கல்வியியல் சுதந்திரத்தை பறிக்கும் பாசிச VBSA மசோதா
பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு
பேரன்புகொண்ட பெருந்தகையீர்! வணக்கம்.
நமது கல்வியின் மீது மிகப் பெரும் தாக்குதலை பாசிசக் கருத்தியல் நீண்ட காலமாக நிகழ்த்தி வருகிறது. கடந்த பத்து வருடங்களாக தேசியக் கல்விக் கொள்கை என்ற பெயரில் நடந்துவரும் விவாதம், பாசிசத் தாக்குதலை மக்கள் முழுமையாக உணர்ந்து கொள்ள வாய்ப்புத் தராமல் மிகவும் தந்திரமாக தனது நகர்வுகளை நிகழ்த்தி வருகிறது.
நமது கல்விக்கான மிகப் பெரும் அரணாக நமது இந்திய அரசமைப்புச் சட்டம் விளங்கி வருகிறது. அதன் விளைவாக, பாசிசக் கருத்தியல் முழுமையாக நமது சமூகத்தில் தனது தாக்கத்தை ஏற்படுத்தவிடாமல் ஓரளவாவது நம்மால் தடுக்க முடிந்துள்ளது.
இன்று பாசிசம் தனது அடுத்தக்கட்ட நகர்விற்கு தயாராகிவிட்டது. இந்திய அரசமைப்புச் சட்டமெனும் அரணை தகர்த்த சட்டப்படியான வழிமுறைகளை கையாளத் தொடங்கி உள்ளது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறு 14 சமத்துவத்தை உறுதிப்படுத்துகிறது. கூறு 21 கண்ணியமிக்க வாழ்க்கையை அனைவருக்கும் உறுதிப்படுத்துகிறது. கூறு 19 மக்கள் தங்களின் கருத்தை வெளிப்படுத்த, சிந்தனைகளை விவாதிக்க உரிமையை வழங்குவதுடன், தங்களின் உரிமைகளை வென்றெடுக்க சங்கமாக கூடவும் உரிமை வழங்குகிறது. இவற்றை உறுதிப்படுத்த அரசிற்கு வழிகாட்டும் நெறிமுறைகள் பகுதியின் கூறு 41 கல்வி, வேலை உள்ளிட்ட வாழ்வாதார தேவைகள் அனைத்தும் அனைவருக்கும் உரிமையாக வழங்க அரசிற்கு வழிகாட்டுகிறது. ஆசிரியர் உள்ளிட்ட ஊழியர்களுக்கு கண்ணியமிக்க வாழ்க்கைக்குத் தேவையான ஊதியம் (Living Wages) வழங்கிட வேண்டும் என்று கூறு 43 வழிகாட்டுகிறது.
ஆசிரியர் மற்றும் மாணவர்களின் கல்வியியல் சுதந்திரம் என்பது கூறு 19 தரும் உரிமையின் அடிப்படையில் அமைந்தது. ஆசிரியர் மற்றும் மாணவர்கள் சங்கம் அமைக்கும் உரிமை, கல்வி வளாகங்களில் பேரவைத் தேர்தலில் பங்கேற்கும் உரிமை, நிர்வாகத்தின் மூலமாக ஆசிரியர் மற்றும் மாணவர் நலனுக்காக போராடும் உரிமை, அரசின் கொள்கை முடிவுகள் மீது தங்களின் கருத்தை வெளிப்படுத்தும் உரிமை, உலக அளவில் அரசியல் மற்றும் பொருளாதார நிலை, வர்த்தகப் போட்டியின் விளைவாக நடக்கும் போர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் தங்களின் கருத்தை வெளிப்படுத்தும் உரிமை உள்ளிட்ட அனைத்தும் உரிமைகளும் கல்வியியல் சுதந்திரத்தில் உள்ளடங்கும்.
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்தும் என்கிற இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் சமூகநீதியின் அடிப்படையில் சமூக, பொருளாதார, அரசியல் சமத்துவம் நிலவ வேண்டும், அனைவரும் சமம் எனும் சமூக வாழ்வியல் அமைய வேண்டும் என்ற நோக்கத்தை நிறைவேற்ற உருவாக்கப்பட்டது.
இந்தியாவின் பன்முகத்தன்மை அங்கீகரித்து பன்மைத்துவத்தை போற்றிப் பாதுகாக்கவே கல்வி விவகாரத்தில் தங்களின் மாநில தேவைகளுக்கு ஏற்ப முடிவுகள் மேற்கொள்ள அதிகாரங்களை மாநில அரசுகளிடம் இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியது. அதன் அடிப்படையில் பல்கலைக்கழங்களை உருவாக்கும், ஒழுங்குப்படுத்தும், கலைக்கும் அதிகாரம் மாநில அரசிடம் மட்டுமே இந்திய அரசமைப்புச் சட்டம் தந்துள்ளது. அட்டவணை ஏழு பட்டியல் ஒன்றில் வரிசை 44, பட்டியல் இரண்டில் வரிசை 32 மற்றும் பட்டியல் மூன்றில் வரிசை 25 ஆகியவற்றை இணைத்து வாசித்தால் அனைவரும் உணரலாம்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சி மற்றும் மக்களாட்சி மாண்புகளை புறம்தள்ளி, கல்வித் தரும் பொறுப்பில் இருந்து அரசை விடுக்க, ஆசிரியர் மற்றும் மாணவர்கள் கல்வியியல் சுதந்திரத்தை பறிக்கும் கூறுகளை உள்ளடக்கிய வளர்ந்த (விஸ்கிட்) இந்தியா (பாரத்) கல்வி (சிக்க்ஷா) அதிகார அமைப்பு (அதிஷ்தான்) மசோதா (Bill), (VBSA) 2025 தற்போது நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வில் உள்ளது. பல்கலைக் கழகங்களை ஒழுங்குபடுத்த நாடாளுமன்றத்திற்கு உரிமையே இல்லை என்கிற போது எங்கிருந்து நாடாளுமன்றக் கூட்டுக் குழு அத்தகைய மசோதாவை ஆராய உரிமை உள்ளது என்பதே அடிப்படைக் கேள்வி. ஆக, வளர்ந்த இந்திய கூட்டாட்சித் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டாதாக இருக்காது. வளர்ந்த இந்தியாவின் அரசு கல்வி தராது. வளர்ந்த இந்தியா பன்மைத்துவத்தை ஏற்காது. இன்றைய இந்தியாவை சிதைத்து, ஒற்றைப் பண்பாட்டு தேசமாக வளர்ந்த பாரத் உருபெறுவதற்கு பாசிச குணாம்சங்கள் கொண்ட சட்ட நடவடிக்கையாக நம் முன் VBSA மசோதா உள்ளது.
இந்த மசோதா குறித்த முழுமையான புரிதலுடன் நமது மாநிலத்தில் இன்னும் விவாதம் நடக்கவில்லை.
நாடாளுமன்றம் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடத்த கூடியுள்ளது. அடுத்து நடக்கும் குளிர் காலக் கூட்டத் தொடரில் உயர்கல்வி ஆணையத்தை நிறுவிடும் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
மக்களிடம் இந்த மசோதா குறித்த விவரங்கள் எடுத்துக் கூற வேண்டிய பொறுப்பு மசோதாவை படித்து, புரிந்து, கற்று, உணரும் வாய்ப்பு பெற்றுள்ள அனைவருக்கும் உள்ளது.
மசோதாவின் நோக்கத்தையும், அதன் தாக்கத்தையும் கற்றறிந்தவர்கள் மக்களிடம் விளக்கத் தவறுவது சமூகத்திற்கு செய்யும் மிகப் பெரும் துரோகம் என்பதை உணர வேண்டும்.
மக்களிடம் தெளிவுபடுத்திய பின்னர், மக்கள் கல்வி தளத்தில் உள்ள சவால்களை எப்படி எதிர்கொள்வது என்பதை முடிவு செய்வார்கள். மக்களிடம் முழுவிவரத்தையும் தெரியப்படுத்தாமலேயே மக்கள் மௌனமாக இருப்பதாக குற்றம் சுமத்துவது எந்த வகையிலும் நியாயம் இல்லை.
நல்லவர்களின் மௌனமே, தீயவர்களின் கொடுஞ்செயலை விட தீங்கானது என்று நம் முன்னோர் கூறியுள்ளனர்.
தகவல் தெரிந்தவருக்கே நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு உள்ளது என்பதை அறிவியலாளர்கள் கூறியுள்ளனர்.
தனியார் வசம் மொத்தக் கல்வியும் ஒப்படைக்கப்பட்டு, வணிகச் சந்தை கல்வியை சூறையாடும் நிலை வேகமாக உருவாகிக் கொண்டிருக்கும் இன்றையச் சூழலில் கற்றறிந்துவர்கள் மௌனம் கலையட்டும்.
மக்களுடன் உரையாடலைத் தொடங்க நம்மை ஆயத்தப் படுத்திக் கொள்வோம்.
நன்றி. வணக்கம்.
தோழமை அன்புடன்,
பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு, பொதுச் செயலாளர், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை
13.03.2026
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு