இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: இந்தியாவுக்கு குறைந்த வரி.. பாகிஸ்தான், சீனா, வங்கதேசத்திற்கு டிரம்ப் விதித்த வரி எவ்வளவு தெரியுமா?

One India Tamil

இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: இந்தியாவுக்கு குறைந்த வரி.. பாகிஸ்தான், சீனா, வங்கதேசத்திற்கு டிரம்ப் விதித்த வரி எவ்வளவு தெரியுமா?

அமெரிக்காவுக்கும், நம் நாட்டுக்கும் இடையே நீண்ட காலமாக இழுபறியாக இருந்த வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி பரஸ்பர வரியை 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குறைத்துள்ளார். அதேபோல் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் விதிக்கப்பட்ட 25 சதவீத வரியையும் ரத்து செய்ய வெள்ளை மாளிகை முடிவு செய்துள்ளது. இதனால் நம் நாட்டுக்கு அமெரிக்கா விதித்த 50 சதவீத வரி 18 சதவீதமாக குறையும் நிலையில் சீனா, பாகிஸ்தான், வங்கதேசத்துக்கு டிரம்ப் விதித்த வரிகள் பற்றி இங்கு பார்க்கலாம்.

நம் நாட்டுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தக பிரச்சனை ஏற்பட்டது. இதற்கு முக்கிய காரணம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தான். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை விதித்தார். இந்த வரி 2 கட்டங்களாக விதிக்கப்பட்டது.

முதலில் அமெரிக்காவுடனான வர்த்தக பற்றாக்குறையை சுட்டிக்காட்டி 25 சதவீதமும், அதன்பிறகு ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை சுட்டிக்காட்டி 25 சதவீதம் என்று மொத்தம் 50 சதவீத வரியை விதிக்கப்பட்டது. இது அமெரிக்காவுக்கான நம் நாட்டின் பொருட்களின் ஏற்றுமதியை குறைத்தது.

மேலும் இருநாடுகளும் இணைந்து புதிய வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் உடன்பாடு எட்டப்படாத நிலைியல் நேற்று டொனால்ட் டிரம்ப் - பிரதமர் மோடி ஆகியோர் தொலைபேசி வழியாக பேசினர். அப்போது இருநாடுகள் இடையேயான வர்த்தகம் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இந்தியாவுக்கு, அமெரிக்கா விதித்த 25 சதவீத வர்த்தக வரி 18 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பை டொனால்ட் டிரம்ப் வெளியிட்டார்.

அதுமட்டுமின்றி ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் நம் நாட்டுக்கு கூடுதலாக அபராத வரியாக விதிக்கப்பட்ட 25 சதவீதத்தையும் நீக்க அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை உறுதியளித்துள்ளது. நம்நாடு அமெரிக்கா, வெனிசுலாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க ஒப்புக்கொண்டதாக டிரம்ப் கூறியதாக சொல்லப்படும் நிலையில் அடுத்ததாக 25 சதவீத வரி ரத்து செய்யப்படுகிறது. இது சாத்தியமாகும் பட்சத்தில் நம் நாட்டுக்கான அமெரிக்காவின் வரி என்பது 50 சதவீதத்துக்கு பதில் 18 சதவீதமாக மட்டுமே இருக்கும்.

அதுமட்டுமின்றி பிற நாடுகளை ஒப்பிடும்போது நம் நாடு இனி குறைந்த வரி தான் அமெரிக்காவுக்கு செலுத்தும். குறைந்த வரியில் நம் நாடு எளிதாக பொருட்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும். இதனால் நம் நாட்டின் வர்த்தகர்கள் அமெரிக்க மார்க்கெட்டை மீண்டும் ஆக்கிரமிப்பார்கள்.

ஏனென்றால், டொனால்ட் டிரம்ப் பிரேசிலுக்கு 50 சதவீத வரியை விதித்துள்ளார். மியான்மர் மற்றும் லாவோஸ்க் தலா 40 சதவீதம், சீனாவுக்கு 37 சதவீதம், தென்னாப்பிரிக்காவிற்கு 30 சதவீதம், மேலும் வங்கதேசம், வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் 20 சதவீத வரியை செலுத்துகின்றன.

மலேசியா, கம்போடியா, தாய்லாந்து மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் 19 சதவீத வரியை எதிர்கொள்கின்றன. ஆனால் நம் நாடு 18 சதவீத வரியை மட்டும் தான் செலுத்த வேண்டியிருக்கும். அந்த வகையில் சீனா, பாகிஸ்தான், வங்கதேசத்தை விட இந்தியாவுக்கான வரி குறைய வாய்ப்புள்ளது.

அதேவேளையில், இந்தியாவை ஒப்பிடும்போது இன்னும் சில நாடுகள் அமெரிக்காவுக்கு குறைந்த வரிகளை செலுத்தி வருகிறது. அதன்படி ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், தென் கொரியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் 15 சதவீத வரி மட்டும் விதிக்கப்பட்டது. பிரிட்டன்10 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

One India Tamil

https://tamil.oneindia.com/news/washington/india-us-trade-deal-india-gains-tariff-advantage-from-donald-trump-over-china-pakistan-bangladesh-770725.html

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு