அரசு ஊழியர்களுக்கு திமுக அளித்த அனைத்து வாக்குறுதிகளும் இதே நிலைதானா?

தமிழ்நாடு எய்ட்ஸ் காட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நல சங்கம்

அரசு ஊழியர்களுக்கு திமுக அளித்த அனைத்து வாக்குறுதிகளும் இதே நிலைதானா?

பத்திரிக்கை செய்தி:

 திமுக வின் 2021 தேர்தல் வாக்குறுதி எண்: 153- ல் கூறியப்படி தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய முடியாது என தமிழக அரசு அறிவிப்பு.

எச்ஐவி /எய்ட்ஸ்  நோய் பரவுவதைத் கட்டுப்படுத்தவும், தடுக்கவும், பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பராமரிப்பு மற்றும் ஆதரவினைத் தரும் பொருட்டும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் 1994 ஆண்டு  துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

 தமிழ்நாட்டில் எச்ஐவி /எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒன்றரை இலட்சம் மக்களுக்கு சேவை செய்யம் பணியை தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 2,500 ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

திமுக அரசு  2021 - ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கை எண் 153-படி நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 10 ஆண்டுகளுக்கு மேல்  எய்ட்ஸ் காட்டுப்பாட்டு வாரியத்தில் பணி புரியும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என்று கூறியிருந்தது.

 ஆனால் தற்பொழுது,  09-12-2025 தமிழ்நாடு எய்ட்ஸ் காட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நல சங்கத்தின் மாநில தலைவர் ஜெயந்தி அவர்களுக்கு எய்ட்ஸ் காட்டுப்பாடு திட்ட (TANSACS) இயக்குனர் திருமதி .  சீதாலட்சுமி, இ.ஆ.ப அவர்கள் அனுப்பியுள்ள கடிதத்தில்...

திராவிட முன்னேற்ற கழகம் தங்களது 2021-ஆம் வருட சட்டப் பேரவை தேர்தல் அறிக்கையில் தாங்கள் பதவிக்கு வந்தால் கீழ்க்கண்ட துறைகளின் ஒப்பந்தம் மற்றும் தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி எண் 153-ல் கீழ் கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

"அறநிலைத்துறை, காகித ஆலைகள், கூட்டுறவு நூற்பாலைகள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு வாரியம், தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள், உள்ளாட்சித் துறையில் மேல்நிலைக் குடிநீர்த் தொட்டிகள் பராமரிப்புப் பணியாளர்கள். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அரசுத்துறை மற்றும் அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களில் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வரும் அனைத்து ஒப்பந்த மற்றும் தற்காலிகப் பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்வது குறித்துப் பரிசீலிக்கப்படும்".

மேலே தெரிவித்தபடி, தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தில் பணிபுரியும் ஊழியர்களின் நிலையை பரிசீலினை செய்ததில்,

 தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம் 100%  மத்திய அரசு நிதி உதவியுடன் செயல்பட்டு வருவதால்  தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் (TANSACS) கீழ் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை திமுக தேர்தல்  வாக்குறுதி எண் :153 ன்படி  ஒப்பந்த பதவிகளை நிரந்தப்படுத்துவதற்கோ/ முறைப்படுத்துவதற்கோ அல்லது தொடர்வதற்கோ எந்தவிதமான ஏற்பாடும் இல்லை.மேலும் அரசு ஊழியர்களுக்கு பொருந்த கூடிய வேறு எந்த பயன்களும் மற்றும் சலுகைகளும் ஒப்பந்த ஊழியர்களுக்கு அனுமதிக்கப்படாது என்று தெரிவித்து உள்ளார்கள்.

அதே நேரத்தில், மணிப்பூர், ராஜஸ்தான், ஒரிசா ஆகிய  மாநில அரசுகள்  எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் பணி புரியும்  ஊழியர்களை பணி நிரந்தரம் செய்துள்ளார்கள்  என்பது குறிப்பிடத்தக்கது.

ஆளும் திமுக அரசு அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என்று மருத்துவம் மற்றும்  மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கட்டுபாட்டில் உள்ள மாநில திட்ட இயக்குநர் அறிவித்தது மிகவும் அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் உள்ளது.

 எனவே சென்னையில் 04-01-2026 ஆம் தேதி திமுக அரசு தேர்தல் வாக்குறுதி படி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்களை பணி நிரந்தரம் செய்திட வலியுறுத்தி மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த உள்ளதாக தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நல சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்துவது உட்பட அரசு ஊழியர்களுக்கு திமுக அளித்த அனைத்து வாக்குறுதிகளும் இதே நிலைதானா? என்பதை தமிழக முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும்.

2021 -ஆம் ஆண்டு அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றும் பட்சத்தில் 2026 - ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவுக்கு அரசு ஊழியர் ஆசிரியர்கள் பாடம் கற்றுக் கொடுப்பார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

( தமிழ்நாடு எய்ட்ஸ் காட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நல சங்கம்)

- சேரன் வாஞ்சிநாதன் (முகநூலில்)

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு