தஞ்சை மாவட்டம் – கபிஸ்தலம் மேட்டுத்தெருவில் நடந்த இளைஞர்களின் தனிப்பட்ட மோதலை சாதிய மோதலாக மாற்றும் திராவிட மாடல் காவல்துறையை கண்டிப்போம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்

தஞ்சை மாவட்டம் – கபிஸ்தலம் மேட்டுத்தெருவில் நடந்த இளைஞர்களின் தனிப்பட்ட மோதலை சாதிய மோதலாக மாற்றும் திராவிட மாடல் காவல்துறையை கண்டிப்போம்!

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் மேட்டுத்தெருவில் இளைஞர்களின் அராஜகப் போக்கால் நடந்த கும்பல் மோதலில் ஈடுபட்டவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் (PCR) கீழ் வழக்கு பதிந்து – இந்த தனிப்பட்ட மோதலை சாதிய மோதலாக மாற்றும் அபாயத்தை உருவாக்கியுள்ளது திமுக அரசின் காவல்துறை. வரும் சட்டமன்றத் தேர்தல் நலன்களிலிருந்து திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் இவர்களின் நான்காண்டு தாழ்த்தப்பட்ட மக்கள் விரோத ஆட்சியின் அவலங்களை மூடிமறைக்க இத்தகைய அபாயகரமான சாதிய அணிதிரட்டல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய சாதிய அணி திரட்டல் தாழ்த்தப்பட்ட – பிற்படுத்தப்பட்ட சாதியிலுள்ள அனைத்து உழைக்கும் மக்களுக்கும் தீங்கு விளைவிக்கக் கூடியதே ஆகும்.

மேட்டுத்தெருவில் உண்மையாகவே என்ன நடந்தது? 

திருவையாறு கும்பகோணம் பிரதான சாலையில் கபிஸ்தலம் அருகே அமைந்துள்ளது மேட்டுத் தெரு கிராமம். இது காவிரி ஆற்றின் வடக்கு கரையில் அமைந்துள்ளது. அதற்கு நேரெதிராக காவிரி ஆற்றின் தெற்கு கரையில் அமைந்துள்ளது இளங்கார்குடி கிராமம். இவ்விரு கிராமங்களும் காவிரியாற்றின் குறுக்கே உள்ள பாலத்தால் இணைக்கப்பட்டுள்ளது. மேட்டுத்தெருவில் தான் டாஸ்மாக் சாராயக் கடை உள்ளது. இளங்கார்குடி உள்ளிட்ட சுற்றியுள்ள கிராமத்தை சார்ந்த இளைஞர்கள் பெரும்பாலும் மேட்டுத்தெருவில் உள்ள சாராயக் கடையில் சாராயம் வாங்கி அக்கம்பக்கத்தில் இருக்கும் பாதைகள் ஆற்றுப் பாலக் கட்டைகளில் அமர்ந்து ஆற அமர சாராயம் குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். 

அப்படித்தான், தீபாவளி அன்றும், மேட்டுத் தெரு தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் தெருவிற்கு செல்லும் பாதையில் உள்ள கொங்கன் ஆற்று பாலக்கட்டையில் இளங்கார்குடி பிற்படுத்தப்பட்ட சாதியைச் சார்ந்த பிரசன்னா, ரஞ்சித் ஆகிய இரு இளைஞர்கள் டூவீலரை நிறுத்தி வைத்து விட்டு சாராயம் குடித்துள்ளனர். அந்த வழியாக மேட்டுத்தெரு தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருப்புக்கு சென்ற சிலம்பரசன் உள்ளிட்ட 4 தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த இளைஞர்கள், “இங்கே தண்ணியடிக்காத அங்கிட்டுப் போ” என விரட்டியுள்ளனர். தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்த நால்வரும் கூட சாராய போதையில் இருந்துள்ளனர். வாய்வார்த்தைகள் முற்றி அடிதடியாக மாறி உள்ளது. இதில் இளங்கார்குடி பிற்படுத்தப்பட்ட சாதியைச் சார்ந்த இளைஞர் ரஞ்சித்தின் மண்டையை பிளந்துள்ளனர். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலைக்கு தாக்கியுள்ளனர். தாக்கப்பட்ட இருவரும் தங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கு போன் செய்துள்ளனர். "யாரை வேண்டுமானாலும் கூட்டிட்டு வா" என்று கூறி பிரசன்னா-ரஞ்சித்தின் (BC இளைஞர்களின்) டூவீலரை சிலம்பரசனும் அவரது கூட்டாளிகளும் (SC இளைஞர்கள்) பறித்து வைத்துக் கொண்டதோடு, திருவையாறு கும்பகோணம் பிரதான சாலை வரை BC இளைஞர்களை ஓட ஓட விரட்டியடித்தபடி பின் தொடர்ந்து தாக்கியுள்ளனர். 

இதில் மண்டை உடைந்த ரஞ்சித், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணுவின் மகனான ஐயப்பனின் மச்சானிடம் கார் ஓட்டுனராக பணிபுரிபவர். நடந்த சம்பவத்தை ஐயப்பனுக்கும் தெரிவித்துள்ளனர். ஐயப்பன் தன்னிடம் கையாளாக வேலை செய்யும் கலையை பிரச்சினையில் தலையிட்டு என்னெவென்று பார்க்க கூறியுள்ளார். கலையும் அவருடன் கூட்டாக தண்ணியடித்து வந்த மூப்பனார், வன்னியர், பறையர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட அனைத்து சாதி இளைஞர்களுமே மண்டை உடைக்கப்பட்ட ரஞ்சித்துக்காக மேட்டுத் தெருவுக்கு விரைந்துள்ளனர். பிரசன்னாவின் பெற்றோர் உறவினர்களும் கூட காவிரி பாலத்தின் அருகே ஆத்திரத்தில் நின்றுக் கொண்டிருந்தனர். இருப்பினும், அவர்கள் பிரச்சனையை மேட்டுத் தெரு பஞ்சாயத்துக் காரர்களை வைத்து பேசி தீர்க்க வேண்டும் எனும் நிலையில் தான் இருந்துள்ளனர். கும்பலாக வந்தவர்களிடம் கூட, "பொறுமையாக இருங்க தம்பிகளா பேசிக்கலாம்" என்றுதான் வலியுறுத்தியுள்ளனர்.பின்,  மேட்டுத்தெருவுக்கு சென்று பிரச்சனை குறித்து அங்குள்ளவரிடம் பேசிக்கொண்டிருக்கையிலேயே, ஒளிந்துக்கொண்டிருந்த சிலம்பரசன் வீட்டின் கொள்ளைப்புற வழியாக தப்பித்து ஓடியுள்ளார். இதை கண்டுக்கொண்ட கும்பல் வீட்டிற்குள் புகுந்து ஓடி அவரை பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால் சிலம்பரசன் தப்பித்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சித்தின் நண்பர்கள் சிலர் வீட்டில் இருந்த டி.வி உள்ளிட்ட சாதனங்கள், பாத்திரங்களை நொறுக்கினர். வீட்டின் முன்புறம் இருந்த தகர கொட்டகையையும் கையில் கிடைத்தவற்றை கொண்டு தாக்கி சேதப்படுத்தினர். 

சிலம்பரசனால் தாக்குதலுக்குள்ளான பிற்படுத்தப்பட்ட சாதியைச் சார்ந்த பிரசன்னாவின் அப்பாவும் அம்மாவும் கூட வன்முறையில் ஈடுபட வேண்டாம் என அவர்களை தடுக்க முயன்றுள்ளனர். கும்பலாக வந்தவர்களில் பாதி பேர் வெறுமனே வேடிக்கைப் பார்த்ததுடன் பிற்படுத்தப்பட்ட சாதியை சார்ந்த சிலரும் கூட வேண்டாம் என தடுக்க முயற்சித்துள்ளனர். அதையும் தாண்டி ஆத்திரவெறி கொண்ட சிலர் தப்பியோடிய சிலம்பரசன் மற்றும் அவரது உறவினரின் இரு பைக்குகளையும் உடைத்து நொறுக்கியுள்ளனர். கும்பலாக வந்தவர்கள் சிலம்பரசனின் வீட்டை மட்டுமே தாக்கியிருந்தாலும், கும்பலாக திரண்டு வந்ததானது மேட்டுத்தெரு தாழ்த்தப்பட்ட சாதி மக்களிடம் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோதல் தாக்குதலானது சாதிய வன்முறையாக மாறிவிடக் கூடாது என்ற அச்சம் இருதரப்பு உழைக்கும் மக்களிடமும் மேலோங்கி உள்ளது. 

சம்பவம் இவ்வாறிருக்கையில் முதலில் தாக்குதலுக்குள்ளான பிற்படுத்தப்பட்ட சாதியைச் சார்ந்த ரஞ்சித் உள்ளிட்ட 7 இளைஞர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து அவர்களை கைது செய்துள்ளது திமுக அரசின் காவல்துறை.

