நூல் அறிமுகம்: வர்க்கப் போராட்டத்தில் ஜாதி ஒழிப்பு - ப.ஜீவானந்தம்

Selvakumar Shanmugasundaram

நூல் அறிமுகம்: வர்க்கப் போராட்டத்தில் ஜாதி ஒழிப்பு  - ப.ஜீவானந்தம்

விவசாயக் கூலிக்காகவும்

 ஏழை விவசாயிக்காகவும்,

 குன்னியூர் அய்யரையும்,

 திருவாடுதுறை மடத்தையும்,

 வானமாமலை ஜீயரையும்,

 வலிவலம் தேசிகரையும்,

பி. டி. ராஜனையும் இத்தகைய சிலப் பிரபுக்கள் பலரையும் எதிர்த்துப் போராடிய

 போராட்டங்கள்

 ஜாதி ஒழிப்புப் போராட்டங்கள் அல்லவா என்று உங்களை நாள் பணிவன்புடன் கேட்கிறேன்.

சிமிண்டு ஆலை சங்கரலிங்க அய்யரையும்,

மோட்டார் தொழிற்சாலை டி.வி.எஸ். அய்யங்காரையும்,

 ஜி.டி. நாடுவையும் இன்னபிற பண-ஜாதி அதிபதிகளையும் தொழிலாளர் போராட்டத்தின்மூலம்

நாங்கள் எதிர்த்துப் போராடுவது, ஜாதி ஒழிப்புப்

 போராட்டத்துக்கு அரண் கட்டுவதாகாதா என்று உங்களை வினயமாகக் கேட்கிறேன்.

"இந்த நிலப்பிரபு எதிர்ப்பு

 முதலாளி எதிர்ப்பு போராட்டங்களின் வழியாக,

 ஜாதிபேதம் பாராட்டாது

சகல மக்களையும் திரட்டுவது

 ஜாதி ஒழிப்புக்கு இணைந்த

 செயல் அல்லவா என்று கேட்கிறேன்"

''தோழர்களே!

மேற்கூறியபடி சொல்லும்

 செயலும் உள்ள நாங்கள்,

 ஜாதி ஒழிப்பு என்ற பேரால்

 பெரியார் நடத்தும் போராட்டத்தை அழுத்தமாகக்

 கண்டிக்கிறோம்.

ஏன்?

ஜாதி முறையின்,

 வெளியீடுகளை அறவே துடைக்கவேண்டுமானால்,

 ஜாதி நடைமுறையில் சமுதாயக் கொடுமைகளை,

 பிற்போக்கு நிலவரங்களை உணர்வு பூர்வமாகக் காணும் சகல கட்சியினரும்,

சகல பகுதி மக்களும் ஒன்றுபட்டு பற்பல நடவடிக்கைகளில் ஈடுபட்டாகவேண்டும் என்று

 கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது. ஜாதீய முறையை விரும்பாத,

 ஜாதீய முறையை எதிர்க்கிற தம்மைப் பொறுத்த முறையில் ஜாதீய முறையை

 ஒழித்துவிட்ட எல்லாப்

பகுதி மக்களும் ஒன்று சேர்ந்து எடுக்கும் நடவடிக்கைகளால்

 மாத்திரமே சர்க்காரை

 ஜாதி ஒழிப்பு நடவடிக்கைகளை எடுக்க நிர்ப்பந்திக்க முடியும் என்றும் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.

கம்யூனிஸ்டுகளோ,

திராவிடக் கழகத்தார்களோ,

 திராவிட முன்னேற்றக் கழகத்தார்களோ மட்டுமல்ல,

 ஜாதியை ஒழிக்க விரும்புகிறர்கள், பாடுபடுகிறர்கள். சோஷலிஸ்டுகள்,

பிரஜா சோஷலிஸ்டுகள்,

 தமிழரசுக் கழகத்தார் முதலியவர்களும் ஜாதி அழிப்புக்கே நிற்கிறார்கள். ஏன் காங்கிரஸ்காரர்களிலும் பெரும்பாலான தேச பக்தியுள்ள,

தேசிய ஒற்றுமையில் நாட்டமுள்ளவர்களும் ஜாதி ஒழிப்பை விரும்புகிறார்கள்.

 அரசியல் கட்சிகள் மட்டுமல்ல; அரசியல் கட்சிகளில்

ஈடுபடாத படிப்பாளிகளும் நல்லன்பர்களும்,

இன்று ஜாதி முறை, முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை என்றும், ஜாதிமுறை தேவையில்லையென்றும், அது ஒழிக்கப்பட வேண்டுமென்றும் எண்ணுகிறார்கள்.

பல்வேறு ஜாதிகளையுடைய இந்த நாட்டில், பார்ப்பனரிலிருந்து ஹரிஜன்வரை எல்லா ஜாதிகளும் ஒழியவேண்டுமென்று உண்மையாகவே,

உறுதியாக விரும்புகிறார்கள். இவர்களையெல்லாம் ஒன்றுபடுத்தி மயக்கத்தாலும்,

 மௌடீகத்தாலும் ஜாதி முறைக்கு இரையாகிக் கொண்டிருக்கும்

இதர பகுதி மக்களையும்

இந்த முகாமில் இழுக்கத்தக்க விதத்தில் நடவடிக்கை எடுப்பதின் மூலமே,

ஜாதி முறையை நிச்சயமாக ஒழிக்கத் தகுந்த பாதையில் வெற்றிகரமாக முன்னேற முடியுமென்று நாங்கள் நம்புகிறோம்.

இந்தப் பெரும் பணியை ஆற்றுவதற்கு

 ஜனநாயகரீதியான சமாதானமான மனமாற்றும் முறைதான் (The Method of Persuasion) மிகச் சிறந்த முறை என்பதையும்,

பலாத்கார முறை (Thn Method of co-hersion) தகுந்த முறை அல்ல என்பதையும் நீங்கள் என்னோடு ஒப்புக்கொள்ளுவீர்கள் என்று நம்புகிறேன்.

நாலுபேர்கையில் கத்தி எடுத்துக்கொண்டு அல்லது

 தடிகளைத் தூக்கிக்கொண்டு,

 சமுதாயத்தில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக வேரோடிப் படர்ந்து கிடக்கும் ஜாதீய தீய பிரதிபலிப்புகளை,

 இதோ. ஒழித்துக் கட்டிவிடுகிறேன் என்று கிளம்பினால்

அவர்களுடைய குருட்டு ஆவேசத்தைக் கண்டு நாம் பரிதாபப்படத்தான் முடியும்.

 மற்றபடி இந்த சில்லரை பலாத்காரத்தால் ஜாதி ஒழிப்பில் ஒரு சிறு துரும்பைக்கூட அசைத்துவிட முடியும் என்று ஒரு பைத்தியக்காரனும் நினைக்கமாட்டான்.

இனி பெரியார் ஜாதி ஒழிப்பைப்பற்றி சில செய்திகளை உங்களுக்கு நினைப்பூட்ட விரும்புகிறேன்.

1924-25-ல் காங்கிரலிலிருந்து வெளியேறிய ஈ.வெ. ரா, "காங்கிரஸ் பார்ப்பனர் ஆதிக்கம் ஒழியவேண்டும்" என்றும், அப்பால் "பார்ப்பனர் ஆதிக்கம் ஒழிய வேண்டும்" என்றும், அப்பால், "பார்ப்பனீயம் ஒழியவேண்டும்" என்றும், அப்பால், "ஜாதி ஒழியவேண்டும்'' என்றும், அப்பால் ''வருணாசிரம தர்மம் ஒழிய வேண்டும்" என்றும், அப்பால் "சனாதன தர்மம் ஒழியவேண் டும் என்றும் அப்பால் "இந்து மதம் ஒழியவேண்டும்" என்றும், அப்பால் "மதங்களே ஒழியவேண்டும்" என்றும், போகப் போக பிரச்சாரம் செய்து கொண்டே போனார். (ஒரே சிரிப்பு.) பின்னர் 1932ல் ரஷ்யாவுக்குச் சென்றுவிட்டு திரும்பிவந்து. சமதர்மப் பிரச்சாரம் நடத்தினர், ஜமீன்தார் அல்லாதார் மாநாடு, லேவாதேவிக்காரர் அல்லாதார் மாநாடு போன்ற மாநாடுகளையெல்லாம் கூட்டினர்.

1934ல் என்று ஞாபகம். வடாற்காடு ஜூல்லா திருப்பத்தூரில் ஒரு லேவாதேவிக்காரர் அல்லாதார் மாநாடு ஒன்று நடந்தது. அந்த மாநாட்டில் ஈ. வெ. ரா. பேசிய பேச்சு, குடியரசு பத்திரிகையில் வெளிவந்திருக்கிறது. குடியரசின் அந்த ஆண்டு தொகுதியை எடுத்து இன்றும் நீங்கள் பார்க்கலாம்.

அந்தப் பேச்சில், ஜாதி ஒழிப்பைப்பற்றி அவர் என்ன கூறினார் தெரியுமா? சமதர்மம் பேசத் தொடங்கியபின் பேசத் தொடங்கியது என்பதையும், சோவியத் யூனியனுக்குச் சென்றுவிட்டு வந்த பின் பேசிய பேச்சு அது என்பதையும் நீங்கள் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். அந்தப் பேச்சில் என்ன பேசினார் தெரியுமா?

"பார்ப்பனீயம் ஒழிய வேண்டுமென்றும், வருணாசிரம தர்மம் ஒழிய வேண்டுமென்றும், ஜாதிகள் மதங்கள் ஒழிய வேண்டுமென்றும் எவ்வளவோ காலம் பேசிவிட்டோம். ஒரு சுக்குக்கும் பலன் ஏற்படவில்லை. இன்று அந்த ஜாதிகளையும், மதங்களையும் தாங்கி நிற்கும் சமுதாயத்தையும், அந்தச் சமுதாயத்தைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் ஏகாதிபத்தியத்தையும் ஒழிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டோம் " என்று பேசினார்.

அன்பர்களே! அன்று நான் அவரோடு சமதர்மப்பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தேன் என்பதும் திருச்சி நகரவாசிகளாகிய உங்களுக்கு நன்றாகத் தெரியும். யாரிடமாவது பழைய "குடியரசு"த் தொகுதி இருந்தால் அவசியம் படித்துப்பார்க்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகிறேன். அப்பொழுது, அன்றே ஈ.வெ.ரா. ஜாதி ஒழிப்புக்கு என்ன பாதையைக் காட்டினார் என்பது நன்றாகப் புலப்படும்.

( ஜாதி ஒழிப்பும், மொழிப்பிரச்சினையும் நூலில் )

Selvakumar Shanmugasundaram 

https://www.facebook.com/story.php?story_fbid=122293969532244910&id=61557347300989&post_id=61557347300989_122293969532244910&rdid=FPVG6xZV6ykRzJj3

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு