தோழர் A. சந்திரன்: வெளித் தெரியாத வேர்கள்... நான் பயின்ற தோழர்கள்!
துரை. சண்முகம்
சிற்றுளியால் மரத்தை செதுக்குவார். ஒரு சிறு புன்னகையால் நம் மனதை செதுக்குவார்,
அவர்தான் ஏ.சி. எனும் தோழர் A. சந்திரன் அவர்கள்.
1993 இல் கீழைக்காற்று பணிக்காக நான் வந்த போது எனக்கு அறிமுகமானவர் திருச்சி பகுதியில் அமைப்பில் இயங்கிய தோழர் ஏ.சி. அவர் ஒரு தொழில் முறை கார்பென்டரும் கூட.
கீழைக்காற்றுக்கான புத்தக மர அலமாரிகள் செய்வதற்கான வேலைக்காக அவர் சென்னை வந்திருந்தார்.
எனக்கு அப்போது 25 வயது தான் இருக்கும். தோழர் என்னை விட ஒரு 15 வயது மூத்தவர். அரசியல் பருவம் அனைத்து பருவத்தையும் பின்னுக்குத் தள்ளி விடுகிறது.
அரசியல் பொது நோக்கத்திற்காக இணைந்து வேலை செய்யும் போது தோழர்கள் உறவாடும் அன்பும் பொறுப்பும் அரசியல் தோழமையும் குறிப்பிட்ட தோழர்களை நெஞ்சில் நிறுத்தி விடுகிறது. அப்படிப்பட்டவர் தோழர் ஏ.சி.
அப்போது அமைப்பில் அவருடைய செயல்பாடுகள் எதுவும் எனக்குத் தெரியாது. என்னோடு இணைக்கப்பட்ட வேலையில் நேரம் பார்க்காது அவர் உழைத்த உழைப்பும், சிறியவனாக இருந்தாலும் வேலைகளில் நான் சொல்வதையும் விரும்புவதையும் ஏற்று பக்குவமாக பதிலளிப்பார் தோழர்.
புத்தக ரேக்குக்கான சில மாடல்களை பார்ப்பதற்காக சென்னையின் பிரபலமான புத்தகக் கடைகளுக்கு அழைத்துச் சென்று அவரை பார்க்க வைத்தேன். “ நமது கையில் இருக்கும் மரத்துண்டுகளை வைத்துக்கொண்டு இதற்கு ஆசை படலாமா தோழர்?” என்றார் நகைச்சுவையாக. வடிவத்தைப் பாருங்கள் மற்றபடி நம்மிடம் இருப்பதை வைத்து ஆதிவாசி மக்கள் இருப்பதிலிருந்து சிறப்பாக செய்யும் ஆதிவாசி அழகியலை செய்தால் போதும் என்றேன்!
பரவால்ல தோழர் இறுக்கம் இல்லாம நல்லா பேசுறீங்க! என்று தோளைப் பிடித்து மகிழ்ந்தார்.
வேலைகளிருந்து ரொம்பவும் பழகியவர்கள் போல நெருக்கமாகி விட்டோம். பிரச்சனை என்னவென்றால் இதுவரை வீட்டில் சமைத்தே பழகாத என்னை, கபிலன் தோழர், ஏ.சி.க்கும் கூட உள்ளவங்களுக்கும் தினம் சமையல் பண்ணிடுங்க என்றார்.
ஒருலோடு மரத்துண்டுகளில் உள்ள ஆணிகளை கூட நான் தோழர் கபிலனோடு சேர்ந்து அசராமல் பிடுங்கி விட்டேன்.
தினம் ஒருபடி சோறு வடிப்பதற்குள் பெரும்பாடு ஆகிவிட்டது. ஒரு நாள் சோறு நண்பனாக குழைந்திருக் கும் மறுநாள் எதிரியாக விறைத்திருக்கும். ஒவ்வொரு நாளும் கொலை செய்யப்பட்ட அரிசியை முகம் சுளிக்காமல் சாப்பிடுவார் தோழர் ஏ.சி. சாம்பாரில் தற்கொலை செய்து கொண்ட காய்கறிகளை எனது மனம் நோகாமல் வயிற்றில் அடக்கம் செய்து கொள்வார்.
வேலைகளின் ஊடாக அவரிடம் நான் பழகிக் கொண்டது, மக்களுக்கான வேலைகளில் நம்மிடம் உள்ள சிறந்ததை வழங்க வேண்டும் என்ற பண்பை. திடீரென அவரோடு வேலை செய்யும் போது யோசனைக்கு வரும் ஏதாவது கவிதை ஒன்றை எனது பாக்கெட்டில் எப்போதும் வைத்திருக்கும் சிறு கையடக்க நோட்டில் எழுத ஆரம்பித்து விடுவேன். என்னங்க என்பது போல் சிரித்துக் கொண்டே பார்ப்பார், நீங்கள் மரத்தை இழையுங்கள்! நான் கொஞ்சம் எழுத்தை இழைக்கிறேன்! என்பேன்.
சிரித்துக் கொண்டே மரப்பலகை பொருத்தி ஆணி போட்டு அவர் புரட்டிப் போடும்போது அங்கே உழைப்பின் கவிதை நிறைந்திருக்கும்.
ஒரு அடுக்கு செய்வதற்கு சேதாரம் இல்லாமல் உரிய அளவிலான பலகைகளை தேர்ந்தெடுப்பது, புத்தகம் பார்க்கும் போது யாருடைய கையும் சிராய்த்து விடக் கூடாது எனும் நோக்கில் சன்னமாக இழைப்பது, புத்தகத்தை எடுக்கும்போது மேல் விரல்கள் இடிக்காத அளவுக்கு இடைவெளிகளை மிகச் சரியாக பொருத்துவது.. அடடா நமது அமைப்பின் தோழர்கள் மரங்களைக் கூட ஒரு புதிய தொடர்பை வென்றெடுப்பது போல எவ்வளவு அழகாக செய்கிறார்கள் என்று அகமகிழ்ந்த தருணங்கள் அது.
முழு ரேக்குகளும் அவருடைய கடின உழைப்பில் உருவானது.
சில நேரங்களில் இரவு வேலை எனக்கு அயற்சியை ஏற்படுத்தும்.
தோழரின் உழைப்பும் விழிப்பும் என்னையும் ஒரு வகையில் புதிய களங்களிலான வேலைக்கு சேர்த்தே இழைத்தது என்றால் மிகை இல்லை.
அந்த வேலைக் காலங்களில் தன்னுடன் இருக்கும் உதவியாளர் இளைஞர்களை ஊருக்கு அனுப்புவாரே ஒழிய, வீட்டுக்கு போவதைப் பற்றி நினைப்பே அற்றவராய் வேலையில் கரைந்து இருப்பார் தோழர். எவ்வளவு கடின உழைப்பிலும் தோழர் ஏ.சி. என்றால் முதலில் நினைவுக்கு வருவது அவருடைய புன்னகைதான்!
இதுபோன்ற உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த தோழர்கள் அமைப்பிற்கு பங்களித்தது ஒரு பக்கம். அப்போது இளைஞனான எனக்கு வார்த்தைகள் அற்ற பல கவித்துவ உழைப்பின் அழகியலை எங்கிருந்து பெறுவது? எனும் அடிப்படையை ஆழமாக்கியது.
பொது லட்சியத்திற்கான எந்த வேலையாக இருந்தாலும் ஈடுபாட்டுடனும் இலக்குடனும் வேலை செய்வதன் தடங்களை காட்டியவர்களுள் தோழர் ஏ.சி.யையும் நான் மறக்க இயலாது.
புரட்சி எனில் மக்களுக்கான எந்த வேலையாக இருந்தாலும் பொறுப்பாக இயங்குவது! என்ற கண்ணோட்டத்தை நான் பின்பற்ற உதவியாக இருந்ததில் தோழர் ஏசி உடனான பழக்கம் மதிப்பு வாய்ந்தது.
குறிப்பு : ( இந்த பகுதி இத்தொடரின் 2ம் பாகமாகும். இத்தொடரின் நோக்கம் கீழுள்ள இணைப்பில் உள்ளது)
- துரை. சண்முகம் (முகநூலில்)
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு