தேர்தல் : தேவை வர்க்கப் பார்வை!
துரை. சண்முகம்
நாம எவ்வளவு சொன்னாலும் ஜனங்க கேட்கவா போறாங்க! ஓட்டு போட்டுகிட்டுதான் இருக்காங்க!
அதனால?
நாமளும் போய் ஒரு ஓட்ட போட்டுருவோம்!
இப்படி சில முற்போக்காளர்களின் தர்க்கம்.
நூற்றாண்டுகளாக பகுத்தறிவாளர்கள் கூட சாமி இல்லை மதங்களை நம்பாதே என்று பிரச்சாரம் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
மக்கள் அப்படியே கேட்டு விடுவதில்லை. முன்பை விட டிசைன் டிசைனாக விழாக்கள் கொண்டாட்டங்கள் என கடவுள் பக்தி கலை கட்டுகிறது. மக்கள் கூட்டம் கூட்டமாக போகிறார்கள்.
அதனால நாம சொல்லி கேட்கவே இல்ல! அதனால நாமளும் போயி சாமிய கும்பிடுவோம் ! கோயில் திருப்பணிகள செய்வோம் என்று எந்தபகுத்தறிவாளராவது கருத முடியுமா? பக்தியும் மத உரிமையும் தனிநபர்களது விருப்பம் உரிமையின் பாற்பட்டதாக இருக்கிறது.
அதே நேரம் அதை கடைபிடிப்பவர்களிடம் நாத்திகம் மற்றும் பகுத்தறிவுக்கான பிரச்சாரம் செய்கின்ற உரிமையை அதற்காக அவர்கள் கைவிடுவதில்லை.
இப்படித்தான் சமூகத்தில் ஏற்கனவே பிடிமானமாக இருக்கிற பழைய கருத்தை மாற்றுவதற்கான ஒரு பிரச்சார முறையை தேர்ந்தெடுக்க முடியும். மக்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. இந்த முதலாளித்துவ சமுதாயம் உருவாக்கி இருக்கும் அத்தனை வாழ்க்கை வேதனைகளுக்கும் மனதில் ஒரு வடிகாலாக வேண்டுதலையும் சாமி கும்பிடுவதையும் மன ஆறுதலாக தனது உடனடி வாழ்க்கை சுழற்சிக்கான மனப்பயிற்சியாக செய்து கொண்டிருக்கிறார்கள். மக்களது வேண்டுதல்களை தீர்க்கும் அடிப்படையை சமூகமாக அமைக்கும் வரை இதை முற்றிலும் தீர்க்க முடியாது என்பதுதான் அறிவியல் பூர்வமான சமூக உண்மை.
அதுபோலத்தான் தேர்தலில் மக்கள் பங்கெடுப்பது என்பது
வெள்ளி செவ்வாய் விளக்கு போடுவது போல ஏதோ ஒரு அரசியல் நம்பிக்கைதான்.
அதே மக்கள்தான் எல்லா பயலும் திருட்டுப் பய ! எவனையும் நம்ப முடியாது! எவன் வந்தாலும் நம்ம கஷ்டப்பட்டு உழைச்சுதான் வாழ வேண்டி இருக்கு! என்று இந்த தேர்தல் முறையின் மீது நம்பிக்கை இன்மையையும் வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
எனவே தேர்தலை பயன்படுத்துவது என்பது அதில் பங்கேற்பது என்பது மட்டுமல்ல
அதைப் பற்றிய அரசியல் விழிப்புணர்வையும் விமர்சன ரீதியான அணுகு முறையையும் மக்களிடம் ஏற்படுத்தும் புறக்கணிப்பு வகையிலான பிரச்சாரமும் கூட தேர்தலை பயன்படுத்துவதில் அடங்கும். தேர்தலை பயன்படுத்துவது என்பது தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளுக்கு எந்த அளவுக்கு பயன்படுகிறது என்ற பார்வையில் கற்றுக் கொடுக்கப்பட வேண்டிய ஒரு அரசியல் அணுகுமுறை.
மாற்று அரசியல் அமைப்பின் மீது மக்களுக்கு பெரும்பான்மை நம்பிக்கை வரும் வரை தங்களுக்குத் தெரிந்த வழியில் தேர்தலை அணுகிக் கொண்டு தான் இருப்பார்கள்.
நாம் கருத வேண்டியதும் தேர்தல் நடப்பதும் நடக்காததும் நமது விருப்பத்தில் இல்லை.
ஆளுகையில் இருக்கும் ஆளும் வர்க்கமும் அரசும் தீர்மானிப்பதில் இருந்து நடக்கிறது. மக்கள் ஓட்டு போடட்டும். ஆதரிப்பவர்கள் ஆதரிக்கட்டும். ஆனால் அதை ஒட்டிய பாட்டாளி வர்க்க அரசியலை கைக்கொள்ள வேண்டிய அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் களமாக அதை கம்யூனிஸ்டுகள் பயன்படுத்த வேண்டும்.
இதன் தொடர்ச்சியில் தேர்தல் களத்திற்கு வெளியே கம்யூனிச அமைப்புகள் செய்யும் மக்களுக்கான போராட்டத்தில் தான் இதற்கான நியாயத்தை மக்கள் அளவு ரீதியாக படிப்படியாக உணர்ந்து வருகிறார்கள்.
ஓட்டு போடுவதுனாலயே மக்கள் இந்த அரசமைப்பு முறையை விருப்பமாக ஏற்றுக் கொண்டார்கள் என்று இல்லை.
குடும்பம் நடத்துவதாலேயே அனைவரும் இனிய தம்பதிகள் என்று எப்படி கருத முடியாதோ!
அப்படி வேறு வழியில்லாமல் மாட்டிக்கொண்ட இந்த கூட்டு வாழ்க்கை நடக்கிறது.
அதுபோல ஓட்டு போட வேண்டாம் என்று சொல்வது மட்டுமல்ல புரட்சி. மாற்று அரசியல் சித்தாந்த கண்ணோட்டத்தில் இடையறாது மக்களுடன் தொடர்பு கொண்டு வேலை செய்வதுதான் முதன்மையான இலக்கு.
உடனே மாற்றம் இல்லை! புரட்சி வரவில்லை என்பதால் தோல்வி அடைந்து விட்டோம்! என்று கருதுவதில் ஏதாவது அறிவுப் பார்வை இருக்கிறதா?
இந்த முதலாளித்து அமைப்பு முறை தேர்தலில் கூடத்தான் ஒரு மாற்றமும் வரவில்லை!
அதை மட்டும் நம்ப சொல்லலாமா?
இருப்பதிலேயே நல்ல கட்சியை ஆதரிப்போம்! என்றால் இந்தக் கட்சிகளால் மட்டும்! நீங்கள் சொல்லும் குறிப்பிடத்தக்க சமூக மாற்றம் புரட்சி என்று மாற்றம் வந்து விட்டதா? இந்த முதலாளித்து அமைப்பு முறை நாம் நம்பிக்கை கொள்ளும் அளவுக்கு புரட்சிகர அரசியல் மாற்றத்தை தந்துவிட்டதா?
மக்களும் முழு மனதோடு நம்பவில்லை, நாமும் கூட நம்பவில்லை. இருந்தாலும் இருக்கிறவரை நம்ப வைப்போம் என்பது என்ன அறிவியல் பார்வை?
இந்தத் தேர்தல் முறை மாற்றத்தையும் தரவில்லை! ஆனாலும் இதை நம்புவது முற்போக்கு! என்பதில் அப்பட்டமான தானும் கும்பலில் கோவிந்தா! என்பதை தவிர எந்த முற்போக்கும் இல்லை.
தேர்தலை புறக்கணித்து சாதிச்சிட்டீங்களா? என்றால்,
தேர்தலை ஆதரித்து சாதித்ததும் இல்லை என்பதும் சேர்ந்தே வருகறது. சொல்லப்போனால் தேர்தலுக்கு வெளியே ஆன களத்தில்தான் மக்கள் போராடி சாதித்தது அதிகம். நமக்காக ஓட்டு வாங்கி ஜெயித்துப்போனதாக சொல்லும் நல்லவர்கள் கூட கடைசியில் பாராளுமன்றத்தின் காந்தி சிலைக்கு முன்னே போய் கதறுவதை தவிர வேறு வழியில்லை.
எந்த ஆக்கபூர்வமான மாற்றத்தையும் தராமல் இருக்கிற உரிமைகள் வாழ்க்கை நிலைமைகளையும் பறித்து கொள்வதின் மீது நம்பிக்கை வைக்கலாமாம்!
கம்யூனிசத்தை நம்புவது மட்டும் வரட்டுத்தனமாம்! கதைக்கு ஆகாத பேச்சாம்! இப்படி சில கிளுகிளுப்பு வாதிகள் கிளப்பி விடுகிறார்கள்.
தேர்தல்! ஓட்டு போடுவது! நமது கட்டுப்பாட்டில் இல்லை. சடங்கு படி கும்பாபிஷேகம் பிரதோஷம் என்பது போல அது நடந்து கொண்டுதான் இருக்கும்.
இவற்றின் மீதான விமர்சன அரசியல் பார்வையையும்,
மாற்று அரசியல் பாதையையும்
மக்களிடம் கொண்டு செல்வதில் உரிய ஒருங்கிணைப்பும் முழுமையும் அற்று இரண்டகம் செய்தவர்களால்தான் பின்னடைவுகளை சந்தித்து கொண்டிருக்கிறோம்.
ஓட்டுப் போடுவதை மட்டுமே புனிதக் கடமையாக வலியுறுத்த வேண்டிய அவசியம் கம்யூனிஸ்டுகளுக்கு இல்லை.
மக்கள் ஓட்டு போட்டாலும்,
அவர்களிடம் உழைக்கின்ற வர்க்கத்துக்கான உரிமைகளுக்கான ஜனநாயகத்திற்கு எப்படி போராட வேண்டும்! எனும் அரசியல் பிரச்சாரத்தை கூர்மையாக எடுத்துச் செல்வது தான் நமக்குத் தேவை.
தேர்தல் களத்திலும் கூட.
இதில் ஏதோ அதிகப்படியாக சரியாக வேலை செய்து களைத்தவர்கள் போல பேசிக் கொள்வதில் நியாயம் இல்லை.
எப்போதெல்லாம் தேர்தல் களத்திற்கு வெளியே அதிகப்படியான மக்கள் போராட்டங்களை கட்டி எழுப்பியதன் மூலமாகத்தான் மக்களுக்கான உரிமைகள் சட்டப்படியாக ஆக்கப்படும் அழுத்தம் ஏற்பட்டிருக்கிறதே ஒழிய, உழைக்கும் வர்க்கத்திற்கு அதிகாரம் வழங்காத இந்த அரசமைப்பு முறையில் ஒட்டிக்கொண்டதால் கிடைத்தது அல்ல!
ஆகவே தேர்தல் அரசியலை புரிந்து கொள்வது என்பது
இருப்பதில் அப்படியே பங்கேற்பது என்பது அல்ல,
நமக்கு என்ன மாதிரியான ஜனநாயகம் தேவை! அதற்கு ஏற்ற எந்த வகையான தேர்தல் தேவை! என்பதுவரை
மக்களிடம் வாதிப்பதற்கான அரசியல் களமாகவும் அதை பயன்படுத்துவதுதான் சரி.
மக்களின் எதிரிகளான ஆளும் வர்க்கம் தேர்தலை தனக்கான பலாபலன் கணக்கு போட்டு தான் செய்கிறது. இப்போது இருக்கிற தேர்தல் முறையிலான தனக்கான அதிகார ஒப்புதலை கீழ் இருந்து வாங்கிக் கொள்வதற்கான நாடகக் கம்பெனியாக நடத்துகிறது.
பாட்டாளி வர்க்கம் மட்டும் எந்த உத்தரவாதமும் ஒப்புதலும் இல்லாமல் இதன் மீது தனக்கான நோக்கமற்று ஒத்து ஊத வேண்டிய அவசியம் இல்லை.
https://www.facebook.com/100080904177819/posts/944881764885287/?rdid=gYJZdkuzSA3mBDIl
=======================================================================
முதலாளித்துவக் கட்சிகளை அதன் தன்மைகளை வேறுபாடுகளை வகைப்படுத்தி புரிந்து கொள்வது என்பது வெவ்வேறு வகை வடிவங்களில் அணுகுமுறைகளில் இவர்கள் எவ்வாறு முதலாளித்துவ அரசு எந்திரத்தின் ஆரக்கால்களாக இருக்கிறார்கள் என்பதை புரிய வைப்பதற்குதான்.
மாறாக இவரை விட அவர் நல்லவர் அவரைவிட இவர் நல்லவர் என்று முதலாளித்துவ சுரண்டல் அமைப்பு முறை அரசியலுக்குள் மக்களை நிலை நிறுத்துவதற்காக அல்ல.
அரசியல் அடிப்படை காரணங்களின் மீது வாதம் செய்யாமல் கட்சிகளைப் பற்றிய அதன் தலைவர்களை பற்றிய வாதங்களாக மாற்றி
அதை ஒரு உதாரணத்திற்கு குறிப்பிடுவது என்பதையும் கடந்து அதன் உள்ளடக்க அரசியலை பேசுவதற்கு பதிலாக அதன் வடிவ போக்குகளிலேயே வாழ்ந்து விடுவது என்பதை அரசியல் ஆய்வுபோல சிலர் சுமத்த விரும்புகிறார்கள்.
இந்தப் போக்கு புதியன சிந்திக்க விரும்பும் இளைஞர்களின் தலையில் பழைய உப்புமாவை கிண்டுகிறது.
ஏனென்றால் உள்ளடக்கத்தின் மீதான வாத விமர்சனமாக இதைக் கொண்டுச் சென்றால்,
முதலாளித்துவ சுரண்டல் அமைப்பு முறைக்கு முட்டுக் கொடுக்கும் அத்தனை விதமான அரசியல் போக்குகளும் அம்பலப்பட்டு விடும். ஆகையால் நபர்களைப் பற்றிய வாதங்களாக கட்சிகளின் எசப்பாட்டுகளாக இதை இசைப்பதை மைய ஊடகங்கள்
விவாதங்கள் என்ற பெயரில் இப்போது சமூக ஊடகங்களின் அவர்களது இளைய பங்காளிகளின் கைக்கும் வழங்கியிருக்கிறது.
அதனால்தான் முதலாளித்துவ சீரழிவு அரசியல் உள்ளடக்கத்திற்கு ஏற்ற அதன் சகல விதமான சேட்டைகளையும் அதன் ஆன்மாவோடு பொருத்திச் சொல்லாமல், விஜய் கூட்டத்தில் தற்குறிகள் தலைகீழாக தொங்குகிறார்கள்! எனும் கேலி கிண்டலாக முடித்துக் கொள்வதும், பதிலுக்கு அவர்கள் உதயநிதி மாநாட்டில் மப்பில் ஆடும் இளைஞர், வாழைத்தாரை வெட்டிக் கொண்டு ஓடும் கழகக் கண்மணிகள்! என்று லாவணிக்கச்சேரியாக இனிமையாக முடிக்கிறார்கள்.
ஆனால் மக்களுக்கு சொல்லப்பட வேண்டியது அரசு வர்க்கம் ஆகிய பற்றிய பார்வையில் இருந்து ஒவ்வொரு சம்பவத்திலிருந்தும் அதன் மூலத்தை உணர்த்த வேண்டியிருக்கிறது. கிளுகிளுப்பு கதைகளைக் கேட்டு சிரித்து முடித்த பிறகு அத்தோடு கலைந்து விடாமல் அதன் தோற்றுவாய்க்கான காரணத்தை பற்றி சீரியசாக உணர்த்த வேண்டி இருக்கிறது.
ஏனென்றால் கட்சிகள் வர்க்கத்தை பிரதிபலிக்கின்றன. கட்சிகளின் தலைவர்கள் அந்த வர்க்க நலன்களை பிரதிபலிக்கிறார்கள். இதற்கு மேலான சேட்டைகள் எல்லாம்
இந்த வர்க்க வரையறைக்குள் நடக்கும் விதவிதமான முழுமையின் பகுதிகள்தான்.
இப்படிப்பட்ட வர்க்க கண்ணோட்ட வகையில் அரசியலை புரிந்து கொள்ளும் தலைமுறையை நோக்கித்தான் நாம் அதிகம் பேசவும் வேண்டியுள்ளது. இதற்காக அரசியல் கண்ணோட்ட ஆற்றல்களை செலவிடவும் வேண்டியுள்ளது.
புதிய தலைமுறையினருக்கு மார்க்சிய கண்ணோட்டத்தில் அரசியலை புரிந்து கொள்ள வைக்க வேண்டும் என்றாலே,
அவர்களிடம் தயக்கம் இன்றி எதார்த்தமாக உறவாடுவது
அவர்களிடமிருந்து தற்காலத்திய வாழ்வின் வெளிப்பாடுகளை கற்றுக் கொள்வது அதிலிருந்து இவைகளுக்கான அரசியல் அடிப்படைகளைப் பற்றி தொடர்ந்து உரையாடுவது
என்பது நாம் சளைக்காமல் செய்ய வேண்டிய பணியாக இருக்கிறது.
https://www.facebook.com/100080904177819/posts/945076118199185/?rdid=wCg92yC0tGxN3N4e
===============================
தேர்தல் பார்வை!
நடைபெறப் போகிற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை ஒட்டி பலரும், மக்கள் எந்த கட்சிக்கு ஓட்டு போடுவார்கள்? யாரை தேர்ந்தெடுப்பார்கள்? என்று கருத்துக் கணிப்புகளை வெளியிடுகிறார்கள். மக்களின் என்ன ஓட்டத்தை பதிவு செய்கிறார்கள். இதற்கென்று தனியார் நிறுவனங்கள் ஊடகங்கள் வேலை செய்கின்றன.
இவர்கள் பார்க்க மறுக்கும் சொல்ல மறுக்கும் இன்னொரு பக்கத்தை நாம் பார்க்க வேண்டும்.
இந்தத் தேர்தலில் முதலாளிகளும் ஆளும் வர்க்கமும் யாரை தேர்வு செய்ய விரும்புகிறார்கள்? என்பதைப் பற்றியும் நாம் மதிப்பிட வேண்டும். இது விரிவாக எழுதப்பட வேண்டிய கட்டுரை.
முகநூல் வாசிப்புக்கு பொருத்தமற்றதால் குறுகிய அளவில் சில மதிப்பீடுகளை நான் முன் வைக்கிறேன்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை பொருத்தவரை இப்போதைய அரசியல் சூழலில்
இந்திய கார்ப்பரேட் முதலாளிகளும், தமிழக முதலாளி குழுக்களும் திமுகவை தேர்ந்தெடுப்பதையே விரும்புவார்கள் என்பதற்கான அரசியல் அடிப்படைகளே அதிகம் இருக்கிறது. முதலாளி குழுக்களில் வழக்கம்போல மாறுபட்ட கருத்துடையவர்கள் இருந்தாலும், இந்திய ஆளும் வர்க்கம் மற்றும் கார்ப்பரேட் முதலாளிகளின் கணக்குப்படி தமிழ்நாட்டில் இப்போதைக்கு திமுக நீடிப்பதையே விரும்புவார்கள்.
காரணம், எதிர்க்கட்சி என்ற நிலையில் ஒரு ஒன்றுபட்ட சக்தி வாய்ந்த கட்சியாக அதிமுக இப்போது இல்லை. ஏற்கனவே மக்கள் போராட்டங்களையும் வெறுப்பையும் ஏற்படுத்திக் கொண்டதில் அதை முறியடிக்க கையாள்வதில் திறன் பெற்ற சக்தியாக அது வளரவில்லை. எடப்பாடி ஆட்சிக் காலத்தில் ஏராளமான மக்கள் போராட்டங்கள் , மோடி அரசின் அடிமை என பெயரெடுத்த விசயங்கள் இன்னும் மாறவில்லை. மறையவில்லை.
இந்த ஐந்து ஆண்டுகால ஆட்சிப் பகுதிகளும் முதலாளிகள் மற்றும் மூலதனத்திற்கு எதிரான தொழிலாளர் விற்க போராட்டங்களை வெளித் தெரியாமல் உருதுத் தெரியாமல் ஒடுக்கி கையாள்வதில் திமுக வெற்றி பெற்றிருக்கிறது. சட்ட வரம்புகளை மீறி கிளர்ச்சி நடவடிக்கைகளுக்கு அதாவது ஹைட்ரோ கார்பன் திட்ட போராட்ட எதிர்ப்பு, மோடி ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பின் அடையாளமாக ஜல்லிக்கட்டு போராட்டம், கனிமவள கொள்ளைகளுக்கு எதிரான போராட்டம், டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டம் போன்ற வகையிலான போராட்ட முறைகள் இயலாத வண்ணம்
தோளில் கை போட்டு கழுத்தை நெரிக்கும் கலையில் திமுகவின் அரசியல் வெற்றி பெற்று இருக்கிறது. எனவே இந்த வழிமுறையின் சாதகத்தை கட்சி அரசியல் ஈகோ இல்லாமல் ஆளும் வர்க்கம் வர்க்க பலா பலன் அடிப்படையில் பராமரித்துக் கொள்வதையே விரும்பும்.
ஒன்றிய அரசின் கார்ப்பரேட் பொருளாதாரக் கொள்கைகள் தனியார்மய ஒப்பந்த முறைகள் போன்றவற்றை கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக திறம்பட கையாள்கிறது. தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டம் தவிர வேறு பெரிய போராட்டங்கள் எழாத வண்ணம் சமூக போராட்ட சூழலை வேறு கட்சிகள் ஒருங்கிணைக்க முடியாத படி சிதறடித்துள்ளது.
எடப்பாடி ஆட்சிக் காலத்தில் துப்பாக்கிச் சூடு வரை போன தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச்சனை வரை அதை ஆர்ப்பாட்டமாக வசனம் பேசி எதிர்ப்பது போல மக்கள் உணர்ச்சிகளை கைப்பற்றிக் கொண்ட திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு அதனை ஒட்டிய அதிகாரிகள் மீதான நடவடிக்கைகள் இல்லாமல் மெல்ல மெல்ல தணல் அணையச் செய்தது.
போலீஸ் துறையையும் அதன் தவறுகளையும் கடுமையாக கண்டிப்பது ஒடுக்குவது என்று இல்லாமல் நிர்வாக நடவடிக்கைகள் மூலமாக சில மேற்பூச்சுகளை செய்து கொண்டே கூட்டணி கட்சிகளின் போராட்ட உரிமைகளை ஒடுக்குவது வரை திறம்படச் செய்கிறது.
பரந்தூர் விவசாய நில பறிப்பு,
கனிமவள கொள்ளைகள், கார்ப்பரேட்டுகளுக்கான வரவேற்புகள் என்று கச்சிதமாக
காரியங்கள் நடக்கின்றன. அண்ணா திமுக ஆட்சி காலகட்டத்தில் தாது மணல் கொள்ளை கனிமவளக் கொள்ளைக்கு எதிராக நடந்த கிளர்ச்சிகளும் மக்கள் போராட்டங்களும் அரசியல் ரீதியாக மேல் எழுந்து ஆட்சிக்கு அவப்பெயர் கொடுக்கும் அளவுக்கு வராதபடிக்கு இப்போது நடக்கும் கனிமவளக் கொள்ளைகள் கூட்டணி கட்சிகளின் முணகல்களோடு முடித்துக் கொள்ளப்படுகிறது.
பாசிசத்தை எதிர்ப்பதில் பாஜகவுக்கு இடம் தந்து விடக்கூடாது! எனும் வசனத்தின் மூலமாகவே இந்த இயற்கை வள சூறையாடல்கள், நில அபகரிப்புகள் நடக்கிறது. எதிர்த்து அம்பலப்படுத்தும் சமூக ஆர்வலர்கள் ஜபகர் அலி உட்பட வெறும் செய்தியாக கரைக்கப்பட்டு விடுகிறது.
காவி மத வெறியை விட டாஸ்மாக் போதை பெரிது அல்ல! ஊழலும் பெரிது அல்ல!
தனியார்மயத்தையும் யார் வந்தாலும் தவிர்க்க முடியாது!
கஞ்சா போதை சீரழிவு என்றால் கூட ஏன் குஜராத்தில் குடவுனே இல்லையா? என்று நேற்று வரை இவை எல்லாம் எடப்பாடி ஆட்சியில் எதிர்ப்பாக இருந்தவைகள், இன்று நார்மலைஸ் செய்யப்பட்டு இவைகளை முக்கிய பிரச்சனை இல்லை என்ற நியாயப்படுத்தும் அளவுக்கு அறிவு ஜீவிகளின் பிரச்சாரப் படைகளையும் திமுக தீனி போட்டு வளர்த்துள்ளது.
ஏதோ இந்த ஐந்து ஆண்டில் எந்த மக்கள் பிரச்சனையும் பெரிய அளவுக்கு இல்லை.
தொழிலாளர்கள் உழைப்பாளர்களுக்கு எந்த ஒடுக்குமுறையும் பிரச்சனைகளும் இல்லை!
பல நலத்திட்டங்களால் மக்கள் வாழ்வாங்கு வாழ்கிறார்கள்!
என்று ஒத்து ஊதும் படிக்கு கூட்டணி கட்சிகளாக உள்ள கம்யூனிஸ்டுகளை கட்டுக்குள் போராட வைக்கும் அளவுக்கு திமுகவின் அரசியல் பிடிமானம் தேர்ச்சி பெற்றிருக்கிறது.
இதயும் கடந்து தமிழகத்தின் முற்போக்கு சக்திகள் மத்தியில் இப்போதைக்கு திமுகவை விட்டால் வேறு வழியில்லை!
இந்த அளவுக்கு ஆவது பாஜகவை விட முற்போக்காக இருக்கிற கட்சி! எனும் வரையறையை மக்கள் மத்தியில் ஏற்பளிக்க செய்வதற்கான துண்டு துண்டு இயக்கங்களை எல்லாம் தனது பின்னணியை இசையாக தி.மு.க. கொண்டிருக்கிறது. எடப்பாடி ஆட்சியின் போது பெரும் முழக்கமிட்டு கருப்பு பலூன் கருப்புக்கொடி காட்டிய அளவுக்கு கூட மோடி வருகையின் போது எந்த முகச்சுழிப்பும் இல்லாத அளவுக்கு இத்தகைய அமைப்புகளை அடக்கி வைத்திருக்கிறது.
இப்படி சமூக அடித்தளத்தை பெரும் கொந்தளிப்புக்கும் எதிர்ப்பு போராட்டங்களுக்கும் ஆட்படாத வண்ணம் பராமரிக்கும் அரசியல் சூழலை பேணுவதில் இப்போதைக்கு எடப்பாடியைவிட, ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியே ஆளும் வர்க்கத்திற்கு தேவைப்படுகிறது.
ஒன்றியத்தில் எப்படி காங்கிரஸ் இப்போது ஆளும் வர்க்கத்தின் அரசியல் தேவைக்கு கையாளும் தன்மைக்கு லாயக்கற்றதான சக்தி அற்றதாக போய்விட்டதோ!
அப்படி இப்போது தமிழ்நாட்டு எதிர்க்கட்சிகளின் நிலைமையும்.
அதிமுக நேரடியாக பாஜகவுடன் கூட்டு. திமுக இன மத வாத அடிப்படையில் எதிர்ப்பு வசனங்களை பேசிக்கொண்டாலும் இந்திய பெரும் முதலாளி வர்க்கத்துடனும் அதை பிரதிபலிக்கும் இப்போதைய முகமான பாஜக உடனும் மறைமுக நட்பு சக்தியாக இருக்கிறது. வெளியில் ஆயிரம் வசனங்கள் பேசிக் கொண்டாலும் வெட்கப்படாமல் அதன் சிந்தூர் போர் வெறி நடவடிக்கைக்கு கொடி பிடிப்பது தூது செல்வது கலைஞருக்கு விருது கொடுக்கச் சொல்லி கேட்பது, பச்சை ரத்தம் குடிக்கும் ஆர்எஸ்எஸ் கும்பலை வைத்து நாணயம் வெளியிடுவது என்று எதற்கும் கூச்சப்படாமல் செய்யும் அளவுக்கு கூட்டணி மற்றும் ஆதரிக்கும் முற்போக்கு சக்திகளை பிசைந்து வைத்திருக்கிறது.
பாஜக வந்தா தேவையா? இன்று ஒரு பக்கம் கேள்வி கேட்டுக் கொண்டே பாஜகவோடு கட்சி என்ற அளவிலும் கைகோர்த்துக்கொண்டு
இது அரசியல் நாகரிகம் என மடை அடைக்கிறது.
இந்து சனாதனம் எதிர்ப்பு பேசிக்கொண்டே இந்துத்துவவாதிகளின் அடித்தளத்தின் எதிர்ப்புகளை சம்பாதிக்காமல் நாங்கள் தான் அதிக கும்பாபிஷேகம் நடத்தினோம் என கணக்கு காட்டி இந்து ஓட்டுகளை குளிர்விப்பதில் சாதனை படைக்கிறது. பிற சாதி சங்கங்களின் ஒட்டுகளில் பெறுவதில் மட்டுமல்ல பிராமணர் சங்க ஆட்கள்
"ஸ்டாலின் நல்ல மாதிரி" என்று ஆதரிக்கும் அளவுக்கு தன்னை அனைவருக்கும்மான அரசாக
நிறுவிக் கொண்டிருக்கிறது.
சமீபத்திய ஓபிஎஸ் செய்தியாளர் சந்திப்பில் கூட "தமிழ்நாட்டில் திமுக தான் வெற்றி பெறும்! என்று அமித் ஷா ஜி "சொன்னதாக கூறியதில் உண்மை இல்லாமல் இல்லை.
இன்னும் சொல்லப்போனால் குறிப்பாக ஒன்றிய பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அவர்கள் அறிவித்த தமிழ்நாட்டின் கனிம வள பாதை போன்ற பெரும் முதலாளிகளுக்கு தோதான எதிர்கால திட்டங்கள் திறமையாக கையாளப்பட இப்போதைக்கு திமுகவையே தோதான அரசியல் சக்தியாக இந்திய பெரும் முதலாளிகளும் ஆளும் வர்க்கமும் தெரிவு செய்யும் என்பது என்னுடைய மதிப்பீடு.
இதில் தவிர்க்க இயலாத மாற்றம் என்பது மக்களுடைய மனநிலை குறுக்கீடுகளின் மூலம் எதுவும் நடந்தால் உண்டே ஒழிய! நிதி மூலதன வளர்ச்சி கொள்ளைக்கும் தடைபடாத அதன் ஓட்டத்திற்கும் " வளர்ச்சி" எனும் பெயரில் " ஆரிய எதிர்ப்பு" " வடவர் எதிர்ப்பு" எனும் பெயரில் கவர்ச்சி அரசியல் பேசி மக்களை இந்த வளையத்திற்குள் இழுத்து வைக்கும் அரசியல் சக்தியாக திமுக வெற்றி பெறுவதையே முதலாளிகள் விரும்புவார்கள்.
பாஜகவின் அரசியல் என்பது கூட இன்றைய சூழலில், தானே தமிழ்நாட்டை கைப்பற்றும் வரை இப்போதைக்கு இரண்டாவது கட்சியாக தன்னை வளர்த்துக் கொள்ளும் "திமுக எதிர்ப்பு" இடத்திற்கு அதிமுகவை தள்ளிவிட்டு தன்னை தகவமைத்துக் கொள்ளும் முயற்சியாகவே இருக்கும்.
குருமூர்த்தி போன்ற ஆர்எஸ்எஸ் நபர்களின் வெளிப்படையான கருத்தாக கூட இதுவாக இருக்கிறது.
காங்கிரசை வந்தால் வா! என திமுக அடித்து விளையாடுவதை ரசிக்கிறது.
முதல்வர் ஸ்டாலின் தேர்தலுக்கான தனது கட்சிக்காரர்கள் கூட்டத்தில் சொல்வது போல, இந்த ஆட்சியின் காலப்பகுதியும் ஒரு மினி ட்ரெய்லர் தான்! இதன் முழு நீள படத்தை அதன் தயாரிப்பாளர்கள் ஓட்டுவதற்கு விரும்புகிறார்கள்!
https://www.facebook.com/share/1CKWXXv8Li/
- துரை. சண்முகம்
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு