எங்கெல்ஸ் எழுதிய நூலில் மார்கன்

தொகுப்பு-அ.கா.ஈஸ்வரன்

எங்கெல்ஸ் எழுதிய நூலில் மார்கன்

(எங்கெல்ஸ் எழுதிய “குடும்பம் அரசு ஆகியவற்றின் தோற்றம்” என்கிற நூலில் மார்கனைப் பற்றிய எழுதியவைகளை மட்டும் இங்கே தொகுப்பாக பார்க்கலாம். இங்கே குறிப்பிடுகிற பக்கங்கள், அன்றைய சோவியத் நாட்டில் செயல்பட்ட முன்னேற்றப் பதிப்பகம்  வெயிட்ட தேர்வு நூல்கள் 11யில் காண்பவை.

லூயி ஹென்றி மார்கன் எழுதிய "பண்டைய சமுதாயம்" என்கிற நூல் தமிழில் வெகுகாலமாக எதிர்பார்க்கப்பட்டது. தற்போது தான் அச்சில் நமக்குக் கிடைத்துள்ளது. மொழியாக்கம் என்பது அவ்வளவு எளிதானது அல்ல. இந்த நூல் எவ்வளவு கடும் உழைப்புக்குப்பின் நம் கையில் கிடைத்துள்ளது என்பதை, மொழிபெயர்ப்பளார் முன்னுரையால் அறிய முடிகிறது. இது போன்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க நூலை, தவறில்லாமல் வெளியிட வேண்டும். சிந்தன் வெளியீட்டகம் சிறப்பாக இந்த நூலை வெளியிட்டிருக்கிறது.

"பண்டைய சமுதாயம்" என்பது மார்கன் நூலின் தலைப்பு சுருக்க வடிவம், தலைப்பின் முழுமை "காட்டுமிராண்டி நிலை, நாகரிகமற்ற நிலை ஆகியவற்றிலிருந்து நாகரிகம் நோக்கிய மனித முன்னேற்றப் பாதையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள்" என்பதாகும்.

"பண்டைய சமுதாயம்" என்கிற இந்த நூல் மார்க்சையும் எங்கெல்சையும் மிகவும் கவர்ந்த நூல். ஏன் என்றால், இந்த நூல் பொருள்முதல்வாதப் பார்வையில் எழுதப்பட்டுள்ளது. மார்கன் தன்னுடைய வழியில் பொருள்முதல்வாதத்தைக் கண்டுபிடித்து அதன் வழியில் அமெரிக்கச் செவ்விந்திய மக்களை ஆய்வு செய்துள்ளார். அது மட்டுமல்லாது மார்கனின் நூலைப் படித்ததின் விளைவாக "மார்கனுடைய "பண்டைய சமுதாயம்" நூலின் சுருக்கம்" என்கிற நூலை மார்க்ஸ் எழுதத் திட்டமிட்டிருந்தார், அதற்கான குறிப்புகளையும் எழுதி வைத்திருந்தார். அதனை எங்கெல்ஸ் தாம் எழுதிய "குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்" என்கிற நூலில் பயன்படுத்திக் கொண்டார்.

வரலாற்றுக்கு முன்பான மனிதயின வாழ்கை பற்றிய ஆய்வு முடிவுகள், இன்று எவ்வளவு முன்னேறி இருந்தாலும், மார்கனின் "பண்டைய சமுதாயம்" நூல் அடிப்படையாக இருக்கிறது. சமூகவியல், மானுடவியல், தொல்லியல், வரலாற்றியல், இன ஆய்வியல், மொழியியல் போன்ற துறைசார்ந்த மாணவர்கள் "பண்டைய சமுதாயம்" என்கிற இந்த நூலை இன்று படித்து அறிய வேண்டியிருக்கிறது. நோக்கீட்டு நூலாக (Reference book) இன்றும் தேவைப்படுகிறது. இந்த நூலை தமிழில் படிப்பதற்குத் தற்போது வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

"குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்" நூலின் முதற் பதிப்புக்கு எங்கெல்ஸ் 1884இல் எழுதிய முன்னுரையில் இருந்து:-

"ஒரு பொருளில் பின்வரும்  அத்தியாயங்கள் மார்க்ஸ் விட்டுச் சென்ற ஒரு பணியைச் செய்து முடிக்கும் வகையில் அமைந்தவையே. வரலாற்றைப் பற்றித் தன்னுடைய -எம்முடைய என்று சில வரம்புகளுக்குட்பட்டு நான் சொல்லக் கூடும்- பொருள்முதல்வாத ஆராய்ச்சியின் மூலம் தான் கண்ட முடிவுகளின் தொடர்பில் மார்கனது ஆராய்ச்சி விளைவுகளை மக்களுக்கு முன்பாக வைத்து அதன் மூலம் அவற்றின் முக்கியத்துவம் முழுவதையும் தெளிவாக்க வேண்டும் என்று மார்க்ஸ் திட்டமிட்டிருந்தார். ஏனென்றால் நாற்பது ஆண்டுகளுக்கு முன் மார்க்ஸ் கண்டுபிடித்திருந்த வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கருத்தோட்டத்தைத்தான் மார்கன் தன்னுடைய வழியில் அமெரிக்காவில் மறுபடியும் கண்டுபிடித்தார். 

மார்கன் அநாகரிகத்தையும் நாகரிகத்தையும் ஒப்பிட்டுப் பார்த்த பொழுது மார்க்ஸ் எந்த முடிவுகளைச் செய்தாரோ-பிரதான விஷயங்களில் அதே முடிவுகளுக்கு வருமாறு இந்தக் கருத்தோட்டம் செய்தது. மேலும் ஜெர்மனியில் அதிகார வர்க்க சார் புள்ள பொருளியலாளர்கள் எப்படிப் பல ஆண்டுகளாக மூலதனம் என்ற நூலிலிருந்து ஆர்வத்துடன் திருடியபோதிலும் அந்த நூலைப் பற்றி விடாப்பிடியாக மௌனம் சாதித்து அமுக்கியும் வந்தார்களோ, அதே மாதிரியாக இங்கிலாந்தில் "வரலாற்றுக்கு முந்திய" விஞ்ஞானத்தின் சார்பாகப் பேசியவர்கள் மார்கன் எழுதிய பண்டைக்காலச் சமூகம் என்ற நூல் விஷயமாக நடந்து கொண்டார்கள். காலஞ்சென்ற என்னுடைய நண்பர் செய்ய முடியாமல் போன பணிக்கு பதிலாக நான் செய்திருக்கின்ற பணி அற்பமாகத்தான் இருக்க முடியும். மார்க்ஸ் மார்கனுடைய நூலிலிருந்து விரிவான பகுதிகளை எடுத்து அவற்றுக்கு விமர்சனக் குறிப்புகள் எழுதியுள்ளார். அவை எனக்கு முன்னால் இருக்கின்றன. இந்நூலில் சாத்தியமான இடங்களில் அவற்றை அப்படியே வெளியிட்டிருக்கிறேன்." (பக்கம் 7-8)

பல்துறை மாணவர்கள் மட்டுமல்லாது, கம்யூனிஸ்டுகளும் "பண்டைய சமுதாயம்" என்கிற நூலை படித்தறிய வேண்டும். தற்போது நான் நிறைய பழங்குடிகள் பற்றிய நூல்களைப் படித்து வருகிறேன், அதற்கு "பண்டைய சமுதாயம்" என்கிற இந்த நூல் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

எங்கெல்ஸ் மேலும் "தென்னிந்தியாவிலுள்ள தமிழர்கள் மத்தியிலும் நியூயார்க் மாநிலத்திலுள்ள செனீகா இராகோஸ்கள் மத்தியிலும் இரத்த உறவு முறையைக் குறிக்கும் சொற்கள் இருநூற்றுக்கு மேற்பட்ட உறவுகள் விஷயத்தில் இன்றும் கூட ஒன்றாகவே இருக்கின்றன." (பக்கம் 47) என்கிறார். அதாவது சதோதரரின் குழந்தைகள் ஒருவரையொருவர் அண்ணன், தம்பி, அக்கா, தங்கை என்று அழைத்துக் கொள்கின்றனர், சகோதரிகளின் குழந்தைகளும் இதைப் போலவே அழைத்துக் கொள்கின்றனர். இத்தகைய ரத்த உறவுமுறை பெயர்கள் தமிழர்களுக்கும் அமெரிக்கச் செவ்விந்திய செனீகா இராகோஸ் பழங்குடிகளுக்கும் இருநூற்றுக்கு மேலுள்ள உறவுப் பெயர்கள் ஒன்றாக இருக்கின்றன.

இவ்வாறு எங்கெல்ஸ் குறிப்பிடுகிற தமிழர்கள் பற்றிய செய்தி, மார்கனின் "பண்டைய சமுதாயம்" நூலில் இருந்தே அறிந்துள்ளார். சிந்தன் வெளியிட்ட "பண்டைய சமுதாயம்" நூலில் 687 முதல் 714 வரை உள்ள பக்கங்களில் காணப்படுகிறது. எடுத்துக்காட்டாக, முப்பாட்டன், பூட்டி, பாட்டன், பேரன், மருமகள். சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட ஆங்கில நூலில் தமிழர்களின் உறவுகளைப் பற்றிய செய்தி காணப்படுகிறது. அப்படிப்பட்ட நூல் இப்போது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு நம் கையில் இருக்கிறது.

"குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்" என்கிற நூலில் எங்கெல்ஸ் மார்கன் எழுதிய “பண்டைய சமுதாயம்” என்கிற நூலைப் பற்றி கூறியதைத் தொகுத்து இங்கே பார்ப்போம்.

1) "குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்" என்கிற நூலின் நான்காம் ஜெர்மன் பதிப்புக்கு எங்கெல்ஸ் எழுதிய முன்னுரை:-

“முதல் பதிப்பு வெளியாகி ஏழு ஆண்டுகள் முடிந்து விட்டன. இந்த ஏழு ஆண்டு களில் குடும்பத்தின் மூல வடிவங்களைப் பற்றிய நமது அறி வில் முக்கியமான முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. எனவே நூலின் பொருளை மேலும் விவரித்து மேம்படுத்தும் பணி யில் நான் அக்கறையுடன் ஈடுபடுவது அவசியமாயிற்று. குறிப்பாக மற்றொரு காரணமும் உண்டு. இந்த நூலை அப்படியே அச்சுப்பதிவு செய்து விட்டால், பிறகு நான் மேற்கொண்டு மாறுதல்கள் செய்வது சிறிது காலம் வரை இயலாமற் போய் விடும்.

ஆகவே நான் நூலின் முழு வாசகத்தையும் கவனத்துடன் மீண்டும் படித்துத் திருத்தினேன். சில விவரங்களைப் புதி தாகச் சேர்த்தேன். அவை இன்றைய விஞ்ஞான நிலையைக் கணக்கிலெடுத்துக் கொண்டிருக்கின்றன என்றே கருதுகிறேன். மேலும், குடும்பத்தின் வரலாறு பாஹொஃபெனிலிருந்து மார்கன் வரை பெற்ற வளர்ச்சியைக் குறித்து சுருக்கமான விமர்சனத்தை இந்த முன்னுரையில் தருகிறேன். இதற்கு முக்கியமான காரணம் ஒன்று உண்டு: இங்கிலாந்தில் உள்ள ஏடறியா வரலாற்று மரபினரிடம் சிறிது இனவெறி படிந்துள்ளது; இவர்கள் மார்கனுடைய முடிவுகளைத் திருடித் தம்முடையதாக்கிக் கொள்வதற்குச் சிறிதும் தயங்கவில்லை, எனினும் புராதனச் சமூக வரலாற்றைப் பற்றிய கருத்தோட்டங்களில் மார்கனின் கண்டுபிடிப்புகள் ஏற்படுத்திய புரட் சியை மௌனம் சாதிப்பதின் மூலம் அழித்து விடலாம் என்று இந்த மரபினர் தம்மால் முடிந்த எல்லாவற்றையும் தொடர்ந்து செய்து வருகின்றனர். இந்த ஆங்கிலேய உதார ணத்தை மற்ற நாடுகளும் அடிக்கடி பின்பற்றி வருகின்றன.” (பக்கம் 12-13)

2) புறமண முறையைப் பற்றி மாக்லென்னான் என்பவரையும் மார்கனையும் எங்கெல்ஸ் ஒப்பிட்டு பேசுகிறார்.

"மாக்லென்னான் புறமண முறை என்று பெயரிட்ட முறை பொதுவில் பரவியிருப்பதையும் அதன் மாபெரும் முக்கியத் துவத்தையும் சுட்டிக்காட்டியது தான் அவ ருடைய சிறப்பாகும். ஆனால் புறமண முறைக் குழுக்கள் இருப்பதைக் கண்டு பிடித்தது நிச்சயமாக அவரல்ல; அவர் கண்டுபிடிக்காதது மட்டுமல்ல அதைப் புரிந்து கொள்ளவுமில்லை. மாக்லென் னானுக்கு மூலங்களாகப் பயன்பட்ட பல பார்வையாளர் களுடைய தனித்தனிக் குறிப்புகள் ஒரு பக்கமிருக்க, இந்தியா வில் மஹர்களிடையே இருக்கின்ற இந்த முறையைலாதாம் (விளக்க முறை இனவியல், 1859) துல்லியமாகவும் சரியாகவும் வர்ணித்திருக்கிறார். மேலும், அது பொதுவாக வழக்கத்தில் உள்ளது, உலகத்தின் எல்லாப் பகுதிகளிலும் இருந்து வருகிறது என்று லாதாம் அறிவித்தார். அவருடைய நூலின் இந்தப் பகுதியை மாக்லென்னானே மேற்கோள் காட்டியிருக்கிறார். மேலும், நமது மார்கன் கூட, ஏற்கெனவே 1847ஆம் ஆண்டிலேயே (American Review என்ற சஞ்சிகையில்) இரா கோஸ்களைப் பற்றி எழுதிய கடிதங்களிலும் 1851இல் எழுதிய இராகோஸ் லீக் என்ற நூலிலும் இம்முறை இந்த இனக்குழுவில் இருப்பதாக நிரூபித்தார், அதைச் சரியாகவும் வர்ணித்தார்." (பக்கம் 22-23)

3) குழுமண முறையினைப் பற்றி மார்கன் கூறியதை எங்கெல்ஸ் தொத்துத் தருகிறார்,

"பலதார மணம், பல கணவர் மணம், ஒருதார மணம் என்ற மூன்று மண வடிவங்கள்தான் மாக்லென்னானுக்குத் தெரியும். ஆனால் ஒரு தடவை இதன் மீது கவனம் திருப்பப்பட்டதும், வளர்ச்சியில்லாத மக்களினங்களில் ஆண்களின் குழு ஒன்று பெண்களின் ஒரு குழுவைப் பொதுவில் அனுபவிக்கின்ற மண வடிவங்கள் இருக்கின்றன என்ற உண்மைக்கு மேன்மேலும் அதிகமான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும், இந்தக் குழு மணம் (commu- nal marriage) ஒரு வரலாற்று உண்மையே என்று லப்பாக் (1870இல் அவர் எழுதிய நாகரிகத்தின் தோற்றம் என்ற நூலில்) அங்கீகரித்தார்.

இதை உடனடியாகத் தொடர்ந்து, 1871இல் புதிய மற்றும் பல விஷயங்களில் நிர்ணயமான ஆதாரங்களுடன் மார் கன் தோன்றினார். இராகோஸ் மக்களிடையில் நிலவி வந்த அலாதியான இரத்த உறவுமுறை அமெரிக்க ஐக்கிய நாட் டைச் சேர்ந்த எல்லாப் பூர்விகக் குடிகளுக்கும் பொதுவானது என்றும் அது அங்குள்ள மண முறையிலிருந்து எதார்த்தத் தில் தோன்றுகின்ற இரத்த உறவுமுறையின் வரையறை களுடன் நேரடியாக முரண்பட்டிருந்தாலும் அது ஒரு கண்டம் முழுவதிலும் பரவிக் கிடக்கிறது என்றும் மார்கன் உறு தியாகக் கருதினார். எனவே அவர் வினாக்குறிப்புகளையும் அட்டவணைகளையும் தயாரித்து அவற்றின் அடிப்படையில் மற்ற மக்களினங்களிடையில் நிலவும் இரத்த உறவுமுறை களைப் பற்றிய விவரங்களைச் சேகரிக்கும்படி அமெரிக்க மத்திய அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டார். அவர் விடைகளிலிருந்து பின்வருவனவற்றைக் கண்டுபிடித்தார்: 

1) அமெரிக்க செவ்விந்தியர்களிடையே உள்ள இரத்த உறவுமுறை ஆசியாவிலும் பல இனக்குழுக்களிடையில் பரவியிருக்கிறது, அதிலிருந்து சிறிது மாறுபட்ட வடிவத்தில் ஆப்பிரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் பரவியிருக்கிறது; 

2) ஹவாய்த் தீவு களிலும் இதர ஆஸ்திரேலியத் தீவுகளிலும் இப்பொழுது அழியும் தறுவாயில் இருக்கின்ற குழு மண வடிவம் இதை முழுமையாக விளக்குகிறது; 

3) எனினும் இந்தத் திருமண வடிவத்துடன் சேர்ந்து ஓர் இரத்த உறவுமுறையும் இதே தீவுகளில் நிலவுகிறது; அதற்கும் முந்திய காலத்தைச் சேர்ந்த, ஆனால் இப்பொழுது நசித்து விட்ட ஒரு குழு மண வடிவத் தைக் கொண்டுதான் இந்த இரத்த உறவுமுறையை விளக்க முடியும். மார்கன் தான் சேகரித்த விவரங்களையும் முடிவு களையும் 1871ஆம் ஆண்டில் இரத்த உறவுமுறைகளும் மற்ற உறவுமுறைகளும் என்ற நூலில் வெளியிட்டார். அதன் மூலம் விவாதக் களத்தை விரிவுபடுத்தினார். அவர் இரத்த உறவு முறைகளைத் தனது தொடக்க நிலையாகக் கொண்டு அவற்றுக்குரிய குடும்ப வடிவங்களை மறுநிர்மாணம் செய்து தந்தார்; அதன் மூலம் ஒரு புதிய ஆராய்ச்சிப் பாதையையும் மனிதகுலத்தின் ஏடறிந்த வரலாற்றுக்கு முந்திய வரலாற் றைப் பற்றி முன்னை விட தொலைவாகப் பார்க்கும் பின்னோக்கு நிலையையும் வகுத்தளித்தார்." (பக்கம் 25-26)

4) தாய் உரிமை சமூகத்துக்குப் பிறகே தந்தை உரிமை சமூகம் தோன்றியது என்பதை எங்கெல்ஸ் மார்கன் எழுத்தை முன்வைத்து விவரிக்கிறார்.

"மார்கன் 1871ஆம் ஆண்டில் எதைத் தெளி வில்லாமல் ஊகித்தாரோ அது இங்கே முழுத் தெளிவுடன் வளர்க்கப்பட்டிருக்கிறது. அகமண முறையும் புறமண முறை யும் ஒன்றுக்கொன்று எதிரானவையல்ல. இந்த நாள்வரை புறமண முறை “இனக்குழுக்கள்” எவையும் எங்குமே கண்டு பிடித்துச் சொல்லப்படவில்லை. ஆனால் குழு மண முறை நிலவிய காலத்தில் - அநேகமாக அது எல்லா இடங்களிலும் ஏதாவதொரு காலத்தில் இருக்கவே செய்தது - ஒரு இனக் குழு என்பது சில குழுக்களை, குலங்களைக் கொண்டு அமைந்திருந்தது; அவை தாய்வழியில் இரத்த உறவுகள் கொண்டிருந்தன. இந்தக் குலங்கள் ஒவ்வொன்றும் தனக்குள்ளேயே மணம் செய்து கொள்ளக் கூடாதென்று கண்டிப் பான தடை இருந்தது. இதன் விளைவாக, ஒரு குலத்தைச் சேர்ந்த ஆண்கள் தமது இனக்குழுவிற்குள்ளேயே பெண்களை மனைவியராகக் கொள்ள முடிந்தது, வழக்கமாக அப்படித்தான் செய்தார்கள் என்றாலும் அந்த ஆண்கள் தமது குலத்துக்கு வெளியிலிருந்தே மனைவியரைக் கொள்ள வேண்டியிருந்தது. ஆக, குலத்தைப் பொறுத்தமட்டில் அது கண்டிப்பாகப் புறமண முறையைக் கொண்டிருந்தது, ஆனால் இந்த குலங்களைத் தன்னுள் கொண்டிருந்த இனக்குழு கண்டிப்பாக அகமண முறையைக் கடைப்பிடித்தது. இத்துடன் மாக்லென்னான் நிர்மாணித்திருந்த செயற்கை யான அமைப்பின் கடைசி எச்சங்களும் தகர்ந்துவிட்டன.

மார்கன் இத்துடன் திருப்தியடைந்து விடவில்லை. அவர் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்ட துறையில் இரண்டாவது நிர்ணயமான முன்னேற்றத்தைச் சாதிப்பதற்கு அமெரிக்க செவ்விந்தியர்களின் குலங்கள் ஒரு சாதனமாக அவருக்குப் பயன்பட்டன. தாய் உரிமை அடிப்படையில் அமைக்கப் பட்டிருந்த குலங்களே ஆதி வடிவம், அதிலிருந்துதான் பின் னால் தந்தை உரிமையை அடிப்படையாகக் கொண்ட குலங் கள் வளர்ந்தன என்று மார்கன் கண்டுபிடித்தார். இப்படித் தந்தை உரிமை அடிப்படையில் அமைந்தவையே பண்டைக் கால நாகரிகத்தைச் சேர்ந்த மக்களிடையே நாம் பார்க்கும் குலங்களாகும். முந்திய வரலாற்று ஆசிரியர்கள் அனைவருக்கும் கிரேக்க, ரோமானியக் குலங்கள் ஒரு புதிராக இருந்தன; ஆனால் அவை இப்பொழுது அமெரிக்க செவ்விந் தியக் குலங்களைக் கொண்டு விளக்கப்பட்டன. ஆக, பூர்விக சமூகத்தின் வரலாறு முழுவதற்கும் ஒரு புதிய அடிப்படை கண்டுபிடிக்கப்பட்டது.

பரிணாம வளர்ச்சியைப் பற்றி டார்வின் கண்டுபிடித்த தத்துவம் உயிரியல் துறையில் எவ்வளவு முக்கியமானதோ, உபரி மதிப்பைப் பற்றி மார்க்ஸ் கண்டுபிடித்த தத்துவம் அரசியல் பொருளாதாரத் துறையில் எவ்வளவு முக்கிய மானதோ - அதே அளவுக்கு நாகரிகமடைந்த மக்களினங் களின் தந்தை உரிமைக் குலத்துக்குப் பூர்வாங்கமான கட்ட மாக ஆதிகாலத் தாய் உரிமைக் குலம் இருந்தது என்ற மறு கண்டுபிடிப்பும் பூர்விக சமூகத்தின் வரலாற்றுத் துறை யில் அதே முக்கியத்துவத்தைக் கொண்டதாகும். அதைக் கொண்டு குடும்பத்தைப் பற்றிய ஒரு வரலாற்றை முதல் தடவையாக மார்கன் உருவரையில் காட்ட முடிந்தது. தற்சமயம் கிடைத்துள்ள ஆதாரங்கள் அனுமதிக்கின்ற அள வுக்கு, குறைந்தபட்சம் மூலச்சிறப்பான வளர்ச்சிக் கட்டங் களாவது மொத்தத்தில் அந்த வரலாற்றில் பூர்வாங்கமாக நிறுவப்பட்டுள்ளன. பூர்விக சமூகத்தின் வரலாற்றை விளக்கு வதில் இது ஒரு புதிய சகாப்தத்தைத் துவக்குகிறது என்பது தெளிவு. இந்த விஞ்ஞானம் தாய் உரிமைக் குலம் என்ற அச்சாணியைச் சுற்றி வந்து கொண்டிருக்கிறது; அது கண்டு பிடிக்கப்பட்ட பிறகு, நாம் எந்தத் திசையில் ஆராய்ச்சி களைச் செலுத்த வேண்டும் என்பது தெரிந்து விட்டது; எதை ஆராய வேண்டும், ஆராய்ச்சியின் முடிவுகளை எப்படி வகைப்படுத்த வேண்டும் என்பது தெரிந்து விட்டது. எனவே மார்கனுடைய வெளிவருவதற்கு முன்பிருந்ததைக் காட்டிலும் தற்பொழுது இந்தத் துறையில் வேகமான முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது." (பக்கம் 27-30)

5) ஏடறிந்த வரலாற்றுக்கு முந்திய பண்பாட்டுக் கட்டத்தைப் பற்றி மார்கன் வகுத்துரைத்ததை எங்கெல்ஸ் விவரிக்கிறார்.

"மனிதகுலத்தின் ஏடறியா வரலாற்றுத் துறையில் திட்டவட்டமான ஒழுங்குமுறையை நுட்பமான அறிவுடன் புகுத்த முயன்றவர்களில் மார்கனே முதல்வராவார். முக்கியமான ஆதாரங்கள் இனிமேல் கிடைத்துத் திருத்தங்களுக்கு அவசியம் ஏற்பட்டாலொழிய அவருடைய பகுப்புமுறை தொடர்ந்து பின்பற்றப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

காட்டுமிராண்டி நிலை, அநாகரிக நிலை, நாகரிக நிலை என்னும் மூன்று பிரதான சகாப்தங்களில் அவர் முதல் இரண்டு நிலைகளைப் பற்றியும் மூன்றாவது நிலைக்கு மாறிச் செல்வதைப் பற்றியும் மட்டுமே அக்கறை கொண்டிருந்தார் என்பது இயல்பே. அவர் உயிர்வாழ்வதற்குரிய பொருட் சாதனங்களை உற்பத்தி செய்வதில் பெற்ற முன்னேற்றத் துக்குத் தக்கபடி இவ்விரண்டு சகாப்தங்கள் ஒவ்வொன்றை யும் கடைக்கட்டம், இடைக்கட்டம், தலைக்கட்டம் என்று மூன்று உட்கட்டங்களாகப் பிரித்தார்." (பக்கம் 34)

6) மார்கன் குறிப்பிடுகிற இணைக் குடும்பம் பற்றி எங்கெல்ஸ் விவரிக்கிறார், இந்த இடத்தில்தான் எங்கெல்ஸ் தமிழர்களைப் பற்றி பேசியுள்ளார்.

"மார்கன் தன்னுடைய வாழ்க்கையில் பெரும் பகுதியை இராகோஸ் மக்கள் மத்தியில் கழித்தார். அவர்கள் நியூ யார்க் மாநிலத்தில் இன்னும் வாழ்ந்து வருகிறார்கள். அவர் களில் (செனீகா என்ற) ஒரு இனக்குழுவினர் அவரைச் சுவீகரித்து ஏற்றுக் கொண்டிருந்தார்கள். அவர்களிடையே இருந்த இரத்த உறவுமுறை அவர்களுடைய மெய்யான குடும்ப உறவுமுறைகளுக்கு முரண்பட்டிருந்தது என்பதை அவர் கண்டார். திருமணம் ஒவ்வொரு ஜோடிக்கிடையே நடைபெற்றது. இரு தரப்பினரும் திருமண உறவைச் சுலப மாக ரத்து செய்து விடலாம். இதை 'இணைக் குடும்பம்" என்று மார்கன் குறிப்பிட்டார். அவர்களிடம் இத்திருமண முறை விதியாக இருந்தது. 

இத்திருமண ஜோடியின் குழந்தைகளை எல்லோரும் அறிந்திருந்தார்கள், அடையாளம் கண்டு கொண்டிருந்தார்கள். தகப்பனார், தாயார், மகன், மகள், சகோதரன், சகோதரி என்று யார், யாரைக் குறிப் பிட வேண்டும் என்பது பற்றிச் சந்தேகம் எதுவும் எழ முடி யாது. ஆனால் அச்சொற்கள் எதார்த்தத்தில் உபயோகிக்கப் பட்டதோ வேறுவிதமாக இருந்தது. ஓர் இராகோஸ் தனது சொந்தக் குழந்தைகளை மட்டும் மகன், மகள் என்று அழைப் பதில்லை; அவர் தனது சகோதரனின் குழந்தைகளையும் தன்னுடைய மகன், மகள் என்றே அழைக்கிறார். அவர்களும் அவரை அப்பா என்றே அழைக்கிறார்கள். மறு பக்கத்தில், அவர் தனது சகோதரியின் குழந்தைகளை மருமகன், மருமகள் என்று அழைக்கிறார்; அவர்கள் அவரை மாமா என்று அழைக் கிறார்கள். இதற்கு எதிரிடையாக, ஓர் இராகோஸ் பெண் தனது சகோதரிகளின் குழந்தைகளைத் தனது சொந்தக் குழந்தைகளுடன் சேர்த்துத் தன் மகன், மகள் என்றே அழைக்கிறாள்; அவர்களும் அவளை அம்மா என்றே அழைக் கிறார்கள். 

மறு பக்கத்தில், அவள் தன்னுடைய சகோதரர் களின் குழந்தைகளை மருமகன், மருமகள் என்று அழைக் கிறாள்; அவர்கள் அவளை அத்தை என்று அழைக்கிறார்கள். இதைப் போலவே சகோதரர்களின் குழந்தைகள் ஒருவரை யொருவர் அண்ணன், தம்பி, அக்கா, தங்கை என்று அழைத்துக் கொள்கிறார்கள்; சகோதரிகளின் குழந்தைகள் இதைப் போலவே நடந்துக் கொள்கிறார்கள். இதற்கு எதிரி டையாக, ஒரு பெண்ணின் குழந்தைகளும் அவளுடைய சகோதரனுடைய குழந்தைகளும் ஒருவரையொருவர் தமது பெற்றோரின் உடன்பிறந்தாரின் சேய் என்று அழைக்கிறார்கள். இவை அர்த்தமில்லாத வெறும் சொற்களல்ல; ஆனால் இரத்த உறவுமுறையின் நெருங்கிய தன்மை மற்றும் விலகிய தன்மை, சமத்துவம் மற்றும் சமத்துவமின்மையைப் பற்றி நடைமுறையில் அமுலில் இருக்கின்ற கருத்துகளைக் குறிக் கின்ற சொற்களாகும். இக்கருத்துகள் முழுமையாக உருவாக்கப்பட்ட இரத்த உறவுமுறைக்கு அடிப்படையாகப் பயன்படுகின்றன. 

ஒரு தனிநபரது நூற்றுக்கணக்கிலே வேறுபட்ட உறவுகளை இது குறிப்பிட்டுச் சொல்ல முடியும். மேலும், இம்முறை எல்லா அமெரிக்க செவ்விந்தியர்களிடையிலும் முழு சக்தியுடன் அமுலில் இருப்பது மட்டுமன்றி (இதற்கு விதிவிலக்கு ஏதேனும் இன்றுவரை கண்டுபிடிக்கப் படவில்லை) இந்தியாவின் ஆதிக்குடியினர் மத்தியிலும், தக்கணப் பிரதேசத்திலுள்ள திராவிட இனக்குழுக்கள், இந்துஸ்தானத்திலுள்ள கௌரா இனக்குழுக்கள் ஆகியோர் மத்தியிலும் அநேகமாக மாற்றமின்றி நிலவி வருகிறது. தென்னிந்தியாவிலுள்ள தமிழர்கள் மத்தியிலும் நியூயார்க் மாநிலத்திலுள்ள செனீகா இராகோஸ்கள் மத்தியிலும் இரத்த உறவு முறையைக் குறிக்கும் சொற்கள் இருநூற்றுக்கு மேற்பட்ட உறவுகள் விஷயத்தில் இன்றும் கூட ஒன்றாகவே இருக்கின்றன." (பக்கம் 45-47)

7) இன்று கடைபிடிக்கிற ஒரு நபருக்கு ஒரு நபர் என்கிற திருமண முறை, இறுதி நிலையினை அடைவதற்கு பல கட்டங்களாக, திருமண வடிவங்கள் கடந்திருக்கிறது. தொடக்கத்தில் ஆண்கள் பலதார மண முறையிலும் பெண்கள் பல கணவர் மண முறையிலும் வாழ்ந்ததை எங்கெல்ஸ் சுட்டிக்காட்டுகிறார்.

"ஹவாய்த் தீவுகளிலுள்ள குடும்பத்துடன் பொருந்துகின்ற அமெரிக்க இரத்த உறவுமுறைப்படி சகோதரனும் சகோதரியும் ஒரே குழந்தைக்குத் தந்தையாகவும் தாயாகவும் இருக்க முடியாது. அதற்கு மாறாக, ஹவாய்த் தீவுகளின் இரத்த உறவுமுறைப்படி பார்த்தால் இதுவே விதியாக இருந்த ஒரு குடும்பம் இருந்திருக்க வேண் டும். இது வரை பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்டிருந்த குடும்ப வடிவங்களுக்கு நேர் முரணாக இருக்கின்ற குடும்ப வடிவங்களின் வரிசை நம் முன்னே எதிர்ப்படுகின்றது. மரபு வழிப்பட்ட கருத்தோட்டத்துக்கு ஒருதார மண முறையும் அத்துடன் தனிப்பட்ட ஆண்கள் தரப்பில் பலதார மண முறையும் ஒருவேளை தனிப்பட்ட பெண்களின் தரப்பில் பல கணவர் மண முறையும் மட்டுமே தெரியும். அதிகாரச் சார்புள்ள சமூகம் விதிக்கின்ற வரம்புகள் நடைமுறையில் சந்தடியில்லாமல், வெட்கமில்லாமல் மீறப்படுகின்றன என்ற உண்மையை அது பேசாமல் மறைக்கிறது. ஒழுக்கம் பேசுகின்ற ஃபிலிஸ்தைன்களின் வழக்கமே இதுதான். 

இதற்கு மாறாக, பூர்விக சமூகத்தின் வரலாறு பற்றிய ஆராய்ச்சி நமக்குக் காட்டுவதென்ன? ஆண்கள் பலதார மண முறையிலும் அதே சமயத்தில் பெண்கள் பல கணவர் மண முறையிலும் வாழ்கின்ற நிலைமைகளை இது வெளிப் படுத்துகிறது. ஆகவே அவர்களது குழந்தைகள் அவர்கள் எல்லோருக்கும் பொதுவானவர்கள் என்று கருதப்படுகிறது. இந்த நிலைமைகளும் தம் முறைக்கு ஒரு முழு வரிசையான மாற்றங்களுக்கு ஆளாகி, இறுதியில் ஒருதார மண முறையிலே வந்து முடிகின்றன. இந்த மாற்றங்களின் தன்மை எப்படிப்பட்டதென்றால், பொது மணம் என்ற பிணைப்பில் உள்ள மக்கள் வட்டம்-ஆதியில் இது மிகவும் விரிவாக இருந்தது-மேன்மேலும் குறுகிக் கொண்டே வந்து கடைசியில் ஒரு ஜோடி தம்பதிகள் மட்டுமே மிஞ்சுகிறார்கள். இந்த நிலைதான் இன்று மேலோங்கியிருக்கிறது.

இவ்வாறு பின்னோக்கிச் சென்று குடும்பத்தின் வரலாற்றை நிர்மாணித்த மார்கன், தன்னுடைய சகாக்களில் பெரும்பான்மையோருடைய கருத்துக்கிணங்க, ஓர் ஆதிக்கட்டத்துக்கு வந்து சேர்ந்தார். அக்கட்டத்தில் ஒரு இனக்குழுவிற்குள் வரைமுறையற்ற புணர்ச்சி நிலவியது. ஆகவே, ஒவ்வொரு பெண்ணும் சம அளவில் ஒவ்வொரு ஆணுக்கும் சொந்தமாக இருந்தாள். அதே போல் ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு பெண்ணுக்கும் உரியவராக இருந்தான். ஆதியில் இப்படிப்பட்ட நிலைமை இருந்ததைப் பற்றி சென்ற நூற்றாண்டிலிருந்தே பேச்சு இருந்திருக்கிறது. ஆனால் அது மிகவும் பொதுப்படையான பேச்சாகவே இருந்து வந்திருக்கிறது." (பக்கம் 50-51)

8) விலங்குகளில் காணப்படுகிற வரைமுறையற்ற புணர்ச்சி என்பது தொடக்க கால மனிதயினத்திடமும் இருந்தது, பிறகு, பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையே நடைபெறும் மண முறைக்கு விலக்குவந்தது. இந்நிலையில் சகோதர சகோதரிகளுக்கு இடையில் திருமணம் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தது, இது பின்னால்தான் விலக்கும்  நிலை ஏற்பட்டது.

"ஆதிகால நிலைமைகளை விபசாரம் என்ற கண்ணாடியை அணிந்து கொண்டு பார்க்கும் வரை அவற்றைப் புரிந்து கொள்ள முடியாது என்று தோன்றுகிறது. குழு முறையை விவாதிக்கின்ற பொழுது இந்த விஷயத்துக்கு மீண்டும் வருவோம். இந்த வரைமுறையற்ற புணர்ச்சி என்ற ஆதிநிலை யிலிருந்து அநேகமாக மிகவும் முந்திய ஒரு கட்டத்திலேயே பின்சொல்லப்படுபவை வளர்ந்தன என்று மார்கன் கருதுகிறார்:

1. இரத்த உறவுக் குடும்பம். இது குடும்பத்தின் முதல் கட்டமாகும். இங்கே திருமணம் புரிகின்ற குழுக்கள் தலை முறை வரிசையிலே வைக்கப்பட்டுள்ளன. குடும்பம் என்ற வரம்புக்குள் அடங்கிய எல்லா தாத்தாக்களும் பாட்டிகளும் பரஸ்பரம் கணவன், மனைவியர் ஆவார்கள். அவர்களின் குழந்தைகளும் தந்தையர்களும் தாயார்களும் அதே போல் பரஸ்பரம் கணவன், மனைவியர் ஆவார்கள். இவர் களுடைய குழந்தைகள் ஒருவருக்கொருவர் கணவன், மனை வியராகவுள்ள மூன்றாம் வட்டமாக அமைவார்கள். அவர் களுக்குப் பிறந்த குழந்தைகள்—அதாவது முதலில் சொல் லப்பட்டவர்களின் கொள்ளுப்பேரர்கள், கொள்ளுப்பேத்திகள் - தம் முறைக்கு ஒரு நான்காம் வட்டமாக அமைவார் கள். ஆக, இந்தக் குடும்ப வடிவத்தில், முன்னோர்களும் வழிவந்தோரும், பெற்றோர்களும் குழந்தைகளும் மட்டுமே (இன்றைய முறையில் எடுத்துக் கூறுவதென்றால்) ஒருவருக் கொருவர் திருமண உரிமைகள், கடமைகளிலிருந்து விலக்கப் பட்டுள்ளனர். 

சகோதரர்களும் சகோதரிகளும், ஒன்றுவிட்டா இரண்டுவிட்ட, மூன்றுவிட்ட, மற்ற சகோதரர்கள், சகோதரி கள் எல்லோரும் பரஸ்பரம் சகோதரர், சகோதரிகள் ஆவார் கள். அந்த ஒரே காரணத்தினால்தான் அவர்கள் பரஸ்பரம் கணவன், மனைவியரும் ஆவார்கள். இந்தக் கட்டத்தில் சகோதரன், சகோதரி என்ற உறவில் உடலுறவு கொள்வதும் சகஜமாக அடங்கியிருந்தது. இப்படிப்பட்ட குடும்பத்தை அதன் பிரதிநிதித்துவ வடிவத்தில் எடுத்துக் கொண்டு பார்த்தால், அதில் ஒரு ஜோடியின் சந்ததியினர் அடங்கியிருப்பார்கள். அந்தச் சந்ததியினரிடையிலும் ஒவ்வொரு தலைமுறையைச் சேர்ந்த சந்ததியினரும் சகோதரர், சகோதரிகளாகவே இருக்கிறார்கள்; அந்தக் காரணத்திற்காகவே அவர்கள் எல்லோரும் பரஸ்பரம் கணவன், மனைவியராக வும் இருக்கிறார்கள்.

இரத்த உறவுக் குடும்பம் என்பது அழிந்து விட்டது. வர லாற்றுக்குத் தெரிந்த மிகவும் வளர்ச்சியற்ற மக்களினங்கள் கூட இந்தக் குடும்ப வடிவத்துக்கு நிரூபிக்கக் கூடிய உதார ணங்களைத் தரவில்லை. எனினும் அது இருந்திருக்கத்தான் வேண்டும் என்ற முடிவுக்கு வரும்படி ஹவாய்த் தீவுகள் வகைப்பட்ட இரத்த உறவுமுறை நம்மை நிர்ப்பந்திக்கிறது." (பக்கம் 59-62)

பெற்றோர்களும் குழந்தைகளும் பரஸ்பரம் உடலுறவு கொள்வதை விலக்கியது குடும்ப அமைப்பில் முதல் முன்னேற்றமாகும், சகோதரர், சகோதரிகள் பரஸ்பரம் உடலுறவு கொள்வதை விலக்கியது இரண்டாவது முன்னேற்றமாகும். முதலில் சொந்த சகோதரர் சகோதரிகளிடையே விலக்கப்பட்ட மணம், பின்பு ஒன்றுவிட்ட, இரண்டுவிட்ட சகோதர் சகோதரிகளுக்கு இடையே திருமணம் தடை செய்யப்பட்டிருக்க வேண்டும். 

ஒரு தாய் வயிற்றில் பிறந்த குழந்தைகளுக்கு இடைய உடலுறவு கொள்வது முறையல்ல என்ற கருத்து தோன்றிய உடன், புதிய குடும்ப உறவுகள் தோன்றுவதற்கு தூண்டிது. சகோதரிகளைக் கொண்ட ஒரு குழு குடும்பச் சமூகத்தின் மூலக்கருவாக அமைந்தன. அவர்களின் கூடப்பிறந்த சகோதரர்கள் இன்னொரு குடும்பச் சமூகத்துக்கு மூலக்கருவாக அமைந்தனர். பூனலுவா குடும்பம் என்று அழைக்கப்படுகிற குடும்ப வடிவம் இந்த முறையில் மாற்றம் பெற்றது. இந்தக் கணவன்மார்கள் இனியும் சகோதரர்களாக இல்லாது “புனலுவா” என்ற உறவைப் பெறுகின்றனர். புனுலுவா என்றால் பங்காளியாகும்.

"மார்கன் தனது நூலை எழுதிய காலத்தில் குழு மண முறையைப் பற்றி நமக்கு மிகவும் குறைவாகவே தெரிந் திருந்தது. வகுப்புகளாகத் திரண்டிருந்த ஆஸ்திரேலியர் களிடையே நிலவிய குழு மணங்களைப் பற்றிச் சிறிதளவு தெரிந்திருந்தது. மேலும், மார்கன் 1871ஆம் ஆண்டிலேயே ஹவாய்த் தீவுகளில் நிலவிய பூனலுவா குடும்பத்தைப் பற்றித் தனக்குக் கிடைத்த தகவலை வெளியிட்டிருந்தார். ஒரு பக்கத்தில், அமெரிக்க செவ்விந்தியர்களிடையே இருந்த உறவுமுறைக்குப் பூனலுவா குடும்பம் முழு விளக்கம் அளித் தது; மார்கனுடைய ஆராய்ச்சிகள் அனைத்துக்கும் இதுவே தொடக்க நிலையாக இருந்தது; மறு பக்கத்தில், தாயுரிமைக் குலம் அதிலிருந்து பெறப்படுவதற்குக் கிளை பிரியுமிடமாக வும் இருந்தது. கடைசியாக, ஆஸ்திரேலிய வகுப்புகளை விட எவ்வளவோ மேலான வளர்ச்சித் தரத்தை அது பிரதி நிதித்துவப்படுத்தியது. எனவே பூனலுவா குடும்பம் என்பது ஒரு வளர்ச்சிக் கட்டம், அந்தக் கட்டம் நிச்சயமாக இணைக் குடும்பத்துக்கு முந்தியதாக இருக்க வேண்டும் என்று மார்கன் நினைத்ததும் அது ஆதிகாலத்தில் பொதுவாகவே நிலவியது என்று முடிவு செய்ததும் நாம் புரிந்து கொள்ளக் கூடியதே." (பக்கம் 70-71)

9) குடும்பத்தின் படிநிலை வளர்ச்சியில்  ஒரு சோடி என்கிற திருமண முறை வளர்ச்சி பெறுவதை சுட்டிக்காட்டப்படுகிறது.

"இரத்த உறவினர்களிடையில் மண விலக்கு இடைவிடாது விரிவடைவதில் இயற்கைத் தேர்வும் தொடர்ந்து செயல் படுகிறது. மார்கன் கூறியபடி, "இரத்த உறவில்லாத குலங்களிடையே நடக்கும் திரு மணங்கள் உடலிலும் உள்ளத்திலும் மேலும் வலிமை மிக்க மக்களைப் படைப்பதற்கு உதவின. வளர்ச்சியடைந்து கொண்டிருக்கின்ற இரு இனக்குழுக்கள் ஒரு மக்களினமாகக் கலக்கின்ற பொழுது புதிய மண்டையும் மூளையும் அவ் விரண்டு இனக்குழுக்களின் திறமைகளின் மொத்தத்துக்கு ஏற்ப விரிவடையவும் நீளவும் செய்யும்."

ஆகவே, குலங்கள் ரீதியிலமைந்த இனக்குழுக்கள் தம் மைக் காட்டிலும் பிற்போக்கான இனக்குழுக்களை வென்று விடும் அல்லது தம்முடைய உதாரணத்தின் சக்தியினால் தம்முடன் இழுத்துச் செல்லும்.

ஆகவே, வரலாற்றுக்கு முந்திய காலத்தில் குடும்பம் அடைந்திருந்த வளர்ச்சி இரு பாலினருக்கு இடையில் பொது மணம் நிலவிய வட்டம் இடை விடாது குறுகிக் கொண்டு வந்ததில் அடங்கியிருக்கிறது. ஆரம்பத்தில் இனக்குழு முழு வதுமே இவ்வட்டத்திற்குள் இருந்தது. முதலில் நெருங்கிய உறவினர்களையும் பிறகு மேன்மேலும் தூர உறவினர்களையும் ஒருவர் பின் ஒருவராக விலக்கி வைத்தும், கடைசியில் திருமணம் ஒன்றினாலேயே உறவினர்களானவர்களையும் விலக்கி வைத்தும் குழு மணத்தின் ஒவ்வொரு வடிவமும் நடை முறையில் இயலாதபடி செய்யப்பட்டது. முடிவில் ஒரே ஒரு தாம்பத்திய ஜோடிதான் எஞ்சியது; அது தற்பொழுது இன்னும் தளர்ந்த முறையில்தான் இணைக்கப்பட்டுள்ளது; அதுதான் மூலக்கூறு; அதுவும் கலைந்து விட்டால் திருமணமே ல்லாது போய் விடும்." (பக்கம் 77-78)

10) முதலாளித்துவ வீழ்ச்சிக்குப் பிறகு தோன்றிய சமூகம், வளர்ச்சி அடைந்து முழுமையான கம்யூனிச சமூகமாக நிலைபெற்ற பிறகு, அந்தப் புதிய தலைமுறையினர் தேவையான திருமண முறையினை தேர்தெடுத்துக் கொள்வார்கள் என்று எங்கெல்ஸ், மார்கன் கருத்தை முன்வைத்துக் கூறுகிறார்.

"முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு வந்து கொண்டிருக் கின்ற அழிவுக்குப் பிறகு பால் உறவுகளை ஒழுங்குபடுத்து வதைப் பற்றி நாம் ஊகமாகச் சொல்லக் கூடியது பெரும் பாலும் எதிர்மறையாகவே இருக்கிறது. இதைத் தவிர கூடு தலாக என்ன இருக்கும்? ஒரு புதிய தலைமுறை வளர்ச்சி யடைந்த பிறகு அது முடிவு கட்டப்படும். அந்தத் தலைமுறை யைச் சேர்ந்த ஆண்களுக்கு பணத்தைக் கொண்டு அல்லது சமூக ரீதியான இதர அதிகார சாதனங்களைக் கொண்டு ஒரு பெண்ணை இணங்கச் செய்யும்படி தம் வாழ்க்கையில் என்றைக்குமே நேராது. பெண்கள் உண்மைக் காதலுக்காக மட்டுமன்றி வேறெந்த நோக்கத்துக்காகவும் எந்த ஆணுக் கும் என்றைக்குமே இணங்க மாட்டார்கள். அல்லது பொரு ளாதார விளைவுகளைப் பற்றி அஞ்சி தம்முடைய காதல் னுக்குத் தம்மைக் கொடுப்பதற்குத் தயங்க வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்படாது. அப்படிப்பட்ட மக்கள் தோன்றிய வுடனே, அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று நாம் இன்று நினைக்கிறோமோ, அதைச் சிறிதும் பொருட்படுத்த மாட்டார்கள். அவர்கள் ஒவ்வொரு நபருடைய முறையை ஒட்டி தமது சொந்த நடைமுறையையும் அதற்குப் பொருத்தமான தமது சொந்தப் பொதுமக்கள் அபிப்பிராயத்தையும் நிலைநாட்டுவார்கள். விஷயம் அத் துடன் முடிந்து விடும்.

நாம் மார்கனை விட்டு வெகு தூரம் வந்து விட்டபடி யால் அவரிடம் திரும்பிச் செல்வோம். நாகரிக நிலைக் காலத் தில் வளர்ச்சியடைந்த சமுதாய அமைப்புகளைப் பற்றிய வரலாற்று ரீதியான ஆராய்ச்சி அவருடைய நூலின் விஷ யத்துக்கு அப்பாற்பட்டதாகும். எனவே அவர் இக்காலப் பகுதியில் ஒருதார மணத்தின் கதியைப் பற்றி சுருக்கமாகத் தான் ஆராய்கிறார். அவர் ஒருதார மணக் குடும்பத்தின் வளர்ச்சியை ஒரு முன்னேற்றமாக, முழுமையான ஆண், பெண் சமத்துவத்துடன் கிட்டத்தட்ட ஒட்டியிருப்பதாகக் கருதுகிறார். எனினும் இந்தக் குறிக்கோளை எட்டி விட்ட தாக அவர் கருதவில்லை. அவர் பின்வருமாறு எழுதுகிறார்:

"குடும்பம் என்பது தொடர்ச்சியாக நான்கு வடிவங் களைக் கடந்து வந்திருக்கிறது, இப்பொழுது அது ஐந்தா வது வடிவத்தில் இருக்கிறது என்ற உண்மையை ஒத்துக் கொண்டால் இந்த வடிவம் நிரந்தரமாக இருக்குமா என்ற கேள்வி உடனே எழுகிறது. அதற்குத் தரக் கூடிய பதில் இதுதான்: சென்ற காலத்தில் நடந்ததைப் போல சமு தாயம் முன்னேற அதுவும் முன்னேறும்; சமுதாயம் மாற அதுவும் மாறும். அது சமுதாய அமைப்பின் படைப்பு; அதன் பண்பாட்டை அது பிரதிபலிக்கும். நாகரிகம் தொடங்கிய காலத்திலிருந்து ஒருதார மணக் குடும்பம் மிகவும் முன்னேற்ற மடைந்திருக்கிறது, நவீன காலத்தில் கணிசமாக மேம்பட் டிருக்கிறது. எனவே ஆண், பெண் சமத்துவம் முழுமையாக சாதிக்கப்படுகின்ற வரை அது மேலும் மேம்பட முடியும் என்று குறைந்தபட்சமாகக் கருதிக் கொள்ளலாம். நெடுந்தூர எதிர்காலத்தில் ஒருதார மணக் குடும்பத்தினால் சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலாமற் போனால் அதற்குப் பின்னால் வரப் போகின்றவற்றின் இயல்பை ஆரூடம் கூற முடியாது." " (பக்கம் 137-138)

11) குலம் உருவாகும் போது அது விலங்குகளின் பெயர்களைக் கொண்டு அமைந்த்த பற்றி எங்கெல்ஸ் எழுதுகிறார்

"இப்பொழுது மார்கனுடைய மற்றொரு கண்டுபிடிப்புக்கு வருகிறோம்.குறைந்தபட்சமாகச் சொல்வதென்றால்,இரத்த உறவுமுறைகளிலிருந்து குடும்பத்தின் புராதன வடிவத்தைப் புனரமைத்ததைப் போன்ற முக்கியத்துவத்தைப் பெற்றது இது. அமெரிக்க செவ்விந்திய இனக்குழுவுக்குள் உள்ள குலக் குழுக்கள் — இவை மிருகங்களின் பெயர்களைக் கொண்டிருந்தன-கிரேக்கர்களின் geneaஉடனும் ரோமானியர்களின் gentesஉடனும் ஒன்றானவை. இவற்றில் அமெரிக்க வடிவமே குலத்துக்குரிய ஆதி வடிவம்; கிரேக்க, ரோமானிய வடிவங் கள் பிற்காலத்தில் அதிலிருந்து தோன்றியவையே; குலம், பிராட்ரி, இனக்குழு ஆகியவையாக இருந்த புராதன கால கிரேக்க, ரோமானிய சமுதாய அமைப்பு முழுவதும் அமெ ரிக்க செவ்விந்திய சமுதாய அமைப்பை மிகவும் ஒத்திருக் கிறது. நமக்குத் தெரிந்திருக்கின்ற செய்திகள் காட்டுகின்ற அளவுக்கு குலம் என்பது அநாகரிகர்கள் நாகரிக நிலையில் நுழைகின்ற வரைக்கும் அதற்குப் பிறகும் பெற்றிருந்த அமைப்பு. இதை நிரூபித்தது புராதன கிரேக்க, ரோமானிய வரலாற்றின் மிகவும் புரிந்து கொள்ள இயலாத பகுதிகளை ஒரே அடியில் தெளிவாக்கியது; அதே சமயத்தில், அரசு அமைக்கப்படுவதற்கு முன்பாகப் பண்டைக்காலத்தின் சமு தாய அமைப்பின் அடிப்படையான அம்சங்கள் மீது எதிர் பாராத ஒளியைப் பாய்ச்சியது. இதைப் புரிந்து கொண்ட பிறகு அது மிகச் சுலபம் என்று தோன்றக் கூடும்; எனினும் மார்கன் அதை மிகச் சமீப காலத்தில்தான் கண்டுபிடித்தார்." (பக்கம் 138-139)

12) குலங்கள் விலங்குகளின் பெயரிட்டு அழைப்பது பற்றிய எடுத்துக்காட்டு.

"மார்கன் இராகோஸ்களின் குலத்தை, குறிப்பாக செனீகா இனக்குழுவின் குலத்தை ஆதி குலத்தின் மூலச்சிறப்பான வடிவமாக எடுத்துக் கொள்கிறார். அவர்களிடையில் எட்டு குலங்கள் உள்ளன. அவை பின்வரும் மிருகங்களின் பெயர் களைத் தாங்கியுள்ளன: 1) ஓநாய், 2) கரடி, 3) ஆமை, 4) பீவர், 5) மான், 6) உள்ளான் குருவி, 7) நாரை, 8) பருந்து." (பக்கம் 140-141)

13) வட அமெரிக்க செவ்விந்தியர்கள் தாய் உரிமை குலங்களாக இருந்தை குறிப்பிடப்படுகிறது.

"குறியடையாளமான ஒரு செவ்விந்தியக் குலத்தின் செயல்கள் இவையே.

"இராகோஸ் குலத்தின் எல்லா உறுப்பினர்களும் தனிப் பட்ட முறையில் சுதந்திரமாக இருந்தார்கள். ஒருவன் அடுத் தவனுடைய சுதந்திரத்தைக் காக்கக் கடமைப்பட்டிருந்தான். அவர்கள் விசேஷ உரிமைகளிலும் தனிப்பட்ட உரிமை களிலும் சமமாகவே இருந்தார்கள். சாகெம்களும் யுத்தத் தலைவர்களும் உயர்நிலை உரிமை கோரவில்லை; அவர்கள் இரத்த உறவினால் இணைக்கப்பட்டிருந்த ஒரு சகோதரக் குழுவாக அமைகிறார்கள். சுதந்திரம், சமத்துவம், சகோ தரத்துவம் - இவை ஒருபோதும் வரையறுக்கப்படவில்லை என்றாலும் - குலத்தின் முக்கியமான கோட்பாடுகளாக இருந் தன. குலம் என்பது சமூக அமைப்பின் அலகு; செவ்விந்திய சமூக அமைப்புக்கு அதுவே அடிப்படை. செவ்விந்தியர் களின் குணாம்சத்தில் எங்கும் நிலவுகின்ற இயல்பாகிய சுதந் திர உணர்வையும் தன் மதிப்பையும் விளக்குவதற்கு இது உதவுகிறது."

வட அமெரிக்க செவ்விந்தியர்கள் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் அவர்கள் எல்லோரும் தாயுரிமைப்படி குலங் களில் திரட்டப்பட்டிருந்தார்கள். டகோடாக்களைப் போன்ற ஒரு சில இனக்குழுக்களில் மட்டுமே குலங்கள் நசித்துக் கொண்டிருந்தன; ஒஜிப்வாக்கள், ஒமாஹாக்கள் போன்ற வேறு சில இனக்குழுக்களில் தந்தையுரிமைப்படி குலங்கள் திரட்டப்பட்டிருந்தன.

