மருத்துவ பட்ஜெட்: ஒருபுறம் நிதி குறைப்பு-மறுபுறம் அரசுத் தனியார் பங்கேற்பு
செந்தளம் செய்திப்பிரிவு
ஒரு இந்தியரின் ஆராக்கியத்திற்கு, நல்வாழ்விற்கு 638 ரூபாய் மட்டுமே ஒதுக்கியுள்ள மோடி அரசு!
மருத்துவத்துறையை கபளிகரம் செய்யும் மோடி அரசு
48.21 இலட்சம் கோடி ரூபாய் செலவில் இந்தாண்டிற்கான பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் ஏழை, எளிய மக்களின் நல்வாழ்விற்கும், ஆராக்கியத்திற்கும் வெறும் 89,287 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது, மொத்த பட்ஜெட்டில் 1.8 சதவீதம் மட்டுமே மக்களின் ஆராக்கியத்திற்காக செலவிடப்படுகிறது. 140 கோடி மக்கள் வாழும் இந்த நாட்டில் ஒரு நபருக்கு ரூ. 638 என்றளவில் மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்துள்ளது மக்கள் விரோத மோடி அரசு.
2017ம் ஆண்டு மோடி அரசால் வெளியிடப்பட்ட தேசிய சுகாதார கொள்கையின்படி 2022க்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்(GDP) மருத்துவத்திற்கு, சுகாதாரத்திற்கு குறைந்தபட்சம் 2.5 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் இந்த இலக்கு 2025க்குள் என்று மாற்றப்பட்டது. 2022ல் மோடி அரசு மொத்த GDPயில் 1.9 சதவித அளவு மட்டுமே மக்கள் நல்வாழ்விற்காக செலவிட்டுள்ளது என்று இந்தாண்டு பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு வெளியிடப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புள்ளிவிவரங்களை காட்டி ஏமாற்றுதல்
யதார்த்த உண்மைகள்(facts) கறாறானது; மறுக்க முடியாதது என்று மார்க்சியம் கூறுகிறது. ஆனால், புள்ளிவிவரங்கள் அப்படியல்ல, எவர் வேண்டுமானாலும், எந்தப் பக்கம் வேண்டுமானாலும் எளிதில் வளைத்துக் கொள்ள முடியும் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யும்போதும், எண்களையும், புள்ளிவிவரங்களையும் தங்களுக்குச் சாதகமாக வளைத்து பிடித்து, தங்களுக்கு எதிரான உண்மைகளின் குரல்களை நசுக்குவதன் மூலம் மக்கள் விரோத பட்ஜெட்டின் வர்க்கச் சார்பை மூடிமறைப்பதற்கு இந்தாண்டும் நிர்மலா சீத்தாரமன் படாதபாடுபட்டுள்ளார்.
மருத்துவத்திற்கான நிதி ஒதுக்கீடு 13 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று சொல்வது பித்தலாட்டமே. கடந்தாண்டு பட்ஜெட்டில் 88,956 கோடி ஒதுக்கப்பட்டது. பின்னர் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் 79,221 கோடி ஒதுக்கப்பட்டது. திருத்தப்பட்ட மதிப்பீட்டை அடிப்படையாக கொண்டு கணக்கீடு செய்துவிட்டு, 13 சதவீதம் கூடுதலாக நிதி ஒதுக்கியுள்ளோம் என்று நீட்டிமுழக்கி பேசியுள்ளார். இதே, சென்றாண்டு ஒதுக்கப்பட்ட அசல் மதிப்பீட்டிலிருந்த பார்த்தோமானால், வெறுமனே 0.37 சதவீதம் மட்டுமே அதிகரித்திருப்பது தெரிய வரும். அதிலும் கூட, சென்றாண்டு விலைவாசிக்கும், இந்தாண்டு விலைவாசி வித்தயாசத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் இந்த அதிகரிப்பெல்லாம் ஒன்றுமேயில்லை. சென்றாண்டு செய்ததை போல இந்தாண்டும் திருத்தப்பட்ட மதிப்பீடு என்ற பெயரில் மேலும் நிதியைக் குறைப்பதற்கே அதிகம் வாய்ப்புள்ளது. பட்ஜெட் முழுக்க இதுபோன்ற பல்வேறு திருகு வேலைகளைச் செய்து புள்ளிவிவரங்களை தங்களுக்குச் சாதமாக வளைத்தே வெளியிட்டு வருகிறார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
தாங்க முடியாத மருத்துவ சுமையை இந்திய மக்கள் மீது சுமத்தும் மோடி அரசு
ஒரு குடும்பத்தின் மருத்துவச் செலவினம், மொத்த வருமானத்தில் 10 சதவீதத்தை தாண்டுகிறதென்றால் அவர்கள் தலையில் “பேரிடி” விழுந்துவிட்டதாகவே சொல்ல வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம்(WHO) வரையறுக்கிறது. தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை நாடிச் செல்லும் 37 சதவீத குடும்பங்களும், அரசு மருத்துவமனையை நாடிச் செல்லும் 10 சதவீத குடும்பங்களும் நிலைகுலையுமளவிற்கான மருத்துவச் செலவுகளை செய்து வருகின்றனர் என்று 2020-ல் NITI ஆயோக் சார்பாக வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரை ஒன்றில் கூறப்பட்டிருந்தது. குடும்பத்தையே நிலைகுலையச் செய்யும் மருத்துவச் செலவினங்கள் காரணமாக ஆண்டுதோறும் 10 கோடி இந்தியர்கள்(மொத்த மக்கள் தொகையில் 7%) வறுமைக்குள் தள்ளப்படுகின்றனர் என்று NITI ஆயோக் வெளியிட்ட மற்றொரு ஆய்வறிக்கையில்(Health Insurance for Missing Middle), குறிப்பிடப்பட்டுள்ளது.
10 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவத்திற்காக ஒவ்வொரு இந்தியரும் தங்களது சட்டைப் பையிலிருந்து(Out of Pocket Expenditure) 60 சதவீத வருமானத்தை செலவு செய்துள்ளார்கள் என்றால் இந்தநிலை இப்போது 41 சதவீதம் என்றளவிற்கு குறைந்துள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கையின்படி நிர்மலா சீத்தாராமன் கூறுகிறார். ஆனால், இதுவும் புனைசுருட்டுக்கள்தான். உலகிலேயே 5-வது மிகப் பெரிய பொருளாதாரம் கொண்ட இந்திய நாட்டில்தான், வளர்ந்த நாடுகளோடு போட்டிப்போடுவதாக வாய்ச்சவடால் அடிக்கும் இந்திய நாட்டில்தான், ஒவ்வொரு இந்தியரின் மருத்துவச் செலவினமும் மிக அதிகமாக இருப்பதாக உலக வங்கி வெளியிட்ட புள்ளிவிவரம் கூறியுள்ளது. அதாவது, 35 ஏழை நாடுகளில் உள்ளவர்கள்தான் இந்தியர்களைவிட அதிகமாக சொந்தப் பணத்தை மருத்துவத்திற்காக செலவு செய்யும் நிலையில் இருக்கிறார்களாம். பாகிஸ்தான், வங்கதேசம், நேபாள மக்கள்கூட உழைத்து சம்பாதித்த பணத்தை தனியார் மருத்துவ கம்பனிகளுக்கு குறைவாகத்தான் கொடுத்து வருகிறார்கள் என்றும், நமது நாடு 188 நாடுகளில், 161-வது இடத்தில் இருப்பதாக இரண்டு வருடங்களுக்கு முன்பு வந்த உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.
மக்கள் விரோத புள்ளிவிவரக் கொள்கை, மருத்துவக் கொள்கை மூலமாக தாக்குதல் தொடுக்கும் மோடி அரசு
அந்நிய நிதி மூலதனத்திற்கு சிவப்பு கம்பளம் விரிக்கும் மோடி கும்பல், ஏகபோக கார்ப்பரேட்களின் நலன்களுக்காக வெளியிடப்படும் புள்ளிவிவரங்களை உச்சிமேற்கொண்டு போற்றிப் பாடுகிறது. ஆனால், ஆளும் வர்க்கத்தை விழிப்பைடையச் செவ்தற்காக அவ்வப்போது அந்நிய ஆய்வு நிறுவனங்களே வெளியிடக்கூடிய மக்களின் வாழ்க்கைத் தரம் பற்றிய குறைந்தபட்ச உண்மைகளைக் உள்ளடக்கியிருக்கும் சில நியாயமான புள்ளிவிவரத் தகவல்களைகூட ஏற்க மறுப்பதை கடந்தகாலங்களில் நாம் நிறையவே பார்த்துள்ளோம். இதுமட்டுமல்லாது, சுரண்டும் வர்க்க நலன்களைப் பாதுகாப்பதற்காகக்கூட சில கணக்கெடுப்புகள் நடத்தப்படும். உதாரணத்திற்கு, 1872-ம் ஆண்டிலிருந்தே பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி வந்துள்ளனர். அவ்வகையில்தான் மோடி அரசும் சில கணக்கெடுப்புகளை நடத்தி வருகிறது. அந்த கணக்கெடுப்பில் கண்டறியப்பட்ட உண்மைகளைக் கூட மூடிமறைக்க முயல்வது, வெளியிடாமல் இருப்பதுதான் இவர்களின் வழக்கமாக இருக்கிறது.
பத்தாண்டுகளுக்கு முன்பு(2011-12) மருத்துவத்திற்காக, கிராமப்புறங்களில் வாழும் ஒரு இந்தியரின் மாதச் செலவினம்(MPCE) என்பது 3.9 சதவீதமாக இருந்துள்ளது. அதே பத்தாண்டுகள் கழித்து(2022-23) மருத்துவத்திற்காக அவரின் மாதச் செலவினம் 3.9 என்றளவிலிருந்து 4.7 சதவீதம் என்றளவிற்கு உயர்ந்துள்ளதாக குடும்பங்களின் நுகர்வுச் செலவினக் கணக்கெடுப்பின்(HCES) மூலமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நகர்ப்புறங்களிலும் இதே கதைதான் தொடர்கிறதாம். கல்விக்காக மக்கள் செலவிடுவதைவிட மருத்துவத்திற்காக அதிகம் செலவிடுகிறார்கள் என்று 2022-23 ஆண்டிற்கான HCES கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இவ்வாறு இவர்களால்(அரசாங்கத்தால்) தயாரிக்கப்பட்ட புள்ளிவிவரங்களையேக் கூட மூடிமறைத்துவிட வேண்டுமென மோடி கும்பல் துடியாய்த் துடிக்கிறது.
முதலாளித்துவத்தையும், ஊழலையும் பிரிக்கவே முடியாது என்பதை நிரூபித்துக் காட்டிய ஆயுஷ்மான் பாரத் திட்டம்
பாரத பிரதமர் மோடி, ஆயுஷ்மான் பாரத் - மக்கள் ஆரோக்கியத் திட்டம் என்ற பெயரில் உலகிலேயே மிகப் பெரிய சுகாதார திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார் என்று பாஜகவினர் போகுமிடமில்லாம் தம்பட்டம் அடித்து பேசியுள்ளதை நாம் பார்த்திருக்க முடியும். மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் குடும்பங்களுக்கு(Hospitalised) ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 5 இலட்சம் வரையிலான மருத்துவச் செலவிற்கு காப்பீடு வழங்கப்படும் என்று சொல்கிறார்கள்.
உள்நோயாளிகளுக்கு மட்டுமே காப்பீடு என்பதே நாம் இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விசயமாகும். கிராமப்புறங்களில் வாழும் ஒரு இந்தியர் உள்நோயாளியாக அனுமதிக்கப்படுகிறபோது, சிகிச்சைக்காக மாதம் 2.36 சதவீதம் செலவு செய்வதாகவும், அதே வேளையில் உள்நோயாளியாக சேராமல் பெறும் மருத்துவ உதவிகளுக்கு மாதம் 4.77 சதவீதம் வரை செலவு செய்வதாகவும் HCES கணக்கெடுப்பு கூறுகிறது.
நகர்ப்புறங்களில் வசிக்கக்கூடிய இந்தியராக இருந்தால், உள்நோயாளியாக பெறும் மருத்துவச் சிகிச்சைக்கு மாதம் 1.9 சதவீதமும், உள்நோயாளியாக சேராமல் பெறும் மருத்துவ உதவிகளுக்கு மாதம் 4 சதவீதம் வரை செலவு செய்வதாக அதே HCES கணக்கெடுப்புதான் பறைசாற்றியுள்ளது. அதாவது, உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படாமல் பெறும் சிகிச்சைகளுக்குத்தான் ஒவ்வொரு இந்தியரும் அதிகமாக செலவிடுகிறார்கள். இவ்வாறு, முதலாளித்துவ அரசுகளால் அனைவருக்கும் தரமான, இலவச மருத்துவத்தை கொடுக்க முடியாது என்பதை ஒப்புக் கொள்ள முடியாமல்தான், தனியார் மருத்துவமனை மற்றும் மருந்துக் கம்பனி முதலாளிகளை ஊட்டி வளர்ப்பதற்கு உலகிலேயே மிகப்பெரிய காப்பீடு என்ற பெயரில் மெகா ஊழலை அரங்கேற்றியுள்ளது.
அம்பானி-அதானிகளின் மாடலே குஜராத் மாடல்
பச்சிளங் குழந்தைகளின் இறப்பு விகிதத்தை(IMR) குறைப்பதற்காகவும், கர்ப்பிணிகளின் இறப்பு விகிதத்தை(MMR) குறைப்பதற்காகவும் 2006-ம் ஆண்டு, மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது “சிரஞ்சீவி” என்ற காப்பீடு திட்டம் கொண்டு வத்நார். “நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை எட்ட முடியாமல் தோல்வியடைந்துள்ளதோடு, இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியும் எங்கு செல்கிறது, எவ்வாறு செலவிடப்படுகிறது என்பது கண்காணிக்கப்படவேயில்லை” என்று 2011-ம் ஆண்டு குஜராத் சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அன்றைய CAG அறிக்கை அம்பலப்படுத்தியது. 15 ஆண்டுகளுக்கு முன்பே காப்பீடு திட்டம் என்ற பெயரில் தனியார் மருத்துவமனை முதலாளிகளை எப்படியெல்லாம் வளர்த்தெடுக்கலாம் என்று பயிற்சி எடுத்துக்கொண்டுதான் நாட்டின் பிரதமராக ஆகியிருக்கிறார்.
சென்ற ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் வெளிவந்த CAG அறிக்கையில் மோடி அரசின் ஆயுஷ்மான் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் மட்டும் வரலாறு காணாதளவிற்கு ஊழல் நடந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. விஜயகாந்த் நடித்த ரமனா படத்தில் வருவது போல இறந்த நோயாளிகளுக்கு சிசிச்சையளித்து கட்டணம் வசூலிப்பது உட்பட கனவிலும் யோசித்து பார்க்க முடியாதளவிற்கு பல நூதனமான வழிகளில் ஊழல் நடந்துள்ளது அம்பலமாகியுள்ளது. அந்த படத்தில்கூட யாரோ ஒரு தனிநபர் சம்பாதித்த பணத்தை, ஒரு தனியார் மருந்துவமனை முதலாளிகள் கொள்ளையடிப்பது பற்றி மட்டுமே காட்டியிருப்பார்கள். ஆனால், CAG அறிக்கையில், மருத்துவமனையிலிருந்து சிகிச்சை பெற்று வீடுதிருப்பிய தேதிக்கு பிறகு பலருக்கு அறுவை சிசிச்சை செய்யப்பட்டுள்ளதாக காட்டியுள்ளனர், சிகிச்சை துவங்குவதற்கு முன்பே காப்பீட்டுத் தொகை பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது, 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் வழஙக்கப்பட்டதாக கொள்ளையடித்துள்ளார்கள், மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்ட தேதிக்கு முன்பாகவே குணமடைந்து வீடு திரும்பிவிட்டதாக கணக்கு காட்டியது, ஒரு நோயாளிக்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிசிச்சை வழங்கப்பட்டதாக காட்டியது என பலதரப்பட்ட வழிகளில் தனியார் மருந்துவமனை முதலாளிகள் எப்படி மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடிக்கிறார்கள் என்பது விளாவரியாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு குஜராத்தில் கண்டெடுத்த அம்பானி-அதானிகளின் மாடலை ஒட்டுமொத்த நாட்டின் மாடலாக மாற்றியதையே கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசின் மிகப் பெரிய சாதனையாக பேசி வருகிறார்கள்.
ஆனால், நிர்மலா சீத்தாராமன் வெளியிட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் மக்களின் வரிப் பணம் அரசாங்கத்தின் நலத் திட்டம் வழியாகவே, தனியார் முதலாளிகளின் சட்டைப் பைகளில் சென்று சேருவதை பற்றியும், வரலாறு காணாதளவிற்கு மெகா ஊழல் அரங்கேறியுள்ளது பற்றியும் ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை. மக்களின் வரிப்பணம் தப்பித்தவறிக்கூட மக்களுக்கே சென்றுவிடாமல் பார்த்துக் கொள்வதும், சிந்தாமல் சிதறாமல் மக்கள் பணத்தை அப்படியே கார்ப்பரேட்டுகளின் சட்டைப் பைகளுக்கு செல்வதற்கு வழியமைத்துத் தருவதும்தான் மோடி கும்பலின் பட்ஜெட் திட்டமிடலாக இருக்கிறது.
புதிய காலனியாதிக்கத்திற்கான பட்ஜெட் திட்டமிடல்(2024-25)
மருத்துவத்திற்கு ஒட்டுமொத்த GDPயில் 5 சதவீதம் நிதி ஒதுக்கப்பட வேண்டுமென உலக சுகாதார நிறுவனத்தை(WHO) சொல்ல வைத்ததும் ஏகபோக கார்ப்பரேட்கள்தான்; கொரோனா அலை ஓய்ந்த பிறகு, 2022ல் உலக வங்கி மூலமாக பிரதமரின் மெகா ஊழல் திட்டமான ஆயூஷ்மான் பாரத் திட்டத்திற்கு மட்டும் 1 பில்லியன் டாலர்கள் செலவு செய்யச் சொல்லி கடன் கொடுத்ததும் ஏகபோக கார்ப்பரேட்கள்தான். இந்திய மக்களை அடமானம் வைத்து பெற்ற கடனை, பட்ஜெட் திட்டமிடல்கள் மூலமாக கொடுத்த கடன் மூலதனத்தை வாரி சுருட்டிக் கொள்வதும் அதே ஏகபோக கார்ப்பரேட்கள்தான் என்பதையே CAG அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. அரசுத் தனியார் பங்கேற்பின் மூலம் மருத்துவ சேவைகளை வழங்க முன்வர வேண்டுமென அறைகூவல் விடுக்கப்பட்டதோடு, மருத்துவத்துறை தனியார்மயமாக்கல் மூலமாக மருத்துவதுறையின் செயல்திறன் அதிகரிக்கும் என்று 1993-ல்“மருத்துவத்தில் முதலீடு செய்தல்” என்ற பெயரில் உலக வங்கி தயாரித்த அறிக்கையில் கூறியிருந்தது. அதைத்தான் குஜராத் மாடல் என்ற சொல்லி மோடி அரசும், ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசும் அமல்படுத்தி வருகிறது. தமிழக அரசும் படிப்படியாக அரசுத்-தனியார் பங்கேற்புத் திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவது நிதர்சனமாகியுள்ளது. 30 ஆண்டுகளில் இந்த தனியார்மயாக்கலால் வளர்ந்த நாடுகளில் மருத்துவத்தின் தரம் குறையவே செய்துள்ளது என்று 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த லேன்செட் என்ற வாராந்திர மருத்துவ இதழ் கண்டறிந்து கூறியுள்ளது.
இவ்வாறு, மருத்துவத்துறை மட்டுமல்லாது, நாட்டின் அனைத்து வாழ்வுத் துறைகளிலும், அம்பானி-அதானிகளின் குஜராத் மாடலை, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புதிய காலனிய மாடலைத்தான் பாசிச மோடி கும்பல் முரட்டு வேகத்தில் அமல்படுத்தி வருகிறது என்பதற்கு அன்றைய(2011), CAG அறிக்கையும், இன்றைய(2023) CAG அறிக்கையுமே கண்கூடான சாட்சியாக மாறி நிற்கிறது. அவ்வகையில், புதிய காலனியாதிக்கத்திற்கு சேவை செய்யும் மக்கள் விரோத பட்ஜெட்டை எதிர்த்துப் போராடுவதும் நமது இன்றியமையாத கடமையாகிறது.
- செந்தளம் செய்திப்பிரிவு