கரூர் மரணங்கள்: திமுக அரசின் சீரழிந்துபோன ஆட்சி நிர்வாகத்தின் படுதோல்வியே காரணம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்

கரூர் மரணங்கள்:   திமுக அரசின் சீரழிந்துபோன ஆட்சி நிர்வாகத்தின் படுதோல்வியே காரணம்!

கடந்த வாரம் (27.09.2025) அன்று கரூரில் தவெக கட்சியின் ரோட்ஷோ பரப்புரை நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் பெண்கள் உள்ளிட்ட 42 அப்பாவி உழைக்கும் மக்கள் மரணமடைந்தனர். இந்த மரணங்களுக்கு, ஆளும் திமுக அரசின் சீரழிந்துபோன ஆட்சி நிர்வாகத்தின் படுதோல்வியே முழுமுதற் காரணமாகும் – திமுக அரசே முதல் குற்றவாளியாகும். இவ்வளவு கூட்டத்தை திரட்டும்போது, அக்கூட்டத்தில் ஏற்பட வாய்ப்புள்ள அபாயக் கூறுகளை சிறிதும் பொருட்படுத்தாத தவெக கட்சியின் தலைமை அடுத்த குற்றவாளியாகும்.

நெரிசல் மரணங்களுக்கான காரணங்கள்

கரூர் வேலுச்சாமி புரம் கூட்ட நெரிசலில் மூச்சுவிடக் கூட முடியாமல், மயங்கியும் நுரையீரல் உள்ளிட்ட உள்ளுறுப்புகள் காயமடைந்தும் பாதி பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளனர். பாதி பேர் மருத்துவமனையில் போதிய சிகிச்சையின்றி இறந்துள்ளனர். இன்னும் பலர் கைகால்கள் முறிவுற்று முடமாக்கப்பட்டுள்ளனர். இத்துயர சம்பவத்திற்கான காரணங்கள்:

பல்லாயிரக்கணக்கான மக்களை ஒரு குறுகிய இடத்திற்குள் அடைத்து பிரச்சாரம் நடத்த அரசு அனுமதித்தது. 

தவெக கட்சியின் பிரச்சாரத்தை முடக்க அபாயகரமான நிபந்தனைகளை அரசு விதித்தது. குறிப்பாக பயண வழியில் மக்களை சந்திக்கக் கூடாது; அவர்களுக்கு முகம் காட்டக் கூடாது; கையசைக்கக் கூடாது போன்றவை. ஆங்காங்கே மக்கள் நடிகர் விஜய்யை பார்ப்பதை தடுத்து ஓரிடத்தில் குவிய வழிவகுத்தது.

கூட்டத்தினைக் கையாள முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாமை; உரிய கண்காணிப்பு இல்லாமை என அரசு நிர்வாகத்தின் மிக மோசமான பாதுகாப்பு குளறுபடிகள்.

மக்களை நீண்ட நேரம் காக்க வைத்தது; போதிய குடிநீர் உள்ளிட்ட வசதிகளை கூடசெய்து கொடுக்காத தவெக தலைமை.

போதிய மருத்துவ முதலுதவி ஏற்பாடு இல்லாமை; மக்களின் உயிரைக் காப்பாற்ற அடிப்படையான மருத்துவ வசதி கட்டமைப்புகளை கூட உருவாக்காதது.    

இதில் முதல்நிலை குற்றங்கள் அனைத்தும் திமுக அரசின் ஆட்சி நிர்வாகத்தினால் நிகழ்த்தப்பட்டவை. சம்பவத்தின் அபாயக் கூறுகளை (risk factors) பொருட்படுத்தாத குற்றம் விஜய் உள்ளிட்ட தவெக வின் தலைமையை சாரும்.  

சீரழிந்துபோன திமுக அரசின் ஆட்சி நிர்வாகம்

சம்பவம் நடைபெற்ற கரூர் வேலுச்சாமிபுரம் எவ்விதத்திலும் கட்சி பொதுக் கூட்டங்கள் நடத்த ஏற்ற இடமில்லை என்று திமுக அரசால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இவ்வாறிருக்கையில் அவ்விடத்தை ஏன் சென்ற வாரத்தில் நடைபெற்ற அதிமுக மற்றும் தவெக கட்சியின் கூட்டங்களுக்கு ஒதுக்கியது? ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் திமுகவின் முப்பெரும் விழாவுக்கு மட்டும் கருரில் பரந்த திடலை ஒதுக்கிய மாவட்ட நிர்வாகம் எதிர்கட்சிகளுக்கு இத்தகைய குறுகலான இடத்தை ஒதுக்குவதன் மூலம் எதிர்கட்சிகள் செல்வாக்கு பெறுவதை தடுக்க முயலுகிறது. தவெக கட்சியின் திருச்சி பிரச்சாரத்தின் போதே திமுக அமைச்சர் கே.என்.நேரு, “நாங்கள் எதிர்கட்சியாக இருக்கும்போது ஆளும்கட்சி அதைத்தான் செய்தது. நாங்களும் எதிர்கட்சிகளுக்கு அவ்வாறுதான் செய்வோம்” - எங்கள் இடத்தில் வந்து அவர்கள் செல்வாக்கு பெற்று சென்று விடுவார்களா என்ற தொணியில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசினார். இதைத்தான் கரூர் நிகழ்ச்சிக்கு இடம் ஒதுக்கியதிலும் பார்க்க முடிகிறது. தவெகவின் பிரச்சாரத்தை முடக்குவதாக எண்ணி மக்களுக்கு தீங்குவிளைவிக்கும் மேலே குறிப்பிடப்பட்ட வகையிலான அபாயகரமன நிபந்தனைகளை விதித்தது திமுக அரசு.

தவெக கட்சியினர் 10000 பேர் வருவார்கள் என்றுகூறிதான் பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்டார்கள் ஆனால் 27000 பேர் வந்துவிட்டார்கள் என அரசு தரப்பு கூறுகிறது. முதலில் ஒதுக்கப்பட்ட அந்த குறுகிய இடம் 10000 பேர் கூட தாராளமாக நிற்பதற்கு ஏற்ற இடம் இல்லை. இதை ஏற்கெனவே முடிவெடுத்த அரசு அதை மீறி அவ்விடத்தை ஒதுக்கியதன் காரணம் என்ன? கூட்ட நெரிசலில் மக்கள் செத்தால் சாகட்டும்  – அதை வைத்து தொடர் பிரச்சாரத்தை முடக்கலாம்; தவெக கட்சிக்கு நெருக்கடி கொடுக்கலாம் என்று தெரிந்தேதான் செயல்பட்டுள்ளது. 

ஏனெனில் இத்தகைய கட்டுக்கடங்காத கூட்டம் சமீபத்தில் முதல் முறை அல்ல. திருச்சியிலும் நாகப்பட்டினத்திலும் திருவாரூரிலும் பெரம்பலூரிலும் தவெகவின் ரோட்ஷோக்களில் இப்படித்தானே கூட்டம் கூடியது. மக்கள் நெரிசலில் சிக்கித் தவித்தனர். மேற்கூறிய அனைத்து இடங்களிலும் நாமக்கல்லிலும் ஏன் விக்கிரவாண்டி - மதுரை மாநாடுகளில் கூட கூட்ட நெரிசல் காரணமாக அசம்பாவிதங்கள் ஏற்பட்டுள்ளன. ஏற்கெனவே நடந்த கூட்டங்களில் 300 – 400 க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று மீண்டுள்ளனர். பெரம்பலூரில் திரண்ட கூட்டத்தைப் பார்த்து முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஒருவர் அசம்பாவிதம் நடப்பதற்கு வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளார். இவை எதையும் இந்த அரசு கணக்கில் கொள்ளவில்லை; அதை படிப்பினைகளாக கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை இந்த அரசு. 

சரி! அனுமதித்த அளவுக்கு மேல் கூட்டம் கூடிவிட்டார்கள் என்பதை எடுத்துக்கொண்டாலும், அதை கண்காணித்து அசம்பாவிதம் நடைபெறாமல் தவிர்க்க நிகழ்ச்சியை தடைசெய்யவுமில்லை. சம்பவம் இரவு 8 மணிக்கு நடைபெற்றதென்றால் கட்டுக்கடங்காத இந்த கூட்டம் சில மணித்துளிகளுக்கு முன்னால் தோன்றியதில்லையே! காலை 8 மணி முதலே மக்கள் வெள்ளம் போல குவிந்து வந்து கொண்டிருந்தர் தானே! 12 மணி நேரமாக கண்காணிக்காமல் கூட்டத்தை கட்டுப்படுத்த அல்லது மாற்று ஏற்பாடுகள் செய்ய என்ன நடவடிக்கை எடுத்தது இந்த கேடுகெட்ட அரசு. வெறுமனே வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தது. 

இந்த வருடம் ஏற்கெனவே மெரினா கடற்கரையில் திமுக அரசும் பாஜக அரசும் இணைந்து நடத்திய ஏர்ஷோவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 5 பேர் பலியாகினர். பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். அதைக் கூட இந்த அரசு அனுபவமாக எடுத்துக் கொள்ளவில்லை.  எனவே கரூர் சம்பவத்தை எதிர்பாராத விபத்து என்று கடந்து செல்லவே முடியாது. இது அப்பட்டமான படுகொலையே! இவை அனைத்தும் காவல்துறை, மாவட்ட ஆட்சி நிர்வாகம், உளவுத்துறை உள்ளிட்ட  திமுக அரசின் ஒட்டுமொத்த ஆட்சி நிர்வாகமும் சீரழிந்து கிடப்பதையே அப்பட்டமாக காட்டுகிறது. திமுக அரசின் இந்த ஆட்சி நிர்வாகமே இந்த படுகொலைகளுக்கு முதல் காரணம் – திமுக அரசே முதல் குற்றவாளி.

நெரிசலில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டு உடனடியான மருத்துவ சிகிச்சைகள் அளித்து காப்பாற்றி இருக்க முடியும். ஆனால், தனியார்மய –தாராளமயக் கொள்கைகளில் முற்றிலும் சீரழிக்கப்பட்ட மருத்துவக் கட்டமைப்புகளால் பாதிக்கப்பட்டவர்களை அவசர அவசரமாக போஸ்ட்-மார்டம் செய்யத்தான் முடிந்தது. அவர்களின் உயிரைக் காக்க முடியவில்லை. இதுதான் இந்த ஆட்சியாளர்கள் மாறிமாறி அமல்படுத்திய கொள்கைகளின் விளைவு. இத்தகைய தனியார் மாடல்தான் இந்த திராவிட மாடல். மேலும் அத்தியாவசிய சேவைத்துறைகள் முழுவதையும் தனியாருக்கும் பெரும் கார்ப்பரேட்களுக்கும் கூறுபோட்டு விற்றுவருவதையே நாம் மு.க.ஸ்டாலின் ஆட்சி காலம் முழுவதிலும் தொடர்ச்சியாக பார்த்து வருகிறோம். 

மக்களின் உயிரை காக்க வக்கற்ற சமூக அநீதி மாடல்தான் - மு.க.ஸ்டாலினின் இந்த கேடுகெட்ட திராவிட மாடல்.

பொறுப்பற்ற தவெக கட்சியின் தலைமை

திமுக அரசு முதல் குற்றவாளி என்றால், விஜய் உள்ளிட்ட தவெக கட்சியின் தலைமை அடுத்த நிலை குற்றவாளிகள். தவெக தலைமையின் பொறுப்பற்ற அலட்சியப் போக்குகளும் இந்த மரணங்களுக்கு முக்கிய காரணங்கள்தான். கூட்டம் அதிகமாக வரும் என்று கருதி வார இறுதிநாளான சனிக்கிழமையன்று ரோட்ஷோவை நடத்தியுள்ளது. இப்படியான கட்டுக்கடங்காத கூட்டத்தை திரட்டி ரோட்ஷோவை நடத்துவதில் உள்ள அபாயக் கூறுகளை தவெக தலைமை கணக்கில் கொள்ளவே இல்லை. முந்தைய பிரச்சாரக் கூட்டங்களில் நடைபெற்ற அசம்பாவிதங்களை பொருட்படுத்தாமல் தவெக தலைமையும் அலட்சியமாக செயல்பட்டுள்ளது.

மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை கூட்டம் நடத்த அனுமதி வாங்கிவிட்டு - வலைதளங்களில் மதியம் 12.00 மணிக்கே நிகழ்ச்சி துவங்கிவிடும் என அறிவிப்பு விட்டதன் காரணமாகவே, மக்கள் காலை 8.00 மணிக்கே வேலுச்சாமி புரத்தில் ஆயிரம் ஆயிரமாகத் திரள துவங்கிவிட்டனர். ஆனால் விஜய் வந்ததோ இரவு 7 மணிக்கு. அதுவரை அந்த நெரிசலான இடத்தில், வெயிலில் காக்க வைத்து அலைகழிக்கப்பட்டனர். அரசுதான் உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்து கொடுக்கவில்லையென்றால், தவெக தொண்டர்படை அமைத்து கூட்டத்தினை ஒழுங்குப்படுத்தி இருக்க வேண்டும். அவர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும். தன்னைப் பாதுகாத்துக் கொள்ள ‘ஒய்’ பிரிவு படையையும் பவுன்சர் படையையும் வைத்திருக்கும் விஜய் மற்றும் தவெக தலைமை தன்னுடைய கட்சியினரைப் பாதுகாக்க தொண்டர்படை அமைக்காதது ஏன்? அவ்வளவு கூட வேண்டாம் - அவர்களுக்கு கழிவறை வசதியோ போதிய குடிநீர் வசதியோ கூட இக்கட்சியின் தலைமையால் ஏற்பாடு செய்து கொடுக்க முடியவில்லை. மக்கள் கூட்ட நெரிசலில் போதிய ஆக்சிஜனும் – குடிநீரும் இல்லாமல் இருந்ததால்தான் இரவில் ஏற்பட்ட தள்ளுமுள்ளினால் எளிதில் மயக்கமடைந்து உயிர்போகும் அபாய நிலை உருவாகியது. 

சம்பவம் நடந்தபிறகு பாதிக்கப்பட்ட தன்னுடைய கட்சியினருக்கு ஆதரவாக இல்லாமல் தன்னைப் பாதுகாத்துக் கொண்டு திமுக அரசின் போலீஸ் உதவியுடன் சென்னைக்கு திரும்பியுள்ளார். 2 நாட்கள் கழித்து வீடியோ வெளியிடுகிறார். அதில் இறந்த அப்பாவி மக்களுக்காக சிறிய அனுதாபம் கூட தெரிவிக்கவில்லை. அதில் காவல்துறை, உளவுத்துறை, மாவட்ட ஆட்சி நிர்வாகம் உள்ளிட்ட திமுக அரசின் ஆட்சி நிர்வாகத்தின் சீரழிவுகளையோ – பொறுப்பற்ற அணுகுமுறையையோ அவர் கேள்விக்குள்ளாக்கவில்லை. மாறாக “சி.எம். சார் பழிவாங்குவதென்றால் என்னை பழிவாங்குங்கள்” என சினிமா வசனம் போல பேசுகிறார். அதே போல  ஊடகங்களில் திமுக அரசின் திட்டமிட்ட சதி என பேசிக்கொண்டு உயர் நீதிமன்றத்தில் “நடந்தது விபத்து” என பல்டியடித்துள்ளது. அங்கும் அரசின் பொறுப்பற்ற அணுகுமுறையை கேள்விக்குள்ளாக்கவில்லை தவெக. இப்படி திமுகவிடம் அப்பட்டமான சமரசவாதப் போக்கையே கையாள்கிறது தவெக தலைமை, 

இதுவரை தவெக தன்னுடைய கட்சியின் கொள்கை என்ன - அரசியல் என்ன என்பதை தெளிவாக முன்வைக்கவே இல்லை. நடிகர் விஜய்-யின் நாயக பிம்பத்தை மட்டுமே முன்வைத்து 2026ல் அரியணையேற துடித்து வருகிறது. அதற்காகவே கூட்டம் கூட்டமாக மக்களைத்  திரட்டி மாஸ் – கெத்து காண்பித்து அதை ஓட்டாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. திராவிட கட்சிகளின் 60 ஆண்டு கால தோல்வியில் மாற்றை தேடி மக்கள் அலைமோதுகின்றனர். தமிழக திருத்தல்வாத கம்யூனிஸ்ட் கட்சிகளும் இந்த திராவிட கும்பலையும் அண்டிப்பிழைத்தே காலத்தை ஓட்டி வருவதால், மக்களுக்கு அவர்கள் மீதும் துளியும் நம்பிக்கை இல்லை. இந்த நிலையில்தான், மீண்டுமொரு புதைசேற்றையே மாற்றாக இந்த ஆளும்வர்க்க கும்பல் அவர்களுக்கு முன்னிறுத்துகிறது. எனவே இந்த தவெக கட்சியும் நடிகர் விஜய்யும் மக்களின் அவலங்களை போக்க வந்த மீட்பர்கள் அல்ல. இது திராவிட பாரம்பரிய திரைக்கவர்ச்சி சீரழிவின் தொடர்ச்சியே ஆகும்.

வெளிவரும் உண்மைகளை மூடிமறைக்கும் பாசிச திமுக அரசு

இத்துயரச் சம்பவம் நடக்கும் வரை நடக்கட்டும் என வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த திமுக அரசு, தான் எதிர்ப்பார்த்ததைவிட நிலைமை மோசமடைந்திருந்த சூழலில் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள துரிதமாக செயல்பட்டது. செந்தில்பாலாஜி, அன்பில் மகேஷ், உதயநிதி, மு.க.ஸ்டாலின் என அனைவரும் கரூர் சென்று மக்களுக்காக நிற்பதுபோல நாடகமாடினர். அவசர அவசரமாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசனை அழைத்து ஒரு நபர் ஆணையம் அமைத்தது. விசாரணை எந்த கோணத்தில் இருக்க வேண்டும் என கதைப்போக்கினையும் (narrative) அமைத்துக் கொடுத்தது. காவல்துறை கூடுதல் இயக்குநர், கூடுதல் தலைமை செயலாளர், செந்தில் பாலாஜி இவர்கள் மூலமாக புனைவுசெய்யபட்ட (fabricated) வீடியோ ஆதாரங்களை கொண்டு தன் ஆட்சிக்கு பங்கம் வராத விதமாக தவெக தரப்பை கடுமையாக குற்றஞ்சாட்டி வருகிறது. மேலும் உயர் நீதிமன்றத்தின் மூலம் சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க ஏற்பாடு செய்தது. இந்த விசாரணைக் குழுக்களும் கூட ஆளும் வர்க்க மற்றும் ஆளும் கட்சி சார்புடையவையே ஆகும். குறுகலான இடம் ஒதுக்க நிர்பந்தித்தது, விஜய்யின் மீது செருப்பு வீசியது, கூட்டத்திற்குள் அடியாட்களை இறக்கியது உள்ளிட்ட பல்வேறு சதி வேலைகளில் ஈடுபட்டுள்ள செந்தில்பாலாஜியை இதுவரை விசாரணை வளையத்தில் கூட கொண்டுவரவில்லை இந்த ஆணையம். அப்படியே அவை உண்மையை அறிக்கையாக தயாரித்தாலும் கூட அவை குழித்தோண்டி புதைக்கப்படும் என்பதை தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திலேயே நாம் பார்த்தோம். அச்சம்பவத்தில், அருணா ஜெகதீசன் தயாரித்த அறிக்கையை கூட இந்த திமுக அரசு வெளியிடவே இல்லை. அதிமுகவின் எடப்பாடி மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை; மாவட்ட ஆட்சியர் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை – மாறாக அவருக்கு பதவி உயர்வு அளித்து அழகு பார்த்தது மு.க.ஸ்டாலின் அரசு. ஆளும் வர்க்கத்தின் பல்வேறு பிரிவினரான இவர்கள் தங்களுக்குள் சமரசம் செய்து கொண்டனர் என்பதை தூத்துக்குடி சம்பவத்திலேயே பார்த்தோம். 

தற்போது கரூர் சம்பவத்திலும் அரசாங்க நிர்வாகம் உண்மையை வெளியில் கொண்டு வரும் என்பதும் மாயையே. விஜய், ஆதவ் உள்ளிட்ட தவெகவின் தலைமை நிர்வாகிகளை குற்ற வழக்கில் இவர்கள் இதுவரை சேர்க்கவும் இல்லை. எவ்வித நடவடிக்கையும் எடுக்கவுமில்லை. இதிலேயே இந்த ஆளும் வர்க்க கும்பலின் சமரசப் போக்கு அப்பட்டமாகியுள்ளது. இவர்களுக்கு உழைக்கும் மக்கள் எப்போதும் பலிகடாக்கள்தான். அவர்களுக்கான நீதி இந்த ஆட்சி அதிகார அமைப்பு முறையில் கிடைக்கப் போவதில்லை. ஆதலால்தான், ஜனநாயக அமைப்புகள், இடது சாரி இயக்கங்கள், அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய விசாரணைக் குழுவை நியமிக்க வேண்டும் என்று கோருகிறோம்.

அனைத்து ஊடகங்களும் ஆட்சியாளர்களின் ஆளும் வர்க்க கும்பலின் ஊதுகுழலாக செயல்பட வேண்டும் என்று பாஜகவை போலவே திமுகவும் செயல்படுகிறது. பாசிச முறையில் ஊடகங்களின் குரல்வளையை நசுக்கி வருகிறது. ரெட்பிக்ஸ் யூடியூப் சானலின் பெலிக்ஸ் கரூர் சம்பவத்தை தனது நிலைபாட்டிலிருந்து ஆய்வு செய்து ஒரு சில வீடியோக்களை வெளியிட்டு வந்தார். அவை திமுக அரசின் சதிகளையும் சீரழிந்த ஆட்சி நிர்வாகத்தையும் அம்பலப்படுத்தும் விதமாக இருந்தது. அவரின் கருத்துரிமையை பறித்து பாசிச முறையில் கைது செய்தது திமுக அரசு. அதேபோல புதிய தலைமுறை தொலைகாட்சியின் சாட்டிலைட் ஒளிபரப்பை அரசு கேபிள்டிவி நிறுவனத்தின் மூலமாக முடக்கியுள்ளது. 2026 தேர்தலை கணக்கில் கொண்டு வெளிவரும் உண்மைகளை கண்டு அஞ்சுகிறது. திமுகவை விமர்சிக்கும் அனைத்து ஊடகங்களையும் பாசிச முறையில் தொடர்ச்சியாக ஒடுக்கி வருகிறது.

பிண அரசியல் செய்யும் பாஜக உள்ளிட்ட ஓட்டுக் கட்சிகள்

குஜராத் கலவரங்களையும், மணிப்பூர் கலவரங்களையும் கட்டமைத்து ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்த பாஜக – கும்பமேளா, ஏர்ஷோ போன்றவற்றின் மூலம் நூற்றுக்கணக்கான மக்களை கொன்று குவித்த அதே பாஜகதான் கரூர் சம்பவத்திற்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறது. ஏற்கெனவே அரியலூர் பள்ளி மாணவி லாவண்யா மரணத்தை வைத்து பிண அரசியலில் ஈடுபட்டது. தற்போது கரூர் சம்பவத்திலும் அத்தகைய முயற்சியில் ஈடுபட்டுள்ளது. பிண அரசியலில் ஈடுபட்டு, தவெக – திமுக முரண்பாட்டை பயன்படுத்தும் சதி வேலைகளில் இறங்கி விட்டது. நடிகை ஹேமாமாலினியின் தலைமையில் ஒரு குழுவை கரூருக்கு உடனடியாக அனுப்பி வைத்ததோடு பேரம் பேசத் துவங்கிவிட்டது; விஜயையும் திமுகவையும் மிரட்டி அடிபணிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதற்கு அதிமுகவும் துணை போகிறது.  

இந்த சம்பவத்தை முன்னிட்டு காங்கிரசின் ராகுல்காந்தியும் வருத்தம் தெரிவிப்பதுபோல நாடகமாடி விஜய்க்கு ஆறுதல் தெரிவித்து வருகிறார். தவெகவை அழைத்து பேசி 2026 தேர்தல்களுக்கான கூட்டணி கணக்குகளை தீட்டி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 

முன்னாள் காங்கிரஸ் எம்.பி. விஜயதாரணி பேசுகையில், விஜய் கட்சி துவங்குவதற்கு முன்பே ராகுல் காந்தியை சந்தித்து பேசி – அவரின் ஆதரவுடன்தான் கட்சியே துவங்கினார்” என்கிறார். 

காங்கிரசின் முன்னாள் தமிழக தலைவர் கே.எஸ். அழகிரி பேசுகையில், “ஸ்டாலினிடம் தெரிவித்துவிட்டுதான் கரூர் சம்பவத்தையொட்டி ராகுல்காந்தி விஜய்யிடம் பேசினார்” என்கிறார்.  

விசிகவின் பொதுச் செயலாளர் திருமாவளவன் பேசுகையில், “விஜய்யை ஏன் இன்னும் கைது செய்யவில்லை. தமிழக காவல்துறைக்கும் தவெகவுக்கும் அண்டர்கிரவுண்ட் டீலிங் உள்ளதாக தெரிகிறது” என்கிறார்.

இவ்வாறு, பாஜக மட்டுமில்லாமல், “இந்தியா” கூட்டணிக்குள் உள்ள அனைத்து கட்சிகளும் தவெகவுடன் திரைமறைவில் பேர அரசியலில் ஈடுபட்டு வருவதேயே இவை அப்பட்டமாக எடுத்துக் காட்டுகின்றன. 

இதுநாள் வரை, திராவிடமும் திமுகவும்தான் இந்த மண்ணுக்கு பிடித்த சாபம் என வாய்கிழிய பேசி வந்த நாம் தமிழர் கட்சியினர் கரூர் சம்பவத்தில் தங்களது வாய் வீச்சுகளை தவெக மீது ஏவி வருகின்றனர். கடமைகளை செய்யத் தவறிய திமுக அரசினை துளியளவும் விமர்சிக்கவில்லை – மாறாக திமுகவின் ஐ.டி. விங்கை போலவே நாம் தமிழர் கட்சியினரும் தவெகவுக்கு எதிரான வீடியோக்களை பரப்பி திமுக அரசுக்கு பக்கபலமாக செயல்பட்டு வருகின்றனர். வரும் தேர்தலில் தவெகவின் பங்கேற்பானது தன்னுடைய இருப்பையே காலி செய்துவிடும் எனும் அச்சத்தில் இவ்வாறான நடவடிக்கைகளில் நாம் தமிழர் கட்சி ஈடுபட்டு வருகிறது. இதே அச்சத்தில் இருந்துதான் விசிகவும் திமுக அரசின் ஊதுகுழலாக செயல்படுகிறது.

சிபிஐ, சிபிஎம் கட்சிகளோ விஜய்க்கு புத்திமதி கூறி வருகின்றன – நடக்ககூடாதது நடந்துவிட்டதாம். இச்சமயத்தில் ஓடி வந்து உதவிய திமுக அரசுக்கு நன்றி தெரிவிக்காமல் அரசுக்கு எதிராகவே விஜய்பேசுவது தவறாம்; இந்தப் போக்கு ஆபத்தானதாம்; இவர்களை போலவே 2-3 சீட்டுக்காக திமுகவிடம் சரணடைய   வேண்டும் – என விஜய்க்கு புத்திமதி கூறி வருகின்றனர் இந்த அறிவாலய அறங்காவலர்கள்.  

இப்படி அனைத்து தேசிய மாநில கட்சிகளும் மக்களின் உயிரை துச்சமென மதித்து பிணத்தை வைத்து அரசியல் செய்யதான் பார்க்கின்றனவே ஒழிய பாதிக்ககப்பட்ட மக்களுக்கு உரிய நீதி கிடைக்க குரல் எழுப்பவில்லை; இவை எழுப்பவும் செய்யாது. 

இவர்கள் அனைவரும் நீ இந்த கட்சியின் பி டீம் – நீ அந்த கட்சியின் பி டீம் என மாறிமாறி வாய்ச்சவடால் அடித்து வருகின்றனர். ஆனால் உண்மையில் இவர்கள் அனைவரும் ஒரே டீம் தான். பரந்துபட்ட உழைக்கும் மக்களுக்கு எதிரான ஆளும் வர்க்க கும்பலின் பல்வேறு பிரதிநிதிகள்தான் என்பதே நாம் புரிந்து கொள்ள வேண்டிய வர்க்க அரசியல்.

கம்யூனிச அரசியல்பால் வென்றெடுப்போம்

இத்தகைய ரோட்ஷோக்களை மிகச் சமீபத்தில் துவங்கி வைத்தது மோடிதான். அதன் தொடர்ச்சியாகத்தான் தவெகவின் கூட்டம் சேர்க்கும் இந்த ரோட்ஷோவும் நடந்தேறி வருகிறது. இவை மீண்டும் அனுமதிக்கப்பட்டால் மென்மேலும் பல உயிர்களை காவு வாங்கும். ஆகையால், நாடு முழுவதும் இத்தகைய ரோட்ஷோக்கள் உடனடியாக தடைசெய்யப்படவேண்டும்.

தேசிய அளவில் உள்ள அனைத்து சினிமா பிரபலங்களையும் பாஜகவும் காங்கிரசும் கூட தங்களது அரசியல் செல்வாக்குக்கு தொடர்ச்சியாக பயன்படுத்தியே வருகின்றன. தமிழகத்தில் இந்த நிலை இன்னும் மோசம். ஈ.வெ.ரா முதல் மு.க.ஸ்டாலின் வரை அனைத்து திராவிட கட்சியினரும் தமிழ்நாட்டின் சினிமா பிரபலங்களை தங்கள் கட்சிகளின் செல்வாக்கை அதிகரிப்பதற்காக பயன்படுத்தியே வந்துள்ளன. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் முதல் உதயநிதி, கமல், விஜய் வரை எவ்வித சமூக பொறுப்பும் தியாகங்களும் செய்யாதவர்கள்தான் தமிழகத்தின் அரசியல் பீடையாக மாறியுள்ளனர். இத்தகைய சீரழிந்த சினிமா கூட்டத்தைதான் சிபிஐ –சிபிஎம் கட்சிகள் கூட “புரட்சித் தலைவர்”களாக்கி கொண்டாடியதோடு அவர்களுக்கு பாதந்தாங்கிகளாக மாறின. ஆனால் தவெகவினர் மட்டும் இவர்களுக்கு தற்குறிகளாம்! கொடுமை!! தவெகவினரை சினிமா ரசிக மூடர் கூட்டம்  - தற்குறிகள் என தூற்றும் திமுகதான் கல்வியில் சிறந்த தமிழ்நாடு எனும் நிகழ்ச்சியில் முன்னணி சினிமா நடிகர் நடிகைகளையும் இயக்குநர்களையும் புகழ் லாவணி பாட வைத்து அக மகிழ்ந்தது. தனது மாநாடுகளிலும் பொதுக் கூட்டங்களிலும் அரைகுறை உடைகளுடன் கவர்ச்சி நடனம் ஆட வைத்து இளைஞர்களையும் பொதுமக்களையும் சீரழித்து வருகிறது. டாஸ்மாக், அபின், கஞ்சா போன்றவற்றை ஏராளமாக புழங்கவிட்டு மக்களின் போராட்டக் குணத்தை மழுங்கடித்து வருகிறது. அவர்கள் அரசியல் விழிப்புணர்வு கல்வி பெறாதவாறு அடிமைக் கல்வியின் மூலம் காயடித்து வருகிறது. இவை அன்று தொடங்கி இன்று வரை நீடிக்கிறது. இதற்கு விஜய்யும் விதிவிலக்கில்லை.

ஆனால் இவை அனைத்தையும் மூடிமறைத்து திமுகவின் அடிவருடிகளாக செயல்படும் சந்தர்ப்பவாத கம்யூனிஸ்ட்களும், ஓய்வுபெற்ற மார்க்சியர்களும் திமுக அரசின் உறுப்பாக மாறி மக்களுக்கு துரோகம் இழைக்கின்றனர். பார்ப்பனிய - மதவாத எதிர்ப்பு எனும்பெயரில் திமுகவின் பாசிச நடவடிக்கைகளுக்கு துணைபோகின்றனர். உழைக்கும் மக்களுக்கு பாட்டாளி வர்க்க அரசியல் போதிப்பதற்கு மாறாக அவர்களை தற்குறிகள் என கடுமையாக சாடி வருகின்றனர். அவர்களாகத் தானே போய் செத்தார்கள் - செத்தால் செத்து ஒழியட்டும். அவர்களுக்கு நிவாரணம் வழங்கக் கூடாது என்ற விஷமத்தனமான பார்வையும் இவர்களிடம் உள்ளது. இந்த பார்வை கடுமையான கண்டனத்துக்குரியது.  

எனவே, உழைக்கும் மக்களாகிய நாம் அனைவரும் இவ்வுண்மைகளை உணர்ந்து திரைமோகம் – கதாநாயக வழிபாட்டை கைவிட்டு நமக்கான அரசியல் வழியை பற்றிக்கொள்ள வேண்டும். கரூர் சம்பவம் நடந்த தினத்தின் மறுநாள்தான் (28.09.2025) இந்திய இளைஞர்களின் நிஜ நாயகன் பகத்சிங்கின் பிறந்தநாள். நாம் அனைவரும் இந்த கொடூர ஆட்சியாளர்களுக்கு எதிராக பகத்சிங்காக மாறினால்தான் விடியல் பிறக்கும். உழைக்கும் வர்க்கத்தின் ஒரே அரசியல் கொள்கையான கம்யூனிச அரசியலை அனைத்து உழைக்கும் வர்க்கத்திடம் கொண்டு சேர்ப்பதே இன்றைய நமது அத்தியாவசிய கடமையாகி உள்ளது. அவ்வழியில் கீழ்க்கண்ட முழக்கங்களின்பால் அணிதிரள அழைக்கிறோம்.  

கரூர் மரணங்கள்!

திமுக அரசின் சீரழிந்துபோன ஆட்சி நிர்வாகத்தின் படுதோல்வியே காரணம்!

தவெகவின் முந்தய கூட்டங்களின் அசம்பாவிதங்களை கணக்கில் கொண்டு, உரிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடாத கரூர் மாவட்ட SP மற்றும் ஆட்சியரை பணி நீக்கம் செய்!

முந்தய கூட்டங்களின் அசம்பாவிதங்களை பொருட்படுத்தாமல் வார இறுதி ரோட்ஷோக்களை திட்டமிட்டு, மக்களை காக்கவைத்து, குடிநீர் உள்ளிட்ட வசதிகளைகூட செய்து தராத விஜய் உள்ளிட்ட தவெக கட்சியின் தலைமை நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடு!

காவல்துறை அமைச்சரான மு.க.ஸ்டாலினே! அசம்பாவிதங்களுக்கு பொறுப்பேற்று காவல்துறை பொறுப்பில் இருந்து பதவி விலகு!

ஜனநாயக அமைப்புகள், இடது சாரி இயக்கங்கள், அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய விசாரணைக் குழுவை நியமி!

கூட்டத்தை சீர்குலைக்க முயன்ற செந்தில் பாலாஜியை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வா!

குறுகிய இடத்தில் அதிகளவு மக்களை குவிக்கும் ரோட்ஷோக்களை தடை செய்!

இறந்தவர்களின் குடும்பத்தினர்க்கு நிரந்தர அரசுப்பணி வழங்கு !

திமுகவை விமர்சிக்கும் ஊடகங்களை ஒடுக்காதே! பெலிக்ஸ் உள்ளிட்ட பத்திரிக்கையாளர்களை விடுதலை செய்! வெளிவரும் உண்மைகளை முடக்காதே!

தவெக - திமுக முரண்பாட்டை பயன்படுத்தி பிண அரசியல் செய்யும் பாஜகவின் சதிகளை அம்பலப்படுத்துவோம்!

திரைக்கவர்ச்சி, கதாநாயக வழிபாட்டில் சீரழியும் மக்களை கம்யூனிச அரசியல்பால் வென்றெடுப்போம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்