ஈரானின் அணு ஆயுதம் ஏகாதிபத்தியங்களின் பேரழிவும், பேரதிகாரமும்
சமரன்
இரண்டாம் உலகப் போரின் முடிவில் இத்தாலியும், ஜெர்மனியும் வீழ்ந்த பின்னர், ஜப்பானும் அதன் இறுதி நாட்களை எட்டிக்கொண்டிருந்த வேளையில், அமெரிக்கா தனது உலக மேலாதிக்கத்தை நிறுவும் பொருட்டு ஆகஸ்ட் 1945ல் ஹிரோஷிமாவில் "லிட்டில் பாய்" என்ற அணு குண்டையும், நாகசாகியில் "ஃபேட் மேன்" என்ற அணு குண்டையும் வீசி பல இலட்சம் மக்களை கொண்றது. அதன் பின்னர் ஏகாதிபத்தியங்கள் தனது மேலாதிக்கத்தை நிறுவ பிராந்திய போர்களையும் பதிலிப் போர்களையும் நடத்தி உலக மேலாதிக்கத்தை தக்க வைக்க போராடி வருகின்றன. அந்த மேலாதிக்கப் போர்களை மூடிமறைக்க "உலக அமைதியைக் காப்பது", "ஜனநாயகத்தைக் காப்பது", "அணு ஆயுத அச்சுறுத்தல்", "தீவிரவாதத்தை ஒழிப்பது" என்று பல முகமூடிகளை அணிந்து இந்த ஏகாதிபத்தியங்கள் தங்களுக்குள்ளும், மூன்றாம் உலக நாடுகளின் மீதும் ஆதிக்கம் செலுத்த பல்வேறு அரசியல் பொருளாதார இராணுவ நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதற்கு பின் ஒளிந்திருப்பது ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான மறுபங்கீட்டுப் போட்டியே.
அதன் ஒரு பகுதியாக 2025ல் இஸ்ரேல்-ஈரான் யுத்தமானது ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான ஒரு மறுபங்கீட்டுப் போட்டியாகும். அணு ஆற்றலின் பெயரில் நடைபெறும் ஏகாதிபத்தியங்களின் ஏகபோகத்தின் - நிதி மூலதன ஆதிக்கத்தின் முகத்தை மீண்டும் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது. இந்தப் போருக்கு அமெரிக்க-இஸ்ரேல் கூட்டணி முன்வைக்கும் காரணம், ஈரான் "யுரேனியத்தை செறிவூட்டி அணு ஆயுதத்தை உருவாக்கும் கடைசிக் கட்டத்தில்" இருப்பதாகக் கூறுவதே ஆகும். ஆனால் இந்தக் குற்றச்சாட்டு எவ்வளவு உண்மை? அல்லது இது ஒரு புதிய ஏகாதிபத்தியப் போருக்காக தீட்டப்பட்ட சூழ்ச்சியா?
உண்மையில், இந்த குற்றச்சாட்டுகள் ஏகாதிபத்திய அரசியலின் ஒரு ஆயுதம் மட்டுமே. அமெரிக்காவும் அதன் முன்னாள் கூட்டாளி முகாமான ஐரோப்பிய கூட்டு நாடுகளும், ஈரான் மீது விதிக்கப்பட்டு வரும் பொருளாதாரத் தடைகள், தொழில்நுட்பத் தடைகள், போர்முனை மிரட்டல்கள் ஆகியவற்றின் பின்னணியில் ஏகாதிபத்திய ஏகபோக நிதி மூலதன ஆதிக்க அதிகாரத்தின் முன்னணி முரண்பாடுகளே நிலைபெற்றிருக்கின்றன. ஈரான் அமைதிப் பயன்பாட்டுக்காக அணு ஆற்றலை வளர்த்து வருவதாக தொடர்ந்து 25 வருடங்களாக கூறிவருவதை, அமெரிக்க - ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள் "அணு ஆயுதத் தயாரிப்பு" என்று பரப்புரை செய்வதன் மூலம், ஒரு மூன்றாம் உலக நாட்டின் உரிமையை உலக அமைதிக்கான பாதிப்பாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இது மட்டுமல்ல, அமெரிக்கா தனது "சுரங்க தகர்ப்பு" (bunker buster) குண்டுகளைக் கொண்டு ஈரானின் அணு உலைகளை இலக்கு வைத்து தகர்ப்பதும் அதை வெளிப்படையாக அறிவித்திருப்பதும் ஈரானின் அணு ஆற்றல் மீதான கட்டுப்பாடு என்பது பாதுகாப்புக்காக அல்ல, ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கான ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்தப்படுவதை வெளிப்படுத்துகிறது.
25 ஆண்டுகளாக, ஈரான் "அணு ஆயுதத்தை உருவாக்கும் முயற்சி" செய்துவருவதாகத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டு எந்த ஆதாரத்தையும் சரியாக அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. மாறாக, இது ஒரு புதிய காலனியத்துவ நடவடிக்கையின் அரசியல் முகமூடியாக அமெரிக்க - ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள் பயன்படுத்திக் கொண்டே வருகிறார்கள். ஈரான் தொடர்ந்து வலியுறுத்துவது என்னவென்றால், அதன் அணு ஆராய்ச்சிகள் அமைதிப் பயன்பாட்டுக்காகவே - மின்சாரம் உற்பத்தி, மருத்துவ ஆராய்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி - என்பதே. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளும் இஸ்ரேலும் அணு ஆற்றலையும் அணு ஆயுதத்தையும் வைத்துக்கொண்டு, ஈரானின் அணு ஆற்றல் உரிமையை ஒரு அச்சுறுத்தலாக தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
ஈரானின் அணு ஆற்றல் வரலாறு: காலனிய ஆதரவு முதல் தேசிய எழுச்சி வரை
ஈரானின் அணு ஆற்றல் திட்டங்கள், 1970களில், மொஹமத் ரேசா பஹ்லாவி ஆட்சியில், அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் புதிய காலனிய நிர்வாகத்தின் கீழ் ஆரம்ப நிலை செயல்பாட்டுக்கு வந்தது. அமெரிக்காவின் பாதுகாப்புடன் நடத்தப்பட்ட இந்த ஆட்சி, மேற்கத்திய நிறுவனங்களுக்கு ஈரானின் இயற்கை வளங்களையும், அரசியல் ஆதிக்கத்தையும் திறந்து விட்டது.
இந்த சூழலில்தான், 1974இல் ஈரான், மேற்கு ஜெர்மனியின் கிராப்ட்வெர்க் யூனியன் (சீமென்ஸ் துணை நிறுவனம்) உடன் பூஷேரில் இரண்டு 1200 மெகாவாட் அணு உலைகளைக் கட்டும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. பிரான்ஸின் ஃப்ரமாடோம் நிறுவனத்துடனும் இரண்டு கூடுதல் உலைகளைக் கட்டுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்தன. மேலும், ஐரோப்பிய யுரேனிய செறிவூட்டல் ஆலையான யூரோடிஃப் திட்டத்தில் ஈரான் 1 பில்லியன் டாலர் முதலீடு செய்தது. இது எதை காட்டுகிறது? அமெரிக்காவும் ஐரோப்பாவும், தங்களுக்கு விசுவாசமான ஒரு ஆட்சியின் கீழ், அணு தொழில்நுட்பத்தை ஈரானுக்கு ஊக்குவித்தன என்பதைத்தான்.
1979ஆம் ஆண்டு ஈரானிய இஸ்லாமியப் புரட்சி என்பது அமெரிக்க ஆதரவு ஷா முடியாட்சியை அதாவது பஹ்லாவி மன்னரை அகற்றி, அயத்தோலா கொமெய்னியின் தலைமையில் ஈரான் இஸ்லாமியக் குடியரசை நிறுவிய ஒரு நிகழ்வாகும். இந்த ஆட்சி மாற்றத்தில் இடதுசாரி அமைப்புகள், இஸ்லாமியக் குழுக்கள் மற்றும் ஈரானிய மாணவர் இயக்கத்தின் ஆதரவுடன் நடந்தது. (இங்கு புரட்சி என்பது மார்க்சிய வரையறையில் அமைந்த சொல்லாடல் அல்ல. இங்கு குறிப்பிடப்படும் புரட்சி என்பது வெறும் ஆட்சி மாற்றமே. "இஸ்லாமியப் புரட்சி", "இஸ்லாமியப் புரட்சிகரப் படை" என்று பெயர் வைத்துக் கொண்டதால், ஒரு பெயர்ச் சொல்லாக மட்டுமே குறிப்பிடப்படுகிறது என்பதை கருத்தில் கொண்டு படிக்க கோருகிறோம்.) இது மேற்கத்திய ஏகாதிபத்தியத்தின் மிகப்பெரிய தோல்வி. அதன் விளைவாக, ஈரானின் அணு ஆற்றல் திட்டங்கள் திடீரென முடக்கப்பட்டன. அமெரிக்கா மற்றும் ஐரோப்பா, தங்கள் தொழில்நுட்ப உதவிகளை நிறுத்தின. ஆனால் அதற்கு முன் அவர்களின் இலாபத்திற்காக அணு ஆற்றல் துறையை ஈரானில் கட்டியமைக்க விரைந்த அமெரிக்க - ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள், இப்போது "ஈரானில் அணு தொழில்நுட்பம் வேண்டாம்" என்று முட்டுக்கட்டை போடத்தொடங்கின.
1980களில், ஈராக்-ஈரான் போரின்போது, ஈராக் நாடு, ஈரானின் பூஷேர் அணு உலைகளை மீண்டும் மீண்டும் குண்டு வீசி சேதப்படுத்தியது. இந்த போருக்கு பின்னால் இருந்தது அமெரிக்காவின் மறைமுக ஆதரவு. அமெரிக்கா சதாமை ஆதரித்த காலம். சதாமை ஊக்குவித்து, ஈரானை பலவீனப்படுத்த முயன்றது. இது ஏகாதிபத்தியத்தின் வழக்கமான உத்தி: ஒரு மூன்றாம் உலக நாட்டின் சுயேட்சையை அழிக்க, அதன் அண்டை நாட்டை ஆயுதமாக்குவது.
ஈராக்-ஈரான் போருக்குப் பின், ஈரான் தனது அணு ஆற்றல் திட்டங்களை மீட்டெடுக்க தொடங்கியது. மேற்குலகம் தன்னைத் துண்டித்தபோது, சீனாவுடன் 1985 மற்றும் 1990களில் இரண்டு தொழில்நுட்ப உடன்பாடுகளை மேற்கொண்டது. 1995இல் ரஷ்யாவுடன் அணு ஆற்றல் திட்டத்தில் கூட்டணி அமைத்தது. அப்போது சீனா சோசலிசக் கட்டமைவில் இருந்து முதலாளித்துவ மீட்சியைக் கொண்டுவரும் காலம். இரசியா, சோவியத் சமூக ஏகாதிபத்தியமாக இருந்து வெளிப்படையான ஆனால் பலவீனமான முதலாளித்துவ ஏகாதிபத்தியமாக இருந்த காலம். இதன் மூலம் மேற்கு ஏகாதிபத்திய ஏகபோகத்தின் கட்டுப்பாடுகளை தகர்த்து முன்னேறியது.
2002இல், ஈரான் உலகுக்கு அறிவித்தது: நடான்ஸ் மற்றும் அராக் என இரண்டு அணு உலைகள் தனது கட்டுமானத்தில் உள்ளன என்று உலகுக்கு அறிவித்தது. இது ஒரு வெளிப்படையான அறிவிப்பு, அமைதிப் பயன்பாட்டுக்கான திட்டம் என்பதை உறுதி செய்வதற்காக. ஆனால் இதை மேற்குலகம் உலக அமைத்திக்கான "அச்சுறுத்தலாக" மாற்றியது.
ஏகாதிபத்திய தலையீடுகள்: இரட்டை நிலைப்பாடும், போலி உலக அமைதியும்
நடான்ஸ் மற்றும் அராக் அறிவிப்புகளுக்குப் பின், அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ஈரான் மீது உடனடியாக அழுத்தத்தைத் தொடங்கின. இந்த காலகட்டம் செப்டம்பர் 11, 2001க்குப் பிறகான, அதாவது அமெரிக்காவின் இரட்டை கோபுரத் தாக்குதலுக்கு பிறகான காலம். அமெரிக்காவின் கிளிண்டன் அரசாங்கம் ஈராக், ஈரான், வடகொரியா, க்யூபா மற்றும் லிபயா ஆகிய ஐந்து நாடுகளை "ரௌடி அரசுகள்" என்று அறிவித்தது. இந்த நாடுகள் அனைத்தும் உலக அமைதிக்கு அச்சுறுத்தல் என்று பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டிருந்தது. ஆப்கன் மீதும் ஈராக் மீதும் போர் தொடுத்தது. ஈராக் பேரழிவு ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும், அணு ஆயுதம் வைத்திருப்பதாகவும் மீண்டும் மீண்டும் இந்த பொய்யை பல்வேறு உலக நிறுவனங்கள் மூலமும் கூட்டணி நாடுகள் மூலமும் கட்டவிழ்த்து விடப்பட்டது. அமெரிக்கா கட்டி அமைத்த "உலக அமைதியை" மீட்டெடுக்க ஆப்கனையும் ஈராக்கையும் பின்னாட்களில் லிபியாவையும் நாசப்படுத்தி பல இலட்சம் மக்களை காவு வாங்கியது. இதில் பெரும்பான்மையானவர்கள் பெண்களும் குழந்தைகளும். ஈரானையும், வடகொரியாவையும் தாக்கப்போவதாக அறிவித்தது. அதனால் அக்டோபர் 2003ல் அமெரிக்க ஏகாதிபத்திய நெருக்கடியை தணிக்க, ஈரான் மூன்று ஐரோப்பிய நாடுகளுடன் (பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் - E3) ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது: அதன் யுரேனிய செறிவூட்டல் நடவடிக்கைகளை இடைநிறுத்துவதாகவும், ஐ.நா. அணுசக்தி முகமையின் (IAEA) கூடுதல் நெறிமுறையை ஏற்றுக்கொள்வதாகவும் உடன்பட்டது. இது ஏகாதிபத்தியங்களின் நெருக்குதலுக்கு ஈரானிய ஆளும் வர்க்கத்தை அடிபணிய வைக்கும் ஒரு முயற்சியாகப் பார்க்கப்பட்டது.
ஆனால், ஐரோப்பிய நாடுகள் (E3) அதன் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஈரானுக்கு தொழில்நுட்ப உதவி, பொருளாதார தளர்வுகள் எதுவும் வழங்கப்படவில்லை. அமெரிக்காவை மீறி அந்த நாடுகள் செயல்பட தயாராக இல்லாத நிலையில் ஈரான் தனது அணு திட்டங்களை மீண்டும் தொடங்குவதாக அறிவித்தது. அதற்கு அமெரிக்கா இதை "உடன்பாட்டை மீறுதல்" என்று ஈரானை குற்றம் சாட்டியது.
2006இல், P5+1 (ஐந்து நிரந்தர பாதுகாப்பு சபை உறுப்பு நாடுகள் + ஜெர்மனி) ஈரானுக்கு ஒரு "ஊக்கத்தொகை" திட்டத்தை முன்வைத்தது: இதில் செறிவூட்டலை நிறுத்தினால், பொருளாதார தடையை அகற்றுவதாக வழிமொழிந்தது. ஆனால் இது ஒரு நிபந்தனையுடன் கூடிய அடிமைத்தனம். ஈரான் தனது தொழில்நுட்ப வளர்ச்சியை நிறுத்த வேண்டும், அதற்குப் பதிலாக மேற்குலகத்தின் கருணையை நம்ப வேண்டும். அதாவது மேற்குலகத்தை அண்டிப் பிழைக்கவேண்டும் என்பதுதான் எல்லாவற்றுக்கும் பின் ஒளிந்துள்ள அரசியல்.
ஆனால் ஈரான் இதை ஏற்கவில்லை. 2013இல், அது தனது ஐஆர்-1 மற்றும் ஐஆர்-2எம் மையவிலக்குகளை (Centrifuges) நிறுவியதாக அறிவித்தது. 5% செறிவூட்டப்பட்ட 9700 கிலோ யுரேனியமும், 20% செறிவூட்டப்பட்ட 370 கிலோ யுரேனியமும் கையிருப்பில் வைத்திருப்பதாக அறிவித்தது. தொடர்ந்து நிலைத்திருந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள தங்கள் அணு ஆற்றல் வளர்ச்சியைப் பகடைக் காயாகப் பயன்படுத்தி ஏகாதிபத்திய நாடுகளுடன் பேச்சுவார்த்தைக்கு நெருக்கடி கொடுத்தது. ஆனால் மேற்குலகம் இதை "அணு ஆயுதத்திற்கான தயாரிப்பு" என்று சித்தரித்தது - மீண்டும் மீண்டும் பொய்யான பரப்புரையை தொடர்ந்து கட்டிவந்தது.
ஈரானின் அணு ஆற்றல் திட்டம், அந்நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சியின் தொடர்ச்சி. 1970களில் அமெரிக்காவும் ஐரோப்பாவும் ஈரானில் தனது பொம்மை ஆட்சி இருந்தவரை அதை ஆதரித்து, பின்னர் அந்த ஆட்சியைத் தூக்கியெறிந்த பிறகு அதை எதிர்த்து, இப்போது அழிக்க முயல்வது ஏகாதிபத்தியத்தின் இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறது. அணு ஆற்றல் என்பது ஒரு தொழில்நுட்பம் மட்டுமே. அது அமைதிக்கும் பயன்படும், பேரழிவுக்கும் பயன்படும். ஆனால் இஸ்ரேல், அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகள் அணு ஆயுதங்களை வைத்திருக்கின்றன - ஆனால் அவர்கள் வைத்திருந்தால் உலக அமைதிக்கு "பாதுகாப்பு" என்று சொல்லப்படுகின்றன. அதை மற்ற நாடுகள் வைத்திருந்தால் - ஈரான் அமைதிப் பயன்பாட்டுக்காக அதை வளர்த்தால் - அது "ஆபத்து" என்று பிரச்சாரம் செய்கின்றன. இது ஏகாதிபத்தியத்தின் புவிசார் ஆதிக்க உத்தி. தொழில்நுட்ப முன்னேற்றத்தை தடுப்பது, சார்புத்துவத்தை நிலைநாட்டுவதே! புதிய காலனியத்தை இறுக்குவதே!!
கூட்டு விரிவான செயல் திட்டம் (JCPOA): ஒரு 'சமாதான' உடன்பாட்டின் முகமூடி
2013 அக்டோபரில், ஈரானின் ஹசன் ரூகானி அரசாங்கமும், றி5+1 (ஐந்து நிரந்தர ஐ.பி.சி உறுப்பு நாடுகள் + ஜெர்மனி) ஏகாதிபத்திய கூட்டணியும், பல ஆண்டுகள் நீடித்த பேரத்திற்குப் பின் ஒரு தற்காலிக உடன்பாட்டை எட்டின. இது கூட்டு செயல் திட்டம் (Joint Plan of Action - JPOA) என்று அழைக்கப்பட்டது. இதன் முக்கிய நோக்கம், ஈரானின் யுரேனிய செறிவூட்டல் திட்டத்தை "கட்டுப்படுத்துவதாக" காட்டப்பட்டது. ஆனால் உண்மையில், இது ஒரு புதிய காலனிய உடன்பாட்டின் தொடக்கம் மட்டுமே. அதன் அரசியல் பொருளாதார செயல்பாடுகளை அமெரிக்க - ஐரோப்பிய நலன்களுக்கு உட்பட்டு செயல்பட நெருக்குவதாகும்.
JPOA க்கு கீழ், ஈரான் பின்வருவனவற்றைச் செய்ய ஒப்புக்கொண்டது:
- 20% செறிவூட்டப்பட்ட யுரேனியம் உற்பத்தியை நிறுத்துவது,
- ஏற்கனவே உள்ள 20% செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை நீர்த்து வைப்பது,
- IAEA கண்காணிப்பை அதிகரிப்பது,
- பதிலாக, P5+1 நாடுகள் கொடுத்த உறுதிமொழிகள் மிகவும் குறைந்தன,
- சில பொருளாதாரத் தடைகளைத் தளர்த்துவது,
- வெளிநாடுகளில் முடக்கப்பட்ட 4.2 பில்லியன் டாலர் ஈரானிய சொத்துக்களை திருப்பித் தருவது,
- புதிய தடைகளை உடனடியாக விதிக்காமல் இருப்பது
இது எதை காட்டுகிறது? ஈரான் தனது சொந்த தொழில்நுட்ப உரிமைகளை நிறுத்தினால், ஏகாதிபத்தியங்கள் சில பொருளாதார தளர்வுகளை வழங்குவதாக ஒப்புக்கொண்டன. புதிய காலனியாக செயல்பட்டால் சலுகைகள் அறிவிக்கப்படும்; இல்லையென்றால் அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளையும் போர்களையும் சுமத்தும்.
JCPOA: ஏகாதிபத்தியத்தின் போலி சமாதான உடன்பாடு
ஜூலை 14, 2015இல், இந்த தற்காலிக ஒப்பந்தம் கூட்டு விரிவான செயல் திட்டம் (Joint Comprehensive Plan of Action - JCPOA) என்ற முழுமையான உடன்படிக்கையாக மாற்றப்பட்டது. இது உலக ஊடகங்களால் "சமாதானத்தின் வெற்றி" என்று கொண்டாடப்பட்டது. ஆனால் மார்க்சிய-லெனினிய பார்வையில், இது ஒரு மூன்றாம் உலக நாட்டின் சுயச்சார்பிலிருந்து புதிய காலனியத்தில் சிக்க வைக்கும் ஒரு காலவரையறை உடன்பாடு மட்டுமே.
ஈரானுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்:
- 10 ஆண்டுகளுக்கு 5060 IR-1 மையவிலக்குகளுக்கு மேல் இயக்கக் கூடாது.
- 15 ஆண்டுகளுக்கு யுரேனிய செறிவூட்டல் 3.67% க்குள் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
- செறிவூட்டப்பட்ட யுரேனிய இருப்பு 300 கிலோவுக்கு மேல் இருக்கக் கூடாது.
- ஃபோர்டோவில் செறிவூட்டல் தடை - 15 ஆண்டுகளுக்கு.
- அராக் கனநீர் உலையை மறுவடிவமைப்பு செய்து, புளுட்டோனியம் உற்பத்தியைத் தடுத்தல்.
- IAEA க்கு கூடுதல் நெறிமுறைகள் மற்றும் வெளிப்படைத்தன்மை உறுதிப்படுத்தல்.
P5+1 நாடுகளின் உறுதிமொழிகள்:
- ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடைகளை நீக்குதல்.
- ஐரோப்பிய ஒன்றியத் தடைகளை நீக்குதல்.
- அமெரிக்கா ஈரானின் ஆற்றல், வங்கி, பொருளாதாரத் துறைகளுக்கு எதிரான தடைகளை நீக்குதல்.
இது மட்டும் இருந்தால், இது ஒரு தற்காலிக சமரசமாக இருக்கலாம். ஆனால் உண்மையில், இந்த உடன்பாடு ஈரானின் தொழில்நுட்பத்தை முடக்குவதற்கான ஒரு கருவி மட்டுமே. அமெரிக்கா மற்றும் ஐரோப்பா தனது தொழில்நுட்ப ஆதிக்கத்தை பாதுகாப்பதற்காக, ஒரு வளரும் தேசத்தின் அணு ஆற்றல் வளர்ச்சியை காலவரையறையுடன் கட்டுப்படுத்தியது.
மேலும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 2231 மூலம், JCPOAவை சட்டபூர்வமாக்கியது. ஆனால் இதில் ஒரு முக்கிய முரண்பாடு இருந்தது: ஈரானுக்கு எதிரான ஆயுதத் தடை 5 ஆண்டுகளுக்கும், ஏவுகணைத் திட்டக் கட்டுப்பாடுகள் 8 ஆண்டுகளுக்கும் நீட்டிக்கப்பட்டன. இது எதை காட்டுகிறது? அணு ஆற்றல் மட்டுமல்ல, மூன்றாம் உலக நாட்டின் பாதுகாப்பு திறன்களையும் கட்டுப்படுத்த மேற்குலகம் முயன்றது என்பதைத்தான்.
அமெரிக்க - ஐரோப்பிய அணிக்கு போட்டியாக இரசிய - சீன முகாம்
2010 - 2020ன் முதல் பகுதியில் ஆரம்பித்து இரசிய - சீன முகாம் போட்டி ஏகாதிபத்தியங்களாக வளர்ந்து வந்தன. அமெரிக்க தலைமையிலான நேட்டோ அணி தங்களின் அனைத்து சக்திகளையும் மத்திய கிழக்கு போர்களிலும் ஆட்சி கவிழ்ப்புகளிலும் பிரதானமாக விரயம் செய்துவந்ததும் 2008க்குப் பிறகான பெரும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளமுடியாத சிக்கலில் சிக்குண்டுவிட்ட நேரத்தில் இரசியாவும் சீனாவும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பல்வேறு நாடுகளை தங்கள் நிதி மூலதன ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தன. சீனா முழு ஏகாதிபத்தியமாக பரிணமித்து இரசியாவுடன் இணைந்து மாற்று இராணுவ - பொருளாதார கூட்டமைப்புகளை ஏற்படுத்தின. பிரிக்ஸ் - SCO (ஷாங்காய்) கூட்டமைப்புகளை ஏற்படுத்தி பலப்படுத்தின. பலவீனமடையும் அமெரிக்க தலைமையிலான நேட்டோ அணிக்கும் பலமடைந்து வந்த இரசிய - சீன அணிக்கும் இடையில் 2010-2020களின் பிற்பகுதியில் பனிப்போர் ஆரம்பித்துவிட்டது; இரசியா, பல்வேறு நாடுகளில் அமெரிக்காவின் ஆட்சி கவிழ்ப்புகளுக்கு சவால்விடுத்து தனது ஆதிக்கத்தை நிறுவ முயற்சித்தது அல்லது நிலை நிறுத்தியது. அதன் தொடர்ச்சியாக இரசிய-சீன கூட்டணி ஈரானை தனது அச்சில் கொண்டு வந்தது. இரசிய - சீன கூட்டணியின் மேலாதிக்கத்தில் ஈரான் மத்திய கிழக்கில் துணை மேலாதிக்க சக்தியாக மாற்றப்பட்டது.
அமெரிக்காவின் அடாவடி: ஈரானுடனான உடன்பாட்டை உதைத்தெறிந்தது
2018 மே 8, டொனால்ட் ட்ரம்ப், தனது முதல் ஆட்சிக்காலத்தில், JCPOAவிலிருந்து தன்னிச்சையாக அமெரிக்கா வெளியேறுவதாக அறிவித்தார். அவர் கூறிய காரணங்கள்:
- "ஈரான் செறிவூட்டலில் வெளிப்படைத்தன்மை காட்டவில்லை"
- "ஏவுகணைத் திட்டங்களை கட்டுப்படுத்தவில்லை"
- "ஹிசபுல்லா, ஹவுதி போன்ற எதிர்ப்பு இயக்கங்களுக்கு ஆதரவு அளிக்கிறது"
மேற்கூறப்பட்ட காரணங்களிலிருந்து நாம் கவனிக்க வேண்டியது, ஈரானின் தொழில் நுட்பமும், அதன் பிராந்திய துணை மேலாதிக்கமும் அமெரிக்காவின் புவிசார் அரசியல் மேலாதிக்க தலைமைக்கு முட்டுகட்டையாக இருக்கிறது. அமெரிக்கா தனது ஆயுதங்களை மத்திய கிழக்கில் பல பில்லியன் டாலர்களுக்கு விற்கிறது; தனது துணை மேலாதிக்க சக்தியாக இஸ்ரேலையும், சவுதி அரேபியாவையும் வளர்த்துவிட்டது; இந்த துணை மேலாதிக்க சக்திகள் தனது ஆதரவு குழுக்களுக்கு நிதி உதவியையும், ஆயுதங்களையும் கொடுப்பதற்கு எந்த எதிர்ப்பும் இல்லை. ஆனால் ஈரானுக்கு மட்டும் இவ்வளவு எதிர்ப்பு என்பதன் பின்னுள்ள அரசியல் பொருளாதாரத்தை நம்மால் உணர முடிகிறதல்லவா. அதற்கு உண்மையான காரணம்: ஈரான் தனது தொழில்நுட்பத்தில் குறிப்பிட்ட வளர்ச்சி அடைந்தது என்பது உண்மை என்றாலும் இரசிய - சீன முகாம் சார்பை பெருமளவுக்கு வளர்த்து வருகிறது. இதனால் அதன் உலக மேலாதிக்கத்திற்கும் அதன் மத்திய கிழக்கு ஆதிக்கத்திற்கும் பெரும் சவாலாக இன்று ஈரானின் துனை மேலாதிக்கம் திகழ்கிறது. இஸ்ரேலை பலவீனப்படுத்த ஹமாசுக்கும், இஸ்ரேலைச் சுற்றியுள்ள நாடுகளைக் கொண்டு மிரட்ட லெபனானில் ஹிஸ்புல்லாவுக்கும், ஈராக்கில் ஷியா பிரிவு ஆயுத கலகக் குழுக்களுக்கும் சிரியாவில் ஆசாத் அரசுக்கும் யேமனில் ஹவுதிகளுக்கும் ஆயுத உதவிகளையும், நிதி உதவிகளையும் மற்றும் பல்வேறு இராஜதந்திர உதவிகளையும் செய்து வருகிறது. இப்போது சீனாவின் தலையீட்டின் கீழ் சவுதி அரேபிய முடியாட்சியுடனும் உடன்படிக்கை ஏற்படுத்திக்கொண்டது; அமெரிக்க முகாமுக்கு போட்டியாக இரசிய - சீன முகாமின் துணையுடன் ஈரான் வளர்ந்து வருவதை வளர்த்துக் கொள்வதையும் அமெரிக்கா எப்போதும் ஏற்க மறுக்கிறது. JCPOA அமலில் இருந்தபோதும், IAEA தொடர்ந்து ஈரான் உடன்பாட்டை மீறவில்லை என்று அறிக்கை வெளியிட்டது. ஆனால் அமெரிக்கா அதை பொருட்படுத்தவில்லை.
ட்ரம்பின் வெளியேற்றத்துடன், அமெரிக்கா "அதிகபட்ச அழுத்தம்" (Maximum Pressure) என்ற புதிய போர்க் கொள்கையைத் தொடங்கியது:
- ஈரானுக்கு எதிரான அனைத்து பொருளாதாரத் தடைகளும் மீண்டும் அமல்படுத்தப்பட்டன.
- ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி முழுவதும் தடை செய்யப்பட்டது.
- உலக வங்கிகள் ஈரானுடன் பரிவர்த்தனை செய்வதை தடுக்க அழுத்தம் கொடுக்கப்பட்டது.
இது ஒரு பொருளாதாரப் படையெடுப்பு. இதன் நோக்கம், ஈரானின் பொருளாதாரத்தை முடக்கி, அதன் அரசியல் துணை மேலாதிக்கத்தை உடைக்கவே.
ஐரோப்பிய முகாம்:
அமெரிக்கா எப்போதும் JCPOA உடன்படிக்கைக்கு முட்டுக்கட்டையாகவே இருந்தது. ஆனால் முதலில் இருந்தே E3 நாடுகள் - பிரான்சு, ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகள்தான் இதில் முழு மூச்சாக இருந்தனர். E3 நாடுகள் அக்டோபர் 2003ம் ஆண்டு அமெரிக்கா இல்லாமல் ஈரானுடன் ஒப்பந்தத்தில் ஈடுபட்டனர். அதை தெஹ்ரான் பிரகடனம் என்று அழைத்தனர். அமெரிக்காவின் இராணுவ தலையீட்டை தவிர்க்க அவசரமாக ஈரானுடன் இராஜ தந்திர ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. ஏனென்றால், அமெரிக்காவின் ஈராக், ஆப்கன் மீதான இராணுவ தலையீட்டால் அமெரிக்காவிற்கு மேலதிக உடனடி அனுகூலத்தையும், மற்ற நேட்டோ அணிக்கு மேலாதிக்க பின்னடைவையும் ஏற்படுத்தியது. இதனால் அமெரிக்காவின் முதல் நிலை மேலாதிக்க முயற்சியை தவிர்க்க ஐரோப்பிய நாடுகள் முயற்சி செய்தது. அதை மேலும் வளர்த்து நவம்பர் 2004ல் பாரிஸ் ஒப்பந்தமாக விரிவுபடுத்தினர். பின்னர் மற்ற உறுப்பு நாடுகளையும் இணைத்து (P5+1) இறுதியாக JCPOA ஒப்பந்தமாக விரிவாக்கினர். முதலில் இருந்தே இந்த ஐரோப்பிய நாடுகளின் முன் கையெடுப்பை சிக்கலாக கருதியது அமெரிக்கா. அதனால் தவிர்க்க முடியாமல் 2006ல் ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பந்தத்தில் பயணம் செய்து, பயணகாலம் முழுவதும் ஐரோப்பிய முன்னெடுப்புகளுக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டது. ஐரோப்பிய நாடுகள் ஈரானுக்கு கொடுத்த வாக்குறுதிகளை செயல்படுத்த விடவில்லை. அமெரிக்கா, தொடர்ந்து ஐரோப்பா நாடுகளுடன் இருந்தே அதன் மேலாதிக்கத்திற்கு குழி பறித்தது. பின் ஐரோப்பிய நாடுகளால் ஏதும் செய்ய முடியா நிலை அடைந்தவுடன், 2018ல் முழுவதுமாக முறித்துக்கொள்வதாக டிரம்ப் அறிவித்தார். அமெரிக்காவின் பொருளாதாரத் தடையை தகர்க்க E3 நாடுகள் அமெரிக்காவின் மேலாதிக்கத்திலுள்ள SWIFT பண பரிவர்த்தனை முறைக்கு மாற்றாக NSTEX (The Instrument in Support of Trade Exchanges) என்ற பண பரிவர்த்தனை முறையை ஜனவரி 2019ல் உருவாக்கியது. இதில் மேலும் பெல்ஜியம், டென்மார்க், பின்லாந்து, நெதர்லாந்து, நார்வே, ஸ்பெயின் மற்றும் ஸ்வீடன் ஆகியவை பங்குதாரர்களாக பின்னர் இணைந்தன. ஆனால் நடைமுறையில் அமெரிக்க மேலாதிக்கத்தை உடைத்தெறிந்து புதிய முறைக்கு செல்லுமளவுக்கு ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளின் சுயச்சார்பு போதாமையும், 2020ல் கோவிட் பெருந்தொற்றும் அதைத் தொடர்ந்து இரசிய - உக்ரைன் போரில் ஈரானின் இரசிய ஆதரவும் ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களுக்கு சாத்தியமற்றதாக்கிவிட்டது. அதனால் மார்ச் 2023ல் ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள் இந்த வர்த்தக பரிவர்த்தனை முறையை கலைத்துவிட்டது. இருந்தும் இஸ்ரேல் - ஈரான் போருக்கு ஒரு சில நாட்களுக்கு முன்னரும் E3 நாடுகள் ஈரானுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டது. இந்த போருக்குப் பின்னரும் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. ஐரோப்பிய ஏகாதிபத்தியம் அக்டோபர் 2025ல் ஐ.நா பாதுகாப்பு சபையில் ஈரான் மீதான பொருளாதாரத் தடை தீர்மானத்தை கொண்டு வரப்போவதாக மிரட்டி வருகிறது. ஒரு பக்கம் ஈரானை பணிய வைப்பதுடன் கூடவே யாருடைய மேலாதிக்கத்தை ஈரான் நாட்டின்மீது திணிப்பது என்பதில் அமெரிக்க - ஐரோப்பிய - இரசிய, சீன அணி இடையே பலத்த போட்டி நிலவுகிறது.
ஈரானின் பதில் நடவடிக்கை:
- 2019இல், ஈரான் அறிவித்தது: JCPOAவின் கட்டுப்பாடுகளை கட்டுப்படுத்துவதில்லை. 2020இல், அமெரிக்கா உடன்பாட்டை மீறியதால், ஈரான் அதிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தது.
- இதன் பின்னர், ஈரான் தனது அணு ஆற்றல் திட்டங்களை மீண்டும் முழு வேகத்தில் தொடங்கியது:
- ஐஆர்-2எம், ஐஆர்-4, ஐஆர்-6 போன்ற மேம்பட்ட மையவிலக்குகள் ஆயிரக்கணக்கில் நிறுவப்பட்டன.
- செறிவூட்டல் 20% மற்றும் 60% வரை உயர்த்தப்பட்டது.
- ஃபோர்டோ மற்றும் நடான்ஸ் தளங்களில் செறிவூட்டல் மீண்டும் தொடங்கியது.
ஈரான் தனது தொழில்நுட்ப உரிமையை மீட்டெடுப்பது போன்று தெரிந்தாலும், உண்மையில் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பொருளாதார தடைகளை விலக்கி தனது தரகு முதலாளித்துவ சேவைக்கு அச்சாணி இடுகிறது . ஆனால் மேற்குலகம் இதை "அணு ஆயுதத்திற்கான அச்சுறுத்தல்" என்று சித்தரித்து அதன் தரகு முதலாளித்துவ சேவைக்கு தடை ஏற்படுத்தி வருகிறது. ஏகாதிபத்தியங்களின் இந்த பொருளாதாரத் தடையும், தொழில்நுட்பத் தடையும் சில நேரங்களில் அந்நாட்டு முதலாளித்துவ வளர்ச்சிக்கு அச்சாணியாக அமைகிறது. இந்த தடையால்தான் அணு ஆற்றல் துறையிலும், ஏவுகணை தொழில் நுட்பத்திலும் சில முக்கிய முன்னேற்றத்தை எட்டியுள்ளது ஈரான்.
JCPOA என்பது ஒரு புதிய காலனியாதிக்க சமாதான உடன்பாடு. அது ஈரானின் சுயச்சார்பு தொழில்நுட்ப வளர்ச்சியை காலவரையறையுடன் கட்டுப்படுத்தி, ஐரோப்பிய ஆதிக்கத்தை நிலைநாட்டும் முயற்சியாகும். அமெரிக்கா அதை உதைத்தெறிந்தது - ஏனெனில், ஈரான் அமெரிக்க ஏகாதிபத்திய ஆதிக்கத்தை ஏற்க மறுத்தது. புதிய காலனிய அடிமை ஒப்பந்தத்திற்கு எதிரான போராட்டம் என்பது அணு ஆற்றல் துறையின் தொழில்நுட்பம் மட்டுமல்ல, மூன்றாம் உலக நாட்டின் சுயச்சார்பின் போராட்டமுமாகும். ஆனால் அத்தைகயதொரு போராட்டத்தை ஈரான் ஆளும் வர்க்கம் முன்னெடுக்காமல், சீன-ரஷ்ய முகாமின் சார்புநிலைக்கு செல்கிறது.

அணு ஆயுதம்: ஏகாதிபத்தியத்தின் அடையாளம்
இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் மற்றும் வட கொரியா ஆகிய நாடுகள் மட்டுமே அணு குண்டுகளை வைத்துள்ளன. இதில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து நாடுகள் ஏகாதிபத்திய நாடுகளாக உள்ளதோடு, அவை மற்ற நாடுகளை அணு குண்டுகள் தயாரிப்பதற்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகின்றது. இந்த ஏகாதிபத்திய நாடுகளில் சிலர் ஒவ்வொரு முறையும் மூன்றாம் உலக நாடுகளிடம் முரண்படும்போது அணு குண்டு வீசுவதாக மிரட்டியும் வருகின்றன. இன்றைய சூழ்நிலையில் அணு குண்டுகள் என்பது ஏகாதிபத்தியங்களின் ஏகோபித்த நிலையையே காட்டுகின்றன. இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல், வடகொரியா போன்ற மூன்றாம் உலக நாடுகள் அணு குண்டு வைத்திருப்பதை நாம் பார்க்க முடிகிறது. இவைகள் அமெரிக்க மற்றும் இரசிய ஏகாதிபத்தியத்தின் ஆதரவோடும், ஒரு சில நேரங்களில் முரண்பட்டும் இதை வளர்த்தெடுத்துள்ளனர். இத்தாலி, துருக்கி, பெல்ஜியம், ஜெர்மணி, நெதர்லாந்து போன்ற நாடுகள் அமெரிக்காவின் அணு ஆயுத்தத்தை தறித்து, நிலை நிறுத்துயுள்ளன. இது நேட்டோ குழுவில் இடம்பெற்றுள்ளதால், இரசியாவை எதிர்த்து இங்கு நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இரசிய - உக்ரைன் போருக்கும் பிறகு இரசியா, பெலாரசில் தனது அணுகுண்டை நிலை நிறுத்தியுள்ளது. இதில் இஸ்ரேல் தன்னிடம் அணுகுண்டுகளை வைத்துக்கொண்டு, ஈரானை அணு ஆயுதம் தயாரிக்க முற்படுகிறது என்று கூறி தனது தற்காப்புக்காக தாக்குதல் தொடுப்பதாக கூறுவது அதன் பிராந்திய துணை வல்லாதிக்க வெறியைக் காட்டுகிறது.
அணு குண்டு குறித்து மாவோ:
"அணு குண்டு என்பது ஒரு காகிதப் புலியாகும், இது அமெரிக்க பிற்போக்குவாதிகள் மக்களை பயமுறுத்த பயன்படுத்துகிறது. அணு குண்டு பயங்கரமானதாகத் தெரியலாம், ஆனால் உண்மையில் அப்படி இல்லை. நிச்சயமாக, அணு குண்டு என்பது பெரும் மக்களை படுகொலை செய்யும் ஆயுதம்தான். ஆனால் ஒரு போரின் போக்கையும் முடிவையும் தீர்மானிப்பது மக்களே; ஒன்று அல்லது இரண்டு புதிய வகையான ஆயுதங்கள் அல்ல."
மாவோ-சே-துங்கின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளின் (பெய்ஜிங், 1960) நான்காம் தொகுதியில் மீண்டும் வெளியிடப்பட்ட அமெரிக்க பத்திரிகையாளர் அன்னா லூயி ஸ்ட்ராங்குடன் ஆகஸ்ட் 1946 நேர்காணலின் போது மாவோ இதைக் கூறினார்.
இன்று ஏகாதிபத்தியங்கள் ஒரு பக்கம் அணு குண்டு அவர்களின் பாதுகாப்பாகக் கருதும் அதே நேரத்தில், மூன்றாம் உலக நாடுகளின் அணு குண்டு என்பது உலக அமைதியின் அச்சுறுத்தலாகப் பரப்பி வருகின்றனர். அதாவது அணு குண்டிலும் அணு ஆற்றலிலும் ஏகபோகத்தை கோருகின்றது ஏகாதிபத்திய அரசுகள். அணு குண்டு ஏகாதிபத்திய அரசுகளுக்கு பாதுகாப்பு என்றால் மூன்றாம் உலக நாடுகளுக்கு அந்த அணு குண்டை ஏந்த உரிமையுமுண்டு ஏகாதிபத்திய நிதி மூலதன ஆதிக்கத்திலிருந்து பாதுகாத்துகொள்ள அணு குண்டை உருவாக்குவது அடிப்படை தேவையாகவும் இருக்கின்றது. மாவோ கூறியவாறு அணு குண்டு போன்ற நவீன ஆயுதங்கள் பெரும் பொருட்சேதத்தையும் உயிர்ச்சேதத்தையும் ஏற்படுத்தலாம், ஆனால் போரின் இறுதி இலக்கை தீர்மானிப்பது மக்களே ஆவர். நவீன ஆயுதங்களை ஏகாதிபத்தியங்கள் வைத்திருப்பது போல மூன்றாம் உலக நாடுகளும் வைத்துக்கொள்ளும்போதுதான் ஏகாதிபத்தியங்கள் மூன்றாம் உலக நாடுகள் மீதான தனது அதிகாரத்தை செலுத்துவதை தடுக்கமுடியும்.
"சீன மக்களை அணுகுண்டுகளால் பயமுறுத்த முடியாது" - மாசேதுங்கின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள், ஜனவரி 28, 1955.
"உலகப்போரின் ஆபத்தும் சீனாவிற்கான அச்சுறுத்தல்களும் முக்கியமாக அமெரிக்காவின் போர்வெறியர்களிடமிருந்து வருகின்றன. அவர்கள் எங்கள் தைவானையும் தைவான் நீரிணைகளையும் ஆக்கிரமித்துள்ளனர் மற்றும் அணுப்போர் குறித்து சிந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். எங்களுக்கு இரண்டு கொள்கைகள் உள்ளன: முதலாவதாக, நாங்கள் போரை விரும்பவில்லை; இரண்டாவதாக, யாராவது எங்களைத் தாக்கினால் நாங்கள் உறுதியுடன் பதிலடி கொடுப்போம். இதைத்தான் நாங்கள் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்கும் முழு நாட்டிற்கும் கற்பிக்கிறோம். அமெரிக்காவின் அணு மிரட்டலால் சீன மக்கள் பயப்படுவதில்லை. எங்கள் நாட்டில் 60 கோடி மக்கள் தொகையும் 96 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவும் உள்ளது. அமெரிக்காவால் அதன் சிறிய அணுகுண்டு குவியலைக் கொண்டு சீன தேசத்தை அழிக்க முடியாது".
இரண்டாம் உலகப் போரில், சோவியத்தும் சீனாவும் தனது வீரம் செறிந்த போரின் மூலமாக ஜெர்மனி - இத்தாலி - ஜப்பானை வீழ்த்தியபோதிலும் அமெரிக்கா, முற்றிலும் பலவீனமடைந்த தனித்து விடப்பட்ட ஜப்பானின் மீது அணு குண்டை வீசியது. இதில் 2.5 இலட்சம் மக்களை கொத்தாக கொன்று குவித்தது. இது வேண்டுமென்றே சோவியத் படையின் முன்னேற்றத்தையும் அரசியல் வெற்றியையும் தடுக்கும் பொருட்டு மக்களை கொன்று தனது ஏகாதிபத்திய அதிகார வெற்றியை பறைசாற்ற அணு குண்டை வீசியது. 1943 இறுதியில் பாசிச முசோலினியின் இத்தாலி வீழ்த்தப்பட்டது; பின்னர் ஏப்ரல் 1945ல் நாசிச ஹிட்லர் படையின் தொடர் தோல்வியும் அதனால் ஹிட்லரின் தற்கொலைக்குப் பின்னர் ஜெர்மனியை சோவியத் படை வெற்றிகொள்கிறது; கடைசியாக ஜப்பானை எதிர்த்து களம் இறங்கிய சோவியத்துடன் ஜப்பான் அரசு பேச்சைவார்த்தை மூலம் தனது படுதோல்வியை பேரப்பொருளாக பேசிவந்த சூழலில் அமெரிக்கா பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்தி தனது அதிகார ஏகபோகத்தை நிறுவியது. உலகப் போருக்குப் பின்னர் அமெரிக்க தலைமையிலான நேட்டோ படைகள் பல போர்களில் ஈடுபட்டு பல இலட்சம் மக்களை கொன்று குவித்துள்ளனர். 2001ல் ஆக்கிரமிக்கப்பட்ட ஆப்கனிலிருந்து 2020ல் அமெரிக்க படைகள் வெளியேறும் வரை குறைந்தபட்சம் 5 இலட்சம் மக்கள் கொன்றுகுவிக்கப்பட்டது; எந்தவித முன்னேறிய தொழில்நுட்ப இராணுவ தளவாடங்களோ ஆயுதங்களோ இல்லாமல் ஆப்கன் மக்கள் உலகத்தின் முன்னிலை இராணுவத்தை எதிர்கொண்டது. ஆனால் அமெரிக்காவின் உயர் தொழில்நுட்பமோ, உயர் இராணுவத் திறனோ ஆப்கான் மீதான ஆக்கிரமிப்பு போரில் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு புறமுதுகிட்டு ஓடியது. இதைத்தான் மாவோ "ஒரு போரின் போக்கையும் முடிவையும் தீர்மாணிப்பது மக்களே; ஒன்று அல்லது இரண்டு புதிய வகையான ஆயுதங்கள் அல்ல" என்று கூறுவதன் சாட்சியம். இது ஆப்கன் மட்டுமல்ல; இதற்கு முன்னர் வியட்நாமில் நடந்தது; ஏகாதிபத்தியம் என்பது "காகிதப் புலி" என்பது நிதர்சனப்படுத்தினர். 2003ல் அமெரிக்கா ஈராக் மீது போர் தொடுத்தது. அதற்கு அது கூறிய காரணம்; சதாம் அரசு பேரழிவு ஆயுதங்களை வைத்திருந்தது என்பதுதான். ஆனால் சதாமின் பேரழிவு ஆயுதங்கள் யாரையும் கொல்லவும் இல்லை; அப்படி ஒன்று கண்டெடுக்கவும் இல்லை; ஆனால் அதை காரணம் காட்டி உள்ளே புகுந்த அமெரிக்க ஆக்கிரமிப்பு போரினால் 6.5 இலட்சம் உயிரிழப்பு ஏற்பட்டதாக லான்செட் சர்வே கூறுகிறது. இலட்சக்கணக்கான மக்கள் உயிர்சேதம் மட்டுமல்ல; நாட்டை அடுத்த பல பத்தாண்டுகளுக்கு சீர்படுத்த முடியாத அளவுக்கு ஈராக் நாட்டை சீரழித்துள்ளது; "உலக அமைதி", "ஜனநாயகத்தைக் காப்பது" என்று பிதற்றிச் சென்ற அமெரிக்கா எதை காத்தது, எதை நிர்மாணித்தது என்பது உலகறிந்த உண்மை. இவைகள் மூன்றாம் உலக நாடுகளிடம் அணு ஆயுத அவசியத்தை உணர்த்துகிறது. மூன்றாம் உலக நாடுகளின் அணு ஆயுதம் ஏகாதிபத்திய அணு ஆயுத பூச்சாண்டியை தவிர்க்கும்; ஆதிக்கப்போர்களை குறைக்கும்; ஏகாதிபத்திய ஆதிக்கப் போர்களை தவிர்க்க மூன்றாம் உலக நாடுகளின் சுயசார்பு தொழில் நுட்ப வளர்ச்சியும் ஆயுதங்களுமே தீர்வு; அதனால் அனைத்து மூன்றாம் உலக நாடுகளும் அணு ஆயுதம் மட்டுமல்ல அனைத்து வித உயர் தொழில் நுட்ப ஆயுதங்களையும் பெற தகுதியுடையவர்களே! ஆனால் அதே சமயம் மூன்றாம் உலக நாடுகள் மற்றொரு ஏகாதிபத்தியத்தின் கைப்பாவையாக இருந்து கொண்டு, உயர் தொழில் நுட்ப ஆயுதங்களையும் அணு குண்டுகளையும் மற்ற மூன்றாம் உலக நாடுகளை அச்சுறுத்த பயன்படுத்துவதையும் பிராந்திய துணை மேலாதிக்கத்திற்காகப் பயன்படுத்துவதையும் அங்கீகரிக்க முடியாது; இது கண்டிக்கப்பட வேண்டியது. இந்த அடிப்படையிலிருந்து எல்லா மூன்றாம் உலக நாடுகள் ஏகாதிபத்திய புதிய காலனிய ஆதிக்கத்திலிருந்து விடுபட சுதேசிய உயர் தொழில்நுட்ப ஆயுத வளர்ச்சியை ஆதரிப்போம்! வளர்த்தெடுப்போம்!
====================================================
பின் இணைப்பு
அணு ஆற்றலும் அணு குண்டும் - ஏகாதிபத்திய ஏகபோகம்
இன்றைய புவிசார் அரசியலில், அணு ஆற்றலும், அணு குண்டும் ஏகாதிபத்தியங்களின் ஏகபோகமாக உள்ளது. இதில் அமெரிக்காவும், இரசியாவும் ஆதிக்கம் செய்து வந்த நிலையில், இப்போது சீனாவும் முன்னிலை பெற்று வருகிறது.



கொடுக்கப்பட்டுள்ள படத்தின் படி அமெரிக்க முன்னிலையில் உள்ளபோதும், கடந்த 50 வருடங்களாக புதிய அணு உலை கட்டுமானங்களில் அது கவனம் செலுத்தவில்லை. அது மட்டுமல்லாமல் அனைத்து வளர்ந்த நாடுகளின் நிலையும் ஒப்பீட்டளவில் ஒரே மாதிரியாக பெரிய அளவில் முன்னேற்றமில்லாமல் உள்ளது. அதேபோது ஒப்பீட்டளவில் இரசியா மூன்றில் ஒரு பங்கு புதிய கட்டுமானங்களை பெற்றுள்ளது. ஆனால் சீனாவை நோக்கும்போது, இத்துறையில் அசுர வளர்ச்சி பெற்றுவருகிறது. குறிப்பாக அடுத்த 5 ஆண்டுகளில் அணு ஆற்றல் துறையில் அமெரிக்காவை மிஞ்சிவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், புதிய கட்டுமானங்கள் பலவும் நடைமுறைக்கு வரவுள்ளன. கொடுக்கப்பட்டுள்ள படத்திலிருந்து நாம் அதை கவனிக்க முடியும். இரசியா மற்ற நாடுகளில் அணு உலை அமைப்பதில் முன்னணியில் உள்ளது.
சமரன்
அக்டோபர்-நவம்பர் 2025