நூல் அறிமுகம்: லெனினது ஏப்ரல் ஆய்வுரைகள்

அ.கா.ஈஸ்வரன்

(அண்மையில் வெளிவந்துள்ள லெனின் தேர்வு நூல்களின் 12 தொகுதிகள் பற்றிய அறிமுகம், MELS இணைய வழிப் பயிலரங்கில் தொடர் வகுப்பாக எடுக்கப்படுகிறது. அதில் ஏழாம் வகுப்பு இது.)

இன்றைய வகுப்பில் நாம் பார்க்க இருப்பது லெனின் எழுதிய “ஏப்ரல் ஆய்வுரைகள்.” 

இந்த நூல் உருவானதற்கான பின்புலத்தை முதலில் பார்ப்போம்.

ஏகாதிபத்திய முதல் உலகப் போர் தொடங்கியது. போர் உருவாகும் என்பதை முன்பே இரண்டாம் அகிலம் அறிந்து கொண்டு, அத்தகையப் போரை உள்நாட்டுப் போராக மாற்றி சொந்த நாட்டில் புரட்சி செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தது.

1912-ஆம் ஆண்டு பாஸில் என்கிற இடத்தில் போடப்பட்ட அறிக்கை:-

“ஒரு போர் ஏற்படுமானால், அந்தப் போர் விளைவிக்கக் கூடிய “பொருளாதார அரசியல் நெருக்கடியை”ப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். “முதலாளித்துவத்தின் வீழ்ச்சியை விரைவுபடுத்துவதற்கு”ப் பயன்படுத்த வேண்டும். அதாவது போர்க்காலத்தில் அரசுக்கு ஏற்படும் இன்னல்களையும், இடர்ப்பாடுகளையும் பொதுமக்களின் சினத்தையும் சோஷலிசப் புரட்சியாக்க வேண்டும்”  

(போரும் சோஷலிசமும்- பக்.-  27)

இரண்டாம் அகிலத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் பின்பற்றப்பட வேண்டிய கருத்து இது, ஆனால் இதை லெனின் தலைமையில் செயல்பட்ட போல்ஷிவிக் கட்சி மட்டுமே அதாவது ருஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே பின்பற்றியது. 

ஜெர்மனியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி இதனைப் பின்பற்றாமல், சந்தர்ப்பவாதத்தில் மூழ்கியது, அதாவது ஏகாதிபத்திய போரை ஆதரிக்கத் தொடங்கியது. அகிலத்தில் பங்குபெற்ற மற்ற நாடுகளின் கட்சிகளும், தேசத்தைக் காப்போம் என்கிற முதலாளித்துவ கண்ணோட்டத்தை, அதாவது சொந்த நாட்டில் உள்ள முதலாளி வர்க்கத்தின் கருத்தைப் பின்பற்றியது. இறுதியில் இரண்டாம் அகிலம் சந்தர்ப்பவாதத்தால் வீழ்ச்சி அடைந்தது.

லெனின் தலைமையிலான போல்ஷிவிக் கட்சி மட்டும் உலகப் போரை உள்நாட்டுப் போராக நடத்த முற்பட்டது. 

ருஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சி உள்நாட்டில் போராட்டத்தைத் தொடங்கியது. 1917ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஜார் முடியாட்சி வீழ்ந்தது. போராட்டத்தின் போது ஒரு பக்கம் முதலாளித்துவ பிரதிநிதிகளின் ஒர் அரசாங்கம் தோன்றியது. பக்கத்திலேயே மற்றொரு அரசாங்கம் தோன்றியது, அது தொழிலாளர்களின் பிரதிநிதிகளைக் கொண்ட சோவியத்.

போராட்டத்தின் விளைவாக இரட்டை ஆட்சி அதிகாரம் தோன்றியது. இதுவரை உலகெங்கிலும் இது போல இரட்டை ஆட்சி ஏற்பட்டதில்லை.

போரினால் சலிப்படைந்த ருஷ்ய மக்கள் போர் நிறுத்தத்தையும் சமாதானத்தையும் விரும்பினர். ஆனால் புதியதாக தோன்றிய முதலாளித்துவ அரசு போரை நிறுத்த முயற்சிக்கவில்லை, அதற்கு மாறாக போரை விரும்புகிறது என்பதை ருஷ்ய மக்கள் அறிந்து கொண்டனர். அதனால் புதிய முதலாளித்துவ அரசாங்கத்தின் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டது

பிப்ரவரிப் புரட்சியின் போது  இரண்டு இடங்களில் தோன்றிய இரண்டு அரசாங்கம் நீண்ட நாள் நீடிக்காது என்பது வெளிப்படையாகத் தெரியத் தொடங்கியது. அரசியல் அதிகாரம் முழுவதும் ஒரே இடத்தில் இருக்க வேண்டியது அவசியம் என்கிற நிலை ஏற்பட்டது. 

முதலாளித்துவ அரசு, உழைக்கும் மக்களின் சோவியத் அரசு ஆகிய இரண்டில் ஒன்றின் கையில்தான் அதிகாரம் முழுவதும் இருக்க வேண்டும்.

நாடு கடத்தப்பட்டதன் காரணமாக வெளிநாட்டில் வாழ்ந்து வந்த லெனின், 1917-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3-ஆம் தேதி ருஷ்யாவிற்குள் நுழைந்து பெத்ரோகிராத்துக்கு செல்லத் திட்டமிட்டார். 

அதன்படி, பின்லாந்து ரயில் நிலையத்தில் வந்திறங்கிய லெனினுக்கு, தொழிலாளர்களும் விவசாயிகளும் புரட்சிகரப் பிரிவுகளும் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

பெத்ரோகிராத் வந்தடைந்த உடனே அடுத்த நடவடிக்கைகளில் லெனின் இறங்கினார். ஏப்ரல் மாதம் 4ஆம் நாள் போல்ஷிவிக்குகளின் கூட்டத்தில், புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகளாக ஏப்ரல் ஆய்வுரையை படித்துக்காட்டினார். பெத்ரோகிராத் வருவதற்காக ரயிலில் பயணிக்கும்போது லெனின் இதனை எழுதினார். 

இந்த ஆய்வுரையை இரண்டு இடங்களில் லெனின் படித்துக்காட்டினார். போல்ஷிவிக்குகள் தனித்திருந்த கூட்டத்திலும், போல்ஷிவிக்குகளும் மென்ஷிவிக்குகளும் சேர்ந்திருந்த கூட்டத்திலும் இவ்வுரையை நிகழ்த்தினார். “இன்றைய புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள்” என்ற தலைப்பில் இந்த ஆய்வுரைகள் பிராவ்தா பத்திரிகையில் ஏப்ரல் 7ஆம் நாள் வெளி வந்தது. இவையே பின்னால் ஏப்ரல் ஆய்வுரைகள் என்று புகழ்பெற்றது. 

ஏப்ரல் மாதத்தில் இந்த ஆய்வுரையை எழுதியதால் இதற்கு ஏப்ரல் ஆய்வுரைகள் என்று பெயர்பெற்றது. இந்த ஆய்வுரையில் கூறிய கருத்தை விரிவாக்கி இரண்டு கட்டுரைகளை  எழுதினார்.

லெனின் எழுதிய இந்த மூன்று கட்டுரைகளை சேர்த்து “ஏப்ரல் ஆய்வுரைகள்” என்று அழைப்பது மரபு. 

1. இன்றைய புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள் (1917ஆம் ஆண்டு ஏப்ரல் 4-5)

2. நமது புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள் (1917ஆம் ஆண்டு ஏப்ரல் 10)

3. செயற்தந்திரம் பற்றிய கடிதங்கள் (1917ஆம் ஆண்டு ஏப்ரல் 8-13)

முதல் இரண்டு கட்டுரைகள் லெனின் தேர்வு நூல்களில் உள்ள, ஐந்தாம் தொகுதியில் இடம் பெற்றுள்ளது. “செயற்தந்திரம் பற்றிய கடிதங்கள்” (Letters on Tactics) என்கிற மூன்றாவது கட்டுரை, சோவியத் நாட்டில் செயல்பட்ட முன்னேற்றப் பதிப்பகத்தால் “போர்தந்திரம் பற்றிய கடிதங்கள்” என்கிற தலைப்பில் வெளியிட்ட தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.

 “ஏப்ரல் ஆய்வுரைகள்” என்கிற நூலில் சிறப்பு என்னவென்றால் இதில்தான், ருஷ்யாவில் நடத்த வேண்டியது சோஷலிசப் புரட்சி என்று லெனின் முதன்முறையாக  அறிவிக்கிறார். இதற்கான காரணத்தை இந்த நூலில் தெளிவாகக் கூறியுள்ளார். 

ருஷ்யாவில் 1917-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற புரட்சியை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் “ஏப்ரல் ஆய்வுரைகள்” என்கிற தொகுப்பில் உள்ள மூன்று கட்டுரைகளையும் கண்டிப்பாக நன்றாகப் படிக்க வேண்டும்.

“இன்றைய புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள்” என்கிற கட்டுரையில் லெனின் பத்து ஆய்வுரைகளை எழுதியுள்ளார், இதன் விளக்கமாகவே மற்ற நூல்களை எழுதினார். அதனால்  இந்த பத்து ஆய்வுரைகளின் சாரத்தை நாம் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

பத்து ஆய்வுரைகளை சுருக்கமாகப் பார்ப்போம்.

1. 1917-ஆம் ஆண்டு பிப்ரவரி புரட்சியில் தோன்றிய அரசு, முதலாளித்துவத் தன்மை கொண்டதாக இருப்பதனால், கொள்ளைக்கார ஏகாதிபத்தியப் போராகவே தொடர்கிறது. இதன் காரணமாக “புரட்சிகரப் பாதுகாப்புவாதத்திற்கு” என்கிற முழக்கத்தின் மூலம் இந்த அரசை ஆதரிக்கக் கூடாது

மூலதனத்தை வீழ்த்தாமல் இந்த ஏகாதிபத்தியப் போரை உண்மையிலேயே ஒரு ஜனநாயகவழியிலான சமாதானத்தோடு, வன்முறையால் திணிக்கப்படாத ஒரு சமாதானத்தோடு முடித்துக் கொள்வது சாத்தியம் அல்ல என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டும்.

2. ருஷ்யாவின் இன்றைய பிரத்யேக இயல்பு, புரட்சியானது முதல் கட்டத்தில் இருந்து இரண்டாம் கட்டத்துக்கு செல்கிறது. 

பாட்டாளி வர்க்கத்தின் வர்க்க உணர்வின் ஒழுங்கமைப்பு போதாமையினால் அதிகாரம் முதலாளித்துவ வர்க்கத்திடம் சென்று விட்டது, இது புரட்சியின் முதல் கட்டம். புரட்சியின் இரண்டாவது கட்டமாக ஆட்சி அதிகாரம் பாட்டாளி மற்றும் விவசாயிகளிடம் வந்தடைய வேண்டும்.

3. பிப்ரவரியில் தோன்றிய இடைக்கால அரசின் பிரமைகளை அம்பலப்படுத்த வேண்டும். இந்த அரசினுடைய வாக்குறுதிகளின் பித்தலாட்டங்களை தெளிவுபடுத்த வேண்டும்.

4. தொழிலாளர் பிரதிநிதிகளின் சோவியத்துகளில் போல்ஷிவிக்குகள் சிறுபான்மையாகவே இருந்தனர். 

தொழிலாளர் பிரதிநிதிகளின் சோவியத்துகள்தான் புரட்சிகர அரசாங்கத்தின் சாத்தியமான ஒரேயொரு வடிவம் என்பதை மக்கள் திரள் புரிந்து கொள்ளும்படி செய்ய வேண்டும்.

5. தொழிலாளர்களின் பிரதிநிதிகளடங்கிய சோவியத் தோன்றிய பிறகு, நாடாளுமன்றக் குடியரசுக்குத் திரும்புதல் என்பது பின்நோக்கிச் செல்வதாகும். 

தேர்வு செய்யப்படவும் எந்த நேரமும் திரும்பி அழைக்கப்படக் கூடியவர்களுமான பிரதிநிதிகளடங்கிய, அடிமுதல் முடிவரை தொழிலாளர், விவசாயிகள் ஆகியோர்களைக் கொண்ட சோவியத்துகளின் குடியரசு வேண்டும். 

நாடாளுமன்ற குடியரசு வேண்டாம் சோவியத்துகளின் குடியரசு வேண்டும்.

6. நாட்டில் உள்ள நிலம் அனைத்தும் நாட்டுடைமையாக்கப்படும். வட்டார சோவியத்துகள் நிலத்தை விநியோகிக்கும். ஏழை விவசாயிகளின் பிரதிநிதிகளுக்கு தனி சோவியத்துகள் அமைக்கப்படும். பெரிய எஸ்டேட்டுகள் ஒவ்வொன்றிலும் மாதிரிப் பண்ணைகள் அமைக்கப்படும்.

7. நாட்டிலுள்ள அனைத்து வங்கிகளையும் உடனடியாக தனியொரு தேசிய வங்கியில் இணைக்கப்பட வேண்டும்.

8. சோஷலிசத்தைப் “புகுத்துவது” எமது உடனடிக் கடமை அல்ல, ஆனால் சமூக உற்பத்தியையும் பொருட்களின் விநியோகமும் மட்டும் உடனடியாக தொழிலாளர் பிரதிநிதிகளைக் கொண்ட சோவியத்துகளின் கண்காணிப்புக்குள் கொண்டு வரவேண்டும்.

9. கட்சிக் காங்கிரசை கூட்டுவது, வேலைத்திட்டத்தை மாற்றுவது, பாரிஸ் கம்யூனை முன்மாதிரியாகக் கொண்ட அரசை அமைப்பது, கட்சியின் பெயரை மாற்றுவது ஆகியவை கட்சியின் கடமைகளாகும்.

10.  சமூக-தேசிய வெறியர்களையும், நடுநிலைவாதிகளையும் எதிர்த்த ஒரு புதிய அகிலம் உருவாக்க வேண்டும். அதாவது மூன்றாம் அகிலம் உருவாக்க வேண்டும்.

இன்றைய நிலையில் ஏப்ரல் ஆய்வுரைகளில், நாம் அறிந்து கொள்ள வேண்டியது ருஷ்யாவில் நடத்தப்போவது சோஷலிச புரட்சி என்று எதனடிப்படையில் லெனின் வந்தடைந்தார். அதாவது ஏப்ரல் ஆய்வுரைக்கு முன்புவரை ருஷ்யாவில் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி நடத்த வேண்டும் என்று கூறிய லெனின், எதனடிப்படையில் நடத்த வேண்டியது சோஷலிசப் புரட்சி என்கிற முடிவுக்கு வந்தார். இந்த மாற்றத்துக்கு எது காரணம் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

பத்து ஆய்வுரைகளும் முதன்மையானவைதான், இருந்தாலும் நாம் நான்காவது ஆய்வுரையில் கூறப்பட்ட, தொழிலாளர் பிரதிநிதிகளின் சோவியத்துகள்தாம் புரட்சிகர அரசாங்கத்தின் சாத்தியமான ஒரேயொரு வடிவம் என்பதை மக்கள் திரள் புரிந்து கொள்ளும்படி செய்ய வேண்டும் என்பதையும், ஐந்தாவது ஆய்வுரையில் கூறப்பட்ட, தொழிலாளர்களின் பிரதிநிதிகளடங்கிய சோவியத் தோன்றிய பிறகு, நாடாளுமன்றக் குடியரசுக்குத் திரும்புதல் என்பது பின்நோக்கிச் செல்வதாகும் என்பதையும் முதன்மையாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

சோவியத் என்கிற தொழிலாளர்களின் அரசு தோன்றிய பிறகு, முதலாளித்துவ அரசு வடிவமான நாடாளுமன்றக் குடியரசுக்கு செல்ல முடியாது. சோவியத் அரசு தொழிலாளர்கள் கையில் இருப்பதனால், முன்பு கூறியபடி, தொழிலாளர்கள் தலைமையில் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சிக்கு பதிலாக, சோஷலிசப் புரட்சியாக நடத்த வேண்டும், ஆனால் சோஷலிசத்தை உடனடியாக செயல்படுத்தப் போவதில்லை, சமூக உற்பத்தியும் பொருட்களின் விநியோகமும் சோவியத்துகளின் கண்காணிப்பில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஏப்ரல் ஆய்வுரை எட்டாவதில் லெனின் கூறியுள்ளார்.

இரண்டாவது ஆய்வுரையில், ருஷ்யாவில் பிரத்யேக இயல்பாக புரட்சியின் இரண்டு கட்டங்களான மாற்றத்தை லெனின் குறிப்பிடுகிறார். புரட்சியின் முதல் கட்டத்தில் ஆட்சி அதிகாரம் முதலாளித்துவ வர்க்கத்திடம் சென்றது. புரட்சியின் இரண்டாவது கட்டமாக ஆட்சி அதிகாரம் உழைப்பாளர்களிடம் வந்தடைய வேண்டும் என்று கூறியுள்ளார்.

இங்கே லெனின் ஆட்சி அதிகாரம் மாறுவது பற்றிய பிரத்யேக நிலைமையினைப் பற்றிதான் பேசியுள்ளார்.

ஏப்ரல் ஆய்வுரையில் கூறியதில் இவைதான் முக்கியமானது, இதைப் புரிந்து கொள்வதில் எந்த சிக்கலும் இல்லை, ஆனால் நம்நாட்டில் சிலர் தாமும் குழம்பி, மற்றவர்களையும் குழப்பி வருகின்றனர். குழப்பத்துக்குக் காரணம் என்னவென்பதைப் பார்ப்போம்.

புரட்சி என்றால் அதிகார மாற்றம்தான். இதனடிப்படையில், ருஷ்யாவில் பிப்ரவரியில் நடந்தது முதலாளித்துவப் புரட்சி என்றால் அடுத்து நடத்த வேண்டியது சோஷலிசப் புரட்சி என்று ஏப்ரல் ஆய்வுரைகளில் லெனின் கூறியதாக. சிலர் தவறாக விளக்கம் கொடுக்கின்றனர். இந்த தவறானப் புரிதலின் அடிப்படையில், இந்தியாவில் 1947-ஆம் ஆண்டு நடந்தது முதலாளித்துவப் புரட்சி என்றால் இனி நடத்த வேண்டியது சோஷலிசப் புரட்சி என்று எளிதாக முடிவெடுக்கின்றனர். 

இந்தியாவில் இரட்டை ஆட்சியும் இல்லை, உழைப்பாளர்களின் சோவியத்தும் இல்லை; சோவியத்தை செயற்கையாக உருவாக்க முடியாது என்று லெனின் கூறியதையும் இப்படிப்பட்டவர்கள் கருத்தில் கொள்ளவில்லை.

இவர்களின் பார்வை ஆட்சி மாற்றத்தோடு சுருங்கி போனதற்கு, லெனினது கருத்தை துண்டாக, தனித்து எடுத்துப் புரிந்து கொண்டதே காரணமாகும்.

பிப்ரவரி புரட்சியின் விளைவாக, 

“ருஷ்யாவில் அரசு அதிகாரம், புதிய வர்க்கத்தின், அதாவது முதலாளித்துவ வர்க்கம் மற்றும் முதலாளித்துவப் போக்குள்ள நிலவுடைமையாளர் கைகளுக்கு மாற்றப்பட்டு விட்டது. இந்த அளவுக்கு ருஷ்யாவில் முதலாளித்துவ ஜனநாயக புரட்சி முழுமையடைந்து விட்டது. ”

(நமது புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள்”‘-45)

அதே போல “செயற்தந்திரம் பற்றிய கடிதங்கள்” என்கிற கட்டுரையில் கூறியதைப் பார்ப்போம்.

“1917ஆம் ஆண்டு பிப்ரவரி-மார்ச் புரட்சிக்கு முன்பு ருஷ்யாவின் அரசு அதிகாரம் பழைய வர்க்கத்தின் கையில், அதாவது நிக்கொலாய் ரொமானவ் தலைமை தாங்கிய பிரபுத்துவ நிலச்சுவான்தார்கள் கையில் இருந்தது.

இப்புரட்சிக்குப் பிறகு அதிகாரம் வேறு ஒரு வர்க்கத்தின், ஒரு புதிய வர்க்கத்தின், அதாவது முதலாளித்துவ வர்க்கத்தின் கையில் இருக்கிறது.

இரண்டு வகையிலும், சரியான விஞ்ஞான அர்த்தத்திலும், நடைமுறை அரசியல் அர்த்தத்திலும், அரசு அதிகாரம் ஒரு வர்க்கத்தின் கையிலிருந்து மற்றொன்றுக்கு வந்து சேருவது தான் புரட்சியின் முதற் பெரும் அடிப்படை அறிகுறி.

இந்த அளவுக்கு, முதலாளித்துவ அல்லது முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி ருஷ்யாவில் முடிந்து முற்றுப் பெற்றுவிட்டது.” 

(செயற்தந்திரம் பற்றிய கடிதங்கள் -8)

இந்த அளவுக்கு, முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி ருஷ்யாவில் முடிந்துவிட்டது என்று கூறுவதை மட்டும் மனதில் கொண்டு தவறான முடிவுக்கு அந்தச் சிலர் வருகின்றனர். 

லெனினது இந்தக் கருத்துகள், பழைய போல்ஷிவிக்குகளிடம் விவாதத்துக்காக முன்வைத்தது. ஆனால், இதைமட்டுமே முன்வைத்து முதலாளித்துவப் புரட்சிக்கு அடுத்தது சோஷலிசப் புரட்சி என்று வாய்பாட்டைப் போல சிலர் கூறுகின்றனர்.

1917-ஆம் ஆண்டு அக்டோபர் சோஷலிசப் புரட்சியை நிறைவேற்றியப் பிறகும் 1921-ஆம் ஆண்டில் லெனின் எழுதிய “அக்டோபர் புரட்சியின் நான்காவது ஆண்டு விழா” என்கிற கட்டுரையில், ருஷ்யாவில் நடைபெற்ற புரட்சியின் நேரடியான உடனடிக் குறிக்கோள் முதலாளித்துவ ஜனநாயகம் என்று கூறியதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

“ருஷ்யாவில் நடைபெற்ற புரட்சியின் நேரடியான உடனடிக் குறிக்கோள் முதலாளித்துவ ஜனநாயகக் குறிக்கோள்தான், அதாவது மத்திய கால முறைமையின் மீதமிச்சங்களை அழித்து அவற்றை அறவே துடைத்தெறிவதும், இந்தக் காட்டுமிராண்டித் தனத்தை, இந்த அவக்கேட்டை ருஷ்யாவிடமிருந்து களைந்தெறிவதும், நமது நாட்டில் அனைத்துக் கலாச்சாரத்துக்கும் முன்னேற்றத்துக்கும் பிரம்மாண்டத் தடையாய் அமைந்த இதனை அகற்றுவதும்தான்.” 

(அக்டோபர் புரட்சியின் நான்காவது ஆண்டு விழா -தேர்வு நூல்கள் தொகுதி 12 – பக்.- 49)

1923-ஆம் ஆண்டு லெனின் எழுதிய “சிறியதாயினும் சிறந்ததே நன்று” என்கிற கட்டுரையில், உடனே சோஷலிசத்தை அடைவதற்கு போதிய நாகரிக வளர்ச்சி தம்மிடையே இல்லை என்று லெனின் ஏன் சொன்னார் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

“உடனே சோஷலிசத்தை அடைவதற்கு நம்மிடம் போதிய நாகரிக வளர்ச்சி இருக்கவில்லை, ஆனால் அதற்கு வேண்டிய அரசியல் முன்தேவைகள் நம்மிடம் இருக்கின்றன.”

(சிறியதாயினும் சிறந்ததே நன்று -தேர்வு நூல்கள் தொகுதி 12 – பக்கம்- 345)

அரசியல் முன்தேவைகள் நம்மிடம் இருக்கின்றன” என்று லெனின் கூறியதை நாம் நான்றாக கவனத்தில் கொள்ள வேண்டும். இதனைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால், லெனின் ருஷ்யாவில் நடத்த வேண்டியது சோஷலிசப் புரட்சி என்று ஏன் கூறினார் என்பதைப் புரிந்து கொள்ள முடியாது.

சோஷலிசப் புரட்சி நடத்துவதற்கு முன்தேவையான பொருளாதார வளர்ச்சியை அன்றைய ருஷ்யா பெற்றிருக்கவில்லை. அதனால் பொருளாதார வளர்ச்சியை முன்வைத்து, அக்டோபர் புரட்சியை சோஷலிசப் புரட்சியாக லெனின் நடத்தவில்லை என்பது தெரிகிறது. 

லெனின் இங்கே “அரசியல் முன்தேவைகள்” என்று குறிப்பிடுவது தொழிலாளர்களின் சோவியத் அரசே ஆகும். சோவியத் அரசு இருப்பதினால்தான் சோஷலிச வளர்ச்சியை நோக்கி செல்ல முடிகிறது. பொருளாதார வளர்ச்சி அடிப்படையில் சோஷலிச மாற்றத்துக்கு செல்ல முடியவில்லை. இங்கு நடைபெறுகிற அதிகார மாற்றம் என்பது பொருளாதர அடிப்படையில் அல்ல என்பதும் நமக்குத் தெளிவாகிறது. 

சோவியத் என்கிற உழைப்பாளர் அரசு, ருஷ்யாவில் தோன்றாமல் இருந்திருந்தால், இந்த ஆட்சி மாற்றம் என்பது வெறும் அதிகார மாற்றமாக மட்டுமே இருந்திருக்க முடியும், சோஷலிச மாற்றமாக இருந்திருக்காது.

ஏப்ரல் ஆய்வுரைகள் என்கிற பத்து ஆய்வுகளில் எங்கேயும் இவர்கள் கூறியது போல் கூறவில்லை என்பதை அறிந்தாலே, இந்த அளவு முதலாளித்துவ புரட்சி முடிந்துவிட்டது என்று கூறுவது விவாதத்தை முன்வைத்தே தவிர, சோஷலிசப் புரட்சிக்கான அடிப்படையாகக் கூறவில்லை என்பது தெரிகிறது.

ருஷ்யாவில் அக்டோபரில் நடத்த வேண்டியது சோஷலிசப் புரட்சி என்று என்ன பொருளில் லெனின் கூறினார் என்பதை அடுத்துப் பார்ப்போம்.

ஜனநாயகப் புரட்சியில் சமூக-ஜனநாயகவாதத்தின் இரண்டு செயல்தந்திரங்கள்,” என்கிற நூலை லெனின் 1905-ஆம் ஆண்டு எழுதினார். இதில் ருஷ்யாவில் நடத்த வேண்டியது முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி என்று கூறியுள்ளார். மேலும் இதற்கு தொழிலாளர்கள் விவசாயிகள் ஆகியோர் தலைமை ஏற்று நடத்த வேண்டும் என்றார்.

“போரும் ருஷ்யன் சமூக-ஜனநாயகமும்” என்கிற நூலை 1914-ஆம் ஆண்டு லெனின் எழுதினார். அதில், ருஷ்யா மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதாலும், அதன் முதலாளித்துவப் புரட்சியை இன்னும் முழுமை செய்யாததாலும், அந்த நாட்டிலுள்ள கம்யூனிஸ்டுகள் முதலாளித்துவ ஜனநாயக சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும். ஒரு ஜனநாயகக் குடியரசு அமைக்க வேண்டும் என்று எழுதியுள்ளார். வளர்ச்சி அடைந்துள்ள மற்ற நாடுகளில் சோஷலிசப் புரட்சி நடத்த வேண்டும் என்றும் அதில் கூறியுள்ளார்.

1905, 1914 ஆகிய ஆண்டுகளில் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி ருஷ்யாவில் நடத்தவேண்டும், ஜனநாயகக் குடியரசு உருவாக்க வேண்டும் என்று கூறிய லெனின் 1917ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் எழுதிய ஆய்வுரையில் நாடாளுமன்ற குடியரசு வேண்டாம் சோவியத்துகளின் குடியரசு வேண்டும் என்கிறார். இதற்கான காரணத்தை ஆய்வுரைகளிலும் கூறியுள்ளார்.

தொழிலாளர்களின் பிரதிநிதிகளடங்கிய சோவியத் தோன்றிய பிறகு நாடாளுமன்றக் குடியரசுக்குத் திரும்புதல் என்பது பின்நோக்கிச் செல்வதாகும். அதாவது தொழிலாளர்களுக்கு மேம்பட்ட சோவியத் அரசு உருவாக்கியப் பிறகு, நாடாளுமன்ற குடியரசைக் கோருவது பின்நோக்கிச் செல்வதாகும். யாரும் பின்னோக்கிச் செல்வதை விரும்ப மாட்டார்கள், முன்னோக்கி செல்வதையே விரும்புவர். லெனினும் அவ்வாறே செயற்பட்டார்.

ஏப்ரல் ஆய்வுரைகளை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டுமானால், கூடுதலாக லெனின் எழுதிய இரண்டு கட்டுரைகளையும் சேர்த்து படிக்க வேண்டும். முதல் கட்டுரை 1917-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7-ஆம் நாளில் எழுதிய “தொலைவில் இருந்து எழுதிய கடிதங்கள்.” இரண்டாவது கட்டுரை 1917-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9-ஆம் தேதியில் எழுதிய “இரட்டை ஆட்சி.”

வெளிநாட்டில் இருந்த லெனின், 1917ஆம் ஆண்டு மார்ச் 7-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதிவரை சுவிட்சர்லாந்தில் இருந்து ஐந்து கடிதங்களை ருஷ்யாவுக்கு அனுப்பினார். முழுமையடையாக ஐந்தாவது கடிதம் மார்ச் 26ஆம் தேதி எழுதியது.

முதல் கடிதம் மட்டும் 1917ஆம் ஆண்டு மார்ச்சில் பிராவ்தாவில் வெளிவந்தது,  மற்றவைகள் அக்டோபர் புரட்சிக்குப் பின்பே வெளியிடப்பட்டன. இந்த ஐந்தாவது கடிதத்தை, “செயற்தந்திரம் பற்றிய கடிதங்கள்” (ஏப்ரல் 8-13), மற்றும் “நமது புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள்” (ஏப்ரல் 10) என்கிற கட்டுரைகளில் விரிவாக எழுதினார்.

 “இரட்டை ஆட்சி” என்கிற கட்டுரை ஏப்ரல் ஆய்வுரைகளுக்குப் பிறகு எழுதியதாகும். “தொலைவில் இருந்து எழுதிய கடிதங்கள்” என்கிற கட்டுரையானது ஏப்ரல் ஆய்வுரைகளுக்கு முன்பு எழுதியதாகும். இந்தக் கட்டுரையில் உள்ள ஒன்றை மட்டும் இங்கே பார்ப்போம். 

பிப்ரவரி புரட்சியின் விளைவாக முதலாளித்துவ வர்க்க நாடாளுமன்ற அரசும், தொழிலாளர்களின் சோவியத் அரசும் தோன்றியது. இரட்டை ஆட்சி முறையில் உள்ள இந்த சோவியத் அரசைப் பற்றி இக் கடிதத்தில் லெனின் கூறியதை பார்ப்போம்.

இதற்கு முன் நாம் லெனின் கூறிய, “அரசியல் முன்தேவைகள் நம்மிடம் இருக்கின்றன” என்று கூறியதை மனதில் கொண்டு, இந்த கடிதத்தில் உள்ளதைப் பார்ப்போம். இங்கே அரசியல் முன்தேவைகள் நம்மிடம் இருக்கின்றன என்று கூறுவது சோவியத் அரசு நம்மிடம் இருக்கின்றன என்பதே ஆகும். அதாவது சோவியத் அரசு கையில் இருப்பதை முன்வைத்தே, அரசியல் முன்தேவைகள் தம்மிடம் இருக்கின்றன என்று லெனின் கூறியுள்ளார்.

“இதனுடன் அக்கம் பக்கமாக முக்கியமான, அதிகாரபூர்வமல்லாத, இன்னும் வளர்ச்சி பெற்றிராத, ஒப்பளவில் பலவீனமான தொழிலாளர் அரசாங்கம் தோன்றியுள்ளது. அது பாட்டாளி வர்க்கத்தின், நகர்ப்புற மற்றும் நாட்டுப்புற மக்கள் தொகையின் ஏழைகள் பகுதி முழுமையின் நலன்களை வெளிப்படுத்துகிறது. இதுவே பெத்ரோகிராதில் உள்ள தொழிலாளர் பிரதிநிதிகளின் சோவியத் ஆகும். இது படைவீரர் விவசாயிகளுடனும், விவசாயித் தொழிலாளிகளுடனும் தொடர்பை நாடுகிறது. விவசாயிகளை விட மேலதிகமாக விவசாயித் தொழிலாளிகளிடம் குறிப்பாயும் முதன்மையாயும் தொடர்புகளை நாடுகிறது.

மெய்யான அரசியல் நிலைமை இத்தகையதே. இதை நாம் ஆகக்கூடுமான அளவு புறநிலையான துல்லியத்துடன் முதலில் வரையறுக்க முயல வேண்டும். அதன் வழியில், மார்க்சியப் செயற்தந்திரங்கள் சாத்தியமான ஒரே உறுதியான அடித்தளத்தை —மெய்நடப்புகளின் அடித்தளத்தை- அடிப்படையாகக் கொள்ள முடியும்.” 

(தொலைவில் இருந்து எழுதிய கடிதங்கள் 22-23)

இங்கே லெனின், முதலாளித்துவ அரசுக்குப் பக்கத்தில் தொழிலாளர்களின் சோவியத் இருப்பதை சுட்டிக்காட்டும் போது, “மெய்யான அரசியல் நிலைமை இத்தகையதே” என்கிறார். இதனுடன் முன்பு நாம் பார்த்த, சோவியத் அரசை முன்வைத்து லெனின் கூறிய, “அரசியல் முன்தேவைகள் நம்மிடம் இருக்கின்றன” என்பதையும் இணைத்துப் பார்க்க வேண்டும். அப்படி பார்க்கும் போது, முதலாளி வர்க்கத்தின் அரசுக்கு இணையாகத் தோன்றிய உழைப்பாளர்களின் சோவியத் அரசை முன்வைத்தே ருஷ்யாவில் சோஷலிசப் புரட்சி நடத்த வேண்டும் என்கிற முடிவுக்கு லெனின் வந்துள்ளார் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

மேலும் சோவியத் ஆட்சி இருக்கின்றது என்கிற மெய்யான அரசியல் நிலைமையின் அடிப்படையில், செயற்தந்திரங்கள் அமைக்க வேண்டும் என்று லெனின் தெளிவாகவே கூறியுள்ளார். சோஷலிசப் புரட்சி என்கிற செயற்தந்திரத்தை லெனின், இரட்டை அரசுகளின் ஒன்றான சோவியத் அரசு தோன்றியதை முன்வைத்தே கூறியுள்ளார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

அடுத்து “இரட்டை ஆட்சி” என்கிற கட்டுரையைப் பார்ப்போம்.

“இரட்டை ஆட்சி” என்கிற கட்டுரையில் அன்றைய ருஷ்ய புரட்சியின் தனித்த சிறப்பியல்பாக இரட்டை ஆட்சியை லெனின் குறிப்பிடுகிறார், மேலும் இந்த உண்மையை முதலாவதாகப் புரிந்து கொள்ள வேண்டும் இல்லை என்றால் முன்னேற முடியாது என்பதையும் சேர்த்துக் கூறியுள்ளார். 

பழைய வழிமுறைகளை திருத்தம் செய்ய வேண்டியதை போல்ஷிவிக்குகள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும், நிலைமைகள் வேறுபட்டு மாற்றம் அடைந்திருக்கிறது என்றும் லெனின் சுட்டிக் காட்டுகிறார்.

ருஷ்யாவில் இரட்டை ஆட்சி நடைபெற்றுகிறது. இதில் ஒரு அரசாங்கம் முதலாளித்துவ அரசாங்கம், மற்றொரு அரசங்கம் தொழிலாளர்களது சோவியத்து. 

இந்த சோவியத் பலவீனமாகவும் தொடக்க நிலையினதாகவும் இருந்தாலும் உண்மையில் நிலவுகிறது என்பதிலும், வளர்ச்சி பெற்றுவரும் அரசாங்கம் என்பதிலும் எந்த சந்தேகம் இல்லை என்று லெனின் கூறிகிறார்.

இதனை லெனின் சொற்களிலேயே பார்ப்போம்.

“நமது புரட்சியின் மிகவும் குறிப்பிடத்தக்கதான இயல்பு என்னவென்றால் இது இரட்டை ஆட்சியைக் கொண்டுவந்திருக்கிறது என்பதே. இந்த உண்மையை முதலாவதாயும் முதன்மையாயும் புரிந்து  கொள்ள வேண்டும்: இது புரிந்து கொள்ளப்படாவிட்டால் நாம் முன்னேற முடியாது. 

நாம் பழைய 'சூத்திரங்களை'”, உதாரணமாக போல்ஷிவிசத்தின் சூத்திரங்களை எவ்வாறு நிறைவு செய்வது, திருத்தம் செய்வது என்பதை நாம் தெரிந்திருக்க வேண்டும். மொத்தத்தில் அவை சரியாகவே இருந்தன என்ற போதிலும் அவற்றின் தூலமான செயலுருவம் வேறாக மாற்றம் அடைந்திருக்கிறது. 

ஓர் இரட்டை ஆட்சி குறித்து இதற்கு முன்னால் எவருமே நினைக்கவில்லை, அல்லது நினைத்திருக்கவும் முடியாது.

இந்த இரட்டை ஆட்சி என்பது என்ன? 

இடைக்கால அரசாங்கத்தின், முதலாளித்துவ வர்க்கத்தினுடை அரசாங்கத்தின் அருகிலேயே இன்னொரு அரசாங்கம் உதித்தெழுந்துள்ளது. இதுகாறும் பலவீனமாயும் முளைப்பருவத்தில் இருந்த போதிலும் அது மெய்யாகவே நிலவுகிற, வளர்ந்து வருகிற ஓர் அரசாங்கம் என்பதில் ஐயமில்லை- இதுவே தொழிலாளர் மற்றும் படையாவீரர்களின் பிரதிநிதிகள் அடங்கிய சோவியத்துகளாகும்.” (இரட்டை ஆட்சி -39)

ஆக ருஷ்ய நாட்டின் புரட்சி, இரட்டை ஆட்சி கொண்டதாகவும், அதில் ஒன்று உழைப்பாளர்களின் சோவியத் ஆட்சியாக வெளிப்பட்டுள்ளது என்பதை புரட்சியின் பிரத்யேகத் தன்மையாக லெனின் அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளார்.

இதனடிப்படையில், ஐந்தாவது ஏப்ரல் ஆய்வுரையில் லெனின் கூறியதின் பொருளைப் புரிந்து கொள்வது எளிதாக இருக்கிறது. 

தொழிலாளர் பிரதிநிதிகள் அடங்கிய சோவியத்துகளில் இருந்து நாடாளுமன்றக் குடியரசுக்குத் திரும்பிச் செல்வது ஒரு பிற்போக்கு நடவடிக்கை, நாடாளுமன்ற குடியரசு வேண்டாம், சோவியத்துகளின் குடியரசு வேண்டும்.

ஜனநாயகப் புரட்சியின் விளைவாக உருவாகும் அரசு, சோவியத்தாக இருக்க முடியாது, ஒரு நாடாளுமன்ற வகைப்பட்ட குடியரசாகத்தான் இருக்க முடியும், ஆனால் ருஷ்யாவில் சோவியத் ஆரசு தோன்றிவிட்டது. கையில் சோவியத் ஆட்சி இருக்கும் போது நாடாளுமன்ற குடியரசை அமைப்பது என்பது பின்னோக்கிச் செல்லும் பிற்போக்கான நடவடிக்கையாகும். அதனால் ருஷ்யாவில் நடத்த வேண்டியது சோஷலிசப் புரட்சி.

ருஷ்யாவில் சோஷலிசப் புரட்சியை நடத்துவதற்கு வெறும் ஆட்சி மாற்றம் மட்டும் காரணம் அல்ல, அந்த நாட்டில் உள்ள பிரத்யேக நிலமையான “இரட்டை ஆட்சி” முறை அங்கு நிலவியதே அடிப்படைக் காரணம் என்பது தெளிவாகத் தெரிகிறது.

முதாலாளித்துவ வர்க்க அரசில் இருந்து பாட்டாளி வர்க்க அரசாக மாறுவது ஒரு பிரத்யேக நிலைமைதான், ஆனால் இது சோஷலிசத்துக்கான பிரத்யேகநிலை என்று லெனின் கூறவில்லை. இரட்டை ஆட்சியில் ஒன்றாக சோவியத் இருக்கும் பிரத்யேக நிலைமையே சோஷலிச புரட்சிக்கானது என்கிறார் லெனின்.

அடுத்து “நமது புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள்”, என்ற கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்களைப் பார்ப்போம்.

இரட்டை ஆட்சியின் பிரத்யேக இயல்பும் அதன் வர்க்க முக்கியத்துவமும் என்கிற உட்தலைப்பில் லெனின் கூறியவற்றை நன்றாக கவனத்தில் கொள்ள வேண்டும்.

பிப்ரவரிக்குப் பிறகான புரட்சியின் இயல்புக்கூறாக இருப்பது இரட்டை ஆட்சி, இதை கவனமாகச் சிந்திக்க வேண்டும். பிப்ரவரிப் புரட்சி வெற்றி அடைந்தப் பிறகு, சில நாட்களிலேயே தோன்றியது இரட்டை ஆட்சி. 

“நமது புரட்சியின் பிரதான இயல்புக்கூறு, கவனமாகச் சிந்தித்துத் தெளிய வேண்டும் என்று மிகவும் அவசர கட்டாயமாகக் கோருகிற ஓர் இயல்புக்கூறு இரட்டை ஆட்சி”

(நமது புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள் -49)

ஒரு பக்கத்தில் முதலாளித்துவ அரசாங்கம், இதன் கையில் ஆட்சி அதிகாரத்தின் அனைத்து அமைப்புகளையும் வைத்திருக்கிறது. 

மற்றொரு பக்கத்தில்  இதற்கு இணையாக சோவியத் என்கிற அரசாங்கம் இருக்கிறது, இதனிடத்தில் அரசு அதிகார அமைப்பு எதுவும் பெற்றிருக்கவில்லை. ஆனால் இந்த அரசாங்கம் பெரும்பான்மையான மக்களின் ஆதரவையும், ஆயுதமேந்திய தொழிலாளர்களையும் படைவீரர்களையும் கொண்டுள்ளது.

இரட்டை ஆட்சியின் தன்மையை லெனின் அடுத்து விளக்குகிறார்.

முதலாளித்து-ஜனநாயகப் புரட்சிக்கு அப்பால் சென்று, ஆனால் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை இன்னும் எட்டிராத நிலையில் புரட்சியின் வளர்ச்சியில், ஒர் இடைநிலைக் கட்டமாக இரட்டை ஆட்சி இருப்பதை லெனின் சுட்டிக்காட்டுகிறார். இரட்டை ஆட்சியின் பிரத்யேக நிலை என்பது இதுதான்.

“சாராரண முதலாளித்துவ-ஜனநாயகப் புரட்சிக்கு அப்பால் சென்று, ஆனால் பாட்டாளி வர்க்கம் மற்றும் விவசாயி மக்களின் தூய சர்வாதிகாரத்தை இன்னும் எட்டியிராத பொழுதில் புரட்சியின் வளர்ச்சியில் ஒரு மாறிவரும் கட்டமாய் இருக்கிறது இரட்டை ஆட்சி”

(நமது புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள் -51-52)

இரட்டை ஆட்சியைப் பற்றி பேசிய பிறகு வருகிற உட்தலைப்பு, மேலே குறிப்பிட்டதிலிருந்து தொடரும் செயல்தந்திரங்களின் பிரத்யேகத் தன்மை, என்கிற பகுதியில் லெனின் கூறியதைப் பார்ப்போம்.

புறநிலை உண்மைகளை கணக்கில் கொள்ள வேண்டிய மார்க்சிவாதிகளுக்கு, மேலே விவரிக்கப்பட்ட, உண்மையான சூழ்நிலைமையின் பிரத்யேகத் தன்மை, தற்போதைய தருணத்திற்கான செயற்தந்திரங்களைத் (Tactics) தீர்மானிக்க வேண்டும் என்று லெனின் அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார். இதன் மூலம் சோஷலிசப் புரட்சி என்கிற செயற்தந்திரத்தை இரட்டை ஆட்சி என்கிற பிரத்யேகத் தன்மையில் இருந்தே லெனின் அமைத்துள்ளார் என்பது தெளிவாகிறது.

“ தனிப்பட்ட நபர்களை அன்றி எதார்த்த நடப்பு, மக்கள் திரள் மற்றும் வர்க்கங்களை கவனத்தில் எடுத்துக் கொள்ளவேண்டிய மார்க்சியவாதிகளுக்கு, மேலே சித்தரிக்கப் பட்டுள்ள மெய்யான நிலைமையின் பிரத்தியேகத் தன்மை, இன்றைய தருணத்திற்கான போர்த்தந்திரங்களின் பிரத்தியேகத் தன்மையினை நிர்ணயம் செய்ய வேண்டும்.” 

(நமது புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள் -54)

இங்கே லெனின், “மேலே சித்தரிக்கப் பட்டுள்ள மெய்யான நிலைமையின் பிரத்யேகத் தன்மை” என்பது, “இரட்டை ஆட்சியின் பிரத்யேக இயல்பும் அதன் வர்க்க முக்கியத்துவமும்” என்கிற முந்தைய உட்தலைப்புப் பகுதியே ஆகும்.

சோஷலிசப் புரட்சி என்கிற செயல்தந்திரத்தை லெனின் தேர்ந்தெடுத்தது இரட்டை ஆட்சி என்கிற பிரத்யேகச் சூழ்நிலையில் இருந்தே என்பதில் எந்த சந்தேகமும் எழாத வகையில்தான் லெனின் விளக்கி இருக்கிறார்.

உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி நிலையில், லெனின் ருஷ்யாவில் சோஷலிசப் புரட்சி என்கிற கோரிக்கையை வைக்கவில்லை என்பது நன்றாகத் தெரிகிறது. அதனால்தான், பெரும்பான்மையான மக்கள் சோஷலிசப் புரட்சியின் அவசியத்தை உணராத வரை, சிறு விவசாயிகள் உள்ள நாட்டில் சோசலிசத்தை "அறிமுகம்" செய்வதை எந்தச் சூழ்நிலையிலும் பாட்டாளி வர்க்கக் கட்சி தானே குறிக்கோளாக அமைத்துக் கொள்ள முடியாது என்று லெனின் கூறியுள்ளார்.

இரட்டை ஆட்சி என்கிற பிரத்யேக நிலை காரணமாகவே, சோஷலிசப் புரட்சி என்கிற செயற்தந்திரம் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பதை லெனின் எந்த வகையிலும் மறக்கவில்லை. 

மேலும், அக்டோபர் புரட்சிக்குப்பின் ருஷ்யாவில் உருவான சோஷலிச அரசால் போடப்பட்ட “புதிய பொருளாதாரக் கொள்கை” என்பது ருஷ்யாவில் விடுபட்டுப் போன முதலாளித்துவ ஜனநாயகத்தை நிறைவேற்றுவதற்கு உருவாக்கப்பட்டது என்பதையும் சேர்த்துப் பார்க்கும் போது. பின்தங்கிய விவசாய நாட்டில் சோஷலிச நிர்மாணத்தை உடனே நடைமுறைப்படுத்த முடியாது என்பதில் லெனின் தெளிவாக இருந்திருக்கிறார் என்பது தெரிகிறது. 

உழைப்பாளர்களின் சோவியத் அரசைக் கொண்டு உடனடியாக சோஷலிசத்தைப் புகுத்தப் போவதில்லை என்ற முடிவில் லெனின் இருப்பதினால், நடத்த வேண்டியது சோஷலிசப் புரட்சி அல்லாமல் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி என்று கூறுவதுதானே சரியாக இருக்கும் என்று பலருக்குத் தோன்றும். தொழிலாளர்களின் சோவியத் என்பது பாராளுமன்ற குடியரசைக்காட்டிலும் மக்களுக்கு அதிக பயன் அளிப்பவை ஆகும், மேலும் விடுபட்டுப்போன ஜனநாயகக் கடமைகளை நிறைவு செய்வற்கு மட்டுமல்லாது, சோஷலிசத்துக்கான முன்தாயாரிப்பு வேலையினையும் செய்வதினால் சோஷலிசப் புரட்சி என்று கூறுவதே சரியாக இருக்கும். 

குறிப்பாக, எட்டாவது ஆய்வுரையில் கூறப்பட்ட, சமூக உற்பத்தியும் பொருட்களின் விநியோகமும் சோவியத் அரசின் கண்காணிப்பில் இருக்கும் என்பதை நடைமுறைப்படுத்துவதற்கு சோஷலிச அரசும், சோஷலிசப் புரட்சியும் அவசியமாகும்.

சோஷலிச புரட்சி என்று லெனின் எடுத்த முடிவு சரியானதாகவே இருக்கிறது.

ருஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சியின் பெயர் அப்போது சமூக-ஜனநாயகக் கட்சி என்றே அழைக்கப்பட்டது. இதனை கம்யூனிஸ்ட் கட்சி என்று மாற்ற வேண்டும் என்று லெனின் கோரிக்கை வைக்கிறார். இதற்கு ஒரு காரணம் இருக்கிறது. ஏகாதிபத்திய உலகப் போர் தொடங்கிய உடன் அதனை உள்நாட்டுப் போராக மாற்ற வேண்டும் என்பது இரண்டாம் அகிலத்தின் முடிவாக இருந்தது. ஆனால், இதற்கு மாறாக, ஜெர்மனியில் உள்ள காவுத்ஸ்கி போன்றோர்களும், பிரான்ஸ், இங்கிலாந்து, இத்தாலி போன்ற நாட்டுத் தலைவர்களும் ருஷ்யாவில் உள்ள சில தலைவர்களும் அகிலத்துக்கு எதிரான முடிவெடுத்தனர். 

உலகப் போரின் அடிப்படைக் காரணத்தை மறந்துவிட்டு தங்களது நாட்டு முதலாளிகளுடன் சேர்ந்து கொண்டு, சொந்த நாட்டைக் காப்போம் என்று தேசியவெறிக்கு ஆளானார்கள். அகிலத்தில் உள்ள இந்த சமூக ஜனநாயகத் தலைவர்களின் போக்கை மனதில் கொண்டே, சமூக-ஜனநாயகம் என்கிறப் பெயரை கம்யூனிஸ்ட் கட்சி என்று மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கையை லெனின்  வைத்துள்ளார்.

சிலவற்றைப் பற்றி லெனின் பேசும் போது கூடுதலான கோபத்தொனி காணப்படுகிறது. பாட்டாளி வர்க்கப் புரட்சி நிகழ்த்த வேண்டிய நேரத்தில், அகிலத்தின் தலைவர்கள், அதிலும் முக்கியமான பெரும் தலைவர்கள் உள்நாட்டு முதலாளிகளின் தேசியவெறியின் பக்கம் சென்றதை குறிப்பிடும் போது லெனினது கோபம் வெளிப்படையாகத் தென்படுகிறது. அந்தக் கோபத்தை அனுபவிக்க வேண்டும் என்றால் அவரது சொற்களிலேயே பார்க்க வேண்டும்.

“ஏகாதிபத்தியமாக வளர்ந்த முதலாளித்துவத்தின் எதார்த்தமான தவிர்க்க முடியாத் தன்மை ஏகாதிபத்தியப் போரைக் கொண்டுவந்தது. போர் மனிதகுலத்தை ஒரு பாதாளத்தின் விளிம்புக்குக் கொண்டுவந்துவிட்டது. நாகரிகத்தின் அழிவுக்கு, மேலும் லட்சோபலட்சம் மனித உயிர்களை எண்ணற்ற லட்சோபலட்சம் மனித உயிர்களை காட்டு மிராண்டித்தனத்துக்கும் அழிவுக்கும் கொண்டுவந்துவிட்டது.

இதிலிருந்து விடுபடுவதற்கான ஒரே வழி ஒரு பாட்டாளி வர்க்கப் புரட்சியே.

அத்தகைய புரட்சி துவங்கவிருக்கும் அதே தருணத்தில், அது தனது முதல் அடிகளை, தட்டித்தடவும் அடிகளை, முதலாளித்துவ வர்க்கத்திடம் அளவுக்கு மேலான நம்பிக்கையை வெளிப்படுத்தும் அடிகளை எடுத்து வைத்துக் கொண்டிருக்கும் போது, அத்தகைய தருணத்தில் பெரும்பான்மையான “சமூக-ஜனநாயகத்'' தலைவர்கள், “சமூக-ஜனநாயக' நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் “சமூக-ஜனநாயகச்" செய்தித்தாள்கள்- இவைதாம் மக்கள் மீது செல்வாக்குச் செலுத்தும் ஏடுகள் என்பது துல்லியம் - சோஷலிசத்தைத் துறந்து விட்டன, சோஷலிசத்திற்குத் துரோகம் செய்து விட்டன, “தமது சொந்த” தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் பக்கம் சென்று விட்டன.

இந்தத் தலைவர்களால் மக்கள் குழப்பப்பட்டிருக்கிறார்கள், வழிதவறி இட்டுச் செல்லப்பட்டிருக்கிறார்கள். ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள்.

இரண்டாம் அகிலத்தைப் போன்று அந்தளவுக்கு அழிவுற்றுப் போன பழைய, காலாவதியான கட்சிப் பெயரை நாம் நீடித்து வைத்திருப்போமானால் அந்த ஏமாற்றுக்கு உதவியாகவும், உடந்தையாகவும் இருப்பவர்களாவோம்!.” 

(நமது புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள் -93)

லெனினது இந்தக் கோபம் சமூக-ஜனநாயகக் கட்சி என்பதை கம்யூனிஸ்ட் கட்சி என்று மாற்ற வேண்டும் என்பதற்காகவே.

அடுத்து, “செயற்தந்திரம் பற்றிய கடிதங்கள்” கட்டுரையில் காணப்படும் சிலவற்றைப் பார்ப்போம்.

இந்த கட்டுரை தேர்வு நூல்கள் பன்னிரண்டில் இடம் பெறவில்லை, இருந்தாலும் ஏப்ரல் ஆய்வுரைகளைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், சுமார் இருபது பக்கங்களைக் கொண்ட இந்தக் கட்டுரையை கண்டிப்பாகப் படிக்க வேண்டும். இந்தக் கட்டுரையை இணைத்தே ஏப்ரல் ஆய்வுரைகள் என்று தொகுப்பாகக் கூறப்படுகிறது.

புறநிலையின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்யுமாறு மார்க்சியம் நம்மைக் கோருகிறது.

“வர்க்க உறவுகளையும் ஒவ்வொரு வரலாற்று சூழ்நிலைக்கும் தனித்துவமான உறுதியான சிறப்பியல்புகளையும் குறித்து மார்க்சியம் நம்மிடமிருந்து கண்டிப்பாக துல்லியமான, புறநிலை வழியில் சரிபார்க்கக்கூடிய பகுப்பாய்வு செய்யுமாறு மார்க்சியம் நம்மைக் கோருகிறது. போல்ஷிவிக்குகளாகிய நாம் கொள்கைக்கு விஞ்ஞான அடித்தளம் அமைத்துக் கொள்ள இன்றியமையாத இந்தக் கோரிக்கையை எப்போதும் நிறைவு செய்ய முயன்று வந்திருக்கின்றோம்.” 

(செயற்தந்திரம் பற்றிய கடிதங்கள் -7)

போல்ஷிவிக்குகள் எப்போதும் தங்களது கொள்கைக்கு விஞ்ஞான அடிப்படையில் செயல்படுவதற்கு, மார்க்சிய கோரிக்கையை முழுமையாக நிறைவு செய்ய முயற்சிப்பதை குறிப்பிட்டே லெனின் இந்தக் கட்டுரையைத் தொடங்குகிறார்.

மார்க்சிய போதனை செயலுக்கு வழிகாட்டியே அன்றி வறட்டுச் சூத்திரமல்ல என்று மார்க்சும் எங்கெல்சும் எப்போதும் கூறுவதை லெனின் இங்கே நினைவுகூறுகிறார். மார்க்சியத்தை சூத்திரமாக மனப்பாடம் செய்து கொண்டு, அதை மட்டுமே திருப்ப திரும்ப சொல்லிவருவதை மார்க்சும் எங்கெல்சும் கேலிசெய்தார்கள். 

மார்க்சிய சூத்திரங்களில் அதிகபட்சமாக பொதுவான கடமைகள் வரையறுக்கப்பட்டிருக்கும். இந்தப் பொதுவான கடமைகள் வரலாற்று இயக்கப் போக்கில் குறிப்பிட்ட ஒவ்வொரு காலப்பகுதிக்கும் உரிய குறிப்பான பொருளாதார, அரசியல் நிலைமைகளால் கண்டிப்பாக மாற்றியமைக்கப்படுகின்றன.

இதனடிப்படையில், ருஷ்யாவில் 1917-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் புரட்சிகர பாட்டாளி வர்க்க கட்சி தன்னுடைய செயல்பாட்டையும் வடிவங்களையும் வரையறுக்கையில் இன்று அது வழிகாட்ட வேண்டிய, தெளிவாக நிலை நாட்டப்பட்ட பெற்ற புறநிலை மெய்மைகள் எவை? அதாவது புறநிலை உண்மைகள் எவை?

ருஷ்யாவில் அன்றைய பிரத்யேகநிலைமையாக, புரட்சி முதல் கட்டத்திலிருந்து இரண்டாவது கட்டத்துக்கு மாறிச் செல்லும் காலப் பகுதி என்று வரையறுக்கிறார் லெனின்.

இந்த நிலைமைக்கான கடமையாக லெனின் கூறுகிறார்.

“தொழிலாளர்களே.

புரட்சியின் இரண்டாவது கட்டத்தில் உங்களுக்குடைய வெற்றிக்கு பாதையைத் தயார்ப்படுத்த நீங்கள் பாட்டாளி வர்க்கத்தையும் அனைத்து மக்களையும் நிறுவன வழியில் அமைப்பாக்குவதில் அதிசயங்கள் புரிந்தாக வேண்டும்.” 

(செயற்தந்திரம் பற்றிய கடிதங்கள் -8)

1917ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடந்த புரட்சியே முதல் கட்டம். இதில் நிலப்பிரபுத்துவத்தின் கையில் இருந்த அரசு அதிகாரம், முதலாளித்துவ வர்க்கத்தின் கைகளுக்கு மாறியது. 

அரசு அதிகாரம் ஒரு வர்க்கத்தின் கையிலிருந்து மற்றொரு வர்க்கத்துக்கு மாறுவது புரட்சியின் முதற்பெரும் அடிப்படை அறிகுறியாகும். இந்த அளவில் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி நிறைவடைந்துவிட்டது.

லெனின் இப்படிக் கூறியவுடன், பழைய போல்ஷிவிக்குகள் என்று அழைத்துக் கொள்பவர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். “பாட்டாளி வர்க்கத்தினர்-விவசாயிகள் ஆகியோரின் புரட்சிகர-ஜனநாயக சர்வாதிகாரம்” மூலமாகத்தான் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியை செய்து முடிக்க வேண்டும் என்றுதானே இதுவரை “நாம்” கூறிவந்தோம். இதற்கு மாறாக முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி நிறைவடைந்து விட்டது என்று எப்படி கூறமுடியும் என்று கேள்வி எழுப்பினர். அது இன்னும் தொடங்கக்கூட இல்லை என்பதுதான் உண்மை என்றும் கூறினர்.

இதற்கு லெனின் என்ன பதிலளித்தார் என்பதைப் பார்ப்போம்.

இந்த போல்ஷிவிக்குகளின் முழக்கமும் கருத்தும் பொதுவாக வரலாறு உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால் தற்போதைய நிலைமைகள் வேறு விதமாக மாறிவிட்டன. அந்த மாற்றம் உண்மையானதாகவும், பிரத்யேகத் தன்மையுடையதாகவும் எதிர்பார்த்ததைவிட வேறுவிதமாக மாறியிருக்கின்றன. 

இந்த உண்மையை பார்க்கத் தவறுவது அல்லது புறக்கணிப்பது என்பதின் பொருள் என்னவென்றால், புதிய உயிர்ப்புள்ள எதார்த்தத்தின் பிரத்யேகத் தன்மையை பயில்வதற்கு பதிலாக, அடிப்படைப் பொருள் விளங்காமல் மனப்பாடம் செய்து கொண்ட சூத்திரத்தைத் திருப்பிச் சொல்வதாகும். 

பாட்டாளி வர்க்கத்தின் சோவியத் தோன்றுவதற்கு முன்பு உருவாக்கப்பட்ட, பழைய சூத்திரத்தை இவர்கள் திரும்ப திரும்ப கூறுகின்றனர். பாட்டாளிகளின் சோவியத் அரசு தோன்றிய புதிய நிலைமைக்கு ஏற்ப கொள்கையை மாற்ற வேண்டும். சூழ்நிலைமை மாறும் போது கோட்பாடும் மாறும் அதற்கு ஏற்ப நடைமுறையும் மாற்றம் பெறும்.

ஒரு மார்க்சியவாதி, இருக்கும் உண்மையான நிலைமையை, எதார்த்தத்தின் உண்மையான நிலவரங்களை அறிந்து கொள்ள வேண்டும். நேற்றைய கோட்பாட்டைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கக் கூடாது என்று லெனின் கூறுகிறார்.

முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியின் நிறைவேற்றம் என்பதை புதிய நிலைமைக்கு ஏற்பவே அணுகவேண்டும், இதற்கு மாறாக பழைய அணுகுமுறையில் செயல்பட விரும்புவது, உயிர்ப்புள்ள மார்க்சியத்தை உயிரற்ற எழுத்துக்கு பலி கொடுப்பதாகும் என்று லெனின் காட்டமாக குறிப்பிடுகிறார்.

புதிய நிலைமைக்கு ஏற்ப மாறுவதே உயிர்ப்புள்ள மார்க்சியம், அப்படி மாறாது இருப்பது உயிரற்ற எழுத்துக்கு பலியாவதாகும். இப்படி பலியாவதையே வறட்டு சூத்திரவாதம் என்று கூறப்படுகிறது.

இதனை கண்டிப்பாக லெனினது சொற்களிலேயே நாம் பார்க்க வேண்டும்.

“பாட்டாளி வர்க்கத்தினர் - விவசாயிகள் ஆகியோரின் புரட்சிகர ஜனநாயக சர்வாதிகாரம் ஏற்கனவே ஈடேறிவிட்டது, ஆனால் மிகவும் தனிவகைப் பாணியிலே, அதி முக்கியத்துவம் வாய்ந்த பல மாற்றங்களோடு ஈடேறியுள்ளது. என்னுடைய அடுத்த கடிதம் ஒன்றில் அவற்றைத் தனியாக விளக்குகிறேன். ஒரு மார்க்சியவாதி நிஜ வாழ்க்கையை, எதார்த்தத்தின் உண்மையான நிலவரங்களைக் கண்டுணர்ந்து கொள்ள வேண்டும், நேற்றையக் கோட்பாட்டைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கக் கூடாது —அது எல்லாக் கோட்பாடுகளையும் போல் அதிகபட்சமாகப் போனால் பிரதானமானதையும் பொதுவானதையும் மட்டுமே குறிக்கக் கூடியது, வாழ்க்கையை அதன் எல்லாச் சிக்கலோடும் முழுமையாய்க் காட்டும் நிலையை நெருங்குவதோடு நின்றுகொள்வது- என்கிற மறுக்க முடியாத உண்மையைப் புரிந்து கொள்வதன் அவசியத்தை இங்கு வலியுறுத்துவதோடு நிறுத்திக் கொள்கிறேன். 

… … …

 பூர்ஷ்வாப் புரட்சியின் “நிறைவேற்றம்" என்கிற பிரச்சினையைப் பழைய வழியிலே அணுகுவதானது உயிர்ப்புள்ள மார்க்சியத்தை உயிரற்ற எழுத்துக்குப் பலியிடுவதாகும்.

பழைய சிந்தனையின் வழிப்படி, முதலாளித்துவ வர்க்கத்தின் ஆட்சியைத் தொடர்ந்து பாட்டாளி வர்க்கத்தினர் – விவசாயிகள் ஆகியோரது ஆட்சி, இவர்களது சர்வாதிகாரம், வர முடியும், வர வேண்டும்.

ஆனால், உண்மை வாழ்க்கையில் விவகாரங்கள் ஏற்கனவே வேறு விதமாக நடந்தேறியுள்ளன; மிகமிக சுயமான, புதிதான, முன்னென்றும் கண்டிராதபடி ஒன்று மற்றொன்றோடு பின்னிப்பிணைந்து கொண்டுவிட்டது. அக்கம் பக்கமாக இரண்டும் இருந்து வருகிற நிலையில், ஒரே காலத்தில், முதலாளித்துவ வர்க்கத்தின் ஆட்சி (லிவோவ், குச்கோவ் இவர்களின் அரசாங்கம்), பாட்டாளி வர்க்கத்தினர்- விவசாயிகள் ஆகியோரது புரட்சிகர-ஜனநாயக சர்வாதிகாரம் ஆகிய இரண்டும் இருக்கின்றன; இந்தச் சர்வாதிகாரம் தன்னிச்சையாக முதலாளித்துவ வர்க்கத்துக்கு அதிகாரத்தை ஒப்படைத்துக் கொண்டிருக்கிறது, தன்னிச்சையாகவே தன்னை முதலாளித்துவ வர்க்கத்தின் தொங்குசதையாக்கிக் கொண்டு வருகிறது. நடைமுறையில், பெத்ரொகிராதில், அதிகாரம் தொழிலாளர்கள், போர்வீரர்கள் ஆகியோரின் கையில் இருக்கிறது என்பதை மறக்கலாகாது…”

 (செயற்தந்திரம் பற்றிய கடிதங்கள் 10-11)

இந்த முதல் கடிதத்தில் லெனின் வெளிப்படையாகவும் தெளிவாகவும் கூறியிருக்கிறார்.

பாட்டாளி வர்க்கத்தினர் – விவசாயிகள் ஆகியோரின் புரட்சிகர ஜனநாயக சர்வாதிகாரம் ஏற்கனவே தோன்றிவிட்டது, ஆனால் மிகவும் தனிவகைப் பாணியிலே தோன்றியுள்ளது. 

முதலாளித்துவ வர்க்கத்தின் ஆட்சி முடிவடைந்த பிறகு, அடுத்து பாட்டாளி வர்க்கத்தினர் ஆட்சி வர வேண்டும், அதாவது பழைய சிந்தனையின் வழிப்படி, முதலாளித்துவ வர்க்கத்தின் ஆட்சியைத் தொடர்ந்து பாட்டாளி வர்க்க சர்வாதிகார ஆட்சி வர வேண்டும். ஆனால், உண்மையில் விவகாரங்கள் ஏற்கனவே வேறு விதமாக நடந்தேறியுள்ளன, என்கிறார் லெனின்.

இங்கே, லெனின் கூறியதை நன்றாகப் புரிந்து கொண்டுவிட்டால், 1917 ஏப்ரலில் நடந்தது முதலாளித்துவப் புரட்சி, அக்டோபரில் நடத்த வேண்டியது சோஷலிசப் புரட்சி என்கிற எளிய முறையில் லெனின் கூறவில்லை என்பது தெளிவாகிறது. 

பழைய சிந்தனையின்படி, முதலாளித்துவ வர்க்கத்தின் ஆட்சியைத் தொடர்ந்து, அதாவது முதலாளித்துவ உற்பத்தி முறை வளர்ச்சி அடைந்த பிறகு, பாட்டாளி வர்க்க சர்வாதிகார ஆட்சியும் உற்பத்தி முறையும் வரவேண்டும். ஆனால் உண்மையில் நிலைமைகள் வேறுவிதமாக நடந்துவிட்டது என்பதை லெனின் கூறுவதில் இருந்து, பாட்டாளி வர்க்கத்தினர் – விவசாயிகள் ஆகியோரின் புரட்சிகர ஜனநாயக சர்வாதிகாரம் ஏற்கனவே ஈடேறிவிட்டது என்பதின் அடிப்படையில், நடத்த வேண்டியது சோஷலிசப் புரட்சி என்கிற முடிவுக்கு லெனின் வந்துள்ளார் என்பது விளங்குகிறது.

உலகப் போர் மூண்டுள்ள நிலையில் அதனை உள்நாட்டுப் போராக மாற்ற வேண்டும், அவ்வாறு போராடி வெற்றி பெறுவதின் மூலம் சோஷலிச அரசு உருவாக்க வேண்டும் என்கிற லெனினது கருத்தை, பிளெகானவ் அராஜகவாதம் என்றும் பிளாங்கியம் என்றும் குறைகூறினார்.

இதற்கு லெனின் பதிலளித்தார், பிளாங்கியானது சிறுபான்மையோர் ஆட்சியதியாரத்தைக் கைப்பற்றுவதைக் குறிப்பதாகும், இதற்கு மாறாக சோவியத்துகள் மக்களின் பெரும்பான்மையோரது ஆட்சியாகும்.

முதலாளித்துவ வர்க்கத்தின் ஆட்சியிலிருந்து பாட்டாளி வர்க்கத்தின் ஆட்சிக்கு மாறிச் செல்லும் இடைக்கட்டத்தில் அரசும், அரசு அதிகாரமும் அவசியமானது என்பதை அராஜகவாதம் மறுக்கிறது. இதற்கு மாறாக இடைக்காலத்தில் அரசின் அவசியத்தை வலியுறுத்திவாதாடுகிறார் லெனின். 

அராஜகவாதிகளின் ஆயுதப் போராட்டத்துக்கும் கம்யூனிஸ்டுகளின் ஆயுதப் போராட்டத்துக்கும் உள்ள அடிப்படையான வேறுபாட்டை லெனின் இங்கே சுட்டிக்காட்டி உள்ளார்.

முன்னாள் மார்க்சியவாதியான பிளெகானவ் அரசு பற்றிய மார்க்சியக் கோட்பாட்டை புரிந்து கொள்ள அடியோடு தவறிவிடுகிறார். இதை அவர் புரிந்து கொள்ளவில்லை என்பதின் ஆதாரங்கள், அராஜகவாதத்தைப் பற்றிய அவருடைய ஜெர்மன் மொழியில் வெளிவந்துள்ள நூலில் காணப்படுவதை லெனின் சுட்டிக்காட்டுகிறார்.

லெனினது ஆய்வுரைகளில் காணப்படும் கருத்தோடு வேறுபடுவதை பிராவ்தா பத்திரிகையில் யூ.காமெனெவ் எழுதினார். அதில் லெனின் தமது மறுப்பினை தெரிவித்துள்ளார்.

லெனினுடைய பொதுத் திட்டத்தை பொறுத்தவரை, அது தங்களுக்கு ஏற்புடையதாகத் தெரியவில்லை. ஏனென்றால் அது முதலாளித்துவ-ஜனநாயகப் புரட்சி நிறைவடைந்துவிட்டது என்பதில் இருந்து தொடங்குகிறது. இந்தப் புரட்சியை சோஷலிசப் புரட்சியாய் உடனடியாக மாற்ற வேண்டும் என்று திட்டமிடுகிறது என்று யூ.காமெனெவ் லெனின் கருத்தை மறுத்துரைக்கிறார்.

இந்தக் கூற்றில் பெரும் தவறுகள் இருப்பதாக லெனின் கூறுகிறார்.

முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி “நிறைவு” பற்றிய பிரச்சினை தவறான முறையில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இப்பிரச்சினை கருத்தியலாக எளிய முறையிலானப் பார்வையில் வைக்கப்பட்டுள்ளது. “முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி நிறைவடைந்துவிட்டதா” என்று கேட்டுவிட்டு அதற்குமேல் எதையும் சொல்லாதிருப்பது, மிகவும் சிக்கலான எதார்த்த உண்மைக்கு மாறானதாகும். இதனது மற்றொரு பார்வை கவனத்தில் கொள்ளாது தடுத்துக் கொள்வதாகும்.

இந்தப் போக்கானது கோட்பாட்டு அடிப்படையிலும் நடைமுறையிலும் குட்டி முதலாளித்துவ புரட்சிவாதத்துக்கு ஆதரவற்ற முறையில் சரணடைந்து விடுவதாகும் என்று லெனின் விமர்சிக்கிறார்.

உண்மையான அரசாங்கத்துடன் கூடவே பாட்டாளி வர்க்க சோவியத் அரசாங்கம் என்கிற ஒன்று இணையாக இருப்பதைக் காட்டுகிறது என்பதே எதார்த்தம். ஆக இரண்டு அரசாங்கம் இருக்கிறது. இந்த இரண்டாவது அரசாங்கமான சோவியத் தானே ஆட்சியதிகாரத்தை முதலாளித்துவ வர்க்கத்துக்கு விட்டுக்கொடுத்துள்ளது, முதலாளித்துவ அரசாங்கத்துடன் தானே கட்டுண்டுக் கிடக்கிறது.

இந்தத் தனிவகையான பாட்டாளி வர்க்க சோவியத், முதலாளித்துவ அரசாங்கத்தில் இருந்து துண்டித்துக் கொண்டு வந்துவிடுவது சாத்தியமாக்கப்பட வேண்டும் என்றால், குட்டி முதலாளித்துவ கூறுகளிடம் இருந்து, பாட்டாளி வர்க்க கம்யூனிஸ்ட் கூறுகளை உடனடியாகவும் தீர்மானமாகவும், முடிவாகவும் பிரித்திட வேண்டும்.

ஏனென்றால் குட்டி முதலாளித்துவவாதிகள் அனைவரும் வேண்டுமென்றே தேசியவெறியின் பக்கம் சென்றுள்ளனர், முதலாளித்துவ வர்க்கத்தை ஆதரிப்பதுமாகவும் சார்ந்ததாகவும் மாறியுள்ளனர். 

அதனால், குட்டி முதலாளிகளின் கோழைத் தனத்தில் இருந்து பாட்டாளி வர்க்கத்தை விடுவிக்க வேண்டும். சொல்லளவில் அல்லாமல் செயலிலும் குட்டி முதலாளித்துவ செல்வாக்கில் இருந்து விடுவித்து பாட்டாளி வர்க்கத்தை ஒன்றுதிரட்டி உறுதியாக்க வேண்டும் என்கிறார் லெனின்.

முதலாளித்துவப் புரட்சியை சோஷலிசப் புரட்சியாக உடனடியாக மாற்ற லெனின் திட்டமிட்டுள்ளதாக யூ.காமெனெவ் என்பர் குற்றம் சாட்டினார், இதனை லெனின் மறுத்துரைக்கிறார். 

எட்டாவது ஆய்வுரையில், சோஷலிசத்தைப் புகுத்துவது நமது உடனடிப் பணி அல்ல என்று எச்சரிக்கை செய்ததை லெனின் இங்கே நினைவுபடுத்துகிறார்.

தொழிலாளர்களின் சோவியத், பாராளுமன்ற குடியரசைக்காட்டிலும் மக்களுக்கு அதிக பயன் அளிப்பவை என்கிற மெய்யான, அவசர அவசியமான, வாழ்வாதாரமான பிரச்சினை ஆகும். இதனை விட்டுவிட்டு வெற்றுப் பிரச்சினையான, சோஷலிசத்தை உடனடியாக செயல்படுத்துவது பற்றிய பிரச்சினைக்கானதாக கவனம் திசை திருப்படுகிறது என்கிறார் லெனின்.

ஏப்ரல் ஆய்வுரைகளிலும் அதனை ஒட்டி எழுதியக் கட்டுரைகளிலும் லெனின் தேவையான அளவுக்கு விளக்கம் கொடுத்துள்ளார். முதலாளித்துவ குடியரசைக் காட்டிலும் மேலான தொழிலாளர்களின் சோவியத் அரசாங்கம் எதார்த்தமாய் இருக்கையில், பழைய வழியிலான, முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியை நிறைவேற்றுதல் என்பது உயிர்ப்புள்ள மார்க்சியத்தை உயிரற்ற எழுத்துக்கு பலிகொடுப்பதாகும்.

ஆக, ஏப்ரல் ஆய்வுரையின் மூலம் ருஷ்யாவில் நடத்த வேண்டியது சோஷலிசப் புரட்சி என்று கூறியது, ருஷ்யாவில் காணப்பட்ட பிரத்யேக நிலையான இரட்டை ஆட்சி முறையின் அடிப்படையில்தான் என்பது நன்றாகத் தெரிகிறது.

முதலாளித்துவ அரசுக்கு இணையாக மக்களின் ஆதரவைப் பெற்ற சோவியத் அரசு தோன்றிவிட்டது. இதனடிப்படையில்தான் லெனின் ஏப்ரல் ஆய்வுரையின் ஐந்தாவது ஆய்வில், தொழிலாளர்களின் பிரதிநிதிகள் அடங்கிய சோவியத் தோன்றிய பிறகு நாடாளுமன்றக் குடியரசுக்குத் திரும்புதல் என்பது பின்நோக்கிச் செல்வதாகும் என்று கூறியுள்ளார்.

லெனின் மார்க்சியத்தை வறட்டுச் சூத்திரமாகக் கொள்ளாமல் அதன் உயிர்ப்பாற்றலை வளர்த்தார். ஏகாதிபத்திய கட்ட மார்க்சியமாக லெனினியத்தை உருவாக்கினார். மேலும் ஏகாதிபத்திய உலகப் போரை உள்நாட்டுப் போராகமாற்றி, போல்ஷிவிக் கட்சிக்குத் தலைமைத் தாங்கி 1917-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ருஷ்யாவில் சோஷலிசப் புரட்சியை நிகழ்த்தி காட்டினார்.

இங்கே நாம் 1917ஆம் ஆண்டு அக்டோபரில் ருஷ்யாவில் நடைபெற்றது சோஷலிசப் புரட்சி என்று கூறுகிறோம். லெனின் நேரடியாக சோஷலிசப் புரட்சி என்று கூறியுள்ளாரா? அல்லது நாம் அதை அவ்வாறு புரிந்கொண்டுள்ளோமா? என்கிற கேள்வி நமது எம்.இ.எல்.எஸ் (MELS) பயிலரங்கத்திலும் கலந்துரையாடலின் போது கேட்கப்பட்டது.  

எந்த சந்தேகமும் இல்லாமல் அக்டோபர் புரட்சியை, சோஷலிசப் புரட்சி என்றே லெனின் கூறியுள்ளார். இதற்கு லெனின் நேரடியாக கூறியதை பார்ப்போம்.

ருஷ்யப் போல்ஷிவிக் கட்சியின் (ரு.ச.ஜ.தொ.க.) ஏழாவது மாநாடு 1917ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24 முதல் 29 வரை நடைபெற்றது. அந்த மாநாட்டின் தொடக்க நாளான ஏப்ரல் 24ஆம் தேதி லெனின் உரையாற்றினார், அதில் உள்ள ஒரு பகுதியை அப்படியே பார்ப்போம்.

“நாம் ஒரு மாறிச் செல்லும் கட்டத்தில் இருக்கிறோம். முதலாளித்துவ அரசுகளைப் போலன்றி நாம் புதிய வடிவங்களை முன்னணிக்குக் கொண்டுவந்திருக்கிறோம் என்பது தெளிவு. தொழிலாளர் - படைவீரர் ஆகியோரின் பிரதிநிதிகள் அடங்கிய சோவியத்துகள் எந்த நாட்டிலும் இல்லாத ஒர் அரசு வடிவமாகும். இந்த வடிவம் சோஷலிசத்தை நோக்கிய முதல் படிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது மற்றும் சோஷலிச சமூக அமைப்பின் துவக்கத்தில் தவிர்க்க முடியாதது. இது தீர்மானகரமான முக்கியத்துவமுள்ள உண்மை.  

ருஷ்யப் புரட்சி சோவியத்துகளை உருவாக்கியுள்ளது. உலகில் எந்த முதலாளித்துவ நாட்டிலும் இத்தகைய அரசு நிறுவனங்கள் இல்லை, இருக்கவும் முடியாது. இதைத் தவிர்த்த வேறு எந்த ஓர் அரசு அதிகார அமைப்புடனும் எந்த சோஷலிசப் புரட்சியும் செயல்பட முடியாது.

சோவியத்துகள் ஆட்சி அதிகாரத்தை மேற்கொள்ள வேண்டும். ஆனால் ஒரு சாதாரண முதலாளித்துவக் குடியரசை நிர்மாணிக்கும் நோக்கத்திற்காக அல்ல; சோஷலிசத்திற்கு நேரடியாக மாறிச் செல்லும் நோக்கத்திற்காகவும் அல்ல. அவ்வாறு இருக்க முடியாது. அப்படியானால் அதன் நோக்கம் என்ன? இந்த மாறிச்செல்லுதலை நோக்கிய தூலமான முதல் அடிகளை எடுத்து வைக்கும் பொருட்டு சோவியத்துகள் ஆட்சி அதிகாரத்தை மேற்கொள்ள வேண்டும்.” 

(ரு.ச.ஜ.தொ.க (போல்ஷிவிக்)இன் ஏழாவது (ஏப்ர்ல்) அகில ருஷ்ய மாநாடு- 124-125)

இங்கே லெனின், ருஷ்யாவில் நடப்பது சோஷலிசப் புரட்சி என்று கூறியுள்ளார். ஆனால், லெனின் இதில் ஒரு சாதாரண முதலாளித்துவக் குடியரசை நிர்மாணிக்கும் நோக்கத்திற்கல்ல, சோஷலிசத்திற்கு நேரடியாக மாறிச் செல்லும் நோக்கத்திற்காகவும் அல்ல என்று குழப்புகிறாரே, என்று கேள்வி கேட்டுக் கொண்டே செல்லாம். லெனின் குழப்பவில்லை, இதுவே ருஷ்யாவின் பிரத்யேக நிலைமை. இந்த நிலைமையைப் புரிந்து கொள்ளாதவரை குழப்பம் நீடித்துக் கொண்டே இருக்கும். 

சோவியத் என்கிற அரசு வடிவம் சோஷலிசத்தை நோக்கிய முதல் படிகளை அமைத்துக் கொடுத்துள்ளது என்று லெனின் கூறியுள்ளதை நாம் கவனத்தில் கொண்டால் பிரச்சினை எழாது.

ஏப்ரல் ஆய்வுரைக்கு முன்பும் பின்பும் லெனின் எழுதிய நூல்களை சேர்த்துப் படித்தால் கண்டிப்பாக லெனின் கூறுவதை எளிதாகவும் ஒருங்கிணைந்தும் புரிந்து கொள்ள முடியும். 

ருஷ்யாவில் நடைபெற்ற இரட்டை ஆட்சி என்கிற, புதிய சூழ்நிலைமைக்கு ஏற்ப, சோஷலிசப் புரட்சி நடத்த வேண்டும் என்று லெனின் முடிவெடுத்துள்ளார், இந்த சூழ்நிலைமை இதற்கு முன்பு தோன்றியது கிடையாது, அதனால் மார்க்ஸ், எங்கெல்ஸ் எழுதிய நூல்களை மட்டும் படித்து இந்தப் புதிய சூழ்நிலைமையைப் புரிந்து கொள்ள முடியாது. நாம் லெனினிடம்தான் இதற்கான விளக்கங்களைப் பெற முடியும். ஆனால் இந்த முடிவுகளை லெனின் மார்க்சிய வழியில்தான் எடுத்துரைத்துள்ளார் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 

முத்தாய்ப்பாக ஒன்றை மட்டும் கூறி முடித்துக் கொள்கிறேன், 1918ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் நாளில் லெனின் சிறு அறிவிப்பைக் கொடுத்தார், அதற்கானத் தலைப்பு, “சோஷலிச தந்தையர் நாடு ஆபத்தில் உள்ளது!” என்று காணப்படுகிறது, அப்படி என்றால் 1917ஆம் ஆண்டு அக்டோபரில் நடைபெற்றது சோஷலிசப் புரட்சிதான், சோவியத் அரசு என்பது சோஷலிச அரசுதான் என்பது தெளிவாகிறது.

இதைப் புரிந்து கொள்வதில் எந்தப் பிரச்சினையும் உண்மையில் இல்லை, ரஷ்யாவில் தோன்றிய பிரத்யேக நிலைமையைப் புரிந்து கொள்ளாமல், லெனின் ருஷ்யாவில் அமைத்தது “அரசு முதலாளித்துவம்” தான் சோஷலிச அரசு அல்ல என்று சிலர் கூறியதை கேட்டு குழம்புவதுதான் பிரச்சினைக்குக் காரணம். மார்க்சியத்தை வறட்டு சூத்திரமாகப் புரிந்து கொண்டு பேசுபவர்களிடம் இருந்து நாம் விடுபட வேண்டும்.

லெனினைப் புரிந்து கொள்வதற்கு லெனினிடமே செல்ல வேண்டும், லெனினைப் படிப்போம், ருஷ்யப் பிரத்யே நிலையினைப் புரிந்து கொள்வோம், அதனடிப்படையில் லெனின் கூற்றை, தவறாக விளக்குபவர்களின் கருத்துக்களை விமர்சிப்போம்.

அதுமட்டுமல்லாது “சோஷலிச தந்தையர் நாடு ஆபத்தில் உள்ளது!” என்கிற அறிவிப்பில் லெனின், “சோவியத் சோஷலிச குடியரசு மிகப்பெரிய ஆபத்தில் உள்ளது.” (The Socialist Republic of Soviets is in gravest danger.) என்று கூறியுள்ளார்.

சோவியத் சோஷலிச குடியரசு, என்று லெனின் அழைப்பதின் மூலம், சோவியத் என்பது சோஷலிச அரசு என்பதிலும், அக்டோபர் புரட்சி என்பது சோஷலிசப் புரட்சி என்பதிலும் நமக்கு எந்த சந்தேகமும் இல்லாமல் தெளிவைக் கொடுக்கிறது. 

மார்க்சியத்தை வறட்டு சூத்திரமாகப் புரிந்து கொண்டவர்களால் ஏற்படுத்தும் குழப்பத்தை அவர்களிடமே விட்டுவிட்டு, உயிர்த்துடிப்புடன்கூடிய படைப்பாக்கமான மார்க்சியத்தை லெனின் வளர்த்தெடுத்தார் என்பதைப் புரிந்து ஏற்றுக் கொண்டு செயல்படுவோம்.

இன்றைய கம்யூனிஸ்டுகளுக்கும் உழைப்பாளர்களுக்கும் மார்க்சிய-லெனினியமே சிறந்த வழிகாட்டியாக இருக்கிறது.

மார்க்சிய-லெனினிய வழியில் செயல்படுவோம் அதன் வழியில் வெற்றி பெறுவோம் என்று கூறி, இன்றைய வகுப்பை முடித்துக் கொள்கிறேன்.

லெனினது ஏப்ரல் ஆய்வுரைகள்

அ.கா.ஈஸ்வரன்

9884092972

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு

லெனின் தேர்வு நூல்கள் (12 தொகுதிகள்) - சிறப்பு விலை ரூ.2500 ல் பெற தொடர்பு கொள்ளவும்

95437 38415