பாட்டாளி வர்க்க ஒற்றுமை குறித்து லெனின்

தமிழில் : விஜயன்

பாட்டாளி வர்க்க ஒற்றுமை குறித்து லெனின்
AI image : Lingam deva

டூமாவில் தொழிலாளி வர்க்க பிரதிநிதிகளாக பங்கேற்றுள்ள ஆறு பேருக்கு எதிராக, காலங்கடந்து, நோவயா ரபோச்சியா இதழ் நடத்திவரும் வாதங்கள், தொடர்ந்து ஆக்கப்பூர்வமான, கோட்பாட்டு தன்மைகளை இழந்து வருவதோடு மென்மேலும் கூச்சல் குழப்பத்தையே உண்டாக்கி வருகிறது. ஆதலால், இந்த சரிச்சைக்குரிய பிரச்சனையை, இதிலுள்ள மையமான விசயங்கள் குறித்து ஓர் ஆழமான, மிகக் கவனமான ஆராய்ச்சியை நோக்கி திருப்பிவிட வேண்டியது முழுமுதல் அவசியமாகிறது. வர்க்க உணர்வு பெற்ற எந்தவொரு தொழிலாளியும் நம்முடன் இவ்விஷயத்தில் ஒத்துப்போக வாய்ப்புண்டு. 

எப்போதுமே “பெரும் புள்ளிகளை” மேற்கோள்காட்டுவதன் மூலமாகத்தான் கலைப்புவாதிகள் தங்களின் கண்கட்டி வித்தையை அரங்கேற்ற முயல்வார்கள். தொழிலாளர்களின் ஆறு பிரதிநிதிகள் மீது செரிடெலி மற்றும் ஜெகச்கோரி கடுமையான விமர்சனங்களை முன்வைக்கிறார்கள்; ஆகஸ்ட் மாநாட்டை (1912) “வழி நடத்தும் குழு”வும் ஆறு பிரதிநிதிகளை கண்டிக்கின்றது, ஆறு பேரையும் ஆயிரம் முறை பிளவுவாதிகள் என்று விமர்சித்து வந்த நிலையில், அவர்களுடன் “ஒன்றுபட வேண்டும்” என ஆயிரத்தொராவது முறையும் விமர்சிக்கும் போது கோருகிறார்கள். 

நாம், நம்முடைய பங்கிற்கு, பிதற்றலாலும் கூச்சலினாலும் தடுமாறாமல், ஆயிரத்தோராவது தடவையாக, தொழிலாளர்களை மெதுவாக, பிரச்சனையின் மீது சிந்தித்து ஆராய கோருகிறோம். 

பாட்டாளி வர்க்கத்திற்கு ஒற்றுமை தேவைப்படுகிறது. ஆனால், அந்த ஒற்றுமையானது, வர்க்க உணர்வு கொண்ட அனைத்து தொழிலாளர்களாலும் கடமையுணர்ச்சியுடன் மனச்சனான்றின்படி முடிவுகள் எடுக்கப்படும் ஒரு ஒன்றுபட்ட அமைப்பால் மட்டுமே வலுப்படும். பிரச்சினை குறித்து கலந்து பேசுவது, பலதரப்பட்ட கருத்துக்களை வெளிப்படுத்துவதும் கேட்பதும், அமைப்பாக்கப்பட்ட மார்க்சியவாதிகளின் பெரும்பாமையான கண்ணோட்டங்களை அறிந்துகொள்வதும், இக்கண்ணோட்டங்கள் முடிவுகளாக பிரதிநிதிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவற்றை கடமையுணர்ச்சியோடு நடைமுறைப்படுத்துதலும் - உலகெங்கிலும் இவைதான் - நியாயமான மக்களால் ஒற்றுமை எனப்படுகிறது. இத்தகைய ஒற்றுமையே எல்லையற்ற மதிப்புமிக்கதும் பாட்டாளிவர்க்கத்திற்கு எல்லையற்ற முக்கியத்துவம் வாய்ந்ததுமாகும். ஒற்றுமையின்றி உழைக்கும் வர்க்கத்தால் எதையும் சாதிக்க முடியாது. ஒற்றுமையிருப்பின் அவர்களால் எதையும் சாதிக்க முடியும். 

கடந்த சில வருடங்களில் சமூக – ஜனநாயகவாத தொழிலாளர்களுக்கு இடையில் ஒற்றுமை பேணப்பட்டதா என்பதை தாமாகவே படித்தறிந்து முடிவு செய்வதற்கு வர்க்க உணர்வு பெற்ற எந்த ஒரு தொழிலாளியும் விரும்பினால் அதற்குரிய போதுமான தரவுகள் உள்ளனவா என்பதையே நாம் கேட்கிறோம். 

ஐயப்பாடுகளை தெளிவாக்கவும், ஒற்றுமைப்படுத்தவும், அதுமட்டுமின்றி தொழிலாளர்களை அமைப்பாக்கும் பொருட்டும், அத்தகைய ஆதார தரவுகளை சரிபார்த்து ஆவணமாக வெளியிடுவதற்காகவும், அவைகளை திரட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.  

படிக்கவும்: ஒற்றுமை குறித்து - லெனின்

ஒற்றுமைக்கான கூக்குரல்களின் போர்வையின் கீழ் ஒற்றுமையை உடைத்தல் - லெனின்

ஏப்ரல் 1912லிருந்து பிராவ்தா செய்தித்தாள் உயிர்ப்புடன் இயங்கி வருகிறது என்பது மட்டுமின்றி, அதன்போக்கு எப்போதும் (பிராவ்தாவின் எதிரிகளில் ஒருவர்கூட இதை ஒருபோதும் மறுத்தது இல்லை) முன்னணி மார்க்சிய குழுக்களால் - மூன்று முறை (1912ல் ஒரு முறை, 1913ல் இருமுறை) நிறைவேற்றப்பட்ட முடிவுகளுடன் எவ்வித மழுப்பலுமின்றி ஒத்திருந்தது. இந்த முடிவுகளை எத்தனை தொழிலாளர்கள் ஏற்றுக் கொண்டு (பாட்டாளி வர்க்க வாழ்வின் அனைத்து அம்சங்கள் பற்றிய முடிவுகள் மீதும்: ஒட்டுமொத்தமாக சுமார் 40 முடிவுகள்) செயல்படுத்தினர்? 

இக்கேள்விக்கு பதில் - தெளிவாக மிக முக்கியமானதாகவும் ஆர்வமூட்டுகிறதாகவும் - கிட்டதட்ட சரியான ஒன்றாகவே இருக்க முடியும்; எனினும், அது முழுவதும் துல்லியமான மற்றும் புறநிலைவாத கண்ணோட்டத்தின் படி அமைந்ததேயன்றி, பிழையான ஆதார தரவுகளின் படி அமைந்ததல்ல. 1912, 1913ல், பெருந்திரளான தொழிலாளர்களுக்கு பல்வேறு மாறுபட்ட கண்ணோட்டங்களை வழங்கிய தொழிலாளர் பத்திரிகைகள் இரண்டு மட்டுமே இருந்தன. இரண்டுமே, தொழிலாளர் குழுக்களின் அறிக்கைகளை வெளியிட்டன. அந்தக் குழுக்களே அந்தந்த பத்திரிகைக்கான நிதியை திரட்டின. ஆகவே குறிப்பிட்ட பத்திரிகைக்காக நிதி திரட்டிய தொழிலாளர் குழுக்கள், அப்பத்திரிகையால் பின்பற்றப்பட்ட கொள்கைக்கான ஆதரவை உண்மையாக நடைமுறையில் வெளிப்படுத்தினர். (வெறும் வார்த்தைகளால் அல்ல), அதோடு அந்த பத்திரிகைகள் முன்னெடுக்கின்ற முடிவுகளுக்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்டதோடு, அதன் கொள்கைகளையும் வெளிப்படையாக ஆதரித்து நின்றனர் என்பதை சொல்லத் தேவையில்லை. 

இதுபோன்ற அடிப்படைத் தகவல்களை இந்த இரண்டு போட்டி பத்திரிகைகளிலும் வெளியிடும் போது தவறுகளை நிச்சயமாக தவிர்க்க முடியும்; இந்த பிரச்சனைகளில் அக்கறையுள்ள தொழிலாளர்கள் தங்களாகவே படித்து திருத்திக்கொள்ள முடியும். பிற புள்ளி விவரங்களை மாற்றாக வைக்க முடியாத, எவராலும் மறுக்க முடியாத, முன்பு பலமுறை வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள் இங்குள்ளன. கிட்டதட்ட இரண்டு ஆண்டு காலத்தில், 1912 ஜனவரியிலிருந்து அக்டோபர் 1913 வரை, Luch(லூச்) பத்திரிக்கைக்கு 556 முறையும், பிராவ்தாவிற்கு 2181 முறையும், மாஸ்கோ தொழிலாளர் பத்திரிகைக்கு 395 முறையும் தொழிலாளர்களின் குழுக்களால் நிதி திரட்டப்பட்டுள்ளன. 

பெரும்பான்மையானவர்கள் (அதுவும் மிகப்பெரிய அளவில்) பிராவ்தாவை ஆதரித்தனர் என்பதை, தீங்கிழைக்கும் நோக்கம் கொண்ட குருட்டுத்தனமான நபர் தவிர, எவர் ஒருவரும் தயக்கமின்றி உறுதியாக ஏற்க இயலும். மெதுவாக ஆனால் உறுதியாக பிராவ்தா பத்திரிகைக்கு பங்களித்து வருபவர்கள் தொழிலாளர்கள் மத்தியில் உண்மையான ஒற்றுமையை கட்டியமைத்து வருகின்றனர். ஒருமித்த முடிவுகள் மூலம் ஒருங்கிணைத்து வருகின்றனர். அதை அவர்கள் மனச்சான்றுடன் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். ருசியாவில், மார்க்சிய தினசரி பத்திரிகை ஒன்று, ஒருமித்த துல்லியமான முடிவுகளை வழுவாமல் தற்காத்து நிற்பதும், மென்மேலும் நேர்த்தியான வகையில் நாடெங்கிலும் சிதறிக்கிடந்த தொழிலாளர் குழுக்களை நெருக்கமாக ஒற்றுமைப்படுத்துவதில் நீண்டகாலமாக இருந்து வருவதும், இதுவே முதன்முறையாகும்.

வெறும் வார்த்தைகளில் இல்லாமல் உண்மையில் இதுவே ஒற்றுமையாகும்! நிச்சயமாக, இது மட்டுமே எல்லாவற்றையும் தீர்த்துவிடவில்லை என்றபோதிலும் ஒற்றுமை என்பது எதார்த்த உண்மையாகியிருக்கிறது. அதுமட்டுமின்றி இது வெறும் வார்த்தைகளோ, விளம்பரமோ அல்ல. 

ஆனால், மற்றெல்லா கலைப்புவாதிகளைப் போலவே, செரிடெலி, ஜெகச்கோரி மற்றும் “ஆகஸ்ட் மாநாட்டை வழிநடத்தும் குழுவினர்”, உறுதியாக உண்மைகளை புறக்கணிக்கின்றனர்! 

அவர்கள் “ஒற்றுமை” குறித்து கூக்குரலிடுகின்றனர், ஆனால் - வர்க்க உணர்வு பெற்ற தொழிலாளர்களிடையே சிறுபான்மையாக உள்ள கலைப்புவாதிகள் - பெரும்பான்மையினரின் உணர்வுகளை இழிவுபடுத்தி ஒற்றுமையை குலைக்கும் கலைப்புவாதிகளைக் குறித்து எந்தவொரு உண்மையையும் பேசுவதில்லை! 

நேரடியான எளிமையான இந்த உண்மையை எந்தவொரு கூக்குரலும், ஆரவாரமும், மோசடியும் மூடி மறைக்க இயலாது; “ஆகஸ்ட் முன்னணி”யும் இதுபோல பிளவுவாத “அனைத்து வகை “உறுப்புகளும்”, குழுக்களும் தரும் தகவல்கள் அனைத்தும் சிரிப்பையே  மூட்டுகின்றன. சற்று சிந்தியுங்கள், கனவான்களே! தொழிலாளர்கள் எவரும் இல்லாத (அ) வெளிப்படையாக சிறுபான்மையினரை மட்டும் கொண்ட உங்கள் “உறுப்புகளும் குழுக்களும்”, அவர்களை ஆதரிப்பது எதற்காக? இத்தகைய “உறுப்புகளும்  குழுக்களும்”, பெரும்பான்மையான தொழிலாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க அனைத்து தொழிலாளர்களையும் அறைகூவல் விடுக்க தவறும் பட்சத்தில் அவை பிளவுவாத குழுக்களே. 

கடந்த 2 ஆண்டு காலத்தில் பாட்டாளி வர்க்க இயக்கம் புத்துயிர் பெற்று வரும் அனுபவங்கள், பிராவ்தாவின் கண்ணோட்டம் எந்தளவிற்கு சரியானது என்பதையே மென்மேலும் உறுதிப்படுத்துகிறது. மார்க்சியவாதிகளால் முன்மொழியப்பட்ட தீர்க்கமான முடிவுகளின் அடிப்படையில் ருசியத் தொழிலாளர்களை ஒற்றுமைப்படுத்தும் அனுபவம், மென்மேலும் நமது அமைப்பின் வளர்ச்சியையும் வலிமையையும் வெற்றிகளையும் எடுத்துக்காட்டுகிறது. கூக்குரல்கள், வசைமொழிகள் (அ) பிற எவற்றாலும் உறுதி தளராமல் இந்த பாதையில் வேகமாகவும் தைரியமாகவும் நாம் முன்னேற வேண்டும் என்பதையே இவை சொல்லாமல் சொல்கிறது. 

(லெனின்)

பிராவ்தா இதழ் 50, டிசம்பர் 3-1913, LCW-19 பக்.519-521

- விஜயன் (தமிழில்)