அரசு கல்லூரிப் பேராசிரியர் நியமனத் தேர்வின் குளறுபடிகள் - தவெக - திமுக - 2 அரசுகளுமே பொறுப்பு

செந்தளம் செய்திப்பிரிவு

அரசு கல்லூரிப் பேராசிரியர் நியமனத் தேர்வின் குளறுபடிகள் - தவெக - திமுக - 2 அரசுகளுமே பொறுப்பு

சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு சென்ற ஆட்சியில் தமிழகத்தில் அரசு கல்லூரிப் பேராசிரியர்கள் நியமனத்திற்கு எழுத்துத் தேர்வை அறிமுகப்படுத்தியது திமுக அரசு. ஒருபுறம் நீட் தேர்வை எதிர்த்து கொண்டும் சமூகநீதி பேசிக் கொண்டிருக்கும் அதே அரசுதான், பேராசிரியர் பணிக்கு எழுத்துத் தேர்வு முறையைக் கொண்டு வருவது நகைமுரணாக இருக்கிறது என்று பேராசிரியர் சங்கங்களும், கௌரவ விரிவுரையாளர் சங்கங்களும் மனுக்கள் மூலம் அப்போதே சுட்டிக்காட்டின. ஆனால், திமுக அரசு அதைச் சற்றும் பொருட்படுத்தவில்லை.

இந்தியாவில் பாஜக ஆளும் சில மாநிலங்களைத் தவிர டெல்லி, பஞ்சாப், பீகார் போன்ற பெரும்பான்மையான மாநிலங்களில் பேராசிரியர் பணிக்கு எழுத்துத் தேர்வு முறை நடைமுறையில் இல்லாத போது, மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை  UGC மூலம் திணிக்க UGC-2025 திருத்த விதிகளை வெளியிட்டது. அக்கொள்கையை வரவேற்கும் விதமாக திமுக அரசு இந்த எழுத்துத் தேர்வை அறிவித்தது. இது மத்திய அரசுடனான அவர்களின் கள்ளக் கூட்டணியை நிரூபிக்கும் விதமாகவே அமைந்துள்ளது.

2025-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடத்தப்பட்ட ஆசிரியர் பணி நியமனத் தேர்வின்போதே, "நான் முதல்வன் திட்டம்", “இல்லம் தேடிக் கல்வி”, “கலைஞர் திட்டம்” போன்ற தங்களது ஆட்சித் திட்டங்களை விளம்பரப்படுத்தும் விதமாகவும், "புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்கள்" போன்ற பொதுவான தலைப்புகளையும் உள்ளடக்கி, அனைத்துத் துறைகளுக்கும் பொதுவானதாக இரண்டாம் தாள் எழுத்துத் தேர்வை (Descriptive-type) புகுத்தினர். இது அப்போதே பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

இந்தத் தேர்வு முடிவுக்கு முன்பான நடைமுறைகளும், தேர்வு தொடர்பான வினாத்தாள் குழப்பங்களும், விடைத்தாள் திருத்தி மதிப்பெண் வழங்கிய முறைகளும் முழுமையான வரையறையற்ற ஒரு போக்கையே காட்டுகிறது. மேலும், அனைத்துப் பாடங்களுக்குரிய விடைத்தாள்களையும் திருத்தி முடிக்காமல், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே வெறும் 5 பாடங்களுக்கு மட்டும் அவசர கதியில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஒன்று அல்லது இரண்டு பணியிடங்கள் மட்டுமே உள்ள வரலாற்று கல்வி (History Education), மனித உரிமைகள் (Human Rights), இந்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலா (Indian Culture and Tourism), கடல்சார் உயிரியல் (Marine Biology), வனவிலங்கு உயிரியல் (Wildlife Biology) போன்ற பாடப்பிரிவுகளுக்கான முடிவுகள், முறையான பாட வல்லுநர்கள் குழுவை அமைக்காமல் தேர்தல் லாபத்திற்காக வெளியிடப்பட்டு, 5 நபர்களுக்குப் பணி நியமன ஆணையை அன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மீதமுள்ள முக்கிய துறைகளின் முடிவுகளை எவ்வித அறிவிப்பும் இன்றி அப்படியே கிடப்பில் போட்டுவிட்டுத் தேர்தல் வேலைகளில் மூழ்கினர்.

தற்போது புதிய ஆட்சி அமைத்துள்ள தவெக அரசும், “ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறாது” என்பதற்கு ஏற்ப எந்தவொரு மறுஆய்வையும் மேற்கொள்ளவில்லை. கல்லூரிகளில் பேராசிரியர் பற்றாக்குறை நிலவுவதைக் காரணமாகக் காட்டி, மீதமுள்ள பாடப்பிரிவுகளுக்கான தேர்வு முடிவுகளை 25.06.2026 அன்று பல்வேறு குழப்பங்களோடும் குளறுபடிகளோடும் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மூலம் வெளியிட்டிருக்கிறது.

தேர்விற்கு முன்பே, வினாத்தாள் கசிந்தது குறித்தும், பல வழிகளில் முறைகேடுகள் நடந்து வருவது குறித்தும் ஊடகங்களில் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது. தற்போதைய தேர்வு முடிவில், விவரித்து விடையளிக்கும் இரண்டாம் தாளில் (Descriptive paper) பலருக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் மிகக் குறைவான மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. மொத்தம் 50 மதிப்பெண்கள் கொண்ட இந்த இரண்டாம் தாளில், பல தகுதிவாய்ந்த தேர்வர்களுக்கு 0, 3, 4, 5 என மதிப்பெண்கள் அளிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உதவிப் பேராசிரியர் தேர்வில் (கொள்குறி வகை) சரியான விடையை தேர்ந்தெடுக்கும்   வினாக்களைக் கொண்ட (Objective paper) முதல் தாளின் மொத்த மதிப்பெண் 150 ஆகும். இதில் ஏராளமான தேர்வர்கள் மிக அதிக மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். முதல் தாளில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள், இரண்டாம் தாளில் மிகக் குறைந்த மதிப்பெண்களைப் பெற்றிருப்பது இந்தத் தேர்வு முறையின் மீதான சந்தேகத்தை மேலும் வலுவடையச் செய்துள்ளது. ஆகவே, பேராசிரியர் பணிக்கு நடந்த எழுத்துத் தேர்வு குளறுபடிகளைத் துல்லியமாகக் கண்டறியத் தனி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று ஆசிரியர் சங்கங்களும் சில அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. மேலும், தேர்வு எழுதிய பெரும்பான்மையான தேர்வாளர்கள் இந்தத் தேர்வு முறையையே ரத்து செய்யக் கோரி நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளனர்.

மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை ஒப்புநோக்கும் போது, விடைத்தாள்களை முறையாகத் திருத்தாமலேயே முடிவுகள் வெளியிடப்பட்டதோ என்று கேட்கத் தோன்றும் அளவிற்குப் பெரும் குளறுபடிகள் வெளிவந்துள்ளன. உதாரணமாக, தமிழ்ப் பாடத்தில் மாநில அளவில் முதல் தாளில் மிக அதிக மதிப்பெண் பெற்றுள்ள சரவணா தேவி என்கிற மாணவிக்கு இரண்டாம் தாளில் "0" மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், தமிழ்ப் பாடத்தில் மட்டும் விரிவான விடையளிக்கும் இரண்டாம் தாளில் 42 பேருக்கு "0" மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல், 106 பேருக்கு இரண்டாம் தாளில் வெறும் "1" மதிப்பெண் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

பேராசிரியர் தேர்வு எழுதும் தகுதியுடைய ஒரு மாணவர், வெறும் கால் (1/4) அல்லது அரை (1/2) மதிப்பெண் பெறும் அளவிற்குவா தகுதியற்று இருப்பார்? தற்காலத்தில் பள்ளிகளில் கூட இந்த அளவிலான மதிப்பெண் முறைகள் பின்பற்றப்படாத நிலையில், உயர் கல்வித் தேர்வில் 50-க்கு வெறும் அரை மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது தேர்வை கேலிக்குரியதாக்கியுள்ளது. ஏறக்குறைய 6,000 பேர் தகுதி பெற்றுள்ள இத்தேர்வில், இரண்டாம் தாளில் மட்டும் 50 மதிப்பெண்ணுக்கு 3,762 பேருக்கு 10 மற்றும் அதற்கும் குறைவாக, பூஜ்ஜியம் வரையிலான ஒற்றை இலக்க (Single digit) மதிப்பெண்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.

இரண்டாம் தாளில் ஒற்றை இலக்க மதிப்பெண் பெற்ற 23 மாணவர்கள், முதல் தாளில் 150-க்கு 100-க்கும் மேல் மதிப்பெண் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் தாளில் 111 மதிப்பெண் பெற்று முதன்மையாக வந்த மாணவர் கூட, இரண்டாம் தாளில் "0" மதிப்பெண் பெற்றுள்ளார். தரவரிசைப் பட்டியலில் முன்னணியில் வர வாய்ப்புள்ள, அதாவது முதல் தாளில் சுமார் 90 - 100 மதிப்பெண்கள் பெற்ற 152 மாணவர்களுக்கு இரண்டாம் தாளில் ஒற்றை இலக்க மதிப்பெண்கள் வழங்கப்பட்டதன் மூலம் அவர்கள் தங்களின் பணி வாய்ப்பை முற்றிலுமாக இழந்துள்ளனர்.

இதற்கு நேர்மாறாக, இரண்டாம் தாளில் 50-க்கு 30 மதிப்பெண்ணுக்கு மேல் வழங்கப்பட்ட 114 பேரில், 12 பேர் மட்டுமே முதல் தாளில் 90-க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள். மீதமுள்ள அனைவரும் முதல் தாளில் 90-க்குக் கீழ் மதிப்பெண் பெற்றவர்களாவர். விரிவான விடையளித்தலுக்கு எத்தகைய மதிப்பீட்டு அளவுகோலை ஆசிரியர் தேர்வு வாரியம் பயன்படுத்தியது என்றே புரியவில்லை. ஒரே ஒரு கேள்விக்கு 50 மதிப்பெண்கள் கொண்ட இந்தத் தாளில், 1/4, 1/2 என மதிப்பெண்களைப் பிய்த்து வழங்கியது எந்த விதிமுறையின் கீழ் வருகிறது?

இந்த இரண்டாம் தாளின் அடிப்படைச் சிக்கலே, இதில் கேட்கப்பட்ட வினாக்கள் அனைத்துத் துறை மாணவர்களுக்கும் பொதுவானதாக இருந்ததுதான். இந்திய வரலாறு, அரசமைப்பு, சூழலியல், அரசின் திட்டங்கள் குறித்த வினாக்களை தமிழ், ஆங்கிலம், வணிகவியல், கணிதம் முதலான பல்வேறு கலை மற்றும் அறிவியல் பிரிவு மாணவர்கள் எழுதும்போது, அவற்றை மதிப்பீடு செய்ய அந்தந்தத் துறைகளில் போதுமான தகுதியான பேராசிரியர்கள் இல்லை. தமிழகம் முழுவதும் ஏற்கனவே 7,000-க்கும் அதிகமான பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பது இதற்கு முக்கியக் காரணமாகும்.

ஏறக்குறைய 40,000 பேருடைய விடைத்தாள்களை, பேராசிரியர் பற்றாக்குறைக்கு மத்தியில் யாரை வைத்துத் திருத்தினார்கள் என்ற ஐயம் இந்தத் தேர்வுப் பட்டியலைப் பார்க்கும்போது உறுதியாகிறது. மதிப்பெண்களின் இந்தத் தர்க்கமற்ற ஒப்பீட்டைப் பார்த்தால், விடைத்தாள்களை மனிதர்கள் திருத்தினார்களா அல்லது கணினி அல்காரிதம் (Algorithm) மூலம் வெறுமனே மதிப்பெண்கள் வகைப்படுத்தப்பட்டதா எனும் பலத்த சந்தேகம் எழுகிறது.

வழக்கமாகக் கல்லூரிப் பணி அனுபவத்தையும் (Experience Marks) கணக்கில் சேர்த்தே தகுதிப் பட்டியலை வெளியிடும் ஆசிரியர் தேர்வு வாரியம், தற்போது சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த பிறகே பணி அனுபவ மதிப்பெண் கணக்கிடப்படும் என்று கூறியுள்ளதும் தேர்வர்களிடையே மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. நியாயமான தர்க்கங்களோடு எழும் இந்தச் சந்தேகங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் உடனடியாகத் தெளிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்துள்ளது.

பாஜக கொள்கை எதிரி என்றும் திமுக  தீய சக்தி என்று ஆட்சிக்கு வந்த தவெக, ஊழல் அரசியல்வாதிகளுடனும், ஊழல் அதிகாரிகளுடனும் சமரசம் செய்துகொண்டு தனது ஆட்சி காலத்தை  நகர்த்தும் போக்கையே இந்த நிகழ்வுகள் பிரதிபலிக்கின்றன. எனவே அரசு கல்லூரிப் பேராசிரியர் நியமனத் தேர்வு முடிவுகள் மற்றும் நியமனத்தில் ஏற்பட்ட குளறுபடிகளில் - தவெக - திமுக ஆகிய இரண்டு அரசுகளுமே பொறுப்பாகும்.

- செந்தளம் செய்திப்பிரிவு