நேற்று மாஞ்சோலை! இன்று மேகமலை!! மேகமலை - வருசநாடு மக்களின் வாழ்வாதாரப் போராட்டத்திற்கு துணை நிற்போம்!

சமரன் சிறப்புக் கட்டுரை

நேற்று மாஞ்சோலை! இன்று மேகமலை!! மேகமலை - வருசநாடு மக்களின் வாழ்வாதாரப் போராட்டத்திற்கு துணை நிற்போம்!

"அவர்களை துணை ராணுவப்படையைக் கொண்டு வெளியேற்றலாம்" இது உச்சநீதிமன்றத்தின் உத்தரவு. இப்படிப்பட்ட உத்தரவை நாட்டை நாசப்படுத்துபவர்களுக்கு எதிராக ஒன்றும் இந்திய உச்சநீதிமன்றம் வழங்கவில்லை. உடலை உருக்கி, கைகள் சிவக்க உழைத்து வனத்தை சார்ந்து வாழும் விவசாய மக்களுக்கு எதிராக உச்சநீதிமன்றம் கொடுத்திருக்கும் உத்தரவு!

இந்த உத்தரவுக்கு எதிராக "துணை ராணுவப்படை வந்து எங்களை சுட்டுப்போட்டாலும் இந்த மண்ணிலேயே சாவோம்!" என ஒற்றைக் குரலாய் ஒலித்துக் கொண்டிருக்கிறது தேனி மாவட்ட மேகமலை வருசநாடு பகுதி எங்கும்!

காப்புக்காடு, புலிகள் காப்பகம் என்றெல்லாம் கூறி மூன்று தலைமுறைகளாக வாழ்ந்துவரும் மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என அறிவித்து அகதிகளாக விரட்டுகிறது இந்திய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. ஐந்து தலைமுறையாக வாழ்ந்த மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை அவர்களது வாழ்விடத்திலிருந்து முற்றாக வெளியேற்றும் ஆளும் வர்க்கத்தின் மூர்க்கத்தனத்தைத் தொடர்ந்து, தற்போது மேகமலை- வருசநாட்டு மக்களை அவர்களது வாழ்விடங்களிலிருந்து வெளியேற்ற துடித்துக் கொண்டிருக்கிறது பாசிச பாஜக அரசு. புலிகள் பாதுகாப்பு, வனவிலங்கு பாதுகாப்பு, பல்லுயிர் பாதுகாப்பு என்ற பெயரில் காட்டை கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்க நாடு முழுவதும் வனமக்களை வெளியேற்றி வரும் பா. ஜ. க அரசின் திட்டத்தின் ஒரு பகுதிதான் தமிழ் மண்ணில் மாஞ்சோலையை அடுத்து மேகமலை மக்களை வெளியேற்ற எத்தனிப்பதாகும். கிட்டத்தட்ட 98 கிராமங்களில் வாழும் 4600 குடும்பங்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்றும், அவர்களை துணை இராணுவப் படை கொண்டு வெளியேற்றலாம் என்றும் கூறி பாசிச ஆரவாரத்துடன் தனது ஆளும் வர்க்க கோரப் பற்களை நெரித்து மிரட்டுகிறது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு.

எங்கள் தாத்தா காலத்தில் இருந்து நாங்கள் இங்கேயேதான் இருக்கிறோம் மூன்று தலைமுறைக்கும் மேலாக இங்கேதான் உழைத்து வாழ்கிறோம். கோர்ட்டு உத்தரவு என்று சொல்லி திடீரென்று எங்களை வெளியே போகச் சொன்னால் நாங்கள் எங்கள் பிள்ளை குட்டிகளை வைத்துக்கொண்டு எங்கே செல்வோம்? நாங்கள் வாழும் எங்கள் இடத்தை தவிர வேறு எங்கும் எங்களால் வாழ முடியாது என்று மக்கள் குமுறுகின்றனர். 

இதோடு பளியர் பழங்குடிகளையும் கூட விட்டு வைக்காமல் ஆக்கிரமிப்பாளர்கள் என அறிவித்து அட்டூழியம் செய்கிறது பாசிச மோடி அரசு.

வருசநாடு மற்றும் அதன் சுற்றுவட்டார மலைக் கிராமங்களில் சுமார் 1500 வரையிலான பூர்வகுடி பளியர் பழங்குடிகள் தற்போது வாழ்ந்து வருகின்றனர். 2000 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் பளியர் பழங்குடிகள் இயற்கையோடு இயைந்த எளிமையான வாழ்வை வாழ்ந்து வருபவர்கள் ஆவர். காடுகளை நம்பியே வாழும் இவர்கள்  பிரதான வாழ்வாதாரமான மலைத்தேன், கடுக்காய், நெல்லிக்காய், மூலிகைகள் மற்றும் பாசி போன்ற சிறு வனப்பொருட்களை சேகரித்து வாழ்பவர்கள். 

காடுகளிலேயே பிறந்து, வனப் பொருட்களைச் சேகரித்து, இயற்கை சார்ந்த வாழ்வியலோடு  ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மேற்குத் தொடர்ச்சி மலையின் பூர்வகுடிகளாகவும், அதன் இயற்கை அமைப்பைப் பாதுகாக்கும் பாதுகாவலர்களாகவும் இருந்து வருகின்றனர். இந்த பூர்வகுடி பளியர்களை தற்போது மோடி அரசு "முதல் நிலை ஆக்கிரமிப்பாளர்கள்" என்று அறிவித்திருப்பது எவ்வளவு பெரிய அக்கிரமம்? குறிப்பாக மேகமலை ஊராட்சியில் நொச்சி ஓடை கிராமத்தில் உள்ள பளியர் பழங்குடிகளை முதல்நிலை ஆக்கிரமிப்பாளர் பட்டியலில் சேர்த்திருக்கிறது வனத்துறை. இவர்கள் வன உரிமைச்சட்டம் 2006 ன் கீழ் சட்டப்பூர்வ வன உரிமை பட்டா பெற்றவர்கள் ஆவர். 

மூன்று தலைமுறைக்கும் மேலாக உழைத்து வாழும் மக்கள் ஆக்கிரமிப்பாளர்களா? 

ஆக்கிரமிப்பாளர்கள் என்று உச்சநீதிமன்றத்தால் கூறப்படும் மக்கள் 1947 க்கு முன்பிருந்தே நூற்றாண்டுகளாக மேகமலை-வருசநாடு கிராமப்பகுதிகளில் வசித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக 1948 ஆம் ஆண்டு ஜமீன் ஒழிப்பைத் தொடர்ந்து 1949 ஆம் ஆண்டில் கண்டமனூர் ஜமீனின் வசம் இருந்த நிலத்தில், நிலம் இல்லாத ஏழைகள் குடியேறலாம் என்று ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட ஆட்சியர் மூலமாக தண்டோரா போடப்பட்டு அறிவிக்கப்பட்டது. பின்பு அப்பகுதிகளில் விருதுநகர், தேனி, கம்பம், கூடலூர், போடி போன்ற ஊர்களில் இருந்து வந்து மக்கள் குடியேறினர். இவ்வாறு குடியேறிய மக்கள் வனத்துறையால் கொடுமைகளையும் சித்திரவதைகளையும் தொடர்ந்து அனுபவித்து வந்தனர். கம்யூனிஸ்ட் கட்சியினர் வனத்துறை கொடுமைகளுக்கு எதிராகப் போராடினர். 1967 இல் மக்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. பெரும்பாலானவர்களால் அன்றைய நாளில் அதற்கான செலவு செய்ய முடியாமலும் செயல்முறையின் கடினத் தன்மையின் காரணமாகவும் பட்டா பெற முடியாமல் போனது. 

இப்படி மூன்று  தலைமுறைக்கும் மேலாக அந்த  நிலங்களை சீரமைத்து, உருவாக்கி உழைத்து வாழ்ந்து வரும் மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்றும் அவர்களை துணை இராணுவப் படையை கொண்டு வெளியேற்றலாம் என்றும் உச்சநீதிமன்றம் எழுதும் தீர்ப்பு எவ்வளவு கொடூரத் தன்மை கொண்டது? 60 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இப்பகுதிகளில் பள்ளிகள் மருத்துவமனைகள் உள்ளிட்ட பல்வேறு அரசு கட்டிடங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு 9 பஞ்சாயத்துகளில் 98 கிராமங்களைச் சேர்ந்தவர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்கிறது இந்திய உச்ச நீதிமன்றம். மேகமலை டாப், ஹைவே விஸ், மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு, மகாராஜா மெட்டு உள்ளிட்ட தேயிலை எஸ்டேட் கிராமங்கள் மற்றும் வருசநாடு, தும்மக்குண்டு, மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு, கண்டமனூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 4600 குடும்பங்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என்றும் அவர்களை துணை இராணுவப்படை கொண்டு வெளியேற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மாஞ்சோலையிலிருந்து மேகமலைக்கு

2009-ஆம் ஆண்டு நவம்பர் 25ல் கருணாநிதியின் திமுக ஆட்சிக் காலத்தில் மேகமலை வனவிலங்கு சரணாலயம் உருவாக்கப்பட்டு, வருசநாடு பள்ளத்தாக்கு மற்றும் மேகமலையை உள்ளடக்கிய பகுதிகள் விரிவான மேகமலை காப்புக்காடு அரசாணை (Megamalai Reserve Forest Gazette Notification) மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன.  

2009-ல் வெளியிடப்பட்ட அரசாணையில் அப்பகுதியில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வந்த மக்களின் நில உரிமைகள் (பட்டா) மற்றும் பாரம்பரிய குடியிருப்புகள் குறித்த தெளிவான விலக்குகள் குறிப்பிடப்படவில்லை. இதுவே வனத்துறை கெடுபிடிகள் அதிகரிக்கவும், மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபடவும் முதன்மை காரணமாக அமைந்தது. 

இதனால் பல தலைமுறைகளாக விவசாயம் செய்து வாழ்ந்து வந்த மலைவாழ் மற்றும் விவசாயிகள், நில உரிமை (பட்டா) பெற முடியாமல் போனதுடன் சட்டப்பூர்வமாக "ஆக்கிரமிப்பாளர்கள்" எனக் கருதப்படும் சூழல் உருவானது. காப்புக்காடு விதிகளின்படி, வனத்துறையின் அனுமதி இன்றி சாலைகள் அமைப்பது, மின்சாரக் கம்பங்கள் நடுவது, குடிநீர்க் குழாய்கள் பதிப்பது அல்லது வீடுகள் கட்டுவது தடை செய்யப்பட்டது. இதனால் கிராமங்கள் அடிப்படை வசதிகளின்றி முடங்கின.  

வனத்துறை சார்பில் எல்லைக் கற்கள் நடும் பணிகளும், ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டபோது, மக்களுக்கும் வனத்துறைக்கும் இடையே நேரடி மோதல்கள் வெடித்தன. இதற்கு எதிராக பல்வேறு போராட்டங்களை அப்போது மக்கள் நடத்தினர். தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததை கண்டித்து, பல தேர்தல்களில் வாக்குப்பதிவைப் புறக்கணிக்கப் போவதாகக்கூட கிராம மக்கள் தீர்மானங்கள் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது. 

பின்னர் 2021-ஆம் ஆண்டு அதிமுக எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் பிப்ரவரி 2021-ல் இப்பகுதி "ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகமாக" (Srivilliputhur-Megamalai Tiger Reserve) உயர்த்தப்பட்டது. இதன் பின்னர் வனப்பாதுகாப்பு விதிகள் மேலும் தீவிரமடைந்து மக்களை வெளியேற்றும் பிரச்சனையாக உருவெடுத்தது. 

இந்த புலிகள் காப்பக அறிவிப்பைத் தொடர்ந்து வனத்துறைக்கு சொந்தமான 5072 ஹெக்டேர் வனநிலத்தை 4,461 நபர்கள் ஆக்கிரமித்து இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இவ்வாறு ஆக்கிரமிப்பாளர்கள் என்று அறிவிக்கப்பட்ட விவசாயிகளை வெளியேற்ற நெருக்கடி கொடுக்கப்பட்டு வந்தாலும் வெளியேற்ற முடியவில்லை. இந்த நிலையில் கடந்த 2025 ஆம் ஆண்டு மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை வெளியேற்றும் பிரச்சனையில் மாஞ்சோலைப் பகுதியை சேர்ந்த ஜான் கென்னடி உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுதாக்கல் செய்திருந்தனர். அந்த வழக்கை விக்ரம்நாத்-சந்திப் மேத்தா அமர்வு கடந்த பிப்ரவரி 2025-ல் விசாரித்தது. அதைத் தொடர்ந்த வழக்கு விசாரணையில் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட பகுதி புலிகள் நடமாடும் பகுதியாக இருப்பதாக மத்திய அரசு கூறுகிறது. எனவே அங்கு மக்கள் வாழ அனுமதிக்க முடியாது என்றது உச்சநீதிமன்றம்.  மேலும் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு எதிராக முந்தைய திமுக அரசு முன்வைத்த வாதத்தின் அடிப்படையில் மாஞ்சோலை மக்களை பாரம்பரிய வனவாசிகளாக கருத முடியாது என்றும், மாஞ்சோலை மக்களை வெளியேற்றவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

இந்த வழக்கின் தொடர்ச்சியாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம்நாத்தும் சந்தீப் மேத்தாவும் ஜான் கென்னடி வழக்கு விசாரணையில் இதை வெறும் தொழிலாளர்கள் அல்லது ஒரு குறிப்பிட்ட எஸ்டேட் பிரச்சினையாக மட்டும் பார்க்க முடியாது என்றும், மாஞ்சோலை அமைந்திருக்கும் அகத்திய மலைப்பகுதி என்பது உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பல்லுயிர் பெருக்கமண்டலம் எனவே ஒரு பகுதியை மட்டும் தனித்து பார்க்காமல் தென்பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் ஒட்டுமொத்த வன பாதுகாப்பையும் ஆராய வேண்டும் என கூறினர். அகத்திய மலை நிலப்பரப்பு முழுவதையும் விரிவாக ஆய்வு செய்ய CEC (மத்திய குழு) க்கு உத்தரவிட்டனர் இந்த ஆய்வில் பெரியார் புலிகள் காப்பகம், சாம்பல்நிற அணில் சரணாலயம், மேகமலை, திருநெல்வேலி வனவிலங்கு சரணாலயங்கள் ஆகியவை சேர்க்கப்பட்டன. 

 உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவின் அடிப்படையில் சென்ற 2025 ஆம் ஆண்டு ஜூன் 23 முதல் 26 வரை மத்திய குழு ஆய்வு செய்து அறிக்கையினை அளித்தது. அதன்படி ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் 4601 நபர்கள் 5072 ஹெக்டேர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக அரசு பதிவுகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது மத்திய குழு. அதில் கண்டமனூர் 1725 பேர் 511 ஹெக்டேர், மேகமலை 344 பேர் 721 ஹெக்டேர், வருசநாடு 2523 பேர் 3759 ஹெக்டேர், சின்னமனூர் 9 பேர் 83 ஹெக்டேர் என மொத்தம் 4601 பேர் 5072 ஹெக்டேர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக மத்திய குழு தெரிவித்தது. 

உச்ச நீதிமன்றமா? உச்ச அநீதி கார்ப்பரேட் மடமா?

மத்திய குழுவின் அறிக்கையின் அடிப்படையில் இவ்வாண்டு மே 29ஆம் தேதி ஆக்கிரமிப்புகளை அகற்றி மேகமலை மற்றும் பிற காப்புக் காடுகளை உடனடியாக மீட்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுகளை மாநில அரசு நிறைவேற்ற தவறினால் ஆக்கிரமிப்புகளை அகற்ற துணை இராணுவப் படையை ஈடுபடுத்தலாம் என்றும், இந்த வழக்கின் விசாரணை செப்டம்பர் 18ஆம் தேதி நடைபெறும் என்றும் உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்தது. இதனிடையே மத்திய குழுவானது தனது அறிக்கையில் மேகமலை வருசநாடு வன நிலங்களில் இலவம்பஞ்சு, ஏலக்காய், பீன்ஸ் உள்ளிட்ட பயிர்கள் ஆயிரக்கணக்கான ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருப்பது வன ஆக்கிரமிப்பின் ஒரு பகுதியாக பதிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் கடந்த 19.8.2026 அன்று விவசாயிகளின் வாழ்வாதாரமான இலவம்பஞ்சு மரங்களை வெட்டி வீழ்த்த உத்தரவிட்டுள்ளது. "காட்டை பாதுகாக்க மரங்களை வெட்டி சாய்க்க வேண்டும்" என வரலாற்றில் இந்திய உச்ச நீதிமன்றத்தால் தான் இப்படி ஒரு தீர்ப்பை வழங்க முடியும்!

கடந்த செப்டம்பர் 29 அன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசு தரப்பில், அங்குள்ள மக்கள் பல தலைமுறைகளாக வசித்து வரும் ஏழை விவசாயிகள் மற்றும் பழங்குடியினர் என்றும், திடீரென அவர்களை வெளியேற்றினால் கடுமையான மனிதாபிமான நெருக்கடி (Humanitarian crisis) ஏற்படும் என்றும் வாதிடப்பட்டது. 

ஆனால் உச்சநீதின்ற நீதிபதிகளோ பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியையும், புலிகள் காப்பகப் பாதையையும் ஆக்கிரமித்து இலவம்பஞ்சு மற்றும் முந்திரி போன்ற வணிகரீதியான பெரிய தோட்டங்களை அமைத்திருப்பதற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும்  "காடுகளை அழித்துதான் இத்தகைய வணிகத் தோட்டங்களை அமைக்க வேண்டுமா?" என கேள்வி கேட்டனர். 

அதனைத் தொடர்ந்து மத்திய அதிகாரக்குழு சுட்டிக்காட்டியபடி, ஆக்கிரமிப்பாளர்களாகக் கண்டறியப்பட்ட அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கைகள் மற்றும் எல்லையைக் குறிக்கும் முதற்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு (த.வெ.க அரசு) தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னர் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து (Verdict Adjourned) உத்தரவிட்டது உச்சநீதி மன்றம். உச்ச நீதிமன்றம் தனது முடிவில் எந்த மாற்றத்தையும் செய்து கொள்ளவில்லை. 

வனத்தை ஆக்கிரமிப்பது அழிப்பது மக்களா? கார்ப்பரேட்டுகளா?

கார்ப்பரேட்டுகளால் ஒரு நாளைக்கு அழியும் வன நிலமானது 40 முதல் 50 ஹெக்டேர் ஆகும். இவை அப்படியே உள்கட்டமைப்பு என்ற பெயரில் கார்ப்பரேட் பயன்பாட்டிற்கு மாற்றப்படுகிறது. 

உலகளாவிய தரவுகளின் அடிப்படையில் (Utility Bidder / Our World in Data அறிக்கை), இந்தியாவில் 2015 முதல் 2020 வரையிலான 5 ஆண்டுகளில் மட்டும் 6,68,400 ஹெக்டேர் (சுமார் 6,684 சதுர கி. மீ) காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. உலகளவில் காடழிப்பில் பிரேசிலுக்கு அடுத்தபடியாக இந்தியா 2-வது இடத்தில் உள்ளது.  

​'குளோபல் ஃபாரஸ்ட் வாட்ச்' (Global Forest Watch) தகவலின்படி, 2001 முதல் 2025 வரை இந்தியா சுமார் 24 லட்சம் ஹெக்டேர் மரப்பரப்பை இழந்துள்ளது. 

இப்படி கார்ப்பரேட்டுகளுக்காக தாரை வார்க்கப்பட்டிருக்கும் வனப் பகுதிகள் சிலவற்றை குறிப்பிட்டு சொல்வதென்றால், 

  • ஹஸ்தியோ ஆரண்யா (சத்தீஸ்கர்), கோடா பிற பகுதிகள் (ஜார்கண்ட்)-அதானி குழுமம் 
  • லஞ்சிகர் மற்றும் நியாம்கிரி சுற்றியுள்ள பகுதிகள் (ஒடிசா), கோவா மற்றும் கர்நாடகா - வேதாந்தா குழுமம் 
  • சுந்தர்கர் மற்றும் கேயோஞ்சர் (ஒடிசா) பல்லாரி (கர்நாடகா) -ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல் & ஜே எஸ் டபிள்யூ எனர்ஜி 
  • ஜாம் ஷெட்பூர் சுற்றியுள்ள பகுதிகள் (ஒடிசா மற்றும் ஜார்கண்ட்) - டாடா ஸ்டீல் 
  • மத்திய பிரதேசம்- ராஜஸ்தான் -தமிழ்நாடு சிமெண்ட் தயாரிப்புக்கு சுண்ணாம்புக்கல் வெட்டி எடுக்க- அம்பாஜி சிமெண்ட் கார்ப்பரேட்டுகள்  & அல்ட்ராடெக் டால்மியா ஏசிசி 

இவ்வாறான பட்டியலை நீட்டிக்கொண்டே போகலாம். குறிப்பாக சுரங்கம் தோண்டி நிலக்கரி எடுக்க அதானி குழுமத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள சத்தீஸ்கரில் உள்ள ஹஸ்தியோ ஆரண்யா பகுதியானது இந்தியாவில் மிக அடர்ந்த காடுகளில் ஒன்றாகும். "மத்திய இந்தியாவின் நுரையீரல்" என்று இவ்வனப்பகுதியானது அழைக்கப்படுகிறது. யானைகளின் முக்கிய வாழ்விடமாகவும் புலிகள் மற்றும் அரிதான வன விலங்குகளின் உறைவிடமாகவும் இப்பகுதியானது விளங்குகிறது. 

சுற்றுச்சூழல் ரீதியாக மிகவும் உணர்திறன் வாய்ந்த பகுதி என்பதால் இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் (ICFRE) அங்கு சுரங்கப் பணிகளை மேற்கொள்ள தடை செய்ய பரிந்துரைத்தது. ஆனால் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதிகளுடன் மரங்கள் வெட்டப்பட்டு சுரங்கப் பணிகள் தொடங்கப்பட்டன. இதுவரை 2.5 லட்சத்திற்கும் அதிகமான மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. திட்டப்படி இன்னும் 4 லட்சத்திற்கும் அதிகமான மரங்கள் வெட்டப்பட உள்ளன. இப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஹெக்டேர் காடுகள் அழிக்கப்பட்டதால் யானை மனித மோதல்கள் கடுமையாக அதிகரித்துள்ளன. 

கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாடு அரசும் (திமுக அரசு) அதானி குழுமமும் இணைந்து ரூபாய் 24,500 கோடி மதிப்பீட்டில் 3 நீர்மின் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டன. இத்திட்டத்திற்காக சுமார் 833 ஏக்கர்  நிலம் தேவை. அதில் 564 ஏக்கர் அரசு காப்புக்காடு நிலம் ஆகும். இத்திட்டம் ஜவ்வாது மலை மற்றும் அமிர்தி காடுகளை இணைக்கும் முக்கிய வனவிலங்கு வழித்தடத்தை துண்டிக்கும் அபாயம் கொண்டதாகும். மேலும் மரகதப்புறா, தேவாங்கு, சிறுத்தை, மலைப்பாம்பு மற்றும் ஜவ்வாது மலைக்கே உரிய அரிய வகை ஊர்வன மற்றும் வன உயிரினங்களின் வாழ்விடங்கள் அழியும் அபாயம் கொண்ட திட்டமாகும். 

இப்படி காட்டை அழித்து விலங்குகளை கொன்றொழிப்பது  கார்ப்பரேட்டுகளே தவிர வனங்களை சார்ந்து வாழும் மக்கள் அல்ல. ஆனால் கார்ப்பரேட்டுகளின் வேட்டைக்கு காட்டை ஒப்படைக்க மக்களை விரட்டுகிறது கார்ப்பரேட் நீதிமன்ற தீர்ப்புகள். 

வன மக்களே வன காவலர்கள்

வன மக்கள் மற்றும் பழங்குடியினர் காடுகளை வெறும் வள ஆதாரமாக மட்டும் பார்க்காமல், தங்களின் பண்பாடு, வாழ்வியல் மற்றும் அடையாளத்தின் அங்கமாகக் கருதுவதால் இயற்கையான பாதுகாவலர்களாக விளங்குகின்றனர்.

எந்தப் பருவத்தில் எந்த மரங்கள் பூக்கும், விலங்குகளின் இடப்பெயர்வுப் பாதைகள் எவை, அரிய மூலிகைகள் எங்கு கிடைக்கும் என்பன போன்ற தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்ட ஆழமான அறிவு மக்களிடம் உள்ளது. 

தேவைக்கு அதிகமான மரங்களையோ, பழங்களையோ, மூலிகைகளையோ வெட்டி எடுக்க மாட்டார்கள். மரங்களின் வளர்ச்சியைப் பாதிக்காத வகையில் சிறு வனப் பொருட்களை மட்டுமே சேகரிப்பார்கள். ​காடுகளில் ஏற்படும் சிறிய தீ விபத்துகளை வனத்துறையினரை விட முதலில் கண்டறிந்து, கட்டுப்படுத்தும் திறன் அவர்களுக்கு உண்டு. 

​காய்ந்த சருகுகளை அகற்றி, காட்டுத் தீ பரவாமல் தடுக்கும் மரபுவழி உத்திகளை (Controlled Burning) அவர்கள் காலங்காலமாகப் பயன்படுத்தி வருகின்றனர். ​வெளிநபர்களின் ஊடுருவல், மரம் கடத்தல் (சந்தனம், தேக்கு போன்றவை) மற்றும் வனவிலங்கு வேட்டையாடுதல் (Poaching) போன்றவற்றை வனத்துறைக்கு முன்னரே கண்டறிந்து தடுக்கும் அமைப்பாக அவர்கள் இயங்குகிறார்கள். 

குறிப்பிட்ட வனப் பகுதிகளை தெய்வமாக வழிபாடு செய்யும் பழக்கம் மக்களிடம் உண்டு. இத்தகைய "புனிதக் காடுகளில்" எந்த ஒரு மரத்தையும் வெட்டவோ அல்லது சேதப்படுத்தவோ அனுமதிக்கப்படுவதில்லை. இது பல அரிய வகை தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் இயற்கை சரணாலயமாகச் செயல்படுகிறது. 

​​மலைச் சரிவுகளில் மண் அரிப்பைத் தடுக்கும் மரபுசார் விவசாய முறைகள் மற்றும் காட்டாறுகள், இயற்கை ஊற்றுகளை மாசுபடுத்தாமல் பராமரிக்கும் முறைகளை அவர்கள் பின்பற்றுகின்றனர். 

ஐக்கிய நாடுகள் சபை (UN) மற்றும் உலக வனவிலங்கு நிதியம் (WWF) வெளியிட்ட அறிக்கைகளின்படி, வன மக்கள் வாழும் மற்றும் அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள காடுகளிலேயே பல்லுயிர்ப் பெருக்கமும் மர அடர்த்தியும் மிக அதிகமாகப் பாதுகாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வனவிலங்கு பாதுகாப்பு பல்லுயிர் பாதுகாப்பு எனும் பம்மாத்து

உள்கட்டமைப்பு திட்டங்கள் என்ற பெயரில் காட்டை கார்ப்பரேட்டுகளுக்கு களவாட கொடுப்பதால் மனித விலங்கு மோதல்களும் உயிரிழப்புகளும் வரலாறு காணாத வகையில் அதிகரித்து வருகிறது.  

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் (Ministry of Environment, Forest and Climate Change) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த அதிகாரப்பூர்வத் தரவுகளின்படி காடழிப்பால் மனித வாழ்விடங்களுக்கு வந்து யானைகள் தாக்கியதில் ​கடந்த  5 ஆண்டுகளில் மொத்தம் 2,853 மனிதர்கள் உயிரிழந்துள்ளனர். புலிகள் தாக்கி மொத்தம் 382 மனிதர்கள் உயிரிழந்துள்ளனர். 

இவையெல்லாம் கார்ப்பரேட் சுரங்க எல்லைப் பகுதிகளில் தான் மிக அதிகமாக நடந்துள்ளன. அதேபோல கடந்த பத்து ஆண்டுகளில் மின்சாரம் தாக்கி 600 வரையிலான யானைகளும் ரயில் மோதி 120க்கும் மேற்பட்ட யானைகளும் இறந்து போயுள்ளன. 

கார்ப்பரேட்டுகள் காடுகளை அழிப்பதால் மிருகங்களின் வழித்தடங்கள் அடைப்பு, காடுகளின் பரப்பளவு சுருங்குதல் போன்றவை பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. 

அடர்ந்த மலைக் காடுகளில் மட்டும் வாழக்கூடிய அரியவகை பறவைகள் ஊர்வன பூச்சிகள் மற்றும் மூலிகைச் செடிகள் நிரந்தரமாக அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு பல்லுயிர் பெருக்க அழிவு பயமுறுத்துகிறது. 

ஐஐடி பம்பாய் ஆய்வுகளின்படி, கார்ப்பரேட் வணிகத் திட்டங்களால் காடுகள் துண்டாடப்படுவதால் (Fragmentation) விலங்குகளின் மரபணுப் பன்மை 30% முதல் 35% வரை குறைந்து அவை இனப்பெருக்க ரீதியாகப் பாதிக்கப்படுகின்றன. 

காடுகள் மற்றும் வாழ்விடங்கள் மாற்றமடைந்ததால் இந்தியாவில் உள்ள 60% பறவையினங்களின் எண்ணிக்கை தீவிரமான  சரிவைச் சந்தித்துள்ளன. 

மேற்குத் தொடர்ச்சி மலையில் கார்ப்பரேட் எஸ்டேட்கள், சுரங்கம் மற்றும் ரிசார்ட் திட்டங்களால் 15% முதல் 20% வரை அப்பகுதிக்கே உரிய சிறப்பு உயிரினங்கள் (Endemic Species) அழியக்கூடிய அபாயத்தில் உள்ளன. இப்படி கார்ப்பரேட்டுகளின் காடழிப்பால் விலங்குகளும் பல்லுயிர்களும் அழிந்து வருகின்றன. மறுபுறம் காட்டை அழித்து விலங்குகளின் மரணத்திற்கு காரணமான ஜக்கி கார்ப்பரேட் சாமியாருடன் மோடி உள்ளிட்ட பாஜக கும்பல் சிவராத்திரிகள் தோறும் ஆட்டம்போட்டு கூத்தடிக்கிறது. 

கார்ப்பரேட் நலனுக்கான மோடியின் பாசிச வன சட்டம்:

கடந்த 2023 ஆம் ஆண்டு பாசிச மோடி கும்பல் கொண்டு வந்த வனப் பாதுகாப்பு மற்றும் பல்லுயிர் பெருக்க சட்டமானது இயற்கை வளங்களை கார்ப்பரேட்டுகள் கொள்ளையிட வழியமைத்துக் கொடுத்தது. வனமக்களிடம் இருந்த அரைகுறை உரிமைகளையும் பறித்து அவர்களை விரட்டும் குண்டாந்தடியாக மோடி கும்பல் இச்சட்டத்தினை கொண்டு வந்தது. 2006 FRA வனச் சட்டத்தில் இருந்த உரிமைகள் அனைத்தையும் 2023 வனச் சட்டத் திருத்தத்தின் மூலம் மோடி கும்பல் முற்றிலும் பறித்து விட்டது என்பதே உண்மை. 

காடுகளில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் பட்டியல் பழங்குடியினர் (ST)  மற்றும் பிற பாரம்பரிய வனவாசிகளுக்கு (OTFD) இழைக்கப்பட்ட வரலாற்று அநீதிகளை சரி செய்வது என்று கூறியே 2006 வனச் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டப்படி 2005 டிசம்பர் 13க்கு முன் பழங்குடியினர் அல்லது வனவாசிகளின் சாகுபடியில் இருந்து வந்த வனநிலத்தின் மீது அதிகபட்சமாக 4 ஹெக்டேர் வரை சட்டபூர்வ பட்டா அல்லது உரிமை பாத்தியம் பெறலாம். காடுகளுக்குள் அவர்கள் வாழ்ந்து வரும் வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு சட்டபூர்வ பாதுகாப்பு உண்டு. தேன், நெல்லிக்காய், மூலிகைகள், மூங்கில், கிழங்குகள் போன்ற மரம் சாரா சிறு வனப் பொருட்களை சேகரிக்கவும், பயன்படுத்தவும், உள்ளூர் சந்தைகளில் விற்கவும் முழு உரிமை உண்டு. இதன்படி சட்டப்படி வனப்பகுதிகளில் உள்ள நீர் நிலைகளை பயன்படுத்தவும் காடுகளில் கால்நடைகளை மேய்க்கவும் உரிமை அளிக்கப்பட்டுள்ளது. 

வனங்களின் வழியாக செல்லும் பாரம்பரிய பாதைகளை பயன்படுத்திக் கொள்ளவும், வனப் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை உரிமை வன மக்களுக்கே வழங்கப்பட்டது. கிராம சபைக்கு அதிகாரம் இருந்தது. காடுகள் வன விலங்குகள் மற்றும் உயிரியல் பன்முகத்தன்மையை பாதுகாக்கவும் நிர்வகிக்கவும் உள்ளூர் கிராம சபைக்கு அதிகாரப்பூர்வ உரிமை 2006 வனச் சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டது. 

வன நிலங்களை வனம்சாரா திட்டங்களுக்கு - அணை, சுரங்கம், சாலை அமைத்தல் என அரசு மாற்ற நினைத்தால் சம்பந்தப்பட்ட கிராம சபையின் முன் அனுமதி மற்றும் ஒப்புதல் பெறுவது இச்சட்டத்தின் மூலம் கட்டாயமாகும். காடுகளின் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் பழங்குடி இன மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக பள்ளி, அங்கன்வாடி ஆரம்ப சுகாதார நிலையம், குடிநீர் வசதி, மின்சார கோபுரங்கள் மற்றும் சிறிய சாலைகள் அமைக்க வன நிலங்களை பயன்படுத்த அனுமதி உண்டு. இவ்வாறு முக்கியத்துவமுடைய உரிமைகள் அனைத்தையும் மோடியின் 2023 வனச் சட்ட திருத்தம் மற்றும் பல்லுயிர் பெருக்கச் சட்டம் பறித்துவிட்டது. 

மோடி கும்பலால் கொண்டுவரப்பட்ட வனச் சட்டப்படி வனப்பகுதிகளில் எவ்வகையான அளவீடுகளும் (Survey) செய்ய வேண்டுமெனில் மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும். மாநில அரசுகளுக்கு மட்டுமின்றி பழங்குடிகளின் கட்டமைப்பு கிராம சபை உள்ளிட்ட வன நிலங்களின் மீது உரிமையுள்ள அனைத்து நிர்வாக அமைப்புகளின் உரிமைகளையும் இச்சட்டத்தால் பறிக்கப்பட்டுவிட்டது. வன உரிமைகள் சட்டம் 2006ன் படி எந்த வன நிலங்களையும் பயன்படுத்துவதற்கும் கிராம சபையின் ஒப்புதல் கட்டாயமாகும். ஆனால் 2023 சட்டத் திருத்தம் அதை மறுக்கிறது. இச்சட்டத்திருத்தம் மூலம் வனத்தேர்வு அதிகாரிகளுக்கு கிராம சபைகளை விட அதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது பிரிட்டிஷ் கால சட்டத்தை விட மோசமானதாகும். 

மோடி கும்பலின் பல்லுயிர் பெருக்கச் சட்டம்

காடுகளில் இருந்து இயற்கையாக பெறப்படும் மருத்துவக் குணம் கொண்ட மூலிகைகள், தேன் உள்ளிட்ட தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிரிகள் மற்றும் பிற உயிரினங்கள் - உயிரினங்களிடமிருந்து பெறப்படும் மருந்துகள் இவற்றின் மீது அறிவுசார் உரிமை மற்றும் காப்புரிமையைப் பெற பல்லுயிர் பெருக்கச்சட்டம் வலியுறுத்துகிறது. அப்படி காப்புரிமை பெற்றவர்கள் வனங்களில் உள்ள பல்லுயிரிகள் மீது ஆதிக்கம் செலுத்த எவ்வித அனுமதியும் பெறத் தேவையில்லை. கம்பெனிகள் சட்டத்தால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் அல்லது வெளிநாட்டு நிதி மூலதனத்துடன் இந்தியாவில் இயங்கும் நிறுவனங்களுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. ஆயுஸ் மருத்துவ முறைகளில் அந்நிய முதலீடுகளுக்கும் கார்ப்பரேட்டுகளின் ஏகபோகத்திற்கும் சட்டத்தில் இருந்த சிறு சிறு தடைகளையும் மோடி கும்பல் 2023 பல்லுயிர் பெருக்க பாசிச சட்டத்தின் மூலம் தகர்த்து விட்டது. வனங்களில் உள்ள மூலிகைகள், தேன் உள்ளிட்ட மருத்துவக் குணம் கொண்ட பல்லுயிர்களை பழங்குடிகள் பயன்படுத்த முடியாது. அவ்வகையான மூலிகைகளையும் மருந்துப் பொருட்களையும் கொண்டு சிறிய பாரம்பரிய மருத்துவர்கள் மருத்துவம் பார்க்க முடியாது. அவ்வகையில் இயற்கையாக கிடைக்கும் மருந்துகள் இனி அனைவருக்கும் பொது அல்ல. அவற்றை காப்புரிமை பெற்ற நிறுவனங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். காப்புரிமை பெற்ற அல்லது அனுமதிக்கப்பட்ட கார்ப்பரேட்டுகளைத் தாண்டி பழங்குடிகளோ அல்லது பாரம்பரிய மருத்துவர்களோ மூலிகைகள் உள்ளிட்ட பல்லுயிர் மருத்துவ அம்சங்களை பயன்படுத்தவோ அல்லது தங்களது நிலங்களில் அவற்றை விளைவிக்கவோ முயன்றால் அவர்களுக்கு அபராதம் விதிக்கவும், மோடி கும்பலின் இச்சட்டம் வழிகாட்டுகிறது. அதேபோல பறவைகளை விலங்குகளை பழங்குடிகள் வேட்டையாடுகின்றனர் என்ற பொய்யான அவதூறைப் பரப்பி, அதைத் தடுப்பது என்ற பெயரில் உலகின் அரியவகை பறவையினங்களையும் விலங்கினங்களையும் சந்தைப் பொருளாக்கி வர்த்தகம் செய்யும் உரிமையையும் பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரைவார்க்கிறது. அதை சட்டரீதியானதாக இச்சட்ட திருத்தத்தின் மூலம் மாற்றி அமைத்திருக்கிறது மோடி அரசு. வனப் பாதுகாப்பு சட்டத்தின் உரிமைகளை பழங்குடி அமைப்புகள், மாநில பல்லுயிர் வாரியங்கள் (SBBS) மற்றும் மாநில அரசுகளிடமிருந்து பறித்ததைப் போலவே பல்லுயிர் பெருக்கத்தின் மீதான உரிமைகளையும் பறித்துள்ளது பாசிச மோடி அரசு. 

2023 பாசிச வனச் சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு வேகம் எடுக்கும் வனவாசி மக்களின் வெளியேற்றம்

2019 பிப்ரவரி 13 இல் 2006 வன உரிமை சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டு மாநில அரசுகளால் நிராகரிக்கப்பட்ட மனுக்கள் தொடர்பான வழக்கில், நிராகரிக்கப்பட்ட 11.8 லட்சம் வனவாசிகளையும் காடுகளிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றமே உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து நாடு முழுவதும் எழுந்த கடுமையான எதிர்ப்பின் காரணமாக உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்தது உச்ச நீதிமன்றம். 

மேலும் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட முறை தன்னிச்சையானதா? உரிய ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டனவா? என்பதை மாநில அரசுகள் மீண்டும் மறுபரிசீலனை (Review) செய்ய வேண்டும். மறுபரிசீலனை செயல்முறைகள் முழுமையாக முடிவடையும் வரை எந்த ஒரு பழங்குடியினரையும் வலுக்கட்டாயமாக நிலத்திலிருந்து வெளியேற்றக்கூடாது என்றும் கூறியது உச்சநீதிமன்றம். ஆனால் மீண்டும் பரிசீலிப்பதாக சொல்லி சப்பைக் காரணங்களை கூறி பல லட்சக்கணக்கான மனுக்களை மாநில அரசுகள் தள்ளுபடி செய்தன. 2023 வன திருத்த சட்டம் வந்த பிறகு, ஏற்கனவே மனுக்கள் நிராகரிக்கப்பட்டு ஆக்கிரமிப்பாளர்கள் பட்டியலில் இருந்த பழங்குடியின மக்கள் மீது வனத்துறை நேரடியாக நடவடிக்கை எடுத்து வனப் பாதுகாப்பு, சூழல் சுற்றுலா மற்றும் வளர்ச்சி திட்டங்களின் பெயரில் 2023-24 காலகட்டத்தில் குறிப்பாக சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ஒடிசா, கர்நாடகா மாநிலங்களிலிருந்து பழங்குடிகளை அவர்களின் நிலங்களிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகள் தீவீரப்படுத்தப்பட்டது. 

நாடு முழுவதும் நிராகரிக்கப்பட்ட பழங்குடிகளின் மனுக்கள் சுமார் 18,10,000 ஆகும். ஒரு குடும்பத்திற்கு சராசரியாக 4முதல் 5 உறுப்பினர்கள் என கணக்கிட்டால், நாடு முழுவதும் சுமார் 70 முதல் 80 லட்சம் பழங்குடி மக்கள் தங்கள் நிலங்களை இழந்து வெளியேற்றப்படும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளனர். 

பாசிச பாஜக அரசு இப்படி மனுக்களை நிராகரித்து ஆக்கிரமிப்பாளர்கள் பட்டியலில் மக்களை அடைத்தது மட்டுமல்ல. 2006 FRA படி வன உரிமை பெற்ற பழங்குடிகளையும் அவர்களது வாழ்விடங்களிலிருந்து விரட்டுகிறது. 2023 சட்டத்தால் 2006 FRA சட்டத்தை ஓரங்கட்டி 2023 சட்டப்படி பழங்குடி மக்களுக்கு மோடி கும்பல் இழைக்கும் அநீதி மிக மோசமானதாகும். 

ஹஸ்தியோ ஆரண்யா பகுதியில் 2023 வன திருத்த சட்டத்தின் கீழ் நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்கு 2006 FRA சட்டப்படி இங்கு உள்ள கோண்டு பழங்குடியினரின் "சமூக வன உரிமை"  ஒப்புதல் பெறப்பட வேண்டும். ஆனால் 2023 புதிய சட்டத்தின் தளர்த்தப்பட்ட விதிகளை பயன்படுத்தி கிராம சபையின் எதிர்ப்பையும் மீறி காவல்துறை பாதுகாப்போடு பல்லாயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டு, கோண்டு பழங்குடியின நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டன. 

கிரேட் நிக்கோபர் திட்டம் (Great Nicobar project 2023- 2024)

2023 வனத்திருத்த சட்டத்தில் கொண்டுவரப்பட்ட தேசிய பாதுகாப்பு மற்றும் உத்தி சார்ந்த திட்டங்களுக்கான விலக்கு (Strategic Exemption Clause) விமான நிலையம் மற்றும் சர்வதேச துறைமுகத் திட்டத்திற்காக, சுமார் 130 சதுர கிலோமீட்டர் அடர்ந்த வனப்பகுதி ஒதுக்கப்பட்டது. 2006 FRA சட்டப்படி ஷோம்பென் மற்றும் நிக்கோபர்  பழங்குடி மக்களின் பாரம்பரிய உரிமைகளைப் பறித்து "தேசிய பாதுகாப்பு" என்ற பெயரில் புதிய சட்டத்தின் கீழ் கிராம சபை ஒப்புதல் இன்றி திட்டம் முடுக்கி விடப்பட்டது. 

பன்னாட்டு எல்லைகளில் இருந்து 100 கிலோமீட்டர் வரை உள்ள வன நிலங்களை மாற்ற 2023 வனச் சட்டம் அனுமதிக்கிறது. இதன்படி அசாம், அருணாச்சலப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் எல்லைப் பகுதி சாலைகள், உட்கட்டமைப்பு மற்றும் தனியார் தொழிற்சாலை விரிவாக்கத்திற்கு (எடுத்துக்காட்டு திமா ஹசாவ் பகுதியில் சிமெண்ட் ஆலை திட்டம்) 2006 FRA சட்டப்பிரிவு 4-ன் கீழ் கிராம சபை ஒப்புதல் பெறாமல் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. 

2023 வன திருத்தச் சட்டம் அமலுக்கு வந்த டிசம்பர் 2023 முதல் 2024-2025 காலகட்டத்தில்தான் 2006 FRA சட்டத்தில் பழங்குடியினருக்கு இருந்த "கிராம சபை அதிகாரம்" சட்டபூர்வமாக புறக்கணிக்கப்பட்டு நாட்டின் பல இடங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு  பழங்குடிகள் மீதான கோரத் தாக்குதல்களை மோடி கும்பல் தீவிரப்படுத்தி வருகிறது. 

சட்டவிரோத புலிகள் காப்பக அறிவிப்புகளும் மக்கள் வெளியேற்றமும்

2023 வனப் பாதுகாப்பு சட்டத் திருத்தம் (FCA 2023) வந்த பிறகும் கூட 2006 ஆம் ஆண்டின் வன உரிமைகள் சட்டத்தின் படி, கிராம சபையின் ஒப்புதல் இன்றி நிலங்களை ஒப்படைப்பது சட்டவிரோதம்தான். புதிய சட்ட திருத்தம் FCA 2023 வந்தாலும் அது FRA 2006-ல் வன உரிமைகள் சட்டத்தை நேரடியாக ரத்து செய்யவில்லை. எனவே வாதப்படி 2006 சட்டத்தின் உறுப்புகள் இப்போதும் செல்லுபடி ஆகும். மேலும் வாதப்படி FCA 2023 சட்டத்தில் FRA 2006-ஐ பற்றிய நேரடி தடையோ அல்லது ரத்து செய்யும் விதியோ இல்லாவிட்டாலும் கூட, 2023 திருத்தத்தை பயன்படுத்தி கிராம சபையை மீறி நிலத்தை கையகப்படுத்துவது FRA 2006 சட்டத்தை மீறி நடந்து வருவதை நாம் மேலே பார்த்தோம். மேலும் 2023 வனப் பாதுகாப்பு திருத்தச் சட்டத்தின் செல்லுபடி தன்மை மற்றும் FRA 2006வுடனான மோதல் குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. 

2023 திருத்தத்தின் மூலம் 2006 FRA சட்டத்தை செல்லாகாசாக்கி பழங்குடி மக்களின் வன உரிமைகளை பறித்து அவர்களை வனத்திலிருந்து வெளியேற்றுவது மட்டுமல்ல. பழங்குடி மக்களின் உரிமைகளை நிலை நாட்டத்தான் FRA 2006 கொண்டு வருவதாகக் கூறிவிட்டு அச்சட்டம் கொண்டு வந்ததிலிருந்தே அதற்கு எதிராகவே கார்ப்பரேட் நலன்களை காக்க  அரசுகளும் ஆளும் வர்க்கமும் வெறியுடன் செயல்பட்டு வந்திருக்கின்றன. குறிப்பாக புலிகள் காப்பக அறிவிப்புகளை செய்து புலி காப்பு - வனகாப்பு என்ற பெயரில் கார்ப்பரேட் காப்பு கொள்கையைத் தீவிரப்படுத்தியுள்ளன. 

2006 டிசம்பரில் FRA வன உரிமைச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டாலும், அதன் விதிகள் 2008 ஜனவரியில்தான் அமலுக்கு வந்தன. இந்த இடைப்பட்ட காலத்தில் (2007-ஆம் ஆண்டின் பிற்பகுதியில்), சுற்றுச்சூழல் அமைச்சகமும் மாநில வனத்துறைகளும் சுமார் 26 புலிகள் காப்பகங்களின் மையப் பகுதிகளை (Core Areas/CTH) அவசர அவசரமாக அறிவித்தன. இதில் கிராம சபைகளின் உரிமைகள் அங்கீகரிக்கப்படவோ ஒப்புதல் பெறப்படவோ இல்லை. 

முக்கிய எடுத்துக்காட்டுகளாக:

  • முதுமலை தமிழ்நாடு 2007 (CTH) / 2008 கிராம சபைகளின் ஒப்புதலின்றி மையப் பகுதியாக (Core Area) அறிவிக்கப்பட்டது. உள்ளூர் பழங்குடியினர் இன்றும் எதிர்த்து வருகின்றனர். 
  • தடோபா அந்தேரி (Tadoba-Andhari)மகாராஷ்டிரா 2007
  • 2006 FRA விதிகள் அமலுக்கு வருவதற்கு சில நாட்களுக்கு முன்பு CTH ஆக அறிவிக்கப்பட்டது. கிராம சபைகளின் அனுமதியின்றி கிராமங்கள் வெளியேற்றப்பட்டன. 
  • பந்திப்பூர் (Bandipur) கர்நாடகா 2007 (மீளறிவிப்பு)உள்ளூர் சோலேகா மற்றும் காட்டுநாயக்கர் பழங்குடியினரின் கிராம சபை ஒப்புதல் பெறப்படவில்லை. 
  • காசிரங்கா (Kaziranga)அசாம் 2007 / 2008 பழங்குடியினரின் வன உரிமைகள் தீர்க்கப்படாமல் அறிவிக்கப்பட்டது. 
  • களக்காடு முண்டந்துறை தமிழ்நாடு 2007
  • வன உரிமை உரிமைகோரல்கள் நிலுவையில் இருந்தபோதே CTH ஆக அறிவிக்கப்பட்டது. 
  • 2006 FRA சட்டத்திற்குப் பிறகு இந்தியாவில் புதிதாக உருவாக்கப்பட்ட அல்லது CTH ஆக 30 க்கும் மேலான  புலிகள் காப்பகங்கள் சட்ட விரோதமாகவே அறிவிக்கப்பட்டன. 
  • 2008 முதல் அமைக்கப்பட்ட புலிகள் காப்பகங்கள் கூட 2006 FRA ​வன உரிமைச் சட்டம் முழுமையாக அமலுக்கு வந்த பிறகும், கிராம சபைகளின் முறையான ஒப்புதலின்றி அல்லது உரிமைகளை முழுமையாக வழங்காமலே புலிகள் காப்பகங்களாக அமைக்கப்பட்டன. 

ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக அறிவிப்பை எடுத்துக் கொண்டால், பாசிச மோடி அரசின் 2023 வன திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பே 2021 புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. நாம் முன்னர் சொன்னவாறே வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972 பிரிவு 38 க்ஷி மற்றும் 2006 ஆம் ஆண்டின் திருத்தங்களின்படி ஒரு வனப்பகுதியை புலிகள் காப்பகமாகவோ அல்லது முக்கிய புலிகள் வாழ்விடமாகவோ அறிவிப்பதற்கு முன்பாக வனப்பகுதியில் தலைமுறை தலைமுறையாக வாழும் பழங்குடியினர் மற்றும் பாரம்பரிய வனவாசிகளின் ஒப்புதலை "கிராம சபா" மூலம் பெற வேண்டும். வன உரிமை சட்டம் 2006 இல் வனவாசிகளுக்கு வழங்கப்பட வேண்டிய தனிநபர் நில உரிமை மற்றும் சமூக நில உரிமைகளை முழுமையாக ஆய்வு செய்து வழங்கி முடித்த பின்னரே புலிகள் காப்பக அறிவிப்பை வெளியிட முடியும். இவற்றையெல்லாம் கிஞ்சிற்றும்  பொருட்படுத்தாமல் 2021ல் மேகமலை வருசநாடு வனப்பகுதியை புலிகள் காப்பகமாக எடப்பாடி அரசு அறிவித்தபோது அங்கு வாழும் கிராம மக்களின்  வன உரிமைகள் அங்கீகரிக்கப்படாமல் கிராம சபைகளின் ஒப்புதல் பெறப்படாமல் தன்னிச்சையாகவே புலிகள் காப்பகம் என்று அறிவிக்கப்பட்டது. எனவே இந்த புலிகள் காப்பக  அறிவிப்பே சட்டவிரோதமானது மட்டுமின்றி, அதன் அடிப்படையிலான மேகமலை வருசநாட்டு மக்களை வெளியேறச் சொல்லும் உச்ச நீதிமன்ற தீர்ப்பே சட்ட விரோதமானதாகும். சந்திப் மேத்தாவும் விக்ரம்நாத்தும் வழங்கியிருக்கும் சட்ட விரோத இந்த அநீதி தீர்ப்பு அனைவராலும் எதிர்க்கப்பட வேண்டியதாகும். 

2023 வன சட்டத்திற்குப் பிறகு வேகம் எடுக்கும்  தமிழ்நாட்டு அரசின் நிலப்பறிப்பு கார்ப்பரேட் சேவை

திமுக அரசின் சுற்றுலாக் கொள்கை 2023 (Tourism policy 2023) மற்றும் மோடி அரசின் வன பாதுகாப்பு திருத்த சட்டம் 2023 (Forest Conservation Amendment Act 2023) ஆகிய இரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்து இயங்கும் சட்டபூர்வ மற்றும் கொள்கை ரீதியான அமைப்பைக் கொண்டுள்ளன. 

2023 மத்திய வன சட்ட திருத்தத்தின்படி சூழல் சுற்றுலா (Eco-Tourism) மற்றும் உயிரியல் பூங்காக்கள் /சஃபாரி (Zoo & Safaris) அமைத்தல் "வனம் அல்லாத பயன்பாடு" என்ற  வரையறையில் இருந்து விலக்கப்பட்டுள்ளது. இதன்படி PPP (Puplic Private Partnership) மாதிரி அடிப்படையில் மாநில சுற்றுலாக் கொள்கை 2023, காடுகள் சரணாலயங்கள் மற்றும் புலிகள் காப்பகங்கள், சூழல் சுற்றுலா திட்டங்கள் பொது தனியார் கூட்டு (PPP) மூலம் செயல்படுத்த தனியார் முதலீட்டை வரவேற்கிறது. 

மோடி அரசின் 2023 வன சட்ட திருத்தம் மற்றும் மாநிலத்தின் 2023 சுற்றுலா கொள்கையின் அடிப்படையில் வனப்பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய இடங்கள் தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட முன்னெடுப்புகள் நடந்து வருகின்றன. 

தமிழ்நாடு வனவிலங்கு அனுபவக் கழகம் 

தமிழ்நாடு அரசின் வனத்துறையின் கீழ் Tamilnadu Wilderness Experiences Corporation  (TNWEC) என்ற சிறப்பு நிறுவனத்தை  (SPV) உருவாக்கி வனப்பகுதிகளில் ஓய்வு விடுதிகள் சஃபாரி சேவைகள் மற்றும் கூடார முகாம்களை (Eco- camps) தனியார் அமைப்புகளுடன் இணைந்து இயக்கும் பணிகளை முடுக்கி விட்டுள்ளது. 

ஆனைமலை, முதுமலை, கொடைக்கானல் மற்றும் ஏலகிரி ஆகிய இடங்களில் தனியார் நிறுவனங்களின் மூலமாக சூழல் நட்பு தங்குமிடங்கள் (Tented Accommodation/Eco-Lodges) மற்றும் "ஜிப்-லைன்"(Zip-Line) "ரோப்-வே"(Ropeways) போன்ற சாகச சுற்றுலா வசதிகளை அமைக்க தனியார் முதலீட்டாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனைமலை, முதுமலை, கொடைக்கானல் பகுதிகளில் மகேந்திரா ஹோலிடேஸ் (Mahindra Holidays) ஸ்டெல்லீஸ் ரிசார்ட்ஸ் (கனடா நிறுவனம்)போன்றவற்றிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

மக்களை வெளியேற்றி தமிழக அரசால் மீட்கப்படும் நிலங்கள் "வன சீரமைப்பு" என்ற பெயரில் பராமரிப்பு வசதி என்ற போர்வையில் கார்ப்பரேட்டுகள் கைகளுக்கே கைமாறவிருக்கிறது. 

தமிழ்நாடு அரசு தேயிலை சந்தையில் நிலவும் போட்டியை சமாளிக்க டான் டீ  நிறுவனத்தால் இயலவில்லை இதனால் ரூபாய் 240 கோடி நஷ்டத்தில் இயங்கி வருவதாகக் கூறி தொடர்ந்து நிர்வாக வசதிக்காக நிலங்களின் சில பகுதிகளை வனத்துறைக்கு மாற்றி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. டான் டீ நிலங்களை வனத்துறைக்கு ஒப்படைக்கக் கூடாது என்று போராடிய தொழிலாளர்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. 

இதனோடு இணைத்துதான் கீழ்கண்டவற்றையும் பார்க்க வேண்டி இருக்கிறது. 

2021 திமுக ஆட்சி காலத்தில் டான் டீ நிறுவனத்தின் நிலங்களை வனத்துறைக்கு மாற்றும் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. 

(2022/அரசானை GO. MS. No. 173) இதன்படி  நீலகிரி, கூடலூர், கோத்தகிரி, குன்னூர், பந்தலூர் மற்றும் வால்பாறை உள்ளிட்டவற்றின் இடங்கள் சுமார் 5,317 ஏக்கர் நிலங்கள் வனத்துறைக்கு ஒப்படைக்கப்பட்டது. 

இதே போல மாஞ்சோலை எஸ்டேட் நிலங்கள் 8,374 ஏக்கர் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது உச்சநீதிமன்ற உத்ரவின் படி ஸ்ரீவில்லிப்புத்தூர் மேகமலை புலிகள் காப்பகப் பகுதியில் சுமார் 160 ஏக்கர் முதல்கட்டமாக வனத்துறை வசம் சென்றுள்ளது. 

தொகுப்பாகச் சொல்வதெனில், 

2006 வனச்சட்டம் பழங்குடிகளுக்கான உரிமைகளை உத்தரவாதம் செய்கிறது; ஆனால் அதுவும் பெயரளவில்தான்.  அச்சட்டத்தின் படி பழங்குடி உரிமைகளை நிலைநாட்ட சட்டப்போராட்டம் நடத்தும் அதேவேளையில் அச்சட்டம் இயற்றப்பட்டதிலிருந்தே அதை மீறிதான் பழங்குடிகள் உரிமைகள் பறிக்கப்பட்டு வனங்கள் கார்ப்பரேட்டுகளுக்கு ஒப்படைக்கப்பட்டு அவர்கள் துரத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உரக்கச் சொல்ல வேண்டியிருக்கிறது. அனைத்து பிரச்சனைகளுக்கும் அருமருந்தாக 2006 சட்டத்தின் மூலம் பழங்குடிகளின் உரிமை கோரல்கள் முன்வைக்கப்படுகிறது. அச்சட்டம் வந்த பிறகும் பழங்குடிகள் ஒப்புதலின்றி காட்டை தாரைவார்த்தது ஏராளம். இந்த 2006 FRAவும் பெயரளவிலான சட்டமே. காங்கிரசின் UPA அரசு அமைய 2004 ல் பெரும்பான்மை இல்லாத சூழலில்  வெளியிலிருந்து சிபிஐ சிபிஎம் ஆதரவளித்தன. இதனால் பொது குறைந்தபட்சத் திட்டத்தின்(Common Minimum Programme) அடிப்படையில் அரசுக்கு ஆதரவு தரும் நிபந்தனையாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில் "நூற்றாண்டுகளாக நில உரிமை மறுக்கப்பட்ட பழங்குடி மக்களுக்கு நில உரிமை வழங்குவது" முக்கிய கோரிக்கையாக இருந்தது. இது அரசுக் கொள்கையின் ஒரு பகுதியாகச் சேர்க்கப்பட்டது. 

பழங்குடியின அமைப்புகளின் நீண்டகாலப் போராட்டத்தோடு சேர்ந்து, அன்றைய ஹிறிகி அரசுக்கு சிபிஐ சிபிஎம் கொடுத்த அரசியல் மற்றும் நாடாளுமன்ற நெருக்கடியால் 2006-இல் "வன உரிமைச் சட்டம்" (Forest Rights Act, 2006) சட்டவடிவம் பெற்றது. 

கார்ப்பரேட்டுகளின் கடும் எதிர்ப்பை கடந்தே இச்சட்டம் இடதுசாரிகளின் நிர்பந்தத்தால் உருவாக்கப்பட்டது. வெளிவேசம் போட்டு 

வஞ்சகமாக ஏமாற்றும் நரித்தன வரலாறு கொண்ட காங்கிரசு, சட்டம் இயற்றப்பட்டாலும் கார்ப்பரேட் சேவையை தொடர்ந்தது. மாவோயிஸ்டுகளை ஒழிப்பது என்ற பெயரில் பழங்குடிகளை நரவேட்டையாடி ஒரு உள்நாட்டுப் போரையே நடத்தியது. 

2006 FRA சட்டத்தின் பிரிவு2(o) [Section 2(o)]  2005 டிசம்பர் 13 க்கு முன்னதாக அந்த பகுதியில் வாழ்ந்திருக்க வேண்டும் என்பதோடு அந்த தேதியிலிருந்து மூன்று தலைமுறை (75 ஆண்டுகள்) அங்கே  வாழ்ந்ததற்கான ஆதாரத்தை நிரூபிப்பதன் மூலமே அவர்களது உரிமைகள் உத்தரவாதம் செய்யப்படும் என்ற நிபந்தனையும்கூட ஏமாற்று மோசடியாகும்.

இந்திரா ஆட்சி காலத்திலிருந்து வனத்தின் மீதான மாநில உரிமைகளை பறித்து தனியாருக்கு திறந்துவிடும் போக்கு தீவிரப்பட்டே வந்தது. வனசட்டங்களில் பழங்குடிகளுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச பெயரளவிலான உரிமைகளும் கூட 2023 மோடி அரசின் வனசட்டத்திருத்தத்தின் மூலம் முற்றாக பறிக்கப்பட்டு கார்ப்பரேட்டின் வேட்டைக்கு காடுகள் திறந்துவிடப்பட்டு வனவாழ் மக்கள் வீடற்ற நாடற்ற அகதிகளாக சொந்த நாட்டிற்குள்ளேயே இன்று விரட்டப்படுகின்றனர். அரசின் கார்ப்பரேட் வனக்கொள்கையின் அடிப்படையிலேயே வனங்களிலிருந்து மக்களை வெளியேற்ற நீதிமன்றங்களும் பாசிச தீர்ப்புகளை எழுதி வருகின்றன. 

ஏற்கனவே 2019ம் ஆண்டில் வனத்துறையின் வாதத்தை ஏற்று 18,10,000 மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் எனக்கூறி வெளியேற்ற உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி அது நாடெங்கும் பெரும் எதிர்ப்பாக மாறவும் பின்வாங்கி அந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்துக் கொண்டது உச்சநீதிமன்றம். தற்போது மேகமலை வருசநாட்டு மக்களை ஆக்கிமிப்பாளர்கள் என அறிவித்ததுடன் அவர்களை துணை இராணுவப்படையை பயன்படுத்தி வெளியேற்றவும் எவ்வித கூச்சமும் அச்சமுமின்றி  உத்தரவிட்டிருக்கிறது. மாஞ்சோலை வன மக்களை விரட்ட தீர்ப்பெழுதிய மை காய்வதற்குள் மேகமலை மக்களின் கண்ணீரில் குளித்துக்கொண்டிருக்கிறது சந்திப்மேத்தா விக்கரம்நாத்தின் தீர்ப்பு. 

இந்திய மலைகள் வனங்களில் உள்ள கனிமவளங்களை பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட்டுகள் கொள்ளையிடவும், குறிப்பாக பன்னாட்டு மின்சார வாகன சந்தைக்கு தேவையான செமிகன்டக்டர், லித்தியம் பேட்டரி, ஈவி சார்ஜிங் போன்ற தொழிற்கூடம் அமைப்பதற்கும் இந்த தொழில்நுட்பங்களின் அடிப்படையிலான உற்பத்திக்கு ஆதாரமாக விளங்கும் லித்தியம் உள்ளிட்ட கனிம வளங்களை சுரண்ட இந்திய வனம் மோடி அரசால் அகல திறந்து விடப்பட்டுள்ளது. 

மேலும் வனத்திலிருந்து இயற்கையாக பெறப்படும், மருத்துவ குணம் கொண்ட மூலிகைகள், தேன் உள்ளிட்ட தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிரிகள் மற்றும் பிற உயிரினங்களிடமிருந்து பெறப்படும் மருந்துகள் இவற்றின் மீதான உரிமையினை கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கவும், சுற்றுலா மையமாக மாற்றி உயிரியல் பூங்கா, வன உலா மற்றும் சூழல் சுற்றுலா வசதிகள் போன்றவற்றை அமைப்பதற்காக - காட்டை கார்ப்பரேட்டுகளுக்கு ஒப்படைக்க கார்ப்பரேட்டுகளின் காவலனாக இருந்து நாடுமுழுவதும் பாசிச மோடி அரசு வனமக்களை வெளியேற்றி வருவதன் ஒரு பகுதியாகத்தான் தற்போது மேகமலை வருசநாடு மக்களை வெளியேற்றவும் துடித்துக்கொண்டிருக்கிறது. இது வெறும் மேகமலை பகுதி சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் வனமக்களை வெளியேற்றி வருவதன் ஒருபகுதிதான் இது. 

வனப்பாதுகாப்பு, வனவிலங்கு பாதுகாப்பு என்ற பெயரில் வனமக்களை விரட்டிவிட்டு மலையையும் வனத்தையும் வனவிலங்கு பல்லுயிரிகளையும் கார்ப்பரேட்டுகள் அழித்து கொண்டிருக்கிறார்கள். இது பெரும் பாதிப்பை நோக்கி செல்கிறது . உலகஅளவில் காடழிப்பில் பிரேசிலுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. பிரேசிலில் உள்ள அமேசான் காடுகளில் கார்ப்பரேட்டுகள் காடுகளை ஆக்கிரமிக்க பல ஹெக்டேர் கணக்கில் தொடர் தீ வைப்பு மற்றும் மரங்களை வெட்டி வருகின்றனர். 

இதனால் உலக அளவில் பல கோடி டன் கார்பன்-டை-ஆக்ஸைடை உறிஞ்சி புவி வெப்பமயமாதலைத் தடுக்கும் இயற்கை அமைப்பாக இருந்த அமேசான் காடுகளே இன்று கார்பனை உறிஞ்சுவதை விட கார்பனை வளிமண்டலத்தில் வெளியிடும் ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கார்ப்பரேட்டுகளின் காடழிப்பு போன்ற நடவடிக்கையால் பழங்குடிகள் வனவாசிகள் விரட்டப்படுவது மட்டுமல்ல விலங்குகள் அழிக்கப்படுவது மட்டுமல்ல புவி வெப்பமயமாதல் அதிகரித்து பருவநிலை மாற்றத்தினால் எல்நினோ வாட்டி வதைக்கிறது. கார்ப்பரேட் காடழிப்பு உலகையே அச்சுறுத்துகிறது. 

இப்படி உலகெங்கிலும் காடுகளை அழிப்பது கார்ப்பரேட்டுகள்தான். ஆனால் மக்கள்தான் காடுகளை அழிப்பதாக கார்ப்பரேட் நீதிமன்றம் தீர்ப்புகள் எழுதுகின்றன. வனமக்கள் காடுகளை அழிப்பதாக ஆக்கிரமித்திருப்பதாக கூறும் உச்சநீதிமன்றம், ஒருநாளைக்கு 40 முதல் 50 ஹெக்டேர்வரை இந்திய காடுகளை கார்ப்பரேட்டுகள் அழிக்கிறார்களே பலலட்ச மரங்களை வெட்டிக் குவிக்கிறார்களே அதை கேள்வி கேட்கிறதா?  விலங்குகளை காக்க பழங்குடி மனிதர்களை வெளியேற்ற உத்திரவிடும் நீதிமன்றம் ஆயிரக்கணக்கான விலங்குகளை கார்ப்பரேட் மிருகங்கள் கொன்று குவிப்பதை கண்ணை திறந்து பார்க்குமா? 

இதற்கெல்லாம் சந்திப்மேத்தா விக்கரம்நாத்களின் மூச்சுக்காற்றுக்கூட வெளியே வருவதில்லை. 

காட்டில் மேகமலை விவசாயிகள் வளர்த்துள்ள மரங்களை வெட்டி சாய்க்கவல்லவோ இவர்கள் உத்தரவிடுகிறார்கள்!

வருசநாடு பகுதியில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு மற்றும் வெளியேற்ற நடவடிக்கைகளுக்கு எதிராக பெண்கள், முதியவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான கிராம மக்கள் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் கடையடைப்பு, இரவு-பகல் காத்திருப்புப் போராட்டங்கள்  என தொடர் போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். ஆளும்வர்க்கம்- பாசிச மோடி அரசு - மாநில அரசு - நீதிமன்ற தீர்ப்பு என மேகமலை மக்கள் மீது தொடுக்கப்படும் கூட்டுப் பாசிச சர்வாதிகார ஒடுக்குமுறைக்கு எதிராக அம்மக்களின் நீதிக்கான போராட்டங்களுக்கு தமிழக மக்கள் அனைவரும் குரல் கொடுப்பதோடு அவர்களின் போராட்டக் களத்தில் கரம் கோர்ப்பது அனைவரின் கடமையாகும். அம்மக்களுக்கு பட்டா வழங்கவும் அவர்களின் நிலவுரிமைகளை காக்கவும் நாம் ஒவ்வொருவரும் குரல் கொடுக்க வேண்டும். இந்த அநீதியான தீர்ப்புகளை எழுத வகை செய்யும் மோடி அரசின் பாசிச வனச்சட்டம், பல்லுயிர் பெருக்கச் சட்டம் திரும்ப பெறப்பட வேண்டும். இப்படி  வெளிநாட்டு உள்நாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு காட்டை காவுகொடுக்கும் மோடி ஆட்சியை தூக்கியெறிய அனைவரும் அணியமாக வேண்டும். 

அதே வேளையில் அதிமுக திமுக வழியில் மேகமலை வருசநாட்டு மக்களுக்கு த.வெ.க ஆட்சியும் துரோகமிழைத்தே வருகிறது. போராட்டங்களை தீவிரமடையாமல் கட்டுப்படுத்துகிறது. ஆக்கிரமிப்பாளர்களை அகற்றும் நடவடிக்கையை துவங்கிவிட்டதாக நீதிமன்றத்தில் கூறுகிறது. வனத்தின் மீதான மாநில உரிமைகள் பறிக்கப்படுவதை எதிர்த்து வாய்த்திறக்காமல் பேசாமடந்தையாக இருக்கிறது. இந்த அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என போராடும் அதே நேரத்தில் 2006 FRA சட்டப்படி வனமக்களின் ஒப்பதலின்றி 2021 ல் அறிவிக்கப்பட்ட புலிகள் காப்பக அறிவிப்பையே த.வெ.க அரசு திரும்பப்பெற வேண்டும் எனவும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். 

மேகமலை மக்களை வெளியேற்றும் உச்சநீதிமன்ற பாசிச உத்தரவை ஒன்றுப்பட்ட மக்கள் போராட்டங்கள் மூலம் முறியடிப்போம்.

மேகமலை வனவாழ் மக்களின் வாழ்வுரிமையை நிலைநாட்ட அனைவரும் ஒன்றுபடுவோம்! காட்டையும் நாட்டையும் காப்போம்.

சமரன்

(அக்டோபர் 2026 இதழ்)