டான் நதி அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது - மிக்கேல் ஷோலக்கோவ்

Subbalakshmi Subburaj

டான் நதி அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது - மிக்கேல் ஷோலக்கோவ்

"மிக்கேல் ஷோலக்கோவ்" எழுதிய "டான் நதி அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது"  (And Quiet Flows the Don) நூலை யாரோ எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள், யாரிடமாவது பிரதி இருந்தால் தாருங்கள் என்று யாரோ ஒருவர் இணையத்தில் கேட்டிருந்தார்கள்.

1925 ஆம் ஆண்டில் துவங்கி 1940 வரை நான்கு தொகுதிகளாக எழுதப்பட்ட நாவல், கஸாக்குகள் என்றொரு சுதந்திரமான இனக் குழுவின் வாழ்க்கை முறை குறித்துப் பேசுகிறது. 

முதல் உலகப்போரில் கஸாக்குகளின் பங்கு, சோவியத் புரட்சியின் போது அரசோடு அவர்கள் நடத்திய கிளர்ச்சி என்று ஏறத்தாழ அரை நூற்றாண்டு ரஷ்ய வரலாற்றை ஒற்றைக் கதையின் வழியே வாசிப்பவர்களிடம் கொண்டு சேர்த்தவர் "மிக்கேல் ஷோலக்கோவ்". 

1965 ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. ஏறத்தாழ "மாக்ஸிம் கார்க்கி"யின் தாய் எப்படி ஒரு தேசத்தின் மனசாட்சியாக அதன் பண்பாட்டு அரசியல் வெளிகளில் நிகழ்த்திய மாற்றங்களைக் கொண்டு சேர்த்ததோ...

அதைப் போலவே கஸாக்குகளின் வாழ்க்கையை அவர்களின் நீண்ட கால அரசியல் பண்பாட்டு வெளியை அப்பட்டமாக உலகின் முன்வைத்த நாவல் "டான் நதி அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது" (And Quite Flows the Don)

இந்த இரவில் எனக்குள் அந்த வாசிப்பின் நினைவுகள் துள்ளி எழுந்து ஒரு விதமான மலர்ச்சியைக் கொண்டு வந்தது. மீண்டும் ஒருமுறை முதல் தொகுதியை எடுத்து அதன் முதல் அத்தியாயத்தை வாசித்தேன். 

வழக்கம் போலவே புதிய திறப்புகள், டான் நதி குறித்த எனது முந்தைய சித்திரங்களுக்கும், இப்போதைய சித்திரங்களுக்கும் இடையிலான வேறுபாடு என்றொரு கலவையான சிந்தனையோட்டங்கள் எனக்குள் நிகழ்ந்து வாழ்வு குறித்த மானுட மதிப்பீட்டை ஒரு படி நகர்த்தி விட்டுப் போனது.

எனக்குள் நான் என்கிற சிந்தனை தோன்றாத காலத்தில் எழுதப்பட்ட கதை, நாம் நேரடியாக இதுவரை சந்திக்காத நிலக்காட்சிகள், நமக்குத் தெரியாத அரசியல் பண்பாட்டு வெளி. 

என்னில் இருந்து தொலைதூரம் விலகிக் கிடந்த ஒரு பேரண்டத்தின் அசைவை, இயக்கத்தை இன்றைய நாளில் கொண்டு வந்து சேர்க்கும் மாயத்தை வழங்குகிறது இலக்கியம்.

"மெலகோவ்" என்றொரு பண்ணை டான் நதிக்கரையின் பள்ளத்தாக்கில் அப்போது இயங்கிக் கொண்டிருந்தது, பண்ணையில் கால்நடைகளை கொட்டடியில் வளர்க்கும் வளாகம் ஒன்றும், வெவ்வேறு காய்கறிகளை விளைவிக்கிற சதுரத் தோட்டங்களும் இருக்கிறது. கால்நடை வளாகத்தின் வாசல் வடக்கில் இருந்து டான் நதியை நோக்கித் திறக்கிறது.

சுண்ணாம்புப் பாறைகள் சுற்றிலும் குன்றுகளாக வளர்ந்து கிடக்கிறது, 50 அடியில் சறுக்கி ஈரமும் பாசியும் படர்ந்து கிடக்கிற செங்குத்தான சரிவில் இருக்கிறது அந்த வாசல். கால்நடைகளை அந்த செங்குத்தான சரிவில் ஓட்டிக் கொண்டு நதியின் ஒரு கரையை அடையலாம். 

தண்ணீர் காட்டித் திரும்பக் கொண்டு கொட்டடியில் அடைக்கலாம். அல்லது கரையின் வழியாக வடக்கில் நகர்ந்து கிழக்கில் இருக்கும் ஹெட்மேன் சதுக்கப் புல்வெளியில் மேய்ச்சலுக்கும் கொண்டு போகலாம்.

கால்நடை வளாகத்தில் இருந்து வழியெங்கும் சிப்பிகளைப் போல மட்டி ஓடுகளின் குவியல், நதியின் மென்னலைகள் தழுவிக் கரைத்த சரளைக் கற்கள், அதற்குப் பிறகு காற்றில் ஆடும் இரும்புக் குழம்பைப் போலக் காட்சி தரும் டான் நதியின் நீலநிற நீர்ப்பரப்பு.

வில்லோ மரக்கட்டைகளை கம்பிகளை வைத்து முறுக்கிக் கட்டப்பட்டிருக்கும் பண்ணையின் வேலியின் மீது காலையிலும், மாலையிலும் வீழும் ஆரஞ்சு நிற சூரியக் கதிர் மேலகோவ் பண்ணையை டான் நதியின் சகோதரியைப் போல நமக்கு அறிமுகம் செய்கிறது.

அலேக்காக வாசிக்கிறவனை தூக்கிக் கொண்டு போய் டான் நதிக்கரையில் எறிந்து விட்டு அந்த பழுப்பு நிற ஆடுகளின் பின்னே நாவல் முழுவதும் நம்மை நடத்திக் கொண்டு போகிறார் "மிக்கேல் ஷோலக்கோவ்".

காஸாக்கான "புரோகோஃபி மெலேகோவ்" தான் மேலகோவ் பண்ணையின் இளம் வாரிசு, பெரியவர் துடிப்பான கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றும் பழமைவாதி.

துருக்கியுடனான ரஷ்யாவின் கடைசி போருக்கு முந்தைய போரின் போது தான் புரோகோஃபி தன்னுடைய கிராமத்திற்குத் திரும்பி வருகிறார். 

அவர் தன்னுடன் ஒரு துருக்கிய மனைவியை அழைத்து வருகிறார். அவள் ஒரு சிறிய பெண், தலை முதல் கால் வரை எப்போதும் துப்பட்டாவால் மூடப்பட்டிருந்தாள். அவள் முகத்தை மறைத்து வைத்திருந்தார் புரோகோஃபி, 

மிக அரிதாகவே தனது காட்டுத்தனமான, ஏக்கம் நிறைந்த கண்களை அவள் வெளிப்படுத்தினாள். அந்த பட்டுத் துப்பட்டா விசித்திரமான துருக்கிய வாசனைத் திரவியங்களின் நறுமணம் சுமந்தது.

துப்பட்டாவின் வானவில் நிறங்களும் வடிவமைப்பும் கஸாக் பெண்களிடையே பொறாமையைத் தூண்டுகிறது. அந்த துருக்கியப் பெண் புரோகோஃபியின் உறவினர்களிடமிருந்து விலகியே இருந்தாள்.

விரைவில் முதியவரான மெலேகோவ் தன் மகன் புரோகோஃபிக்கு அவனது பங்கை பிரித்துக் கொடுக்கிறார். தன் வாழ்நாள் முழுவதும் முதியவர் தன் மகனின் வீட்டிற்குள் கால் வைக்க மறுக்கிறார், ஒரு துருக்கியப் பெண்ணை கஸாக்கின் வீட்டிற்குள் சேர்க்கிற அவமானத்தை அவரால் தாங்க முடியவில்லை.

கஸாக்குகளுக்கும், புரோகோஃபியின் துருக்கிய மனைவிக்கும் இடையிலான பிணக்கு முற்றி அவர்கள் அவளை சாபங்களைக் கொண்டு வந்த மந்திரவாதி என்று புரணி பேசுகிறார்கள்.

ஒருநாள் அவர்கள் அவளைக் கொன்று விடுகிறார்கள். நிறைமாத கர்ப்பிணியான அவள் ஒரு மகனை ஈன்று அந்த மாலையில் இறந்து போகிறாள். மகன் வளரும் போது கூடவே வரலாறும் வளர்கிறது.

மிக்கேலின் நிலக்காட்சி வர்ணனைகளும், மனிதர்களை அவர் விவரிக்கிற விதமும் பொறாமைப் பட வைக்கிறது. ஆனால், மிக்கேல் இந்தக் கதையின் நான்கு தொகுதிகளையும் எழுதி முடிக்க 15 ஆண்டுகள் உழைத்திருக்கிறார்.

கஸாக் என்ற சொல் துருக்கிய மொழியில் கஜாக், அதாவது சுதந்திரமான மனிதர் அல்லது சாகசக்காரர் என்கிற அவர்களது போர் வீரர் அடையாளத்தை எதிரொலிக்கிறது. 

ரஷ்யா, போலந்து-லிதுவேனியக் கலவை மற்றும் ஒட்டோமான் பேரரசுகளின் எல்லைகளில், குறிப்பாக டான், டினிபர் மற்றும் குபான் ஆறுகளை ஒட்டிய பகுதிகளில் அவர்கள் தன்னாட்சி பெற்ற சமூகக் குடியிருப்புகளை உருவாக்கினார்கள். 

அன்றைய நாட்களில் பல்வேறு பிற சமூகங்கள் நிலப்பிரபுக்களின் அடிமைகளாக இருந்த போது கஸாக்குகள் தனித்தன்மை கொண்ட, விடுதலை வேட்கை கொண்ட போர்க்குடிகளாக வாழ்ந்திருக்கிறார்கள்.

பின்னாட்களில் துருக்கிய மற்றும் தாதர் இனக்குழுவோடு நிகழ்ந்த கலப்பு இவர்களின் பண்பாட்டு வெளியை மேலும் தனித்துவம் கொண்டதாக மாற்றுகிறது.

17 மற்றும் 18ஆம் நூற்றாண்டுகளில், கஸாக்குகள் ரஷ்ய பேரரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்தார்கள். "ஸ்டென்காரஜின்" மற்றும் "யெமெல்யான் புகாச்சேவ்" போன்ற முன்னோடிகள் கஸாக்குகள் இன்றுவரை கொண்டாடும் புகழ்பெற்ற கிளர்ச்சியாளர்கள்.

19ஆம் நூற்றாண்டில், ரஷ்ய அரசு கஸாக்குகளுக்கு நிலம் மற்றும் சலுகைகள் வழங்கி, அவர்களை இராணுவ சேவைக்கு பயன்படுத்திக் கொண்டது. ரஷ்ய புரட்சி மற்றும் உள்நாட்டு போரின்போது, கஸாக்குகள் பிரிந்து, சிலர் பொல்ஷெவிக்குகளையும், சிலர் வெள்ளை நிறப் படைகளையும் ஆதரித்தனர்.

சோவியத் கொள்கைகள் அவர்களின் சுதந்திரத்தை அடக்கின, ஆனால் அவர்களின் அரசியல், சமூகம் மற்றும் கலை பண்பாட்டு வெளி இடைவிடாது தொடர்ந்தது. 

இன்று, கஸாக் கலாசாரம் ரஷ்யாவிலும், உக்ரைனிலும் திருவிழாக்கள், இசை மற்றும் வரலாற்று மறுநிகழ்த்தல்கள் வழியாகக்  கொண்டாடப்படுகிறது. குதிரை சவாரி மற்றும் நாட்டுப்புற பாடல்கள் போன்ற தங்கள் வரலாற்று அடையாளங்களை அவர்கள் குழந்தைகளுக்கு இப்போதும் கற்பிக்கிறார்கள்.

நான் சொல்லி இருக்கிற முதல் அத்தியாயத்தின் சுருக்கம் தான் கஸாக்குகளின் முதல் துருக்கியக் கலப்பாக "மிக்கேல் ஷோலக்கோவ்" முன்வைக்கிற கதை. மோதலும், பிணக்குமாக உருவாகிய இந்த புரோகோஃபியின் கதையில் வரும் துப்பட்டாவால் மூடிக்கொண்டு தனது பண்பாட்டைப் பின்பற்றிய துருக்கியப் பெண்தான் இன்று கஸாக்குகளுக்கும், துருக்கியர்களுக்குமான இணைப்புப் பாலம்.

மீண்டும் ஒருமுறை நான்கு தொகுதியையும் வாசிக்க வேண்டும், அதுவரை வாழ்க்கை இந்த உடலையும், மனதையும் சிதைத்து விடாது காத்தருள வேண்டும். 

வாசிக்கிற ஒரு பத்து நாட்களாவது அந்த இரும்புக் குழம்பு மாதிரியான டான் நதியின் மேற்பரப்பில் குதித்து மூழ்கி மெலெகாவ் பண்ணையில் இருக்கிற கால்நடை வளாகத்தின் வடக்கு வாசல் வழியாக ஒரு நடை சென்று வந்து விடலாம்.

ஹெட்மேன் சதுக்கப் புல்வெளியில் நடந்தபடி அந்தக் கிராமத்தின் ஒரு வில்லோ மரக்கட்டைகளால் ஆன வீட்டின் சிற்றுண்டியை சுவைத்து விட வேண்டும். 

இலக்கியத்தைத் தவிர எழுத்தைத் தவிர இப்படியான மனவுலகில் நிகழும் அதிசயங்களை நமக்கு யார்தான் தருவார்கள்?

 தோழர் Arivazhagan Kaivalyam அவர்களின் பதிவு....

தற்போது இந்த நாவல் சிந்தன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது ...

Subbalakshmi Subburaj

https://www.facebook.com/100043760417710/posts/1741129214022409/?rdid=3muHTYT9r1sf64zZ

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு