மத்திய கிழக்கில் பிராந்திய அளவிலான போர் அபாயம்: ஏகாதிபத்தியங்களின் மறுபங்கீட்டுப் போருக்கு பலியிடப்படும் பாலஸ்தீன விடுதலைப் போராட்டம்
சமரன் சிறப்புக் கட்டுரை
இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மீது அரை நூற்றாண்டிற்கும் மேலாக இன அழிப்புப் போரை நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி முதல் காசா மீது முழு யுத்தம் என அறிவித்து தனது நரவேட்டையைத் தொடர்ந்து வருகிறது நெதன்யாகு அரசு. தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்களை கொன்று குவித்து வருகிறது. இந்த ஓராண்டில் காசாவில் மட்டும், சுமார் 50,000 பேர் நேரடி இராணுவத் தாக்குதலாலும் சுமார் 1,50,000 பேர் போதிய மருத்துவ உதவி, உணவு இன்றி மறைமுகமாகவும் என சுமார் 2 லட்சம் பேர் இந்த ஓராண்டிற்குள் மட்டும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் 75% சதவிகிதத்திற்கும் மேற்பட்டோர் குழந்தைகளும் பெண்களும் ஆவர். காசாவின் எண்ணெய் – எரிவாயு இருப்புகள் பச்சிளம் குழந்தைகளின் இரத்தத்தால் காவு கொடுக்கப்பட்டு கொள்ளையடிக்கப்படுகின்றன. பாலஸ்தீனத்தின் மீதான இன அழிப்புப் போரை அமெரிக்க – நேட்டோ முகாம்களின் நலன்களிலிருந்து ஒரு வேட்டை நாயாக இஸ்ரேல் நடத்துகிறது. இதற்கு சீன-ரஷ்ய முகாம் தங்களது அரசியல்-பொருளாதார நலன்களிலிருந்து மறைமுகமாக ஆதரவளித்து வருகிறது.
பாலஸ்தீனத்தின் காசாவை மையப்படுத்தி துவங்கிய இந்த பனிப்போர் இன்று மத்திய கிழக்குப் பிராந்திய அளவிலான போராக மாறும் அபாயத்தை எட்டியுள்ளது.
ரஃபா முகாம் மீது தாக்குதல்
மே-26 அன்று ரஃபா நகரின் தல்-அஸ்-சுல்தான் பகுதியில் உள்ள பாதுகாப்பு முகாமில் இஸ்ரேல் தாக்குதல் தொடுத்தது. அத்தாக்குதலானது உலகின் அனைத்து கண்களும் ரஃபாவை நோக்கி என உலக அளவில் பேசுபொருளானதோடு இஸ்ரேலின் இன அழிப்புப் போருக்கு எதிரான உலக மக்களின் குரலாக அது எதிரொலித்தது.
ரஃபா மீது இஸ்ரேல் தாக்குதல் தொடக்கக் கூடாது என சர்வதேச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் அலட்சியம் செய்து ரஃபா மீது யுத்த வெறிக்கொண்டு தாக்குதல் தொடுத்தது இஸ்ரேல் அரசு. ஹமாசுக்கும் இஸ்ரேல் இராணுவத்திற்கு யுத்தம் நடந்து வருவதால், காசா வாழ் குடிமக்களை ரஃபாவில் உள்ள பாதுகாப்பு முகாமில் குடியேற்றியது ஐ.நா. இந்த பாதுகாப்பு முகாமிலும்கூட நரவேட்டையாடியது இஸ்ரேல் அரசு. அச்சம்பவத்தில், ஒரு தந்தை தலை துண்டிக்கப்பட்ட தனது பச்சிளம் குழந்தையின் உடலை கையில் ஏந்தி கதறி ஓடிய காட்சி நம் அனைவரின் ஈரக்குலையையும் நடுங்க வைத்தது. காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைகூட பெற முடியாத அளவிற்கு திட்டமிட்டு மருத்துவமனைகளையும் தாக்குதல் தொடுத்து சிதைத்தது இந்த இனவெறி அரசு.
ஹமாசின் தலைவர்கள் படுகொலை
ஜூலை 13 அன்று ஹமாசின் இராணுவ தளபதியான முகமது டெய்ப் இஸ்ரேல் அரசால் படுகொலை செய்யப்பட்டார். தெற்கு காசாவில் நடத்திய வான்வழித் தாக்குதலில் அவரை கொன்றது. அவருடன் சேர்த்து 100க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்களையும் அத்தாக்குதலில் கொன்று குவித்தது.
ஜூலை 31ல் ஹமாசின் அரசியல் பிரிவு தலைவரான இஸ்மாயில் ஹனேவை கொன்றது. ஈரானின் புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க தெஹ்ரான் சென்றிருந்தார். அவர் தங்கியிருந்த விருந்தினர் குடியிருப்பில் திட்டமிட்டு வெடிகுண்டை வீசி கொன்றது இஸ்ரேல் அரசு.
ஹனேவைத் தொடர்ந்து அடுத்த அரசியல் பிரிவு தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட யாஹ்யா சின்வரை அக்டோபர் 16 அன்று கொன்றது. காசாவின் ரஃபா நகரில் வைத்து அவரை கொடூரமாக சுட்டுக் கொன்றதோடு அவரின் விரலை வெட்டியெடுத்தும், பற்களை பிடுங்கியெடுத்தும் சென்று டிஎன்ஏ ஆய்வு செய்து அவரது இறப்பை உறுதி செய்து கொண்டது இந்த கொடூர அரசு.
ஹமாசின் விடுதலைப் போராட்டத்தை முடக்க அதன் முக்கிய தலைவர்களான இவர்கள் மூவரையும் இலக்கு வைத்து கொன்றுள்ளது இனவெறி அரசு. ஆனாலும் ஹமாஸ் தனது போராட்டத்தை விட்டுவிடாமல் தொடர்ந்து இஸ்ரேலின் இன அழிப்பு யுத்தத்திற்கு எதிராக போராடி வருகிறது.
ஊடகவியலாளர்கள் படுகொலை, பொதுமக்கள் மீது தொடரும் தாக்குதல்
பத்திரிக்கையாளர்கள், கேமராமேன்கள் உள்ளிட்ட சுமார் 150 ஊடகவியலாளர்களை குறிவைத்து கொன்றுள்ளது. 120க்கும் மேற்பட்ட பணயக் கைதிகளை சித்திரவதை செய்தே கொன்றுள்ளது. பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், பாதுகாப்பு என்று கருதப்பட்ட அகதி முகாம்கள் என அனைத்து இடங்களையும் குண்டுமழை பொழிந்து சிதைத்து சின்னாபின்னமாக்கியது. இஸ்ரேலுக்கு எதிராக போராடி வரும் ஹமாஸ் இயக்கத்தினரின் உறவினர்களை முகாம்களில் இருந்து வெளியேற்றவும் அவர்களை தேடித் தேடி கொல்லவும் தீர்மானித்து வேட்டையாடுகிறது. இதற்கு இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் சிறப்பு அவசர சட்டத்தையும் கொண்டுவந்து இனப்படுகொலையை சட்டபூர்வமாக்கியுள்ளது இரத்தவெறி கொண்ட நெதன்யாகு அரசு. மேற்குக் கரையில் இஸ்ரேல் அரசுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களின் வீடுகளை இடித்து தரைமட்டமாக்கி அவர்களை அகதிகளாக்கி வருகிறது.
ஹிஸ்புல்லா தலைவர்கள் -லெபனான் மக்கள் படுகொலையும் எதிர்த்தாக்குதலும்
ஹமாசுக்கு ஆதரவாக லெபனானின் ஆயுதம்தாங்கிய அமைப்பான ஹிஸ்புல்லாவும் இஸ்ரேலுடன் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. இஸ்ரேல் ஆக்கிரமித்திருக்கும் கோலன் குன்றுகள் பகுதியிலிருந்து வெளியேற வலியுறுத்தும் விதமாகவும் தாக்குதலை தொடுத்து வந்தது ஹிஸ்புல்லா. பழிவாங்கும் வகையில், ஜூலை 30ல் லெபனான் பெய்ரூட்டில் வான்வழித் தாக்குதல் தொடுத்தது இஸ்ரேல். அதில் ஹிஸ்புல்லா அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான பவுத் ஷூகர் கொல்லப்பட்டார். அந்த நிகழ்வுக்கு பிறகு ஹிஸ்புல்லா இஸ்ரேலுக்கு இடையிலான தாக்குதல்கள் அதிகரிக்கத் தொடங்கியது. ஆகஸ்ட் 25ல் 320க்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை இஸ்ரேலின் இராணுவ தளங்கள் மீது ஏவியது ஹிஸ்புல்லா. அதுவரை ஹமாசை மையப்படுத்தி தாக்குதல் தொடுத்து வந்த இஸ்ரேல், தனது தாக்குதல் முனையை ஹிஸ்புல்லாவை நோக்கி திருப்பியது.
செப்டம்பர் 17 – 18 தேதிகளில் அடுத்தடுத்து பேஜர் மற்றும் வாக்கி டாக்கிகளை வெடிக்க வைத்து லெபனானில் பதட்ட சூழலை உருவாக்கியது இஸ்ரேல். உளவுத் துறை கண்காணிப்பில் சிக்கிக்கொள்ளாமல் இயங்குவதற்காக ஹிஸ்புல்லா அமைப்பின் அனைத்து பிரிவினரும் பேஜர் மற்றும் வாக்கி டாக்கிகளை பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவற்றில் பயன்படுத்தப்படும் பேட்டரிகளில் அதை உற்பத்தி செய்த அந்நிய நாட்டு நிறுவனத்துடன் கூட்டுச் சேர்ந்து வெடிமருந்தை முன்கூட்டியே திட்டமிட்டு நிரப்பியதாகவும், குறிப்பிட்ட நாளில் ஒரே நேரத்தில் அனைத்தையும் வெடிக்க செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் ஹிஸ்புல்லா அமைப்பினர், பொதுமக்கள், மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட சுமார் 100 பேர் கொல்லப்பட்டதுடன் 3000க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். சர்வதேச யுத்த விதிமுறைகளை கொஞ்சம் கூட மதிக்காமல் நயவஞ்சகமாக திட்டமிட்டு அப்பாவி மக்களையும் சேர்த்து இந்த கொடூரத் தாக்குதலில் கொன்றுள்ளது இஸ்ரேல்.
செப்டம்பர் 27 ல் பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லாவின் தலைமையகத்தில் உள்ள பாதாள பதுங்கு அறையில் ரகசிய கூட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தது. மோப்பம் பிடித்த இஸ்ரேல் அரசு 2000 பவுண்டு எடையுள்ள பங்கர் தகர்ப்பு குண்டுகள் உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட வெடுகுண்டுகளை அதன் மீது வீசியது. அந்த தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் பொதுச் செயலாளர் ஹசன் நஸ்ரல்லா, இஸ்லாமிய புரட்சி காவல் படையின் (ஐ.ஆர்.ஜி.சி - IRGC) தளபதி, குத்ஸ் படையின் தளபதி, ஹிஸ்புல்லாவின் தளபதி, அக்கம்பக்கத்தில் இருந்த பொதுமக்கள் உள்ளிட்ட 35 பேர் கொல்லப்பட்டதோடு 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அதைத் தொடர்ந்து புதியதாக ஹிஸ்புல்லா அமைப்புக்கு தலைமைத் தாங்க முன்வந்த ஹசீம் சஃபீதீன் என்பவரையும் பெய்ரூட்டின் புறநகர் பகுதியில் வைத்து அதேமுறையில் படுகொலை செய்தது.
சிரியாவிலும் ஹிஸ்புல்லா, மற்றும் ஐ.ஆர்.ஜி.சி படையினரை குறிவைத்து தனது தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது இஸ்ரேல். சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ், மெஸ்லா நகரில் உள்ள ஈரான் தூதரகத்தின் மீதும் கூட தனது தாக்குதலைத் தொடுத்து வந்தது.
இந்த ஓராண்டில் மட்டும் லெபனான் மற்றும் சிரியாவில் சுமார் 5000 படை வீரர்களையும் பொதுமக்களையும் கொன்று குவித்துள்ளது இஸ்ரேல் அரசு. சுமார் 15000 மக்கள் படுகாயமடைந்துள்ளனர். 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர்.
மறுபக்கம் ஹிஸ்புல்லாவும் இஸ்ரேல் மீது தன் சக்திக்கேற்றார்போல் எதிர்த்தாக்குதல் தொடுத்து வருகிறது. அக்டோபர் 21ல் நெதன்யாகுவை குறிவைத்து அவரது வீட்டில் டிரோன் தாக்குதல் நடத்தியது. அதில் நெதன்யாகு தப்பிவிட்டார்.
இஸ்ரேல் அரசு காசா, மேற்குக்கரை, லெபனான், சிரியா மட்டுமல்லாமல் ஏமனிலும் ஹௌதிப் படைகளை குறிவைத்து தாக்குதலை நடத்தி வருகிறது. ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஐ.ஆர்.ஜி.சி, ஹௌதி உள்ளிட்ட ஆயுதந்தாங்கிய அமைப்புகளும் நாலாபுறமும் இஸ்ரேலை தாக்கி வருகின்றன. இந்நிலையில்தான் தற்போது ஈரானும் இஸ்ரேலுக்கு எதிராக களத்தில் வந்துள்ளது.
இஸ்ரேல் – ஈரான் இடையே மோதல்கள்
ஹமாசின் அரசியல் தலைவர் ஹனே ஈரானில் வைத்து இஸ்ரேலால் கொல்லப்பட்டது; சிரியாவின் ஈரான் தூதரகம் தாக்கப்பட்டது; ஈரான் ஆதரவுப் படைகளான ஐ.ஆர்.ஜி.சி, ஹிஸ்புல்லா மீதான இஸ்ரேல் அரசின் தொடர் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தாண்டு அக்டோபர் 1ம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் தொடுத்தது ஈரான். 200க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகனைகளை வீசியது. இவை இஸ்ரேலின் இராணுவ முகாம்கள், நெவடிம் மற்றும் டெல் நோஃப் விமானப்படை தளங்கள், இஸ்ரேலின் உளவுத்துறையான மொசாட்டின் தலைமையகம் ஆகியவற்றை குறிவைத்து ஏவப்பட்டன.
இஸ்ரேலின் வான்மண்டலம் ஏவுகனை தடுப்புகளால் மூடப்பட்டுள்ளது. எந்த ஏவுகனைகளும் இஸ்ரேலைத் தாக்க முடியாது என்ற கட்டுக் கதைகள் தவிடுபொடியாக்கப்பட்டன. அமெரிக்கா சப்ளை செய்திருந்த தாட் (Thaad) எனும் அதி நவீன ஏவுகனைத் தடுப்பு அமைப்பும் ஈரானின் தாக்குதலில் சீர்குலைந்தது. ஈரானின் இந்தத் தாக்குதல் அதன் ஆதரவுப் படைகளுக்கு உத்வேகம் கொடுத்ததோடு இஸ்ரேலுக்கு பின்வாங்கலையும் ஏற்படுத்தியது; இஸ்ரேல் ஈரான் மீது பதில் தாக்குதல் தொடுக்க 25 நாட்களுக்கும் மேல் எடுத்துக் கொண்டது. ஈரானின் அணுநிலையங்கள், எண்ணெய் –எரிவாயு வயல்கள், இராணுவத் தளங்கள், ஆயுத தளவாட உற்பத்தி மையங்கள் உள்ளிட்ட மிகப்பெரிய பட்டியல் இட்டு அவற்றை தாக்குதல் இலக்காக வெளியிட்ட இஸ்ரேல், அமெரிக்காவின் தலையீட்டின் காரணமாக அதிலிருந்து பின்வாங்கியது; அக்டோபர் 26 அன்று ஈரானின் இராணுவத் தளங்களில் அதன் வான் எல்லைகளை கடந்து 100 போர் விமானங்கள் மூலம் தாக்குதல் தொடுத்தது. அந்த தாக்குதலுடன் தங்களது பதில் தாக்குதல் முற்றுப்பெற்றுவிட்டதாகவும் அறிவிப்பு வெளியிட்டது இஸ்ரேல் அரசு.
ஈரானின் அணுநிலையங்கள் மீது தாக்குதல் தொடுக்க வேண்டாம் என அமெரிக்கா வலியுறுத்தியது, ஏன்?
இஸ்ரேல் ஈரானை பதில் தாக்குதல் தொடுக்கும்போது, ஈரானில் அமைந்துள்ள அணு நிலையங்கள், எண்ணெய் எரிவாயு வயல்களின் மீது குறிவைப்பதை நாங்கள் ஆதரிக்கப்போவதில்லை. அதைத் தாண்டி இஸ்ரேல் முடிவு செய்தால் அது அவர்களின் விருப்பம்; அது அவர்களின் இறையாண்மை சம்பத்தப்பட்ட விசயம் எனக் கூறி பைடன் அரசு கைக் கழுவுவது போல பேசியது. ஏனெனில் ஈரானில் அவ்விரு துறைகளும் சீனாவின் கட்டுப்பாட்டில் இயங்கி வருவதே காரணம். அணு ஆற்றல் ஒப்பந்தம் மூலம் சீனா, ஈரானின் அணு நிலையங்களை தனது கட்டுப்பாட்டில் இயக்கி வருகிறது. சிஎன்பிசி (CNPC), சினோபெக் குழுமம் (Sinopec groups) ஆகியவை எண்ணெய் –எரிவாயுத் திட்டங்களில் முதலீடு செய்து இயக்கி வருகின்றன. சூஹாய் ஷென்ரோங் கார்ப்பரேசன் (Zhuhai Zhenrong corporation) எனும் சீன நிறுவனம் 25 ஆண்டுகளுக்கு இயற்கை எரிவாயு வயல்களை (LNG fields) குத்தகைக்கும் எடுத்து நடத்தி வருகிறது; இவை மூன்றும் சேர்ந்து 280பில்லியன் டாலருக்கும் மேற்பட்ட முதலீட்டுடன் 1 பில்லியன் டன் எடைக்கும் மேற்பட்ட இயற்கை எரிவாயுவை எடுக்க ஈரான் எல்.என்.ஜி. நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளன; இவை 25க்கும் மேற்பட்ட எண்ணெய் –எரிவாயு வயல்களை இயக்கி வருகின்றன. எனவேதான் இத்தகைய இலக்குகள் மீதான தாக்குதலை கைவிடுமாறு பைடன் அரசு நெதன்யாகு அரசை வலியுறுத்தியது. சீனாவின் இந்த தளங்களின் மீது தாக்குதல் தொடுத்தால், அது சீனாவையும் நேரடியான ஓர் யுத்தத்திற்கு இழுத்துவிடும் அபாயம் உள்ளது என்பதை உணர்ந்த பைடன் அரசு இதை தவிர்த்துக் கொள்ள இஸ்ரேலுக்கு வழிகாட்டியது.
ஆனால், தேர்தல் பிரச்சாரத்தின் போது டிரம்ப் கும்பல், பைடன் அரசு சீனாவுக்கு பயந்து பின்வாங்கி தவறிழைத்து விட்டது; நாங்கள் ஆட்சியில் இருந்திருந்தால் ஈரானின் அணு நிலையங்களை, எண்ணெய் எரிவாயு வயல்களையும் தாக்குவதற்கு ஆதரவளித்து இருப்பேன். இஸ்ரேலுக்கு உறுதுணையாக இருந்திருப்பேன் என்று வாய்ச்சவாடால் அடித்தது. தற்போது டிரம்ப் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டார். இப்போது அந்த வாய்ச்சவடாலை நிறைவேற்றுவாரா என்பது சந்தேகம்தான். ஏனெனில், அமெரிக்கா பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நேரடி இராணுவத் தாக்குதல்களை தவிர்த்து வருகிறது; ஆப்கானில் இருந்து அது பின்வாங்கி வெளியேறவும் அது ஒரு காரணமே. மேலும் சீனா - ரஷ்யா – ஈரான் கூட்டணியின் இராணுவ மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக ஒரு நேரடி ஏகாதிபத்தியப் போரை அமெரிக்கா தவிர்க்க விரும்புகிறது. தொடர்ந்து அப்பிராந்தியத்தில் இஸ்ரேலை கருவியாகக் கொண்டு மறைமுகப் போரையே அமெரிக்கா நடத்த விரும்புகிறது. டிரம்ப் சமீபத்தில் வெளியிட்ட அதன் கொள்கை முடிவுகளும் அமெரிக்காவின் மேற்கண்ட நிலைபாட்டை உறுதிப்படுத்துவதாகவே உள்ளது. சீன- ரஷ்ய முகாமுடன் நேரடி யுத்தத் தாக்குதலில் ஈடுபடுவதற்குப் பதிலாக அந்நாடுகளின் பொருட்களுக்கு வரியை அதிகரிப்பதன் மூலம் அவற்றைக் கட்டுப்படுத்த முயலும் என்று பேசி வருகிறது டிரம்ப் கும்பல்.
பொருளாதார நெருக்கடியில் இஸ்ரேல்
இஸ்ரேலின் பொருளாதாராம் இராணுவப் பொருளாதாரமாக மாற்றியமைக்கப்பட்டதை அடுத்து அது மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. 2022ம் ஆண்டில் 6.7% சதவிகிதமாக இருந்த இஸ்ரேலின் பொருளாதாரம் கடந்த ஆண்டில் துவங்கிய பாலஸ்தீனத்தின் மீதான இன அழிப்புப் போருக்கு பின்பு தொடர்ச்சியாக சரிவை சந்தித்து வருகிறது. சென்ற நிதியாண்டில் அதன் பொருளாதாரம் 2% சதவிகிதமாக வீழ்ச்சியடைந்தது. நடப்பாண்டில் அது மேலும் சரிந்து 0.3% சதவிகிதத்திற்கும் குறைவாக வீழ்ந்தது. நடந்து வரும் யுத்தத்தில் மட்டும் சுமார் 67 பில்லியன் டாலர் நிதிகளை வீணடித்து வருகிறது. இது இஸ்ரேலின் மொத்த ஜிடிபியில் 13% சதவிகிதத்திற்கும் அதிகமாகும். அதே போல் அரசு நிர்வாக செலவுகள் இரு மடங்காக மாறியுள்ளது. போருக்கு முன்பாக ஜிடிபியில் 4% சதவிகிதமாக இருந்த நிர்வாகச் செலவு தற்போது 8% சதவிகிதமாக அதிகரித்துள்ளது. ஹிஸ்புல்லா, ஐ.ஆர்.ஜி.சி படைகளின் தாக்குதலால் சேதமடைந்த இஸ்ரேலின் உள்கட்டமைப்புகளை சரிசெய்வதற்கு மட்டுமே அதன் ஜிடிபியில் 15% சதவிகிதம் தேவைப்படுகிறது. இஸ்ரேலின் சுற்றலாத் துறை சுமார் 5 பில்லியன் டாலர்களை இந்த ஓராண்டில் இழந்துள்ளது. எனவே அடுத்த ஆண்டில் அதன் ஜிடிபி மேலும் 10% சதவிகிதம் அளவிற்கு சரியும் அபாயம் உள்ளது. மேலும் இஸ்ரேல் அரசின் மொத்த கட சுமை அதன் ஜிடிபியில் 60% சதவிகிதத்திற்கும் மேல் அதிகரித்துவிட்டது.
இந்த நெருக்கடியின் சுமைகளை இஸ்ரேல் மக்கள் மீது சுமத்தி வருகிறது நெதன்யாகு அரசு. உள்நாட்டில் மக்கள் மீது வரிச்சுமையை அதிகரித்துள்ளது. சுமார் 60000க்கும் மேற்பட்ட சிறுகுறு நிறுவனங்கள் இஸ்ரேலில் இழுத்து மூடப்பட்டுள்ளன. ஹோட்டல் நிர்வாகம், சுற்றுலாத்துறை, தகவல் தொழில்நுட்பத் துறை உள்ளிட்ட முக்கியத் துறைகளில் 25% க்கும் மேற்பட்டோர்களை ஆட்குறைப்பு செய்துள்ளது. மறுபக்கம் உள்கட்டமைப்பு உள்ளிட்ட சில அத்தியாவசிய சேவைத் துறைகளில் வேலை செய்வதற்கு ஆட்கள் தட்டுப்பாடு நிலவுகின்றது. அதில் ஈடுபட்டு வந்த சுமார் 1.6லட்சம் பாலஸ்தீன மக்களை அகதிகளாக்கி வெளியேற்றியதே இதற்கு காரணம். பணவீக்கம் கடந்த ஓராண்டில் 4% சதவிகிதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை கடந்த ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட 30% சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதனால், இஸ்ரேல் மக்களும் நெதன்யாகு அரசுக்கு எதிராக திரும்பியுள்ளனர்.
எனவே, பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளவும் சரிந்துக் கொண்டிருக்கும் தனது பிம்பத்தை மீட்டெடுக்கவும் பாலஸ்தீனம் என்ற ஒரு நாடு இருக்கவே கூடாது என்று சர்வதேச போர் விதிகள் அனைத்தையும் மீறி யுத்தவெறி கொண்டு அலைகிறது. போர் நிறுத்தம் மற்றும் அமைதிப் பேச்சு வார்த்தைகளுக்கான ஹமாஸ், ஐ.நாவின் முயற்சிகளுக்கு நெதன்யாகு அரசு பிடி கொடுக்கவில்லை; சர்வதேச நீதிமன்றத்தின் போர்நிறுத்த கோரிக்கைகளுக்கு கூட செவிமடுக்கவில்லை. ‘போரை முடிவுக்கு கொண்டுவர போரிட வேண்டும்’ என தத்துவம் பேசி மத்திய கிழக்கில் பிராந்திய அளவிலான போருக்கு தயாராகி வருகிறது இஸ்ரேல் அரசு.
இஸ்ரேலுக்கு இராணுவ ஏற்றுமதியை அதிகரிக்கும் அமெரிக்கா
இஸ்ரேல் எவ்வளவுதான் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்தாலும், அது தன் சார்பில் - தனக்கான வேட்டை நாயாகப் போரைத் தொடர்ந்து நடத்துவதற்கு அமெரிக்கா பல்வேறு வழிகளில் – ஆயுத ஏற்றுமதி, கடன்களை கொட்டிக் குவிப்பது உள்ளிட்ட நிதிமூலதன ஏற்றுமதி மூலமாக - உதவி வருகிறது. அமெரிக்கா – இஸ்ரேலுடன் வர்த்தக உறவில் முன்னிலை வகிக்கிறது. அதன் நிதிமூலதன ஆதிக்கம் இஸ்ரேலின் பட்ஜெட்டைத் தீர்மானிக்கும் அளவுக்கு வலிமை வாய்ந்ததாகவும் உள்ளது. அமெரிக்கா –இஸ்ரேல் இடையேயான இராணுவ ஒப்பந்தத்தின் படி ஆண்டுக்கு 3.8 பில்லியன் டாலர் மதிப்பில் ஆயுதங்களை இஸ்ரேலுக்கு விற்று வந்தது அமெரிக்கா. பாலஸ்தீனத்தின் மீதான இந்த இன அழிப்புப் போருக்குப் பின்பு இந்த ஓராண்டில் மட்டும் 18 பில்லியன் டாலர் அளவுக்கு ஆயுதங்களை கொடுத்துள்ளது. இதன் மூலம், ஆயுத வலிமை உள்ள நாடுகள் பட்டியலில் 47வது இடத்தில் இருந்த இஸ்ரேல் தற்போது 15வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதன் பொருளாதாரமே இராணுவ பொருளாதாரமாக அமெரிக்காவால் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. போதாதற்கு, மேலும் 26 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை வழங்க மற்றொரு ஒப்பந்தமும் செய்துள்ளது அமெரிக்கா.
இந்தியா-இஸ்ரேல் (இந்துத்துவ-ஜியோனிச) அரசுகளின் பாசிசக் கூட்டு
இஸ்ரேலின் இந்த இன அழிப்புப் போரை அமெரிக்க –நேட்டோ கூட்டணி ஒருபக்கம் பின் இருந்து இயக்குகையில் அதற்கு இன்னும் பலம் சேர்க்கும் விதமாக, மேற்காசிய அல்லது மத்திய கிழக்கின் குவாட் என்றழைக்கப்படும் இந்தோ-ஆபிரகாமிக் கூட்டணி அல்லது ஐ2யூ2 (I2U2) கூட்டணியை அமைந்துள்ளது. இதில் இஸ்ரேல், இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் (யூ.ஏ.இ.) மற்றும் அமெரிக்கா ஆகிய 4 நாடுகளும் 2021ம் ஆண்டில் இருந்து இணைந்து செயல்படுகின்றன. 2020ம் ஆண்டில் இஸ்ரேல் யூ.ஏ.இ. நாடுகளுக்கு இடையில் அமெரிக்கா உருவாக்கி வைத்த ஆபிரகாம் சமாதான ஒப்பந்தத்திற்கு பிறகு இந்த கூட்டணியை உருவாக்கியது அமெரிக்கா. இவற்றின் மூலம் இந்த நாடுகளுக்கு இடையில் பல்வேறு வர்த்தக – இராணுவ உறவுகள் மேம்பட்டு வருகின்றன. கடந்தாண்டு ஜி-20 மாநாட்டில் அறிமுகப்படுத்தப் பட்ட இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பிய யூனியன் பொருளாதார வழித்தடம் (ஐ.எம்.ஈசி. -IMEC) திட்டம் கூட இந்தக் கூட்டு ஒத்துழைப்பால்தான் சுலபமானது. இஸ்ரேல் –இந்தியா இடையே நீண்டகாலமாக வர்த்தக உறவுகள் இருந்தாலும் இந்த கூட்டிணைப்பு அந்த உறவை பலப்படுத்தியுள்ளது. மோடி, நெதான்யாகு அரசுகள் சித்தாந்த ரீதியாகவும் இயற்கை கூட்டாளியாக விளங்குவதற்கு இந்த வர்த்தக உறவுகளும் அடிப்படையாக உள்ளன. அதனால் தான் இந்தியா, பாலஸ்தீனத்தின் இன அழிப்புப் போருக்கு இஸ்ரேலுக்கு வரிந்துக் கொண்டு உதவிகளை செய்து வருகிறது. அதானி –எல்பிட் யுஏவி என்ற இந்திய இஸ்ரேல் கூட்டு நிறுவனம் 20 ஆளில்லா டிரோன் விமானங்களை இந்தியாவில் தயாரித்து இஸ்ரேலுக்கு கொடுத்துள்ளது. அதானி டிஃபென்ஸ் மற்றும் இஸ்ரேல் வெஃபன் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் கூட்டு நிறுவனமான பி.எல்.ஆர் சிஸ்டம்ஸ் ஆயுத தளவாடங்களை உற்பத்தி செய்து இஸ்ரேலுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. சென்னை துறைமுகத்திலிருந்து 27 டன் எடையுள்ள வெடிமருந்துகள் இஸ்ரேலுக்கு கப்பல் வழியாக கொண்டுச் செல்லப்பட்டன. அதை ஸ்பெயின் இடைமறித்த போதும் அமெரிக்கா தலையிட்டு மீட்டு இஸ்ரேலுக்கு அனுப்பி வைத்தது. இஸ்ரேலில் நிலவும் தொழிலாளர் தட்டுப்பாட்டை குறைக்க 10000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை ஏற்றுமதி செய்துள்ளது மோடி அரசு; இது நவீன ஆதிதிரட்டல் மற்றும் அடிமை வர்த்தகத்தின் பகுதியாகும். லெபனானின் மீதான இஸ்ரேலின் பேஜர் குண்டுவெடிப்புத் தாக்குதலை ‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’ என புகழாரம் சூட்டியது மோடி கும்பல். அமெரிக்காவின் வேட்டை நாய்களாக செயல்படும் இந்தியா –இசுரேல் துணைமேலாதிக்க சக்திகள் பாலஸ்தீனத்தின் இன அழிப்புப் போரில் ஒன்றுபட்டு நிற்கின்றன. இந்திய – இஸ்ரேல் கார்ப்பரேட்களின் இந்த மூலதனக் கூட்டுதான் இந்துத்துவ – ஜியோனிச பாசிசக் கூட்டாக வடிவம் எடுத்துள்ளது.
மத்திய கிழக்கில் பிராந்திய அளவிலான போர் அபாயம்
அரபு நாடு, பஹ்ரைன், மொராக்கோ, சூடான், ஜோர்டான் ஆகிய நாடுகள் அமெரிக்கா-நேட்டோ அணியில் இருந்து வருகின்றன. இருப்பினும் இவை பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவுமில்லை; ஹமாசின் விடுதலைப் போராட்டத்தை இவை ஆதரிக்கவும் இல்லை. பாலஸ்தீன அதிகாரசபையை ஆதரித்து நடுநிலையாக இருப்பது போல வேசமிட்டு வருகின்றன. இவை, ஈரானை அப்பிராந்தியத்தில் தங்களுக்கு எதிரியாகவே கருதுகின்றன. அரபு நாடு, பஹ்ரைன், மொராக்கோ, சூடான் ஆகிய நாடுகள் அமெரிக்காவின் முயற்சியால் உருவாகிய ஆபிரகாம் ஒப்பந்தம் மூலம் இஸ்ரேலுடன் வர்த்தக உறவில் ஈடுபட்டு வருகின்றன. இத்திட்டம் அப்பிராந்தியத்தில் ஈரானை தனிமைப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டது. எனவே மத்திய கிழக்கில் பிராந்திய அளவிலான போர் தோன்றினால் அவை இஸ்ரேலுடன் கூட்டுச் சேர்ந்து செயல்படத் தயங்காது. இருப்பினும் ஒருவேளை சீனா போரில் இழுத்து விடப்பட்டால் அவை, சீனாவை எதிர்த்து செயல்படுமா என்பதும் கேள்விக்குறியே ஆகும். ஏனெனில் அவை பாம்புக்கு வாலையும் மீனுக்கு தலையையும் காட்டும் தரகு கும்பல்களின் அரசாகவே உள்ளன. அதே சமயம், ஆபிரகாம் ஒப்பந்தத்தில் சவுதி அரேபியாவை இணைக்க அமெரிக்கா மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியுற்றன. சவுதி அரேபியா - ஈரான் இவ்விரு நாடுகளுக்கும் இடையே சென்ற ஆண்டு சீனா மத்தியஸ்தம் பேசி கூட்டு ஒத்துழைப்பு உடன்படிக்கை செய்து வைத்தது. எகிப்துக்கும் ஈரானுக்கும் இடையிலும் மத்தியஸ்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. ஆகையால், சவுதி அரேபியாவும் எகிப்தும் சீனா –அமெரிக்கா இரு முகாம்களுடனும் சமநிலையை பேண முயற்சித்து வருகின்றன. மேலுள்ள அனைத்து நாடுகளும் சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தில் உறுப்பினராக இருந்துக் கொண்டே, அமெரிக்காவின் ஐ.எம்.ஈ.சி திட்டத்திலும் இணைந்து செயல்படுகின்றன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மறுபக்கம், ஈரான் அப்பிராந்தியத்தின் துணை மேலாதிக்க சக்தியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. அது அமெரிக்காவுக்கு எதிராக சீன-ரஷ்ய முகாம்களின் நலன்களிலிருந்து செயல்பட்டு வருகிறது. அதனுடன் லெபனான், சிரியா, ஏமன், குவைத், கதார், லிபியா, ஓமன் போன்ற நாடுகள் ஈரானின் நம்பகமான கூட்டாளியாக உள்ளன. அவை இஸ்ரேலுடன் போர் ஏற்பட்டால் ஈரானுக்கு பக்கபலமாக நிற்கும் அணிகளாகும். ஈராக்கைப் பொறுத்தவரை அது இஸ்ரேல்-ஈரான் இடையேயான போரில் ஒதுங்கி நிற்கவே விரும்புகிறது. ஆனால், ஈராக்கில் செயல்படும் ஈரான் ஆதரவு இஸ்லாமியப் படைகள் இஸ்ரேல் மீது தாக்குதல் தொடுக்கும் பட்சத்தில், ஈராக்கும் தாக்குதல் இலக்காக மாறும் என இஸ்ரேல் எச்சரித்துள்ளது. இந்நிலையில் ஈராக் அரசும் இஸ்ரேலுக்கு எதிராக ஈரானுடன் கைக் கோர்க்கும் நிலை ஏற்படலாம்.
சீனா, ஈரானுடன் அணுநிலையம், எண்ணெய்- எரிவாயு வர்த்தகம் மட்டுமில்லாமல் அதிவேக ரயில் கட்டமைப்பு, பெல்ட் அண்ட் ரோடு உள்கட்டமைப்புத் திட்டங்கள், ஆயுத தளவாட சப்ளை உள்ளிட்ட 17க்கும் மேற்பட்ட முக்கிய ஒப்பந்தங்களில் ஈடுபட்டுள்ளது. 2026ம் ஆண்டுக்குள் இரு நாடுகளுக்கும் இடையே 600 பில்லியன் டாலர் அளவில் வர்த்தக உறவை மேம்படுத்த திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றன. ரஷ்யா - ஈரான் இரண்டும் முக்கியமான வர்த்தக – இராணுவக் கூட்டாளியாக விளங்குகின்றன என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. நேட்டோவுக்கு எதிராக ரஷ்யா, சிஎஸ்டிஓ (CSTO – Collective Security Treaty Organisation) ஐ 2007ல் உருவாக்கிய போதே அதில் பங்கேற்ற ஒரே மேற்காசிய நாடாக ஈரான் விளங்கியது இங்கு குறிப்பிடத்தக்கது. அமெரிக்க - இஸ்ரேல் உறவு எப்படியோ அதேபோல் எதிர் முகாமில் ரஷ்யா-ஈரான் உறவு விளங்குகிறது. 2000 கி.மீ.க்கும் அதிகமாக உள்ள இலக்கை ரேடார் கண்காணிப்பில் கூட சிக்காமல் ஒலியை விட 25மடங்கு வேகத்தில் - வெறும் 10 நிமிடங்களில் சென்று தாக்கும் அதி நவீன ஹைப்பர்சானிக் ஏவுகனைகளை இந்த முகாம் தங்கள் வசம் கொண்டுள்ளது.
உலகம் முழுவதும், குறிப்பாக மத்திய கிழக்கில் அமெரிக்க-நேட்டோ முகாமும், ரஷ்ய-சீன முகாமும் மேலாதிக்க மற்றும் மறுபங்கீட்டு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. இஸ்ரேல் மற்றும் ஈரானின் துணை மேலாதிக்க நலன்களும் அவற்றுடன் இணைந்துக் கொண்டு மத்திய கிழக்கை கூறுபோடும் போட்டியில் இறங்கி உள்ளன. உலகின் எண்ணெய் வளத்தில் 55%க்கும் அதிகமான இருப்பு, இயற்கை எரிவாயுவில் 3 ல் 1 பங்கை தன்னகத்தே கொண்டிருப்பது, பாஸ்பேட் இருப்பை உலக அளவில் பாதிக்கும் மேலான இருப்பை கொண்டுள்ளது, சூரிய மின் ஆற்றல் துறையின் மையமாக விளங்குவது என உலகின் ஆற்றல் தேவைக்கான வளங்கள் கொட்டிக்கிடக்கின்றன இந்த மத்திய கிழக்கு நாடுகளில். இவற்றை பங்குப் போடவும் இந்த நாடுகளின் மீது தங்களது மேலாதிக்கத்தை நிறுவவுமே மத்திய கிழக்கை யுத்தக் களமாக மாற்றி வருகின்றன. இவையே மத்திய கிழக்கில் பனிப்போர் நீடித்து வருவதற்கான பொருளியல் அடிப்படையாகும். இதன் காரணமாக, பாலஸ்தீன ஆக்கிரமிப்பாக துவங்கிய இந்த மோதல் இன்று மத்தியக் கிழக்கில் பிராந்திய அளவிலான போராக வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த பிராந்தியப் போர் உலகப் போராக வெடிக்குமா? என கேள்வி எழுப்பினால், அதற்கான புறச்சூழல் தற்போது இல்லை என்றே பார்க்க முடிகிறது. ரஷ்ய – சீன முகாம் ஈரானுடன் மட்டுமல்லாமல் இஸ்ரேலுடனும் அரசியல்-பொருளாதார –இராணுவ உறவுகளில் ஈடுபட்டு வருகின்றன. அவற்றின் முதலீடுகளும் இஸ்ரேலில் உள்ளன. இஸ்ரேலுடன் ஒரு நேரடியான தாக்குதல் யுத்தத்தை அவை நடத்த தற்போதைக்கு விரும்பாது. அதேபோல், அமெரிக்காவும் ஈரானில் உள்ள சீன-ரஷ்ய முதலீடுகளின் மீது இஸ்ரேல் தாக்குவதை விரும்பவில்லை என்பதையும் நாம் மேலே பார்த்தோம். அது இஸ்ரேலைக் கொண்டு ஒரு பதிலிப் போரை நடத்த விரும்புகிறதே தவிர நேரடியாக களத்தில் இறங்கத் தயாரில்லை. அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடியும், சீன-ரஷ்ய-ஈரான் முகாமின் அதி நவீன தொழில்நுட்பமும் இதற்கு ஒரு காரணமாகும். இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு, ஏகாதிபத்தியங்களும் படிப்பினைக் கற்றுக் கொண்டன என்பதை நாம் ஏற்கெனவே பல கட்டுரைகளில் பேசியுள்ளோம். அவை நேரடி காலனிய – ஆக்கிரமிப்பு முறைகளை கைவிட்டு தங்களது நம்பகமான ஏஜெண்டுகள் மூலம் புதிய காலனிய முறைகளில் தங்களது மேலாதிக்கத்தை நிலைநாட்டி வருகின்றன. நேரடி உலகப் போரில் ஈடுபடுவதைத் தவிர்த்து அரசியல்-பொருளாதார ஒப்பந்தங்கள், பிராந்தியப் போர், பதிலிப்போர், மறைமுகப் போர் ஆகிய வழிகளில் பனிப்போர் மூலமாகவே உலகை மறுபங்கீடு செய்து வருகின்றன. இத்தகைய வழியிலான மறுபங்கீடு அவற்றுக்கு லாபகரமானதாக இருப்பதோடு தேசிய விடுதலைப் போராட்ட எழுச்சிகள் மழுங்கடிக்கப்படுவதற்கும் பயன்படுகிறது. எனவே, மத்திய கிழக்கில் இஸ்ரேலும் –ஈரானும் இவ்விரு முகாம்களுக்காக பதிலிப்போர் நடத்த தயாராக இருக்கும்போது அவை நேரடியான யுத்தத்தில் இறங்க வேண்டிய அவசியம் தற்போதைக்கு இல்லை என்பதே இன்றைய நிலைமைகள் எடுத்துரைக்கின்றன.
பலியிடப்படும் பாலஸ்தீன விடுதலைப் போராட்டம்
பாலஸ்தீனத்தின் எண்ணெய்-எரிவாயு வயல்களை இணைக்கும் குழாய் திட்டங்களை அமல்படுத்துவதன் மூலம் இஸ்ரேல் எண்ணெய் எரிவாயு ஏற்றுமதியில் முக்கிய நாடாக மாறும் நிலை மற்றும் ஜியோனிச தூய இனவாதமும் கைகோர்த்து பாலஸ்தீனத்தில் இன அழிப்புப் போரை அரை நூற்றாண்டாக நடத்தி வருகின்றன. இந்த இன அழிப்புப் போரை அமெரிக்க-நேட்டோ முகாமின் வேட்டை நாயாக இஸ்ரேல் வெறிகொண்டு நடத்தி வருகிறது என்பதை நாம் சென்ற ஆண்டு நவம்பர் சமரன் கட்டுரையில் விரிவாகப் பார்த்தோம்.
படிக்கவும்: பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் இன அழிப்பு போரை எதிர்ப்போம்! - மஜஇக
உலகம் முழுவதும் இந்த இன அழிப்பு யுத்தத்திற்கு எதிரான குரல்கள் ஒலித்த போதும், சர்வதேச நீதிமன்றங்கள் கண்டித்தபோதும் அவற்றுக்கு செவிமடுக்காமல் பாலஸ்தீனத்தை இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்து வருகிறது. ரஷ்ய-சீன முகாமும் போர்நிறுத்தம் என்று உதட்டளவில் பேசிக் கொண்டு பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தை இஸ்ரேல் துடைத்தழிப்பதற்கு துணைபோகின்றன. இவை பாலஸ்தீன தரகு அதிகார சபையின் கீழ் இருதேசக் கொள்கையையே முன்வைத்து ஹமாசின் விடுதலைப் போராட்டத்தை இஸ்ரேல் முடக்குவதற்கு அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றன. ரஷ்யா –சீனா இரண்டு முகாம்களும் இசுரேலுடனும் அரசியல்-பொருளாதார – இராணுவ உறவுகளில் ஈடுபட்டு வருகின்றன. இஸ்ரேலின் தொழில்நுட்ப – ஆற்றல் துறைகளில் இவ்விரு முகாம்களும் முதலீடு செய்து வருகின்றன; பெல்ட் அண்ட் ரோடு திட்டத்திலும் இஸ்ரேல் முக்கியப் பங்காளனாக உள்ளது. சீனா ஒரு படி மேலே சென்று இந்த போர் சூழலில் இஸ்ரேலுக்கு 20,000 தொழிலாளர்களை ஏற்றுமதி செய்துள்ளது. இவ்வாறு ரஷ்யா –சீன முகாம்களும் ஐ.நா.வில் மனிதநேய முகமூடி அணிந்துக் கொண்டு களத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவாக பாலஸ்தீன இன அழிப்புக்கு மறைமுகமாக துணைபோகிறது. ஒரு கையில் துப்பாக்கி, மற்றொரு கையில் இரத்த வாடை அடிக்கும் ரொட்டித் துண்டு. இதுதான் ஏகாதிபத்தியங்களின் உலகளாவிய இராணுவ செயல்தந்திரம். இஸ்ரேல் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை உள்ளது என ஒரு பக்கம் பேசிக் கொண்டு ஹமாசின் போராட்டத்தை பயங்கரவாதம் என்று கூறி வருகின்றன. இஸ்ரேலின் இந்த யுத்தத்தை இன அழிப்பு போர் என்று ஈரான் மட்டுமே கண்டித்து வருகிறது. ஐ.நா. ஆய்வுக் குழுவின் ஆய்வறிக்கையில் இஸ்ரேல் நடத்தும் போரில் இனஅழிப்புக்கான கூறுகள் இருப்பதாக தற்போது முன் வைத்துள்ளது அதை அமெரிக்கா மறுத்து வருவதோடு ஐ.நா.வின் ஆய்வுக்குழுவையும் கண்டித்துள்ளது. அமெரிக்கா முகாமிலுள்ள பலநாடுகள் ஆய்வுக்குழுவின் இந்த முன்மொழிவை ஏற்க முன்வராத நிலையே உள்ளது. எனவே, இனஅழிப்பு என்ற முன்மொழிவோ அதற்கு எதிரான நடவடிக்கைகளோ தீர்மானமாக நிறைவேற்றப்பட வாய்ப்பில்லை. ஆனால், இன்று அதைவிட கொடூரம் என்னவெனில், பாலஸ்தீனத்தில் குறைந்தபட்ச மனிதாபிமான உதவிகள் கிடைப்பதற்கு கூட தடை செய்து வருகின்றன அமெரிக்க-இஸ்ரேல் ஓநாய்கள்; அதை கூட நிறைவேற்ற வக்கில்லாமல் ஐ.நா. மன்றம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. அன்று ஈழத்தில் தமிழர்கள் கொன்று புதைக்கப்பட்ட போது வேடிக்கைப் பார்த்தது போலவே இன்று பாலஸ்தீனத்தை வேடிக்கைப் பார்த்து நீலிக்கண்ணீர் வடிக்கிறது.
அமெரிக்கா-நேட்டோ, ரஷ்யா-சீனா இவ்விரு ஏகாதிபத்திய முகாம்களுக்கு இடையிலான இந்த பனிப்போரில் பாலஸ்தீன விடுதலை பலியிடப்பட்டு வருகிறது. இவை போர் நிறுத்தம் கோருவதும் கூட, இஸ்ரேல், ஈரான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் தங்களது சந்தை நலன்கள் பாதிக்கப்படும் என்பதிலிந்துதானே ஒழிய பாலஸ்தீன விடுதலைத் தேவையிலிருந்து அல்ல. ஹமாஸ் இயக்கத்தை அழித்து காசாவை பாலஸ்தீன அதிகார சபையின் கீழ் கொண்டு வருவதில் இவ்விரு ஏகாதிபத்திய முகாம்களும் ஒரே நிலைபாட்டில்தான் உள்ளன.
இராணுவ ரீதியிலான போராட்டம் மட்டுமே ஒரு நாட்டை விடுதலைப் பாதைக்கு அழித்துச் செல்லாது. அரசியல் மற்றும் இராணுவம் இரு துறைகளில் சரியான போர்த்தந்திரத்தை முன்வைத்து அதை செயல்படுத்தும்போதுதான் உண்மையான விடுதலைப் போராட்டத்தை வளர்த்தெடுக்க முடியும் என்று வரலாறு நமக்கும் பல பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளது. எனவே இவ்விரு ஏகாதிபத்திய முகாம்களின் மேலாதிக்க, இஸ்ரேல் - ஈரானின் துணை மேலாதிக்க நலன்களைப் புரிந்துக் கொண்டு அரசியல் ரீதியாகவும் செயல்படும்போதுதான் ஹமாஸ் இயக்கம் மக்களிடம் இருந்து தனிமைப்படாமல், செல்வாக்கு மிக்க இயக்கமாக முன்னேறவும் – பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தை வெல்லவும் முடியும்.
உலகின் பல்வேறு நாடுகளிலுள்ள மக்கள் பாலஸ்தீன இன அழிப்புப் போருக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். அமெரிக்க - ஐரோப்பிய மாணவர்கள் கூட தங்களது பாலஸ்தீன ஆதரவை பல்வேறு வகைகளில் வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால், பாலஸ்தீன மக்கள் கோருவது - நீங்கள் பேச வேண்டியதெல்லாம் எங்கள் அழுகுரலைப் பற்றி அல்ல. உங்களுக்கு கேட்க வேண்டியது எங்களின் விடுதலை குரல் ஒன்றே என்பதுதான். ஆம்! கருணை உள்ளத்தோடு வெறுமனே வேடிக்கைப் பார்ப்பதை விடுத்து - உலகத் தொழிலாளர்களும் ஒடுக்கப்பட்டத் தேசங்களும் பாலஸ்தீன விடுதலைக்கு ஆதரவாக கிளர்ந்தெழ வேண்டும். இந்த பாசிச இஸ்ரேல் அரசை மத்தியத் தரைக்கடலில் வீசியெறியவேண்டும். ஏகாதிபத்திய எதிர்ப்பில்லாமல் பாலஸ்தீன விடுதலை சாத்தியமில்லை; ஏகாதிபத்தியங்களும் போரும் இல்லாத உலகை சமைக்க ஓரணியில் திரள வேண்டும்.
- சமரன்