நூல் அறிமுகம்: பண்பாட்டு ஆய்வியல் - சி.மகேசுவரன்
அ.கா. ஈஸ்வரன்
பண்பாட்டு ஆய்வியல்
(பண்பாட்டியல் குறித்த முழுதளாவிய பார்வை)
ஆசிரியர்- முனைவர் சி.மகேசுவரன்
முதல் பதிப்பு- 2023
விலை-ரூ.480/-
பதிப்பகம்- பாரதி புத்தகாலயம்
எண் 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018
தமிழகத்தில் உள்ள பழங்குடிகளைப் பற்றிய மானுடவியல் பார்வையில் பண்பாட்டு ஆய்வியல் என்கிற இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் பழங்கடிகளைப் பற்றிப் பண்பாட்டு மானிடவியல் பார்வையில் எழுதப்பட்டுள்ளது.
இந்த நூல் ஐந்து பிரிவுகளைக் கொண்டுள்ளது. 1. பண்பாட்டு ஆய்வியல்: பொதுவியல், 2. தொல்பழங்காலப் பண்பாட்டு ஆய்வியல், 3. பழங்குடி பண்பாட்டு ஆய்வியல், 4. பழங்குடி இனக்குழுவரைவியல், 5. நாட்டுப்புறப் பண்பாட்டு ஆய்வியல்.
இந்த ஐந்து பிரிவுகளில் 41 தலைப்புகளில் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளது. இக் கட்டுரைகள் பல்வேறு பருவ இதழ்களில் எழுதப்பட்டதால், சுமார் 10 பக்கங்களைக் கொண்டதாக இருக்கிறது. ஒரு சில கட்டுரை மட்டுமே அதிகப் பக்கங்களில் காணப்படுகிறது.
முழு நூலைப் படித்து முடித்தவுடன், தமிழகத்தில் இருக்கும் பழங்குடிகளைப் பற்றிய ஒரு பொதுவான அடிப்படைப் புரிதல் முழுமையாகக் கிடைக்கிறது. இந்த நூலில் அதிகமாக நீலகிரி மாவட்டத்தைச் சார்ந்த பழங்குடி பற்றியதாக இருக்கிறது. பழனி மலையில் வாழும் பளியர் பழங்குடிகளைப் பற்றிச் சற்று விரிவாகக் காணப்படுகிறது. இது போன்று அனைவரையும் பற்றியும் சற்று விரிவாக இருந்தால் புரிதலுக்கு நன்றாக இருக்கும்.
Reference books என்பதற்கு நோக்கீட்டு ஏடுகள் என்று எழுதியுள்ளார். நல்ல தமிழைப் பயன்படுத்துவது தமிழ் வளர்ச்சிக்குப் பயன்படும். இந்த நூலில் நல்ல தமிழ் சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது புழக்கத்தில் உள்ள சொற்களில் சரியானதாக ஆசிரியர் கருதுவதையும் பதிவு செய்துள்ளார்.
பரபரப்பான இன்றைய வாழ்க்கையில் இனக்குழு வரைவியல் என்பது தேவையான ஒன்றா? என்று சாதாரண மக்கள் கேட்பார்கள். இனக்குழுவினரின் இன்றைய பிரச்சனைகளை அறிந்து தீர்வு காண்பதற்கு இதுபோன்ற முயற்சிகள் தேவையான ஒன்றாகும்.
வரலாறு என்பது பழம் பெருமைகளைப் பேசுவதற்கல்ல, மக்களைப் பின்னோக்கி இழுத்துச் செல்வதற்கும் அல்ல. வரலாறு என்பது எதற்கு என்பதை முனைவர் சி.மகேசுவரன் மிகச் சிறப்பாக இந்நூலில் வரையறை செய்துள்ளார்.
"ஒவ்வொரு நாட்டிற்கும் வரலாறு இன்றியமையாதது போன்றே, ஒவ்வோர் இனக்குழுவிற்கும் (Ethnos/Ethinic Group) வரலாறு இன்றியமையாததாக அமைகிறது. ஓர் இனக்குழுவானது, தான் கடந்து வந்த பாதையைப் பற்றி நன்கு அறிந்திருந்தால் மட்டுமே அது, தான் செல்ல வேண்டிய பாதையில் நன்கு நடைபோடவும் சென்று சேர வேண்டிய இலக்கைச் சரியாக அடையவும் இயலும். எனவே, ஒவ்வோர் இனக்குழுவும், தான் கடந்து வந்த நேற்றைய பாதையைத் தன் நினைவில் கொண்டிருந்தால் ஒழிய, இன்றைக்குத் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளவும் நாளைய பாதையில் நடை போடவும் இயலாமல் போய்விடும். இதற்கு உறுதுணையாவது இனக்குழுவரலாற்று மீட்டுருவாக்கம் (Reconstruction of Ethno history) ஆகும்."
(பக்கம் - 428)
மக்களின் இன்றைய தேவையையும், நாளைய வளர்ச்சியையும் நோக்கியதாகவே எந்த முயற்சியும் இருக்க வேண்டும். வரலாறும் இனக்குழு வரைவியலும் அதற்கே பயன்பட வேண்டும். பழங்குடி மக்களைக் கட்டாயப்படுத்தி அவர்களின் இருப்பிடத்தைவிட்டு விரட்டுவதோ, கட்டாயப்படுத்தி அவர்களை இருக்கின்ற நிலையிலேயே இருத்துவதோ தவறானக் கண்ணோட்டமாகும். மாற்றம் என்பது பொது நீரோட்டத்தில் இருப்பவர்களுக்கு மட்டும் தேவையானதாகக் கருத முடியாது, பழங்குடி மக்களுக்கும் தேவை. அவர்களுக்குத் தேவைப்படுகிற மாற்றத்தை அடைவதற்கு நாம் வழிவிட வேண்டும். வழிவிடுவதோடு மட்டும் அல்லாது அவர்களுக்குத் துணைபுரிய வேண்டும்.
தேசிய பிரச்சனையை மார்க்சியம் எப்படி பார்க்கிறதோ அப்படியே பழங்குடி மக்களின் பிரச்சனையையும் அணுக வேண்டும். அதாவது ஒடுக்குகின்ற இடத்தில் அவர்களுக்கு ஆதரவாகவும், வளர்கிற இடத்தில் துணையாகவும் இருக்க வேண்டும்.
Anthropology என்கிற ஆங்கிலச் சொல்லுக்கு மானுடவியல், மானிடவியல் என்கிற இரண்டு சொற்களும் பயன்படுத்தப்படுகிறது. முனைவர் சி.மகேசுவரன் அவர்களும் இரண்டு சொற்களையும் இந்த நூலில் பயன்படுத்தியுள்ளார். ஏதேனும் ஒரு சொல்லையே கல்வி புலத்தில் பயன்படுத்துவது சரியானதாக இருக்கும். கல்வி புலத்தவர்கள் இதனை ஆய்ந்து முடிவெடுக்க வேண்டும்.
மானிடவியல் என்கிற சொல், ஒரு தனிநபரைப் பற்றியதாக வெளிப்படுகிறது, மானுடவியல் என்கிற சொல் மனிதக் குழுக்களைக் குறிப்பதாகக் கொள்ளலாம். மானுடவியல் என்பது மனிதக் குழுக்களுக்கு இடையிலான ஒப்பாய்வாகும். ஒவ்வொரு குழக்களை ஆய்வு செய்வது, மற்ற குழுக்களோடு இணைத்துப் பார்ப்பதற்கே மானுடவியல் பயன்படுகிறது. அனைத்து மக்களையும் ஒருங்கிணைந்து புரிந்து கொள்வதற்கே மானுடவியல் தேவையான ஒன்றாகும். அதனால் மானுடவியல் என்கிற சொல்லைப் பயன்படுத்துவதே சிறப்பாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். இந்தச் சொல்லாக்கம் பற்றி முடிவை மானுடவியல் ஆய்வாளர்கள் முடிவெடுக்க வேண்டும்.
பழங்குடிகளிடையே காணப்படும் வழிபாடுகள் வளமைக் கோட்பாட்டின் (Fertility cult Theory) அடிப்படையிலானது, அதனை நிறுவன மதத்தோடு இணைத்துப் பேசக்கூடாது. பழங்குடி வழிபாட்டையும் நிறுவன மத வழிபாட்டையும் ஒன்றாக இணைத்துப் புரிந்து கொள்ளும் தவறு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
பழங்குடிகளிடையே பணப் புழக்கத்தைப் போல மதப் புழக்கம் சிறிய அளவு காணப்பட்டாலும், அவர்களிடம் இருப்பது பழங்குடி கூறுகளே ஆகும். பழங்குடிகளிடம் காணப்படும் வழிபாட்டை, வளமை வழிபாடாகக் காண வேண்டும். இந்த வளமைக் கோட்பாடு, நிறுவன மத வழிபாட்டின் படைப்புக் கோட்பாட்டோடு வேறுபடுகிறது. மதச் சிந்தனையான அப்பாலைத் தத்துவமும் (Metaphysics Philosophy) பழங்குடிகளிடம் காணப்படும் வளமைக் கோட்பாடும் (Fertility cult Theory) அடிப்படையிலேயே வேறுபாடாக இருக்கிறது. வளமைக் கோட்பாட்டின் எச்சங்கள் மத வழிபாட்டில் காணப்பட்டாலும் வேறுபட்ட வகையிலேயே தொடர்கிறது.
இந்நூலாசிரியர் வளமைக் குறியீடுகளைப் பற்றி ஒரு தனி அத்தியாயத்தில் எழுதியுள்ளார்.
"தனது இனத்தைப் பெருக்கிக்கொள்வதே உயிரினங்களின் முகாமையான வாழ்வியற் கடமையாகிறது. விலங்கின உலகின் உயர்படிமலர்ச்சி நிலையாக விளங்கும் மனிதரிடையேயும் இதுவே தலையாயக் கடமையாக அமைகிறது. எனவே, ஆதிகாலம் தொடங்கி மனித இனக்குழுக்களால் இனப்பெருக்கத்தைப் போற்றிப் பேணும் வகையில் பல்வேறு வளமைச் சடங்குகள் உலகம் முழுதும் மேற்கொள்ளப்படுகின்றன. உணவு தேடும் சமூகம் என்ற நிலையிலிருந்து மனிதச் சமூகமானது உணவு உற்பத்திச் சமூகமாக மாறிப் பயிர் தொழிலில் ஈடுபட்டபோது இனப்பெருக்கம் தொடர்பான வளமைச் சடங்குகளைப் பயிர் தொழிலிலும் கடைப்பிடிக்கத் தொடங்கியது."
(பக்கம் - 21)
வளமைக் கோட்பாடு பழங்குடிகளிடம் மட்டுமல்ல, உணவை உற்பத்தி செய்பவர்களிடமும் எச்சமாகக் காணப்படுகிறது. சில எச்சங்கள் நிறுவன மதத்தோடு இணைந்திருக்கிறது, சில சடங்குகள் தனிப்பட்ட சமூகத் திருமண முறைக்குள்ளும் அவர்களின் பிற நடவடிக்கைகளிலும் காணப்படுகிறது.
வளமைக் குறியீடுகளை இந்நூலாசிரியர் ஐந்து பண்பாட்டுக் களங்களுக்குள் அடக்குகிறார்.
1. பெண், ஆண் பாலுறுப்புகள் மற்றும் ஆண்-பெண் இணைவு.
2. ஆண்மை வீரியம்.
3. தன்னினத்தைப் பல்கிப் பெருக்குதல்.
4. இயங்குநிலை ஆற்றலை ஒரு புள்ளியில் ஒருங்கிணைத்தல்.
5. இறந்தோரை மறுவுயிர்ப்பித்தல்.
இறந்தோர்களின் ஆசீர்வாதம் என்பதும் ஒரு வகையில் வளமைக் கோட்பாட்டைச் சேர்ந்ததே ஆகும். முன்னோர்களிடம் இருந்த வளமை தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்பதே முன்னோர் வழிபாட்டின் அடிப்படையாகும். பழங்குடி நிலையில் இருந்து மாறிய மக்களிடமும் இந்த முன்னோர் வழிபாடு எச்சமாகக் காணப்படுகிறது.
நூலின் ஐந்தாவது கட்டுரையின் தலைப்பு, மீயியல் ஆற்றல் வெளிப்பாடு தொடர்பான நம்பிக்கைகள். அதில் மனித சமூகம் தம்மை நிலைநிறுத்திக் கொள்வதற்கு மூன்று நிலைகளில் தகவமைத்துக் கொள்வதாக இந் நூலாசிரியர் கூறுகிறார்.
1. மனிதருக்கும் மனிதருக்கும் இடையேயான தகவமைப்புகள்
(Man - Man Adjustment)
2. மனிதருக்கும் இயற்கைக்கும் இடையேயான தகவமைப்புகள்
(Man - Nature Adjustment)
3. மனிதருக்கும் மீயியற்கைக்கும் இடையேயான தகவமைப்புகள்
(Man - Supernature Adjustment)
இங்கே Supernature என்று பேசப்படுவதால் இந்த மீயியற்கை என்பதை அப்பாலைத் தத்துவமாகப் (Metaphysics Philosophy) புரிந்து கொள்ளக்கூடாது. பழங்குடி மக்கள் இயற்கையை அறிந்து கொள்ளமுடியாத நிலையில், சில இயற்கை சக்திகள் மக்களை அச்சுருத்துவதாக நினைத்துக் கொண்டனர். தமிழ் இலக்கியங்களில் அணங்கு என்று கூறப்படுவது இத்தகைய அச்சமே ஆகும். இந்த அச்சத்தை உலகைப் படைக்கும் சக்தியாகப் பழங்குடி மக்கள் கருதவில்லை.
உணவு சேகரிக்கும் நிலையில் இருந்து மாறி, உணவை உற்பத்தி செய்யும் நிலைக்கு வளர்ச்சி அடைந்த சமூகத்தில்தான் படைப்புக் கடவுள் பற்றிய சிந்தனை தொடங்குகிறது. பணக்காரன் ஏழை என்கிற வேறுபட்ட சமூகம் தோன்றும் போதே அரசும், நிறுவன மதமும் தோன்றுகிறது. அதற்கு முன்பு வரை மாயவித்தையும் (Magic) வளமைக் கோட்பாடும் மட்டுமே அவர்களிடம் காணப்படும், நிறுவன மதத்தின் கருத்துக்கள் சமூகத்தில் வர்க்க வேறுபாடு தோன்றியப் பிறகே உருவானது.
மதக்கருத்துக்கள் தோன்றுவதற்கு முன்பாகச் சில வழிபாடு முறைகள் இருந்தது, அதனை நிறுவன மதங்கள் பயன்படுத்திக் கொண்டது.
நிறுவன மதச்சிந்தனைக்கு முன்பான வழிபாட்டு முறைகள் எவை என்பதைப் பார்ப்போம். இயற்கை வழிபாடு, நெடுங்கல் வழிபாடு, ஆவி வழிபாடு, மர வழிபாடு, நடுகல் வழிபாடு, கந்து வழிபாடு, தாய் தெய்வ வழிபாடு. இத்தகைய வழிபாடுகளின் தொடர்ச்சியாக நிறுவன மத வழிபாடுகள் இருப்பதால், இதனை முந்து மத வழிபாடுகள் (Proto Religious Rituals) என்று கூறலாம். தாய் தெய்வ வழிபாடுவரை வளமைக் கோட்பாட்டின் அடிப்படையில்தான் காணப்படுகிறது. வளமைக் கோட்பாடு தன்நிலையை இழக்கும் போதே நிறுவன மதம் தோன்றுகிறது. வர்க்கமாக சமூகம் பிளவுபட்ட பிறகே மதச்சிந்தனை தோன்றுகிறது. பழங்குடிகளுக்கு மதச் சிந்தனைகள் தேவைப்படவில்லை.
அண்மைக் காலமாக ஏழு குமரிகள் அதாவது சப்த கன்னிகள் பற்றி நிறைய படித்து வருகிறேன், அதன் தொடக்க நிலைச்சிந்தனையினை அறிய முடியாமல் இருந்தது. இதுவரை தேடியதில் பிற்காலத்தில் வைதீகமயமாக்கப்பட்ட புராணக் கலப்பே அதிகமாகக் கிடைத்தது. இந்த நூலில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள குறும்பர் பற்றி பேசும் இடத்தில் ஏழு பாட்டிமார் பற்றிய கருத்து காணப்பட்டது. இந்த நூலாசிரியரும் இதனை பழங்குடி இந்தியாவின் ஏழு தாயார் என்பதுடன் இணைத்துப் பேசுகிறார். சப்த கன்னிகளை இதனுடன் இணைத்துப் பார்த்து ஆய்வு செய்ய வேண்டும். புதிய வகையில் ஆய்வு செய்வதற்கு இது தொடக்கப் புள்ளியாக இருக்கிறது.
குறும்பர்களின் நடுகல் வழிபாடு சிறப்பானது, அதனை இந்நூலில் அதிகமாக இடம் பெற்றிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
மனிதனின் தொடக்கக் காலக் கலை என்றால் அது பாறை ஓவியம் தான். ஆறாவது கட்டுரை தொல்பழங்காலப் பாறை ஓவியங்களைப் பற்றியும் அந்த ஓவியங்கள் காணப்படும் இடங்கள் பற்றியும் விவரிக்கிறது.
பழங்குடிகளிடம் காணப்படும் கலை என்பது பயன்பாட்டிற்கானது என்று இந்நூலில் ஆசிரியர் சிறப்பாகச் சுட்டிக்காட்டுகிறார். கலை கலைக்கானதா? கலை பயன்பாட்டிற்கானதா? என்கிற கேள்வியே பழங்குடிகளிடம் எழுவதில்லை. அவர்களிடம் உள்ள அனைத்தும் பயன்பாட்டிற்கானதே. நிறுவன மதம் தோன்றாத நிலையில் கலை என்பது சமூகப் பயன்பாட்டிற்கானதாகவே இருக்கிறது. அதனால்தான் பழங்குடிகளிடம் காணப்படும் வழிபாட்டு முறைகளை நிறுவன மத வழிபாட்டுடன் இணைத்துப் பார்க்க முடிவதில்லை.
பழங்குடி என்பதற்கான வரையறை பல இருக்கின்றன, அனைத்தையும் உள்ளடக்கியதாக நூலாசிரியர் கூறுவதைப் பார்ப்போம். ”தமக்கு என்று குறிப்பிட்ட வாழ்விடப் பரப்பையும் பண்பாட்டையும் பேசு மொழியையும் கொண்ட ஒருபடித்தான எளிய சமூகத்தினதே பழங்குடி மக்கள்”.
இந்திய ஒன்றிய அரசு பழங்குடிக்கான 5 பண்பாட்டுக்கூறுகளைக் கூறுகிறது.
1. தொன்மைக் கூறுகள்
2. தனித்துவமான பண்பாடு
3. புவிப் பரப்பில் தனித்திருத்தல்.
4. பிற இனக்குழுவினருடன் பழகத் தயக்கம் காட்டுதல்
5. சமூகம், பொருளாதாரம் ஆகியவற்றில் பிற்பட்ட நிலைமை
பொதுச் சமூகத்தில் கலந்திடாமல் தனித்திருத்தலே பழங்குடிக்குரிய பண்பாகச் சுருக்கமாகப் புரிந்து கொள்ளலாம்.
ஒன்றிய அரசு குறிப்பிடுகிற பழங்குடிக்கான ஐந்து பண்பாட்டுக் கூறுகள் ஒருசேர நீலகிரி மலை வேடன் மக்களிடம் காணப்படுவதை இந் நூலாசிரியர் தமது களப்பணியில் கண்டிறிந்ததை இந் நூலில் பதிவு செய்துள்ளார்.
தமிழ்நாடு அரசு, மாநிலப் பழங்குடிப் பட்டியலில் 37 பழங்குடிக் குழுக்கள் காணப்படுகிறது. இதில் நரிக்குறவர்களும் அடக்கம்.
அடியேன், அரனடன், எரவல்லன், இருளர், கதர், கம்மாரா, கணிகரன், கணியன், கட்டு நாய்க்கன், கொச்சுவேலன், கொண்டா கபஸ், கோண்டா ரெட்டி, கோரகா, கோட்டா, குடியா, குறிச்சன், குரும்பா, குருமன்ஸ், மஹா மலசர், மலை அரையன், மலை பண்டாரம், மலை வேடன், மலைக்குரவன், மலாசர், மலையாளி, மலைகண்டி, மன்னன், முதுகர், முத்துவன், பல்லேயன், பள்ளியன், பள்ளியார், பணியன், சோளகர், தோடா, ஊராளி, நரிக்குறவன் இவைகளே அந்த 37 பழங்குடிகளின் பட்டியல்.
பட்டியலில் உள்ள நரிக்குறவர் போன்ற பழங்குடிகளைத் தவிர்த்த பல பழங்குடிகள் காடுகளிலும் காடுகளைச் சார்ந்தும் இயற்கையோடு இயைந்தும் இன்று வாழ்ந்து வருகின்றனர். இதனை நூலாசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.
“பல நூற்றாண்டுகளாக மலை, வனம் உள்ளிட்ட இயற்கைச் சூழல் நிரம்பிய இடங்களில் தமது மரபார்ந்த வாழ்விடங்களைக் கொண்டு, இயற்கையின் வழித்தோன்றல்களாக, இயற்கையிலிருந்து பிரிக்க இயலாத பண்பாட்டைக்கொண்ட சமூகத்தினராகப் பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். “காடுகளே எங்கள் தாய்; ஒரு தாயிடமிருந்து கிடைக்கக் கூடிய உணவு, பாதுகாப்பு, அரவணைப்பு, வளர்ச்சி, பொழுதுபோக்கு, எதிர்காலம் எல்லாமே எங்களுக்குக் காடுகளிலிருந்தே கிடைக்கின்றன; அதனால்தான் நாங்கள் அந்தத் தாய்க்கு எந்தச் சேதமும் ஏற்படுத்தாமல், அதனோடு இயைந்து வாழ்ந்து, எங்களின் நேரடிக் கண்காணிப்பிலும் அதை வைத்துக் காத்து வருகிறோம்” எனக் கொடைக்கானலை ஒட்டியுள்ள பழனி மலைப் பகுதியில் வாழும் பளியர் பழங்குடியினர் கூறும்போது இது மெய்ப்படக் காண்கிறோம்.”
(பக்கம்- 163)
37 பழங்குடிகளில் தொன்மையான தொதவர், கோத்தர், குறும்பர், இருளர், பணியன், காட்டு நாயகன் என்கிற ஆறு பழங்குடிக் குழுக்கள் நீலகிரி மாவட்டத்தில் மட்டுமே காண்கின்றனர். அதனால் இந்த மாவட்டத்தை தமிழ்நாட்டின் பழங்குடி மாவட்டம் என்று குறிப்பிடுகிறார் இந் நூலாசிரியர்.
களவைத் தொடர்ந்து கற்பு என்கிற சங்க காலத் திருமண வாழ்க்கை முறையைத் தொதவர், காடர் உள்ளிட்ட கொங்கு நாட்டில் இன்றும் பல்வேறு பழங்குடிகளினரிடம் காணப்படுவதை இந் நூலாசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.
சங்க கால வாழ்வியலைக் காட்டும் புலயன் இனக்குழுவரைவியல் என்கிற 29-வது தலைப்பில், புலயன் பழங்குடிகளிடமும் சங்க கால திருமண முறை காணப்படுகிறது.
"புலயன் இனக்குழுவினரிடையே கருத்தொருமித்த ஆணும் பெண்ணும் இணையராக அருகிலுள்ள காட்டுப் பகுதிக்குள் சென்று, தம்பெற்றோர் மற்றும் உற்றார்க்குத் தெரியாமல் (கரவாகக்) களவு வாழ்க்கையைப் பெரு வழக்காக மேற்கொள்கின்றனர். இவ்விணையரது இரு வீட்டாரும் காட்டுக்குள் சென்று அவ் விருவரையும் கண்டறிந்து, ஊருக்குள் திரும்ப அழைத்து வருவர். மருதம் பூ, கொஞ்சு உள்ளிட்டவற்றை மஞ்சள் நனைத்த சரட்டில் கட்டி உருவாக்கிய நாண் பெண்ணின் கழுத்தில் ஆடவனால் அணிவிக்கப்படுதன் வாயிலாக இவ்விருவரின் மண உறவானது இரு வீட்டாராலும் ஒட்டுமொத்தப் புலயன் இனக்குழுவினராலும் அறிந்தேற்பு செய்யப்படுகிறது. ...இத்தகைய உடன்போக்குத் திருமண முறையே புலயன் இனக்குழுவினரிடையே பெருவழக்காகக் கடைப்பிடிக்கப்படுகிறது."
(பக்கம்- 337)
29-வது பளியர் பழங்குயினர்: ஓர் இனக்குழுவரையில் பதிவு என்கிற தலைப்பில் பளியர் பழங்குகள் பற்றிச் சற்று விரிவாக இந் நூலாசிரியர் எழுதியுள்ளார். பளியர் பழங்குடிகள் பழுனி குன்றுகளில் வாழ்ந்து வருகின்றனர். மலைப் பளியர், பழனி மக்கள் என்னும் இரு வேறு அழைப்புப் பெயர்களையும் இப் பழகுடியினர் தமது இனக்குழுப் பெயராகக் கொண்டுள்ளனர்.
கறுப்பு நிறம், சுருட்டை முடி, தடித்த உதடுகள், சப்பை மூக்கு, அகன்ற மூக்குத் துளை, குட்டை உருவம் என்பது இவர்களின் உடல் தோற்றமாகும். பளியர் முன்பு மலை குகைகளில் வாழ்ந்தனர். இன்றைய அவர்களது குடியிருப்பு வளவு என்று பெயரால் அழைக்கப்படுகிறது.
ஒவ்வொரு வளவுகளும் மரங்களுக்கு இடையே அமைந்துள்ளது, ஒரு வளவுக்கும் மற்றொரு வளவுக்கும் இடைவெளி 5 முதல் 10 கிமீ. தொலைவில் காணப்படுகிறது. “மந்தெ” என்கிற பொது இடத்தில் பழங்குடி வழிபாடு, ஊர்ப் பஞ்சாயத்து நடைபெறுகிறது. பளியர் பஞ்சாயத்தில் சமூகக் கட்டுப்பாடுகள் உருவாக்கப்படுகிறது. பளியர்களிடம் தோன்றும் பிரச்சினைகள் இங்கேதான் தீர்க்கப்படுகிறது. பஞசாயத்தாரின் தீர்ப்பை ஏற்காதவர்கள் கூட்டத்தில் இருந்து பிரிந்து வேறிடம் சென்றுவிடுகின்றனர்.
சிறு காட்டு விலங்குகளை வேட்டையாடுதல், தேன் திரட்டுதல், மீன் பிடித்தல், சிறிய அளவு வேளாண்மை செய்தல், மண்ணில் இருந்து கிழங்குகளைத் தோண்டி எடுத்தல் போன்றவைகள் மூலமாகப் பளியர்கள் தங்களது உணவுத் தேவையை நிறைவு செய்கின்றனர். உணவைத் தேடும் போது சகுனம் பார்க்கும் பழக்கம் இவர்களிடம் காணப்படுகிறது.
ஆணும் பெண்ணும் உடன்போக்காகக் காட்டுக்குள் சென்று, இணைந்து இணையராகக் களவு வாழ்வின் மூலம் வாழ்க்கையைத் தொடங்குகின்றனர். இரு வீட்டுப் பெரியோர்களும் கலந்து பேசி உறுதிசெய்து நடத்தும் திருமண முறையையும் பளியர்கள் பின்பற்றுகின்றனர்.
கணவனை இழந்த பெண்கள் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு மறுமணம் செய்து கொள்கின்றனர். இதுபோலவே மனைவியின் இழப்புக்குப் பிறகு கணவனும் மறுமணம் செய்து வாழ்கின்றனர்.
பழங்குடிகளிடம் காணப்படும் வழிபாட்டு முறையினை நிறுவன சமயமாகக் கருத முடியாது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். பளிச்சம்மன் என்பது பளியர்களின் முதன்மை தெய்வமாகும். இது தவிரப் பூதநாச்சி, சட்டச்சியம்மன், வடக்கத்தியம்மன், தெக்கத்தியம்மன் போன்ற பெண் தெய்வங்களையும், சடயன், மொட்டையன், மூக்கணக் கருப்பன் போன்ற ஆண் தெய்வங்களையும் வணங்குகின்றனர்.
இறப்பு நிகழ்ந்தால் அந்தச் செய்தியை ஈட்டி ஏந்தியவாறு அருகில் உள்ள பிற குடியிருப்புகளுக்குச் சென்று தெரிவிக்கின்றனர். பச்சை மரத்தில் பாடையைக் கட்டுகின்றனர், உட்கார்ந்த நிலையிலேயே பிணதை பளியர்கள் புதைக்கின்றனர்.
உணவுச் சங்கிலித் தொடரின் ஒரு கண்ணியைக்கூடச் சிறிதளவும் சிதைக்காமல், மிகுந்த சூழலியல் விழிப்புணர்வுடன பளியர்கள் செயல்படுகின்றனர். காடுகளுக்குள் செல்லும் போது மரங்கள், செடி கொடிகள் போன்றவற்றை வெட்டி வழியமைத்துச் செல்லாமல், புதருக்குள் நுழைந்தும், அமர்ந்தும், ஊர்ந்தும் செல்கின்றனர். இது அவர்களின் சூழலியல் விழிப்புணர்வுக்கு மற்றொரு சான்று என்கிறார் இந்நூலாசிரியர்.
பளியர் பழங்குடியினரின் காடு பற்றிய கருத்தை ஓர் ஒப்புதல் வாங்குமூலமாக இந் நூலாசிரியர் பதிவு செய்துள்ளார்.
“காடுகளே எங்கள் தாய், ஒரு தாயிடமிருந்து கிடைக்கக்கூடிய உணவு, பாதுகாப்பு, அரவணைப்பு, வளர்ச்சி, பொழுதுபோக்கு, எதிர்காலம் எல்லாமே எங்களுக்குக் காடுகளிடமிருந்து கிடைக்கிறது; அதனால்தான், நாங்கள் அந்தத் தாயைச் சேதப்படுத்தாமல் உண்டு, வாழ்ந்து, கண்ணுக்குக் கண்ணாகக் காத்து வருகிறோம்."
(பக்கம்-276)
காடுகளில் பல ஆண்டுகளாக இயற்கையோடு இயைந்து வாழும் பழங்குடிகளால் காட்டிற்கு என்றும் ஆபத்து நேர்வதில்லை, அதாவது அழிவு ஏற்படுவதில்லை. காட்டில் காணப்படும் மரங்களுக்கோ, விலங்குகளுக்கோ பழங்குடிகளால் பாதிப்பு ஏற்பட்டதில்லை என்பதே உண்மை ஆகும். இயற்கையையோ விலங்கையோ பழங்குடிகள் தமக்கு எதிரானதாகக் கருதவில்லை அதனால் அவர்கள் அதனைப் பேணிக் காக்கவே செய்கின்றனர்.
பழங்குடி இல்லாத மக்களால்தான் காட்டு மரங்களுக்கும் விலங்குகளுக்கும் அழிவு ஏற்படுகிறது. பழங்குடிகள் தங்கள் சிறிய தேவைக்கே காட்டைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் பழங்குடியல்லாத மக்கள் காட்டையும் விலங்கையும் சந்தை நோக்கிய விற்பனைக்குப் பயன்படுத்துவதால், அளவின் எல்லையில்லாது காட்டு மரங்களையும் விலங்கையும் அழிக்கின்றனர். காட்டோடு இயற்கையில் இயைந்து வாழும் பழங்குடிகளால் காட்டிற்கு எந்த ஆபத்து நேராது, பழங்குடி அல்லாதாவர்களால் தான் காட்டிற்கு ஆபத்து. உலகில் உள்ள காடுகளின் பரப்பளவு சுருங்குவதற்கு பழங்குடிகள் எந்த வகையிலும் காரணமாவதில்லை. பழங்குடிகள் இருக்கும் இடங்களில் காட்டு வளம் காக்கப்படுகிறது. பொது நீரோட்டத்தில் இருப்பவர்கள் காட்டுக்குள் நுழையும் போதுதான் காடுகள் அழிக்கப்படுகிறது.
இன்று நாட்டில் நாகரிகமாக வாழ்கிற அனைத்து மக்களின் முன்னோர்களும் காடுகளில் பழங்குடிகளாக ஒரு காலத்தில் இருந்தவர்கள்தான். அந்த நிலையில் இருந்துதான் இன்றைய நிலைக்கு மாறியுள்ளனர். ஆனால் அன்றைய பழங்குடிக்கும் இன்றைய பழங்குடிக்கும் நிறைய வேறுபாடு காணப்படுகிறது. அன்றைய பழங்குடிகள் நாகரிகத்தைப் பார்த்திடாத பழங்குடிகள், இன்றைய பழங்குடிகள் பொதுவாக நாகரிகத்தைப் பார்த்தும் அதனை ஏற்காத பழங்குடிகள். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் பழங்குடிகளாகத் தொடர்வதையே விரும்புபவர்கள் இன்றைய பழங்குடிகள்.
காட்டையோ, காட்டைச் சார்ந்தோ வாழாத நரிகுறவர் போன்ற பழங்குடிகள் நாகரிக மக்களிடையே வாழ்ந்தாலும் தங்களது பழங்குடிப் பண்பை முடிந்த அளவுக்கு மாறாது பேணி காக்கின்றனர். அதே நேரத்தில் காடுகளிலும் காட்டைச் சார்ந்தும் வாழும் இன்றைய பழங்குடிகளும் அதே நிலையில் தொடர முடியாத நிலையில் இருக்கின்றனர். இதனை நூலாசிரியர் கூறுவதைப் பார்ப்போம்.
"...'திட்டவட்டப் பழங்குடி நிலை'யில் (Ideal_Tribal Pole) எந்தப் பழங்குடியினரும் இல்லை என்கிற உண்மை நிலையே இன்று நிலவக் காண்கிறோம். சிற்சிலப் பழங்குடியினர் திட்டவட்டப் பழங்குடியினர் நிலை என்ற நிலைப்பாட்டிலிருந்து சற்று நகர்ந்து, 'திட்டவட்ட நாட்டுப்புற நிலை' (Ideal_Folk Pole) என்கிற நிலைப்பாட்டை நோக்கிச் சற்று நகரத் தொடங்கியுள்ளமையும் மாறாகச் சில பழங்குடியினர் திட்டவட்டப் பழங்குடியினர் நிலையிலிருந்து வெகுவாக நகர்ந்து திட்டவட்ட நாட்டுப்புற நிலை என்ற நிலைப்பாட்டை நெருங்கி வருவதையும் இன்னும் சில பழங்குடியினர் சற்றேறக்குறைய திட்டவட்ட நாட்டுப்புற நிலை என்கிற நிலைப்பாட்டை நெருங்கிவிட்டமையும் கூர்ந்தாய்வின்போது புலப்படக் காண்கிறோம்"
(பக்கம் – 188-189)
பழங்குடிகள் பொது நீரோட்டத்தில் இருந்து விலகி, காடுகளில் தங்களது புழங்கு நிலப்பகுதியில் இருந்து புலம்பெயர வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இந்தப் புலப்பெயர்வுக்குப் புற-அக காரணங்கள் இருக்கிறது.
அணைக்கட்டுகள், சுரங்கங்கள், பாதுகாவல் திட்டப் பணிகள், வன உயிர் வாழ்விடங்கள், மின்னுற்பத்தி நிலையங்கள் போன்றவைகளை அமைப்பதற்காகப் பல ஆண்டுகளாக வாழ்ந்துவந்த இடத்தில் இருந்து பழங்குடிகள் புலம்பெயர நேர்கிறது. இது புலம்பெயர்வதற்கான புறக்காரணங்களாகும்.
அகக் காரணங்கள் என்பது காட்டுப் பகுதியில் அல்லது காட்டைச் சார்ந்த பகுதியில் பழங்குடிகள் தொடர்ந்து வாழமுடியாமல் தாங்களாகவே இடம் பெயர்தலாகும். காட்டில் வாழும் விலங்குகளை வேட்டையாடுவதை வனப் பாதுகாப்புச் சட்டங்கள் தடை செய்துள்ளது அதனால் பழங்குடிகள் அந்தயிடத்தில் பழையபடியாக வாழ்வதற்கு வழியில்லாது போகிறது. பிழைப்பிற்காக அருகில் உள்ள ஊர்களுக்கு, கூலி வேலை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். உணவு சேகரிக்கும் நிலையில் இருந்து கூலியாகப் பணம் பெற்று, அதன் மூலம் வாழ்க்கைத் தேவைகளை நிறைவு செய்யும் போது இயல்பான பழங்குடி வாழ்க்கை படிப்படியாக மறைந்து போகிறது.
பல்வேறு பழங்குடிகள் இன்று தங்களது குடியிருப்பில் பகல் நேரத்தில் எவரும் இருப்பதில்லை, வேலை நிமித்தமாக வெளியிடங்களுக்குச் சென்றுவிடுகின்றனர். இந்த நிலை தொடரும் போது வேலை செய்யும் இடத்தை நோக்கி தள்ளப்படுகிறார்கள். இந்த இடப்பெயர்வு என்பது புலம்பெயர்வதற்கான அகக் காரணங்களாகும்.
குறைவான, நிறைவான, தன்னிறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த பழங்குடியினர் பொது நீரோட்டத்தில் கலக்கும் போது விளிம்புநிலைக்குத் தள்ளப்படுகின்றனர். நிறைவான எளிமையான வாழ்க்கை வாழ்ந்த பழங்குடியினர் குறைந்தபட்சக் கூலிகூடக் கிடைக்காமல், தங்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்ய முடியாமல் விளிம்புநிலைக்கு ஆளாகின்றனர். இதைப் பற்றி நூலாசிரியர் கூறுவதைப் பார்ப்போம்.
"வனம், மலை, பள்ளத்தாக்கு என எளிதில் நெருங்கவியலாச் சூழல்களில் காலங்காலமாக வாழ்ந்து வரும் பழங்குடியினர் உள்ளிட்ட மண்ணின் மைந்தர்கள் தங்களுடைய மரபார்ந்த வாழ்விடங்கள் மற்றும் பண்பாட்டுத் தளங்களை விட்டு வலிந்து புலப்பெயர்ச்சி செய்யப்பட்டு, மேல்தட்டு மற்றும் அதிகார வர்க்கத்தினரால் வாழ்வியல் நிலையின் விளிம்புநிலைக்கு விரட்டியடிக்கப்படுவது 'விளிம்புநிலையாக்கம்' (Marginalization) எனச் சமூக அறிவியலாளர்களால் சுட்டிக்காட்டப்படுகிறது"
(பக்கம் – 189)
எளிய தன்னிறைவு வாழ்க்கை வாழ்ந்த பழங்குடிகள் புலம்பெயர்ந்ததன் மூலம் விளிம்புநிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் என்பதே உண்மை நிலையாக இருக்கிறது.
ஏற்றத்தாழ்வான சமூகமாகக் காணப்படும் பொது நீரோட்டத்தில் பழங்குடிகள் நுழைவதால், அவர்களது நிலையினை உயர்த்துவதற்கான பணியினையும் இந்தச் சமூகமும் அரசாங்கமும் செய்ய வேண்டியிருக்கிறது. பழங்குடிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டுமானால், அவர்களை முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும். இன்றைய நிலையில் அவர்களின் தேவையை உணர்ந்து நிறைவேற்ற வேண்டும். அதற்கு அவர்களைப் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களைப் புரிந்து கொள்வதற்கு ஒவ்வொரு பழங்குடி குழுக்களையும் இனக்குழுவரைவியல் செய்ய வேண்டியிருக்கிறது.
இந்நூலாசிரியர் பல்வேறு பழங்குடிகளின் இனக்குழுவரைவியலை நூலில் செய்துள்ளார்.
வரலாற்றைப் பின்னோக்கி எடுத்துச் செல்ல முடியாது, அதனால் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்ட பழங்குடிகளின் விடுதலைக்கு அதாவது விடிவுக்கு நாம்தாம் உதவிட வேண்டும். அரசாங்கம் மட்டுமல்லாது, சமூக அக்கறை கொண்ட முற்போக்காளர்கள் பழங்குடிகளின் விடுதலைக்கும் சேர்த்துப் பாடுபட வேண்டும்.
அ.கா.ஈஸ்வரன்
9884092972
(இந்த நூல் அறிமுகம் புதிய புத்தகம் பேசுது அக்டோபர் 2025 இதழில் வெளிவந்தது)
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு