லெனினியத்தின் இன்றைய பொருத்தப்பாடு

அ.கா.ஈஸ்வரன்

லெனினியத்தின் இன்றைய பொருத்தப்பாடு
ஓவியம்: T. சௌந்தர்

லெனினது 155வது பிறந்த நாளில், மஜஇக அமைப்பின் சார்பாக, லெனினியத்தின் இன்றைய பொருத்தப்பாடு என்கிற தலைப்பில் பேசுவதற்காக நாம் கூடியிருக்கிறோம்.

லெனின் தேர்வு நூல்களை செந்தளம் பதிப்பகம் மறுபதிப்பாக வெளியிட்டதில் இருந்தும், என்சிபிஎச் மறுபதிப்பாக வெளியிட்டதில் இருந்தும் லெனினை பற்றி அதிகமாகவே பேசிவருகிறோம்.

திரும்பவும் லெனினைப் பற்றி பேச வேண்டுமா என்று நான் முதலில் நினைத்தேன், ஆனால் லெனினைப் பற்றி பேசுவதில் நமக்கு சலிப்பு ஏற்படுமா என்ன, அதனால் ஒப்புக் கொண்டேன்.

லெனின் பிறந்து 150 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது, அவர் மறைந்து 100 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்றும் நாம் லெனினது பிறந்த நாளில் கூடியிருக்கிறோம் என்றால், லெனின் இன்றும் நமக்கு வழிகாட்டியாக இருக்கிறார் என்பதே காரணமாகும்.

இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கி 100 ஆண்டுகள் ஆகப்போகிறது. கம்யூனிஸ்ட் கட்சியில் பிளவுகளும்,  பிரிவுகளும் பல ஏற்பட்டுவிட்டது. நாம் இன்று இப்படி பிரிந்து செயல்படுவது நமது பலத்தை முழுமையாக எதிரியிடம் காட்ட முடியாது. ஒற்றுமை நமக்கு அவசியமாகும். ஆனால் கம்யூனிசம் என்ற பெயரில் செயல்படும் அனைத்து கட்சிகளும் அமைப்புகளும் கம்யூனிசத்தை ஏற்றுக் கொண்டு செயல்படுவதாக நாம் கூறிட முடியாது.

அதனால் கம்யூனிசத்தை ஏற்றுக் கொண்ட கட்சியை இனம்காண வேண்டும், அவைகளுக்கு இடையே ஒற்றுமை ஏற்படுவதற்கான வழிகளைக் காண வேண்டும். 

கம்யூனிசத்தை ஏற்றுக் கொண்ட கட்சி என்றால், கம்யூனிசம் என்றால் என்ன என்கிற கேள்விக்கான விடையைத் தெரிந்து கொண்டால்தான் அதனை கொண்டு முடிவெடுக்க முடியும். 

தத்துவம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞானக் கம்யூனிசம் ஆகிய மூன்றையும் உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது தான் மார்க்சியம் என்பது நமக்குத் தெரியும். மூன்றையும் ஒருங்கிணைந்து புரிந்து கொள்வது கம்யூனிசம். 

இதனை முன்வைத்து ஒவ்வொன்றாக ஆய்வு செய்வது என்பது ஒரு பெரும் பணியாக இருக்கும். 

அப்படி என்றால் இதற்கு எளிய வழி என்ன? இருக்கிறது.

மார்க்ஸ் கண்டுபிடித்து உருவாக்கியதுதான் விஞ்ஞானக் கம்யுனிசம்.  மார்க்ஸ் கண்டுபிடிப்புகளில் மிக முக்கியமானதாக எங்கெல்ஸ்  இரண்டைக் குறிப்பிடுகிறார். 

வரலாறு பற்றிய பொருள்முதல்வாத கருத்தோட்டம், உபரி மதிப்பு மூலம் முதலாளித்துவப் பொருளுற்பத்தியின் ரகசியம் புலப்படுத்தப்படல் ஆகிய இந்த மாபெரும் இரு கண்டுபிடிப்புகளுக்காக நாம் மார்க்சுக்குக் கடமைப்பட்டிருக்கிறோம். இந்தக் கண்டுபிடிப்புகளின் விளைவாகச் சோஷலிசம் ஒரு விஞ்ஞானமாயிற்று.”  

(கற்பனாவத சோஷலிசமூம் விஞ்ஞான சோஷலிசமும்)

ஆக, வரலாற்றியல் பொருள்முதல்வாதம் என்கிற தத்துவத்தையும், முதலாளித்துவத்தின் சுரண்டலையும் அதன் அழிவையும் பற்றி பேசுகிற உபரி மதிப்பு ஆகிய இரண்டும் மார்க்சின் சிறந்த கண்டுபிடிப்பாக எங்கெல்ஸ் கூறியிருக்கிறார்.

இந்த இரண்டையும் முழுமையாகப் புரிந்து ஏற்றுக் கொண்ட கட்சியே கம்யூனிஸ்ட் கட்சி என்று கூறலாம். உபரி மதிப்பைப் பற்றி இங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் அதிகம் பேசுவதில்லை, அதனால் அதை இப்போதைக்கு விட்டுவிடுவோம். வரலாற்றியல் பொருள்முதல்வாதம் என்கிற மார்க்சியத் தத்துவம் மிகவும் முக்கியமானது என்பது தெரிகிறது. இந்த வரலாற்றியல் பொருள்முதல்வாத அடிப்படையில்தான் மார்க்சிய அரசியல் பொருளாதாரம் உருவாக்கப்பட்டுள்ளது.

எந்த வகையில் பார்த்தாலும் வரலாற்றியல் பொருள்முதல்வாதம் மிகமிக முக்கியமானதாகத் தெரிகிறது. 

வாழ்நிலைதான் சிந்தனையைத் தீர்மானிக்கிறது, சிந்தனை வாழ்நிலையைத் தீர்மானிக்கவில்லை என்பதே வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தின் அடிப்படை.

இந்த அடிப்படை என்ன சொல்கிறது என்றால், கருத்து, சிந்தனை என்பதெல்லாம் மக்கள் வாழ்கின்ற பொருளாதார நிலமைகளில் இருந்தே தோன்றுகிறது, சிந்தனை, கருத்து ஆகியவற்றில் இருந்து சமூகம், வரலாறு தோன்றுவதில்லை. 

பொருளாதார வாழ்நிலையில் இருந்தே கருத்து, சிந்தனை தோன்றுகிறது என்பது பொருள்முதல்வாதத் தத்துவம்.

கருத்து, சிந்தனையில் இருந்தே சமூகம், வரலாறு தோன்றுகிறது என்பது கருத்துமுதல்வாத் தத்துவம்.

இதனை வெளிப்படுத்துவதற்குதான் மார்க்ஸ் “அடித்தளம் மேற்கட்டமைப்பு” என்கிற கோட்பாட்டை உருவாக்கினார்.

அடித்தளம் மேற்கட்டமைப்பைத் தீர்மானிக்கிறது, மேற்கட்டமைப்பு அடித்தளத்தைத் தீர்மானிப்பதில்லை, மேற்கட்டமைப்பு அடிதளத்தின் மீது தாக்கம் செலுத்தலாம், ஆனால் அது தீர்மானிக்கும் அளவுக்கு செல்ல முடியாது என்று மார்க்சின் அடித்தளம் மேற்கட்டமைப்பு என்கிற கோட்பாடு கூறுகிறது.

இந்த அடித்தளம் மேற்கட்டமைப்பு என்கிற மார்க்சின் கோட்பாட்டைப் புரிந்து, இங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏற்றுக் கொண்டுள்ளதா? என்றால் பெரும்பான்மையான கட்சிகள், அமைப்புகள் புரிந்து ஏற்றுக் கொள்ளவில்லை என்பதே உண்மையாகும்.

அடித்தளம் மேற்கட்டமைப்பு என்பது இருவழிப்பாதை, இரண்டும் பரஸ்பர வினைபுரிகிறது என்கிற கருத்தே நம் நாட்டில் அதிகம் காணப்படுகிறது. அதாவது அடித்தளமும் மேற்கட்டமைப்பும் சம அளவுக்கு வினைபுரிகிறது, சம அளவுக்கு முக்கியத்துவம் உடையது என்று இக்கருத்து விளக்குகிறது.



இக்கருத்து பொருள்முதல்வாதமாகவும் இல்லாமல் கருத்துமுதல்வாதமும் இல்லாமல் நடுவில் நிற்கிறது. நடுப் பாதை என்று தத்துவத்தில் எதுவும் கிடையாது, இப்படி நடுவில் நிற்கிற அனைத்தும் இறுதியில் கருத்துமுதல்வாதத்துக்கே சேவை செய்கிறது.

இதனைப் மனதில் கொண்டு, “சமூக வளர்ச்சியின் அடித்தளமும் மேற்கட்டமைப்பும் பற்றி மார்க்சியம்” என்கிற தலைப்பில் நான் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் ஒரு நூலை எழுதினேன். அப்போது மிகச் சில தோழர்களே என்னை அறிவார்கள், பலருக்கு என்னை தெரியாது.

என்னை யார் என்றே தெரியாமல், எனது அடித்தளம் மேற்கட்டமைப்பு என்கிற நூல் வெளிவந்த சில நாட்களிலேயே, மஜஇக அமைப்பைச் சார்ந்த தோழர்கள் என்னை சந்தித்து, 100 நூல்களை வாங்கிச் சென்றார்கள். அதற்கு முக்கியக் காரணம் ஒன்று இருந்தது, அப்போது மஜஇக அமைப்பில் அடித்தளம் மேற்கட்டமைப்பு பற்றிய வகுப்புகள் நடைபெற்றது, அந்த நேரத்தில் எனது அடித்தளம் மேற்கட்டமைப்பு நூல் வந்ததால், அதனை உடனே  வாங்கிப் படித்தனர்.

அடித்தளம் மேற்கட்டமைப்பு பற்றிய கோட்பாட்டை மஜஇக அமைப்பு முக்கியத்துவம் கொடுத்து படிப்பதைக் கண்டு, எனக்கு அப்போது பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. மற்ற கட்சிகளைவிட, மற்ற அமைப்புகளை விட அடித்தளம் மேற்கட்டமைப்பு என்கிற கோட்பாட்டில் தெளிவானப் புரிதலை நோக்கி மஜஇக பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதை நான் அன்று கண்டு கொண்டேன். ஆனால் மஜஇக-வின் கட்சி முடிவுகள் அனைத்தையும் நான் ஏற்றுக் கொண்டேன் என்பது இதற்குப் பொருள் அல்ல. இதுவரை நான் எந்தக் கட்சியிலும் சேர்ந்து பயணிக்காமல், அனைத்து கட்சிகளையும் பார்வையிடுகிறேன்.

வாழ்நிலையே சிந்தனையைத் தீர்மானிக்கிறது என்கிற மார்க்சிய அடிப்படை வர்க்க சமூகம் இருக்கும் வரை நிலைத்திருக்கும். அதன் தேவை இருக்கும் வரை, அதை யாரும் ஒன்றும் செய்ய முடியாது.

அடுத்து லெனினியத்துக்கு வருவோம்

மார்க்சியத்தின் தொடர்ச்சியே லெனினியம், ஏகாதிபத்தியகால கட்ட மார்க்சியமே லெனினியம் என்பது நமக்குத் தெரியும்.

இந்த லெனினியத்தைப் பற்றியப் பேச வேண்டும் என்றால் அதற்கு ஓர் எளிய வழி இருக்கிறது.

1924ஆம் ஆண்டு ஸ்டாலின் எழுதிய “லெனினியத்தின் அடித்தளங்கள்” என்கிற நூலைப் படித்தால் போதும்.

இந்த நூலை தமிழில் முதலில் சென்னை புக் ஹவுஸ் வெளியிட்டது, அதற்கு அடுத்து கீழைக்காற்று வெளியிட்டது. இரண்டும் வெவ்வேறு மொழியாக்கங்கள் ஆகும்.

இந்த நூலை நாம் இங்கே முழுமையாகப் பார்க்க முடியாது, அதனால் அந்த நூலின் அத்தியாயங்களின் தலைப்பை முழுமையாக முதலில் பார்ப்போம். லெனினியத்தை எவ்வாறு அணுகுவது என்பதற்கு இது ஒரு புரிதலைத் தரும். 



ஒன்பது அத்தியாங்களைக் கொண்டுள்ளது இந்த நூல்.

1) லெனினிசத்தின் வரலாற்று வேர்கள்

2) ஆராயும் முறை

3) கோட்பாடு

4) பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரம்

5) விவசாயிகளின் பிரச்சினை

6) தேசியப் பிரச்சினை

7) செயல்தந்திரமும் இறுதிக்கோளும் (Strategy and Tactics)

8) கட்சி

9) வேலை செய்யும் பாணி

ஒன்பது தலைப்புகளில் லெனினியத்தை ஸ்டாலின் மிகச் சிறப்பாக எழுதியிருக்கிறார். கண்டிப்பாக ஒவ்வொரு கம்யூனிஸ்டும் அந்த நூலை பல முறைப் படிக்க வேண்டும். அப்போது நமக்கு இன்றும் லெனினியம் பொருந்துகிறது என்கிற முடிவுக்கு எளிதாக வர முடியும்.

ஒன்பது தலைப்புகளில் சிலவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு எனது கருத்துகளை பதிவு செய்கிறேன்.

முதலில் பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரம் என்கிற தலைப்பை எடுத்துக் கொள்வோம்.

பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரம் என்கிற சொல் மார்க்சால் உருவாக்கப்பட்டது, இந்த சொல்லை அப்படியே பயன்படுத்துவது இன்று பல கட்சிகளில் உள்ள தோழர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரம் என்பது ஒர் அதிகாரப் போக்கைக் குறிக்கிறது, அதனால் இதனை மென்மையாக மக்கள் ஜனநாயக அரசு எனக் கூறலாம் என்று பல வழிகளில் முயற்சிக்கின்றனர்.

முதலாளித்துவத்தை வீழ்த்தி தொழிலாளர்கள் அமைக்கும் அரசை எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் அது பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசே ஆகும். அதனால் இந்தப் பெயரைப் பயன்படுத்துவதே சரியாக இருக்கும். 

அரசு பற்றிய வர்க்கப் பார்வை நமக்குத் தெளிவாக இருக்குமானால் பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரம் என்கிற சொல்லே சரியானது என்பதில் சந்தேகம் ஏற்படாது.

இன்று நடைமுறையில் இருக்கும் நாடாளுமன்றம் என்பது முதலாளித்துவ வர்க்கத்தின் சர்வாதிகார அரசு என்பதைப் புரிந்து கொண்டிருந்தால், பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரம் என்று குறிப்பிடுவது தவறாகப்படாது.

ஆனால் முதலாளித்துவ வர்க்கத்தின் சர்வாதிகார அரசுக்கும் பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகார அரசுக்கும் பெரிய வேறுபாடு இருக்கிறது. முதலாளித்துவ சர்வாதிகாரத்தில் சுரண்டும் வர்க்க சிறுபான்மையினரால், பெரும்பான்மையான உழைக்கும் மக்கள், கட்டுப்படுத்தப்படுகின்றனர். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தில் பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் நலன்களின் அடிப்படையில் முதலாளித்துவ கருத்துடையவர்கள் அடக்கப்படுகிறார்கள்.

வளர்ச்சி அடைந்த கம்யூனிச சமூகத்தை அடைவதற்கு பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசு தேவை என்றே மார்க்ஸ் கூறியுள்ளார்.

அடுத்து தேசியப் பிரச்சினை, மார்க்சும் எங்கெல்சும் போலந்து, அயர்லாந்து போன்ற தேசியப் பிரச்சினையைப் பற்றி பேசியிருந்தாலும், இது பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் லெனின் பேசியும் எழுதியும் இருக்கிறார். ஸ்டாலினுடைய நூலும் தேசிய பிரச்சினையை மார்க்சிய வழியில் புரிந்து கொள்வதற்கு உதவும்.

நம் நாட்டில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளில் சில, லெனின் கூறிய தேசியப் பிரச்சினையைப் பற்றிய கருத்துகள், குறிப்பான ருஷ்ய நிலைமைக்கு உரியது என்று கருதுகின்றன. இது பெரும் தவறாகும். 

தேசியப் பிரச்சினைப் பற்றிய லெனின் கருத்துகள் மார்க்ஸ் எங்கெல்ஸ் கருத்துகளின்  தொடர்ச்சியாகத்தான் இருக்கிறது. அது ருஷ்ய நாட்டுக்கு மட்டுமல்ல அனைத்து நாடுகளுக்கும் உரியதாகும்.

நம் நாட்டில் நடப்பது என்னவென்றால், தமக்கு பிடித்த முடிவுகள், அல்லது தமது கட்சி எடுத்த முடிவுகளை மனதில் கொண்டு, லெனின் கூறியவற்றில் அவர்களுக்கு சாதகமான கருத்துகளை மட்டும் முன்னிருத்திவிட்டு, மற்றதை விட்டுவிடுகின்றனர். இது தவறானப் போக்காகும். 

லெனின் பிரிவினைவாதங்களைப் பற்றி பேசியிருக்கிறார், சுயநிர்ணய உரிமையை மறுக்கின்ற சிலத் தோழர்கள் இதனை மட்டும் சுட்டிக்காட்டுவதுடன் நின்றுவிடுகின்றனர். பிரிதலுடன் கூடிய சுயநிர்ணய உரிமை பற்றிய லெனினது கருத்தை விட்டுவிடுகின்றனர்.

தேசம் பிரிதலை மட்டும் பேசுகிற தோழர்கள், முரண்பட்ட இரண்டு தேசங்களின் தொழிலாளர்களின் ஒற்றுமையைப் பற்றி லெனின் பேசியதை முழுமையாக விட்டுவிடுகின்றனர்.

இப்படி லெனின் கூறியதை தமக்கு ஏற்றார் போல விளக்கம் கொடுப்பது தவறானதாகும். லெனின் கூறியதை ஒருங்கிணைந்து புரிந்து கொண்டு, நமது நாட்டு சூழ்நிலைமைக்கு ஏற்ப செயல்படுத்த வேண்டும். இதுவே சரியான வழியாக இருக்க முடியும்.

ஒரு பெரிய தேசம், சிறிய தேசத்தை ஒடுக்குகிறது என்றால் ஒற்றுமைக்கு வழியில்லாதக் காரணத்தால், பாதிக்கப்பட்ட சிறிய தேசம் பிரிந்து தனித்து ஒரு தேசமாக வெளிவருவதை மார்க்சியம் ஆதரிக்கிறது. ஆனால் பிரிந்து செல்ல விரும்புகிற அனைத்துப் போக்கையும் மார்க்சியம் ஆதரிக்கிறது என்று இதற்கு பொருள் அல்ல.

யாருடனும் சேராமல் தனித்திருத்தலை முன்வைத்து, தேசிய குறுகிய மனப்பான்மையால் உருவான இனவெறியாலும், தேசியவெறியாலும் கேட்கப்படுகின்ற பிரிவை பிரிவினைவாதம் என்கிறது மார்க்சியம். அவர்கள் மன விருப்பத்தின் அடிப்படையில் பிரிவினையைக் கோருகின்றனர். இன வேறுபாடு அடிப்படையில்  உருவான மன வேறுபாட்டை முன்னிருத்துவது பிரிவினைவாதம் ஆகும். 

அதாவது எந்த பிற தேசிய இன மக்களுடனும் நெருங்காத வகையில் தனித்த நாடாக ஒதுங்கி இருப்பதையும், தமது மொழிக்கென ஒரு நாட்டை எங்கேயேனும் கட்டியமைக்க வேண்டும் என்ற போக்கில் தனிநாடு கோருவதைவதையும் மார்க்சியம் பிரிவினைவாதம் என்கிறது. 

“எந்த விலை கொடுக்க நேர்ந்தாலும் சிறிய இனங்கள் அப்படியே என்றென்றும் இருந்தாக வேண்டும் என்பதை நாங்கள் ஆதரிப்பவர்கள் அல்ல. பிற நிலைமைகள் பொருத்தமாய் இருக்கையில், சந்தேகத்துக்கு இடமின்றி நாம் மத்தியத்துவத்தையே ஆதரிக்கிறோம், நகர்ப்புற நடுத்தர மக்களது குறிக்கோளான கூட்டாட்சி உறவுகளை எதிர்க்கிறோம்.”

(மகா ருஷ்யர்களின் தேசியப் பெருமித உணர்ச்சி குறித்து)

இந்த லெனினது கூற்றை, நம் நாட்டில் உள்ள பல தோழர்கள் அவ்வளவு எளிதாக ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை என்பது உண்மையான நிலமையாகும்.

அதைவிட தேசிய கலாச்சார அடிப்படையில் பிரிவினையை கோருவதை மார்க்சியப் பார்வை என்று பல தோழர்கள் நம்நாட்டில் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களது கலாச்சாரத்தை தனித்துக் காக்க வேண்டும் என்கிற அடிப்படையில் தனிநாடு கேட்பதை மார்க்சியம் ஏற்றுக் கொள்ளவில்லை.

தேசிய-கலாச்சாரத் தன்னாட்சி என்பது தொழிலாளர்களின் வர்க்க உணர்வை பிளவுபடுத்துகிறது. தேசிய-கலாச்சாரத் தன்னாட்சி என்கிற போக்கு தேசியவாதத்தை, தேசியவெறியை உருவாக்குகிறது. தேசிய-கலாச்சாரத் தன்னாட்சி என்கிற குட்டி முதலாளித்துவ தேசியவாதமானது, பாட்டாளி வர்க்க சர்வதேசிய கண்ணோட்டத்துக்கு எதிரானது ஆகும். 

இது பற்றிய லெனினது விளக்கம் தெளிவாகவே இருக்கிறது.

“"கலாச்சார-தேசிய தன்னாட்சி'' என்றால் மிகமிகத் துல்லியமாக்கப்பட்ட, எனவே மிகவும் தீமையை விளைவிக்கக்கூடிய தேசியவாதம் என்று பொருள்படும்; தேசிய கலாச்சாரம் என்ற முழக்கத்தின் மூலம் தொழிலாளர்களின் வர்க்க உணர்வைக் கெடுத்து விடுவது, தேசிய பாகுபாட்டின்படி பள்ளிகளைப் பிரித்து வேறுபடுத்த வேண்டும் என்ற மிகவும் தீமை தரத்தக்கதும் ஜனநாயகத்துக்கு முரணானதுமான பரப்புரை என்றே பொருள்படும். சுருங்கக் கூறினால், இச் செயல்திட்டமானது சந்தேகத்துக்கு இடமின்றிப் பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேசியவாதத்திற்கு முரண்படுகிறது; இது தேசியவாதக் குட்டி முதலாளிகளின் லட்சியங்களுடன் மட்டும் இணைந்ததாக இருக்கிறது.” 

(ருஷ்யாவின் சமூக-ஜனநாயக தொழிலாளர் கட்சியின் தேசிய செயல்திட்டம்- பக்-11) 

பாட்டாளி வர்க்கத்தின் முழக்கம் சர்வதேசிய கலாசாரம் என்கிறார் லெனின். 

“தொழிலாளி வர்க்க ஜனநாயகத்தின் முழக்கம் “தேசிய கலாசாரம்” அல்ல, ஜனநாயகத்தின், உலகு தழுவிய தொழிலாளி வர்க்க இயக்கத்தின் சர்வதேசிய கலாச்சாரம் ஆகும்.”

(தேசிய பிரச்சினை பற்றிய விமர்சனக் குறிப்புகள்- பக்- 23) 

பாட்டாளி வர்க்க சர்வதேசியமானது, தேசங்களின் பிரிவினையை அகற்றுவதாகும். தேசங்களுக்கு இடையே உறவுகளை மேன்மேலும் நெருங்கிவருவதற்கு உதவுவதாகும். பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேசிய கண்ணோட்டம், அனைத்து நாட்டுத் தொழிலாளர்களையும் இணைக்கிறது. தேசிய கலாச்சாரம் என்கிற கண்ணோட்டம் தொழிலாளர்களைப் பிரித்து அவர்களது சக்திகளை பலவீனப்படுத்துகிறது. 

“கலாச்சார-தேசிய சுயாட்சி, ஒரு வட்டாரத்தில் வாழும் மக்களை, ஒரே தொழில்துறை நிறுவனத்தில் வேலை செய்து வரும் மக்களை அவர்களது பல்வேறு “தேசிய கலாச்சாரங்களின்” பிரகாரம் செயற்கையாகப் பிரிக்கிறது. வேறு சொற்களில் கூறினால், இது தொழிலாளர்களுக்கும் அவர்களது தேசங்களின் முதலாளித்துவக் கலாச்சாரத்துக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துகிறது. ஆனால் சமூக-ஜனநாயகவாதிகளின் நோக்கமோ உலகப் பாட்டாளிகளின் சர்வதேசிய கலாச்சாரத்தை வளர்ப்பதாகும்”

(தேசிய பிரச்சினை தீர்மானம்-1917 )

பாட்டாளி வர்க்கத்தின் கலாச்சாரம் சர்வதேசிய வழியிலானது என்று கூறுவதனால், பாட்டாளி வர்க்கத்தின் தேசிய கடமைகள் புறக்கணித்துவிடக்கூடாது. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் உழைக்கும் மக்களுக்குத் தேசம் கிடையாது என்று கூறப்பட்டதில் உள்ள, உண்மைப் பொருளைப் புறக்கணித்துவிட்டு, சர்வதேசிய போராட்டத்தை மட்டும் வலியுறுத்துகிற போக்கு இன்று, நம் நாட்டில் மட்டும் அல்ல, சர்வதேசத்திலும் காணப்படுகிறது. அவர்கள் சர்வதேசியம் பேசிவிட்டு, தேசிய உள்நாட்டு வர்க்கப் போராட்டத்தைப் புறக்கணிக்கின்றனர். 

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை முன்வைத்து லெனின் கூறுவதைப் பார்ப்போம். 

“கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை உழைக்கும் மக்களுக்கு ஒரு தேசம் கிடையாது என்று சொல்லப்பட்டிருக்கிறது. சரியே. ஆனால் அதில் சொல்லப்பட்டிருப்பது இது மட்டும் அல்லவே. தேசிய அரசுகள் உருவாக்கப்படுகின்ற பொழுது பாட்டாளி வர்க்கத்தின் பாத்திரம் ஓரளவுக்கு விசேஷமானதாகும் என்றும் அதில் சொல்லப்பட்டிருக்கிறது.

முதல் கருதுகோளை (உழைக்கும் மக்களுக்கு ஒரு தேசமும் கிடையாது) மட்டும் எடுத்துக் கொள்வதும், இரண்டாவது கருதுகோளோடு அதற்குள்ள தொடர்பை மறந்து விடுவதும் மிகப் பெரிய தவறாகும்”

(இனோஸ்ஸா ஆர்மான்டுக்கு எழுதிய கடிதத்தில் இருந்து-பக்-240) 

லெனின் கூறுவதை ஒருங்கிணைந்து புரிந்து கொள்ளாமல், தமக்குச் சாதகமானதை மட்டும் தேர்ந்தெடுத்து படிப்பதும், அதையே பிடித்துக் கொண்டிருப்பதும் தவறானப் போக்காகும். 

லெனின் வழிகாட்டுதல்கள் நமக்குப் போதுமான அளவுக்கு இருக்கிறது. தேசங்களிடையே பிணக்கு இருக்கும் போது ஒடுக்கத்துக்கு ஆளான தேசம் தனித்துப் பிரிந்து போவதற்கு உரிமை வழங்கப்பட வேண்டும். அதே நேரத்தில் எந்தத் தேசத்துடனுடம் இணைந்திருக்க விரும்பாமல் தனித்திருக்க விரும்புகிற கலாச்சார தேசிய தன்னாட்சியை எதிர்க்க வேண்டும். சர்வதேசியம் என்பது தேசத்தில் இருந்துதான் தொடங்குகிறது. தேசத்தைப் புறக்கணித்துச் சர்வதேசியம் பேசுவது நடைமுறைக்கு எதிரானதே ஆகும். தேசிய உள்நாட்டுப் போராட்டமானது, சர்வதேசிய மூலதனத்துக்கு எதிரான போராட்டமும் ஆகும் என்பதை நாம் மறந்திடக் கூடாது. 

தேசியப் பிரச்சினையைப் பற்றிய லெனினது கருத்து இன்றும் நமக்கு வழிகாட்டுதலாக இருக்கிறது, ஆனால் அதை சரியாகப் புரிந்து கொண்டு பின்பற்ற வேண்டும்.

தேசியப் பிரச்சினை இன்று நம் நாட்டில் ஒரு முக்கியப் பிரச்சினையாக இருப்பதால் இதனை சற்று விரிவாகப் பார்த்தோம், மற்றதை சுருக்கமாகவே பார்க்கலாம்.

அடுத்து நாம் பார்க்கப் போவது, செயல்தந்திரமும் இறுதிகுறிக்கோளும் ( Strategy and Tactics)

கம்யூனிஸ்டுகளின் இறுதிக்குறிக்கோள் கம்யூனிச சமூகத்தை அடைவதாகும். அதனை அடைவதற்கு பல கட்டங்களைக் கடந்து செல்ல வேண்டும், தற்போதையக் கட்டத்தைப் புரிந்து கொண்டு அதனடிப்படையில் செயல்தந்திரத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். 

இன்றைய  இந்தியாவில் நடத்த வேண்டியப் புரட்சி, ஜனநாயகப் புரட்சி என்று கூறுகிற கம்யூனிஸ்ட் கட்சிகள், நம் நாட்டில் இருக்கின்றன, அதனைப் புரிந்து கொள்வற்கு லெனின் 1905-ஆம் ஆண்டு  எழுதிய,  “ஜனநாயகப் புரட்சியில் சமூக-ஜனநாயகவாதத்தின் இரண்டு செயல்தந்திரங்கள்”  என்கிற நூலை கண்டிப்பாகப் படிக்க வேண்டும். அதே போல இந்தியாவில் நடத்த வேண்டியது சோஷலிசப் புரட்சி என்று கூறுபவர்கள் இருக்கின்றனர், அப்படிப்பட்டவர்கள் 1917ஆம் ஆண்டு லெனின் எழுதிய “ஏப்ரல் ஆய்வுரைகள்” பற்றிய கட்டுரைகளை கண்டிப்பாக படிக்க வேண்டும். 

தங்களது செயல்தந்திரம் சரியானதா தவறானதா என்பதை அறிந்து கொள்வதற்கு லெனின் எழுதிய இந்த நூல்களை அனைவரும் படிக்க வேண்டும். இங்கே மீண்டும் கூறுகிறேன், தங்களுக்கு சாதகமான லெனின் கருத்தை மட்டும் படிக்காமல், அனைத்தையும் படித்து ஒருங்கிணைந்த பார்வையினைப் பெற வேண்டும்.

முதலாளித்துவ நாடாளுமன்றம் பற்றிய லெனினது கருத்துக்கள் இன்றும் நமக்கு பயன்படும்படியாக இருக்கிறது. 

லெனினது இன்றையப் பொருத்தப்பாடு பற்றி பேசினால் மட்டும் போதாது, அதனைப் பின்பற்றி செல்ல வேண்டும்.

லெனின் டூமாவில் புறக்கணிப்பு பற்றியும் பேசியுள்ளார், டூமாவில் பங்கேற்பு பற்றியும் பேசியுள்ளார். எந்த சூழ்நிலையில் லெனின் எதனை பின்பற்றினார் என்பதை நாம் அறிந்து கொண்டால், நாடாளுமன்றத்தில் பங்கேற்பது, செயல்தந்திர அடிப்படையில் தான் என்பதை, நாம் புரிந்து கொள்ள முடியும். 

கம்யூனிஸ்டுகளின் இறுதிக்குறிக்கோளை அடைவதற்கு நாடாளுமன்றம் போதுமானது என்று மார்க்சியம் என்றும் கருதியதில்லை. ஆனால் நாடாளுமன்றத்தைப் பயன்படுத்துவதை லெனின் எந்த வகையிலும் மறுக்கவில்லை, அதுவும் பிற்போக்கானக் காலங்களில் நாடாளுமன்றத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றே கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தை முற்றப் புறக்கணிப்பது அராஜகவாதம் என்கிறார் லெனின். அரசைப் பயன்படுத்துவதை அராஜகவாதிகள் நிராகரிக்கிறார்கள் என்று லெனின் “அரசும் புரட்சியும்” என்கிற நூலில் கூறியுள்ளார்.

மார்க்சியவாதிகளுக்கும் அராஜகவாதிகளுக்கும் இடையே உள்ள வேறுபாடாக மூன்றை குறிப்பிடுகிறார். அதில் மூன்றாவதில், “மார்க்சியவாதிகள் தற்போதுள்ள அரசைப் பயன்படுத்திப் புரட்சிக்காகப் பாட்டாளி வர்க்கத்துக்குப் பயிற்சி கொடுக்க  வேண்டும் என்று கோருகிறார்கள். அராஜகவாதிகள் இதனை நிராகரிக்கிறார்கள்.” இது லெனினது நேரடி கூற்றாகும்.

அரசு என்பது சுரண்டும் வர்க்கத்தின் சார்பான ஒடுக்கும் நிறுவனம் என்பது அனைத்து கம்யூனிஸ்டுகளுக்கும் தெரியும், ஆனால் கம்யூனிஸ்டுகள் தற்போதுள்ள அரசைப் பயன்படுத்திப் புரட்சிக்காக, பாட்டாளி வர்க்கத்துக்குப் பயிற்சி கொடுக்க வேண்டும் என்று லெனின் கூறுவதை பல கம்யூனிச அமைப்புகள் புரிந்து கொள்ளவில்லை.

அதே நேரத்தில், லெனின் நாடாளுமன்றத்தில் மூழ்கி கிடப்பதையும் எதிர்த்துள்ளார் என்பதையும் மறந்திடக் கூடாது. நாடாளுமன்ற நடவடிக்கையைத் தவிர மற்றப் போராட்ட முறைகளைப் புறக்கணித்து, நாடாளுமன்றமே முழு வல்லமையான ஒரே நடவடிக்கையாக கருதுவது சந்தர்ப்பவாதப் போக்காகும்.

லெனின் கட்சி கட்டுவதை மட்டுமல்ல, கம்யூனிஸ்ட் கட்சி எப்படி செயல்பட வேண்டும் என்பதையும் தெளிவாகக் கூறியுள்ளார். அது இன்றும் பொருந்துகிறது, அதனை நடைமுறைப்படுத்துவதுதான்  கம்யூனிச கட்சியின் பணியாக இருக்க வேண்டும்.

அடுத்து நாம் பார்க்கப் போவது, கம்யூனிஸ்ட் கட்சி

1902 ஆம் ஆண்டு லெனின் “என்ன செய்ய வேண்டும்?” என்கிற நூலை  எழுதினார். அதில் கம்யூனிஸ்ட் கட்சி தொழிற்சங்க போராட்டத்தில் பங்குபெறுவது எப்படி என்பதைப் பற்றி தெளிவாக நம் முன்வைத்துள்ளார்.

கம்யூனிஸ்டுகளின் பணி என்பது தொழிலாளர்களின் உணர்வுநிலையை கம்யூனிச உணர்வுநிலையாக உயர்த்த வேண்டும் என்பதாகும்.

பொருளாதாரப் போராட்டத்தைக் கடந்து தொழிலாளர்கள், அரசியல் உணர்வு பெற வேண்டும் என்றால், வர்க்க உணர்வு பெற வேண்டும் என்றால், தொழிலாளிகளுக்கு வர்க்க அரசியல் உணர்வு வெளியில் இருந்து, அதாவது தொழிற்சங்கப் போராட்டத்துக்கு வெளியில் இருந்து மட்டுமே கொண்டுவர முடியும் என்று லெனின் கூறுகிறார். 

தொழிலாளர்களின் அரசியல், கம்யூனிச அரசியலாக வளர்ச்சி பெற வேண்டுமானால் வெளி சக்தி தொழிலாளர்களுக்கு உதவிட வேண்டும். அந்த வெளி சக்தி என்பது கம்யூனிஸ்டுகளே. கம்யூனிஸ்டுகளின் தொழிற்சங்கப் பணி என்பது பொருளாதாரப் போராட்டத்துடன் நின்றுவிடுவதில்லை. பொருளாதாரப் போராட்டத்துடன் அவர்களுக்கு வர்க்க உணர்வை ஊட்ட வேண்டும். இதற்குதான்  கம்யூனிஸ்டுகள் தொழிற்சங்கத்தில் ஈடுபடுகிறார்களே தவிர, வெறும் பொருளாதாரப் போராட்டத்துக்கு மட்டும் அல்ல என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

தொழிற்சங்கவாதப் போராட்டம் என்பதும் அரசியலே, ஆனால் அது முதலாளித்துவ அரசியல் ஆகும், அது கம்யூனிச அரசியல் ஆகாது என்கிறார் லெனின்.

இதனை மிகமிக கவனத்தில் கொள்ள வேண்டும்.  தொழிற்சங்கப் போராட்டத்துடன் நிற்பது முதலாளித்துவ அரசியல் ஆகும், அது கம்யூனிச அரசியல் ஆகாது என்கிற புரிதல் கண்டிப்பாக கம்யூனிஸ்டுகளுக்கு வேண்டும்.

லெனின் சொற்களில் இதைப் பார்ப்போம்.

“தொழிலாளி வர்க்கத்தின் தொழிற்சங்க அரசியல் என்பது தொழிலாளி வர்க்கத்தின் முதலாளித்துவப் போக்கான அரசியலே ஆகும். அரசியல் போராட்டத்தில், ஏன் அரசியல் புரட்சியிலுங்கூட, தொழிலாளி வர்க்கம் கலந்து கொள்கிறது என்பதால் மட்டும் தன்னளவில் அதன் அரசியல் சமூக-ஜனநாயக அரசியல் ஆகிவிடாது.  (342-343) 

-அதாவது கம்யூனிச அரசியலாக ஆகிவிடாது என்று லெனின் தெளிவாக கூறியுள்ளார்.

பொருளாதாரப் போராட்டத்துடன் வர்க்க அரசியலையும், வர்க்கப் போராட்டத்தையும் தொழிலாளர்களுக்கு கற்பிப்பது, தொழிற்சங்கத்தில் தலைமை தாங்கும் கம்யூனிஸ்டுகளின் கடமை ஆகும். இதை உணராது செயல்படுவது முதலாளித்துவ அரசியல் என்பதைப் புரிந்து, கம்யூனிச அரசியலை தொழிற்சங்க தலைவர்கள் செய்ய வேண்டும். 

1905 முதல் 1907 வரை ருஷ்யாவில் நடைபெற்ற முதல் புரட்சி தோல்வி கண்டது, புரட்சி தோல்வி கண்டதால் கட்சிக்குள் நெருக்கடி ஏற்பட்டது. நெருக்கடி பல ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டே இருந்தது, அப்போது 1909ஆம் ஆண்டு லெனின் “கட்சிப் பாதை” (On the Road) என்கிற சிறிய கட்டுரையை எழுதினார், அதில் கூறியவற்றை அவரது எழுத்துக்களிலேயே பார்ப்போம்.

“இன்றைய புதிய நிலைமைகளில் புதிய போராட்ட வடிவங்கள் தேவைப்படுகின்றன. டூமாவில் அதிகார பூர்வமாக பேசும் உரிமையைப் பயன்படுத்துவது முழுமையான அவசியமாகும். பாட்டாளி வர்க்க மக்களை, அறிவு புகட்டி, அமைப்பு வழியில் திரட்டுவதற்கான நீண்ட நெடிய முயற்சியானது, குறிப்பான முக்கியத்தும் உடையது. சட்டவழியற்றது மற்றும் சட்ட அமைப்புகளின் கலவையானது கட்சியின் முன் சிறப்பு சிக்கல்களை எழுப்புகிறது” (235)

போல்ஷிவிக் கட்சி, புரட்சியை நிகழ்த்திக் காட்டியதற்கு சட்டவழியற்ற போராட்டத்துடன் சட்ட வழியிலான போராட்டத்தை இணைத்ததில் அடங்கி இருக்கிறது. இதனை லெனின் பல இடங்களில் கூறியிருக்கிறார். இந்த அனுபவத்தை உலகில் உள்ள அனைத்து கம்யூனிஸ்ட் கட்சிகளும் புரிந்து கொள்ள வேண்டும். 

“கட்சிப் பாதை” என்கிற கட்டுரையின் மற்றொரு பகுதியில் லெனின், 

“சட்டவிரோதமான கட்சி, சட்டவழியிலான டூமா குழுவை எப்படிப் பயன்படுத்துவது என்பதை அறிந்திருக்க வேண்டும், எப்படிப் பயன்படுத்துவது என்பதைப் பயின்று அறிந்திருக்க வேண்டும். டூமா குழுவை அதன் கடமைகளை நிறைவேற்றும் திறனுடையதான ஒரு கட்சி நிறுவனமாக பயிற்றுவிக்க வேண்டும்.” (237)

டூமா போன்ற பிற்போக்கான நாடாளுமன்றத்தில் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி பங்குபெற்று பயன்படுத்துவதைப் பற்றி லெனின் பேசியது இன்றும் பொருந்தக்கூடியதாகவும் பயன்படுத்தக்கூடியதாகவும் இருக்கிறது.

“கட்சிப் பாதை” என்கிற அதே கட்டுரையில், சட்டவழிபட்ட அனைத்து பாட்டாளி வர்க்க அமைப்புகளிலும் தலைமைப் பாத்திரத்தை வென்று பெற வேண்டும் என்கிறார் லெனின்.

இப்படிக் குறிப்பிடுகிற இடத்தில் ஒர் எச்சரிக்கையினையும் லெனின் வைக்கிறார். 

சட்டவழிப் போராட்டத்தில் முழுமையாக வீழ்ந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதையும் சேர்த்து சொல்லியுள்ளார் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது சட்டவழிப் போராட்டத்தில் மட்டும் வீழ்ந்து கிடப்பதை லெனின் இங்கே எதிர்க்கிறார். 

முதலாளித்துவ சமூகத்தில் தொழிலாளர்கள் சட்டவழியில் மட்டும் ஒடுக்கப்படவில்லை, சட்டவழியற்ற முறையிலும் ஒடுக்கப்படுகிறார்கள், இதனை மனதில் கொள்ளாமல் ஒரு கம்யூனிஸ்ட் செயல்பட முடியாது.

ருஷ்யாவில் ஏற்பட்டுள்ளது போல எந்த ஒரு முதலாளித்துவ நாட்டிலும் தொழிலாளர் பெரும் திரளாக ஒன்றுபடுவதை, உலகில் உள்ள எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்கிறார் லெனின்.

மேலும் கூறுகிறார், தொழிலாளி வர்க்கம், ஒரு வழியில் அல்லது மற்றொரு வழியில், வெளிப்படையாக அல்லது ரகசியமாக, தமது சொந்த அணிகளைத் திரட்டும் வழிகளை கண்டுபிடித்துக் கொள்ளும் என்கிறார் லெனின்.

ஆனால் அது தானே நிகழாது, புறநிலையைப் புரிந்து செயல்படும் கட்சியால்தான் செய்துகாட்ட முடியும். கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடு மிகமிக முக்கியமானதாகும். அதனால்தான் கம்யூனிஸ்ட் கட்சியை தொழிலாளர்களின் முன்னணிப் படை என்று அழைக்கப்படுகிறது.

வர்க்க உணர்வுபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள், மக்கள் கூட்டம் எங்கு இருக்கிறதோ அங்கே செல்ல வேண்டும், ஒவ்வொரு செயல்பாட்டிலும் உழைக்கும் மக்களிடம் கம்யூனிச உணர்வை பெறும் வகையில் செயல்பட வேண்டும்.

இவ்வாறு உழைக்கும் மக்களின் முன்னணிப் படையாக செயல்படும் கம்யூனிஸ்ட் கட்சி என்ன நிகழ்ந்தாலும் வெற்றி வாகை சூடும் என்று லெனின் இந்த சிறு கட்டுரையில் கூறியுள்ளார்.

வார்க்க சமூகம் இருக்கும்வரை மார்க்சிய லெனினியம் நமக்கு வழிகாட்டியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

அதுமட்டுமல்லாது, ஏகாதிபத்தியத்தில் எப்படி மார்க்சியம் லெனினியமாக வளர்ச்சி பெற்றதோ அதே போல புதிய நிலைமைக்கு ஏற்றபடி மார்க்சியம் வளர்ச்சி பெறும். அதாவது புதிய நிலமைக்கு ஏற்ப மார்க்சியம் புதுப்பிக்க வேண்டும். இதனை கம்யூனிஸ்டுகள் தான் செய்ய வேண்டும், தானே எதுவும் நடைபெறாது. இந்தப் பெரும் கடமைகள் கம்யூனிஸ்ட் முன் நிற்கிறது.

கம்யூனிஸ்டுகளின் பணி என்பது அவ்வளவு எளிதானது கிடையாது, அனைத்து பிற்போக்கையும் எதிர்த்து செல்பட வேண்டும், அனைத்து களைப்புவாதத்தையும் எதிர்த்து செயல்பட வேண்டும், பின்நவீனத்துவம் போன்ற குழப்பும் கோட்பாடுகளை எதிர்த்து போராட வேண்டும், அனைத்து திருத்தல்வாதத்தையும் அனைத்து சீர்திருத்தவாதத்தையும் எதிர்த்துப் போராட வேண்டும். 

அதனால்தான் கூறுகிறேன் கம்யூனிஸ்டுகளின் பணி அவ்வளவு எளிதானதல்ல, இதற்கு நமக்கு சித்தாந்த பலம் மட்டுமே துணைபுரியும். அதனால் சித்தாந்தத்தை பலப்படுத்துவோம். சிறுபான்மையினராக இருப்பது பிரச்சினை இல்லை, சித்தாந்தப் பலத்துடன் இருந்தால் எதையும் எதிர்கொள்ளலாம்.

லெனினியத்தின் இன்றைய பொருத்தப்பாடு பற்றி பேசுவதோடு, அதன் வழியில் செயல்படுவோம் என்று கூறி எனது உரையை நிறைவு செய்கிறேன். 

அ.கா.ஈஸ்வரன்

9884092972

 

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு