கோட்பாடும் நடைமுறையும்
அ.கா.ஈஸ்வரன்

கோட்பாடு - நடைமுறை இதில் எது முக்கியமானது? என்ற கேள்வி அதிகமாகக் கேட்கப்படுகிறது.
நடைமுறையே முக்கியமானது என்று பெரும்பான்மையினர் பதிலளிப்பர், சிறுபான்மையினர் கோட்பாடே முக்கியம் என்று பதிலளிப்பர்.
இரண்டும் தவறானது. நடைமுறை கோட்பாடு இரண்டும் முக்கியமானது. இதில் ஒன்றை மட்டும் முக்கியமானது என்று பிரித்துப் பார்க்க முடியாது.
இருந்தாலும், “எங்களுக்கு கோட்பாட்டைவிட நடைமுறையேதான் முக்கியம்” என்று அடித்துக் கூறுபவர்கள் இருக்கிறார்கள்.
“எங்களுக்கு கோட்பாட்டைவிட நடைமுறைதான் முக்கியம்”- இதுவே ஒரு வகையானக் கோட்பாடுதான். கோட்பாடு இல்லாமல் நடைமுறை இல்லை என்பதுதான் எதார்த்த உண்மை.
நடைமுறையை எந்த வகையில் அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான வழிகாட்டிதான் கோட்பாடு. கோட்பாடு எதை நடைமுறைப்படுத்த வேண்டும் எப்படி நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதையே வலிறுத்துகிறது
கோட்பாடு நடைமுறைக்கு எதிரானது கிடையாது.
முதலில் ஒன்றை நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும். கோட்பாடு என்பது நடைமுறையில் இருந்துதான் உருவானது. அதனை நடைமுறைப்படுத்தும் போது அந்தக் கோட்பாடு சரியானதா? தவறானதா? என்பதை உறுதி செய்ய முடிகிறது.
மேலும் நடைமுறையில் இருந்துதான் அந்தக் கோட்பாடு வளர்ச்சி பெருகிறது, மேம்பாடு அடைகிறது.
கோட்பாடு இல்லாத நடைமுறையும், நடைமுறை இல்லாத கோட்பாடும் நடைமுறையில் சாத்தியமற்றது.
கோட்பாடு இல்லாத நடைமுறை குருட்டாம்போக்கான செயலாகத்தான் இருக்கும். இறுதியில் அனுபவாதமாக சுருங்கிப் போகும்.
நடைமுறைத் தோல்வி என்பது பெரும்பாலும் கோட்பாட்டினைப் பின்பற்றாததால்தான் எற்படுகிறது. அதே போல கோட்பாட்டினைப் புரிந்து கொள்ளாமையினாலும் ஏற்படுகிறது.
கோட்பாட்டை புரிந்து கொள்ளாதது, கோட்பாட்டை பின்பற்றாதது இதுதான் நடைமுறையில் சந்திக்கிற தோல்விகளுக்கு முக்கியமான ஒன்றாக இருக்கிறது.
மார்க்சியம் என்பது ஒரு கோட்பாடு.
மார்க்சியக் கோட்பாட்டை மார்க்ஸ் தான் உருவாக்கினார். எங்கெல்ஸ் அதற்கு துணைபுரிந்தார்.
பாட்டாளி வர்க்கம் புரட்சிகரமானது என்பது மார்க்சின் ஒரு கோட்பாடு. இந்த கோட்பாட்டை மார்க்ஸ் தனது தனிப்பட்ட சொந்த முயற்சியால் உருவாக்கவில்லை. அன்றைய உற்பத்தி முறையில் இருந்துதான் இதனை உருவாக்கினார். அன்றைய எதார்த்தத்தில் இருந்துதான் உருவாக்கினார், அன்றைய நடைமுறையில் இருந்துதான் உருவாக்கினார்.
பாட்டாளி, இழப்பதற்கு ஒன்றும் இல்லாதவர்கள் என்று அன்று மார்க்ஸ் கூறினார், இதனையே இன்றும் தூக்கிப் பிடித்துக் கொண்டு திரிய முடியாது. இன்றைக்கு முதலாளித்துவமும் வளர்ந்திருக்கிறது, பாட்டாளிகளும் வளர்ந்திருக்கிறார்கள். இதற்கு ஏற்ப மார்க்சியத்தை நாம்தான் வளப்படுத்த வேண்டும்.
அது தானே நிகழாது, நாம் தான் முயற்சிக்க வேண்டும்.
அது போன்ற முயற்சி இங்கே பெரிய அளவில் நடைபெறவில்லை என்பதே உண்மை. இத்தகைய உண்மைகளை புரிந்து கொண்டு நாம் செயல் படவேண்டும்.
ஆலைத் தொழிலாளர்கள் மட்டும் பாட்டாளி என்று கருதிடமுடியாது. இன்று தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிவர்களில் பலர் புதிய பாட்டாளிகளாக இருக்கிறார்கள். அதனை புதியதாக வரையறை செய்ய வேண்டும்.
முதலாளித்துவ உற்பத்தி முறையில் உள்ள உள்முரண்பாட்டால் முதலாளித்துவம் அழிந்து போகும். முதலாளித்துவ சமூகத்தில் இருந்து சோஷலிச சமூகமாக மாறியே தீரும்.
உண்மைதான், ஆனால் சமூக மாற்றம் தானே நிகழாது, அதனை நடத்துவதற்கு கம்யூனிஸ்ட் கட்சி முன்னணிப்படையாக செயல்பட வேண்டும். அத்தகைய முன்னணிப் படையே உழைக்கும் மக்களைத் தலைமைத்தாங்கி நடத்தும்.
கம்யூனிஸ்டுகளின் கடமை என்ன? கம்யூனிஸ்ட் கட்சியின் கடமை என்ன?
என்பதை நாம் இன்றைய நடைமுறையில் இருந்து அறிந்து கொள்ளத் தேவையில்லை, அதனை கோட்பாடாக மார்க்ஸ் உருவாக்கி வைத்துள்ளார். அதனை நாம் இன்றைய பொருளாதார சூழ்நிலைமைக்கு ஏற்ப நடைமுறைப்படுத்த வேண்டும். நடைமுறையோடு வளரவும் செய்யும்.
மார்க்சிய அடிப்படைகளை அறிந்து கொள்ள வேண்டும் என்றால், மார்க்ஸ் எழுதிய அனைத்து நூல்களையும் படிக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. மார்க்ஸ்-எங்கெல்ஸ் ஆகியோர் எழுதிய நூல்கள் ஆங்கிலத்தில் 50 தொகுதி இருக்கிறது, தமிழில் 20 தொகுதி இருக்கிறது. அதில் உள்ள அடிப்படையானதை முதலில் படிக்க வேண்டும்.
லெனின் வாழ்ந்த காலத்தில் மார்க்சின் முக்கியமான பல நூல்கள் வெளியாகவில்லை, குறிப்பாக “ஜெர்மன் சித்தாந்தம்” என்கிற நூல்.
லெனின் மறைந்த பிறகுதான் இந்த நூல் அச்சாகியிருக்கிறது. ஆனால் குறைவாக கிடைத்த நூல்களில் இருந்தே லெனின் இயக்கவியல் மற்றும் பொருள்முதல்வாதம் ஆகியவற்றில் தெளிவு பெற்றவராகவும் அதனை நடைமுறைப்படுத்துபவராகவும் இருந்தார்.
கிடைக்கிற மார்க்ஸ் நூல்கள் அனைத்தையும் அனைவரும் படிக்க வேண்டியத் தேவையில்லை, அதில் தேவையானதை தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும். ஆய்வு செய்பவர்கள் முழுமையாகப் படித்துக்கொள்ளட்டும்.
கம்யூனிஸ்டுகளின் கடமை என்ன? கம்யூனிஸ்ட் கட்சியின் கடமை என்ன? என்கிற கேள்வி முன்பே எழுப்பி இருந்தோம்.
இதற்கு ”கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை” என்கிற நூலை முழுமையாகக்கூட படிக்க வேண்டாம். இரண்டாம் அத்தியாயமான, “பாட்டாளிகளும் கம்யூனிஸ்டுகளும்” என்பதை மட்டும் படித்தால் போதுமானது. அதில் கம்யூனிஸ்டுகளின் கடமையையும் கம்யூனிஸ்ட் கட்சியின் கடமையையும் அறிந்து கொள்ளமுடிகிறது.
“ஒட்டுமொத்தப் பாட்டாளிகளுடன் கம்யூனிஸ்டுகள் கொண்டுள்ள உறவு எத்தகையது?
கம்யூனிஸ்டுகள் ஏனைய தொழிலாளி வர்க்கக் கட்சிகளுக்கு எதிரான ஒரு தனிக் கட்சியாக அமையவில்லை.
கம்யூனிஸ்டுகளுக்கு ஒட்டுமொத்தப் பாட்டாளி வர்க்கத்தின் நலன்களைத் தவிர வேறு தனிப்பட்ட நலன்கள் கிடையாது.
பாட்டாளி வர்க்க இயக்கத்தை வடிவமைக்கவும் வார்த்தெடுக்கவும் அவர்கள் தமது சொந்தக் குறுங்குழுவாதக் கோட்பாடுகள் எவற்றையும் வகுத்துக் கொள்ளவில்லை. கம்யூனிஸ்டுகளை ஏனைய தொழிலாளி வர்க்கக் கட்சிகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுபவை பின்வருவன மட்டும்தாம்:
(1) வெவ்வேறு நாடுகளில் நடைபெறும் பாட்டாளிகளின் தேசியப் போராட்டங்களில், கம்யூனிஸ்டுகள் எந்தவொரு தேசிய இனத்தையும் சாராமல், பாட்டாளி வர்க்கம் முழுமைக்கும் உரிய பொதுவான நலன்களைச் சுட்டிக்காட்டி, முன்னணிக்குக் கொண்டு வருகின்றனர்.
(2) முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிரான தொழிலாளி வர்க்கப் போராட்டம் கடந்து செல்ல வேண்டிய பல்வேறு வளர்ச்சிக் கட்டங்களிலும், எங்கும் எப்போதும் கம்யூனிஸ்டுகள் ஒட்டுமொத்த இயக்கத்தின் நலன்களையே முன்வைக்கின்றனர்.
எனவே, கம்யூனிஸ்டுகள் ஒருபுறம் நடைமுறை ரீதியில், ஒவ்வொரு நாட்டிலுமுள்ள தொழிலாளி வர்க்கக் கட்சிகளில், மிகவும் முன்னேறிய, மிகவும் உறுதி வாய்ந்த பிரிவாக, மற்றவர்கள் அனைவரையும் முன்னோக்கி உந்தித் தள்ளுகின்ற பிரிவாக உள்ளனர்.
மறுபுறம் கோட்பாட்டு வழியில், கம்யூனிஸ்டுகள் பாட்டாளி வர்க்கத்தின் பெருந்திரளினருக்கு இல்லாத ஓர் அனுகூலத்தை, அதாவது, பாட்டாளி வர்க்க இயக்கத்தின் திசைவழியையும், நிலைமைகளையும், இறுதியில் ஏற்படும் பொதுவான விளைவுகளையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் அனுகூலத்தைப் பெற்றுள்ளனர்.
கம்யூனிஸ்டுகளுடைய உடனடி நோக்கம், மற்றெல்லாப் பாட்டாளி வர்க்கக் கட்சிகளின் உடனடி நோக்கம் எதுவோ அதுவேதான். பாட்டாளிகளை ஒரு வர்க்கமாகக் கட்டியமைத்தல், முதலாளித்துவ மேலாதிக்கத்தை வீழ்த்துதல், பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தை வென்றெடுத்தல் ஆகியவைதாம்.”
இதனை செய்யும் திறமற்றவர்கள் கம்யூனிஸ்டே கிடையாது, அவர்களால் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எந்தப் பயனும் கிடையாது. அதைவிட இந்தத் திறத்தை பெற்றிராத கட்சி, கம்யூனிஸ்ட் கட்சியே கிடையாது.
பாட்டாளிகளை ஒரு வர்க்கமாகக் கட்டியமைத்தல், முதலாளித்துவ மேலாதிக்கத்தை வீழ்த்துதல், பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தை வென்றெடுத்தல் இதனை உணராத கட்சி கம்யூனிஸ்ட் கட்சியாக இருக்க முடியாது.
அறிக்கையில் சூத்திரம் போல் சொல்லப்பட்டதை நாம் விரிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
கூலிவுயர்வு போராட்டத்தை நடத்துவது மட்டும் கம்யூனிஸ்டுகளின் வேலையில்லை, கூலி அமைப்பு முறையைத் தூக்கி எறிவதே இறுதி நோக்கமாக கொண்டிருக்க வேண்டும்.
கூலிவுயர்வு போராட்டம் என்பது தொழிலாளர்களுக்கு முழுமையான விடுதலையைத் தராது, கூலி அமைப்பு முறை என்கிற முதலாளித்துவ அமைப்பையே தூக்கி எறிந்தால்- மட்டுமே முழுமையான விடுதலை கிட்டும்.
இதனை தொழிலாளர்களுக்கு கூலிவுயர்வு போராட்டத்தின் ஊடேயே சொல்லிக் கொடுக்க வேண்டும்.
தோல்வி பற்றி அதிகக் கவலைப்படத் தேவையில்லை, சோவியத் வீழ்ச்சியைப் பற்றி இங்கே நிறையத் தோழர்கள் கவலைப்படுகிறார்கள்.
பாரிஸ் கம்யூன் தோல்வி கண்டது, மார்க்ஸ் அதைப் பற்றி அதிகக் கவலைப்படாமல் அதன் அனுபவங்களைத் தொகுத்து நூல்களை எழுதினார்.
ஒவ்வொரு தோல்வியும் நமக்குப் படிப்பினையாகக் கொள்ள வேண்டும்.
பாரிஸ் கம்யூனின் அனுபவத்தின் மூலம் மார்க்ஸ் கண்ட சிலமுடிவுகளைப் பார்ப்போம்.
முதலாளித்துவ அரசமைப்பை அப்படியே உழைப்பாளர்கள் பயன்படுத்த முடியாது, அதனை ஒழித்து நமக்கான அரசமைப்பை உருவாக்க வேண்டும். அது எப்படி இருக்க வேண்டும் என்பதையும் மார்க்ஸ் தெளிவுபடுத்தி உள்ளார்.
அது என்னவென்றால், முதலாளித்துவ சமூகத்துக்கும், வளர்ச்சி அடைந்த கம்யூனிச சமூகத்துக்கும் இடையில் உள்ள அரசு, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் கொண்டதாக இருக்க வேண்டும்.
பாரிஸ் கம்யூன் வீழ்ச்சியில் இருந்து மார்க்ஸ் கற்றது இவைகள்.
பாரிஸ் கம்யூன் அனுபவங்களை மார்க்ஸ், மார்க்சியக் கோட்பாட்டை வளப்படுத்துவதற்குப் பயன்படுதினார். நடைமுறை அனுபவங்களே கோட்பாடாகிறது.
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்கிற சொல்லை பயன்படுத்துவதில் பல தோழர்கள் தயக்கம் காட்டுகிறார்கள். அரசின் வர்க்கத் தன்மையைப் புரிந்து கொண்டிருந்தால் இந்தச் சிக்கல் ஏற்படாது. நடைமுறையில் மட்டும் உள்ளவர்களுக்கு இந்த சிக்கல் ஏற்படும். நடைமுறையோடு கோட்பாட்டை இணைந்து காண்பவர்களுக்கு இந்தச் சிக்கல் ஏற்படாது.
ஏன் என்றால் மார்க்சியக் கோட்பாடு இதனைத் தெளிவாக விளக்கி இருக்கிறது. அரசின் வர்க்கத் தன்மையை மார்க்சியம் தெளிவாக முன்வைத்துள்ளது.
ஆங்கிலத்தில் “சோவியத் சோஷலிச ஜனநாயகம்” என்கிற தலைப்பில் லெனின் எழுதியதை சோவியத் நாட்டில் தொகுத்து ஆங்கிலத்தில் வெளியிட்டனர், அதனை அன்று என்சிபிஎச் பதிப்பு நிறுவனம் தமிழில் வெளியிட்டது, தற்போது செந்தளம் வெளியிட்டகம் அதனை மறுபதிப்பாகம் செய்துள்ளது.
அந்தத் தொகுதியைப் படித்தால் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது எந்தளவுக்கு முதலாளித்துவ சர்வாதிகாரத்தைவிட ஜனநாயகமானது என்பதை அறிந்துகொள்ள முடியும்.
எங்கெல்ஸ் எழுதிய “குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்” என்கிற நூலையும், லெனின் எழுதிய “அரசு” “அரசும் புரட்சியும்” ஆகிய இரு நூலையும் படித்தாலேயே போதுமானது.
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமானது மிகுந்த ஜனநாயகத் தன்மை உடையது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.
லெனின் எழுதிய நூல்கள் ஆங்கிலத்தில் 45 தொகுதி இருக்கிறது, தமிழில் 30 நூல்களுக்கு மேல் இருக்கிறது. இதனை முழுமையாகப் படிக்க வேண்டும் என்று கூறவில்லை. நமக்குப் புரியாதப் பகுதியை மட்டும் விளக்கத்துக்காக தேடி படிக்க வேண்டும்.
தற்போது தமிழில் போதுமான அளவுக்கு நூல்கள் இருக்கிறது. மறுபதிப்பாக வந்து கொண்டிருக்கிறது. நூல்கள் கிடைக்கவில்லை என்பதை ஒரு குறையாகச் சொல்லாமல் நாம் படிக்க வேண்டும்.
லெனின் எழுதிய தேர்வு நூல்கள் 12 தற்போது மறுபதிப்பு வந்துள்ளது. அதில் இன்றைய நிலைமைகளைப் புரிந்து கொள்வதற்குத் தேவையான நூல்கள் இடம்பெற்றுள்ளது.
நம் நாட்டில் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி நடத்த வேண்டும் என்று சில கட்சிகள் கூறுகின்றன, சில அமைப்புகள் சோஷலிசப் புரட்சி நடத்த வேண்டும் என்று கூறுகின்றது. இதில் எது சரியானது என்கிற தெளிவு கிடைக்க வேண்டும் என்றால் மூன்றாம் தொகுதியில் இடம் பெற்றுள்ள “ஜனநாயகப் புரட்சியில் சமூக-ஜனநாயகவாதத்தின் இரண்டு செயல்தந்திரங்கள்“ என்கிற நூலையும் ஐந்தாம் தொகுதியில் இடம் பெற்றுள்ள ”ஏப்ரல் ஆய்வுரைகள்” பற்றிய கட்டுரைகளையும் படிக்க வேண்டும்.
கம்யூனிஸ்ட் கட்சித் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்றால் இது போன்ற நூல்களை கண்டிப்பாக கம்யூனிஸ்டுகள் படிக்க வேண்டும்.
இந்தியாவுக்கு என்று தனிப்பட்ட பல பிரச்சினைகள் இருக்கின்றன, குறிப்பாக சாதி பற்றிய பிரச்சினை. இதனை கம்யூனிஸ்டுகள் தனித்துப் பார்க்கவில்லை, வர்க்கப் போராட்டத்துடன் இணைத்தே பார்க்கின்றனர்.
ஆனால் அதைப் பற்றி பேசாமல் இருக்க முடியுமா? முடியாது. சமூகத்தில் இருப்பது எதுவும் தானே போகாது, அதற்கான போராட்டம் நடத்தப்பட வேண்டும். போராடியே வீழ்த்த முடியும்.
முதலாளித்துவ உற்பத்தியில் காணப்படும் உள்முரண்பாட்டின் காரணமாக அது வீழ்ச்சி அடையும் என்று மார்க்சியம் கூறுகிறது.
இது தானே நடந்துவிடுமா? அதற்கான தயாரிப்பும் முயற்சியும் அவசியம் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
நம் நாட்டில் உள்ள இடதுசாரிகளின் தேக்கநிலைக்கு பல காரணங்கள் இருக்கின்றன, அதில் முக்கியமானது வலது திரிபு, இடதுதிரிபு என்கிற இரண்டும் ஆகும்.
வலது திரிபை போக்க வேண்டும் என்றால் லெனின் எழுதிய “என்ன செய்ய வேண்டும்” என்கிற நூலைப் படிக்க வேண்டும், அதே போல இடது திரிபை போக்க வேண்டும் என்றால் மார்க்ஸ்-எங்கெல்ஸ்-லெனின் ஆகிய மூவரும் எழுதிய நூல்களின் தொகுப்பான “அராஜகவாதமும் அராஜக சிண்டிக்கலிசமும்” என்கிற நூலைப் படிக்க வேண்டும்.
ஏகாதிபத்திய கால மார்க்சியம் என்பது லெனினியம் ஆகும், இதனை அறிய வேண்டுமானால் ஸ்டாலின் எழுதிய “லெனினியத்தின் அடிப்படைகள்” என்கிற நூலைப் படிக்க வேண்டும். இந்த நூலில் லெனினியத்தை சுருக்கமாகவும் தெளிவாகவும் முழுமையாகவும் ஸ்டாலின் எழுதியிருக்கிறார். இதனைப் படிக்காமல் லெனினியத்தை நாம் அறிந்து கொள்ள முடியாது.
மார்க்ஸ்-எங்கெல்ஸ்-லெனின் நூல்களைப் போன்று இன்று ஸ்டாலின், மாவோ நூல்கள் தமிழில் கிடைக்கிறது. வாங்கிப் படிக்க வேண்டியது நமது கடமை ஆகும்.
கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைகளில் இது போன்ற நூல்களை வாங்கி வைத்தால் அனைவரும் படிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும். அனைத்து நூல்களையும் தனிநபர்கள் வாங்கிப் படிக்கக்கூடிய விலையில் அது இல்லை என்பது உண்மைதான். தோழர்கள் இணைந்து அல்லது கட்சிக் கிளைகளில் வாங்கி வைத்து தோழர்கள் சேர்ந்து படிக்க வேண்டும்.
கம்யூனிச நூல்களை தனித்தனியாகப் படிப்பதைவிட சேர்ந்து படிப்பது சிறப்பாக இருக்கும்.
இன்று நிறைய மார்க்சிய வகுப்புகள் நடைபெறுகிறது, இது மார்க்சியத்தைப் புரிந்து கொள்வதற்கு பெரிய வாய்ப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
பல ஆண்டுகளாக தொடர்ந்து ஒரே நூலை படித்துக் கொண்டிருப்பது இன்றைய புதிய போக்காக இருக்கிறது. இதனை நான் ஏற்கவில்லை, மார்க்சிய அடிப்படைகள் நமக்கு சுருக்கமாகவும் சாரமாகவும் கிடைத்தால் போதும். மார்க்சியக் கோட்பாடு நமக்கு நடைமுறைக்கானதே அதனால் அதனையே தொடர்ந்து படித்துக் கொண்டிருக்க முடியாது.
மார்க்சியத்தின் சாரத்தை தெரிந்து கொண்டு செயலில் இறங்க வேண்டும்.
கோட்பாடு நடைமுறையில் இருந்தே தோன்றியது, புதிய நடைமுறையில் இருந்தே பழைய கோட்பாடு வளம் பெருகிறது. இதனை நாம் மறக்கக்கூடாது.
மார்க்சியத்தைப் படிப்பதில் மொழியாக்கம் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது. மொழியாக்கத்தில் சிக்கல் இருக்கிறது, ஆனால் அது முதன்மைக் காரணமாகக் கொள்ள முடியாது.
ஆங்கில மொழியாக்கத்தில் சிக்கல் பெரிய அளவுக்கு இல்லை ஆனால் ஆங்கிலத்தில் படிப்பவர்களுக்கும் சிக்கல் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்கு முக்கியக் காரணம் மார்க்சியம் என்பது பலதுறைகளைச் சார்ந்ததாக இருக்கிறது. அதன் அடிப்படைகளை ஓரளவுக்காவது நாம் தெரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.
முயற்சியே சிரமத்தை உடைக்க முடியும். முயற்சி இல்லாமல் எதுவும் செய்ய முடியாது.
முயற்சித்தால் முடியாதது எதுவும் இல்லை.
இயந்திர மனிதன் (Robot) செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence) ஆகியவை எல்லாம் வந்து கொண்டிருக்கிறது. இவைகளைப் புரிந்து செயல்பட வேண்டும் என்றால் மார்க்சிய அடிப்படைப் புரிதல் வேண்டும்.
வகுப்பெடுக்கும் போது நான் இயந்திர மனிதனைப் (Robot) பற்றி பேசினேன், அதனைப் பற்றி முகநூலில் எழுதினேன். அப்படி எழுதும் போது நான் எழுதுவது நிறையப் பேருக்குப் புரியாது, பதில் இருந்தும் புரியாமைக்குக் காரணம் மார்க்சியப் புரிதலற்றத் தன்மையே என்று அதில் தெரிவித்தேன். இப்படி வெளிப்படையாகக் கூறியதற்கு என்னை பலர் கடுமையாக அப்போது எதிர்த்தனர்.
அதனை வெளியிட்டப் போது படித்த ஒரு தோழர், முரண்பாடாக இருக்கிறது என்றார். இதில் முரண்பாடு எதுவும் கிடையாது.
இயந்திர மனிதன் அறுதி உபரி மதிப்பைப் படைக்கவில்லை, ஒப்பிட்டு உபரி மதிப்பை படைக்கிறது, அந்த ஒப்பிட்டு உபரி மதிப்பும் பிற்காலங்களில் கிடைக்காது போகிறது என்று கூறியிருந்தேன்.
அந்தத் தோழர் என் கருத்துகளில் முரண்பாடு இருப்பதாகக் கூறினார். இதில் முரண்பாடு எதுவும் இல்லை, புதிய இயந்திரக் கண்டுபிடிப்புகளை மார்க்ஸ் எப்படிப் பார்த்தாரோ அதன் அடிப்படையில் இதற்கு விளக்கம் கொடுத்தேன். அதனால் இதில் முரண்பாடு இருக்க வாய்ப்பில்லை.
மார்க்சிய அடிப்படைப் புரிதல் இல்லாமையே முரண்பாடு இருப்பதாகத் தெரிவதற்கு காரணம் இருக்கிறது.
மார்க்சியம் ஒரு விரிந்தப் படிப்புத் துறைகளைக் கொண்டுள்ளது, முதலில் நாம் எதைப் படிக்க வேண்டும் என்கிற கேள்விக்கு எங்கெல்ஸ் கூறியதை பதிலாகக் கொள்ளலாம்
மார்க்சின் மாபெரும் இருபெருங் கண்டுபிடிப்புகள் என்று எங்கெல்ஸ் எதைக் கூறுகிறார் என்று பார்ப்போம்.
“வரலாறு பற்றிய பொருள்முதல்வாத கருத்தோட்டம், உபரி மதிப்பு மூலம் முதலாளித்துவப் பொருளுற்பத்தியின் ரகசியம் புலப்படுத்தப்படல் ஆகிய இந்த மாபெரும் இரு கண்டுபிடிப்புகளுக்காக நாம் மார்க்சுக்குக் கடமைப்பட்டிருக்கிறோம். இந்தக் கண்டுபிடிப்புகளின் விளைவாகச் சோஷலிசம் ஒரு விஞ்ஞானமாயிற்று.”
(கற்பனாவத சோஷலிசமூம் விஞ்ஞான சோஷலிசமும்)
மார்க்ஸ் எவ்வளவோ கண்டிபிடித்துள்ளார், அதில் முக்கியமானதாக இந்த இரண்டை எங்கெல்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
வரலாற்றியல் பொருள்முதல்வாதம், உபரி மதிப்பு ஆகிய இரண்டையும் இங்கே எங்கெல்ஸ் சுட்டிக்காட்டி உள்ளதை மனதில் பதிந்து கொள்ள வேண்டும். மேலும் உபரி மதிப்பு என்பதை நாம் மார்க்சிய அரசியல் பொருளாதாரம் என்று புரிந்து கொள்ளலாம். ஏன் என்றால் நேரடியாக உபரி மதிப்பைப் புரிந்து கொள்ள முடியாது. மாறும் மூலதனம் மாறா மூலதனம் என்பது போன்றவற்றைப் புரிந்து கொள்ளாமல் உபரி மதிப்பை நாம் புரிந்துகொள்ள முடியாது.
வரலாற்றியல் பொருள்முதல்வாதத் தத்துவத்தை சுருக்கமாக அடித்தளம் மேற்கட்டமைப்பு என்கிற கோட்பாட்டின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
மார்க்ஸ் கூறுவதைப் பார்ப்போம்.
“மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கைக்காக ஈடுபடும் சமூக உற்பத்தியில் திட்டவட்டமான உறவுகளில் தவிர்க்க முடியாத வகையில் நுழைகிறார்கள். இந்த உறவுகள் அவர்களுடைய சித்தங்களிலிருந்து தனித்து நிற்பவையாகும், அதாவது அவர்களுடைய உற்பத்தியின் பொருளாயத சக்திகளின் வளர்ச்சியில் அந்தக் குறிப்பிட்ட கட்டத்துக்குப் பொருத்தமான உற்பத்தி உறவுகளாகும்.
இந்த உற்பத்தி உறவுகளின் கூட்டுமொத்தமே சமூகத்தின் பொருளாதார அமைப்பாக, அதன் உண்மையான அடித்தளமாக அமைகிறது.
இதன் மீது சட்டம், அரசியல் என்கிற மேற்கட்டமைப்பு எழுப்பப்பட்டு, அதனோடு பொருந்தக் கூடிய சமூக உணர்வின் குறிப்பிட்ட வடிவங்களும் உருவாகின்றன. பொருளாயத வாழ்க்கையின் உற்பத்தி முறை சமூக, அரசியல், அறிவுத்துறை வாழ்வின் பொதுவான போக்கை நிர்ணயிக்கிறது.
மனிதர்களின் உணர்வுநிலை அவர்களுடைய வாழ்நிலையை நிர்ணயிப்பதில்லை, அவர்களுடைய சமூக வாழ்நிலையே அவர்களுடைய உணர்வுநிலையை நிர்ணயிக்கிறது.”
(அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு முன்னுரை)
சமூக வாழ்நிலையில் இருந்துதான் மனிதனின் கருத்துக்கள், சிந்தனைகள் தோன்றுகின்றன. அதாவது மனிதர்கள் உற்பத்தியில் ஈடுபடும் போது ஏற்படுகிற வாழ்நிலையில் இருந்தே மனிதனின் கருத்துக்கள், சிந்தனைகள் தோன்றுகின்றன.
மார்க்சின் முடிவுகள் மார்க்சின் தனிப்பட்ட முடிவுகள் கிடையாது, அது எதார்த்த சமூகத்தின் பிரதிபலிப்பாகும்.
இந்தக் கோட்பாட்டை இன்னும் சுருக்கமாகக் கூறலாம்.
அடித்தளம் தான் மேற்கட்டமைப்பைத் தீர்மானிக்கிறது, மேற்கட்டமைப்பு அடித்தளத்தைத் தீர்மானிப்பதில்லை. இங்கே தீர்மானிப்பது பற்றியே பேசப்பட்டுள்ளது, மேற்கட்டமைப்பு அடித்தளத்தின் மீது தாக்கம் செலுத்தாது என்று கூறவில்லை. மேற்கட்டமைப்பு அடித்தளத்தின் மீது தாக்கத்தையே செய்ய முடியுமே தவிர தீர்மானிக்க முடியாது.
அடித்தளம் தீர்மானிக்கிறது என்றால் இது பொருள்முதல்வாதம்.
மேற்கட்டமைப்பு தீர்மானிக்கிறது என்றால் இது கருத்துமுதல்வாதம்
உற்பத்தி உறவுகளில் இருந்தே சிந்தனை தோன்றுகிறது என்று காரணத்தோடு விளக்குவது பொருள்முதல்வாதம்.
மனிதனின் சிந்தனையில் இருந்தே அதாவது மூளையில் இருந்தே சிந்தனைகள் தோன்றுகிறது என்றால் இது கருத்துமுதல்வாதம்.
தீர்மானிக்கிறது தாக்கம் செலுத்துகிறது என்பதைப் புரிந்து கொள்ளாமல், அடித்தளம் மேற்கட்டமைப்பு இரண்டும் பரஸ்பர வினைபுரிகிறது என்று கூறுவது பொருள்முதல்வாதமும் இல்லாமல் கருத்துமுதல்வாதமாகவும் இல்லாமல் நடுநிலையைக் குறிக்கிறது. தத்துவத்தில் நடுப்பாதை என்பது கிடையாது என்று லெனின் கூறியதை இங்கே நினைவு கொள்வோம்.
நடுப்பாதை இறுதியில் கருத்துமுதல்வாதத்துக்கே இட்டுச் செல்லும் என்பதை வரலாறு நிரூபித்துள்ளது. இந்தத் தெளிவோடு அடித்தளம் மேற்கட்டமைப்பு என்கிற மார்க்சின் கோட்பாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும்.
முதல் கோணல் முற்றும் கோணல் என்பது போல அடித்தளம் மேற்கட்டமைப்பு என்கிற மார்க்சியக் கோட்பாட்டில் தவறு செய்தால் நடைமுறையானது தவறானதாகவே இருக்கும்.
கம்யூனிஸ்டுகளின் அரசியல் செயற்பாடு தவறாகப் போகாமல் இருக்க வேண்டும் என்றால் மார்க்சிய அடிப்படைக் கோட்பாட்டில் இருந்து பிறழாமல் இருக்க வேண்டும்.
மார்க்சிய அடிப்படைகளைப் பின்பற்றுவோம், மார்க்ஸ் கூறுகிய சமூக மாற்றத்தை செய்து காட்டுவோம்.
- அ.கா.ஈஸ்வரன்
9884092972
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு