டிராட்ஸ்கியின் துரோக வரலாறும் நவீன டிராட்ஸ்கியமும் நூலுக்கு ஓர் அறிமுகம்

சமரன்

டிராட்ஸ்கியின் துரோக வரலாறும் நவீன டிராட்ஸ்கியமும் நூலுக்கு ஓர் அறிமுகம்

மார்க்சிய லெனினியத்திற்கு எதிரான அனைத்து விதமான திருத்தல்வாத, கலைப்புவாத குப்பைக் கூளங்களையும் ஒன்று திரட்டி ஓரிடத்தில் கொட்டும்போது உருவாகும் குப்பை மேட்டிற்கு டிராட்ஸ்கியவாதம் என்று தாராளமாக பெயரிடலாம். டிராட்ஸ்கியின் அனைத்து கருத்துக்களும் குட்டி முதலாளித்துவ சந்தர்ப்பவாதத்திலிருந்து முளைத்து வந்தவையே. 

கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் இத்தகைய ஆபத்தான டிராட்ஸ்கியவாதம் ஊடுருவ முயற்சித்து வரும் இன்றைய சூழலில் இந்நூலை வெளியிடுவது மிகவும் பொருத்தமானதாகும். 

இந்நூல் மூன்று பகுதிகளை உள்ளடக்கியுள்ளது.

1. டிராட்ஸ்கியின் துரோக வரலாறும் கலைப்புவாதமும்

2. நவீன டிராட்ஸ்கியம் மற்றும் புதிய இடதுகளின் கூட்டணி

3. பாசிசம் பற்றிய நவீன டிராட்ஸ்கியவாதிகளின் திரிபுகள்

1. டிராட்ஸ்கியின் துரோக வரலாறு 

டிராட்ஸ்கியின் துரோக வரலாறு என்ற முதல் பகுதியில் டிராட்ஸ்கியின் துவக்கக் கால அரசியல் முதல் இறுதி கால அரசியல் வரை விவரிக்கப்பட்டுள்ளது.

டிராட்ஸ்கியின் வரலாறு என்பது சாரத்தில் லெனினிய விரோத துரோகத்தின் வரலாறு என்பது ஆதாரங்களுடன் இதில் முன்வைக்கப்பட்டுள்ளது. 

டிராட்ஸ்கி தனது அரசியல் வாழ்வு முழுவதிலும் எப்போதும் மார்க்சிய-லெனினியத்தின் பக்கம் நின்றதில்லை. முதலில் அவன் பாப்புலிச மிதவாதத்தை தழுவினான். அடுத்து பொருளாதார வாதிகளின் பக்கம் சாய்ந்தான். பிறகு ருசிய சமூக ஜனநாயக கட்சியில் மென்ஷ்விக்குகள் பக்கம் நின்று கொண்டு லெனினைத் தாக்கினான். கட்சி விதிகள் பற்றிய வாதத்தில் மார்டோவ் பக்கம் நின்று கொண்டு லெனின் முன்வைத்த கட்சி கோட்பாடுகளை சிறுமைப்படுத்தினான். ஜனநாயக மத்தியத்துவ கோட்பாடு எதேச்சதிகார கோட்பாடு என்றான். 

மென்ஷ்விக்குகளுக்கும் நேர்மையாக இல்லாமல் அங்கு கோஷ்டி கட்டினான். கம்யூனிஸ்ட் கட்சிக்குள் "கோஷ்டியாக" இயங்கலாம் என்பதை முதன் முதலில் வலியுறுத்தி அதை துவக்கி வைத்தவன் டிராட்ஸ்கியே. கோஷ்டிவாதமே டிராட்ஸ்கியின் அரசியல் பதாகையாக இருந்தது. இந்தப் பதாகையின் கீழ்தான் லெனினிய எதிர்ப்பு கோஷ்டிகளை உருவாக்கி ஒன்று திரட்டினான். 

முதல் ரஷ்யப் புரட்சியின் துவக்கத்தில் இடது சந்தர்ப்பவாதிகளுடன் சேர்ந்தான் டிராட்ஸ்கி. ஜெர்மனியை சேர்ந்த இடது சந்தர்ப்பவாதியான "பர்வேஸ்" என்பவனின் நிரந்தரப் புரட்சி என்ற கருத்தைத் திருடி தனது பெயரில் வெளியிட்டான். 

டிராட்ஸ்கியின் "நிரந்தரப் புரட்சி" கருத்தியல் காவுத்ஸ்கியின் அதீத ஏகாதிபத்திய கருத்துடன் ஒத்திருந்ததால் லெனின் டிராட்ஸ்கியை காவுத்ஸ்கியவாதி என்றார். டிராட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கொள்கையானது இடது சந்தர்ப்பவாத அபத்தம் என்று சாடினார் லெனின். 

நிரந்தரப் புரட்சி என்பது தனியொரு நாட்டில் புரட்சி சாத்தியம் என்ற லெனினியத்திற்கு நேர் எதிரான "ஏக கால ஐரோப்பிய புரட்சியை" முன் வைக்கும் கற்பனாவாத கருத்தாகும். நாடு கடந்த மூலதன ஏகபோகங்களின் ஒன்றிணைவு (அதீத ஏகாதிபத்தியம்) உருவாகிவிட்டது என்று கூறி தனி நாட்டில் புரட்சிக்கான சாத்தியப்பாட்டை மறுத்து ஐரோப்பிய புரட்சி பேசிய காவுத்ஸ்கியின் கருத்தும் இதுவே ஆகும். 

முதல் ரஷ்ய புரட்சி தோல்வி அடைந்த போது கலைப்புவாதம் மேலோங்கியது. கட்சியை வெளிப்படையான ஒன்றாக மாற்றும் முயற்சியில் கலைப்பாளர் குழு ஒன்றும், ஆக்டோவிஸ்டுகள் என்ற கோஷ்டியும் உருவானது. இவ்விரு கோஷ்டிகளுக்கும் டிராட்ஸ்கியே ஆதர்சமாக இருந்தான். 

முதல் உலகப்போரின் போது, காவுத்ஸ்கி உள்ளிட்ட இரண்டாவது அகில சந்தர்ப்பவாதிகளின் "தாய் நாட்டை பாதுகாப்போம்" என்ற ஏகாதிபத்திய ஆதரவு, சமூக தேசியவெறி கோட்பாட்டை ஆதரித்தான்.

1917 பிப்ரவரி புரட்சியை, "புரட்சியே அல்ல" என்று மென்ஷ்விக்குகளுடன் சேர்ந்து கொண்டு முழங்கினான் டிராட்ஸ்கி. ஜனநாயகப் புரட்சியின் முதலாளித்துவத் தன்மை பற்றிய அறிவு அவனின் சிந்தனைக்கு எட்டவில்லை. 

1916 இறுதியில் அமெரிக்கா சென்ற டிராட்ஸ்கி, 1917 மே மாதம் ரஷ்யா திரும்பினான். அதாவது, நவம்பர் புரட்சி (சோசலிசப் புரட்சி) நடப்பதற்கு ஐந்து மாதங்களுக்கு முன்புதான் ரஷ்யா வந்தான் டிராட்ஸ்கி. அங்கு மத்தியத்துவ நிலையில் இருந்த அமைப்பு ஒன்றில் சேர்ந்தான். அதன் ஜூலை ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதற்காக டிராட்ஸ்கி சிறை சென்றபோது அவ்வமைப்பு போல்ஷ்விக் கட்சியில் இணைந்தது. எனவே சிறையில் இருந்து வெளியே வந்த டிராட்ஸ்கியும் அந்த அமைப்பின் தலைவர்களில் ஒருவன் என்ற முறையில் கட்சியில் சேர்க்கப்பட்டான். அதாவது புரட்சி நடப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்புதான் கட்சியில் சேர்ந்தான். ஆனால் லெனின்தான் டிராட்ஸ்கியை கட்சியில் சேர்த்தார் என்றும் டிராட்ஸ்கி லெனினுடன் சேர்ந்து புரட்சி நடத்தியதாகவும் டிராட்ஸ்கியவாதிகள் கதை கட்டி வருகின்றனர்.

கட்சியில் டிராட்ஸ்கி சேர்ந்ததன் நோக்கமே உள்ளிருந்து லெனினியத்தை தாக்கவும் லெனினுக்கு எதிராக கோஷ்டி வாதத்தை துவக்கவும்தானே ஒழிய வேறு நோக்கம் அவனுக்கு இல்லை. அவன் திட்டமிட்டு கட்சியில் ஊடுருவியதாக போல்ஷ்விக் கட்சி வரலாறு கூறுகிறது.

பிப்ரவரி (ஜனநாயக) புரட்சியை புரட்சியே இல்லை என்று கூறிய டிராட்ஸ்கி நவம்பர் (சோசலிச) புரட்சியை ஜனநாயகப் புரட்சி என்றான். ஐரோப்பா முழுவதும் முதலாளித்துவம் வளர்ச்சி பெறும் வரை நாம் காத்திருந்து சோசலிச புரட்சியை நடத்த வேண்டும் என்றான். தனியொரு நாட்டில் புரட்சி சாத்தியமில்லை என்பதால் தனியொரு நாட்டில் சோசலிச நிர்மாணமும் சாத்தியமில்லை என்றான். லெனின் காலத்திலும், ஸ்டாலின் காலத்திலும் தன்னால் இயன்றவரை சோசலிசக் கட்டுமானம் பற்றிய லெனினியத்தை தாக்கி வந்தான். குலாக்குகளின் போராட்டத்தை தூண்டி விட்டான். புகாரின், ராடேக், ஜினோவிவ் கும்பலுடன் கோஷ்டி கட்டி முதலாளித்துவ மீட்புக்கான சதி வேலைகளில் தீவிரமாக இறங்கினான். 

இரண்டாவது உலகப் போர் மற்றும் பாசிச காலகட்டத்தில் ஸ்டாலின், டிமிட்ரோவ் உள்ளிட்ட தலைவர்களின் பாசிச எதிர்ப்பு கோட்பாடுகளையும் ஐக்கிய முன்னணியையும் டிராட்ஸ்கி தாக்கினான். ஸ்டாலின் ஒரு முதலாளித்துவ தேசியவாதி; சர்வாதிகாரி என்றான். பாசிச சக்திகளுடன் உறவாடினான். 

பாசிச சக்திகளின் உதவியுடன் சோவியத் ரஷ்யாவிற்கு எதிராக ஆயுதம் தாங்கிய எதிர் புரட்சிக்கு அவன் தயாரிப்பு செய்தான். ஆதலால் கட்சி முழுவதும் அவனுக்கு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அவன் சோவியத் யூனியிலிருந்து வெளியேற்றப்பட்டான். முன்னதாக கட்சியில் இருந்தும் பதினைந்தாவது காங்கிரசில் நீக்கப்பட்டிருந்தான்.

 

உலகெங்கிலும் கம்யூனிஸ்ட் கட்சிகளிலிருந்து நீக்கப்பட்டிருந்த டிராட்ஸ்கிய வாதிகளை "உலக ஓடுகாலிகளே ஒன்று சேருங்கள்" என்ற முழக்கத்தின் கீழ் ஒன்று திரட்டி "நான்காவது அகிலம்" ஒன்றை உருவாக்கினான் டிராட்ஸ்கி. பாசிச சக்திகளின் உதவியுடனும் ஆசீர்வாதத்துடனும் உருவான இந்த நான்காவது அகிலத்தின் நோக்கம் சோவியத் யூனியனை வீழ்த்துவதாகவே இருந்தது. ஆனால் பாசிசம் சோவியத் யூனியனினால் வீழ்த்தப்பட்டதை தொடர்ந்து இந்த கலைப்புவாத அகிலமும் சிதறுண்டது. 

இவ்வாறு டிராட்ஸ்கியின் துரோக வரலாறும் வரலாற்றுத் துரோகமும் இப்பகுதியில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

2. நவீன டிராட்ஸ்கியம் மற்றும் புதிய இடதுகளின் கூட்டணி

இந்தப்பகுதியில் சமரன் குழுவிற்குள் மனோகரன் கும்பல் முன்வைத்த நவீன டிராட்ஸ்கியவாதம் குறித்தும், அதை எதிர்த்த கட்சியின் போராட்டம் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் நவீன டிராட்ஸ்கியவாதத்தின் கலைப்புவாதப் பண்புகளை நாம் அறிந்து கொள்ள இப்பகுதி உதவுகிறது.

சிதறுண்டு போன 4-வது அகிலம் (டிராட்ஸ்கிய வாதிகளின் அகிலம்) ரசியா, சீனாவில் ஏற்பட்ட முதலாளித்துவ மீட்சிக்குப் பிறகு, மீண்டும் 90 களில் எகாதிபத்தியவாதிகள், அவர்களின் தொண்டு நிறுவனங்கள் மற்றும் புதிய இடது கலைப்புவாத முகாம் மூலம் இயக்கப்பட்டு வருகிறது. 

குருசேவின் நவீன திருத்தல்வாதத்தின் துவக்கமே நவீன டிராட்ஸ்கியவாதத்தின் துவக்கமாகவும் உள்ளது. "ஸ்டாலினின் சர்வாதிகார எதிர்ப்பு" எனும் பெயரில் குருசேவ் துவங்கி வைத்த பாட்டாளி வர்க்க சர்வாதிகார எதிர்ப்புக் கொள்கையே நவீன திருத்தல்வாதத்தின் துவக்கப்புள்ளியாகவும், நவீன திருத்ததல்வாதத்தின் துவக்கப்புள்ளியே நவீன டிராட்ஸ்கியவாதத்தின் துவக்கப்புள்ளியாகவும் உள்ளது. 

ஓடுகாலி டிராட்ஸ்கியின் உண்மையான சீடனாக குருசேவ் விளங்குகிறார்; குருசேவின் ஆட்சிக் காலத்தில் டிராட்ஸ்கிய சவங்கள் உயிர் பெற்றுவிட்டன என்ற மாவோவின் கூற்று இதை உண்மை என்று நிரூபிக்கிறது.

பழைய டிராட்ஸ்கியம் மார்க்சுக்கு எதிராக லெனினையும், லெனினுக்கு எதிராக ஸ்டாலினையும் முன்நிறுத்தியது. நவீன டிராட்ஸ்கியம் மாவோவின் விமர்சனங்களை உருவியெடுத்து ஸ்டாலினை தாக்கி, பிறகு மாவோவையும் தாக்குகிறது.

"ஸ்டாலினின் சர்வாதிகார எதிர்ப்பு" பிரச்சாரத்தின் மூலம் குருசேவ், கோர்ப்பசேவ், டிராட்ஸ்கியின் கலைப்புவாதக் கருத்துகளை இங்கு அ.மார்க்ஸ், எஸ்.வி.ஆர் உள்ளிட்ட புதிய இடது கலைப்புவாத கும்பல் பரப்பியது; இன்றும் பரப்பி வருகிறது. லெனினுக்குப் பிறகு டிராட்ஸ்கிதான் தகுதியான தலைவர்; ஸ்டாலின் அல்ல என்ற துரோகத்தனமான கருத்தினை தமிழகத்தில் துவக்கி வைத்தது இந்த கும்பலே.

கோர்ப்பசேவ் கலைப்புவாதம் மற்றும் டெங் திரிபுவாதத்தால் இரசிய, சீன சோசலிச அரசுகள் முதலாளித்துவ அரசுகளாக மாற்றப்பட்ட நிலைமைகளைச் சாக்காகக் கொண்டு, டிராட்ஸ்கியம் மீண்டும் தலைதூக்குகிறது. "தனியொரு நாட்டில் புரட்சி சாத்தியமில்லை" என்று டிராட்ஸ்கி சொன்னது நிரூபிக்கப்பட்டுவிட்டது என்ற லெனினிய விரோத நவீன டிராட்ஸ்கியவாதம் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் ஊடுருவி செல்வாக்கு செலுத்தி வருகிறது. அண்மையில் நேபாள மாவோயிஸ்ட் கட்சி "அதீத ஏகாதிபத்தியம்" பேசி தனிநாட்டில் புரட்சி சாத்தியமில்லை என்ற டிராட்ஸ்கிய-காவுத்ஸ்கியவாதத்தை முன்வைத்து புரட்சிக்கு துரோகம் இழைத்தது. இதனைத் தொடர்ந்து உலகெங்கிலும் எம்.எல். அமைப்புகள் நேபாள மாவோயிச கட்சியின் கலைப்புவாதத்திற்கு பலியாகி வருகின்றன. அந்தப் போக்கு தமிழக எம்.எல். அமைப்புகளிலும் பெருகி வருகிறது.  

குருசேவின் வலது சந்தர்ப்பவாத-பாராளுமன்றவாத அமைதி வழி சோசலிசமும், டிராட்ஸ்கியின் இடது சாகசவாத-அராஜகவாத-இடது சந்தர்ப்பவாத "ஏககாலப் புரட்சி" உள்ளிட்ட கலைப்புவாத கருத்துகளும் எம்.எல். அமைப்புகளை பிடித்தாட்டும் இன்றைய சூழலில் அதை எதிர்த்துப் போராட வேண்டியதன் அவசியத்தை இந்நூல் வலியுறுத்துகிறது.

3. பாசிசம் பற்றிய நவீன டிராட்ஸ்கியவாதிகளின் திரிபுகள்

பாசிசம் குறித்த நவீன டிராட்ஸ்கியவாதிகளின் திரிபுகள் பாசிசம் பற்றிய மார்க்சிய நிலைபாடுகளை குழப்புகின்றன. நாடுகடந்த நிதி மூலதனம்-நாடு கடந்த பாசிசம் போன்ற காவுத்ஸ்கிய-டிராட்ஸ்கிய கலைப்புவாதங்களை எதிர்த்து போராட வேண்டியதன் அவசியத்தை இந்நூல் உணர்த்துகிறது. இவை டிராட்ஸ்கியும், காவுத்ஸ்கியும் முன்வைத்த "அதீத ஏகாதிபத்தியம்", நிரந்தரப் புரட்சி" கருத்துகளின் மறுபதிப்பேயாகும். கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட நவீன டிராட்ஸ்கியவாதியான மனோகரன் (பாட்டாளி வர்க்க சமரன் அணி) அண்மையில் முன்வைத்த இந்த கலைப்வுவாத நிலைப்பாட்டிற்கு சமரன் குழு வெளியிட்ட மறுப்பு அறிக்கை இதில் இணைக்கப்பட்டுள்ளது. இதில் மேற்கண்ட கலைப்புவாத கருத்துகளை விமர்சித்து எழுதப்பட்டுள்ளது. வர்க்க அடிப்படையில் இல்லாமல் தனிமனித (அ) வெறுமனே கட்சி சார்ந்த பாசிசம் (போனாபார்ட்டிஸம்) என்று டிராட்ஸ்கி முன்வைத்த அடையாள அரசியல் "பாசிச எதிர்ப்பு" தோரணையில் வலம் வந்து, பாஜக பாசிசத்திற்கு மாற்று திமுக என்பதாக மருவி நிற்கிறது. இதிலிருந்து பாசிசம் நிலவும் சூழலில் புரட்சி பற்றி பேசக்கூடாது எனவும் நவீன டிராட்ஸ்கியவாதிகள் கூறி வருகிறார்கள்.

ஸ்டாலினின் பாசிச எதிர்ப்பு நிலைபாடு தவறு; ஜெர்மன் சமூக-ஜனநாயக கட்சியை அவர் ஆதரிக்காமல் போனதால்தான் அங்கு பாசிசம் வென்றது என்ற நவீன டிராட்ஸ்கியர்களின் அவதூறுகளுக்கு தோழர் சுந்தரசோழனின் கட்டுரை ஆணித்தரமான மறுப்பை முன்வைத்துள்ளது.

"லெனினின் காங்கிரசுக்கு கடிதம் (லெனின் உயில்) எனும் கட்டுரையை முன்வைத்து லெனினுக்குப் பிறகு டிராட்ஸ்கிதான் தலைவர்; ஸ்டாலின் அல்ல என்று நவீன டிராட்ஸ்கியர்கள் பேசி வரும் சூழலில், அதன் உண்மைத் தன்மை பற்றி கேள்வி எழுப்பும் தோழர் சுந்தரசோழனின் சிறு கட்டுரை பிற்சேர்க்கையில் இணைக்கப்பட்டுள்ளது.

தொகுத்துச் சொல்வதெனில் டிராட்ஸ்கியின் துரோக வரலாறு, நவீன டிராட்ஸ்கியவாதம், பாசிசம் குறித்த நவீன டிராட்ஸ்கியவாதம் எனும் பகுதிகளை உள்ளடக்கிய இந்த நூல் மார்க்சிய-லெனினியவாதிகளும், எம்.எல். அமைப்புகளும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் அவசியம் வாசிக்க வேண்டிய நூலாகும். டிராட்ஸ்கியவாதம் எனும் லெனினிய விரோத கலைப்புவாதத்தை எதிர்த்துப் போரிட இந்நூல் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் இந்நூலை வெளியிடுவதில் 'சமரன்' பதிப்பகம் மகிழ்ச்சி அடைகிறது.

சமரன்

நூலினை பெற தொடர்பு கொள்ளவும்: 

90953 65292

சென்னை புத்தக காட்சியிலும் (அரங்கு எண் 535 - புது உலகம்) கிடைக்கிறது.