமதித்தது;

4. நியூயார்க் பங்குச் சந்தை, ஜப்பான் மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட சர்வதேச மூலதனச் சந்தையின் கடன் பொறியிலும், சீனாவின் கடன் பொறியிலும் சிக்கியது;

 

மேற்கூறிய காரணங்கள் தனித்தனியான நிகழ்வு போக்குகள் அல்ல. அவற்றிற்குள் நெருக்கமான வலைப்பின்னலைப் போன்று நிகழ்வு போக்குகளின் பிணைப்பு உள்ளது. அதாவது ஏகாதிபத்திய சிலந்தி வலையின் பற்பல முடிச்சுகளில் இலங்கை பொருளாதாரம் சிக்கியுள்ளது எனலாம். இந்த நெருக்கடியை இலங்கை மட்டுமல்லாமல் பாகிஸ்தான், இந்தியா, நேபாளம் மற்றும் வெனிசுலா உள்ளிட்ட அனைத்து புதிய காலனிய, அரைக் காலனிய, ஒடுக்கப்பட்ட நாடுகளும் எதிர்நோக்கியுள்ளன. இந்தப் பொதுப் போக்கின் அபாயச் சங்காகவே இலங்கை நெருக்கடியைக் காண வேண்டியுள்ளது.

 

சமூகநல பொருளாதாரத்திலிருந்து அமெரிக்க நலன்களுக்கான சந்தை பொருளாதாரத்திற்கு இலங்கை மாறுதல்

 

பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் கீழ் இலங்கையின் உற்பத்தி முறையானது ஐரோப்பியச் சந்தை நலன்களுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டது. தேயிலை, ரப்பர் உற்பத்தியை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அறிமுகப்படுத்தியது. இந்த பின்தங்கிய உற்பத்தி முறை இலங்கை மீதான அமெரிக்காவின் புதிய காலனிய கட்டத்திலும் தொடர்ந்து இன்றுவரை நீடிக்கிறது. சுயேச்சையான உள்நாட்டு தேவைகளுக்கான உற்பத்தியை ஏகாதிபத்திய நாடுகள் அனுமதிக்கவில்லை. ஆகவே இலங்கை தனது அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான தேவையை அந்நிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து பூர்த்தி செய்ய வேண்டியிருந்தது. உணவு தானியங்கள், பருப்பு வகைகள், பால் மற்றும் சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு இன்றுவரை அந்நிய நாடுகளையே நம்பியுள்ளது. இதுவே நெருக்கடிக்கான ஆணிவேராக உள்ளது. இது இலங்கை மட்டுமல்லாது இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட அனைத்து புதிய காலனிய நாடுகளும் எதிர்நோக்கி வரும் பிரச்சனை ஆகும்.

 

1950களின் பிற்பகுதிகளில், பிற புதிய காலனிய நாடுகளைப் போலவே இலங்கையிலும் சமூகநல அரசு கோட்பாட்டிலிருந்து இலங்கை பொருளாதாரம் சற்று மாற்றி அமைக்கப்பட்டது. இலவச கல்வி மற்றும் மருத்துவம், பொதுவிநியோக திட்டம் போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டன. 1970களில் சமூகநல அரசு கொள்கைகளை தூக்கியெறிந்து சந்தை பொருளாதாரத்தை (தாராளமயமாக்கல்) ஏகாதிபத்திய நாடுகள் அறிமுகப்படுத்தின. அதன் ஒரு பகுதியாகவே, தெற்காசியாவில் முதன்முதலாக இலங்கையில் 1977ல் தாராளமயமாக்கல் கொள்கையை ஜெயவர்தனே அரசு அமல்படுத்தியது. இதன்பொருட்டு ஐ.எம்.எப். (IMF) எனப்படும் சர்வதேச நாணய நிதியத்திடம் மூன்று தவணைகளில் முறையே 1977-78,  1979-82, மற்றும் 1983-84ம் ஆண்டுகளில் பெரும் தொகையைக் கடனாகப் பெற்றது. இது இலங்கை மீதான அமெரிக்காவின் புதிய காலனியத்தை மேலும் இறுக்கியது. வேளாண்மை, தொலைத்தொடர்பு மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்டத் துறைகளில் அமெரிக்க மூலதனம் அனுமதிக்கப்பட்டது.  கடனுக்கு மாற்றீடாக ஐ.எம்.எப்.பின் நிபந்தனைகளான பரிவர்த்தனை விகிதத்தில் தாராளமயமாக்கல்; விலை கட்டுப்பாடுகளை நீக்குதல்; உணவு மானியங்களை வெட்டுதல்; சம்பள வெட்டு; அந்நிய நிதி மூலதனத்திற்கான கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டு தனியார்மயம் - தாராளமயம் - வணிகமயத்தை ஊக்குவித்தல் போன்றவற்றை ஜெயவர்தனே அரசு அமல்படுத்தியது.  1970 - 77 ஆண்டுகளில் தொடங்கிய வருமான ஏற்றத்தாழ்வு அதன் பிறகு அதிகரிக்கத் தொடங்கியது. 40 சதவீத அடித்தட்டு மக்களின் வருமானம் 1973ல் 19.3% சதமாக இருந்தது; அது 1981-82ல் 15.3% குறைந்தது. மொத்த செலவினத்தில் சமூக நலத் திட்டங்களுக்கான செலவினம் 33%லிருந்து (1977) 22%மாக (1983) குறைக்கப்பட்டது. சுகாதாரத் துறைக்கான நிதி ஒதுக்கீடு 13% சதவீதமாக வீழ்ந்தது. 20% சத அடித்தட்டு மக்களின் தினசரி தனிநபர் கலோரி உட்கொள்ளும் அளவானது 1500 கலோரியிலிருந்து (1978-79), 1370 கலோரியாக குறைந்தது (1981-82). ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே ஊட்டச்சத்துக் குறைபாடு 6.1% சதவீதத்திலிருந்து 9.4% சதவீதமாக உயர்ந்தது. 5-14 வயதிற்கிடையிலான மாணவர்களின் கல்வி அறிவு பெறும் விகிதம் 88% சதவீதத்திலிருந்து 86% சதவீதமாகக் குறைந்தது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் இடைநிற்றல் 12.2% சதவீதத்திலிருந்து 13.5% சதவீதமாக உயர்ந்தது.

 

ஜெயவர்தனே அரசு அமல்படுத்திய புதிய பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்பட்ட நெருக்கடியின் சுமைகள் சிங்கள மக்கள் மீது சுமத்தப்பட்டன. சிங்கள மக்கள் ஆளும் ஜெயவர்தனே அரசிற்கு எதிராகப் போராட்டங்களில் ஈடுபட்டனர். சிங்கள மக்களின் கோபத்தை தமிழ்மக்கள் மீது திருப்பும் பொருட்டும் சிங்களப் பேரினவாத பாசிசத்தை ஜெயவர்தனே அரசு கட்டியமைத்தது. தமிழ் சிறுபான்மை தேசிய இனத்தின் மீது ஏவப்பட்ட சிங்களப் பேரினவாத பாசிச ஒடுக்குமுறைக்கு எதிர்வினையாக புலிகள் அமைப்பு தோற்றம் பெற்றது. புலிகளின் தலைமையில் தமிழீழ விடுதலைப் போராட்டம் முன்னுக்கு வந்தது. தமிழ் இன ஒடுக்குமுறையைத் தனது அரசியல் அடித்தளமாக சிங்கள ஆளும் வர்க்கங்கள் மாற்றியமைத்தன. இது மட்டுமன்றி புதிய பொருளாதாரக் கொள்கையை எதிர்த்த இடதுசாரி இயக்கங்கள், தொழிற்சங்கங்கள் கடுமையாக நசுக்கப்பட்டன. பாராளுமன்ற முறையை தூக்கியெறிந்து 'நிறைவேற்று அதிகாரம்' (executive power)  கொண்ட ஜனாதிபதி முறை (Presidential system) எனும் பாசிச முறை அமல்படுத்தப்பட்டது. "யானை தனது தும்பிக்கையை மட்டுமே அசைத்து உள்ளது; இன்னும் அது தனது முழு பலத்தையும் பயன்படுத்தவில்லை" என்று ஜெயவர்தனே (அவரது கட்சியின் சின்னம் - யானை)  கொக்கரித்தார்.

 

தாராளமயமாக்கலுக்கெதிரான போராட்டங்களை நசுக்குவதற்கு ஜெயவர்தனே கும்பல் 1980ல் எமர்ஜென்சி ஆட்சியைக் கொண்டு வந்தது. கருப்பு ஜூலை (1983) கலவரத்தை ஜெயவர்தனே அரசு கட்டி அமைத்தது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நசுக்குவதற்கு இலங்கை பொருளாதாரம் ராணுவ பொருளாதாரமாக மாற்றியமைக்கப்பட்டது. 1983ல் துவங்கி இன்று வரை புலிகளை அழிப்பதற்கும்; தமிழீழ மக்களைக் கொன்று குவிப்பதற்கும்; வடக்கு - கிழக்குப் பகுதிகளில் இராணுவ மயமாக்கல் - சிங்கள மயமாக்கலை தொடர்ந்து நிலை நிறுத்துவதற்கும் (6 தமிழர்களுக்கு ஒரு இராணுவ வீரர்), சிங்கள ஆளும் வர்க்கங்கள் சுமார் 200 பில்லியன் டாலர்களை செலவு செய்துள்ளது. இன்றைய தேதியில் இலங்கையின் அந்நியக் கடன் இதில் நான்கில் ஒரு பகுதிதான் (51 பில்லியன் டாலர்) என்பது குறிப்பிடத்தக்கது. 1983ல் துவங்கி 2008 இறுதியுத்தக் காலம் வரையிலும் ராணுவ பொருளாதாரத்தை ஈடு கட்ட பற்றாக்குறை பட்ஜெட்டுகளையே இலங்கை ஆளும் வர்க்கங்கள் தாக்கல் செய்து வந்தன. 1980-90களில் ஐ.எம்.எப். பிடம் வாங்கிய கடன்கள் மூலம் இலங்கை அரசு தனது நாட்டுச் சந்தையை அமெரிக்காவிற்கு திறந்து விட்டது மட்டுமின்றி, அந்த நிதியைக் கொண்டு தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஒடுக்குவதற்கும் பயன்படுத்தியது. அமெரிக்கா புலிகள் அமைப்பை ஒடுக்குவதற்கு ஏராளமான இராணுவ உதவிகளையும் செய்தது. ராணுவப் பயிற்சி, தளவாடங்கள், தொழில்நுட்ப உதவி மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு சிறப்புப் பயிற்சி போன்றவற்றை அமெரிக்காவின் பசிபிக் கமாண்ட் (United States Pacific Command) வழங்கியது. க்ளஸ்டர் (Cluster) வெடிகுண்டுகள், SLNS சமுத்திரா போர்க்கப்பல், கேபிர் (Kefir) மற்றும் எம்ஐ-24 போன்ற நவீன ரக போர் விமானங்களையும் அமெரிக்கா வழங்கியது. அமெரிக்காவுடன் இணைந்து இந்திய ஆளும் வர்க்கங்களும் தமது விஸ்தரிப்புவாத நலன்களிலிருந்து இலங்கை சந்தையைக் கைப்பற்ற தமிழ் இன ஒடுக்குமுறைக்குத் துணை போயின; ஏராளமான பொருளாதார - இராணுவ உதவிகளை வழங்கத் துவங்கின. திரிகோணமலையில் அமெரிக்கா இராணுவம் தளம் அமைக்கவும் இலங்கை அனுமதி அளித்தது. அமெரிக்கா இந்தியாவுடனான வர்த்தக உறவுகளால் இலங்கையின் உற்பத்தி வளர்ச்சி தடுக்கப்பட்டு அந்நாட்டில் தொடர் வர்த்தகப் பற்றாக்குறை நிலவி வந்தது.

 

2008 இறுதி யுத்தத்திற்கு பிறகு, 2009ம் ஆண்டு யுத்தத்தால் நாசமாக்கப்பட்ட இலங்கைப் பொருளாதாரத்தை மீட்பது எனும் பெயரில் ஐ.எம்.எப். இலங்கைக்கு கடன் தந்தது. மகிந்த ராஜபக்சே கும்பல் ஐ.எம்.எப். விதித்த நிபந்தனைகளை ஏற்று (உதாரணமாக 2011க்குள் ஜிடிபியை 5% சதமாக கட்டுப்படுத்த வேண்டும், அந்நிய முதலீட்டை உயர்த்த வேண்டும்) சுமார் 2.6 பில்லியன் டாலர்கள் கடனாகப் பெற்றது. ஆகவே மாற்றுப் பொருளாதார நடவடிக்கைகளை பக்சேவால் எடுக்க முடியவில்லை. 2016ல் அமெரிக்க எடுபிடி மைத்ரிபாலா ஸ்ரீசேனா ஆட்சி மீண்டும் ஐ.எம்.எப்.பிடமே 1.5 பில்லியன் டாலர்களை ஜிடிபி 3.5% சதமாக கட்டுப்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் கடனாகப் பெற்றது. இதன் காரணமாகவும், சீனாவுடனான வர்த்தகப் பற்றாக்குறை காரணமாகவும் 2015ல் 5% சதமாக இருந்த ஜிடிபி 2019ல் 2.9% சதமாகவும், முதலீட்டு விகிதம் 31.2% சதத்திலிருந்து 26.8% சதமாகவும், சேமிப்பு விகிதம் 28.8% சதத்திலிருந்து 24.6% சதமாகவும், அரசின் வருவாய் ஜிடிபியில் 14%லிருந்து 12.6% சதமாகவும் குறைந்தது. கடன் ஜிடிபியில் 70%லிருந்து 88% சதமாக உயர்ந்தது.

 

 

(தொடர்ச்சி பகுதி -2 ல்)