வெற்றி முழக்கமும் பிணங்களின் வாடையும்: காசாவின் சாம்பல் மேட்டில் டிரம்ப்பின் நாடகம்!
செந்தளம் செய்திப்பிரிவு
ஐக்கிய நாடுகள் சபையின் பளபளக்கும் மேடைகளில் உலகத் தலைவர்கள் கோட்-சூட் அணிந்து கைதட்டல்களைப் பெறுவது ஒன்றும் புதியதல்ல. ஆனால், ஆயிரக்கணக்கான குழந்தைகளின் குருதி படிந்த நிலத்தின் மீது நின்றுகொண்டு, அதனைத் தனது தனிப்பட்ட "ராஜதந்திர வெற்றி" என்று விளம்பரப்படுத்த ஒரு குரூரமான மனநிலை வேண்டும். அதைத்தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செப்டம்பர் 22 அன்று ஐ.நா. பொதுச் சபையில் அப்பட்டமாக அரங்கேற்றினார்.
காசாவில் "போரை முடித்துவிட்டேன், அமைதியைக் கொண்டுவந்துவிட்டேன்" என்று டிரம்ப் முழங்கிய அதே மேடையில், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன் வீசிய வார்த்தைகள் டிரம்ப்பின் முகமூடியைக் கிழித்தெறிந்தன: "இது அமைதி அல்ல; நம் அனைவருக்கும் அவமானம் தரும் காட்சி!" என்று விளாசினார். ஆனால் பிரான்சிலேயே அதிபர் மக்ரோன் மீது பாலஸ்தீனத்தை பல்வேறு நாடுகள் அங்கீகரித்த போதிலும், பிரான்சு அங்கீகரிக்காதது குறித்தும் கடும் விமர்சனங்கள் உண்டு.
அமைதி வாரியமா? ஆக்கிரமிப்பு முகமூடியா?
டிரம்ப் முன்வைத்த 20-அம்சத் திட்டம் என்பது பாலஸ்தீன மக்களின் கண்ணீரைத் துடைக்க வந்த அமைதித் திட்டம் அல்ல; மாறாக, இஸ்ரேலின் கொடூர ஆக்கிரமிப்பை சட்டப்பூர்வமாக்குவதும் வாஷிங்டனின் ஆக்கிரமிப்பு திட்ட நோக்குடன் தயாரித்த ஆக்கிரமிப்பு ஆவணம். வெற்று வாய்ச்சவடாலாக "போர்நிறுத்தம்" என்று அறிவிக்கப்பட்ட பிறகும் காசாவின் எல்லைகளில் ஒரு சிறிய மனிதாபிமான வழித்தடம்கூட திறக்கப்படவில்லை என்பதை மக்ரோன் சுட்டிக்காட்டியபோது, வெள்ளை மாளிகையின் பதில் என்னவாக இருந்தது? "பணயக்கைதிகளை மீட்டுவிட்டோம், வேலையை முடித்துவிட்டோம்" என்ற அதே பழைய பல்லவிதான்.
பணயக்கைதிகள் மீட்கப்பட்டது வரவேற்கத்தக்கதுதான்; ஆனால் அமைதி என்பது வாஷிங்டனின் கேமரா வெளிச்சங்களுக்கானது மட்டுமா? யதார்த்தம் என்ன?
• காசாவில் வானத்திலிருந்து பொழியும் குண்டுகள் நின்றதா? இல்லை.
• பட்டினியால் சாகும் குழந்தைகளுக்கு ஒரு துண்டு ரொட்டியும் மருந்தும் சென்றடைந்ததா? இல்லை.
• இடிபாடுகளுக்கு அடியில் புதைந்த தம் சொந்த நிலத்தில் பாலஸ்தீனர்கள் நிம்மதியாகக் கண்விழித்தார்களா? அதுவும் இல்லை.
அப்படியென்றால் டிரம்ப் கொண்டாடுவது எதை? ஒரு மக்கள் கூட்டத்தை வதைமுகாமில் அடைத்துவைத்துவிட்டு, அதன் சாவியை ஆக்கிரமிப்பாளனிடம் ஒப்படைத்த சதிதனத்தைத்தான் அவர் "வெற்றி" என்று உலகிற்கு விற்கப் பார்க்கிறார். இவர்கள் காசாவில் கொன்று குவித்த சடலங்களை புதைக்க புதைமன்கூட காலியாக இல்லை என்று செஞ்சிலுவை சங்கம் கூறுகிறது. காசா மக்களின் பிணங்கள் மீது ஏறி நின்று அமைதியை நிலை நாட்டியதாக கூறும் டிரம்பின் அரசியலை புரிந்துகொள்ள வேண்டும்.
"போர்நிறுத்தம்" என்ற பெயரில் அரங்கேறும் இனப்படுகொலை
களத்தின் கொடூர யதார்த்தத்தை கொன்று குவித்த எண்களே வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. அதிகாரப்பூர்வமாக "போர்நிறுத்தம்" அமலுக்கு வந்ததாகச் சொல்லப்பட்ட 2025 அக்டோபர் முதல் 2026 செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் மட்டும், காசாவில் இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,334. காயமடைந்து நடைபிணமானவர்கள் 4,429 பேர்.
நாள்தோறும் அப்பாவிப் பொதுமக்கள் மீது குண்டுகள் வீசப்படுகின்றன. காசாவின் பரப்பளவைச் சுருக்கி, இஸ்ரேல் தனது ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை மேலும் விரிவுபடுத்தியுள்ளது. டிரம்ப் உருவாக்கிய இந்த "போர்நிறுத்தம்", இஸ்ரேலியப் படைகள் எந்தவித எதிர்ப்புமின்றி பாலஸ்தீனர்களை வேட்டையாட அமெரிக்கா வழங்கிய உரிமமே அன்றி வேறில்லை. வீடுகள் தகர்க்கப்பட்டு, மருத்துவமனைகள் தரைமட்டமாக்கப்பட்டு, மனித உடல்கள் சிதறிக்கிடக்கும் மண்ணில் நின்றுகொண்டு "போரை முடித்துவிட்டேன்" என்று சொல்வது அப்பட்டமான பொய் மட்டுமல்ல; மரணித்த பால்ஸ்தீனியர்களின் மீது கேலி செய்யும் குரூரம்.
பட்டினிப் போரும் மூடப்பட்ட எல்லைகளும்
மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW) மற்றும் 'கிஷா' (Gisha) போன்ற அமைப்புகளின் சான்றுகள் அமெரிக்காவின் இரட்டை வேடத்தைத் தோலுரிக்கின்றன. 2026 தொடக்கத்தில் ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையைக் காரணம் காட்டி காசாவின் ஒட்டுமொத்த நுழைவாயில்களையும் இஸ்ரேல் இழுத்து மூடியது. ஐ.நா. நிர்ணயித்த குறைந்தபட்ச உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் கூட உள்ளே நுழைய அனுமதிக்கப்படவில்லை என்று அறிவித்துள்ளன.
டிரம்ப்பின் "அமைதி வாரியம்" நிவாரணப் பொருட்கள் 70% அதிகரித்துவிட்டதாகப் புள்ளிவிவரங்களை அள்ளி வீசுகிறது. ஆனால், உண்மை என்னவென்றால், மக்கள் பட்டினியால் சாகிறார்கள்; மறுகட்டமைப்புக்கான எந்தவொரு மூலப்பொருளும் உள்ளே செல்ல இஸ்ரேல் அனுமதிப்பதில்லை. பாலஸ்தீன மக்களைத் தங்கள் சொந்த வீடுகளுக்குத் திரும்பவிடாமல் தடுக்கும் இஸ்ரேலின் மிருகத்தனமான முற்றுகைக்கு முழு நிதியுதவியையும், ஆயுதங்களையும் வழங்கிவிட்டு வாஷிங்டன் அமைதிப் புறா வேடம் போடுகிறது.
"எட்டுப் போர்களை முடித்தேன்" — ஒரு விளம்பரப் பிரியரின் வெற்றுப் பிதற்றல்
டிரம்ப் தனது உரையில் தாம் "எட்டுப் போர்களை" முடித்துவைத்ததாக மார்தட்டிக்கொண்டார். ஆனால் அரசியல் விமர்சகர்களும் உண்மைச் சரிபார்ப்புகளும் அது வெறும் வெற்று வாய்வீச்சு என்பதை உறுதிப்படுத்துவது மட்டுமல்ல; உலகத்தில் நடக்கும் போர்களுக்கு அமெரிக்காவே காரணம் என்பது உலகறிந்த உண்மை.
• அவர் குறிப்பிட்டதில் இரண்டு மோதல்கள் அவரது காலத்தில் போராகவே வெடிக்கவில்லை.
• ஆப்பிரிக்காவில் காங்கோ–ருவாண்டா மோதல் அவர் கையெழுத்திட்ட ஒப்பந்தத்திற்குப் பிறகும் ரத்த ஆறாகத் தொடர்கிறது.
• 2025-இல் இஸ்ரேல்-ஈரான் மோதலை நிறுத்தியதாகக் கூறிக்கொண்ட கையோடு, 2026-இல் மீண்டும் ஒரு போரைத் தொடங்க இஸ்ரேலுக்கு முழு ஆதரவையும் ஆயுதங்களையும் வாரி வழங்கியது இதே டிரம்ப் நிர்வாகம்தான்.
• இரசியா-உக்ரைன் போரை நிறுத்தியதாக அறிவித்தது; ஆனால் அதன் உண்மை இன்றுவரை எப்போதுமில்லாத வகையில் கடுமையான போர் நடைபெற்று 4 வருடங்களில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது;
• காசா – இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு பிறகும் ஆய்ரக்கணக்கானோர் கொள்ளப்பட்டுள்ளனர். நாள்தோறும் காசா மீது குண்டுவீச்சுகள் நடத்தி கட்டிடங்கள் தரைமட்டமாக்கப்படுகின்றன.
• இஸ்ரேல் – லெபனான் போரை நிறுத்தியதாக அறிவித்தது. ஆனால் தொடர்ந்து அங்கும் இஸ்ரேல் ஹிஸ்புல்லா மீது தாக்குதல் என்ற பேரில், லெபனான் குடியிருப்பு பகுதிகளை அழித்து, ஆக்கிரமித்து, லெபனான் மக்களை கொன்று குவித்து வருகிறது. இதற்கு முழு ஆதரவை அமெரிக்கா அளித்துவருகிறது.
டிரம்ப்புக்கு தேவை அமைதி அல்ல; உலகத்தை கட்டுப்படுத்தும் ஏகபோக அரசியல் உரிமை; வரவிருக்கும் தேர்தல்களுக்கும், வரலாற்றுப் பக்கங்களுக்கும் தன்னை ஒரு "அமைதி நாயகனாக" காட்டிக்கொள்ள தனது பொய் மூட்டைகளை விற்க முனைகிறார்.
பாலஸ்தீனம் கேட்பது நீதி: பிச்சையல்ல, உரிமை!
வாஷிங்டனின் அதிகார மேடைகளிலோ அல்லது ஜெனீவாவின் குளிரூட்டப்பட்ட அறைகளிலோ பாலஸ்தீனத்திற்கான விடிவு பிறக்கப்போவதில்லை.
பாலஸ்தீனம் என்பது வெறும் வரைபடக் காகிதம் அல்ல; அது ஒரு தேசத்தின் உதிரமும் உரிமையும். சர்வதேச சமூகம் அங்கீகாரம் வழங்குவதை ஏளனம் செய்யும் டிரம்ப் போன்ற ஏகாதிபத்தியவாதிகள் உணரவேண்டிய உண்மை ஒன்றுண்டு: நீதி கிடைக்காதவரை அங்கு அமைதி பிறக்காது.
காசா மக்கள் எதிர்பார்ப்பது டிரம்ப்பின் வெற்றுப் பிரகடனங்களையோ, சர்வதேச அமைப்புகளின் கண்ணீர் அறிக்கைகளையோ அல்ல.
• வானில் வட்டமடிக்கும் அமெரிக்கத் தயாரிப்பு டிரோன்களும் குண்டுகளும் நிரந்தரமாக நிறுத்தப்பட வேண்டும்!
• சிறைக்கூடமாக மாற்றப்பட்டுள்ள எல்லைகள் திறக்கப்பட்டு மனிதாபிமான உதவிகள் தடையின்றிப் பாய வேண்டும்!
• பாலஸ்தீனர்கள் தங்களின் சொந்த மண்ணில், சொந்த வீடுகளில், தலைநிமிர்ந்து வாழும் சுயநிர்ணய உரிமை நிலைநாட்டப்பட வேண்டும்!
மூடப்பட்ட எல்லைகளுக்குப் பின்னால் ஒரு முழு இனத்தையும் பட்டினிபோட்டுக் கொன்றுவிட்டு, மேடையில் நின்று "வெற்றி" முழக்கமிடுவது ஏகாதிபத்திய வெறித்தனம். பாலஸ்தீன மக்களின் உடல்களின் மீது கட்டப்படும் எந்தவொரு அமைதித் திட்டமும் வரலாற்றின் குப்பைத்தொட்டியில்தான் முடியும். பிரான்சு அதிபர் மக்ரோனின் எச்சரிக்கை வெற்று வார்த்தைகள்தான். ஆனால் இந்த அநீதியை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருக்கும் உலகம், தன் மனசாட்சியை ஒருநாள் கிளரூம். வெடித்து கிளம்பும்போது பால்ஸ்தீனம் பிறக்கும்.
- செந்தளம் செய்திப்பிரிவு