கேரளக் கதை : இந்துத்துவத்தின் அவல பொய்
ஶ்ரீதர் சுப்ரமணியம்
கடந்த மூன்று நாட்களாக 'கேரளா ஸ்டோரி' திரைப்படம் பெரும் அலைகளை கிளப்பி வருகிறது. கதை பேசும் களம் புதிதல்ல; இந்துத்துவர்கள் அடிக்கடி அங்கலாய்த்துக் கொண்டிருக்கும் விஷயம்தான். ஐஎஸ்ஐஎஸ் அல்லது இஸ்லாமிக் ஸ்டேட் எனும் இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கம் இந்தியாவில் இருந்து இந்துப் பெண்களை மூளைச் சலவை செய்து, மதம் மாற்றி சிரியா, ஆஃப்கானிஸ்தான் போன்ற பகுதிகளுக்கு அனுப்பி வருகிறது. அவர்கள் அங்கே பாலியல் அடிமைகளாக மாற்றப்படுகிறார்கள். பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள். இதுதான் கரு.
இதனைத் தங்களுக்குள் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்த இந்துத்துவர்கள் இப்போது அதனை உண்மை என்றே நம்ப ஆரம்பித்து விட்டார்கள். இதிலும் அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி தரும் விஷயம் பத்து ஆண்டுகளில் இதுவரை மொத்தம் 32,000 பெண்கள் இந்த வகையில் அனுப்பப்பட்டிருக்கிறார்கள், என்பதுதான். படமும் அதே எண்ணிக்கையை கொடுக்கிறது. படத்தின் இயக்குனர் சுதீப்தோ சென் தொடர்ந்து அந்த எண்ணிக்கையை பல்வேறு பேட்டிகளில் குறிப்பிட்டு வருகிறார்.
இந்தத் தகவல் அதீதமான பொய் என்று உணரும் அடிப்படை அறிவு கூட இந்துத்துவர்களுக்கு இல்லை என்பதுதான் இங்கே ஆகப்பெரிய சோகம். 32,000 பெண்கள் கடத்தப்பட்டது உண்மை என்றால் பாஜக வெறுமனே சினிமா எடுத்து புலம்பிக் கொண்டு இருக்காது. இந்தியாவின் முஸ்லிம்-வாழ் பகுதிகள் எல்லாமே தரை மட்டமாகி இருக்கும். அப்படி நடக்கவில்லை என்றால் உள்துறை அமைச்சராக இருப்பவர் கிஞ்சித்தும் திறமையற்ற மனிதர் என்றுதான் பொருள் கொள்ள வேண்டும்.
உண்மை என்ன? ஹிண்டுவின் ஒரு பழைய செய்தியின்படி கேரளாவில் இருந்து மொத்தம் 21 ஆண்கள் / பெண்கள் இஸ்லாமிக் ஸ்டேட் இயக்கத்தில் இணைந்திருக்கிறார்கள் என்று தேசிய பாதுகாப்பு நிறுவனம் 2017ல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருக்கிறது. [1] அமெரிக்க உள்துறை அமைச்சகத்தின் ஒரு அறிக்கையின்படி இந்தியாவில் இருந்து ஐஎஸ் இயக்கத்தில் இணைந்திருப்பவர்கள் எண்ணிக்கை மொத்தம் 66. (இது ஆண் பெண் இரண்டும் சேர்ந்த எண்ணிக்கை.)
தரவுகளைக் கூட விட்டு விடுவோம்: கொஞ்சமே கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நீங்கள் ஒரு நிறுவனம் வைத்து நடத்துகிறீர்கள். அதற்கு வேலைக்கு ஆள் எடுக்கிறீர்கள். உங்களுக்கு நூறு பேர் தேவை என்றால் அத்தனை பேரை எடுக்க எவ்வளவு நாள் பிடிக்கும்? அந்தப் பணியை செய்து முடிக்க எவ்வளவு ஹெச்ஆர் ஊழியர்கள் தேவைப்படும்?
நிற்க. இங்கே வெறுமனே ஆள் எடுப்பது மட்டும் பத்தாது. அவர்களை மூளைச்சலவையும் செய்ய வேண்டும். லவ் ஜிகாத் திட்டத்தின் (!) அடிப்படையில் அவர்களை 'காதலிக்கவும்' வேண்டும். எல்லாப் பெண்களும் இவர்கள் காதல் வலையில் வீழ மாட்டார்கள். எனவே குறைந்தது மூன்றில் இருந்து ஐந்துப் பெண்களை கரெக்ட் பண்ண முயற்சி செய்தால்தான் அதில் ஒன்று 'மாட்டும்'! 32,000 பேரை 10-12 ஆண்டுகளில் கரெக்ட் பண்ணுவது எனில் ஐஎஸ்சுக்கு மொத்தம் எத்தனை ஆட்கள் தேவைப்பட்டிருக்கும்? ஐஎஸ்சுக்கு இந்தியாவில் மாபெரும் நெட்வொர்க் இருந்திருந்தால் மட்டுமே இந்த எண்ணிக்கை சாத்தியம். ஆனால் இந்திய உள்துறை அமைச்சகமே பகிர்ந்த தகவலின்படி இந்தியாவில் மொத்தம் 155 ஐஎஸ் ஆட்கள்தான் இதுவரை கண்டறியப்பட்டிருக்கிறார்கள்.[3] இது காங்கிரஸ் ஆட்சியாக இருந்திருந்தால் கூட பிடிபட்டவர்கள் இவ்வளவுதான். மீதி தீவிரவாதிகளை அரசு கண்டு கொள்ள மறுக்கிறது என்று ஒரு மொண்ணைப் புகாரை வைக்கலாம். ஆனால் நடப்பது பாஜக ஆட்சி. இந்துத்துவத்தின் இரும்பு மனிதர்தான் உள்துறை அமைச்சராக இருக்கிறார். 56 இன்ச் விரிந்த மார்பு கொண்டவர் பிரதமராக இருக்கிறார். இவர்களாலேயே 155 பேரைத்தான் பிடிக்க முடிந்தது என்றால் மீதி ஜிகாத் காதலர்கள் எல்லாம் எங்கே போனார்கள்?
கேரளா ஸ்டோரி வைக்கும் புகாரும் அது தொடர்பாக இந்துத்துவர்கள் கொள்ளும் ஆர்கசங்களும் அடிப்படை உண்மை கூட இல்லாதவை; 'எருமை மாடு ஏரோப்ளேன் ஓட்டுது,' வகை கதைகள் என்பதில் கொஞ்சம் கூட சந்தேகம் இருக்கத் தேவையில்லை. படத்தில் டிரெய்லரிலேயே கூட அச்சுதானந்தன் பேசும் உரைக்கு கொடுத்த சப்டைட்டில் தவறான மொழிபெயர்ப்பு. அவர் சொல்லாதவற்றை எல்லாம் போட்டு அவர் சொன்னதாக விஷம் கக்கி இருக்கிறார்கள். படத்தில் எவ்வளவு கக்கி இருப்பார்கள் என்று டிரெய்லரிலேயே ஊகிக்க முடிகிறது.
எனவே இந்தப் படத்துக்கு எதிரான முஸ்லிம் எதிர்வினைகளைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இந்தப் படத்தை தடை செய்ய வேண்டும் என்று எழும் கூக்குரல்கள் ஆச்சரியம் தருகிறது. இவர்கள்தான் கொஞ்ச நாள் முன்பு பிபிசி ஆவணப்படத்துக்கு வந்த தடையை எதிர்த்து விமர்சித்து நின்றவர்கள். தாண்டவ், காட்மேன் போன்ற இந்து விமர்சனப் படங்களுக்கு வந்த எதிர்ப்பை கண்டித்தவர்கள். இந்துத்துவர்கள் காட்டிய பாசாங்குத்தனத்தை தாங்களும் காட்டுவது பற்றி இவர்களுக்கு வெட்கம் இல்லை என்பது ஆச்சரியமாக உள்ளது.
அதே போன்ற பாசாங்குத்தன எதிர்வினையை இந்துத்துவர்களிடமும் பார்க்கலாம். பிபிசி ஆவணப்படம், தாண்டவ், காட்மேன் போன்ற படங்களுக்கு எதிராக கொதித்து எழுந்தவர்கள், அவற்றைத் தடை செய்து போட வேண்டும் என்றவர்கள், பிபிசி அலுவலகத்தில் ரெய்டு விட்டதை கொண்டாடியவர்கள் இன்று ஒரே ராத்திரியில் கருத்து சுதந்திரக் காவலர்களாக மாறி விட்டார்கள். எங்களுக்கு வந்தால் மட்டுமே ரத்தம், அடுத்தவனுக்கு ஊறுவது தக்காளி சட்னி என்ற அணுகுமுறையை இரண்டு தரப்பிலுமே பார்க்க முடிகிறது.
கருத்து சுதந்திரம் என்பது எல்லா பக்கமும் குத்தும் வாள் என்று இந்த மதவாதிகள் புரிந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அதனால்தான் கருத்து சுதந்திரத்துக்கு லிமிட் வேணும் பாஸ் என்று எல்லா மதவாதிகளும் தொடர்ந்து வாதிட்டு வருகிறார்கள். அதற்கு மாறாக முழுமையான கருத்து சுதந்திரத்துக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் என் போன்றவர்களுக்கு 'நடைமுறை நிலவரத்தை புரிந்து கொள்ளாத கிறுக்கன்,' என்று பட்டம் கொடுக்கிறார்கள்.
நடைமுறை நிலவரம் என்ன? பொய்களைப் பேச, பரப்ப, வெறுப்புகளை கிளப்பி விட எங்களுக்கு இருக்கும் கருத்து சுதந்திரம் எதிராளிக்கு இருக்கக் கூடாது. அவ்வளவுதான்.
இன்றைக்கு இந்துத்துவத்திடம் அதிகாரம் இருப்பதால் பொய்களை, வெறுப்புகளை பரப்பும் அவர்களின் குரல்களுக்கு மட்டும் சிறப்பு சலுகையில் கருத்து சுதந்திரம்(!) வழங்கப்பட்டிருக்கிறது. விளைவு, கேரளக்கதை போன்ற அவலப் பொய்கள் பரப்பப்படுகின்றன. தாண்டவ், காட்மேன் போன்றவற்றின் குரல்வளைகள் நெறிக்கப்படுகின்றன.
- ஸ்ரீதர் சுப்ரமணியம்
(முகநூலில்)
Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு