தொழிற்சங்கவாதமும் பாட்டாளி வர்க்க புரட்சிகர இயக்கமும்

ஏ.எம்.கே

தொழிற்சங்கவாதமும் பாட்டாளி வர்க்க புரட்சிகர இயக்கமும்

தொழிலாளர்களுக்கு -தொழிற்சங்கங்கள் அமைப்பது; இத்தொழிற்சங்கங்கள் மூலமாக தொழிலாளர் கூலி உயர்வைப் பெறுவதற்காகவும், வேலை நிலைமைகளுக்காகவும் முதலாளிகளை எதிர்த்துப் போராடுவது; இத்துடன் அவசியமான தொழிலாளர் நல சட்டங்களை நிறைவேற்ற கோரி அரசாங்கத்தை கட்டாயப்படுத்துவதற்காக போராட்டங்களை நடத்துவது. இதுவே இன்று திருத்தல்வாதிகளும், முதலாளித்துவ வாதிகளும், பிற தொழிற்சங்க வாதிகளும் தொழிலாளர்களுக்காக செய்கின்ற பணியாக அமைந்திருக்கிறது. இவ்வாறு தொழிலாளர்களை தொழிற்சங்கங்களில் ஒன்றுபடுத்துவதும், முதலாளிகளை எதிர்த்துப் போராடுவதும், அவசியமான தொழிலாளர் நல சட்டங்களை நிறைவேற்ற கோரி அரசாங்கத்தை கட்டுப்படுத்துவதற்காக போராட்டங்களை நடத்துவதும் ஆகிய பணிகளுடன் தொழிலாளர் இயக்கத்தை குறுக்கி கட்டுப்படுத்தி விடுவதை தொழிற்சங்கவாதம் என கூறலாம்.

 

இவ்வாறு நடத்தப்படும் தொழிற்சங்க இயக்கம் தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையிலுள்ள பகைமையை மட்டுமே காட்டுகிறது. இன்று நம் நாட்டில் நிலவுகின்ற அரசியல் சமூக அமைப்பு முறை முழுவதற்கும் தொழிலாளர் நலன்களுக்கும் இடையிலே உள்ள இணக்கம் காண முடியாத பகைமையை இவ்வியக்கங்கள் எடுத்துக்காட்டுவதில்லை.

 

தொழிற்சங்கவாதத்தை அடிப்படையாக கொண்ட இயக்கங்கள் அரசியல் போராட்டங்களை நடத்தாது என்பது பொருள் அல்ல. இவ்வியக்கங்கள் தொழிலாளர்கள் தங்களின் நிலைமைக்கு காரணமாக இருக்கக்கூடிய சுரண்டலையும், துன்பத்தையும் தணிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அரசாங்கத்தை வற்புறுத்தும் அரசியல் இயக்கமாகவே இருக்கும். மூலதனத்திற்கு உழைப்பு அடிமைபட்டிருக்கிறது என்பதை தொழிலாளர்களுக்கு எடுத்துக் காட்டுவதில்லை. இந்த அடிமைத்தனத்தை ஒழிக்க வேண்டும் என்ற போதத்தை தொழிலாளர்களுக்கு ஊட்டுவது மில்லை. மூலதனத்திற்கு உழைப்பு அடிமைப் பட்டிருப்பதை ஒழிக்கும் நோக்கத்துடன் இவ் வியக்கங்கள் போராடுவதுமில்லை.

 

தொழிலாளர்கள் தமது உழைப்புச் சக்தியை மேலான விலைக்கு விற்பதற்கும், வாழ்க்கை நிலைமைகளுக்காகவும், வேலை நிலைமைகளுக்காகவும் தமது முதலாளிகளை எதிர்த்து கூட்டாக நடத்தும் போராட்டம் ஒரு பொருளாதார போராட்டமேயாகும். தொழிலாளர் இயக்கத்தை இவ்வகையான போராட்டத்துடன் நிறுத்தி கொள்வதைத்தான் தொழிற்சங்கவாதம் என்று கூறுகிறோம். உழைப்பு சக்தியை மேலான விலைக்கு விற்பதற்காக மட்டுமின்றி (கூலி உயர்வுக்காக மட்டுமின்றி) சொத்துடமையற்றவர்கள் தங்களைப் பணக்காரர்களுக்கு விற்றுக்கொள்ளும்படி கட்டாயப்படுத்துகின்ற இச்சமுதாய அமைப்பு முறையை ஒழிப்பதற்காக தொழிற்சங்கங்களோ, தொழிற்சங்கவாதத்தை அடிப்படையாகக் கொண்ட இயக்கங்களோ போராடுவது இல்லை.

 

எனவேதான் தொழிற்சங்கவாதத்திற்கு பொருள் சித்தாந்தத் துறையில் தொழிலாளர்களை முதலாளித்துவத்திற்கு அடிமைபடுத்துவது என லெனின் கூறினார், சித்தாந்த துறையில் தொழிலாளர்கள் முதலாளித்துவத்திற்கு அடிமைப்பட்டிருப்பது என்பதன் பொருள் தொழிலாளர்கள் முதலாளித்துவ அமைப்புக்குள்ளேயே தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியும் என நம்புவதும் முதலாளித்துவத்தை தூக்கியெறிந்தால்தான் தனி உடைமைக்கு முடிவு கட்டினால்தான்- சுரண்டலில் இருந்து விடுதலை பெறமுடியும் என்பதை புரிந்து கொள்ளாமல் இருப்பதும் ஆகும்.

இன்று நமது நாட்டில் நிலவுகின்ற அரசியல் சமூக அமைப்பு முறையில் முதலாளித்துவ தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் மூலதனத்திற்கு அடிமைப்படுத்தப்படுறார்கள். இந்த அரசியல் சமூக அமைப்பு முறை சொத்துடமையற்றவர்கள் தங்களை பணக்காரர்களுக்கு விற்றுக் கொள்ளும்படி காட்டாயப்படுத்துகிறது; தொழிலாளர் நலனுக்கும், பிற உழைக்கும் மக்களின் நலனுக்கும், ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் நலன்களுக்கும் இவ்வமைப்பு எதிராகப் போய்விட்டது. ஆகையால் இச்சமூக அமைப்பு முறையை ஒழிக்க வேண்டும் என்கிற வர்க்க அரசியல் உணர்வை-சோஷலிச உணர்வை- தொழிலாளர்கள் எங்ருந்து பெறுவது?

 

தொழிற்சங்க இயக்கங்களின் மூலமாகவே பெற முடியாது என்பதைப் பார்த்தோம்.

 

வேறு எங்கிருந்து பெறுவது?

 

பொருளாதாரப் போராட்டத்திற்கு வெளியிலிருந்தும், தொழிலாளிகளுக்கும் முதலாளிகளுக்கும் இடையிலே உள்ள உறவுத் துறைக்கும் வெளியிலிருந்தும்தான் கொண்டுவர வேண்டும்.

 

சோஷலிஸ்டு வர்க்க உணர்வு, பாட்டாளி வர்க்கத்தினுடைய வர்க்கப் போராட்டத்தின் வாயிலாகவே, முதலாளிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலே நடக்கின்ற போராட்டத்தின் மூலமாகவே ஏற்படக்கூடியதாக தோன்றலாம், ஆனால் இது உண்மை அல்ல, பாட்டாளி வர்க்கத்தினுடைய வர்க்கப் போராட்டத்தைப் போலவே, சோஷலிஸ விஞ்ஞானம் தற்கால பொருளாதார உறவுகளில் வேர் கொண்டிருக்கிறது. முதலாளித்துவத்தின் சுரண்டலையும், அதனால் ஏற்படுகின்ற வறுமையையும் எதிர்த்து நடத்தப்படும் போராட்டத்தில் வெளிப்படுகின்றது. என்பதும் உண்மையே இருப்பினும் சோஷலிஸமும் வர்க்கப் போராட்டமும் அக்கம் பக்கமாகவே தோன்றியதுதான். ஒன்றிலிருந்து மற்றொன்று தோன்றியதல்ல இரண்டும் வெவ்வேறு சூழ்நிலைமைகளில் பொதுவாக மனித சமுதாயத்தின் வளர்ச்சிப் போக்கைப் பற்றி ஆய்வு செய்து வரலாற்றைப் பற்றிய பொருள்முதல்வாத கண்ணோட்டத்தை மார்க்ஸ் கண்டுபிடித்தார். அப்பொருள்முதல்வாத கண்ணோட்டாத்தின் அடிப்படையில் முதலாளித்துவ உற்பத்தி முறையைப் பற்றி ஆய்வு செயது அவ்வுற்பத்தி முறையில் உபரி மதிப்பின் இரகசியத்தை அவர் வெளிப்படுத்தினார். வரலாற்றை பற்றிய பொருள்முதல்வாதக் கண்ணோட்டம், உபரி மதிப்பு ஆகிய மார்க்ஸின் இரண்டு கண்டுபிடிப்புகள்தான் சோஷலிஸத்தை ஒரு விஞ்ஞானமாக ஆக்கியது.

 

சோசலிச விஞ்ஞானம் பாட்டாளி வர்க்கப் போராட்டத்திலிருந்து தன்னியல்பாக தோன்றவில்லை. முதலாளித்துவ போக்குள்ள படிப்பாளி பகுதியைச் சேர்ந்த தனித்தனி உறுப்பினர்களால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த விஞ்ஞானம் அறிவு வளர்ச்சி பெற்ற தொழிலாளர்களிடம் கொண்டு செல்லப்பட்டது. இவ்வாறு சோஷலிஸ விஞ்ஞானம் பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டத்தின் நிலைமைக்கேற்ப புகுத்தப்பட்டது பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டத்திலிருந்து தன்னியல்பாக தோன்றுவதாயிருந்தால் தொழிற்சங்க இயக்கம் துவங்கி இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் தொழிலாளர்களிடையில் (கம்யூனிஸ்ட் இயக்கம்) சோஷலிஸ கருத்துக்கள் பலவீனமாக இருப்பதற்கு காரணமே இல்லை. சோஷலிஸ சமுதாயத்தை அமைப்பதற்காக மார்க்ஸிய-லெனினியத்தை அடிப்படையாகக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சியும் தேவை இல்லை.

 

படிப்பாளி பகுதிகளைச் சேர்ந்தவர்கள்தான் சோஷலிஸ விஞ்ஞானத்தை கண்டுபிடித்தார்கள் என்று கூறுவதால், முதலாளித்துவ போக்குள்ள படிப்பாளி பகுதியைச் சேர்ந்தவர்களே சோஷலிஸ சமுதாயத்தை ஏற்படுத்தி விடுவார்கள் என்று பொருள் கொள்வதாகாது.

 

மார்க்சும், ஏங்கல்சும் சோஷலிஸ தத்துவத்தை உருவாக்கியதற்கு காரணம் மதிநுட்பம் உடையவர்களாக அவர்கள் இருந்தார்கள் என்பது மட்டும் காரணமல்ல, அவர்களே நேரடியாக வர்க்கப் போராட்டம், விஞ்ஞானப் பரிசோதனை ஆகிய நடைமுறைகளில் பங்குகொண்டதால்தான் அவர்களால் சாதிக்க முடிந்தது. எவ்வளவு மதி நுட்பம் படைத்தவர்களாயிருந்தாலும், அவர்கள் வர்க்கப் போராட்டம்; விஞ்ஞானப் பரிசோதனை ஆகிய நடைமுறைகளில் பங்கு கொள்ளாதவர்களாக இருந்திருந்தால் அவர்களால். இதைச் சாதித்திருக்க முடியாது.

 

தவிர நமது சகாப்தத்தில். தொழிலாளி வர்க்கம் தனது அரசியல், பொருளாதார, வரலாற்று ரீதியான நிலைமையின் காரணமாக மனித குலத்தின் முன்னேற்றத்திற்கு பிரதிநிதியாக இருக்கிறது. தொழிலாளி வர்க்கம் மட்டும்தான் உழைக்கும் மக்கள் அனைவரும் தங்களின் தலைவிதியை தாங்களே நிர்ணயம் செய்து கொள்வோராகச் செய்வதற்கு தகுதி பெற்றது. தவிர தொழிலாளி வர்க்கம் ஒரு சக்தியாக அரசியல் அரங்கில் தோன்றிய பிறகு, எப்புரட்சியும் அவ்வர்க்கத்தின் தலைமையில்லாமல் வெல்லாது. நம் நாட்டின் விடுதலைப் புரட்சியும் பாட்டாளி வர்க்கத் தலைமையில்லாமல் வெல்லாது. நம் நாட்டின் விடுதலைப் புரட்சியும் பாட்டாளி வர்க்கத் தலைமையில்லாமல் வெல்லாது.

 

சமூக ஜனநாயக இயக்கத்தில் தத்துவம் வகிக்கிற முக்கியத்துவம் பற்றி லெனின் பேசும் போது சமுக ஜனநாயகவாதத்தின் மகத்தான போராட்ட வடிவங்களான அரசியல் போராட்டம், பொருளாதாரப் போராட்டம் ஆகிய இரண்டு போராட்ட வடிவங்களுடன் அவற்றிற்குச் சமமாக தத்துவப் போராட்டத்தையும் வைக்கிறார். ஆகவே சமூக ஜனநாயகவாதம் முப்பெறும் போராட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என நமக்கு வற்புறுத்துகிறார். அப்படிக் கூறும்போது மூன்று போராட்டங்களையும் சமநிலையில் வைத்தே பார்க்கிறார்.

 

சரியான கருத்துக்களை மூன்று வகையான சமூக நடைமுறையிலிருந்து (1)உற்பத்திப் போராட்டம் (2)வர்க்கப் போராட்டம் (3)விஞ்ஞான ஆய்வு ஆகியவற்றிலிருந்து பெற முடியும் என மாவோ கூறியபோது இதையே தான் சொன்னார்.

 

எனவே பாட்டாளி வர்க்க புரட்சி இயக்கத்தினரான மார்க்ஸிய- லெனினியவாதிகள் தொழிலாளர்களுக்கு வர்க்க அரசியல் உணர்வை, சோஷலிஸ உணர்வை புகுத்தும் பொருட்டு பொருளாதார போராட்டம், அரசியல் போராட்டம், தத்துவப் போராட்டம் ஆகிய மூன்று வகையான போராட்டங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்பது தெளிவு.

 

தத்துவப் போராட்டத்தைப் பற்றி

 

தொழிலாளி வர்க்கத்திற்கு அரசியல் வர்க்க உணர்வை பொருளாதார போராட்டத்திற்கு வெளியிலிருந்தும் முதலாளி- தொழிலாளி உறவு முறைக்கு வெளியிலிருந்தும்தான் கொண்டு வர முடியுமென்பதற்கு பாட்டாளி வர்க்கப் புரட்சியாளரின் பணியைப்பற்றி லெனின் எடுத்துக்காட்டிய காட்ஸ்கியின் மேற்கோளில் பின்வருமாறு காணலாம்.

 

"தொழிலாளி வர்க்கத்துக்குத் தனது நிலையை பற்றிய உணர்வை தனது பணியைப் பற்றிய உணர்வை ஊட்டுவது (உண்மையில் சொன்னால் நிரப்புவது) சமூக ஜனநாயக வாதத்தின் பணியாகும்"

செய்ய வேண்டியது என்ன?- பக்கம் 61

 

தொழிலாளி வர்க்கத்திற்கு தனது நிலையை பற்றிய உணர்வை, தனது பணியை பற்றிய உணர்வை ஊட்டுவது என்றால் பொருள் என்ன?

 

இன்றைய இந்தியா ஒரு அரை காலனி-அரை நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்பைக் கொண்டது. இந்நாட்டில் அமெரிக்க, ஆங்கிலேய, ஜெர்மன் ஏகாதிபத்தியவாதிகளும் சோவியத் சமூக ஏகாதிபத்தியமும் நிதி மூலதனத்தைச் செலுத்தி இந்த நாட்டைச் சுரண்டியும் அடிமைப்படுத்திக் கொண்டும் இருக்கிறார்கள். இவர்களுள் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளும், சோவியத் சமூக ஏகாதிபத்தியவாதிகளும் ஆதிக்க நிலை வகிப்பவர்கள், மேலாதிக்கத்திற்காக போட்டிப் போட்டுக் கொண்டிருப்பவர்கள். எனவே அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளும், சோவியத் சமூக ஏகாதிபத்தியவாதிகளும் இந்த நாட்டின் எதிரிகள் ஆவர்.

 

இன்றைய இந்திய சமூக அமைப்பில் நிலப்பிரபுத்துவ வர்க்கமும் முதலாளித்துவ வர்க்கமும் இருக்கின்றன. முதலாளித்துவ வர்க்கத்தில் இரண்டு பிரிவுகள் உண்டு. முதலாளித்துவ வர்க்கத்தின் மேல்தட்டு பிரிவினர் ஏகாதிபத்திய நாடுகளின் முதலாளிகளையும் சோவியத் சமூக ஏகாதிபத்திய அரசையும் சார்ந்திருப்பவர்கள். இவர்கள் தரகு முதலாளிகள். அந்நிய நிதி மூலதனத்தை சார்ந்திராத சிறு முதலாளிகளும் உண்டு. இச்சிறு முதலாளிகள் தேசிய முதலாளிகள்.

 

நிலப்பிரபுத்துவ வர்க்கமும், முதலாளித்ததுவ வர்க்கத்தின் மேல் தட்டு பிரிவினரான தரகு முதலாளிகளும்தான் இந்நாட்டின் ஆளும் வர்க்கத்தினர்.

 

மேலே கூறப்பட்ட வர்க்கங்களைத் தவிர பாட்டாளி வர்க்கம், விவசாயிகள், பல்வேறுபட்ட குட்டி முதலாளிய பிரிவுகள் ஆகிய வர்க்கங்களும் உள்ளன. இவ்வர்க்கங்கள் ஆளப்படும் வர்க்கங்கள்; இந்திய சமுதாயத்திலுள்ள அடிமைப்பட்ட வர்க்கங்கள்.

 

எனவே இந்திய சமுதாயத்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலை என்ன? நாட்டில் உள்ள அடிமைப்பட்ட வர்க்கங்களில் அதுவும் ஒன்று. அடிமைப்படுத்தப்பட்ட நாட்டில் உள்ள அடிமைப்பட்ட வர்க்கங்களில் தொழிலாளி வர்க்கமும் ஒன்று என்பதே தொழிலாளி வர்க்கத்தின் நிலை. இதை உணர்த்துவதுதான் (சமூக ஜனநாயகத்தின்) மார்க்ஸிய-லெனினியவாதிகளின் பணியாகும்.

 

வேறு விதமாகக் கூறின் தொழிலாளி வர்க்கத்திற்கு நண்பர்கள் யார்? எதிரிகள் யார்? என்பதை தெளிவுபடுத்துவதே தொழிலாளி வர்க்கத்திற்கு தனது நிலையைப்பற்றி உணர்த்துவதாகும்.

 

தொழிலாளி வர்க்கத்தின் எதிரிகளாக இருப்பவர் நாட்டை அடிமைபடுத்தி ஆதிக் கம் புரியும் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளும் சோவியத் சமூக ஏகாதிபத்தியவாதிகளும், இந்நாட்டை அவர்களுக்கு அடகு வைத்து ஆளுகின்ற வர்க்கமாக உள்ள நிலப்பிரபுத்துவ வர்க்கமும் தரகு பெரு முதலாளித்துவ வர்க்கமும் ஆவர்.

 

அடிமைப்பட்டிருக்கின்ற வர்க்கங்களான விவசாயிகளும், குட்டிமுதலாளியப்பகுதிகளும் அதனுடைய நண்பர்கள். அடக்கி ஆளப்படுகின்ற தேசிய முதலாளித்துவம் அதனுடைய ஊசலாடும் நண்பன்.

வர்க்கப் போராட்டத்தின் மூலமாக பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை ஏற்படுத்தி  சோஷலிச புரட்சியை நிறைவேற்றுவதன் மூலமாகத்தான் கூலி, அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற முடியும்.

 

ஆனால் இந்தியா ஒரு அரைக் காலனிய - அரை நிலப்பிரபுத்துவ நாடாக இருப்பதால் இந்திய புரட்சியின் முதன்மையான எதிரிகளாக இருப்பது சோவியத் சமூக ஏகாதிபத்தியம், அமெரிக்க ஏகாதிபத்தியம், தரகுப் பெரு முதலாளித்துவம், நிலப்பிரபுத்துவம் ஆகியவையே ஆகும். சாரம்சத்தில் இது ஏகாதிபத்தியத்தையும் நிலப்பிரபுத்துவத்தையும் தூக்கி எறிகின்ற ஒரு தேசிய ஜனநாயகப் புரட்சியே. இப்புரட்சி தரகுப் பெரு முதலாளித்துவத்தை ஒழிக்கும் புரட்சியாக இருந்தாலும் முதலாளித்துவ அமைப்பை முற்றிலுமாக ஒழிக்கும் புரட்சியல்ல - சுருங்கக் கூறின் இக்கட்டத்தின் புரட்சி ஒரு சோஷலிஸப் புரட்சியல்ல; இது ஒரு மக்கள் ஜனநாயக புரட்சியே. இந்த புதிய ஜனநாயகப் புரட்சி உலக பாட்டாளி வர்க்க சோஷலிஸ புரட்சியின் பகுதியே, ஏன் எனில் இது சர்வதேச முதலாளித்துவமாக இருக்கக்கூடிய ஏகாதிபத்தியத்தை உறுதியாக எதிர்ப்பது.

 

இந்த ஜனநாயகப் புரட்சியானது சோஷலிஸப் புரட்சிக்கு தவிற்க முடியாதவாறு அவசியமாக உள்ள தயாரிப்பேயாகும். பாட்டாளி வர்க்கம், தன்னையும் இந்நாட்டையும் அடிமைப்படுத்தியுள்ள தனது எதிரிகள் எதிர்த்து, தனது நண்பர்களை தனது தலைமையின் கீழ் திரட்டி இப்புரட்சியை நிறைவேற்றுவதே பாட்டாளி வர்க்கத்தின் பணியாகும்.

 

இந்த மக்கள் ஜனநாயக புரட்சி சாராம்சத்தில் ஒரு உழவர் புரட்சியாகும்.

 

எனவே தொழிலாளி-விவசாயி முன்னணியை உருவாக்குவது பாட்டாளி வர்க்கத்தின் உடனடி-கடமையாகும். இப்புரட்சி ஏகாதிபத்தியங்களையும் எதிர்த்த புரட்சியாவதால் எல்லா ஒடுக்கப்பட்ட வர்க்கங்களையும் தனது தலைமையின் கீழ் திரட்டி ஏகாதிபத்தியங்களை எதிர்த்த வர்க்கப் போராட்டங்களையும் அரசியல் கிளர்ச்சிகளையும் நடத்த வேண்டியதும் தொழிலாளி வர்க்கத்தின் பணியாகும்.

 

தொழிலாளி வர்க்கத்திற்கு தலையாய பணியாக இருப்பது நிலப் பிரபுத்துவ ஆதிக்கத்தை வீழ்த்த உழவர்களை திரட்டுவதேயாகும்.

 

சுருங்கக் கூறின், அடிமைப்பட்டுள்ள நாட்டின் அடிமை வர்க்கங்களில் தொழிலாளி வர்க்கமும் ஒன்று என்ற தனது அடிமை நிலையைப் பற்றி தொழிலாளி வர்க்கத்திற்கு உணர்த்துவதும்; நாட்டையும் தன்னையும் அடிமைப்படுத்திக் கொண்டிருக்கும் வர்க்கங்களை எதிர்த்து, ஒரு மக்கள் ஜனநாயக புரட்சிக்கு அடிமைப்பட்டிருக்கும் வர்க்கங்களை திரட்டுவது தனது பணி என்பதை தொழிலாளி வர்க்கத்திற்கு உணர்த்துவதே மார்க்ஸிய-லெனினியவாதிகளின் தத்துவப் பணி.

 

மேலும் வர்க்கப் போராட்டம் தவிர்க்க முடியாதபடி பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கு கொண்டு செல்லும் என்பதை தொழிலாளி வர்க்கத்திற்கு உணர்த்துவதே மார்க்ஸிய- லெனினியவாதிகளின் தத்துவ பணியாகும்.

 

வர்க்கப் போராட்டத்தை பற்றி

உழைக்கும் மக்கள் நடத்தும் அன்றாட நலன்களுக்கான போராட்டங்களும், தொழிற்சங்க போராட்டங்களும் வர்க்கப் போராட்டங்கள் என்ற தவறான கருத்து மக்களுக்கிடையில் திருத்தல்வாதிகளால் பரப்பப்பட்டு இருக்கிறது.

 

வர்க்கப் போராட்டம் குறித்து மார்க்ஸியவாதிகளின் கண்ணோட்டத்தைப் பற்றியும், மிதவாதிகளின் கண்ணோட்டத்தைப் பற்றியும் வேறுபடுத்தி பின்வருமாறு லெனின் கூறுகிறார்:

 

"ஒவ்வொரு வர்க்கப் போராட்டமும் ஒரு அரசியல் போராட்டமாகும்". மிதவாத கருத்துக்களுக்கு அடிமைப்பட்டுள்ள சந்தர்ப்பவாதிகள் மார்க்ஸின் தெட்டத் தெளிவான இவ்வார்த்தைகளை தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். அவற்றை ஒரு வக்கிரமான முறையில் வியாக்கியானம் செய்கிறார்கள். சந்தர்ப்பவாதிகள் என்போர், "பொருளாதாரவாதிகளும்" அவர்களுடைய அண்ணன்மார்களான "கலைப்பு வாதிகளையும்" உள்ளிட்டோர் ஆவர்.

 

வர்க்கங்களுக்கு இடையில் ஏற்படுகின்ற எல்லா மோதல்களும் ஒரு வர்க்கப் போராட்டம் என்று கருதுகிறார்கள். ஆகையால், அவர்கள் மிக உயர்ந்த,மேலும் வளர்ச்சிப் பெற்ற நாடு தழுவிய வர்க்கப் போராட்டத்தை அரசியலாக கருதாமல் ஒவ்வொரு ரூபிளுக்கும் அதிகமாக 5 கோபெக்குகளுக்காக (ஒவ்வொரு ரூபாய்க்கும் அதிகமாக 5 காசுகளுக்காக என உதாரணம் கூறலாம்) நடத்துகின்ற போராட்டத்தை "ஒரு வர்க்கப் போராட்டம்" என அங்கீகரிக்கிறார்கள். இவ்வாறு பொருளாதாரவாதிகள் ஆரம்ப நிலையிலுள்ள வர்க்கப் போராட்டத்தைத்தான் அங்கீகரிக்கிறார்கள். அதனுடைய வளர்ச்சி பெற்ற வடிவத்திலுள்ள போராட்டத்தை அங்கீகரிப்பதில்லை. வேறு வார்த்தைகளில் கூறினால் மிதவாத முதலாளிகளின் கண்ணோட்டத்திலிருந்து எவ்வகையான போராட்டம் அவர்களால் மிகவும் சகித்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றதோ அத்தகைய போராட்டங்களை மட்டுமே வர்க்கப் போராட்டம் என பொருளாதாரவாதிகள் அங்கீகரிக்கிறார்கள். மிதவாதிகளால் ஏற்க முடியாத உயர் நிலையிலுள்ள வர்க்கப் போராட்டங்களை ஏற்க மறுக்கிறார்கள். இவ்வாறு பொருளாதாரவாதிகள் தொழிலாளர் அரசியல் வாதிகளாக ஆகிவிடுகிறார்கள். அவர்கள் இம்முறையில் வர்க்கப் போராட்டத்தைப் பற்றிய புரட்சிகரமான கண்ணோட்டத்தை நிராகரிக்கிறார்கள்.

 

மேலும் வர்க்கப் போராட்டமானது அரசியல் துறையைத் தழுவினால் மாத்திரமே அது உண்மையான நிலையான வளர்ச்சி பெற்றதாக ஆகிவிடுகிறது என்று சொன்னால் மட்டும் போதாது. அரசியலிலும் கூட ஒருவர் தன்னை அற்ப விவகாரங்களுடன் கட்டுப்படுத்திக் கொள்ளலாம். அல்லது ஒருவர் இன்னும் ஆழமாகவும், அதனுடைய சாரத்தை அடையும் வரை செல்லலாம். வர்க்கப் போராட்டம் அரசியலை தழுவிக் கொள்வதோடு மட்டும் நிற்காமல், அத்துடன் அரசியலில் மிக சாராம்சமாக உள்ள அரசு அதிகாரத்தின் கட்டமைப்புப் பற்றிய பிரச்னையை தன் பிடிக்குள் கொண்டுவரும்போது தான் அதை முழுமையான வளர்ச்சி பெற்ற 'நாடு தழுவிய' வர்க்கப் போராட்டமாக மார்க்ஸியம் அங்கீகரிக்கிறது.

 

அதற்கு மாறாக, மிதவாதமானது தொழிலாளர் இயக்கம் ஓர் அளவு பலம் அடைந்து விட்டபோது வர்க்கப் போராட்டத்தை அங்கீகரிக்கிறது. ஆனால் அது வர்க்கப் போராட்டத்தைப் பற்றிய கண்ணோட்டத்தை குறுக்கி, கட்டுப்படுத்தி, காயடிக்க முயல்கிறது; மிதவாதமானது அரசியல் துறையிலும் வர்க்கப் போராட்டத்தை அங்கீகரிக்க தயாராக இருக்கிறது. ஆனால் அரசியல் துறையில் அரசு அதிகாரத்தின் கட்டமைப்புப் பற்றிய பிரச்சினையை சேர்க்கக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில்தான் அது அங்கீகரிக்க தயாராக இருக்கிறது. வர்க்கப் போராட்டத்தைப் பற்றி இவ்வகையாக மிதவாதம் திரித்துக் கூறுவது முதலாளிகளின் எவ்வகையான வர்க்க நலன்கள் இடமளிக்கிறது என்பதை புரிந்து கொள்வது கடினமானதல்ல."

(லெனின் தொகுப்பு நூல் எண்-19, பக்கம் 121, 122)

 

மேலே எடுத்துக் காட்டிய மேற்கோள்களிலிருந்து நாம் அறிவதென்ன?

 

·   வர்க்கங்களுக்கிடையிலே ஏற்படுகின்ற எல்லா மோதல்களும் வர்க்கப் போராட்டங்கள் ஆகாது.

·  பொருளாதாரப் போராட்டம் என்பது ஒரு கரு நிலையில் உள்ள (ஆரம்ப நிலையில் உள்ள) வர்க்கப் போராட்டமே.

·  பொருளாதாரவாதிகளும், மிதவாதிகளும், திருத்தல்வாதிகளும் ஆரம்ப நிலையில் உள்ள வர்க்கப் போராட்டத்தைத்தான் ஏற்பார்கள். உயர் நிலையிலுள்ள வர்க்கப் போராட்டத்தை ஏற்க மாட்டார்கள்.

·       அரசியல் துறையிலும் அரசு அதிகார பிரச்சினையை தனது குறிக்கோளாக கொள்ளும்போதுதான் அது ஒரு உண்மையான வர்க்கப் போராட்டமாகிறது.

·       மிதவாதிகளும், பொருளாதாரவாதிகளும், திருத்தல்வாதிகளும் அரசியல் போராட்டங்களைக்கூட நடத்துவார்கள்.

·       ஆனால் அரசியல் அதிகாரத்தை நோக்கமாகக் கொண்ட போராட்டங்களை நடத்தமாட்டார்கள்.

எனவே, பாட்டாளி வர்க்க புரட்சியாளர்கள், மார்க்ஸிய- லெனினியவாதிகள் தொழிலாளர் போராட்டங்களை கருநிலையில் உள்ள வர்க்கப் போராட்டமான பொருளாதாரப் போராட்டத்துடன் குறுக்கி விடாமல் அதை உயர் நிலையில் உள்ள வர்க்கப் போராட்டமாக வளர்க்க வேண்டும்.

 

தொழிலாளரின் வர்க்கப் போராட்டத்தை அரசியல் அதிகாரத்தை நோக்கமாகக் கொண்ட அரசியல் போராட்டமாகவும் வளர்க்க வேண்டும் என்பதும் தெளிவாகிறது.

 

அரசியல் போராட்டமும் பொருளாதாரப் போராட்டமும்

வர்க்கப் போராட்டம் என்பது அரசியல் போராட்டம் பொருளாதார போராட்டம் ஆகிய இரு அம்சங்களைக்கொண்டது. அரசியல் போராட்டம் பொருளாதாரப் போராட்டம் ஆகிய இரண்டு அம்சங்களும் ஒன்று மற்றொன்றாக மாறக் கூடியது. இந்த இரண்டு அம்சங்களும் ஒன்று மற்றொன்றாக மாறக்கூடியது என்பதை பார்க்கத் தவறுவதும்; அரசியல் போராட்டம் என்றால் அது அரசியல் போராட்டம்தான், பொருளாதாரப் போராட்டம் என்றால் அது பொருளாதார போராட்டமேதான், எனவே பொருளாதார நலன்களுக்காக நடத்தப்படும் போராட்டங்களை நடத்தவே கூடாது என்று நினைப்பது நிலையியல்வாதமே தவிர வேறொன்றுமல்ல.

 

ஆகவே நாம் அரசியல் போராட்டத்தைப் பற்றியும், பொருளாதார போராட்டத்தைப் பற்றியும் இவை இரண்டிற்கும் உள்ள உறவைப் பற்றியும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

 

ஒரு புரட்சிகரமான சூழ்நிலையில் வர்க்கப் போராட்டத்தின் பிரதான அம்சமாக அரசியல் போராட்டம் இருக்கிறது; இரண்டாம் நிலையான அம்சமாக பொருளாதார போராட்டம் இருக்கிறது. இச்சூழ்நிலையிலும் வர்க்கப் போராட்டத்தின் ஒரு அம்சமாக பொருளாதாரப் போராட்டம் இருக்கவில்லை என கூறினால் அது தவறாகும்.

 

ஒரு புரட்சிகரமான சூழ்நிலை நிலவாத போது வர்க்கப் போராட்டத்தின் பிரதான அம்சமாக பொருளாதாரப் போராட்டம் இருக்கிறது. இரண்டாம் நிலையான அம்சமாக அரசியல் போராட்டம் இருக்கிறது.

 

இன்று நாம் ஒரு புரட்சிகரமான சூழ்நிலையில் வாழ்கிறோம். எனவே தொழிலாளி வர்க்கத்தினுடைய வர்க்கப் போராட்டத்தின் பிரதான அம்சமாக அரசியல் போராட்டம் உள்ளது.

 

1905ஆம் ஆண்டின் புரட்சிகரமான காலப்பகுதியில் நடந்த தொழிலாளர் போராட்டங்களில் பெற்ற அனுபவத்தை தொகுத்து, அரசியல் போராட்டத்தைப் பற்றியும் பொருளாதாரப் போராட்டத்தைப் பற்றியும், இவை இரண்டிற்கும் இடையிலுள்ள உறவைப் பற்றியும் லெனின் செய்த ஆய்விலிருந்து நாம் தெளிவு பெறலாம்.

 

அரசியல் பொருளாதார வேலை நிறுத்தங்களைப் பற்றி லெனின் பின்வருமாறு கூறுகிறார்:

 

"இவ்வாறு பொருளாதார வேலை நிறுத்தமும் அரசியல் வேலை நிறுத்தமும் ஒன்றுக்கொன்று ஆதரவாக அமைந்தன; இரண்டும் தங்களுக்குள் ஒன்று மற்றொன்றின் சக்திக்கு மூலாதாரமாக அமையும் வகையில் இருந்தன இந்த வேலை நிறுத்த வடிவங்கள் நெருக்கமாக இணைக்கப்பட்டால் ஒழிய ஒரு உண்மையான வெகுஜன இயக்கம், மேலும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இயக்கம் தோன்றுவது சாத்தியமல்ல. இயக்கம் ஆரம்ப நிலையில் இருக்கும்போது பொருளாதார வேலை நிறுத்தங்களானது அடிக்கடி பின் தங்கியவர்களை விழிப்படையச் செய்யவும் தூண்டவும் செய்கின்றன இயக்கத்தை ஒரு பொதுத்தன்மை வாய்ந்ததாக ஆக்குகின்றன; அதன் ஒர் உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்கின்ற சக்தியைப் பெற்றிருக்கின்றன"

 

மேலும் லெனின் கூறுகிறார்:

 

"ஒரு அரசியல் வேலை நிறுத்தத்தில் அனைத்து மக்களின் முன்னேறிய வர்க்கமாக தொழிலாளி வர்க்கம் முன் வருகிறது. அப்படிப்பட்ட வேலை நிறுத்தங்களில் முதலாளித்துவ சமுதாயத்தில் உள்ள வர்க்கங்களில் ஒரு வர்க்கத்தின் பங்கை செய்பவனாக மட்டும் அல்லாமல் வழிகாட்டியாகவும், முன்னோடியாகவும் தலைவனாகவும் பாட்டாளி செயல்படுகிறான். இவ்வியக்கத்தில் காணப்படுகின்ற அரசியல் கருத்துக்கள் அனைத்து மக்களையும், உட்கொண்டதாகும். அதாவது அவை நாடு முழுவதின் அரசியல் வாழ்வின் மிக ஆழமான நிலைமைகளுடன் சம்பந்தப்பட்டவையாகும். 1905-07 ஆம் ஆண்டு காலத்தில் விஞ்ஞான ஆய்வாளர்களால் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது போல், அரசியல் வேலை நிறுத்தத்தின் இந்த பண்பு, அனைத்து வர்க்கங்களையும் குறிப்பாக மக்கள் தொகையில் பரந்த எண்ணிக்கையில் உள்ள மிக அதிகமான, மிகப் பெரிய பகுதிகளை - விவசாயிகளை, அது போன்ற பிற பகுதிகளை, இயக்கத்திற்குள் கொண்டு வந்தது.

 

மறுபுறம், தொழிலாளி வர்க்கத்தைச் சேர்ந்த மக்கள் பொருளாதார கோரிக்கைகள் இல்லாமல், தங்களுடைய நிலையில் ஒரு உடனடியான நேரடி முன்னேற்றம் இல்லாமல், நாட்டின் ஒரு பொதுவான முன்னேற்றத்தை கவனத்தில் கொள்ள ஒருபோதும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். இயக்கமானது அதில் ஈடுபடுகின்றவர்களின் பொருளாதார நிலையை முன்னேற்றம் அடையச்செய்தால் மட்டுமே, மக்கள் அந்த இயக்கத்தில் இறங்கி, அதில் தீவிரமாக பங்கெடுத்து, அதனை உயர்வாக மதிப்பார்கள்; அந்த மகத்தான இயக்கத்திற்காக வீரமுடனும், சுய தியாக உணர்வுடனும், விடா முயற்சியுடனும் அர்ப்பணிப்பு உணர்வுடனும் செயல்படுவார்கள். வேறு வகையில்இது இருக்க முடியாது; ஏனென்றால் "சாதாரண" சமயங்களில் தொழிலாளிகளின் வாழ்நிலை அளவுக்கு மீறி கடினமானதாகவே உள்ளது. தன்னுடைய வாழ்நிலையை முன்னேற்ற முயற்சி செய்ய செய்ய, தொழிலாளி வர்க்கம் உணர்வு ரீதியாகவும், அறிவு ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும்கூட முன்னேறும். தன்னுடைய மகத்தான விடுதலை நோக்கத்தை அடையும் திறமையுள்ளதாகவும் மாறும்.

("பொருளாதார, அர சியல் வேலை நிறுத்தங்கள்." தொகுப்பு நூல் 18, பக்கம் 84-85. லெனின்)

 

இதிலிருந்து நாம் பெறுகின்ற படிப்பினைகள் என்ன ?

 

·       பொருளாதார போராட்டமும் அரசியல் போராட்டமும் ஒன்றுக்கொன்று ஆதரவாக அமைந்து, ஒன்று மற்றொன்றின் சக்திக்கு மூலதாரமாக அமைகிறது.

·       இவ்விரண்டு போராட்ட வடிவங்களும் நெருக்கமாக இணைக்கப்பட்டால் தான் ஓரு சக்தி வாய்ந்த வெகுஜன இயக்கத்தை தோற்றுவிக்க முடியும்.

·       ஆரம்ப நிலையில் உள்ள பொருளாதாரப் போராட்டம் பின்தங்கியவர்களை விழிப்படையச் செய்து, ஒரு பொதுத்தன்மை வாய்ந்த இயக்கமாக வளர்த்து உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்லும் சக்தியைப் பெற்றிருக்கின்றது.

·       திருத்தல்வாதிகளும், மிதவாதிகளும், தொழிற்சங்கவாதிகளும் பொருளாதார போராட்டத்தையும் அரசியல் போராட்டத்தையும் ஒன்றிணைப்பதில்லை. ஆரம்ப நிலையில் உள்ள இயக்கத்தின் மட்டத்திலேயே நிறுத்திக் கொள்கின்றனர். அப்படி ஏதாவது அரசியல் போராட்டத்தை நடத்தினாலும், அது தொழிலாளர்களின் தனி நலன்களுக்கான கோரிக்கைகளுக்காக அரசாங்கம் சில சட்ட நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நடத்தப்படும் போராட்டமாகவே இருக்கிறது. ஏனெனில் பாராளுமன்ற பாதையாளர்களான இவர்களுக்கு அரசியல் அதிகாரத்தின் கட்டமைப்பை பற்றிய பிரச்சனையை குறித்து கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.

 

எனவே மார்க்ஸிய-லெனினியவாதிகள் அரசியல் அதிகாரத்தை நோக்கமாகக் கொண்ட இயக்கத்திற்கு தொழிலாளர்களைத் திரட்டுவதற்கு அரசியல் பொருளாதாரப் போராட்டங்களை ஒன்றிணைத்து பின்தங்கிய தொழிலாளர்களை திரட்டுவது அவசியமாகிறது.

 

தொழிலாளி வர்க்கம் தனது நலனுக்காக மட்டுமல்லாமல் பிற ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் நலன்களுக்காகவும், அவர்களுக்கு தலைமை தாங்கி நடத்தும் போராட்டம்தான் அரசியல் போராட்டம்.

 

ஆனால் திருத்தல்வாதிகளோ தொழிலாளர் போராட்டத்தை பிற ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் நலனுக்காகவும் அவ்வர்க்கங்களுக்கு தலைமை தாங்கும் வர்க்கப் போராட்டமாகவும், அரசியல் போராட்டங்களை நடத்துவது இல்லை. ஏன் எனில் பாராளுமன்ற பாதையாளர்களான அவர்களுக்கு பாட்டாளிவர்க்கத்தின் தலைமையில் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் தலைமையிலான அரசியல் அதிகாரத்திற்கான போராட்டத்தை நடத்துவது அவசியமில்லை. அவர்களுக்குத் தேவையானதெல்லாம் பாராளுமன்ற தேர்தலுக்காக உடைமை வர்க்ககட்சிகளுடன் கட்டப்படவேண்டிய ஐக்கிய முன்னணிதான் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக வர்க்கப் போராட்டத்திற்கான ஐக்கிய முன்னணி அல்ல.

 

மார்க்ஸிய-லெனினியவாதிகள் ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்புத் தன்மைக்கொண்ட, மக்கள் ஜனநாயக புரட்சியை -ஒரு உழவர் புரட்சியை நிறைவேற்றுவதற்காக தொழிலாளி வர்க்க கட்சியின் தலைமையில் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களையும், பரந்துபட்ட மக்களையும் அரசியல் போராட்டங்களில் ஈடுபடுத்த வேண்டியிருக்கிற து. குறிப்பாக பாட்டாளி வர்க்கம் தங்களையும் நாட்டையும், சுரண்டியும் அடிமைப்படுத்தியும் கொண்டிருக்கிற ஏகாதிபத்தியவாதிகளையும் சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தையும், அவர்களுடைய அடிவருடிகளாக உள்ள அதிகார வர்க்க தரகு பெருமுதலாளித்துவத்தையும், நிலப்பிரபுத்துவத்தையும் எதிர்த்து அரசியல் அதிகாரத்திற்கான போராட்டத்திற்காக பரந்துபட்ட மக்களைத் திரட்ட வேண்டியிருக்கிறது. பரந்துபட்ட மக்களைத் திரட்டுவதற்கான ஸ்தாபன, போராட்ட வடிவங்களை உருவாக்குவதும் அவசியம்.

 

தொழிலாளி வர்க்கத்தினர் பொருளாதார கோரிக்கைகள் இல்லாமல் நாட்டின் ஒரு பொதுவான முன்னேற்றத்தில் அக்கறை கொள்ள மாட்டார்கள். இப்போராட்டங்களில் தொழிலாளர்கள் உணர்வு ரீதியாகவும், அறிவு ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் கூட முன்னேறுவர். இப்போராட்டம் தன்னுடைய மகத்தான விடுதலை அடையும்; திறமையுள்ளதாகவும் மாறும். எனவே பொருளாதார ரீதியான கோரிக்கைகளுக்காகவும் தொழிலாளர்களை திரட்ட வேண்டியது அவசியம்.

 

இப்படிப்பட்ட பொருளாதார போராட்டங்களில் ஈடுபடுவது அல்லது அதற்குத் தலைமை தாங்கி நடத்துவது பொருளாதாரவாதமாகாதா என கேட்கலாம். பொருளாதார போராட்டத்துடன் அரசியல் போராட்டத்தை இணைக்கும்போதுதான் ஒரு சக்தி வாய்ந்த வெகுஜன இயக்கத்தை உருவாக்க முடியும் என்பதைப் பார்த்தோம். ஏகாதிபத்திய எதிர்ப்பு நில பிரபுத்துவ எதிர்ப்பு தன்மை கொண்ட ஓர் உழவர் புரட்சிக்காக பாட்டாளி வர்க்கத் தலைமையில் பரந்துபட்ட மக்களை திரட்ட வேண்டிய அவசியத்தையும் பார்த்தோம். இந்நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக பொருளாதார போராட்டத்தை மேற்கொள்வது அவசியம்.

 

ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு புரட்சியின் நலன்களுக்காக "பொருளாதாரக்" கிளர்ச்சிகளை பயன்படுத்துவது அவசியம். சுருங்கக் கூறின் இப்போராட்டங்கள் அனைத்தும் அரசு அதிகாரத்திற்கான போராட்டம் துவங்குவதற்கு முன் அதற்கான தயாரிப்புக்காக நடத்தப்படவேண்டும்.

 

பொருளாதார நலனுக்கான தொழிற்சங்கப் போராட்டங்களில் ஈடுபடுவதை எதிர்த்து தொடுக்கப்படும் ஒடுக்குமுறையைவிட, பிற வாழ்வு துறைகளில் குறிப்பாக சாதி, மத, மொழி, இன, குடி வாழ்வு, குடும்ப வாழ்வு, விஞ்ஞானம் ஆகிய துறைகளில் நிகழ்கின்ற ஒடுக்குமுறை குறைவானதல்ல. திருத்தல்வாதிகளும், தொழிற்சங்கவாதிகளும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காக தொடுக்கப்படும் ஒடுக்கு முறையை மட்டுமே கண்டனம் செய்கிறார்கள். பிற வாழ்வு துறையில் நிகழும் ஒடுக்கு முறையின் அரசியல் தன்மையை அம்பலப்படுத்தி அதை எதிர்த்து தொழிலாளர்கள் நடவடிக்கைகளில் ஈடுபடும் போதுதான் தொழிலாளர்கள் வர்க்க அரசியல் உணர்வு பெறுவது சாத்தியம்.

 

அரசியல் வகையில் பிற வர்க்கங்களின் மீது ஒடுக்குமுறை தொடுக்கப்படுகின்றன. பிறவர்க்கங்களின் மீது தொடுக்கப்படும் அரசின் ஒடுக்குமுறையை எதிர்த்து ஒடுக்கப்படுபவர்களுக்கு ஆதரவாக தொழிலாளர்கள் ஈடுபடும் போதுதான் அவர்கள் குறுகிய சுய நல உணர்விலிருந்தும், பின் தங்கிய தொழிற் சங்க உணர்விலிருந்தும் விடுபட்டு வர்க்க அரசியல் உணர்வைப் பெறுவார்கள்.

 

எனவே, தொழிற்சங்க போராட்டங்களுக்காக தொடுக்கப்படுகின்ற ஒடுக்குமுறையை எதிர்த்து திரட்டுவதுடன் பிற வாழ்வு துறைகளில் நிகழ்கின்ற ஒடுக்கு முறையின் அரசியல் தன்மையை அம்பலப்படுத்தி அதை எதிர்த்து தொழிலாளர்களின் கிளர்ச்சிகளை நடத்த வேண்டியதும் மார்க்சிய-லெனினியவாதிகளின் கடமையாகிறது.

 

பிறவர்க்கங்களின் மீது தொடுக்கப்படுகிற ஒடுக்கு முறையை எதிர்த்து திரட்ட வேண்டியதும் மார்க்சிய-லெனினியவாதிகளின் கடமையாகிறது.

 

இவை அனைத்தும் வெகுஜன இயக்கத்தின் தன்மையைக் கொண்டதே. புரட்சிகரமான சூழ்நிலையில் வெகுஜன நடவடிக்கைகளும் கூடாது, வெகுஜன நடவடிக்கைகளுக்கான அமைப்புக்களையும் அமைக்கத் தேவையில்லை; புரட்சிகரமான சூழ்நிலையில் கட்சி ஒன்று தான் தொழிலாளி வர்க்கத்தினுடைய வர்க்க அமைப்பு. ஆகையால் வெகுஜன நடவடிக்கைகளை மேற்கொள்வதோ, வெகுஜன அமைப்புகளை உருவாக்குவதோ புரட்சிக்கு எதிரானது அல்லது பயனற்றது என்று கூறுவது சரியானதா?

 

சீன புரட்சியில் வெகுஜன அமைப்புகளும் வெகுஜன போராட்டங்களும் எவ்வளவு அவசியமானதாக இருந்தது என்பதைப் பற்றியும்; அப்புரட்சி இயக்கத்திற்கு அவை ஆற்றிய பங்கைப் பற்றியும் மாவோ பின்வருமாறு கூறுகிறார்:

 

"சீனாவில் யுத்தம் பிரதான போராட்ட வடிவமாகவும் ராணுவம் பிரதான ஸ்தாபன வடிவமாகவும் இருக்கின்றன. வெகுஜனப் போராட்டங்கள் போன்ற பிற வடிவங்கள் அனைத்தும் அதிமுக்கியமானவையும், உண்மையில் இன்றியமையாதவையும், எந்தச் சந்தர்ப்பத்திலும் புறக்கணிக்கப் படக் கூடாதவையும் ஆகும். ஆனால் அவற்றின் நோக்கம் யுத்தத்திற்கு சேவை செய்வதாகும். ஒரு யுத்தம் வெடிப்பதற்கு முன் எல்லா ஸ்தாபனங்களும் போராட்டங்களும், 1919 மே 4 இயக்கத்திற்கும் 1925 மே 30 இயக்கத்திற்கும் இடையிலான காலகட்டத்தில் இருந்தது போல், அந்த யுத்தத்திற்கான தயாரிப்பில் இருக்கின்றன."

("யுத்தமும் யுத்த தந்திரமும் பற்றிய பிரச்சினைகள்" பக்கம் 561 தேர்ந்தெடுக்கபட்ட - ராணுவ படைப்புகள் -மாசேதுங்)

 

மேலும், "சீனாவில் சிவப்பு அரசியல் அதிகாரம் இருக்க முடிவது ஏன்?" என்ற தமது கட்டுரையில் சிவப்பு அரசியல் அதிகாரம் தோன்றியதற்கு இவ்வமைப்புகளின் பங்கை பற்றி பின்வருமாறு அவர் கூறுகிறார்.

 

"இரண்டாவதாக, சீனாவில் சிவப்பு அரசியல் அதிகாரம் முதலில் தோன்றியும், நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கக் கூடியதாயிருந்ததுமான பிரதேசங்கள் சுச்சுவானையும் குவெய் சௌவையும் யுன்னானையும் வடக்கு மாகாணங்களையும் போன்று ஜனநாயகப் புரட்சியால் பாதிக்கப்படாதிருந்த பிரதேசங்களல்ல, மாறாக 1926, 1927இல் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியின் போது தொழிலாளர்கள், விவசாயி, படை வீரர்கள் போன்ற வெகுஜனங்கள் பெருந்தொகையில் எழுச்சியுற்ற ஹினான், குவாங்துங், ஹீபெய், கியாங்கி மாகாணங்களைப் போன்ற பிரதேசங்களே. இந்த மாகாணங்களின் பல பகுதிகளில் தொழிற்சங்கங்களும் விவசாயிச் சங்கங்களும் பரவலான ரீதியில் உருவாக்கப்பட்டு, தொழிலாளி வர்க்கத்தாலும் விவசாயி வர்க்கத்தாலும் நிலப்பிரபுத்துவ வர்க்கத்திற்கும் உள்ளுர் கொடுங்கோலர் தீய பிரபு வர்க்கத்திற்கும் முதலாளித்துவ வர்க்கத்திற்கும் எதிராகப் பல பொருளாதார, அரசியல் போராட்டங்கள் நடத்தப்பட்டன."

(சீனாவில் சிவப்பு அரசியல் அதிகாரம் இருக்க முடிவது ஏன்? பக்கம்-7. தேர்ந்தெடுக்கப்பட்ட ராணுவ படைப்புகள்-மாசேதுங்)

 

ஜப்பானிய – எதிர்ப்பு போரின் கட்டத்தில் வெகுஜனஇயக்கங்களின் அவசியம் குறித்து மாவோ கூறியதாவது:

"தளப்பிரதேசமொன்றை ஸ்தாபிப்பதற்கு இன்றியமையாத மூன்றாவது சூழ்நிலை, ஜப்பானுக்கு எதிராகப் போராட வெகு ஜனங்களை எழுச்சியுறுவதற்கு எமது ஆயுதப் படைகளுள்ளிட்ட எமது பலம் முழுவதையும் உபயோகிப்பதாகும். இந்த போராட்டத்தினூடே நாம் மக்களை ஆயுதபாணிகளாக்க வேண்டும், அதாவது, தற்காப்பு முறைகளையும் கொரில்லா கூறுகளையும் ஏற்படுத்த வேண்டும். தொழிலாளர்கள், விவசாயிகள், வாலிபர்கள், பெண்கள், சிறுவர் சிறுமியர், வர்த்தகர்கள், சுய தொழிலுடையவர் ஆகியோரை, அவர்களின் அரசியல் உணர்வினதும் போரிடும் உற்சாகத்தினதும் அளவின் பிரகாரம்- ஜப்பானிய ஆக்கிரமிப்பிற்கு எதிரான போராட்டத்திற்கு அவசியமான பல்வேறு வெகுஜன ஸ்தாபனங்களிலும் அணி திரட்டவும் அந்த ஸ்தாபனங்களைச் சிறிது சிறிதாக விரிவுபடுத்தவும் வேண்டும். ஸ்தாபனங்களில்லாமல், மக்களால் தங்கள் ஜப்பானிய-எதிர்ப்பு பலத்தை வெளிக்காட்ட முடியாது.''

(ஜப்பானிய-எதிர்ப்புக் கொரில்லா யுத்தத்தில் யுத்த தந்திரப் பிரச்சினைகள் - பக்கங்கள் 351-353: - தேர்ந்தெடுக்கப்பட்ட ராணுவ படைப்புகள். மாசேதுங்)

 

அரைகாலனி சீனாவில் யுத்தமே பிரதான போராட்ட வடிவமாக உள்ளது என மாவோ வலியுறுத்தி கூறியபோதும், அவர் வெகுஜன ஸ்தாபனங்களின் அவசியத்தையும், வெகுஜன போராட்டங்களின் அவசியத்தையும் நிராகரிக்க வில்லை; அதற்கு மாறாக அவை அனைத்தும், அன்னாட்டு ஆயுதப் போராட்டத்திற்கு மிக முக்கியமான துணையமைப்புகளாக கருதினார் என்பது தெளிவாகிறது.

 

எனவே, புரட்சிகரமான சூழ்நிலையில் கட்சி ஒன்றுதான் தொழிலாளி வர்க்கத்தினருக்கு வர்க்க ஸ்தாபனம் என்று கூறுவதும், வெகுஜன அமைப்புகளும் வெகுஜன போராட்டங்களும் புரட்சியின் நலனுக்கு எதிரானவை, அல்லது பயனற்றவை என கருதுவதும் மா-சே-துங் சிந்தனைக்கு உகந்ததல்ல என்பதைப் பார்க்கலாம்.

 

எனவே நம் நாட்டில் நிலவுகின்ற மெய்யான நிலைகளுக்கு ஏற்றவாறும், தொழிலாளர்களின் போராட்ட உணர்விற்கு ஏற்றவாறும் வர்க்க அமைப்புகளையும், வர்க்க போராட்ட வடிவங்களையும் உருவாக்க வேண்டியது அவசியமாகிறது.

 

அன்னிய ஆதிக்கத்திற்கு உட்பட்ட நமது நாட்டில் அடிமைப்பட்ட வர்க்கங்களில் ஒன்று பாட்டாளி வர்க்கம்.

 

ஏகாதிபத்தியத்தையும் நிலப்பிரபுத்துவத்தையும் எதிர்த்து தொழிலாளர் விவசாயிகள் முன்னணியை அடிப்படையாகக் கொண்ட ஏகாதிபத்திய நிலபிரபுத்துவ எதிர்ப்பு முன்னணியை அமைத்து உழவர் புரட்சியின் மூலம் தன்னுடைய தலைமையின் கீழ் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களை ஆளும் வர்க்கமாக மாற்றிக்கொள்ள வேண்டிய பணி தொழிலாளி வர்க்கத்தின் முன்னுள்ள பணியாக உள்ளது.

 

இப்பணியை நிறைவேற்ற முப்பெரும் போராட்டங்களின் மூலம்-பொருளாதார, அரசியல், தத்துவ போராட்டங்கள் மூலம் தொழிலாளர்களை திரட்ட வேண்டியது மார்க்சிய- லெனினியவாதிகளின் கடமையாகும்.

ஏஎம்கே - ஜனவரி, 1979

சமரன் இதழ்

ஏப்ரல் 2021