தேர்தல் வாக்குவங்கி அரசியலுக்காக இதனை சாதிய மோதலாக மாற்ற முயலும் திமுக கூட்டணிக் கட்சிகள் 

கடந்த 4 ஆண்டுகாலமாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சொல்லொண்ணா துயரம் இந்த திராவிட மாடல் சமூக அநீதி ஆட்சியில் இழைக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் ஏதாவது ஒரு மூலையில் தினந்தோறும் தாழ்த்தப்பட்ட சாதி இளைஞரோ அல்லது பெண்ணோ சாதி ஆணவத்திற்கு காவு வாங்கப்படுகின்றனர். கோவில்களில் நுழையக்கூடாது என விரட்டியடிக்கப்படுகின்றனர்; பாதைகள் மறுக்கப்படுகிறது; கல்வி உரிமை பறிக்கப்படுகிறது; வாழ்விடங்கள் பறித்து விரட்டியடிக்கபடுகின்றனர். அவர்களின் உரிமைகளுக்காக போராடினால் குடிநீரில் மலத்தை கொட்டுகின்றனர்; வாயில் சிறுநீர் திணிக்கின்றனர். இத்தகைய சாதிய வன்கொடுமைகளை தொடர்ச்சியாக ஆதரித்து ஆதிக்க சாதிவெறியினருக்கும் சாதிச்சங்களுக்கும் பக்கபலமாக இருந்துவருகிறது திமுக அரசு. குறிப்பாக வேங்கை வயலில் பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட சாதி மக்களையே குற்றவாளிகளாக்கி அவர்களுக்கு சமூக அநீதி இழைத்ததை பார்த்தோம். 

ஆனால், மேட்டுத்தெரு பிரச்சினை தமிழகத்தின் பிற பகுதிகளில் நடைபெறுவது போல் சாதிய அணி திரட்டல் மூலம் தாழ்த்தப்பட்ட சாதியினர்மேல் பிற்படுத்தப்பட்ட சாதி ஆதிக்க சக்திகள் நடத்திய திட்டமிட்ட வன்முறையல்ல. இளங்கார்குடி பகுதியில் அத்தகைய ஆதிக்க சாதிவெறி சங்கங்கள் இல்லை. மூப்பனாரின் சாதியக் கட்சியான தமிழ் மாநில காங்கிரசும் உழைக்கும் மக்களிடமிருந்து செல்லாக்காசாகி அந்நியப்பட்டு நிற்கிறது. பெரும்பாலும் அவர்கள் அதிமுக ஆதரவாளர்களாக உள்ளனர். கும்பல் வன்முறையில் ஈடுபட்டவர்களும் அதிமுக ஐயப்பனின் ஆதரவாளர்களாகவே உள்ளனர். இதன் காரணமாகவே இவர்கள் மீது முழு விசாரணையின்றி திட்டமிட்டு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்துள்ளது திமுக அரசின் காவல்துறை. திமுக அரசில் இதுவரை நடந்த உண்மையான சாதிய வன்கொடுமைகளுக்கு எஸ்.சி-எஸ்.டி சட்டத்தின் வன்கொடுமை தடுப்புப் பிரிவின் கீழ் வழக்கு பதியாத திமுக அரசு இச்சம்பவத்துக்கு வலிந்துவந்து இப்பிரிவின் கீழ் வழக்கு பதிந்துள்ளதானது வரும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குவங்கி நலன்களுக்கே ஆகும். 

அதேபோல், விடுதலை சிறுத்தைக் கட்சி உள்ளிட்ட தாழ்த்தப்பட்ட சாதியை அடையாளமாகக் கொண்ட சாதிய கட்சிகளும் விஜய்யின் தவெக கட்சியின் வருகையால் செல்வாக்கு இழந்துள்ளன. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தாழ்த்தப்பட்ட சாதி இளைஞர்கள் கூட விசிகவிலிருந்து விலகி தவெகவில் செயல்பட்டு வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் நடந்தேறி வரும் தாழ்த்தப்பட்ட மக்களின் மீதான ஆதிக்க சாதி வன்கொடுமைகளுக்கெதிரான வலுவான போராட்டங்களையோ – சட்ட ரீதியான போராட்டங்களையோ கட்டியமைக்காமல் திமுக கூட்டணியில் ஓரிரு சீட்டுகளுக்காக அமைதி காத்து வந்துள்ளன. அரசுக்கும் தாழ்த்தப்பட்ட சாதி மக்களுக்கும் இடையிலான முரண்பாட்டை சமரச பேச்சு வார்த்தையில் தீர்க்க முயன்று சந்தர்ப்பவாதமாக செயல்பட்டு வந்துள்ளன. அதே போக்கையே திமுக கூட்டணியிலுள்ள சிபிஐ –சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளும் கடைபிடித்து வருகின்றன. இதன் காரணமாகவே இக்கட்சிகள் அனைத்தும் தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் கூட செல்வாக்கு இழந்து நிற்கின்றன. இதன் காரணமாக இக்கட்சிகள் அனைத்தும் இழந்த செல்வாக்கை மீட்க கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. ஆகையால்தான், மதுபோதையாலும் இரு தரப்பு இளைஞர்களின் அராஜகப் போக்காலும் நடந்த இந்த தனிப்பட்ட மோதலை சாதிய மோதலாக மாற்றும் திமுக அரசின் காவல்துறைக்கு துணை சேர்க்கும் வகையில் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றன. நிகழ்ந்த மோதலை சாதிய வன்கொடுமையாக சித்தரித்து வருகின்றன. 

வரும் சட்டமன்றத் தேர்தலை கணக்கில் கொண்டு - தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இதுநாள் வரை இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு துணைபோனதை மூடிமுறைக்க அவர்களின் பக்கம் நிற்பதாக நாடகமாடுகின்றன. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கும் வகையிலான எவ்வித சட்ட முகாந்திரமும் இல்லாத சூழலில் கூட பிற்படுத்தப்பட்ட சாதியைச் சார்ந்த இளைஞர்கள் மீது அச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்துள்ளது திமுக அரசு.

திமுக அரசின் இத்தகைய நடவடிக்கைகளும் அதன் கூட்டணி கட்சிகளின் நடவடிக்கையும் அப்பகுதியில் சாதிய மோதலாக மாற்றும் அபாய நிலையை உருவாக்கியுள்ளன. இந்த அபாயத்தை இரு தரப்பு சாதியைச் சார்ந்த உழைக்கும் மக்களும் விரும்பவில்லை; அதை நோக்கிய அச்சத்திலேயே உள்ளனர். ஆனால் சாதியவாதிகள் இதை நல்லதொரு வாய்ப்பாக பார்க்கின்றனர். தங்களின் வாக்கு வங்கி அரசியலுக்காக இதை பயன்படுத்த முயற்சிக்கின்றனர். 

உழைக்கும் மக்களின் வர்க்க ஒற்றுமைக்குப் போராடுவோம் 

ஆளும் வர்க்க கட்சியினர் அமல்படுத்தி வரும் – மக்களை ஓட்டாண்டிகளாக்கி வரும் அரசியல் பொருளாதாரக் கொள்கைகளே இளைஞர்கள் இத்தகைய உதிரித்தனப் போக்கால் சீரழிந்து கிடப்பதற்கு அடிப்படையாக உள்ளது. பின்தங்கிய உற்பத்தி முறையால் இளைஞர்களுக்கு சரியான வேலைவாய்ப்பு கிடையாது. செங்கல் சூளை, ஆற்றில் மணல் அள்ளுவது, கட்டிட வேலை, திருப்பூரில் கூலி வேலை என நிலையற்ற அமைப்புசார தொழில்களிலேயே பெரும்பாலன இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய பொருளியல் நிலைமையே இவர்களின் உதிரித்தனத்திலும் வெளிப்படுகிறது. பற்றாக்குறைக்கு வீதிக்கு வீதி திறந்து வைத்திருக்கும் டாஸ்மாக் சாராயக் கடைகள் வேறு. இந்த உதிரிப் போக்கே இத்தகைய அராஜக மோதல்களுக்கு காரணமாக அமைந்துள்ளது. இதைக் கட்டுப்படுத்த அராஜக மோதலில் ஈடுபட்ட இருதரப்பு இளைஞர்களையும் அதற்குரிய சட்டப் பிரிவுகளில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – அவர்களை சீர்திருத்த வாய்ப்புகளை உருவாக்கி தரவேண்டும் என்பதே ஜனநாயக கோரிக்கையாக இருக்க முடியும். இந்த கோரிக்கையைதான் இரு சாதி தரப்பிலும் உள்ள உழைக்கும் மக்கள், இப்பிரச்சினை குறித்து ஆய்வில் ஈடுபட்டபோது நம்மிடம் முன்வைத்தனர். அதை விடுத்து இவர்களின் தனிப்பட்ட மோதலை சாதிய மோதலாக மாற்ற முயல்வது கடுமையான கண்டனத்துக்குரியது. 

இப்பகுதி வாழ் மக்கள் – இரு சாதியிலுமுள்ள மக்கள் வர்க்க அடிப்படையில் கூலி விவசாயத் தொழிலாளர்களே ஆவர். இவர்களில் பெரும்பாலானோர் வெற்றிலை கொடிக்கால் விவசாயக் கூலிகளாவர். சாதி பாகுபாடின்றி இவர்கள் அனைவரும் விடியற்காலையிலிருந்து அந்தி சாயும் வரை வெற்றிலை கொடிகளோடு இவர்களின் நரம்பு மண்டலமும் சுருண்டுப் போகும் அளவுக்கு சுரண்டப்படுகின்றனர். பிள்ளைகளின் எதிர்காலமாவது மாறும் என்றுதான் இப்படி உழைத்து கிடக்கிறோம். ஆனால் நடக்கும் சம்பவங்களைப் பார்த்தால் நடுக்கமாக உள்ளது என அச்சம் பீறிட நம்மிடம் குமுறுகின்றனர். 

உண்மை இவ்வாறிருக்க, சில தமிழ்தேசிய அமைப்புகள், எம்.எல். அமைப்புகள் பிரச்சினையை குறிப்பாக ஆய்வு செய்யாமல் அல்லது போதிய ஆய்வு செய்யாமலேயே பொத்தாம் பொதுவாக ஒருதலைபட்சமான நிலைபாடு எடுத்து திமுக மற்றும் விசிகவின் வாக்குவங்கி நலன்களுக்கான சாதி ரீதியான அணி திரட்டலுக்கு வலுசேர்க்கின்றன. இந்தப் போக்கு மறைமுகமாக ஆதிக்க சாதிச்சங்கங்களுக்கு ஆதரவாக முடியும் என்பதை இவர்கள் காண மறுக்கிறார்கள். ராமதாஸ் உள்ளிட்ட சாதிவெறியர்கள் ஏற்கெனவே வன்கொடுமை தடுப்புச் சட்டங்கள் தவறாக பயன்படுத்தக் கூடும் என்றும் அதை திரும்பபெற வேண்டும் என்றும் பேசி வரும் சூழலில், இத்தகைய தவறான முன்மாதிரியால் இச்சட்டம் நீர்த்துப்போகும் நிலை நேரிடும். இந்த அபாயத்தைக் காண மறுத்து கண்மூடித்தனமாக இந்த சம்பவத்தில் நிலைபாடு எடுத்துள்ளனர். இது கண்டனத்துக்குரியது. 

சாதி கடந்து வர்க்கமாக அணிதிரளும் உழைக்கும் மக்களால் மட்டுமே சாதிய வன்கொடுமைகளுக்கு முடிவுரை எழுத முடியும் என்பதை கீழ்தஞ்சை, தருமபுரி, ஆற்காடு, தெலுங்கானா வரலாறுகள் நமக்கு கற்றுக் கொடுத்துள்ளது. எனவே, மக்களை சாதிகடந்து உழைக்கும் வர்க்கமாக அணிதிரட்ட கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் நாம் நுட்பமாக பயன்படுத்த வேண்டும். அதுவே சாதிய வன்கொடுமைகளுக்கு சம்மட்டி அடி கொடுக்கும். ஆகையால், கீழ்க்கண்ட முழக்கங்களை மேட்டுத்தெரு சம்பவத்தில் நிலைபாடாக முன்வைக்கிறோம். 

தஞ்சை மாவட்டம் - கபிஸ்தலத்தில் நடந்த இளைஞர்களின் தனிப்பட்ட மோதலை சாதிய மோதலாக மாற்றும் திராவிட மாடல் காவல்துறையை கண்டிப்போம்!  

அனைத்து சாதியை சார்ந்த இளைஞர்களின் அராஜகத்தால் நடந்த மோதலை சாதிய மோதலாக மாற்றாதே!  

தவறு செய்த அனைத்து சாதி இளைஞர்கள் மீதும் நடவடிக்கை எடு!  

கும்பல் வன்முறையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடு!  பி.சி.ஆர் வழக்கு போட்டு சாதிய மோதலாக மாற்றாதே!  

உண்மையான சாதிய வன்கொடுமைகளுக்கு பி.சி.ஆர் போடாத திமுக அரசு இதற்கு போடுவது சாதி ரீதியான அணி திரட்டலுக்கே!  தேர்தலுக்கான வாக்கு வங்கி நலன்களுக்கே!  

வாக்கு வங்கி நலன்களுக்கான சாதி ரீதியான அணி திரட்டல் முயற்சிகளை முறியடிப்போம்!  அனைத்து சாதி உழைக்கும் மக்களின் வர்க்க ஒற்றுமைக்கு போராடுவோம்! 

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு