நாடகம்: டீக்கடை பெஞ்சும் மார்க்சின் சிலையும்

செந்தளம்

நாடகம்: டீக்கடை பெஞ்சும் மார்க்சின் சிலையும்

காட்சி அமைப்பு: சென்னையின் ஒரு பரபரப்பான தெருமுனை. பின்னணியில் ஒரு டீக்கடை. சுவரில் "முதல்வர் மார்க்ஸ் சிலையைத் திறந்து வைத்தார்" என்ற செய்தித்தாளின் முன்பக்கமும், தூரத்தில் புதிதாகத் திறக்கப்பட்ட மார்க்ஸ் சிலையின் ஒரு பகுதியும் தெரிகிறது. டீக்கடை பெஞ்சில் கம்யூனிஸ்ட் அண்ணன் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருக்கிறார். திராவிட தம்பியும் தலித் அரசியல் தம்பியும் உற்சாகமாக வருகிறார்கள். ஏற்கெனவே முகவாட்டத்துடன் காவித் தம்பி டீ கடையில் அண்ணனுடன் டீ குடித்துகொண்டிருக்கிறார்.

திராவிட தம்பி: (உற்சாகமாக) பார்த்தீங்களா அண்ணே! எங்க முதல்வர் மார்க்சுக்கும் சிலை வச்சுட்டாரு. இனிமே தமிழ்நாட்டுல மார்க்சியமும் திராவிட மாடலும் கை கோர்த்து நடக்கும்ல. செம்மலையே திராவிடப் போர்வாளா மாத்திட்டோம்ல!

காவி தம்பி: (குறுக்கிட்டு) என்னப்பா இது கூத்து? எவனோ ஒரு வெள்ளைக்காரன், கடவுள் இல்லேன்னு சொன்னவன். அவனுக்குப் போய் எதுக்கு இங்க சிலை? இது "ஆன்மீக பூமி". இப்படி மார்க்சுக்கு சிலை வச்சி ஆன்மீக பூமியா இருக்கிற தமிழ்நாட்டை அழிக்கிறாப்பலே?

தலித்திய தம்பி: இதுல என்ன இருக்கு? அம்பேத்கரும் மார்க்சும் - இரண்டு பேரும் ஒடுக்கப்பட்டவனுக்காக குரல் கொடுத்தவங்கதானே.  ஆனா திராவிட அரசு எதுக்கு சிலை வைக்குதுன்னு தான் புரியல!..

கம்யூனிஸ்ட் அண்னன் - அம்பேத்கர் தலித்துகள் மீதான  ஒடுக்குமுறைக்கு மட்டும்தான் குரல் கொடுத்தாரு. ஆனா மார்க்ஸ் உலக தொழிலாளர்களுக்கு குரல் கொடுத்தார். ரெண்டு பேரும் ஒன்னு இல்ல.

திராவிட தம்பி: எங்கள் கம்யூனிஸ்ட் தோழர்கள் திராவிட அரசோட எல்லா விசயத்திலும் ரொம்ப பக்க பலமா இருக்காங்கல.. அதுலேயும் பாசிச பாஜகவை எதிர்த்து எங்களுடன் ஒன்னுகோர்த்து இருக்காங்கல அதனாலத்தான்.

காவித் தம்பி: ஒரு வேல, பாரபட்சமில்லாமல் திராவிட அரசுக்கு முட்டுக்கொடுக்குற சிவப்பு சட்டைகளுக்கு அடையாளம் காட்றதுக்கு இருக்கலாமுல்ல?

திராவிட தம்பி: என்ன அடையாளம் காட்டணும்?

கம்யூனிஸ்ட் அண்ணன்: சிவப்புச் சட்டைக்குள் ஒளிந்திருக்கும் கம்யூனிஸ்ட் திராவிடர்களுக்கும் கம்யூனிஸ்ட் தலித்தியர்களுக்கும் உங்கள் தலைவர் பெரியார் அம்பேத்கார் இல்ல; கம்யூனிசத்தின் பிதாமகன் மார்க்ஸ்தான்; இவர்தான் மார்க்சியம் என்னும் அறிவியல் சித்தாந்தத்தை நிறுவினவர்னு அடையாளம் காட்டவோ என்னவோ?

காவி தம்பி: அவருக்கு நம்ம ஊரைப் பற்றி என்ன தெரியும்? அவர் என்ன செய்து கிழித்தாறு? அவருக்கெல்லாம் எதற்கு சிலை.

கம்யூனிஸ்ட் அண்ணன்: காவி தம்பி.. நீ இல்லாத ஒன்னு பின்னாடி ஒட்றனால, இருக்கிற நிஜத்தை பார்க்கிற அறிவ இழந்திட்ட… மார்க்சு, 1847 லிருந்து 1862 வரை சுமார் 15 வருசம் New York Daily Tribune இதழ்ல இந்தியாவ பத்தியும் இங்க நடந்த பிரிட்டிஷின் காலனிய கொடுமைகளை பத்தியும் காலனிய சுரண்டல்கள பத்தியும் நிறைய எழுதியிருக்காரு. அதையெல்லாம் தொகுத்து பின்னாடி “இந்தியாவை பற்றி” என்ற பெரிய நூலாவே இப்ப கிடைக்குது. மார்க்சு உலகத்துல இருக்கிற பெரும்பாலான நாடுகளைப் பத்தியும் எழுதியிருக்காரு. அவர் உலகத்துல இருக்கிற எல்லா பிரச்சனைப் பத்தியும் அதுக்கெல்லா என்ன தீர்வுன்னு பத்தியும் எழுதியிருக்காரு. மார்க்ஸ் என்பவர் ஒரு விஞ்ஞானி.

காவி தம்பி: விஞ்ஞானியா? அவர் என்ன ராக்கெட்டா விட்டாரு? அப்படி விட்டிருந்தாலும் அவர் நாட்டுக்கு விட்டிருப்பாரு.

கம்யூனிஸ்ட் அண்ணன்: இல்ல தம்பி, சமூக மாற்றத்துக்கான 'இயக்கவியல் பொருள்முதல்வாதம்' என்ற ராக்கெட்ட கண்டுபிடிச்சவர். மார்க்சுங்கிறவர் உலகத்துல இருக்கிற அத்தனை பிரச்சனைக்கும் காரணம் "சுரண்டல்"தான்னு அந்த ராக்கெட்டுல ஏறிதான் கண்டுபிடிச்சாரு. உபரி மதிப்பு (Surplus Value) அப்படின்னா என்னன்னு விளக்கி, தொழிலாளியோட வியர்வையை எப்படி முதலாளிங்க திருடுறாங்கன்னு தோலுரிச்சவரு. அவர் மொத்த மனித சமுதாயத்தின் பிரச்சனையையும், அதற்கான காரணத்தையும் விடிவையும் சேர்த்தே சொன்னவரு. 

திராவிட தம்பி: என்னது!... மார்க்சுன்னு ஒருத்தர் இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்ற ஒன்ன கண்டுபிடிச்சாரா? எங்கள் பெரியார்கூடத்தான் எல்லா பிரச்சனைக்கு விடிவை சொல்லியிருக்காரு.

தலித்திய தம்பி: (உடனே குறிக்கிட்டு) அம்பேத்கரும்தான் தாழ்த்தப்பட்டவர்களின் பிரச்சனையும் விடிவ பத்தியும் நிறைய பேசி இருக்காரு. 

கம்யூனிஸ்ட் அண்ணன்: உங்க பெரியார், அம்பேத்கார் மாறி, பிரச்சனைக்கான தீர்வை கற்பனையில தேடல; மனித சமூகத்தின் தோற்றம் முதற்கொண்டு எப்படியெல்லாம் மனித சமூகம் வளர்ந்தது. மனித சமூக வளர்ச்சி, உற்பத்தியை வைத்துத்தான் வளர்ந்ததுன்னும்; அந்த உற்பத்திகேற்றப்படிதான் அரசு, படை, நீதி, பண்பாடு என்றெல்லாம் கட்டியமைக்கப்பட்டதுன்னும்; அது காலத்துக்கு காலம் உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்றப்படி மாறிகிட்டே இருக்குதுன்னும் நிறுவினாரு. முக்கியமா சமூகம் விதிகளுக்கு உட்பட்டுதான் இயங்குதுன்னு அந்த விதிகளை அறிவியல்பூர்வமாக நிறுவியவர் மார்க்ஸ்.

காவித் தம்பி: விதி பற்றியெல்லாம் சித்தர்களும் முனிவர்களும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே சொல்லியாச்சு! விதித்ததுதான் நடக்கும். விதிய வெல்ல முடியாது. ஒவ்வொரு பிறவியிலும் அவங்கவங்க செய்யும் பாவம் புன்னியப்படி ஒருத்தனோட விதி தீர்மானிக்கப்படுது என்பதெல்லாம் சொல்லியிருக்காங்க.. இவர் என்ன புதுசா கண்டு பிடிச்ச மாதிரி சொல்றீங்க.. விதிய பத்தி நம்ம நாட்டு பக்தி இலக்கியங்களிலும் கதைகள விடவா அவர் அதிகமா பேசிட்டாரு?

கம்யூனிஸ்ட் அண்ணன்: அட காவிப் பயலே... விதின்னா நீ சொல்லுற விதியில்ல; அறிவியல்ல படிக்கிற விதிகள். அறிவியல்ல்ல்ல்ல்ல்ல்... 

இங்க விதிக்கப்பட்டது நடக்கல. உற்பத்தி முறைய அடிப்படையாகக் கொண்ட உற்பத்தி உறவுகளுக்கிடையில் நடக்கும் போராட்ட விதிகளின் அடிப்படையில் நடக்குது. 

உங்க சாமியார்கள் சொன்ன கடவுள் விதிப்படி நடக்கல.. 

இயக்கவியல் விதிகளின் படிதான் சமூகத்தின் அத்தனையும் அடங்கியிருக்கு அப்படின்னு அந்த விதிகளை கண்டுபிடிச்சு விளக்கியவர்தான் மார்க்சு.

திராவிட தம்பி: நான், எங்க கூட்டணில இருக்க கம்யூனிஸ்ட் தோழர்களின் மேட பேச்சையும் பத்திரிகையாளர்கள் சந்திப்பையும் நிறைய கேட்டிருக்கேன்.. இப்படி மார்க்சியத்தைப் பத்தியும், இயக்கவியல் பொருள்முதல்வாத விதிகளைப் பத்தியும் பேசியதே இல்லையே?

கம்யூனிஸ்ட் அண்ணன்: அவர்கள் மார்க்சு பத்தியும் பேசுறதில்ல.. எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ என அதுக்கப்புறம் வந்து இந்த விதிகளை மேலும் விரிவா ஆராய்ந்து வளர்த்தவங்கல பத்தியும் பேசுறது இல்ல.. அவங்க கம்யூனிஸ்ட் தலைவர்கள மறந்துட்டாங்க.. மார்க்சியத்த படிக்கறதகூட மறந்துட்டாங்க.. முன்னெல்லாம், சிவப்பு சட்டைக்குள்ள இருந்த திருட்டு களவானிங்க மார்க்சியத்துல பெரியாரியத்தையும் அம்பேத்காரியத்தையும் என தினுசு தினுசா ‘ஈயம்’கள கண்டுபிடிச்சு மார்க்சியத்துல காச்சு ஊத்தனும்னு சொல்லிகிட்டிருந்தானுங்க. அப்ப இருந்த நம்ம ஏ.எம்.கே போன்ற மார்க்சிய தலைவர்கள் பல பேரு இந்த ‘ஈயம்’ களெல்லாம் பழைய பாத்திர கடைக்கு பேரீச்ச பழத்துக்கு வேனா உதவும் மார்க்சியத்துக்கு எல்லா உதவாதுன்னு அதை எதிர்த்து நிறய கட்டுரைகள எழுதி போராடிக்கிட்டிருந்தாங்க. இப்ப நிலைமை அதவிட மோசமா போயிடுச்சு. இப்ப பெரியாரியம், அம்பேத்காரியத்தையே மார்க்சியமா மாத்திட்டானுங்க..... சதா காலமும் பெரியாரையும், அம்பேத்காரையும் ஜெபம் பண்ணிகிட்டிருக்கானுங்க..

தலித்திய தம்பி: ஏன் அண்ணே அப்படி சொல்றீங்க? நாங்களும் தான் சிவப்பு சட்டை போட்டுக்கிட்டு நீலக் கொடியும் பிடிக்கிறோம். இந்திய மண்ணுக்கு ஏத்த மாதிரி பெரியாரையும் அம்பேத்கரையும் மார்க்சியவாதிகளா பார்க்கக் கூடாதா? 

கம்யூனிஸ்ட் அண்ணன்: தம்பி, இன்னைக்கு நிறைய பேரு சிவப்பு சட்டை போட்டுக்கிட்டு பெரியாரியத்தையும், அம்பேத்கரியத்தையும் பேசுறதே கம்யூனிசம்னு நினைச்சுட்டு இருக்கீங்க.

ஆனா மார்க்சியங்கிறது சமூகத்தின் அடிப்படையையே புரட்டி போடறது. "உற்பத்தி உறவுகளை" (Production Relations) மாத்துறது. யார் உற்பத்தி செய்யறான்? தொழிலாளி. அதுக்கு யார் சொந்தக்காரர்? முதலாளி. லாபம் யாருக்கு போது? முதலாளி. தொழிற்சாலை, நிலம், இயந்திரம் எல்லாம் முதலாளியே குவிச்சு வெச்சுக்கிறான். இத பாதுகாக்க அதிகாரம்? அதையும் மதம், சட்டம், அரசு, கல்வி எல்லாத்தையும் தனக்கு ஏத்த மாதிரி வெச்சுக்கிறான். அந்த அதிகாரத்தையும் மாத்தனும்; இந்த பழைய சமூகத்தையும் மாத்தனும். நீங்க சாதியையும், திராவிடத்தையும் மட்டுமே பேசிட்டு, சுரண்டலைச் செய்யுற நிலவுடமை உற்பத்தியையும் கார்ப்பரேட் முதலாளித்துவத்தையும் அப்படியே கவனமா விட்டுடுறீங்க. சுருக்கமா சொன்னா சாதியத்த காப்பதுற பழைய உற்பத்தி முறைய பத்தி கவலை படாம, பிராமண சாதியை மட்டும், பிரச்சனையின் ஆணிவேரா பாக்குறீங்க.. அந்த பழைய உற்பத்தி முறையையும், இந்த சாதி அமைப்பையும் இன்னு ஆழமா முறைப்படுத்தி பாதுகாத்த பிரிட்டிஷ் காரண முற்போக்க பார்த்தவங்கதான் அம்பேத்காரும் பெரியாரும். பிரச்சனையை பார்த்தாங்க.. ஆனா அதன் காரணத்த அறிவியல் பூர்வமா பார்க்க தெரியல; சாதியத்த பிரச்சனையா பார்த்தாங்களே ஒழிய.. அதன் காரணத்த அறிவியல்பூர்வமா பார்க்கத் தெரியல; யார் எதிரி, எதை வீழ்த்தனும்ங்கிற அவர்களோட முடிவும் தவறாப் போச்சு..

காவி தம்பி: ஆமாண்ணே! இந்த பிரிட்டிஷ் வெள்ளைக்காரன் நம்ம பாரம்பரிய பண்பாட்டையே அழிச்சுப்புட்டான்.. நம்ம தமிழகத்துல ராஜ ராஜ சோழனிலிருந்து விஜய நகரப் பேரரசு வரை இந்த சாதி படிமுறையை வைத்துதான் ஒரு அருமையான சிஸ்டம் இருந்தது. அவரவர் வேலையை அவரவர் பார்த்தா என்ன தப்பு? மாபெரும் பேரரசுகள இந்த சாதிமுறைதான் உருவாக்குச்சு? பிரிட்டிஷ்காரணபோல நம்ம கலாச்சாரத்தை விமர்சிக்கிற இந்த மார்க்ச இங்க கொண்டு வர்றது தேச துரோகம்!

கம்யூனிஸ்ட் அண்ணன்: (நக்கலாக) தம்பி காவி... உன்னோட தேச பக்தி புல்லரிக்குது… உங்க இந்துத்துவ தலைவர்களும் இந்த பிரிட்டிஷ்காரன் காலில்ல விழுந்துகிடந்தவங்கதான்.. 

உன்னோட அந்த "அருமையான" சிஸ்டத்தை புரிஞ்சிக்கவே நீ மார்க்சியம் படிக்கனும். இந்த சமுதாய முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது சாதின்னு மார்க்சியம் சொல்லுதுன்னு உனக்கு தெரியும் இல்ல.. ஆனா அதே மார்க்சியம், சாதியம் நிலபிரபுத்துவ சமூக அமைப்பின் நீடித்த வளர்ச்சிக்கு பயன்பட்டதுன்னு சொல்லுது... .

மூன்று தம்பிகளும்: (கோரசாக) என்னது சாதியத்த மார்க்சியம் ஆதரிக்குதா..!?

கம்யூனிஸ்ட் அண்ணன்: அமைதியா கேளுங்க தம்பிகளா...! ஒரு கட்டத்துல முற்போக்காக இருப்பதால்தான் அதை சமூகம் எல்லாம் சுவீகரித்துகொண்டு முன்னேறுது. பின்ன அதுவே அடுத்த கட்ட வளர்ச்சிக்கு தடையா மாறிபோதுன்னு சொன்னவர்தான் மார்க்ஸ். அதுதான் இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்ற ராக்கெட்டு கண்டுபிடிப்புல ஒண்ணு. 

இந்தியாவல அடிமை முறைக்கு வர்ணங்க ஒரு வடிவம் தந்துது. அது அடிமை முறைக்கு சேவை செய்தது. பின்ன இந்த அடிமை முறையும் ஒழிந்தது வர்ணங்களும் ஒழிந்தது. அப்புறம் சாதிகளாக வந்தது. ஏன்னா? இந்தியாவில் அடிமை முறைக்கு ஒத்துவந்த வர்ணாசிரமம் நிலப்பிரபுத்துவ முறைக்கு ஒத்து வரல.. அதனால நிலப்பிரபுத்துவத்துவமாக மாறுர கட்டத்துல சாதியம் என்ற அமைப்பு வடிவம்தான் மிகச் சிறப்பாக சேவை செய்ததாலத்தான் அரசர்கள் சாதிய கட்டமைப்பை நிர்மாணித்தார்கள். ஆனா அதே சாதிதான் பின்ன இந்தியா முதலாளித்துவமா மாறதுக்கு தடையாக இருக்குது. அடிமை சமூகமா மாறும்போது அதற்கு சாதகமாக  இருந்த வர்ணாசிரமம், நிலப்பிரபுத்துவ சமூகமா மாறும்போது பிற்போக்கா மாறிடுது. நிலப்பிரபுத்துவ சமூகமா மாறும்போது அதற்கு சாதகமாக இருந்த சாதியம் முதலாளித்துவ சமூக மாறும்போது பிற்போக்கா மாறிடுது. நிலபிரபுத்துவ அமைப்பின் நீடித்த வளர்ச்சிக்கும் சாதி சேவை செஞ்சிச்சு. அந்த விசயத்தில் இந்திய நிலவுடமை அமைப்பு ஐரோப்பிய நிலவுடமையில் இருந்து  வேறுபட்டதாகவும் இருந்துச்சுன்னு மார்க்சியம் சொல்லுது ஏன், எதற்கு, எப்படின்னு புரிஞ்சுக்கிற விதிகளை (அறிவியலை) சொன்னவர்தான் மார்க்ஸ். அந்த விதிகள்தான் மார்க்சியம்.

திராவிட தம்பி: அப்போ பெரியார் அம்பேத்கார் மாதிரி சமூக நீதி பேசுறவங்களை நீங்க ஏத்துக்க மாட்டீங்களா?

கம்யூனிஸ்ட் அண்ணன்: தம்பி, சமூக நீதி வேணும்னா முதல்ல இந்த அரை நிலவுடமை உற்பத்தி முறை கட்டமைப்பு அழியணும். ஆனா இன்னைக்கு 'கம்யூனிஸ்ட்'னு சொல்லிக்கிட்டு அலையுற பாதி பேரு, திராவிடக் கட்சிகளோட பி-டீமா (B-Team) மாறிட்டாங்க. திமுக சொல்றதுக்கு ஜால்ரா தட்டுறதும், தலித்தியத்தையும் திராவிடத்தையும் மார்க்சியத்துல கலப்படம் பண்றதுமா இருக்காங்க. 

சாதி எங்கே நின்று வளருது? மத நூல்களிலா? சட்டத்தில் உள்ள பாகுபாடுகளிலா? இல்ல. நிலத்தை அடிப்படையா வச்சு வளரது. நிலம் சிலரது; உழைப்போ பலரது. பிராமணியம் அதனோட கிளை. அதுல பல சாதிங்க இருந்தது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தனக்கு தோதான சாதிகள ஜமீன்தாரர்களாக்கி வரி வசூல் செஞ்சது. சரி, இத மாற்ற சட்ட மாற்றம் போதாதா என்று கேட்டீங்கன்ன…. யாரு மாத்தறது? மாத்துனதை யாரு செயல்படுத்துறது? அதுக்கு செயல்படுத்துற அதிகாரம் வேணும்ல. அதுக்கு பாராளுமன்றத்தை தாங்கி பிடிச்சா முடியாது. போலீசு, இராணுவம், நிர்வாக எந்திரம், நீதிமன்றம்னு முதலாளிய காப்பதுறதுக்கு உருவாக்கின இந்த எல்லாத்தையும் உழைக்கும் மக்களின் பங்கேற்பா மாத்தனும். 

உண்மையான கம்யூனிஸ்ட் சாதியத்தை ஒழிக்க அதன் பொருளியல் அடிதளமான அரை நிலவுடமையை எதிர்த்து போராடனும். ஆனா பெரியாரும் அம்பேத்காரும் வேரை விட்டு கிளையை உடைக்க நினைச்சாங்க.. பெரியாரும் அம்பேத்கரும் பிராமணர்களை எதிர்த்தாங்க. பிராமணிய சிஸ்டத்தை எதிர்த்ததாகூட வச்சுகிட்டாலும் அவங்க நிலவுடமைய எதிர்க்கல... பிற்போக்கு உற்பத்தி முறைய எதிர்க்கல.. அதை கட்டி காப்பதன பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தையும் எதிர்க்கல.. ஏகாதிபத்திய எதிர்ப்புதான் சமூக நீதியின் முத படிகல். 

திராவிட/தலித்திய தம்பிகள்: என்ன அண்ணா சொல்றீங்க? பிரிட்டிஷ்காரன்தான கல்வில, வேலையில எல்லாம் சாதி கோட்டா கொடுத்தான். அவனாலதான் தாழ்த்தப்பட்டவங்க, இடை நிலை சாதியில இருக்கவங்க எல்லாம் படிச்சு வேலைக்குப் போனாங்க.. அவங்க இல்லைன்னு இந்த பார்ப்பணர்கள் நம்ம படிக்க விட்டிருப்பாங்களா? வேலைக்குதான் போயிருக்க முடியுமா?

கம்யூனிஸ்ட் அண்ணன்: இதுதாண்டா முக்கியமான பிரச்சனையே… 1857க்கு முன்ன கிழக்கிந்திய கம்பெணி கொஞ்ச கொஞ்சமா நம்ம நாடு முழுக்க பரவி தனது கட்டுபாட்டுல கொண்டுவந்துட்டான்.. அந்த கம்பெனி வரி வசூலும், வியாபார கொள்ளைக்கான நிர்வாகத்த மட்டும் வச்சு காலனிய இந்தியாவ நிர்வகிச்சாங்க.. ஆனா 1857லேயே இந்த கம்பெணி ஆட்சிக்கெதிரா ஒட்டுமொத்த இந்தியாவும் பத்திக்கிச்சு, மதசார்பற்ற “மொத்த சமூகமும் ஒன்னா” நின்னு முதல் விடுதலைப் போர் நடத்தினும் நினைக்கல. இத மார்க்சு “முதல் சுதந்திரப் போர்”னு சொன்னாரு. 

இந்தப் போரில இந்திய மக்களோட கம்பெனி அடக்குமுறைய எதிர்த்த கோபமும் இந்துக்கள் முஸ்லிம்கள் என மதசார்பற்ற போராட்டத்தின் வீச்சும்; வர்க்க சார்பற்ற சமூகத்தின் ஒன்றுதிரண்ட போராட்டமும் சேர்ந்து கிட்டத்தட்ட மொத்த இந்தியாவையும் இழந்திட்ட நிலைமைக்கு பிரிட்டிஷ் கம்பெணி வந்திடுச்சு; அதிர்ச்சியடைஞ்சாங்க; பதறிப் போனாங்க. உடனே அவங்க உத்தியை மாத்தினாங்க.

இந்தியாவை ஆளணும்னா, நாம வரி வசூலும், வியாபாரக் கொள்ளைக்கான நிர்வாகத்த மட்டும் வச்சு ஆள முடியாதுன்னு புரிஞ்சுகிட்டாங்க. உடனே இந்தியா மீதான கம்பெணியின் அதிகாரம் பிரிட்டிஷ் அரசுக்கு கைமாறிச்சு.

இந்தியாவ காலனியா வச்சிருக்கனும்னா இந்தியாவ, மக்கள, கலாச்சாரத்த முழுசா புரிஞ்சுக்க வேணும்னு நினைச்சாங்க. அப்படி புரிஞ்சிக்கிறதுக்கு இங்க இருந்த பிராமணர்களோடு கூட்டு சேர்ந்து சனாதன இந்துத்துவத்துக்கு தேவையான “மனுஸ்ம்ருதி” போன்ற புத்தகங்கள மொழி பெயர்த்து, இந்தியாவோட வரலாறுன்னு ஒரு காலனிய இனவியல் வரலாற்ற கட்டியமைச்சாங்க. அதுல வர்ணாசிரமும் சாதியும்தான் இந்தியாவின் வரலாறு என்று தனக்கு தோதான ஒரு வரலாற்ற புனைந்தாங்க. 1857ல் இந்தியா முழுக்க நடந்த முதல் சுதந்திர போரான சிப்பாய் கலகத்த, வெறும் மதப் போரா, இந்தியர்களோட மத நம்பிக்கைகான போரா மாத்திட்டானுங்க. உடனே பிரிட்டிஷ் ஆட்சி உங்க மத நம்பிக்கைபடிதான் ஆளுவோம்னு ஒரு உருட்ட உருட்டினாங்க. அதனால் இந்தியாவிலிருக்கும் இந்துக்கள ‘மனுஸ்மிருதி’ அடிப்படையில் சட்டப்படிதான் ஆளுவோம்னு சொல்லிட்டானுங்க.. இப்படி மத அடிப்படையில இந்தியாவ பிரிச்சு பின்ன சாதி அடிப்படையில உடைக்கனும்னு திட்டம் போட்டாங்க.. இந்தியா என்றால் சாதிதான் என்ற ஒரு வரலாற கட்டினாங்க.. அதை உண்மையாக்க சாதி அடிப்படையிலான ஒரு மக்கள் கணக்கெடுப்ப நடத்தினாங்க. மக்கள சாதி அடிப்படையில் தப்பு தப்பா வர்ணாசிரம அடுக்குக்குள் கொண்டு வந்து திணிச்சானுங்க. எதார்த்தத்துக்கு புறம்பா ஒவ்வொரு சாதிகுறித்து ஒரு ப்ரொப்பைல் (Profile) ரெடி பண்ணாங்க. இந்தியா முழுக்க அதையே நிர்வாக அடிப்படையா மாத்திட்டானுங்க... இப்படி அடிம உற்பத்தி முறைல இருந்த வர்ணாசிரமத்த நிலப்பிரபுத்துவ இந்தியாவல இருந்த சாதிய முறையில தினிச்சு இன்னும் பிற்போக்கா மாத்தினவங்களே பிரிட்டிஷ்காரன்தான். வெள்ள காரன் வரத்துக்கு முன்னாடி நாடு முழுக்க சாதி ஒரே படி நிலையில இல்ல; ஒரு இடத்துல ஆண்ட பரம்பரையா இருந்தது; இன்னொரு இடத்துல கீழ இருந்தது; அதுமட்டுமல்ல உற்பத்தியில மாற்றமடைந்து கொண்டிருந்தனால இந்த பிற்போக்கு சாதி முறையும் உடைந்துகொண்டிருந்தது; ஆனா இவனுங்க வந்தப்பிறகு அதை இன்னும் படுபிற்போக்கா மாத்தி புதிய சாதி முறைய கட்டியமைச்சாங்க.. அத இந்தியா முழுக்க ஒரே மாதிரியா விரிவுப்படுத்தினாங்க… இப்ப இருக்கிற சாதிய வடிவம் பிரிட்டிஷார் கட்டினது.

தலித்திய தம்பி: ஆனாலும் சாதியத்தையும் பிராமனியத்தையும் இந்துத்துவத்தையும் எதிர்த்து அம்பேத்கரும் பெரியாரும் போராடினாங்க தானே அண்ணே? அதை முற்போக்கான சீர்த்திருத்தமாக பார்க்க முடியாத அண்ணே?

கம்யூனிஸ்ட் அண்ணா: எப்படி அரசர்கள் நிலவுடமையை உருவாக்கி இராணுவத்த வெச்சு அடக்க சில சாதி, மதத்த வெச்சு அமைதியா அடக்கி ஆள பார்ப்பனர்களை வைத்து சாதிய படிமுறைய உருவாக்கினாங்களோ, அதுப்போலவே பிரிட்டிஷ் காலனித்துவத்துக்கு ஏத்த வகையில நிலவுடமை உற்பத்தி உறவையும் உருவாக்கினாங்க. பின்பு அந்த உற்பத்தி உறவுக்கு ஏத்த கலாச்சார சேவை செய்ய பார்ப்பனர்களை சில சாதியில உள்ளவங்களை வெச்சு வைத்து மீண்டுமொரு புதிய வகையிலான வர்ணாசிரம அடிப்படையில சாதி அடுக்குமுறைய உருவாக்கினாங்க. புதிய இந்துத்துவத்தை உருவாக்கினாங்க; பின்பு அதல தங்களுக்கு தேவையான சில சீர்திருத்தங்கள மட்டும் பண்ணாங்க. இப்படி சாதியத்த இன்னும் கெட்டிபடுத்துனவனுங்கல கட்டி காப்பாத்துனுவங்கலதான் பெரியாரும் அம்பேத்காரும் முற்போக்காளர்களா பார்த்தாங்க.. அவங்கதான் ஒழிப்பான்னு சொல்லி அந்த ஆட்சிக்கு ஆதரவும் சேவையும் செய்தாங்க… ஆனா பிரிட்டிஷ்காரனுக்காக இந்த சேவைய செய்த பிராமணர்களை மட்டும் பகையாளியா மாத்திட்டாங்க. இதுதான் நம்ம ஊர்ல ஒரு சொல் வழக்கு இருக்கே “அம்பு எய்தவனை விட்டுட்டு அம்புக்கூட சண்ட போட்டு என்ன இலாபம்”? ஏன்னா அவங்களுக்கு அம்பு எய்தவன பார்க்கிற வரலாற்று பார்வையும் இல்ல; பிரிட்டிஷ எதிர்க்கிற துணிவும் இல்ல;

திராவிட தம்பி: அண்ணே… நீங்க 2000 வருசமா நம்மல அடிம படுத்திய பார்ப்பான விட்டு 200 வருசம் அடிமை படுத்தின பிரிட்டிஷ்காரன பெருசா பார்க்கிறீங்க.. பாப்பான்தான் அரசர்களைவிட மேல இருந்தான்.. அதே மாதிரிதான் பிரிட்டிஷையும் ஏமாத்தி சமூகத்துல பெரிய அந்தஸ்துல இருந்தாங்க.. இப்பவும் இருக்கிறாங்க… அதுனாலதான் பிரிட்டிஷ விட பார்ப்பான்தான் பிரச்சனையினு சொன்னாரு..

கம்யூனிஸ்ட் அண்ணன்: உனக்கு புரியரமாறி சொல்றேன்.. கேளு.. நம்ம ஊர்ல கார்ப்பரேட் கம்பெனி இருக்கா?

திராவிட தம்பி: ஆமா.

கம்யூனிஸ்ட் அண்ணன்: எல்லா கார்ப்பரேட் கம்பெனியையும் ஒரு அரசர்களா நினைச்சுக்கோ. எல்லா கார்ப்பரேட் கம்பெனிகளிலும் ஒரு HR துறை இருக்கும். அந்த துறையோட வேலையே அந்த கம்பெனில நாம சொல்ற படிநிலை அடுக்குகள உருவாக்கி அதுக்கு தேவையான ரூல்ஸ் கொண்டுவற்றதுதான்.. அடிமை முறைல வர்ணங்கள முறைப்படுத்தனதுபோல நிலவுடமை முறையில சாதிகள் முறைப்படுத்த இந்த பிராமணிய துறை செயல்பட்டது; முதலாளித்துவத்துக்கு HR துறை செயல்படுகிறது. அரசருக்காகத்தான் பிராமணியம் சேவை செய்தது. கார்ப்பரேட்டுகாகத்தான் HR துறை செயல்படுகிறது. கார்ப்பரேட் சுரண்டலுக்கும் கார்ப்பரேட்ல இருக்கிற படி நிலைக்கு HRம் HR துறையும்தான் காரணம்னு சொன்னா எப்படி? அதுபோலதான் அடிமைமுறையில இருந்த வர்ணாசிரமு; நிலவுடமை சமூகத்துல இருந்த சாதியமும்; இத நிர்வகித்த அன்றைய பிராமணியமும்; இப்படி பெரியாரும் அம்பேத்கரும் காரணத்த (நிலவுடமைய) காரியமாக்கி (சாதி, இந்துமதம்); காரியத்தை காரணமாக்கிட்டாங்க; பின்பு உண்மையான நிலவுடமைய எதிர்த்து போராடாம திசைதிருப்பி காரியமான இந்துமதத்தையும் சாதி மட்டும் போராட்றதா வச்சுக்கிட்டாங்க; ஒரு கம்பெனியில வேல செய்ற தொழிலாளி தொழிற்சங்க போராட்டத்துல வெறும் HRயும் HR துறையும் எதிர்த்து போராடினா முற்போக்காகவும் சீர்த்திருத்தமாகவும் பார்க்க முடியுமா? 

காவி தம்பி: சும்மா எதை எதையோ பேசிகிட்டிருக்காதீங்க.. மார்க்சியம்ல நம்ம நாட்டுக்கு செட் ஆகாதுண்ணே...

கம்யூனிஸ்ட் அண்ணன்: ஏ தம்பி, எங்க சுற்றி எப்படி வந்தாலும் இன்னைக்கு இருக்குற ஏகாதிபத்திய பொருளாதார நெருக்கடியாகட்டும் மூன்றாம் உலக நாடுகள் மீதான ஏகாதிபத்திய தாக்குதலாகட்டும், உலகத்துல நடக்குற போர்களாகட்டும் கார்ப்பரேட்மயமாக்கலால ஏற்பட்ற குறிப்பா பூதாகரமாக வந்து கொண்டிருக்கு AI யினால ஏற்பட்டு கொண்டிருக்கும் வேலையின்மை பிரச்சனையாகட்டும், சமூகத்துல நடக்குற எல்லா குடும்ப பிரச்சனைகளாகட்டும், சாதிப் பிரச்சனைகளாகட்டும் இப்படி எந்த பிரச்சனையா இருந்தாலும் அதற்கு மார்க்சியத்துக்கிட்டதான் தீர்வு இருக்கு.. வேறு எந்த தத்துவமும் அதனோட நிழல்லகூட ஒதுங்க முடியாது.

திராவிட தம்பி: அப்படி என்ன தீர்வுண்ணே?

கம்யூனிஸ்ட் அண்ணன்: சிலை வைத்த மார்க்சு காட்டிய வழியில், சிலையாவே மாறி நிக்கிற தொழிலாளிகளும் விவசாயிகளும் அதிகாரம் பெறுவதில்தான் தீர்வு இருக்கு. யாருக்கு பின்னாடியும் போய் நம்ம பிரச்சனைக்கான தீர்வை பெற முடியாது. விவசாயி, பாட்டாளி, முறைசார தொழிலாளி என்று வர்க்க அணிகளை அமைத்து நமது உழைக்கும் தத்துவமான, எந்த கலப்படமும் இல்லாம, அறிவியல் பூர்வமா மார்க்சியம் காட்டிய வழியில் போராடி முன்னேற வேண்டிய காலகட்டத்தில் இருக்கோமப்பா..

திராவிடத் தம்பி: அண்ணே எங்க முதல்வர் அமைச்ச திராவிட ஆட்சியே ஒரு இடதுசாரி ஆட்சிதா அண்ணே! இரசிய கம்யூனிச தலைவர் ஸ்டாலினுக்கே டஃப் (tough) குடுக்கற அளவுக்கு அரசு ஊழியர்களுக்கு பென்சனும் துப்புரவு பணியாளர்களுக்கு அரசு வேலையும் இப்படி உழைக்கிற மக்களக்கு எவ்வளவு பாடுபட்றாரு எங்கள் முதல்வர் ஸ்டாலினு… நீங்க என்னென்னா உழைக்கும் மக்கள் ஆட்சி அமைய போராடனும்முனு சொல்லிகிட்டிருக்கீங்க.. இந்த ஆட்சியே உழைக்கும் மக்கள் ஆட்சிதான் அண்ணே..

கம்யூனிஸ்ட் அண்ணன்: கொள்ளையில போக… ஒரு பக்கம் மோடியும் இன்னொரு பக்கம் உங்க திராவிட முதல்வரும் உழைக்கும் மக்களை கொள்ளையடிக்கிற ஏகாதிபத்திய நாடுகளுக்கு ஓடி ஓடி கார்ப்பரேட்டுகள கூட்டிக்கிட்டு வராங்க.. அப்புறம் அவங்ககிட்ட நம்ம நாட்டையும் மக்களின் உழைப்பையும் நாட்டு கணிம வளங்களையும் உள்நாட்டு சந்தையையும் அடகு வைக்கிறதுக்கு இந்திய அளவுல மோடியும், தமிழக அளவுல திராவிட அப்பாவும் ஒப்பந்தத்த போடுறாங்க.. பாசிச பாஜக இந்தியளவுல அதானிக்கும், அம்பானிக்கும் மக்கள் சொத்தையும் காசையும் தாரை வார்த்தா, திராவிட ஆட்சி மாநிலத்தில மிச்ச இருக்கிறத அவர்களையும் பன்னாட்டு கம்பெனிகளையும் கூப்பிட்டு கொடுத்திடுறாங்க.. இவங்க எல்லா எந்த கஷ்டமு இல்லாம பெரிய இலாபத்த எடுக்க உழைக்கிற மக்கள சுரண்ட “12 மணி நேர வேலை நேர சட்டத்திருத்தம்”, சம்பளத்த குறைக்க “தற்காலிகப் பணியிடங்கள்” (Outsourcing), அரசு துறைகள தனியார்மயமாக்குவது, மருத்துவமன, போக்குவரத்து, ஏன் துப்புறவு துறையகூட விட்டுவைக்காம பெரிய முதலாளிகளோட இலாபத்துக்காக இரவு பகலாக உழைக்குற இந்த ஆட்சி உழைக்கிற மக்கள் ஆட்சியா? இது ஒரு கார்ப்பரேட் முதலாளிகளோட கட்சி. மார்க்சியம் இந்த கார்ப்பரேட் முதலாளித்துவ ஆட்சிய தூக்கி எறியனும்னு சொல்லுது.

தலித்திய தம்பி: முதலாளித்துவ ஆட்சிய தூக்கி எறியனும்னு சொன்ன மார்க்சுக்கு, அப்ப எப்படி, என்ன தயிரியத்துல முதல்வர் சிலை வச்சாரு?

கம்யூனிஸ்ட் அண்ணன்: பாசிசத்திற்கு பேர் போன ஹிட்லரும் சோசலிசம் பேசிதான் ஆட்சியே புடிச்சான். உழைக்கும் மக்கள ஏமாத்த மார்க்சு சிலைய வச்சு, இந்த திராவிட அரசு தொழிலாளர் அரசுன்னு சொல்லி உழைக்கும் மக்களை வர்க்க அரசியலிலிருந்து விலக்கி திராவிடத்திலேயே முழ்கடிப்பதற்குதான்.. திராவிடம்தான் மார்க்சியம்னு விளம்பரப்படுத்தத்தான்... அடுத்த தேர்தலுக்கு சிவப்பு சட்ட போட்ட பல க்ரூப்புகள உருவாக்கி பல்லக்கு தூக்க ரெடி பண்ணதான்.. இப்ப இந்த பல்லக்கு தூக்கிகள் வயசான காலத்துலையும் கைத்தடிகளை வைச்சாவது திராவிட பல்லக்கு தூக்குவாங்க பாருங்க.. அப்பப்பா…. முடியல

திராவிட தம்பி: அண்ணே, எங்க முதல்வர் சிலை வச்சத நீங்க பாராட்ட மாட்டீங்களா? அப்ப சிலைய உடைச்சுடனும்மா? அவர் வச்சதுனாலேயே மார்க்ஸ் சிலைய எதிர்ப்பீங்களா?

கம்யூனிஸ்ட் அண்ணன்: மார்க்ஸ் சிலைய யாரு எதுக்கு வைக்கிறாங்கன்னு பொருத்துதான் நாம் ஆதரிக்கிறதா? எதிர்க்கிறதா என்பது… முதலாளித்துவ ஆட்சியையும் கட்சிகளையும் ஒழிக்கனும்னு பேசின மார்க்சுக்கு ஒரு முதலாளித்துவ கட்சிக்கூட இல்ல ஆட்சியே சிலை வைக்குதுன்னா? அது அவருக்கு கிடைத்த அங்கீகாரமில்ல. மார்க்சையும் மார்க்சியத்தையுமே இந்த முதலாளித்துவ ஆட்சியின் பல்லக்கா மாத்துற வேல.. அதாவது இந்த ஆட்சிக்கே கம்யூனிஸ்ட் போர்வை போர்த்தறது; திராவிடத்தையே கம்யூனிசமா மாத்துறது; மார்க்சையே பெரியாரா மாத்துறதுன்னு அர்த்தம். பலபேரு ஆளும் வர்க்கத்தின் சில செயல்கள நாம பயன்படுத்திக்கனும்னு  சொல்றாங்க… ஆனா அது சோசலிசம் முன்னிறுத்திய நாசிச ஹிட்லர பயன்படுத்தனும்னு சொல்ற மாதிரி. நாம எதிரிய பயன்படுத்துற அளவுல் நாம ஒன்னும் பலமா இல்ல; அப்ப, எதிரிதான் நம்மல பயன்படுத்துறான்… அதுதான் மார்க்சுக்கு சிலை வச்சி, இங்கிருக்கிற சிவப்பு சட்டப்போட்ட பேர்வழிகள திராவிட நீலத்துக்கு சேவை செய்யும் சனாதனவாதிகளா மாத்தி திராவிடத்துக்கும் திராவிட ஆட்சியின் கார்ப்பரேட் சேவைக்கும், திராவிட ஆட்சியின் சாதிய படுகொலைகளுக்கும் காவிடி தூக்குபவர்களா நம்மல பயன்படுத்துறான். இங்கு சிலை பிரச்சனையில்ல… யாரு எதுக்கு வைக்கிறாங்கன்னுதான் பிரச்சனை… மார்க்சுக்கு சிலைய கார்ப்பரேட் முதலாளித்துவ பாஜகவோ திமுகவோ வைக்கிறதுதான் பிரச்சன… 

தலித்திய தம்பி: (யோசனையுடன்) அப்படின்னா கம்யூனிஸ்ட் கட்சி சிலை வச்சுருக்கனும்னு சொல்றீங்களா? 

கம்யூனிஸ்ட் அண்ணன்: இன்னைக்கு திராவிட அரசு சிலை திறந்தத புளங்காகித அடைய இந்த சிவப்பு ஆடுக, ஏன் இவ்வளவு நாளா சிலை வைக்கில.. இப்ப சிலை வைக்கிற கமிட்டியில இருந்த வேல செய்ற.. ஆனால் இதுவரை உழைக்கிற வர்க்கத்த திரட்டி உன்னால சிலை வைக்க முடியலையா? இல்ல சிலை வைக்கிற அரசியல ஏத்துக்கலையா? என்ன கத இது. 

இங்க சில வைப்பது வைக்காததும் பிரச்சனை இல்ல. அதை எப்படி உழைக்கும் மக்கள் அரசியலுக்கு பயன்படும்முன்னு தான் பிரச்சனை. இந்த வர்க்க துரோக ஆட்சிகள் சிலை வைப்பது வர்க்க துரோகத்த கட்டியமைக்கதான் வர்க்க எதிரி திமுக நினைக்குது. நினைச்சாப்புல இந்த சிவப்பு சட்ட போட்ட சில ஆடுகளும் திமுக அரசுக்கு முட்டுகொடுக்குது; இப்ப யாரு யார பயன்படுத்துறா? 

சிலைக்கு மாலை போடுறது பெரிய விசயம் இல்ல. ஆனா மார்க்ஸ் சொன்ன அந்த 'தத்துவத்தை' அமல்படுத்துற கம்யூனிஸ்ட் கட்சிகளா இருந்தா மார்க்சுக்குதான் சிலை வச்சிருப்பாங்கலா? இல்ல இந்த கம்யூனிஸ்ட்டுகளதான் பக்கத்துல சேர்த்திருப்பாங்களா? சிவப்பு சட்டைக்கு உண்மையா இருக்கணும்னா, உழைக்கிற மக்களுக்காக நிக்கனும். அதுதான் உண்மையான கம்யூனிசம். திராவிட அரசு மார்க்சுக்கு சிலை வைப்பது, மார்க்சுக்கும் மார்க்சியத்துக்கும் ஏற்படுத்துற களங்கம். உழைக்கும் மக்கள் பங்களிப்புல மார்க்சுக்கு சிலை வைப்போம்! அதுதான் மார்க்சுக்கு செலுத்துற மரியாதையா இருக்கும். போங்க... போய் "கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை" படியுங்க... முடிஞ்சா "அரசும் புரட்சியும்" சேர்த்து படியுங்க.. அப்ப புரியும்…. எதிரி மார்க்சுக்கோ மார்க்சியத்திற்கோ மறியாதை செலுத்த முடியுமான்னு? இந்த பல்லக்கு தூக்கிகளோட வர்க்க துரோகத்தையும்…

தம்பிகள்: சரிங்கண்ணா நீங்க சொல்றதும் சரியாதான் இருக்குது.. சரிங்கண்ணா நேரமாயிடுச்சு வேலைக்கு போகனும்..

காட்சி: எல்லோரும் யோசனையுடன் டீ குடித்து முடித்துவிட்டு கிளம்புகிறார்கள்… அவர்கள் தெளிந்த முகத்துடன் உற்சாகமாக கிளம்பினாங்க.. ஒருவருக்கொருவர் வணக்கம் கூறி விடை பெற்றார்கள்...

செந்தளம்