ஈ.வே.ராவின் ஏகாதிபத்திய ஆதரவு அரசியல் வழி பற்றி...

ஏஎம்கே

ஈ.வே.ராவின் ஏகாதிபத்திய ஆதரவு அரசியல் வழி பற்றி...

ஈரோட்டுப் பாதை சரியா? எனும் தலைப்பில் தோழர் ஜீவாவால் 1947- டிசம்பர் மற்றும் 1948- பிப்ரவரி ஆகிய மாதங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு கமிட்டியின் மாத பத்திரிக்கையான "ஜனநாயகம்" மாத இதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இச்சிறுநூல். ஈ.வே.ராவின் அரசியல் வழி என்ன என்பதை மிகத் தெளிவாக விளக்குவதோடு அல்லாமல் அவரின் சந்தர்ப்பவாத அரசியலை மிகத் தெளிவாக தோலுரித்துக் காட்டியுள்ளார் தோழர் ஜீவா.

நூல்: ஈரோட்டுப் பாதை சரியா?

தமிழக வரலாற்றில் 1932ஆம் ஆண்டு ஒரு பாரிய மாற்றம் நிகழ்ந்தது. அது தான் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தால், இந்தியா முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சி சட்ட விரோதமாக்கப்பட்டு தடைசெய்யப்பட்டது. இதன் பின்னர்தான் முற்போக்குவாதிகள் என்று அறியப்பட்ட பலரின் முகமூடி கிழிக்கப்பட்டது. அதில் ஒருவர் தான் ஈ.வே.ரா அவர்கள். 1932க்கு முன்னிருந்த ரஷ்யக் காதல், மற்றும் சமதர்மக் கோட்பாடுகளின் மீது அவருக்கிருந்த ஆர்வம் முழுவதும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளின் அடக்குமுறைக்கு பின்னர் சந்தர்ப்பவாதமாகக் கைவிடப்பட்டு, காலனியாதிக்கவாதிகளால் உருவாக்கப்பட்ட, திராவிட இனக் கோட்பாடுகளை தன்னுடைய கொள்கையாக மாற்றிக்கொண்டு, எப்படி பிரிட்டிஷ் சர்க்காருக்கு சேவகனாகவும், பார்ப்பனரல்லாத நிலவுடமை கும்பலின் பிரதிநிதியாகவும் மாறினார் என்பதை தனது சொந்த அனுபவத்தின் மூலம் தோழர் ஜீவா அவர்கள் மிகச் சிறப்பாக அம்பலப்படுத்தியுள்ளார்.

ஈ.வே.ராவின் அரசியல் வழியையும் சாதி, மதம் பற்றிய அவருடைய நிலைப்பாட்டை மிகச் சுருக்கமாக பார்ப்போம். "மேல்நாடுகளில் சாதியம்   இல்லாததால்,   அங்கு பொதுவுடைமை கொண்டுவர வர்க்கச் சண்டை தொடங்க வேண்டியிருந்தது. இங்கு சாதிமுறை இருப்பதால் சாதிச்சண்டை தொடங்கவேண்டியதுதான்" என்று பெரியார் கூறினார்.

பொதுவுடைமைக்கு சுயமரியாதையை வழியாக வைத்தார்.

சுயமரியாதை இயக்கம் ஒரு கலாச்சார இயக்கம் என்றும், அரசியல் இயக்கம் அல்ல என்றும் பெரியார் விளக்கம் தந்தார். எனவே அவருடைய கருத்துப்படி, சுயமரியாதை என்பது கலாச்சாரத்துறைக்கு மட்டுமே உரியது. அரசியல், பொருளாதாரத் துறைகளுக்கு உரியதல்ல. கலாச்சாரத் துறையிலும்கூட எல்லா மக்களுக்குமானது என்று பொருள்கொள்ளக் கூடாது. அது முதலில் பார்ப்பனனை நீக்கிவிட்டு, இறுதியில் தீண்டத்தகாதார்களுக்கு சலுகைகள் வேண்டும் பொழுதும், (சமுதாய சீர்திருத்தம் - பக். 25, 44) ஏனைய இடங்களிலும் ஆதிதிராவிடர் அல்லாத மக்களில் பார்ப்பனர் அல்லாத எல்லோருடைய நன்மைக்கும் பேசுவதாகப் பெரியார் குறிப்பிடுகிறார் (குடியரசு - 1.10.1931). பெரியார்  குறிப்பிடும்  பார்ப்பனர்  அல்லாதார்  என்ற சொற்றொடரின்  பொருள் - பார்ப்பனர்களைத்  தவிர்த்து, தீண்டத்தகாதார் உட்பட அனைவரும் என்ற பொருளில் அல்ல.

'பார்ப்பனர், தீண்டத்தகாதார் தவிர்த்த' என்ற பொருளில் கூறுகிறார். ஆக, பெரியார் குறிப்பிடும் சுயமரியாதை, அரசியல், மற்றும் பொருளாதாரத் துறைகளுக்கு இல்லாததோடு மட்டும் இன்றி, அவரது கலாச்சார  சுயமரியாதை  - பார்ப்பனர், தீண்டத்தகாதார்  நீங்கிய பார்ப்பனரல்லாத  மக்களுக்கான கலாச்சார சுயமரியாதையாகவே உள்ளது.

பார்ப்பனர்  அல்லாதோரில்   கூட,  அனைவருக்கும் சுயமரியாதை என்று கொள்ளமுடியாது. பெரியார், சாதியத்தை அதற்கு அடித்தளமான உற்பத்தி உறவிலிருந்து பிரித்து, வெறும் பார்ப்பனர் கலாச்சாரமாக மட்டுமே பார்க்கிறார். பார்ப்பனர் அல்லாதாரிடமும் உள்ள நிலவுடைமைக் கலாச்சாரக் கூறுகளைக் கூட, நெடுங்காலமாக மக்களது சிந்தனைகளிடல் ஆதிக்கம் செலுத்திவரும், நிலவுடைமைக் கலாச்சார ஆதிக்கத்தின் உருவாக்கத்திலும், விரிவாக்கத்திலும் பார்ப்பனர்களுக்குள்ள பெரும்பங்கை மறுக்க இயலாது. எனினும், பார்ப்பனர் அல்லாத வேளாளர் சாதி சித்தாந்தங்களும்; மன்னர்களும் - மறவர்சாதி, வன்னியர்சாதி, நாயக்கர்சாதி மன்னர்களும் இதைக் கண்ணுங்கருத்துமாகப் பேசியதை தமிழர் வரலாற்றில் காணமுடியும். (கோ.கேசவன் - சுயமரியாதை இயக்கமும் பொதுவுடைமையும்). பார்ப்பனரல்லாத  வேளாளர் சாதியைச் சேர்ந்த சைவ சித்தாந்தவாதிகள், சாதியத்தைக் காப்பதில் பார்ப்பனர்களைவிட சளைத்தவர்கள் அல்ல என்பதை, 1997 டிசம்பர் 19ல், தஞ்சைப் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற ஆறாவது உலக சைவ மாநாட்டில் தருமபுரி ஆதீன மடாதிபதி, கர்மவி- தியை ஆதரித்துப் பேசிய பின்வரும் கூற்றிலிருந்து புரிந்து கொள்ளலாம். அதாவது, ஆதிதிராவிடர்கள் முன்னேறுவதற்கு அவசரப்படக்கூடாது என்றும், மனிதன் ஒவ்வொரு பிறவியிலும் ஒவ்வொரு சாதியில் பிறந்து, கடைசியாக உயர்சாதியில் பிறந்து நன்மை பெறுவார் என்றார். இந்திய ஜனாதிபதியாக இருந்த சங்கர்தயாள் சர்மா ஒரு பிறவியில் ஆதிதிராவிடராகப் பிறந்தார். இறுதியாக பார்ப்பனர் சாதியில் பிறந்தார். அதைப்போலவே, இன்றுள்ள ஆதிதிராவிடர்கள், அடுத்த பிறவிகளில் பிறந்து முன்னேறுவதற்கு வாய்ப்புண்டு, எனவே முன்னேறுவதற்கு அவசரப்படக்கூடாது என்று உழைக்கும் ஆதிதிராவிட மக்களுக்கு 'அருளுரை' கூறினார். இதன்மூலம், இந்தச் சைவசித்தாந்தி அடுக்குமுறையை (படிநிலை முறையை) மதத் தத்துவத்தின் மூலமாக ஆரிய (பார்ப்பனிய) சனாதனிகளைப் போலவே நியாயப்படுத்தினார்.

பெரியார், நிலவுடைமைச் சித்தாந்தப் பரவலுக்கு பார்ப்பனரை மட்டுமே பொறுப்பாளிகளாக்குகிறார்; வேளாளர் சித்தாந்த வாதிகளையும், மடாதிபதிகளையும், பெருமன்னர்களையும் அதைக் கட்டிக்காப்பதில் உறுதியாக நின்ற மறவர், நாயக்கர் சாதி மன்னர்களையும் அதற்குரிய பொறுப்புகளிலிருந்து பெரியார் நீக்கிவிடுகிறார்.

பார்ப்பனரல்லாதாரில்  மிகப் பெரும்பான்மையினரான உழைக்கும் மக்களின் சுயமரியாதையை, பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிப்பதால் மட்டுமே காப்பாற்றிவிட முடியாது. கூடவே, முதலாளிகள் நிலப்பிரபுக்களின் ஆதிக்கத்தை ஒழிப்பதன் மூலமே காப்பாற்ற முடியும்.

ஆனால், பெரியார், முதலாளிகள், நிலப்பிரபுக்கள் ஆகியோரின் ஆதிக்கத்திற்கு எதிரான வர்க்கப்போராட்டத்திற்கு மாறாக வர்க்கச் சமரசத்தைப் போதிக்கிறார். தொழிலாளர் உழவர் வர்க்க அடிப்படையில் 1952 ஆம் ஆண்டில், திராவிடர் உழவர் - தொழிலாளர் கழகம் என்னும் அமைப்பை நிறுவினார். அதன் தீர்மானம் பின்வருமாறு கூறுகிறது.

"திராவிடத் தொழிலாளர்களுக்கும், அவர்கள் வேலைசெய்யும் பண்ணையார்,  மிராசுதாரர்,  முதலாளிகள்,  ஆண்டைகள் ஆகியோருக்கும் இடையில், நட்பும், நல்லுறவும், நம்பிக்கையும், கூட்டுப்பொறுப்பும் இருக்கும்படி செய்வது" என்பதே அது. அதனுடைய நோக்கம் தெளிவாக வர்க்கப்போராட்ட முறைக்கு எதிரான வர்க்க உடன்பாட்டுக் கொள்கை என விளங்குகிறது. இதையே பெரியார் 'பங்காளி' நிலை என்று குறிப்பிடுகிறார். எனவேதான்,  பெரியாரின்  சுயமரியாதைத்  தத்துவம், பார்ப்பனரல்லாத  உழைக்கும்  மக்களுக்கு  முழுமையான சுயமரியாதைத் தத்துவமாக இல்லை.

பெரியாரின் சுயமரியாதைக்  கொள்கை ஒரு சமுதாயச் சீர்திருத்தக் கொள்கையாகும். சுயமரியாதை இயக்கம் ஒரு கலாச்சார இயக்கம் என்றும், அரசியல் இயக்கம் அல்ல என்றும் பெரியார் விளக்கம் அளித்தார். இவ்வாறு, பெரியார், அரசியல் சுதந்திரத்திற்கான இயக்கத்தையும், சமுதாய சீர்திருத்தத்திற்கான இயக்கத்தையும்  பிரித்துவிடுகிறார்.  ஆகையால், நாட்டின் சுதந்திரத்திற்கான இயக்கத்திலிருந்து பிரிந்து, தன்னளவில் தனித்து இயங்குவதும் சமுதாய சீர்திருத்தம் என்பன பெரியாரின் சுயமரியாதை  இயக்கத்தின்  அடிப்படையான  கொள்கை ஆகிவிடுகிறது.

பிரிட்டிஷ்  காலனி  ஆதிக்கத்தை  எதிர்த்த,  நாட்டின் சுதந்திரத்திற்கான போராட்ட காலகட்டத்தில், சுதந்திரத்திற்கான போராட்டத்திலிருந்து, சமுதாயச் சீர்திருத்த இயக்கத்தைப் பிரிப்பதும், சமுதாயச் சீர்திருத்த இயக்கத்தையும் கூட வெறும் பார்ப்பன எதிர்ப்பு இயக்கமாகக் சுருக்கிவிடுவதும் பெரியாரை, பிரிட்டிஷ் ஆட்சிக்கும், நிலப்பிரபுத்துவ மன்னர்களின் ஆட்சிக்கும் ஆதரவு தெரிவிப்பதற்கும்; பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின்கீழ் அன்றைய சென்னை மாகாணத்திற்கு டொமீனியன் அந்தஸ்து கோரும் நிலைக்கு இட்டுச் சென்றது.

பெரியாரின் பின்வரும் கூற்றுகளே இதற்குச் சான்று:

"நான் இன்று, நேற்றாகச் சொல்லவில்லை நாடு பிரிய வேண்டும் என்று, வெள்ளைக்காரன் காலத்திலேயே ஏன் 1938லேயே ஆச்சாரியார் மந்திரியானவுடனேயே சொன்னேன். 1947க்குப் பிறகு, அதாவது சுதந்திரம் அடைந்த பிறகுதான் நான் நாடு பிரியவேண்டும் என்று சொல்லவில்லை. வெள்ளைக்காரன் காலத்திலேயே, நமது நாடு இந்த மதராஸ் கவர்மெண்ட்டின் ஆதிக்கத்தில் இல்லாமல், வைஸ்ராய் ஆதிக்கத்தில் இருக்கும்படி பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று கேட்டேன். மதராஸ் கவர்மெண்ட் என்றால் அப்போதும் பார்ப்பான் ஆதிக்கம் - நம் நாட்டை நாமே ஆண்டுகொண்டு சிற்சில விஷயங்களில் மாத்திரம் வெள்ளைக் காரனின் அதிகாரத்திற்கு உட்பட்டு நாம் இருப்பதில் ஆட்சேபணை இல்லை என்று கருத்துத் தெரிவித்தேன்."(22.5.1960)

"பார்ப்பான் கையில், அவன் ஆதிக்கத்தில் நாடு வந்தவுடன் செய்த முதல்வேளை, சுதேசி இராஜாக்களையும், "பரசுராமன் சத்திரியர்களை வெட்டிக்குவித்ததுபோல்", எல்லா ராஜாக்களையும் ஒழித்துக்கட்டி, பார்ப்பன சர்வாதிகார ஆட்சியாக ஆக்கிக் கொண்டான். அதற்குக் காரணம் 632 அரசர்களில், கிட்டத்தட்ட 600 பேருக்கு மேல் சூத்திரர்கள் (பார்ப்பனர் அல்லாதவர்கள்). மனுதர்ம சாஸ்திரத்தில், "சூத்திரன் ஆளுகின்ற ராஜ்ஜியத்தில் பிராமணர்கள் வசிக்கக் கூடாது, போர் நடத்தி சூத்திர ஆட்சியை ஒழிக்க வேண்டும்." என்றும் இருக்கிறது. அதனால் ஒழித்தார்கள். அதுவும் எப்படி எப்படி ஒழித்தார்கள்? மிரட்டிக் கையெழுத்து வாங்கிக் கொண்டு வெளியே போ என்றார்கள். நீ இராஜாவாக உள்ளே வந்தாய், மனுஷனாகவாவது வெளியே போக நினைத்தால் மரியாதையாகக் கையெழுத்துப்போடு என்று மிரட்டினார்கள். ஒரு தடவை புதுக்கோட்டை மகாராஜா குடும்பத்தார் என்னிடம் இதைத் தெரிவித்தார்கள். இப்போது சில ராஜாக்களுக்கு கவர்னர் பதவி மாதிரி சில CID பதவிகளைக் கொடுத்தார்கள். அத்தோடு அவர்கள் வாழ்வும் தீர்ந்தது." (22.5.1960)

"அவர்கள் எல்லாம் வெள்ளையர்களுக்கு அடிமைகள் அல்ல, அவரவர்கள் நாட்டுக்கு சர்வாதிகார இராஜாக்கள். அவர்களால் தனக்கு எந்தக் கேடும் வராத வண்ணம் ஏஜண்டுகளைப் போட்டு அவர்களை முழுச்சுதந்திரம் உள்ளவர்களாகவே, மகாராஜாக்களாகவே வைத்திருந்தான். மற்றபடி ஆட்சியில் சகல அதிகாரங்களும் அவர்களுக்கே இருந்தது. தனி ரயில், தனி தபால் ஸ்டாம்ப், நாணயம், சுங்கம், பட்டாளம், வரிவிதிக்கும் அதிகாரம் இந்தப்படிக்கு சகல உரிமைகளும் அவர்களுக்கே - அந்தந்த நாட்டு அரசர்களுக்கே இருந்தது. வெள்ளைக்காரன் ஆட்சியில் அவர்களுக்கோ, நமக்கோ என்ன கேடு வந்தது?" (22.5.1960)

சுயமரியாதை இயக்கத்தையும்கூட, பார்ப்பனர், தீண்டத்தகாதோர் மற்றும் பார்ப்பனர் அல்லாதோரிலும் உழைக்கும் மக்கள் ஆகியோரை நீக்கிவிட்டு (அவர்களின் முழுமையான விடுதலைக்கு இல்லாததால்) பார்ப்பனர் அல்லாத சாதிகளின் உள்ள சுரண்டும் வர்க்க - ஆளும் வர்க்கக் கும்பல்களின் இயக்கமாக சுருக்கிவிடுவது; ஒருபுறம், பிரிட்டிஷ் காலனி அரசதிகார அமைப்புகளில் இடம் பிடிப்பதற்காக, பார்ப்பன ஆளும்வர்க்க கும்பலுக்கும், பார்ப்பனர் அல்லாத சாதிகளில் உள்ள ஆளும்வர்க்க கும்பல்களுக்கும் இடையில் நடைபெற்ற போட்டியில், பார்ப்பனர் அல்லாத சாதிகளில் உள்ள ஆளும் வர்க்கக் கும்பல்களுக்கு ஆதரவு அளிப்பது; மறுபுறம், பார்ப்பனர் அல்லாத சாதிகளில் உள்ள ஆளும் வர்க்க கும்பலுக்கும், தீண்டத்தகாத சாதியினருக்கும் இடையில் முரண்பாடுகள் மோதல்கள் ஏற்படும்போது, தாழ்த்தப்பட்டோர் பக்கம் உறுதியாக நிற்காமல், கபட நாடகம் ஆடுவதும், தீண்டத்தகாதார்க்கு வெறும் வாய்ச்சொல் உபசாரம் செய்வது ஆகிய நிலைக்கு இட்டுச்சென்றது. இதன் விளைவாக, பார்ப்பனர் அல்லாத சாதிகளில் உள்ள சுரண்டும் ஆளும் வர்க்கக் கும்பல்கள் கட்டியமைத்த சாதிச்சங்கங்கள் ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதையோ, சாதி ஒழிப்பையே தமது நோக்கமாகக் கொள்ளாமல், அரசை அண்டி இட ஒதுக்கீட்டையும் சலுகைகளையும்  கேட்டுப்  பெறுவதையே  முதற்பெரும் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டன.

ஏகாதிபத்தியச் சீர்திருத்தக் கொள்கைகள் - 1909 ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த மார்லி - மிண்டோ சீர்திருத்தங்களோடு,   புதிய  சாதிச்சங்கங்கள்   கட்டும் போக்கு இணைந்திருந்தது. முஸ்லீம்கள், பிற்படுத்தப்பட்ட சாதிகள் மற்றும் தீண்டத்தகாதோர் ஆகியோருக்கு தனி வாக்காளர்   தொகுதிகள்;   அரசாங்கப் பணிகளிலும், கல்வி  வாய்ப்புகளிலும்  இட ஒதுக்கீடுகள்  வழங்குவது; இதன்மூலம் அவர்களுக்கு, பிரிட்டிஷ் ஆட்சியின் மூலம் முன்னேற முடியும் என்ற ஒரு கற்பனையான நம்பிக்கையை ஏற்படுத்துவது என்பதே இச்சீர்திருத்த நடவடிக்கைகளின் உள்ளடக்கமாக இருந்தன. காலனி ஆட்சிக்கெதிராக மக்கள் ஒன்று திரளாமல் தடுத்து நிறுத்துவது; ஏற்கனவே இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையிலிருக்கும் மத அடிப்படையிலான முரண்பாடுகளையும்; பிற்போக்கு சாதி ஒடுக்குமுறை காரணமாக மேல்சாதி, கீழ் சாதிகளுக்கிடையிலான முரண்பாடுகளையும் பயன்படுத்துவதுடன், ஏற்கனவே ஏகாதிபத்தியத்திற்கும் நிலப்பிரபுத்துவத்திற்கும் இடையில் உருவாகியிருந்த கூட்டணி அடிப்படையில், நிலப்பட்டா, பட்டம் வரி, ஆகியவற்றை அளவு கோலாக வைத்து தன் அதிகாரத்திற்குச் சேவைசெய்யும் வர்க்கங்களுக்கு இச்சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம் அமையவுள்ள அரசதிகார அமைப்புகளில் இடம் அளிப்பது மற்றும் பிற சலுகைகளை வழங்குவது என்பதே இச்சீர்திருத்தங்களின் நோக்கம் ஆகும். உண்மையான ஜனநாயகத்தைத் கொண்டுவருவதோ, இச்சலுகைகளைப் பெறுகின்ற பிரிவினருக்கு ஜனநாயக உரிமைகளை வழங்குவதோ நோக்கமாக இல்லை. சுருங்கக்கூறின், இது பிரிட்டிஷ் காலனி ஆட்சியில் ஒரு செயல்தந்திரம் ஆகும். உருவாகிவந்த தேசிய இனங்களை மத அடிப்படையில் உடைப்பது; பிரிப்பது. ஒரு மொழி அடிப்படையில் மாநிலங்கள் அமைப்பதற்குப் பதிலாக, பலமொழி பேசும் மக்களை உள்ளடக்கிய மாநிலங்களை உருவாக்குவது, மக்களின் ஒன்றுபட்ட போராட்டங்களைத் தடுத்து நிறுத்த சாதி அடிப்படையில் மக்களைப் பிரிப்பது, இதன்மூலம் மதம் மற்றும் சாதி பிற்போக்கை நிலைநிறுத்துவது; அனைத்து மக்களுக்கும் வாக்குரிமை என்பதற்கு மாறாக, முதலாளித்துவத்திற்கு முந்தைய ஆளும் வர்க்கப் பிரிவினருக்கு மட்டுமே வாக்குரிமை ஆகிய இச்சீர்த்திருத்தம் - காலனி ஆதிக்கச் சீர்திருத்தக் கொள்கையே தவிர, இந்தியச் சமுதாயத்தை ஜனநாயகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதல்ல. இத்தகைய நிலைமைகளில்தான், புதிதாக நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, சாதி ஒழிப்பு என்பவற்றை முன்னிறுத்தாமலும், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்கிற ஜனநாயகக் கோட்பாட்டை முன்னிறுத்தாமலும், காலனிய ஆட்சியதிகாரத்தை அண்டிப்பிழைப்பதையும் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டன. இட ஒதுக்கீடு, அதிகாரப்பகிர்வு என்பதையே முழுமுதல் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டன.

ஆகவே, அடையாள அரசியலை எதிர்த்தும் வர்க்கச் சமரச பாதையை எதிர்த்தும் ஒரு சரியான அரசியல் வழியை முன்னெடுப்பதற்கு  இந்நூல் துணைபுரியும். 

- ஏ.எம்.கே

(ஈரோட்டு பாதை சரியா? நூலின் முன்னுரையிலிருந்து)