தமிழகத்தில் மருத்துவர்கள் கூட ‘கிக் பணியாளர்களாக’ மாறும் அவலநிலை
வெண்பா (தமிழில்)
மருத்துவத் துறை பணம் ஈட்டித் தரும் துறையல்ல; தமிழகத்தில் மருத்துவர்கள் ‘கிக் பணியாளர்களாக’ மாறுகின்றனர்
ஒரு காலத்தில் உன்னதமான தொழிலாகப் போற்றப்பட்ட மருத்துவம், இன்று தமிழ்நாட்டில் விரக்தி, ஏமாற்றம் மற்றும் பிழைக்கமுடியா நிலையாக மாறியுள்ளது. வலுவான பொது சுகாதார அமைப்பாலும், உயர் மருத்துவ அறிவாலும் நீண்ட காலமாகப் புகழப்பட்ட இந்த மாநிலத்தில், இளம் மருத்துவர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு மாறாக தற்காலிகப் பணி தளங்களுக்கு (gig platforms) மாறுவது அதிர்ச்சியளிக்கிறது.
பெருநிறுவனமயமாக்கல் (corporatisation), தேக்கமடைந்த ஊதியங்கள், குறைந்து வரும் வேலை வாய்ப்புகள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட மருத்துவர்கள், தங்கள் ஸ்டெதஸ்கோப்களை கழற்றிவிட்டு விநியோகப் பைகளை (delivery bags) சுமந்து கொண்டுள்ளனர்.
“ஐந்தரை ஆண்டுகள் MBBS படிப்பு மற்றும் பயிற்சிக்குப் பிறகும், பல பட்டதாரிகள் மாதம் வெறும் ரூ. 15,000 மட்டுமே சம்பாதிக்கிறார்கள். அவர்களுக்கு 30 வயதாகும் போது, அவர்கள் ரூ. 30,000-ஐத் தொடுவதே அரிதாக உள்ளது. உயிர்களைக் காப்பாற்றுவதற்காக கிட்டத்தட்ட ஒரு தசாப்தம் படித்த ஒருவருக்கு இது மனமுடைவை ஏற்படுத்தும் விஷயம்,” என்று மூத்த மருத்துவர் ஒருவர் டிடி நெக்ஸ்ட்டிடம் தெரிவித்தார். கடந்த தசாப்தத்தில் இந்த நிலை மேலும் மோசமடைந்துள்ளது. ஒரு காலத்தில் போற்றப்பட்ட மருத்துவச் சூழலை, இப்போது சோர்வு மற்றும் விரக்தி நிறைந்த ஒன்றாக மாற்றியுள்ளது. OTT தளங்களில் வரும் நிகழ்ச்சிகளில் மருத்துவர்களைத் தொடர்ந்து ரொமாண்டிசைஸ் செய்தாலும், தமிழ்நாட்டின் மருத்துவச் சமூகத்தின் நிஜமான நிலைமை, ஒரு மோசமான கதையைச் சொல்கிறது – அதாவது, தகுதியுள்ள மருத்துவர்கள், முதுகலைப் பட்டதாரிகள் மற்றும் உயர் சிறப்பு மருத்துவர்கள் (superspecialists) கூட வேலை இல்லாமல், குறைவான ஊதியத்தில் இருக்கிறார்கள், அல்லது தொழிலை மொத்தமாக விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.
“அரசுப் பணிகள் குறைவாகவும், தனியார் மருத்துவமனை அமைப்பது கட்டுப்படியாகாமலும் இருக்கும்போது, அவர்கள், உணவு விநியோகம், டாக்ஸி ஓட்டுவது, கூரியர் சேவைகள் போன்ற தற்காலிக வேலைகளுக்குத் (gig jobs) திரும்புகிறார்கள். ஸ்டெதஸ்கோப் அணிந்த மருத்துவர்கள் இப்போது ஹெல்மெட் அணிவதைக் காண்பது மிகவும் சோகமானது” என்று அந்த மருத்துவர் மேலும் கூறினார்.
தமிழ்நாட்டின் அரசு மருத்துவமனைகளில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாகப் பணியாற்றியுள்ள மூத்த அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜேசன் பிலிப், மோசமானதொரு சித்திரத்தை தருகிறார். “நான் இளைஞனாக இருந்தபோது, டாக்டர் சரவணமுத்து மற்றும் டாக்டர் பிரபாகர் போன்ற குடும்ப மருத்துவர்கள் தங்கள் சுற்றுப்புறங்களுக்குத் தூண்களாக இருந்தனர். அவர்கள் வெறும் MBBS பட்டம் கொண்டே முழு பிரச்சனைகளையும் கண்டறிந்து, சிகிச்சையளித்து, கவனித்து வந்தனர். மக்கள் அவர்களை நம்பினார்கள். இன்று, மருத்துவம் என்பது நோயாளிகளைக் காட்டிலும் லாபத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு தொழில்துறையாக மாறிவிட்டது,” என்று அவர் சமூக ஊடகப் பதிவு ஒன்றில் தெரிவித்திருந்தார், அது வைரலானது.
மருத்துவமனை வாரியங்களில் பணியாற்றிய டாக்டர் பிலிப், இப்போது வாரியக் கூட்டங்களின் விவாதங்கள், நோயாளி குணமடைவதைக் காட்டிலும் வருவாயைச் (revenue) சுற்றியே வருகின்றன என்று கூறினார். “அவர்கள் ‘பணக்கார’ நோயாளிகளை அடையாளம் காண்பது பற்றியும், தேவையற்ற சோதனைகள் அல்லது நடைமுறைகள் மூலம் லாபத்தை அதிகரிப்பது பற்றியும் பேசுகிறார்கள். இரக்கம் மறைந்துவிட்டது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
சுகாதாரக் கட்டமைப்பின் பாரம்பரிய அளவுகோலான மருத்துவர் - நோயாளி விகிதமும் அதன் பொருளை இழந்துவிட்டது என்பதை அவர் எடுத்துரைத்தார். “உலக சுகாதார அமைப்பு (WHO) 1:1000 என்ற விகிதத்தைப் பரிந்துரைக்கிறது. தமிழ்நாட்டில் இது 1:250 ஆக உள்ளது. ஒவ்வொரு குடிமகனும் தாங்களே மருத்துவர் என்று நினைக்கிறார்கள். ஆனால் விசித்திரம் என்னவென்றால், உயர் சிறப்பு மருத்துவர்களால் கூட நோய்பிரச்சனையை கண்டுபிடிக்க முடியவில்லை. MBBS பட்டதாரிகள் ஸ்விக்கி டெலிவரி ஊழியர்களாகப் பணியாற்றுகிறார்கள், சிறப்பு மருத்துவர்கள் (specialists) ரூ.60,000, உயர் சிறப்பு மருத்துவர்கள் ரூ. 90,000 சம்பாதிக்கிறார்கள், அதுவும் அவர்களுக்கு வேலை கிடைத்தால் தான்,” என்று அவர் கூறினார்.
டாக்டர் பிலிப்பின் கூற்று அத்துடன் நிற்கவில்லை. தனது சம்பளப் பட்டியலை (payslip) ஆன்லைனில் பகிர்ந்த அவர், சுமார் 30 ஆண்டுகால சேவைக்குப் பிறகு, 275 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளைச் செய்த பிறகும், அவரது மொத்தச் சம்பளம் (gross salary) ரூ. 1.6 லட்சம் என்றும், கையில் வாங்கும் சம்பளம் (take-home) ரூ. 1.3 லட்சம் என்றும் தெரிவித்தார். “இது இன்னும் அதிகமாக இருக்க வேண்டும், ஆனால் நிர்வாக அமைப்புகளில் உள்ள ஊழல் இதைத் தடுத்து நிறுத்துகிறது. லஞ்சம் கொடுக்காததால் நான் கஷ்டப்படுகிறேன்,” என்று அவர் எழுதினார். மேலும், “இந்த அமைப்புக்கு எதிராகப் பேசியதற்காக” தனக்கு மேலதிகாரிகளிடமிருந்து அச்சுறுத்தல்கள் வந்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
REC லிமிடெட்டின் முன்னாள் தலைவராக (CMD) இருந்த ஓய்வுபெற்ற IAS அதிகாரி டாக்டர் பி.வி. ரமேஷ், டாக்டர் பிலிப்பின் கவலைகளை ஆதரித்தார். “முப்பதாண்டு கால சேவைக்குப் பிறகு ஒரு மூத்த உயர் சிறப்பு மருத்துவர் மாதத்திற்கு ரூ. 1.3 லட்சம் சம்பாதிப்பது, கட்டமைப்பின் உடைவையே வெளிப்படுத்துகிறது. ஊதிய தரத்தில், உயர் பயிற்சி பெற்ற மருத்துவர்களை எழுத்தர்க்கு (clerks) சமமாக நிறுத்தியுள்ளோம். மருத்துவத்திற்கான ஊதியக் கட்டமைப்புச் சந்தை யதார்த்தங்களுடன் மறுசீரமைக்கப்பட வேண்டும். அத்துடன் பணவீக்கம் மற்றும் தனியார் துறை தரநிலைகளுக்கு ஏற்ப அது சீர்திருத்தப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.
REC லிமிடெட்டின் முன்னாள் தலைவர் மேலும் கூறுகையில், “பல மருத்துவர்கள் பணத்திற்காக அல்ல, தங்கள் தொழில் மீதான அர்ப்பணிப்பால் தொடர்ந்து சேவை செய்கிறார்கள். ஆனால் உண்மையான நோய் என்பது நிர்வாக அதிகாரத்தின் அராஜகம்தான். லஞ்சம் கொடுக்காத நேர்மையான மருத்துவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள். இந்த நிலையை கணினிமயமாக்கல் (Automation) மூலம் சரிசெய்ய முடியும், ஆனால் இதற்கு அரசியல் பின்புலம் உள்ளது,” என்றும் அவர் தெரிவித்தார்.
சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளரான டாக்டர் சாந்தி அவர்களின் கூற்றுப்படி, நிலைமை “சரிவு நிலையை” அடைந்துள்ளது. “ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் மற்றும் பல் மருத்துவர்கள் துயரத்தில் உள்ளனர். தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளையும், உள்கட்டமைப்பையும் அதிகரித்துள்ளது, ஆனால் வேலைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவில்லை,” என்று அவர் சுட்டிக்காட்டினார். “இருபது ஆண்டுகளுக்கு முன்பு, 19,000 அரசு மருத்துவப் பதவிகள் இருந்தன. ஒவ்வொரு ஆண்டும் 5,000 புதிய மருத்துவர்கள் பட்டம் பெற்றாலும், அந்த எண்ணிக்கை அப்படியேதான் உள்ளது. அவர்கள் எங்கு செல்வார்கள்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
ஒழுங்குமுறைத் தடைகள் நிலைமையை மேலும் மோசமாக்குகின்றன என்றும் அவர் கூறினார். “தமிழ்நாடு தனியார் மருத்துவ நிறுவனங்கள் (ஒழுங்குமுறை) திருத்தச் சட்டம், 2018 (The Tamil Nadu Private Clinical Establishments (Regulation) Amendment Act, 2018) மற்றும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019 (Consumer Protection Act, 2019) ஆகியவை சிறிய கிளினிக்குகள் நடத்துவதை மிகவும் கடினமாக்கியுள்ளன. காப்பீட்டுத் தொடர்புகள் அல்லது மேம்பட்ட நோயறிதலுக்கான வசதி இல்லாத நிலையில், சிறிய மருத்துவர்களால் பெருநிறுவன மருத்துவமனைகளுடன் (corporate hospitals) போட்டியிட முடியவில்லை,” என்று அவர் இந்த நாளிதழிடம் தெரிவித்தார்.
நகரத்தில் இப்போது உணவு விநியோகிக்கும் முகவராகப் பணியாற்றும் 28 வயதுடைய ஒரு MBBS பட்டதாரி, தனது வேதனையைப் பகிர்ந்து கொண்டார். “நான் நிர்வாக ஒதுக்கீட்டில் (management quota) படித்தேன், என் பெற்றோர் பெரிய அளவிலான கடன்களை வாங்கினார்கள். பட்டம் பெற்ற பிறகு வேலை இல்லை, என்னால் ஒரு கிளினிக்கை (clinic) கூட அமைக்க முடியவில்லை. அதனால் நான் உணவு விநியோகம் செய்ய ஆரம்பித்தேன், பைக் டாக்ஸி ஓட்டுகிறேன். என் பெற்றோர் நான் ஒரு ஜூனியர் மருத்துவர் என்று நினைத்து கொண்டிருக்கிறார்கள். உண்மையைச் சொன்னால் அவர்கள் மனம் உடைந்துவிடுவார்கள் என்பதால் என்னால் உண்மையை சொல்ல முடியவில்லை” என்று அவர் கூறினார். “இப்படியே மூன்று ஆண்டுகள் ஓடிவிட்டன. சில சமயங்களில் நான் மருத்துவத்தைத் தேர்ந்தெடுத்ததற்காக வருந்துகிறேன். நான் இப்போது உயர்படிப்புக்குத் தயாராகி வருகிறேன், இன்னும் எதிர்காலம் இருப்பாதாக நம்புகிறேன்,” என்று அந்த மருத்துவர்-தற்காலிகப் பணியாளர் நிருபரிடம் தெரிவித்தார்.
மூத்த மருத்துவர்களும் கூட நெருக்கடியை சந்திக்கிறார்கள். நகரத்தில் உள்ள அரசு மருத்துவத் தம்பதியினர், தாங்கள் தங்கள் தனியார் கிளினிக்கை மூட வேண்டியிருந்தது என்று கூறினர். “பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, எங்களுக்கு நிலையான நோயாளி வருகை இருந்தது. இன்று, பெருநிறுவன மருத்துவமனைகள் மற்றும் காப்பீட்டு நெட்வொர்க்குகள் சுயாதீனமான மருத்துவ நடைமுறையை அழித்துவிட்டன. நாங்கள் இப்போது ஆலோசகர்களாக (consultants) பணியாற்றுகிறோம். நாங்கள் எங்கள் மகனிடம் மருத்துவத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டாம் என்று கூறிவிட்டோம். இந்தத் தொழில் அதன் கண்ணியத்தை இழந்துவிட்டது,” என்று அந்த மருத்துவர் கூறினார்.
இருப்பினும், சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இந்தக் கருத்துகளை மறுக்கிறார். “அரசு மருத்துவமனைகளில் வரையறுக்கப்பட்ட காலியிடங்கள் மட்டுமே உள்ளன,” என்று அவர் டிடி நெக்ஸ்ட்டிடம் தெரிவித்தார். “முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சியின் கீழ், தமிழ்நாடு பூஜ்ஜிய காலியிட நிலையை (zero-vacancy status) அடைந்துள்ளது. நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் அரசு வேலை வாய்ப்புகளை அதிகரிக்கிறோம், ஆனால் அனைத்துப் பட்டதாரிகளையும் எங்களால் உள்வாங்க முடியாது. அது எந்த நாட்டாலும் முடியாது. நான் எந்த மருத்துவரும் தற்காலிகப் பணியாளராகப் பணிபுரிவதைப் பார்க்கவில்லை. பெரும்பாலானோர் உயர்படிப்பைத் தொடர்ந்துகொண்டே நன்றாகச் சம்பாதிக்கிறார்கள்,” என்றும் அவர் தெரிவித்தார்.
வெண்பா (தமிழில்)
மூலக்கட்டுரை: https://www.dtnext.in/news/tamilnadu/med-profession-not-a-paymaster-doctors-turn-gig-workers-in-tn-853056
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு