கவிதை: எங்கள் நிலம்! எங்கள் வனம்!

சிற்றம்பல பாரதி - செந்தளம்

கவிதை: எங்கள் நிலம்! எங்கள் வனம்!

குளிர் மேகம் சூழ்ந்த
"
மேகமலை".

 

மழைமேகம் பார்த்துத்
தோகை விரித்தாடும்
"
மயிலாடும் பாறை".

 

தென்னை
தேன் பொழியும்
வளமான
"
வருசநாடு"...

 

மேகமலையின்
தாய்மடியில்
உயிரை வளர்த்த
பிழைப்பு நிலம்!
அனுதினம் வாழ்ந்த
உழைப்பு நிலம்!

 

இது...
எங்கள் நிலம்!
எங்கள் வனம்!

 

காடும் மேடும்
கழனியாக,
இரத்தம் சிந்தி
வளர்த்த பூமி எங்கள்
உயிரும் பயிரும்
வளர்ந்த பூமி!

 

தலைமுறை ஐந்தாய்
உழைத்து...
அகிலம் வியக்கச்
செழித்த பூமி!
உலகிற்கு...
உணவு கொடுத்த
கொடை பூமி!

 

இது...
எங்கள் பூமி!
இது... இதுதான்...
எங்கள் சாமி!

 

காப்பகம் என்னும்
பெயரைக் கூறி,
காற்றையும் நிலத்தையும்
பறிப்பது முறையோ?

 

கார்ப்பரேட் பேய்களின்
வேட்டைக்காகக்
கண்ணீரில் எம்மைக்
கரைப்பது சரியோ?

 

மாஞ்சோலை சிந்திய
செந்நீரே மலையில்
இன்னும் காயவில்லை!

 

மேகமலை மக்களின்
கதறல் சத்தம் உங்கள்
காதுகளில் ஏன் விழவில்லை?

 

ஐயோ...
ஐந்து தலைமுறை
வாழ்ந்த நிலம்,
இன்று தரிசு நிலமாய்
மாறிடுமோ?

 

அதிகார உச்சத்தின்
அநீதித் தீர்ப்பு,
அறத்தை மறுத்துச்
செயல்படுமோ? – எங்கள்
கழுத்தை அறுத்துப்
பலியிடுமோ?

 

இரத்தம் சிந்தி
மண்ணைப்
பொன்னாய்
மாற்றிய எம்மை...

 

எங்கள் பூமியை விட்டு
விரட்டுவதோ? – துணை
இராணுவம் கொண்டு
மிரட்டுவதோ?

 

துப்பாக்கி முனையில்
தீவிரமாய் சுற்றி வளைக்க
ஏன் இந்த நாட்டமோ?
அட, நாங்கள் என்ன
தீவிரவாதக் கூட்டமோ?

 

லாபத்திற்காக
விளைநிலத்தைக்
கொலைக்களமாய்
மாற்றுவதா? – மக்களை
அநீதியாய் வெளியேற்றுவதா?

 

"பல்லுயிர் காப்போம்,
புலியைக் காப்போம்,
காட்டு வன உயிரைக் காப்போம்" என...

 

கார்ப்பரேட் மிருகங்களின்
லாப வெறிக்கு
மானிட இரத்தம்
ஊற்றுவதோ? – எம்மை
"
ஆக்கிரமிப்பாளர்" என்று தூற்றுவதோ?

 

அட... இது என்ன தேசமா?
சொல்லடி சிவசக்தி!
இது சுதேசிய வேஷமா? – இல்லை
விதேசிய தோஷமா?

 

மாஞ்சோலை மக்களின்
செந்நீரும்,
மேகமலை மக்களின்
கண்ணீரும்,
ஒன்றாய்ச் சேரும்! பெரும்
சுனாமியாய் உருமாறும்!
வாரிச்சுருட்டி உங்களை
வங்கக் கடலில் புரட்டிப் போடும்!

 

எங்கள்
நீதிக்கான போராட்டம்
நிச்சயம் வெல்லும்!
எதிர்காலம்
உமக்குக் கட்டாயம்
பதில் சொல்லும்!

 

-      சிற்றம்பல பாரதி,
செந்தளம்