ஐந்து, ஆறு அல்லது அதற்கும் அதிகமான குலங்களைக் கொண்ட செவ்விந்திய இனக்குழுக்கள் ஏராளமாக இருக் கின்றன. அவற்றில் மூன்று, நான்கு அல்லது அதற்கும் அதிக மான குலங்கள் ஒரு விசேஷமான குழுவில் ஒன்றுசேர்க்கப்பட் டிருந்தன. இந்தக் குழுவை மார்கன்- செவ்விந்தியச் சொல் லுக்குச் சமமான கிரேக்கச் சொல்லை அப்படியே மொழி பெயர்த்து - பிராட்ரி (சகோதரக் குழு) என்று குறிப்பிடுகிறார்." (பக்கம் 146)

14) குலம் என்பதைக் கொண்ட சமூகம் அதிக காலத்தில் நீடித்து இருந்ததை அறிய முடிகிறது, ஒரு நபர் திருமண முறை என்பதின் காலம் மிகமிக குறைவானது என்கிறார் மார்கன்.

"இறுதியில் குரோட் பின்வருமாறு கூறுகிறார் (அடைப்புக் குறிகளுக்குள் இருக்கும் கூற்றுகள் மார்க்ஸ் எழுதியிருப்பதாகும்):

"இந்த மரபு வரலாற்றைப் பற்றி நாம் மிகவும் அபூர்வ மாகத்தான் கேள்விப்படுகிறோம். ஏனென்றால் பிரசித்தி பெற்ற, வணங்கத்தக்க சில விஷயங்களில்தான் இது பகிரங் கமாக்கப்படுகிறது. ஆனால், அதை விட அற்பமான குலங்கள் தமது பொதுக் கிரியைகளைப் பெற்றிருந்தன'' (இது சற்று விசித்திரமானதுதான், திருவாளர் குரோட்!), "பொதுவான அமானுஷ்ய முன்னோரையும் மரபு வரலாற்றையும் பெற் றிருந்தன. அதை விடப் பிரபலமான குலங்கள் பெற்றிருந்த மாதிரியே" (அற்பமான குலங்களுக்கு எவ்வளவு விசித்திர மாயுள்ளது, திருவாளர் குரோட்!); "அமைப்புத் திட்டமும் கருத்தியலான அடிப்படையும்" (அன்புடையீர், ideal அல்ல, carnal தான், அதாவது நமது மொழியில் உடலின்பத்துக் குரியது!) "எல்லாவற்றிலும் ஒன்றாகவே இருந்தன.”

இதற்கு மார்கன் அளித்த பதிலை மார்க்ஸ் பின்வருமாறு சுருக்கித் தருகிறார்:- 

"ஆதி வடிவத்திலிருந்த குலத்துக்கு— மற்ற மனிதர்களைப் போலவே கிரேக்கர்களும் இதைப் பெற்றிருந்தனர்-பொருத்தமான இரத்த உறவுமுறை குலங் களின் எல்லா உறுப்பினர்களின் பரஸ்பர உறவைப் பற்றிய அறிவைப் பாதுகாத்து வந்தது. தங்களுக்கு மிகவும் முக்கியத் துவத்தைக் கொண்டிருந்த இந்த விஷயத்தை அவர்கள் குழந்தைப் பருவத்திலிருந்தே நடைமுறையின் மூலமாக அறிந்திருந்தார்கள். ஒருதாரக் குடும்பம் வந்ததும் இது மறக்கப்பட்டது. குலப் பெயர் ஒரு மரபு வரலாற்றை உண் டாக்கியது. அதனுடன் ஒப்பிட்டால் தனிப்பட்ட குடும்பத் தின் மரபு வரலாறு அற்பமாகத் தோன்றியது. இப்பொழுது இந்தப் பெயர் அதைத் தாங்கியிருப்பவர்களுக்குத் தமது பொது முன்னோரை நிரூபிப்பதற்கே. ஆனால் குலத்தின் மரபு வரலாறு எவ்வளவோ பின்னுக்குச் சென்றதால், அதன் உறுப்பினர்கள்--அதிகச் சமீப கால முன்னோர்கள் உள்ள சிலர் தவிர-இப்பொழுது தமது பரஸ்பர இரத்த உறவு முறையை நிரூபிக்க முடியவில்லை. ஒரு பொது முன் னோருக்குப் பெயரே ஒரு சான்றாக, முடிவான சான்றாக இருந்தது - சுவீகாரங்கள் மட்டும் இதற்கு விலக்காகும். மறு பக்கத்தில், குரோட்டும் நீபூரும் செய்வதைப் போல குல உறுப் பினர்களிடையே எல்லா இரத்த உறவுமுறையையும் உண்மை யில் மறுத்தல்—இது குலத்தை மூளையின் வெறும் கட்டுக் கதையாக, கற்பனைப் படைப்பாக மாற்றி விடுகிறது— "கருத்தியலான விஞ்ஞானிகளுக்கு, அதாவது அறைகளுக்குள் அடைபட்டிருக்கின்ற புத்தகப் புழுக்களுக்கு ஏற்புடையதா கும். குறிப்பாக ஒருதார மண முறை முளைவிடத் தொடங் கியதிலிருந்து தலைமுறைகளின் பரஸ்பரத் தொடர்பு வெகு தூரத்துக்குக் கொண்டு போகப்பட்டிருப்பதாலும் கடந்த காலத்தின் எதார்த்தம் புராணக் கற்பனையில் பிரதிபலிப் பதாகத் தோன்றுவதாலும் நமது வெகுளித்தனமான அற்ப வாதிகள் கற்பனையில் தோன்றிய மரபு வரலாறு உண்மை யான குலங்களைப் படைத்தது என்று முடிவு செய்தார்கள், முடிவு செய்தும் வருகிறார்கள்!"

அமெரிக்கர்களிடையே இருப்பதைப் போல பிராட்ரி ஒரு தாய்க் குலமே; அது சில சேய்க் குலங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது. அதே சமயத்தில், அது அவற்றை ஒற்றுமைப் படுத்தியுமுள்ளது; பெரும்பாலும் ஒரு பொது முன்னோரிட மிருந்து தோன்றியதாகவும் காட்டி வந்துள்ளது." (பக்கம் 168-169)

15) குலங்களில் குழுவை தற்காத்துக் கொள்வதற்காக மக்களே ஆயுதம் ஏந்தியிருந்தனர், அரசு தோற்றத்தைத் தொடர்ந்து, மக்களிடம் இருந்து ஆயுதம் பறிக்கப்பட்டு, மக்களுக்கு எதிராக ஆயுதம் பயன்படுத்துவது பற்றி மார்கன்  விளக்கி இருக்கிறார், கூடுதலாக இதற்கான பொருளாதாரக் காரணங்களை சுட்டுவதைப் பற்றி எங்கெல்ஸ் கூறுகிறார்.

"அரசு எப்படி வளர்ச்சியடைந்தது, குல அமைப்பின் சில உறுப்புகள் எப்படி மாற்றப்பட்டன, புதிய உறுப்புகள் தோன்றியதால் வேறு சில எப்படி அகற்றப்பட்டன, முடிவில் எல்லாமே உண்மையான அரசாட்சி உறுப்புகளால் 'எப்படி அழிக்கப்பட்டன, குலங்கள், பிராட்ரிகள், இனக்குழுக்கள் மூலம் தற்காத்துக் கொண்டிருந்த உண்மையான “ஆயுத மேந்திய மக்களுக்கு” பதிலாக அரசாட்சி உறுப்புகளின் சேவையிலிருக்கின்ற; ஆகவே மக்களுக்கு எதிராகவும் உபயோகிக்கப்படக் கூடிய ஆயுதமேந்திய 'சமூக அதிகாரம்” எப்படி ஏற்பட்டது? இவை அனைத்தையும் பண்டைக்கால ஏதன்சில் நன்கு பார்க்கக் கூடிய மாதிரி குறைந்தபட்சம் ஆரம்ப நிலையில் வேறெங்கும் பார்க்க முடியாது. இம் மாற்றத்தின் வடிவங்களை மொத்தத்தில் மார்கனே வர்ணிக் கிறார். இம்மாறுதல்களை ஏற்படுத்திய பொருளாதார உள்ளடக்கத்தை நானே பெரிதும் தர வேண்டியிருந்தது." (பக்கம் 178)

16) ஆண்வழி மரபு  முறை மாறியபிறகு, பெண் உறுப்பினர்களின் குழுந்தைகள் ஆண் வழிக்கு மாறுவது பற்றி மார்கன் கூறியதை எங்கெல்ஸ் மேற்கோளாக் கொடுக்கிறார். மேலும் பூனலுவா குடும்பத்தின் அடையாளம் தொடர்ந்து இருப்பதை எங்கெல்ஸ் குறிப்பிடுகிறார்.

"ஸ்காட்லாந்தில் குல் அமைப்பின் வீழ்ச்சி 1745ஆம் ஆண்டுக் கலகத்தை ஒடுக்கியதிலிருந்து ஆரம்பமாகிறது. இந்த அமைப்பில் ஸ்காட்லாந்துக் கிளான் துல்லியமாக எந்தக் கண்ணியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பது ஆராயப்பட வேண்டிய விஷயம். அது ஒரு கண்ணி என்பதில் சந்தேகமில்லை. வால்டர் ஸ்காட்டின் நாவல்கள் ஸ்காட் லாந்தின் குன்றுப் பிரதேசங்களைச் சேர்ந்த கிளானைப் பளிச்சென்று நம் கண்களுக்கு முன்பாகக் கொண்டு வந்து நிறுத்துகின்றன. அதைப் பற்றி மார்கன் பின்வருமாறு கூறு கிறார்: இந்த கிளான்

"அமைப்பிலும், உணர்ச்சியிலும் குலத்தின் மிகச் சிறந்த மாதிரியாகும். தன் உறுப்பினர்கள் மீது குல வாழ்க்கைக்கு இருந்த சக்திக்கும் அது ஒரு அசாதாரணமான உதாரணமா கும்.... அவர்களுடைய விரோதங்கள், இரத்தப் பழி வாங்கு தல், குல ரீதியில் அங்கங்கே வசித்தல், நிலங்களைப் பொது வில் பயன்படுத்தல், கிளான் உறுப்பினன் தலைவனிடமும் மற்ற உறுப்பினர்களிடமும் காட்டும் விசுவாசம்—இவற்றில் குல சமூகத்தின் வழக்கமான, விடாப்பிடியான குணாம்சங் களைக் காண்கிறோம்.... மரபுமுறை ஆண்வழியில் இருந் தது; ஆண்களின் குழந்தைகள் கிளானின் உறுப்பினர் களாகவே இருந்தார்கள். அதன் பெண் உறுப்பினர்களது குழந்தைகள் முறையே தங்கள் தகப்பனாருடைய களைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்"

ஸ்காட்லாந்தில் முன்பு தாயுரிமை அமுலில் இருந்தது. இதைப் பிக்களின் அரச குடும்பம் நிரூபிக்கிறது. இந்த அரச குடும்பத்தில் வாரிசுரிமை பெண்வழியில் இருந்தது என்று பீட் கூறுகிறார். மேலும், மத்திய காலம் வரை ஸ்காட் லாந்து மக்களிடையிலும் வேல்ஸ் மக்களிடையிலும் பூனலுவா குடும்பத்தின் அடையாளங்கள் இருந்தன என்பதை முதல் இரவு உரிமை எடுத்துக் காட்டுகிறது. நஷ்ட ஈடு கொடுத்து இவ்வுரிமையை மீட்காவிட்டால் முந்திய பொதுக் கணவன் மார்களின் கடைசிப் பிரதிநிதியான கிளான் தலைவன் அல்லது அரசன் ஒவ்வொரு மணமகளிடமும் இவ் வுரிமையைக் கோர முடியும்."  (பக்கம் 220-221)

17) வர்க்க சமூகத்தில் காணப்படுகிற இரட்டை வேடம், வளர்ச்சி அடைந்த கம்யூனிச சமூகத்தில் மறைந்து போகும். குலங்களில் காணப்பட்ட, அதாவது ஆதி பொதுவுடை சமூகத்தில் காணப்பட்ட சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஓர் உயர்வான வடிவமாக, எதிர்கால சமூகத்தில் காணப்படும் என்று மார்கன் கூறியதை, எங்கெல்ஸ் தமது நூலின் இறுதியாக வைத்துள்ளார்.

"ஆதிக்கம் செலுத்தும் வர்க்கத்துக்கு நன்மையாக இருப்பது அந்த வர்க்கம் எந்த சமூகத்துடன் தன்னை ஒன்றாகக் காட்டிக் கொள்கிறதோ, அந்த சமூகத்துக்கும் நன்மையாக இருக்க வேண் டும். ஆகவே நாகரிகம் மேன்மேலும் வளர்ச்சியடைகின்ற பொழுது, தானே அவசியமாகப் படைத்த கேடுகளை அன்பு என்னும் போர்வையினால் மூடி மறைக்கவும் அவற்றை அலங்கரித்துக் காட்டவும் அல்லது அவை இல்லை என்று மறுக்கவும் - சுருங்கக் கூறினால் சம்பிரதாயமான இரட்டை வேடத்தைக் கடைப்பிடிக்குமாறு மேன்மேலும் நிர்ப்பந்திக்கப்படுகிறது. முந்திய சமூக வடிவங்களிலும் நாகரிகத்தின் ஆதிக் காலகட்டங்களிலும் இந்த இரட்டை வேடத்தைப் பற்றி யாருக்கும் தெரியாது. சுரண்டுகின்ற வர்க்கம் முற்றிலும் சுரண்டப்படுகின்ற வர்க்கத்தின் நலனுக்காகவே அதைச் சுரண்டுகிறது; சுரண்டப்படுகின்ற வர்க்கம் இதை உணர்ந்து பாராட்டத் தவறினால், இன்னும் கலவரம் செய்ய முனைந்தால் அதன் மூலம் சுரண்டுகின்றவர்களாகிய உபகாரிகளிடம் அது மிகக் கேவலமான, நன்றி கெட்ட தன்மையைக் காட்டுகிறது என்ற பிரகடனத்தில் முடிகிறது இந்தச் சம்பிரதாயமான இரட்டை வேடம்.

நாகரிகத்தைப் பற்றி மார்கன் அளித்திருக்கும் தீர்ப்பை இப்பொழுது முடிவுரையாகத் தருகிறேன்:-

"நாகரிகம் ஏற்பட்டதிலிருந்து செல்வத்தின் வளர்ச்சி மிகவும் பிரம்மாண்டமாக இருப்பதாலும், அதன் வடிவங் கள் மிகவும் வேறுபட்டிருப்பதாலும், அதன் உபயோகம் மிகவும் விரிவானதாக இருப்பதாலும், அதை சொந்தமாக வைத்திருப்பவர்களுடைய நலனுக்காக நடைபெறுகின்ற அதன் நிர்வாகம் மிகவும் அறிவுள்ளதாக இருப்பதாலும் அந்தச் செல்வம், மக்களைப் பொறுத்தமட்டில் சமாளிக்க முடியாத ஒரு சக்தியாகி இருக்கிறது. மனித அறிவு தன்னுடைய சொந்தப் படைப்புக்கு முன்னால் தானே குழப்பமடைந்து நிற்கிறது. எனினும் ஒரு காலம் வரத்தான் போகிறது: அப் பொழுது மனித அறிவு உடைமையின் மீது ஆட்சி செலுத்துகின்ற நிலையை அடையும்; அரசு எந்த உடைமையைப் பாதுகாக்கிறதோ, அந்த உடைமையின் பால் அரசின் உறவுகளை மனித அறிவு வரையறை செய்து விடும்; அந்த உடைமை யின் சொந்தக்காரர்களுடைய உரிமைகளின் வரம்புகளையும் அது வரையறை செய்து விடும். தனிநபர்களுடைய நலன் களைக் காட்டிலும் சமூகத்தின் நலன்களே தலைமையானவை; அவை இரண்டும் நியாயமான,இணக்கமான உறவுக் குள் கொண்டு வரப்பட வேண்டும். 

முன்னேற்றம் கடந்த காலத்தின் விதியாக இருந்ததைப் போல எதிர்காலத்தின் விதியாகவும் இருக்க வேண்டுமென்றால் வெறும் செல் வத்தைத் தேடும் வாழ்க்கை மனிதகுலத்தின் முடிவான தலை விதி அல்ல. நாகரிகத்தின் தொடக்கத்துக்குப் பிறகு கழிந் திருக்கிற காலம் மனிதன் இதுவரை வாழ்ந்திருக்கிற காலத் தில் ஒரு சிறு துளியே ஆகும், இனி வரப்போகின்ற யுகங் களில் ஒரு சிறு துளியே ஆகும். சமூகம் தகர்ந்து மறை தல் செல்வத்தை முடிவான நோக்கமாகக் கொண்டிருக்கும் வாழ்க்கையின் முடிவு நிலையாகி விடுமென்று தோன்றுகிறது; ஏனென்றால் அப்படிப்பட்ட வாழ்க்கை தனக்குள் சுய அழிவுக்குரிய அம்சங்களைக் கொண்டிருக்கிறது. நிர்வாகத் தில் ஜனநாயகம், சமூகத்தில் சகோதரத்துவம், உரிமைகளில் சமத்துவம், எல்லோருக்கும் கல்வி ஆகியவை வரப்போகின்ற, முன்னிலும் உயர்வான சமூகக் கட்டத்தை முன் னறிவிக்கின்றன. அனுபவமும் அறிவுத்திறனும் ஞானமும் அந்த சமூகக் கட்டத்தை நோக்கியே உறுதியாக முன்னேறிக் கொண்டிருக்கின்றன. பண்டைக்காலக் குலங்களில் நிலவிய சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவை, அதை விட ஓர் உயர்வான வடிவத்தில் மறு பிறப்புக் கொள்வதாகும். (மார்கன், பண்டைக்காலச் சமூகம், பக்கம் 552).

மார்கன், எங்கெல்ஸ் ஆகியோரின் நூல்கள், பழைய பழங்குடி மக்களை மட்டும் பேசவில்லை, இன்றைய நிலையினையும் எதிர்காலமான வளர்ச்சி அடைந்த கம்யூனிச சமூகத்தைப் பற்றியும் பேசியுள்ளனர்.

எங்கெல்ஸ் எழுதி “குடும்பம் அரசு ஆகியவற்றின் தோற்றம்” நூலையும், மார்கன் எழுதிய "பண்டைய சமுதாயம்" என்கிற நூலையும் இன்றைக்கும் நாம் படித்து அறிய வேண்டும். இந்த இரண்டு நூல்களும் பழைய சமூகத்தை மட்டும் பேசவில்லை, பழைய சமூகத்தின் வழியில் புதிய சமூகம் தோன்றுவதைப் பற்றியும் அதன் இருப்பு பற்றியும் பேசியுள்ளனர். இரண்டு நூலையும் படிப்போம் பயன்பெறுவோம்.



தொகுப்பு-அ.கா.ஈஸ்வரன்

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு