காம்பாக்ட் திட்டம்: அமெரிக்காவிற்கு இந்தியாவை அடிமைப்படுத்தும் மோடி ஆட்சியை தூக்கியெறிவாம்! ஏகாதிபத்திய எதிர்ப்பு விடுதலைப்போரை முன்னெடுப்போம்!
சமரன்

"அமெரிக்க முதன்மை" கொள்கைக்கு சேவை செய்யும் வகையில் இந்தியாவை அடிமைப்படுத்தும் "காம்பாக்ட்" ஒப்பந்தம்
அமெரிக்க ட்ரம்ப் அரசு, உள்நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி - சீனாவின் உலக மேலாதிக்கப் போட்டி, இவற்றின் காரணமாக "அமெரிக்க முதன்மை" எனும் பாசிச கொள்கையை அவசரகதியில் செயல்படுத்தி வருவதை நாம் சென்ற சமரன் (ஏப்ரல்-மே 2025) இதழில் பார்த்தோம்.
அனைத்து துறைகளிலும் சீனாவை முதன்மை எதிரியாக வரையறுத்து தனது யுத்தத்தந்திர கொள்கைகளை வெளியிட்டும் நடைமுறைபடுத்தியும் வருகிறது டிரம்ப் அரசு. உலகளாவிய வர்த்தப் போரை அறிவித்து பின்பு அதையும் சீனாவை மையப்படுத்தியதாக மாற்றியது. மற்ற நாடுகளில், வர்த்தக போர் - வரி விதிப்பு என்பதை தனக்கு சாதகமாக பேரம் பேசி அடிபணிய வைக்கும் ஆயுதமாக மாற்றிக் கொண்டது.
அந்த வகையில் தெற்காசிய பிராந்தியத்தில் அமெரிக்காவின் நெருக்கமான பாசிச கூட்டாளியாக விளங்கும் மோடி அரசையும் அதன் பின்னால் உள்ள இந்திய தரகுமுதலாளித்துவ கூட்டத்தையும் மிரட்டி அடிபணிய வைத்துள்ளது. மோடி-அதானி கொள்ளை கும்பல் டிரம்பின் ஆணைகளுக்கு இணங்கி நாட்டை மேலும் அடிமைப்படுத்த பல்வேறு இருதரப்பு ஒப்பந்தங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
தெற்காசிய பிராந்தியத்தில் சீனாவின் மேலாதிக்கத்தை கட்டுப்படுத்த இந்தியாவை துருப்புச் சீட்டாக பயன்படுத்தி வருவது குறித்து நாம் பல்வேறு கட்டுரைகளில் இதுவரை பார்த்து வந்துள்ளோம். இந்தியாவும் அமெரிக்காவின் அடியாளாக இப்பிராந்தியத்தின் துணைமேலாதிக்க சக்தியாக வளர்ந்து வருகிறது. இன்றைய யுத்தத்தந்திர முக்கியத்துவம் வாய்ந்த தொழில்நுட்பங்களிலும் இந்தியாவை இப்பிராந்தியாத்தில் சீனாவுக்கு போட்டியாக நிறுத்துவது அமெரிக்காவின் முதன்மை கொள்கைகளில் ஒன்றாக மாறியுள்ளது. அதன் முதல் படியாகத்தான் பிப்ரவரி 13 அன்றே மோடி அரசும் டிரம்ப் அரசும் இணைந்து "காம்பாக்ட்" எனும் திட்டத்தை வெளியிட்டன.
அமெரிக்க - இந்திய காம்பாக்ட்
டிரம்ப் தேர்தலில் வெற்றி பெற்ற உடனேயே முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்து எஜமானனுக்கு தனது விசுவாசத்தை வெளிபடுத்தியது இ-டாக் மோடி. கொத்தடிமைகளை போல இந்திய தொழிலாளர்கள் அமெரிக்காவில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட போதும் - இந்தியா மீது 26% சதவிகிதம் கூடுதல் வரி விதித்த போதும் கூட தனது 56 இஞ்ச் நாக்கை தொங்கவிட்டு நின்றது.
ஒவ்வொரு பத்தாண்டுக்கு ஒருமுறை புதிய காலனிய அடிமை ஒப்பந்தங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டியதன் காரணமாக செயல்பாட்டில் உள்ள இருதரப்பு ஒப்பந்தங்களை புதுப்பித்துக் கொள்வது மற்றும் பல்வேறு புதிய இருதரப்பு அடிமை ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கான முன்மொழிவுகளை அமெரிக்காவின் நிபந்தனைக்கு அடிபணிந்து ஒப்புதல் அளித்துள்ளது. அதற்காக கூட்டாக வெளியிட்டதுதான் இந்த "காம்பாக்ட்" திட்டம்.
"அமெரிக்க-இந்திய காம்பாக்ட் (US-India COMPACT - Catalyzing Opportunities for Military Partnership, Accelerated Commerce & Technology) - 21-ம் நூற்றாண்டிற்கான இராணுவ கூட்டணி, துரித வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பத்தை ஊக்குவித்தல்" - எனும் இத்திட்டம்தான் அடுத்த தசாப்தத்திற்கான அடிமைசாசனம் ஆகும்.
இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
பாதுகாப்புத் துறையில்,
- 21ஆம் நூற்றாண்டிற்கான அமெரிக்க-இந்திய மிகப் பெரிய இராணுவ கூட்டணியை உருவாக்குதல் - அதில் அடுத்த பத்தாண்டிற்கு இருதரப்பும் ஒன்றாக இணைந்து பணியாற்றுவது.
- இந்தியாவை முதன்மையான யுத்தத்தந்திர கூட்டாளியாக உயர்த்துவது (Strategic Trade Authorization - STA-1). ஆயுத பரிமாற்றத்திற்கு தடையாக இருக்கும் ITAR (International Traffic in Arms Regulation) உள்ளிட்ட சர்வதேச விதிகளை மறு ஆய்வுக்கு உட்படுத்துவது (அதாவது மீறுவது). இருதரப்பு அதி நவீன பாதுகாப்புத் துறை தொழில்நுட்பங்களை பரஸ்பரம் பயன்படுத்திக் கொள்ள அனுமதிப்பது. ஆயுத தளவாட உபகரணங்கள், பழுதுநீக்கும் கட்டமைப்புகள், பராமரிப்பு அமைப்புகள் இவற்றை அமெரிக்கா பயன்படுத்திக் கொள்ள இருக்கும் அனைத்து தடைகளையும் நீக்குவது.
- பரஸ்பர பாதுகாப்பு கொள்முதல் (Reciprocal Defense Procurement - RDP) ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளை இவ்வாண்டுக்குள் துவங்குதல். ஹார்பூன் கப்பல் தாக்கு ஏவுகணைகள், சி130ஜெ சூப்பர் ஹெர்குலஸ், சி17 குளோப் மாஸ்டர் III, பி-81 பொசெய்டான், சி.ஹெச்.47 எஃப் சினூக்ஸ், எம்.ஹெச்-60ஆர் சீஹாக்ஸ், ஏ.ஹெச்-64இ அபாச்சீஸ், எம்777 ஹவிட்செர்ஸ், எம்.கியூ-9பி உள்ளிட்ட பல ரக போர் விமானங்களை கொள்முதல் செய்வது மற்றும் இவற்றின் உற்பத்தியில் இணைந்து ஈடுபடுவது.
- முதல் கட்டமாக ஜாவ்லின் பீரங்கி தாக்கு ஏவுகணைகள், ஸ்டைகர் காலாட்படை போர் வாகனங்கள், பி-81 தொலைதூர கடல் ரோந்து விமானங்கள் 6 ஐ வாங்குவதற்கான ஒப்பந்தத்தை முடிப்பது.
- இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் தொழிற்துறை உற்பத்தியை விரிவுபடுத்துவதற்கான "ஏசியா" (The Autonomous Systems Industry Alliance - ASIA) எனும் தன்னாட்சி தொழிற்துறை கூட்டமைப்பை நிறுவுதல். இதில் அமெரிக்காவின் அன்டூரில் இண்டஸ்ட்ரீசும் (Anduril Industries) இந்தியாவின் மகிந்திரா குழுமமும் இணைந்து செயற்கை நுண்ணறிவு சார் போர்கப்பல்களையும், டிரோன்களையும் உருவாக்குவது; அமெரிக்காவின் எல்3 ஹாரிஸ் நிறுவனமும் இந்தியாவின் பாரத் எலக்ட்ரானிக்சும் இணைந்து நவீன போர் கப்பல் தளவாடங்களை உற்பத்தி செய்வது போன்றவை உள்ளடங்கும்.
- இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் கூட்டு இராணுவ பயிற்சிகளில் ஈடுபடுவது; உளவுத் துறை தகவல்களை பரிமாறிக் கொள்வது; சரக்குப் போக்குவரத்துகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்வது.
- 2019ல் துவங்கப்பட்ட டைகர் கூட்டு பயிற்சியை போன்று விமானப்படை, தரைப்படை, கப்பற்படை, விண்வெளி, சைபர்வழி என அனைத்திலும் ஒன்றிணைந்து கூட்டு பயிற்சிகளில் ஈடுபடுவது.
வர்த்தகம் மற்றும் முதலீட்டில்,
- 2025 க்குள் மேற்கொள்ளவிருக்கும் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் (Bilateral Trade Agreement - BTA) முதல் படியாக ("மிஷன் 500 (Mission 500)" எனும் பெயரில் 2030க்குள் இருதரப்பு வர்த்தகத்தை இருமடங்குக்கும் மேலாக அதாவது 500 பில்லியன் டாலராக மாற்றுவதற்கு புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. (அதாவது 190 பில்லியன் டாலர்களாக இருக்கும் இருதரப்பு வர்த்தகத்தை இன்னும் 5 ஆண்டுகளுக்குள் 500 பில்லியன் டாலர்களாக மாற்றுவதற்கான இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா - இந்தியாவின் முந்தைய ஆண்டுகளின் வர்த்தக உறவுகள் அட்டவணை -1ல் கொடுக்கப்பட்டுள்ளது)
ஆற்றல் பாதுகாப்பில்,
- எண்ணெய், எரிவாயு, பொது அணு ஆற்றல் உள்ளிட்டவற்றில் அமெரிக்க-இந்திய கூட்டணியை மேலும் உறுதிபடுத்துதல்.
தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில்,
- "அமெரிக்க-இந்திய டிரஸ்ட் ((U.S.-India TRUST - Transforming the Relationship Utilizing Strategic Technology) - அதிமுக்கியத்துவம் வாய்ந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அமெரிக்க - இந்திய உறவை மாற்றிமைத்தல்" எனும் திட்டத்தை தொடங்குதல்.
- ஆண்டு இறுதிக்குள் செயற்கை நுண்ணறிவு (AI) உள்கட்டமைப்பை விரைவுபடுத்துவதற்கான திட்டத்தை கூட்டாக முன்னெடுத்தல்.
- எலான் மஸ்க்-ன் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனமும் இந்திய அரசும் இணைந்து உருவாக்கியுள்ள இந்துஸ்-எக்ஸ் (INDUS-X) தளத்தை அடித்தளமாக கொண்டு புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளுதல். அமெரிக்க-இந்திய தொழிற்துறை, கல்வித்துறை ஒத்துழைப்புகளை மேம்படுத்துதல்; விண்வெளி, ஆற்றல், பிற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் முதலீடுகளை ஊக்குவித்தல் ஆகியவை இதில் அடங்கும்.
- அதிமுக்கியத்துவம் வாய்ந்த கனிமங்களை கையகப்படுத்தும் திட்டம் - அலுமினியம், நிலக்கரி, எண்ணெய், எரிவாயு போன்ற கனரக தொழில்களுக்கு தேவையான கனிமவளங்கள் மட்டுமல்லாமல் லித்தியம், கோபால்ட், அருமண் தனிமங்கள் உள்ளிட்ட அதிமுக்கிய தாதுக்களை கையகப்படுத்தவுமான அமெரிக்க-இந்திய புதிய கூட்டிணைவு திட்டத்தை செயல்படுத்துதல்.
- அமெரிக்க தேசிய அறிவியல் அறக்கட்டளையும் (U.S. National Science Foundation) இந்திய அனுசந்தான் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையும் (Indian Anusandhan National Research Foundation) இணைந்து வளர் தொழில்நுட்பங்களை ஆராய்வதில் புதிய கூட்டணியை உருவாக்குதல்.
பல்தரப்பு ஒத்துழைப்பில்,
- இந்திய பெருங்கடலை மையப்படுத்தி அனைத்து அரசுகளையும் இணைக்கும் விதமாக பொருளாதார இணைப்பையும் வர்த்தகத்தில் ஒருங்கிணைந்த முதலீடுகளையும் மேம்படுத்துவதற்கான புதிய இந்தியப் பெருங்கடல் யுத்ததந்திரத் திட்டத்தை (Indian Ocean Strategic Venture) வெளியிடுதல்.
- இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா வழித்தடம் (India-Middle East-Europe Corridor) மற்றும் ஐ2யூ2 (I2U2) திட்டங்களின் பங்குதாரர்களை அடுத்த ஆறு மாதங்களுக்குள் கூட்டி, 2025க்குள் புதிய திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்துவது.
கல்வித்துறையில்,
- தற்போது, 3லட்சம் இந்திய மாணவர்கள் அமெரிக்க பொருளாதாரத்திற்கு ஆண்டுதோறும் 8 பில்லியன் டாலருக்கும் அதிகமாக பங்களிக்கிறார்கள். இதற்கான வாய்ப்புகளை பரந்த அளவில் இந்தியாவிலேயே உருவாக்குதல்.
- அதற்காக, கூட்டு / இரட்டை பட்டங்கள், கலப்பு பாடத் திட்டங்களை உருவாக்கும் விதமாக கூட்டு சிறப்பு மையங்களை நிறுவுதல்; இந்தியாவில் அமெரிக்காவின் முதன்மை கல்வி நிறுவனங்களின் வளாகங்களை அமைத்தல் போன்ற திட்டங்கள் மூலம் உயர் கல்வி நிறுவனங்களில் ஏகபோகத்தை நிறுவுதல்.
நாடாளுமன்ற ஒத்துழைப்புகளில்
- இந்திய அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒன்றிணைத்து 100 உறுப்பினர்களை கொண்ட இந்திய - அமெரிக்க காங்கிரசை உருவாக்குதல்.
இவ்வாறு அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்காக அமல்படுத்தப்படும் "அமெரிக்க முதன்மை கொள்கை" மற்றும் DOGE-TECHNO பாசிச கொள்கைகளுக்கு சேவை செய்யும் விதமாக அமெரிக்க-இந்திய பாசிச கூட்டணியை வலுப்படுத்தும் விதமான திட்டங்களை வகுத்துள்ளன டிரம்ப் - மோடி அரசுகள். அமெரிக்காவில் உள்நாட்டில் எவ்வாறு DOGE-TECHNO பாசிசம் கட்டியமைக்கப்பட்டு வருகிறது என்பதை முந்தைய இதழில் வந்த சமரன் கட்டுரையில் பார்த்தோம். அதன் பெரும்பாலான அம்சங்களை இந்தியாவிற்கும் கடத்தியுள்ளது இந்த "காம்பாக்ட்" திட்டம். இத்திட்டம் இந்தியாவில் மோடி ஆட்சியின் தலைமையில் பாசிசத்தை தீவிரப்படுத்தும் ஒன்றாகவே அமைந்துள்ளது. மறுபுறம், தெற்காசிய பிராந்தியத்தில் சீனாவுக்கு சவால் விடுவதற்காக இந்தியாவை அடியாளாக மாற்றுவதற்கான அம்சங்கள் தொழில்நுட்ப ரீதியாகவும் இராணுவ ரீதியாவும் நிறைந்துள்ளதை பார்க்க முடிகிறது. அதன் உச்சமாக நாடாளுமன்ற உறுப்பினர்களை இணைத்து - அமெரிக்க காங்கிரசை உருவாக்குவது என்பது இந்தியா அமெரிக்காவின் புதிய காலனிய பிடியில் முழுமையாக செல்வதை அப்பட்டமாக காட்டுகிறது.
இத்திட்டம் பிப்ரவரியில் மோடி- டிரம்ப் கும்பலால் வெளியிடப்பட்டாலும் இதற்கான முன்னெடுப்புகள் ட்ரம்ப் தேர்தலில் வெற்றி பெற்ற உடனேயே துவங்கிவிட்டன என்பதைதான் பின்வரும் தகவல்கள் வெளிபடுத்துகின்றன.
- ஜனவரி 15 அன்று, அமெரிக்க தொழிற்துறை மற்றும் பாதுகாப்பு செயலகம் இந்திய அருமண் தனிமங்கள், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் (IGCAR), பாபா அணு ஆராய்ச்சி மையம் (BARC) ஆகியவற்றை தடைசெய்யப்பட்ட பட்டியலில் இருந்து அகற்றுவதாக அறிவித்தது. அதாவது, அந்நிய மூலதனம் நுழைவதற்கு இருந்த தடையை நீக்கியுள்ளது.
- ஜனவரி 17 ல், இரு தரப்பும் சைபர் குற்ற விசாரணைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
- பிப்ரவரி மாத பயணத்தில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் வால்ட்ஸ், மோடியை சந்தித்து பேசியபோது, அதிமுக்கிய தொழில்நுட்பங்கள், பாதுகாப்பு தொழிற்துறை கூட்டணி, சிறிய மாதிரி அணு உலைகளில் கவனம் செலுத்தி பொது அணு ஆற்றல், பயங்கரவாத எதிர்ப்பு ஆகியவற்றில் இந்தியா-அமெரிக்க உலகளாவிய பரந்த யுத்தத்தந்திர கூட்டணியை மேலும் வலுபடுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து விவாதித்தனர்.
- அரசாங்க திறன் மேம்பாட்டு துறையின் (DOGE) தலைவரும் டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க்-ம் மோடியும் சந்தித்து பேசிய போது, புதிய கண்டுபிடிப்புகள், வளர் தொழில்நுட்பம், தொழிற்துறை, விண்வெளி ஆராய்ச்சி, செயற்கை நுண்ணறிவு, நிலையான வளர்ச்சி, ஆகியவற்றில் இந்திய, அமெரிக்க நிறுவனங்களிடையே மட்டுமல்லாமல் அரசாங்க ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் விவாதித்தனர்.
இவற்றின் தொடர்ச்சியாகதான் இத்திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இத்திட்டத்தின் அடிப்படையில் ஏப்ரல் 21ல் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இந்தியாவிற்கு வந்து வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு இருதரப்பு ஒப்பந்தங்களை உறுதி செய்வதற்கான அடுத்தக் கட்ட பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு சென்றார். அதேபோல், மோடி கும்பலும் ஏப்ரல் 4 ல் இலங்கைக்கு சென்று தனது துணை மேலாதிக்க கோரப் பற்களை காட்டியுள்ளது.
இந்தியாவின் துணைமேலாதிக்க நலன்களுக்கு பலியிடப்படும் இலங்கை
"அமெரிக்கா - இந்தியாவின் காம்பாக்ட்" திட்டத்திற்கு சேவை செய்யும் விதமாக தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள நாடுகளை அமெரிக்காவின் ஆளுகைக்கு கீழ் கொண்டு வருவதற்கான பிராந்திய அடியாளாக இந்தியா செயல்படுகிறது என்பதை பார்த்தோம். அதற்காக "அண்டை நாட்டினர் முதன்மை கொள்கை (Neighbourhood First Policy)" என்பதன் அடிப்படையில் தனது அகண்ட பாரத கனவை செயல்படுத்த துவங்கிவிட்டது. தனது அகண்ட பாரத கனவை, "மகாசாகர் நோக்கு (MAHASAGAR Vision - Mutual and Holistic Advancement for Security and Growth Across Regions) என்ற பெயரில் மறுபதிப்பு செய்துள்ளது. இது 2015ல் மோடி அரசு வெளியிட்ட "கிழக்கில் செயல்படுதல்" கொள்கையின் அடிப்படையில் கொண்டுவரப்பட்ட "சாகர் (SAGAR)" திட்டத்தின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும். இங்குதான் அமெரிக்காவின் மேலாதிக்க நலன்களும் இந்திய அரசின் விரிவாதிக்க நலன்களும் ஆர்.எஸ்.எஸ். - பாஜக கும்பலின் அகண்ட பாரத கனவும் கைகோர்க்கின்றன. அந்த வகையில்தான் தற்போது, இலங்கைக்கு சென்று மோடி கும்பல் அநுர குமார திசாநாயக அரசுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் உள்ளிட்ட 7 புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது.
- அடுத்த 5 ஆண்டுகளுக்கு செயல்பாட்டில் இருக்கும் வகையிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தை இந்தியாவும் இலங்கையும் மேற்கொண்டுள்ளது. இதில் பாதுகாப்பு தொழிற்துறையில் இணைந்து செயல்படுவது; கூட்டு இராணுவ பயிற்சிகள்; கடல் பகுதி ரோந்து மற்றும் கண்காணிப்பில் கூட்டாக ஈடுபடுவது; இலங்கையின் இராணுவ தளங்கள் மற்றும் அதன் அதிகார எல்லைப்பகுதி இந்தியாவிற்கு எதிராக பயன்படுத்தப்படக் கூடாது (சாரத்தில் அமெரிக்காவுக்கு எதிராக சீனாவுக்கு சார்பாக பயன்படுத்தக் கூடாது என்பதாகும்) ஆகியவை உள்ளடங்கும்.
- திரிகோணமலையை ஆற்றல் துறையின் மையமாக (Energy Hub) மேம்படுத்துவது. நாகப்பட்டினத்தில் இருந்து எண்ணெய் எரிவாயு பைப் லைன்களை கடல் வழியாக கொண்டு சென்று திரிகோணமலையின் மையத்தில் இணைப்பது.
- இந்தியாவில் இருந்து இலங்கைக்கு மின்சாரம் விநியோகப்பதற்கான கிரிட் இண்டெர்கனெக்ட்டிவிட்டி ஒப்பந்தம் (Grid interconnectvity agreement)
- புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்கை எட்டுவது எனும் பெயரில் சம்பூரில் சோலார் பவர் பிளான்ட் நிறுவுவதற்கான ஒப்பந்தம். இதில் 25 மெகா வாட் (MW) அளவு மின்சாரத்தை உருவாக்குவதற்கு திட்டமிட்டுள்ளது.
- ரயில்வே துறையை மேம்படுத்துவதன் பெயரில் 105 மில்லியன் டாலர் நிதியை வழங்குவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இதோடு மட்டுமல்லாமல் பல்வேறு உள்கட்டமைப்பு பணிகளுக்கு 100 மில்லியன் டாலர் நிதியை கடனாக வழங்க ஒப்ப்ந்தம் மேற்கொண்டுள்ளது.
- இலங்கை மக்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை வழங்குவதற்கான (Digital Identity project) திட்டத்திற்கு ரூ.300 கோடி மதிப்பில் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
- இலங்கையின் கிழக்கு பிராந்தியங்களில் சமூக -பொருளாதார நிலையை மேம்படுத்துவது எனும் பெயரில் ரூ.66 கோடி மதிப்பில் சிறப்பு உதவி திட்டத்தை இணைத்துள்ளது.
இவை தவிர சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது, மீனவர்களை கட்டுப்படுத்துவது, வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்துவது, கலாச்சார அணுகல்களை மேற்கொள்வது என்ற பெயர்களில் இலங்கையை தனது விரிவாதிக்க நலன்களிலிருந்து வேட்டையாடி எலான் - டிரம்ப் கும்பலுக்கு படையல் செய்து வருகிறது மோடி அரசு. இலங்கையில் ஹம்பந்தோட்டா உள்ளிட்ட சீனாவின் செல்வாக்கு மண்டலங்களை பலவீனமடைய செய்து தனது செல்வாக்கு மண்டலங்களை மீட்டெடுக்கவே இந்திய அரசின் மூலம் ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறது அமெரிக்கா.
இலங்கையை சேர்ந்த டிராட்ஸ்கியவாத ஜேவிபி அரசு இதற்கு முன்னதாக சீனாவுடன் ஜனவரி மாதத்தில் 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. அதன் அமைச்சரவையும் "ஒரே சீனா கொள்கையை" கடைபிடிப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இலங்கை முழுவதும் சீனாவின் கட்டுப்பாட்டில் செல்வதை தடுக்கவே அமெரிக்கா இந்தியாவை ஏவி விட்டுள்ளதை நாம் பார்க்க முடிகிறது. தொடர்ச்சியாக இலங்கை அமெரிக்க-சீன ஏகாதிபத்தியங்களின் மறுபங்கீட்டு போட்டியில் சிக்கி சின்னாபின்னாமாக்கப்பட்டு வருவதையே இந்த ஒப்பந்த நடவடிக்கைகள் காட்டுகின்றன. அதற்கு அங்கு ஆளும் ஜேவிபி அரசும் அடிபணிந்து இலங்கையை கூறுபோட அனுமதித்து வருகிறது.
இந்தியாவின் துணைமேலாதிக்க வெறிக்கு வங்கதேசம் அடி பணியவில்லை. அது முழுமையாக சீனா சார்பு நிலை எடுத்து செயல்பட்டு வருகிறது. இந்தியா- வங்கதேசம் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகமும் கடந்த ஆண்டை விட சுமார் 7% சதவிகிதம் அளவுக்கு குறைந்துள்ளது. அதே நேரம் சீனாவுடனான வங்கதேச வர்த்தகம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, வங்கதேசத்திற்கு மின் விநியோக நிறுத்தம், நதிநீர் விநியோகம் நிறுத்தம் போன்ற செயல்களில் ஈடுபட்டு அடிபணிய வைக்கு முயற்சித்து வருகிறது மோடி அரசு.
அதே போல், காஷ்மீர் பகல்ஹாமில் நடந்த தாக்குதலை அடுத்து பாகிஸ்தானுடன் வர்த்தக உறவுகளை துண்டித்துக் கொள்வது சிந்து நதி ஒப்பந்தத்தை கைவிடுவது, இராணுவ தாக்குதல் நடத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு காஷ்மீரில் தனது விரிவாதிக்க வெறியை கட்டியமைத்து வருவதோடு பாகிஸ்தானுக்கு அணு ஆயுத மிரட்டல் விடுத்து வருகிறது.
இவ்வாறு தெற்காசிய பிராந்தியத்தில் சீனாவின் நிதிமூலதனத்திற்கு சேவை செய்யும் நாடுகளுக்கு சவாலான நடவடிக்கைகளை அமெரிக்கா எஜமானனுக்காக மேற்கொண்டு வருகிறது அடிவருடி மோடி அரசு.
தீவிரவாத எதிர்ப்பு எனும் பெயரில் அமெரிக்காவின் தொழில்நுட்ப மேலாதிக்கத்திற்கும் போர்வெறிக்கும் அப்பாவிகளை பலிகொடுக்கும் மோடி அரசு
அமெரிக்கா இந்தியா இணைந்து வெளியிட்டுள்ள "காம்பாக்ட்" திட்டத்தில் ஒரு அம்சமாக தீவிரவாதத்திற்கு எதிராக இணைந்து போராடுவது என்பதும் முன்வைக்கப்பட்டுள்ளது. அதன் உண்மையான பொருள் என்னவென்றால், தங்களின் கனிமவள சுரண்டலுக்கும் கொள்ளைக்கும் தடையாக இருக்கும் பழங்குடிமக்களையும், மத சிறுபான்மையினரையும் அவர்கள் சார்ந்த போராட்டக் குழுக்களையும் தீவிரவாதிகள் என்று அறிவித்து அழித்தொழிப்பது. அல்லது அவர்களின் வாழ்விடங்களில் இருந்து விரட்டியடிப்பது. இதே கொள்கையைதான் அமெரிக்கா பாலஸ்தீனத்திலும், மத்திய கிழக்கிலும், ஏன் உலகம் முழுவதும் கூட கடைபிடித்து வருகிறது. அமெரிக்காவின் இன்றைய அதிநவீன தொழில்நுட்பங்களுக்கு தேவையான கனிம வளங்களை கொள்ளையடிப்பதற்கு -நவீன ஆதி திரட்டலுக்கு தடையாக இருக்கும் சக்திகளை அழித்தொழித்து வருகிறது. அமெரிக்க நிதிமுலதனத்துக்கு சேவை செய்யும் வகையில் இங்கு பாசிச காட்டாட்சியை கட்டவிழ்த்து விட்டுள்ளது மோடி அரசு.
அந்த அடிப்படையில்தான்,
- நக்சல் ஒழிப்பு - மாவோயிஸ்ட் அழிப்பு எனும் பெயரில் சத்தீஸ்கரில் "ஆப்பரேசன் காகர்" எனும் பெயரில் நூற்றுக்கணக்கான அப்பாவி பழங்குடிமக்களை வேட்டையாடி வருகிறது.
- இராமேஸ்வரம் பகுதியில் கடல்பாதுகாப்பு எனும் பெயரில் அப்பாவி தமிழக மீனவர்களை இந்திய - இலங்கை இராணுவங்கள் கூட்டுச் சேர்ந்து கொன்று குவித்து வருகின்றன.
- அமெரிக்கா சார்பாக இந்தியாவும் சீனா சார்பாக பாகிஸ்தானும் அணி சேர்ந்து கொண்டு போர் ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றன. ஏகாதிபத்தியங்களின் போர் ஆயுதங்களின் - தொழில்நுட்பங்களின் பரிசோதனை களமாக காஷ்மீரை மாற்றி வருகின்றன. இந்தியாவும் பாகிஸ்தானும் அமெரிக்கா - சீனாவுக்காக பதிலிப்போரில் ஈடுபட்டு வருகின்றன. இரு தரப்பிலும் பொது மக்களை கொன்று குவித்து வருகின்றன.
அமெரிக்காவின் துணை அதிபர் இந்தியாவில் "காம்பாக்ட்" திட்டத்தின் அடிப்படையில் இருதரப்பு ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்கு இந்தியா வந்திருந்தபோது காஷ்மீர் -பகல்ஹாமில் 26 சுற்றுலா பயணிகளை பலிகொடுத்து அமெரிக்காவின் போர்வெறிக்கு விருந்தளித்தது இரத்த காட்டேறி மோடி அரசு.
அமெரிக்காவின் புதிய காலனிய பிடிக்குள் முழுமையாக கொண்டு செல்லும் திட்டம்
1992ல் இந்திய அமெரிக்க இராணுவ ஒத்தழைப்பை நரசிம்மராவ் கும்பல் தலைமையிலான காங்கிரஸ் அரசு துவங்கி வைத்தது. அக்கும்பலே, 1995 ம் ஆண்டில் இராணுவ - பாதுகாப்புத் துறையில் இருதரப்பு ஒத்துழைப்புகளுக்கான உடன்பாட்டில் கையெழுத்திட்டது. அது முதல் ரஷ்யா உள்ளிட்ட போட்டி ஏகாதிபத்தியங்கள் இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் ஆதிக்கம் செலுத்துவதை அமெரிக்கா கட்டுப்படுத்த துவங்கியது. 1999ல் ஆட்சிக்கு வந்த வாஜ்பாய் அரசு அமெரிக்கா- இந்தியா இராணுவ ஒத்துழைப்பை "கேந்திர கூட்டணியாக" அறிவித்தது. இருதரப்பு ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கான பாதுகாப்புக் கொள்கை குழுவை 2001ல் உருவாக்கியது. அதன்மூலம், 2002ம் ஆண்டில் இராணுவ தகவல் பகிர்வுக்கான பொது பாதுகாப்பு ஒப்பந்தத்தில் (General Security of Military Information Agreement - GSOMIA) கையெழுத்திட்டது பாஜக அரசு. அதன்பிறகு ஆட்சிக்கு வந்த மன்மோகன்சிங் அரசு, 2005ல் 123 - ஒப்பந்தம் எனப்படும் இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் உள்ளிட்ட அடிப்படை இராணுவ ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு இந்தியாவை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் இழுத்து சென்றது.
பின்னர், 2014ல் ஆட்சிக்கு வந்த மோடி அரசு இந்த நிகழ்ச்சிப் போக்கினை துரிதப்படுத்த துவங்கியது. 2015ல் இதற்கான இந்திய அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான கட்டமைப்பை (Framework for US-India Defence Relations) உருவாக்கியது. அதன் மூலம், 2016ல் இராணுவ தளவாட பரிவர்த்தனை புரிந்துணர்வு ஒப்பந்தம் (Logistics Exchange Memorandum of Agreement - LEMOA), 2018ல் பரஸ்பர தொலைதொடர்பு இணக்கம் மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தம் (Communication, Compatability and Security Agreement - COMCASA), 2019ல் பாதுகாப்பு தொழிற்துறை ஒப்பந்தம் (Industrial Security Annex - ISA - இது 2002ல் வாஜ்பாய் அரசால் கொண்டுவரப்பட்ட GSOMIA ஒப்பந்தத்தை திருத்தி கொண்டு வரப்பட்டதாகும்), 2020ல் அடிப்படை பரிவர்த்தனை மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் (Basic Exchange and Co-operation Agreement - BECA) ஆகிய 4 அடிப்படை பாதுகாப்பு - இராணுவ துறை ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு தனது புதிய காலனிய சேவையை துரிதப்படுத்தியது மோடி அரசு. இவை மட்டுமல்லாமல் 2024ல் பாதுகாப்புத் துறை விநியோக சங்கிலியில் Basic Exchange and Co-operation Agreement - BECA) முன்னுரிமை அளிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
ஆனால், தற்போது வெளியிட்டிருக்கும் இந்த "காம்பாக்ட்" திட்டமானது இவை அனைத்தையும் பல மடங்கு தாண்டி பாதுகாப்புத் துறை மட்டுமல்லாது அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய வளரும் தொழில்நுட்பத் தொழில்துறைகள் அனைத்திலும் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை நிறுவும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது. போட்டி ஏகாதிபத்தியங்களான, சீனா, ரஷ்யா, ஐரோப்பிய யூனியன் ஆகியவற்றுடனான இந்தியாவின் உறவுகளை முற்றிலுமாக ஒழித்துக்கட்டி இந்தியாவை அமெரிக்காவின் முழு அளவிலான புதியகாலனியாக மாற்றும் இலக்கை இத்திட்டம் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
அதிகரிக்கும் பாசிச அபாயம்
இந்த "காம்பாக்ட்" திட்டம் அறிவிக்கப்பட்ட ஒரு சில மாதங்களுக்குள்ளாகவே - இரு தரப்பு ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்படாத நிலையிலேயே கூட அத்திட்டத்திற்கு சேவை செய்யும் வகையிலான அனைத்து அம்சங்களையும் தானாக சிரமேற்று துரிதமாக நடைமுறைபடுத்தத் துவங்கி விட்டது மோடி அரசு. இத்திட்டத்திற்கு தடையாக இருக்கும் அனைத்து சட்டங்களையும் திருத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு விட்டது. வரி விதிப்பை குறைத்து அமெரிக்காவின் இறக்குமதி சந்தையை விரிவுபடுத்துவது, அணுசக்தி இழப்பீடுச் சட்ட (Nuclear Liability Act) திருத்தம், புதிய குடியேறிகள் மசோதா 2025, இந்திய தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களையும், விண்வெளி ஆய்வு மையத்தையும் எலான் மஸ்கின் ஸ்டார்லிங், ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனங்களுடன் இணைத்தது, யுஜிசி விதிகளை திருத்தி உயர்கல்வியை பன்னாட்டு கார்ப்பரேட்களின் ஏகபோகத்திற்கு திறந்துவிட்டது போன்றவை அதற்கு உதாரணங்கள் ஆகும்.
விவசாயிகள் மட்டுமல்லாமல் தொழிலாளர்களும் வாழ முடியாத நிலையை புதிய தொழில்நுட்ப திணிப்புகள் உருவாக்கி வருகின்றன. வேலையின்மை, விலைவாசி உயர்வு, பணவீக்கம், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, தாலிக்கு கூட தங்கம் வாங்க முடியாத நிலை, கல்வியை தொடர முடியாத சூழல், நோய்களுக்கு உரிய மருந்து கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் என எண்ணற்ற துயரங்கள் அதிகரிப்பை இந்த ஒரு சில மாதங்களிலேயே மக்கள் சந்தித்து வருகின்றனர்.
இத்திட்டத்தின் அடிப்படையில் இன்னும் என்னென்ன ஒப்பந்தங்கள் செய்து நாட்டை அமெரிக்காவின் புதிய காலனிய பிடியில் இறுக்கப் போகிறது என்பது வெள்ளை மாளிகைக்கே வெளிச்சம்(!!). ஆனால் அதற்கான முன்னோட்டமே இன்று படுபயங்கரமாக உள்ளதை மேலே குறிப்பிட்ட சில நிகழ்வுகளில் இருந்தே நம்மால் காண முடிகிறது.
எலான் மஸ்கின் டெக்னோ பாசிசத்திற்கான சேவையை ஏற்கெனவே துவங்கிவிட்ட திராவிட - கேரள மாடல் அரசுகள்
கேரளாவை சார்ந்த ஹெக்ஸ்20 என்ற தனியார் நிறுவனம் மூலம் எலான் மஸ்கின் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் ட்ரான்ஸ்போர்ட்டர்-13 திட்டத்தின் ஒரு பகுதியாக "நிலா" எனும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் மூலம் ஸ்பேஸ்-எக்ஸ்-ன் விண்வெளி ஆராய்ச்சி நிலையங்களுக்கு தேவையான உபகரணங்களை சுமந்து செல்லும் (Payload-neutral) எடை குறைவான செயற்கைகோள்களை இயக்க உள்ளது. இதற்கு ஒத்துழைப்பு கொடுக்க அரசின் விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவும் ஒப்புதல் அளித்துள்ளது. அதன் பிஎஸ்எல்வி ராக்கெட் மற்றும் தளங்களை பயன்படுத்தியே இத்திட்டங்களை நிறைவேற்ற உள்ளது. இத்திட்டத்தின் எல்லையை விண்வெளி, வான் பாதுகாப்பு, விமானப் போக்குவரத்து உள்ளிட்ட யுத்தத்தந்திரம் வாய்ந்த தொழில்துறை அனைத்துக்கும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளன. இதை கேரள சிபிஎம் அரசு அரசு-தனியார் கூட்டு (Private-Public partnership) எனும் கொள்கையின் பெயரில் தலைமையேற்று செயல்படுத்தி வருகிறது. அமெரிக்காவின் மாபெரும் கட்டமைப்புத் திட்டங்களின் பகுதியாக விளங்கும் விழிஞ்சம் துறைமுக விரிவாக்கத்தையும் இந்த கொள்கையின் பெயரிலேயே செயல்படுத்தி வருகிறது. இவை ஒரு சில உதாரணங்கள் மட்டுமே ஆகும். சுதேசிய தொழிற்துறை வளர்ச்சி அனைத்தையும் சீரழித்து அதானிகளுக்கும் மஸ்க்குகளுக்கும் சிவப்புக் கம்பளம் விரித்து சேவை செய்து வருகிறது அந்த சிவப்பு லிப்ஸ்டிக் பூசிய பாராளுமன்ற பன்றி.
பாஜக அரசின் திட்டங்களை முதல் ஆளாக நிறைவேற்ற துடிக்கும் "தனியார் மாடல்" திமுக அரசு இதேபோன்ற செயற்கைகோள் திட்டத்தை 2022ம் ஆண்டிலேயே துவங்கிவிட்டது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சேவை செய்யும் வகையில் திமுக அரசும் டூஸ்பேஸ் (ToSpace)) என்ற நிறுவனமும் சேர்ந்து இந்தியன் சாட் வி2, லோரா உள்ளிட்ட பல்வேறு எடைகுறைவான செயற்கைகோள் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இதோடு மட்டுமில்லாமல், சென்ற ஆண்டு அமெரிக்காவுக்கு சென்ற மு.க.ஸ்டாலின் அமெரிக்காவின் நவீன தொழில்நுட்பத் தொழில்துறை சந்தைக்கான உற்பத்தி தளமாக தமிழ்நாட்டை காவு கொடுப்பதற்கான பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வந்தார். எலான் மஸ்கின் டெஸ்லா மின்சார கார் உற்பத்திக்கான தளமாக்கவும், செமிகண்டக்டர் பாகங்களுக்கான உற்பத்தி மையமாக தமிழ்நாட்டை மாற்றவும் டேட்டா சென்டர், ஏரோஸ்பேஸ் ஆய்வு மையங்கள் - உதிரி பாக உற்பத்தி கூடங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகளை உருவாக்கி வருகிறது என்பதை பரந்தூர் விமான நிலையம் பற்றிய கட்டுரை உள்ளிட்ட பல்வேறு சமரன் கட்டுரைகளில் நாம் ஏற்கெனவே பார்த்து வந்துள்ளோம்.
இந்த பொருளியல் நலன்களின் அடிப்படையில் இருந்துதான் இவை பாஜக அரசின் அனைத்து பாசிச நடவடிக்கைகளுக்கும் மறைமுகமாக ஆதரவளித்து வருகின்றன. இத்தனை நாள், பாசிச எதிர்ப்பு என்று போலியாக பேசிக் கொண்டிருந்த காங்கிரஸ், திமுக, சிபிஐ, சிபிஎம், விசிக, தவெக என கட்சி பேதமில்லாமல் அனைத்து கட்சிகளும் தற்போது மோடி அரசின் பாசிசத்தை தேசபக்தி சாயம் பூசி ஒரே குரலில் வரவேற்று பேசுகின்றன. அதானியை தங்களின் கூட்டாளி என்பது, பாகிஸ்தான் மீது இராணுவ தாக்குதல் நடத்திய இந்திய இராணுவத்தையும் மோடி அரசையும் பாராட்டுவது போன்ற திருத்தல்வாத கம்யூனிஸ்ட் கட்சிகளின் சமீப அறிக்கைகளை பார்த்தால் அவை கம்யூனிஸ்ட் கட்சிகளின் அறிக்கைதானா அல்லது ஆர்.எஸ்.எஸ்.ன் அறிக்கையா என மக்கள் குழம்பும் அளவுக்கு அவர்கள் சமுக தேசியவெறியர்களாக மாறியுள்ளதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.
இவ்வாறு இந்தியாவில் பாசிசம் பிற்போக்கு சக்திகளை மட்டுமல்லாமல் சந்தர்ப்பவாத கம்யூனிஸ்ட் கட்சிகளையும் தங்களது அணியில் ஒன்று திரட்டியுள்ளதானது, ஏனைய அனைத்து உழைக்கும் மக்களுக்கும், ஜனநாயகத்தை விரும்பும் நடுத்தர சக்திகளுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளதை நாம் காண முடிகிறது. இந்த நிலை "காம்பாக்ட்" திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும் பட்சத்தில் மிக மோசமடையும்.
எனவே சர்வதேச அளவில் அமெரிக்க - சீன ஏகாதிபத்தியங்களின் பனிப்போரையும் உலகப்போர் தயாரிப்புகளை அனைத்து ஒடுக்கப்பட்ட தேசங்களின் உழைக்கும் மக்களும் ஜனநாயக சக்திகளும் ஒன்று சேர்ந்து முறியடிப்பதும்; தேசிய அளவில் அமெரிக்காவின் DOGE-TECHNO பாசிசத்திற்கு சேவை செய்யும் விதமாக இந்தியாவில் பாசிசத்தை தீவிரப்படுத்தும் மோடி அரசை அதன் எச்சங்கள் கூட இல்லாத அளவுக்கு அழித்தொழிப்பதும் இன்றைய அத்தியாவசிய கடமையாக நம் கண் முன்னே இருக்கிறது. நாம் பாசிசத்திற்கு இரையாக போகிறோமா? அல்லது வர்க்க ரீதியான ஐக்கியத்தை முன்னெடுத்து பாசிசத்தை முறியடித்து ஜனநாயகத்தையும் அதன் தொடர்ச்சியாக பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையும் நிலைநாட்ட போகிறோமா? என்பது இனி நம் கையில்தான். உடனடியாக முடிவெடுங்கள்! உழைக்கும் மக்களே! ஜனநாயக சக்திகளே!!
- சமரன்
(ஜூன் -ஜூலை இதழில்)