மார்க்சிய மானுடவியல் – ஒரு சிறிய அறிமுகம்
அ.கா.ஈஸ்வரன்

மார்க்சிய மானுடவியல் என்று ஒன்று இருக்கிறதா? என்கிற கேள்வி எழும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
மேலை நாடுகளில் உள்ள கல்விப் புலத்தில் மார்க்சிய மானுடவியல் (Marxist Anthropology) எப்போதோ வந்துவிட்டது.
நம் நாட்டில் மானுடவியல் என்னும் துறையே இன்னும் புதியதாகவே இருக்கிறது, மார்க்சிய மானுடவியல் என்பது கேள்விபடாத ஒன்றாகவே இருக்கிறது. அதனால் மார்க்சிய மானுடவியல் என்பது பற்றிய சிறு அறிமுகத்தைப் பார்ப்போம்.
அறிமுகத்துக்கு முன் ஒன்றை சொல்ல வேண்டும். மார்க்சிய மானுடவியல் என்பது தேவையா?, இது வர்க்கப் போராட்டத்தை விட்டு விலகுவதற்கு தோன்றிய திசை விலகலாகும் என்று பல தோழர்கள் கருதுவார்கள்.
இப்படிப்பட்ட தோழர்கள் அரசியல் வேலையை மட்டுமே வர்க்கப் போராட்டமாக கருதுகின்றனர். ஆனால் வர்க்கப் போராட்டம் அனைத்தையும் உள்ளடக்கிதான் நடத்தப்படவேண்டும். அனைத்துப் பிரச்சினைக்கும் வர்க்க சார்பு வழியில் தீர்வு காண வேண்டும். தேசியப் பிரச்சினையைம் வர்க்கப் போராட்டத்துக்கு உள்ளடங்கியே விளக்கப்படுத்துகிறோம், தீர்வு காண்கிறோம்.
மார்க்சிய தொல்லியல் என்ற ஒன்று ஏற்கெனவே இருக்கிறது. இதுவும் பல தோழர்களுக்குத் தெரியாது.
உலகப் புகழ் பெற்ற மார்க்சிய தொல்லியல் அறிஞர் வி.கோர்டன் சைல்ட்.
இவர் ஆஸ்திரேலிய தொல்பொருள் ஆய்வாளர். பிற்காலத்தில் லண்டனில் உள்ள தொல்லியல் நிறுவனத்தில் பேராசிரியராகவும் இயக்குநராகவும் பணிபுரிந்தார். இவர் 1892 ஆம் ஆண்டு பிறந்தார் 1957ஆம் ஆண்டு மறைந்தார். மார்க்ஸ் எங்கெல்ஸ் ஆகியோரின் இறுதிகாலத்தில் வி.கோர்டன் சைல்ட் பிறந்தார்.
வி.கோர்டன் சைல்ட் தொல்லியலைப் பற்றி கூறுவதைப் பார்ப்போம்
“என்னைப் பொறுத்தவரை, மார்க்சியம் என்பது வரலாறு மற்றும் தொல்லியல் பொருள்களை விளக்குவதற்கான ஒர் அணுகுமுறையாகவும், விளக்குவதற்கான ஒரு வழிமுறையாகவும் உள்ளது.”
அதாவது தொல்லியலில் கிடைக்கும் பொருட்ளை மார்க்சிய வழியில் அணுகுவதைக் குறிப்பிடுகிறார்.
அவர் நிறைய நூல்களை எழுதியுள்ளார். சிலவற்றைப் பார்ப்போம்.
1, ஐரோப்பிய நாகரிகத்தின் விடியல், 2, ஆரியர்கள்: இந்தோ-ஐரோப்பிய தோற்றம் பற்றிய ஆய்வு, 3, வரலாற்றில் என்ன நடந்தது, 4, கருவிகளின் கதை, 5. முன்னேற்றமும் தொல்லியலும், 6, சமூக படிநிலைமலர்ச்சி, 7, தொல்லியல் பற்றிய சிறிய அறிமுகம்.
இதுபோன்ற பல நூல்களை எழுதியிருக்கிறார்.
தேவிபிரசாத் சட்டோபாத்யாயா போன்றோர்கள் இவரைப் பற்றி கூறியிருக்கின்றனர், ஆனால் வி.கோர்டன் சைல்டைப் பற்றி தெரியாத தோழர்கள் இன்றும் இருக்கின்றனர். குறிப்பாக மார்க்சிய தொல்லியல் அறிஞர்களில் பலருக்குத் தெரியாது. இது ஆச்சரியமான உண்மையாக இருக்கிறது. இந்த நிலை மாறவேண்டும்.
இந்த நிலை மாறுவதற்கு வி.கோர்டன் சைல்டின் நூல்கள் தமிழில் மொழியாக்கம் செய்ய வேண்டும். குறிப்பிட்ட நூல்களையாவது விரைவில் கொண்டு வரவேண்டும்.
நாம் தனித்து இயங்க முடியாது. அனைத்திலும் சர்வதேசத்தோடு இணைந்து செயல்பட வேண்டும். கீழடி, சிவகளை போன்ற இடங்களில் அகழாய்வு நடைபெற்று வருகிறது. இன்றைய நிலையில் மார்க்சிய தொல்லியல் என்பதை அறிந்து அதன் வழியில் ஆய்வுகள் செய்ய வேண்டும்.
அதுமட்டுமல்லாது தமிழர்தான் இருப்பை முதலில் பயன்படுத்தியதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. “இரும்பின் தொன்மை” என்ற பெயரில் தமிழக தொல்லியல் துறை ஒரு நூலை அண்மையில் வெளியிட்டுள்ளது.
நமது பொன்னுலக இணைய தளத்தில் தோழர் சுந்தரசோழன் “இரும்பின் தொன்மை - ஒரு வரலாற்று புரிதலை நோக்கி” என்கிற தலைப்பில் பேசினார். இது போன்று மார்க்சியர்கள் உடனுக்குடன் நமது கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும்.
தொல்லியலைவிட மானுடவியல் புதியத் துறையாக இருக்கிறது. நம் நாட்டில் மார்க்சிய மானுடவியல் இன்னும் வளர்ச்சி அடையவே இல்லை. ஏன், தொடங்கப்படவே இல்லை என்று கூறலாம்.
ஆனால், மானுடவியலை மார்க்சியம் அறிந்ததில்லை என்று கூறிடமுடியாது. எங்கெல்ஸ் எழுதிய “குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்” என்கிற நூல் இதனடிப்படையில் தோன்றியதாகச் சொல்லலாம்.
இந்த நூலில், மார்கனுக்கு கிடைத்த தரவுகளின் அடிப்படையில் நீயூயார்க் மாநிலத்திலுள்ள செனீகா ராகோஸ்கள் என்பவர்கள் பயன்படுத்து உறவுமுறை பெயர்கள், தென்னிந்தியாவிலுள்ள தமிழர்களிடம் காணப்படும் குடும்ப உறவுகளின் பெயர்களோடு ஒத்திருப்பதை ஒப்பிட்டு எங்கெல்ஸ் எழுதியுள்ளார். இதுவும் ஒரு வகையில் மார்க்சிய மானுடவியலைச் சார்ந்ததே.
யூதர்களைப் பற்றி மார்க்ஸ் கூறியதும், நீக்ரோவைப் (கருப்பர்களைப்) பற்றி மாவோ கூறியதும் ஒரு வகையில் மார்க்சிய மானுடவில்தான்.
இவர்கள், அன்று வரலாற்றியல் பொருள்முதல்வாதப் பார்வையில் தங்களது கருத்துகளை எழுதியுள்ளனர்.
மருத்துவத் துறையில் எப்படி ஒவ்வொன்றாக தனித்துப் பிரித்து வளர்ச்சி அடைகிறதோ அதே போல வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தில் மானுடவியல் தனித்து பிரிந்து வளர்ச்சி அடைகிறது.
வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தில் பொதுவாகப் பார்க்கப்பட்டது, மானுடவியலில் குறிப்பாகப் பார்க்கப்படுகிறது. தனித்து ஆராய்ந்தாலும் மார்க்சிய மானுடவியல் வரலாற்றியல் பொருள்முதல்வாதத் தத்துவத் துறையைச் சார்ந்ததே இயங்குகிறது.
வரலாற்றியல் பொருள்முதல்வாதத்துக்கு எதிரான போக்கு மார்க்சிய மானுடவியலில் நுழையாமல் இருக்க வேண்டுமானால், இந்தப் பணியை மார்க்சியர்கள் செய்ய வேண்டும். இல்லை என்றால் மார்க்சியத்துக்கு எதிரானவர்கள் மார்க்சிய மானுடவியல் என்ற பெயரில் தவறானக் கருத்துக்களை எழுதி வெளியிடுவார்கள்.
நம் நாட்டில் உள்ள கல்விப் புலங்களில் மானுடவியல் தற்போது பரவி வருகிறது. கல்வி நோக்கிற்கு என்றாலும் அதனை, நாம் தாம் செய்ய வேண்டும், அப்படி செய்யவில்லை என்றால் கல்வியாளர்கள் அவர்களின் புரிதலுக்கு ஏற்ப செய்துவிடுவர்.
மார்க்சிய மானுடவியலை மார்க்சியர்கள் எழுதினால், அதனையே கல்விப் புலத்தில் உள்ளவர்கள் சான்றாதாரமாக கொள்ளவார்கள். நாம் எழுதிய மார்க்சிய மானுடவியலை அவர்களால் தவிர்க்க முடியாது.
சூழலியல் என்பது தனித்துறையாக பிரித்துப் பார்ப்பதற்கு முன்பே மார்க்ஸ் இதனைப் பற்றி பேசியிருக்கிறார். ஆனால் இன்று சூழலியல் தனியாகப் பிரிந்து அதில் மார்க்சிய சூழலியல் என்று வளர்ச்சி பெற்றுள்ளது. அதே போல பெண்ணியம் பல அணுகுமுறையில் ஆராயப்படுகிறது. வரலாற்றியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் பெண்ணியத்தைப் பார்ப்பது மார்க்சிய பெண்ணியம்.
இதன் தொடர்க்சியாகவே மார்க்சிய தொல்லியல், மார்க்சிய மானுடவியல் வளர்ச்சி பெற வேண்டும்.
என்சிபிஎச் பதிப்பு நிறுவனம் செட்ரிக் ஜெ.ரௌபின்சன் எழுதிய "மார்க்சிய மானுடவியல்" என்கிற நூலை வெளியிட இருக்கிறது. அது எப்படி இருக்கிறது என்பதை படித்து பார்த்த பின்புதான் கூற வேண்டும். செவ்வியல் மார்க்சியம் என்கிற வரிசையில்தான் இந்த நூல் இடம் பெற்றிருப்பதாக கருதுகிறேன். வந்தவுடன் படித்துப் பார்க்க வேண்டும்.
நம் நாட்டில் “மானுடவியல்” புதியத் துறையாக இருப்பதால், மானுடவியலின் வரையறை என்னவென்பதை பார்ப்போம்.
எதற்கும் பல வரையறை இருப்பது போல் மானுடவியலுக்கும் பல வரையறைகள் காணப்படுகிறது.
மிகமிக சுருக்கமாக, மானுடவியலை மனிதனைப் பற்றிய அறிவியல் என்று கூறலாம்.
மனிதனை, உயிரியல் நிலையிலும், சமூக நிலையிலும், பண்பாட்டு நிலையிலும் வரலாற்று நிலையிலும் அறிவது மானுடவியல்.
பொதுவாக மானுடவியல் உயிரியல் நிலைக்கும் பண்பாட்டு நிலைக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறது. தமிழில் பண்பாட்டு மானுடவியலைப் பற்றிய நூல்களே அதிகம் காணப்படுகிறது.
ஏற்கெனவே “சமூகவியல்” என்று ஒரு துறை இருக்கிறது, சமூகவியலுக்கும் மானுடவியலுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்று பார்ப்போம்.
சமூகவியல் தனிமனிதனைவிட சமூகத்தைப் பற்றியே குறிப்பாக ஆராய்கிறது, சமூகத்தில் உள்ள தனிமனிதனைப் பற்றியே மானுடவியல் குறிப்பாக ஆராய்கிறது.
மனிதனின் பன்முகத்தன்மை மற்றும் பண்பாட்டு வேறுபாட்டைப் புரிந்து கொள்வதே மானுடவியலின் முதன்மையான நோக்கமாகும், சமூகப் பிரச்சினைகளை ஆராய்ந்து அதற்கான தீர்வையும் காண முயல்வது சமூகவியலின் முதன்மையான நோக்கமாகும். ஆனால் மானுடவியலின் முடிவுகள் சமூகவியலுக்குப் பயன்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
சமூகத்தில் இருந்து மனிதனைப் பிரித்து தனித்து மானுடவியல் ஆராய்கிறது. அதாவது சமூகத்தில் இணைந்து இருக்கும் மனிதனை தனித்து ஆராய்கிறது. அப்படி ஆராயும் போது மார்க்சிய மானுடவியல், மனிதனை சமூகத்தில் இருந்து தனியானவனாக கருதவில்லை. சமூக-பொருளாதார சூழ்நிலையின் வெளிப்பாடுதான் தனிமனிதன். ஆனால் அனைத்து தனி மனிதனும் ஒரே மாதிரி இருப்பதில்லை, எந்த வகையில் வேறுபடுகிறான், ஏன் வேறுபடுகிறான் என்பதை மார்க்சிய மானுடவியல் கவனமாக ஆராய்கிறது.
சமூகத்தில் பல தொழிலாளர் பிரிவுகள் இருக்க, ஆலைத் தொழிலாளியான பாட்டாளியையே மிகவும் புரட்சிகரமானவர் என்று மார்க்சியம் கூறுவதும், ஒரு வகையில் மார்க்சிய மானுடவியல் தான். மற்ற தொழிலாளர்களுடன் ஒப்பிட்டு பாட்டாளிகளை புரட்சிகரமானவர்கள் என்று கூறப்படுகிறது. இப்படி ஒப்பிட்டுப் பார்ப்பதை மார்க்சிய மானுடவியல் சிறப்பாக செய்து காட்ட முடியும்.
ஏற்கெனவே தனிநபர் பாத்திரத்தை மார்க்சியம் ஆராய்ந்து கருத்துகளைக் கூறியிருக்கிறது. அதனால் மார்க்சிய மானுடவியல் மார்க்சியத்துக்கு எதிரானது என்று கூறிவிட முடியாது.
மானுடவியலில் பலப் பிரிவுகள் காணப்படுகிறது, அதில் முதன்மையாக இரண்டை குறிப்பிடலாம்.
1. உடல்சார் மானுடவியல், 2. பண்பாட்டு மானுடவியல்.
தொல்லியலையும் மானுடவியலாக கொள்கின்றனர், அதாவது மானுடவியல் துறையில் தொல்லியலையும் சேர்த்துவிடுகின்றனர்.
இதனை முழுமையாக தொல்லியல் அறிஞர் ஏற்பார்களா என்பது தெரியவில்லை. மானுடவியலுக்கு தொல்லியல் தேவைப்படுகிறது, இதனால் தொல்லியலை மானுடவியலுக்குள் அடக்கிவிட முடியும் என்று நான் கருதவில்லை.
உடல்சார் மானுடவியல் என்பது எதனை ஆராய்கிறது என்பதைப் பார்ப்போம்.
மனிதன் எவ்வாறு தோன்றி, வளர்ச்சி பெற்று, இன்றைய நிலையினை அடைந்தான். மனிதன் இன்றைய நிலையினை எட்டுவதற்கு எத்தகைய நிகழ்ச்சிகள் காரணமாக இருந்துள்ளது.
உலகில் காணும் மனிதர்களில் சிலர் உயரமாகவும் வேறு சிலர் குள்ளமாகவும் இருக்கின்றனர். அதே போல, கருப்பாகவும் வெள்ளையாகவும், உதடு தடிப்பாகவும் மெலிவாகவும் என்று உலகில் உள்ள மனிதர்கள் வேறுபட்டு இருப்பதற்குக் காரணங்கள் என்ன? என்பதையும், எதிர் காலத்தில் எத்தகைய மாற்றங்களுக்கு வாய்ப்பு இருக்கிறது என்பதையும் உடல்சார் மானுடவியல் கணக்கில் கொள்கிறது.
இது உடல்சார் மானுடவியலின் பொதுப் பார்வை, மார்க்சிய மானுடவியலில் இதனை காரண காரியத்துடன் விளக்கமாக எழுத முடியும்.
அடுத்து பண்பாட்டு மானுடவியலைப் பார்ப்போம்.
பண்பாடு, சமூக முறை, குடும்பம், திருமணம், வழிபாட்டு முறைகள், சமய நம்பிக்கைகள் போன்றவற்றை பண்பாட்டு மானுடவியல் ஆராய்கிறது.
பொதுவாக பண்பாட்டை முதன்மைப்படுத்தியே மானுடவியல் ஆராய்வதாகச் சொல்லலாம். அது மட்டுமல்லாது பின்நவீனத்துவம் போன்ற கோட்பாட்டின் அடிப்படையிலும் ஆராயப்படுகிறது. இந்த நிலையில்தான் மார்க்சிய மானுடவியல் அவசியமாகிறது.
பின்நவீனத்துவம் அனைத்தையும் பிரித்து தனித்தனியே ஆராய்ந்து பிரித்துவிடுகிறது. அதே போல பண்பாட்டை மட்டும் அடிப்படையாகக் கொண்டு செய்யப்படும் ஆராய்ச்சிகள், பண்பாட்டு தோன்றுவதற்கான காரணத்தை கவனத்தில் கொள்வதில்லை. மார்க்சியக் கண்ணோட்டம், பண்பாட்டை தனித்துப் பார்க்கவில்லை, அதன் தோற்றத்தோடு இணைத்தே பார்க்கிறது.
மார்க்சிய மானுடவியலின் பார்வையில் பண்பாட்டை விளக்குவது பண்பாட்டு மார்க்சியத்துக்கு எதிராக இருக்கும். பண்பாட்டு மார்க்சித்துக்கு பதிலாகவும் இருக்கும்.
பண்பாட்டு மார்க்சியம், மார்க்சியத்துக்கு எதிரானது, மார்க்சிய மானுடவியல் பார்வையில் பண்பாடு என்பது மார்க்சியத்துக்கு ஆதரவானது.
மானுடவியல் சில கூறுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆராய்கிறது, ஆனால் ஆராய்வதற்கு அணுகுமுறையாக, ஒரு கோட்பாடு கண்டிப்பாக இருக்கிறது. எந்தக் கோட்பாடும் இல்லாமல் எதையும் ஆராய முடியாது.
மானுடவியலின் முதன்மையான இரண்டு பிரிவுகளான உடல்சார் மானுடவியல், பண்பாட்டு மானுடவியல் என்கிற இரண்டையும் வரலாற்றியல் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டியது மார்க்சிய மானுடவியலின் கடமை ஆகும்.
மக்களைப் புரிந்து கொள்ளுதல், தனிமனிதனைப் புரிந்து செயல்படுத்தல் ஆகியவற்றில் தேக்கம் நம் நாட்டு இடதுசாரிகளிடையே காணப்படுகிறது. இதனைப் போக்குவதற்கு, தனிமனிதனையும், தனிமனிதன், பிற மனிதக் குழுக்களுடன் ஒப்பிட்டு ஆராய்கிற மார்க்சிய மானுடவியல் பயன்படும் என்பதில் சந்தேகம் இல்லை.
தமிழில் மானுடவியல் அறிஞர் என்றால் அது பக்தவத்சல பாரதி தான் நினைவுக்கு வருவார். அவர் எழுதிய மானுடவியல் பற்றிய நூல்களும் மானுடவியல் அணுகுமுறையில் எழுதிய நூல்களும் நிறைய இருக்கிறது.
பக்தவத்சல பாரதியின் குறிப்பிடத்தக் நூல் என்றால் அது, 1. பண்பாட்டு மானிடவியல், 2. பண்டைத் தமிழ்ப் பண்பாடு (மானிடவியல் நோக்கில் சங்க இலக்கியம்) 3, தமிழர் மானிடவியல், 4, இலக்கிய மானிடவியல், 5. மானிடவியல் கோட்பாடுகள் இன்னும் நிறைய இருக்கிறது, இன்னும் எழுதிக் கொண்டும் இருக்கிறார்.
நா.வானமாமலை, ஆ.சிவசுப்ரமணியன் போன்றோர்களின் ஆய்வுகள் மார்க்சிய மானுடவியல் வகைப்பட்டது என்று கூறலாம். தொ.பரமசிவன் ஆய்வுகள், மார்க்சியக் கண்ணோட்டத்தைவிட, பெரியாரிய பகுத்தறிவுக் கண்ணோட்டத்தையே அடிப்படையாகக் கொண்டுள்ளது.
பெரியாரிய பகுத்தறிவாதக் கண்ணோட்டமும் மார்க்சியக் கண்ணோட்டமும் வெவ்வேறானது என்பதை கம்யூனிஸ்டுகள் புரிந்து கொள்ள வேண்டும். இரண்டும் வெவ்வேறு சிந்தனைப் பள்ளியினைச் சார்ந்தது. ஒவ்வொரு அணுகுமுறைக்கும் ஒரு கோட்பாடு இருக்கிறது, ஒவ்வொரு கோட்பாட்டுக்கும் வர்க்க சார்பு இருக்கிறது. தொழிலாளி வர்க்க சார்புடைய கம்யூனிஸ்டுகள் இதனை மறந்திடக்கூடாது.
சி.ஆரோக்கியசாமி எழுதிய “தமிழர் மரபில் தாய்த் தெய்வ வழிபாடும் பெரியாரும்” என்கிற நூல் பெரியாரின் பகுத்தறிவுக் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டது. கோ.சசிகலா எழுதிய “தாய்வழிச் சமூகம் - வாழ்வும் வழிபாடும்” என்கிற நூல் மார்க்சியக் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டுள்ளது.
சிந்தனைப் பள்ளிகள் என்று ஏன் வேறுபடுத்திப் பார்க்கப்படுகிறது என்றால், ஒவ்வொரு சிந்தனைப் பள்ளியின் முடிவுகள் வேறுபடுகிறது. அனைத்து முடிவுகளையும் ஒன்றாக வைத்து குழப்பிக் கொள்ளாமல், குறிப்பிட்ட நூல் எத்தகைய கண்ணோட்டத்தில் எழுதப்பட்டிருக்கிறது என்பதை படிக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டும்.
கோட்பாடுகளின் அடிப்படையில் முடிவுகள் மாறுபடுகிறது என்பதை மறந்திடக்கூடாது.
அப்போதுதான் முடிவுகளின் வேறுபாட்டை நாம் அறிந்து கொள்ள முடியும்.
அண்மையில் நான் படித்த மானுடவியல் அணுகுமுறையில் எழுதப்பட்ட இன்னொரு நூல், டாக்டர் அ.பாண்டுரங்கன் எழுதிய “தமிழ் மக்களின் தொல்சமயம்.”
இந்த நூலில் தமிழ் சமூகத்தில் காணப்பட்ட முந்து சமயம் அதாவது நிறுவன சமயத்துக்கு முன்பான நிலைமைகளை ஆராய்கிறது.
இத்தகைய நூல்களைப் படிப்பது, “பண்டையத் தமிழர் சமூகம்” என்கிற நூலை மார்க்சியக் கண்ணோட்டத்தில் எழுத வேண்டும் என்கிற எனது எண்ணத்தை விரைவுபடுத்தியது.
தமிழர்களுக்கு என்று தனித்த வழிபாட்டு முறைகள் இன்றும் இருக்கிறது, ஆனால் தமிழர்களுக்கு என்று தனித்த, தமிழகத்திலே தோன்றிய நிறுவன சமயம் என்பது கிடையாது. இந்த உண்மைநிலைக்கு எதிராக சைவம், வைணவம், ஆசிவகம் போன்றவை தமிழர் சமயம் என்று கூறப்படுகிறது.
பாட்டும் தொகையும் நூல்களான சங்க இலக்கியத்தில் வைதீகத்தின் ஆதிக்கம் அதாவது வைதீகமயமாதல் காணப்படுகிறது. பரிபாடலிலும், திருகாற்றுப்படையிலும் தமிழ் முருகன் சமஸ்கிருத ஸ்கந்தன் இணைப்பு முயற்சி தொடங்கிவிட்டது.
அப்படிப்பட்ட சங்க இலக்கியத்தில் சிவனைப் பற்றி நேரடியாக கூறப்படாத நிலையில் சைவத்தின் ஆதிகம் காணப்படுகிறது.
தமிழ் சமூகமே சைவ சமூகம் என்பதாக பரப்புரை செய்யப்பட்டு வருகிறது, வைதீகமயமாதலை எதிர்ப்பது போலவே சைவமயமாதலையும் எதிர்க்க வேண்டும்.
எந்த முடிவுகளும் தரவுகளின் அடிப்படையில் இருக்க வேண்டும். தரவுகள் இல்லாமல் முன்வைக்கப்படும் வைதீகமயமாக்கலையும் சைவமயமாக்கலையும் தமிழ் அறிஞர் பெருமக்கள் எதிர்க்க வேண்டும்.
உண்மையான தரவுகளின் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவுகளே சரியானதாக இருக்கும். சரியான முடிவுகளே சமூகத்துக்குப் பயன்படும்.
வைதீகமயமாதல், சைவமயமாதல் ஒருப்பக்கம் என்றால் பெரியாரிய பகுத்தறிவுவாதம் பேசுகிற சிலர், தமிழர்களுக்கு திணைக்கோட்பாடுதான் இருக்கிறது, சமய சிந்தனை கிடையாது. மதசார்பற்ற போக்கே தமிழர்களுக்கு உரியது என்று கூறிவருகின்றனர். இந்தக் கருத்து இப்போது அதிகமாகவே காணப்படுகிறது.
இதற்கு பதிலளிக்கும் வகையில், ”தமிழர்களுக்கு சமய சிந்தனை கிடையாதா!!” என்கிற தலைப்பில் ஒரு நூலை விரைவில் எழுதி முடிக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளேன். இந்த நூல் எனது 2025-ஆம் ஆண்டுத் திட்டத்தில் புதியதாக சேர்க்கப்பட்டது.
”தமிழர்களுக்கு சமய சிந்தனை கிடையாதா!!” என்கிற இந்த எனது நூல் மார்க்சிய மானுடவியல் வகையைச் சார்ந்ததாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இந்த அளவுக்கு விளக்கம் கொடுத்தாலும் மார்க்சிய மானுடவியல் என்பது மார்க்சியத்தில் இருந்து திசை விலகும் போக்கே என்று கூறுபவர் இருப்பர் என்பதை என்னால் அறிந்து கொள்ள முடிகிறது.
திசை விலகல் என்று கூறுபவர்கள், மார்க்சிய அடிப்படைகளை மறந்திடக் கூடாது, விட்டுவிடக் கூடாது என்பதில் அதிகம் கவனம் செலுத்துகிறார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
இதற்கு ஒரு விளக்கத்தைக் கூறினால் போதும் என்று நினைக்கிறேன்.
இன்று நாம் எதன் பொருளையும் அறிவதற்கு, கூகுல் தேடு பொறியையே நாடுகிறோம். தற்போது தேடுபொறியில் செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence) வந்திருக்கிறது.
மார்க்சிய மானுடவியலைப் பற்றி கூகுல் செயற்கை நுண்ணறிவு என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.
Marxist anthropology is a framework that uses Marxism to study how economic systems influence human societies. It examines cultural evolution through economic and material conditions.
Key features என்று ஆங்கிலத்தில் தொடர்கிறது. அதில் உள்ளதை தமிழில் சுருக்கமாகப் பார்ப்போம்.
மார்க்சிய மானுடவியல் என்பது பொருளாதார அமைப்புகள் எவ்வாறு மனித சமூகங்களை பாதிக்கின்றன என்பதை ஆய்வு செய்ய மார்க்சியத்தைப் பயன்படுத்தும் ஒரு முறையாகும். இது பொருளாதாரம் மற்றும் பொருளாயத நிலைமைகள் மூலம் பண்பாட்டு படிமலர்ச்சியை ஆராய்கிறது.
-என்று கூகுல் செயற்கை நுண்ணறிவு கூறுகிறது. இந்தக் கருத்து மார்க்சிய அடிப்படைக்கு எதிராக இல்லை என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
அடுத்து மார்க்சிய சிறப்புத் தன்மைகள் என்று பட்டியலிடுகிறது.
மார்க்சிய மானுடவியலின் சிறப்புத் தன்மைகள்:-
1) மார்க்சிய மானுடவியல் பண்பாட்டிற்கும் பொருளாதார அமைப்புகளுக்கும் இடையிலான உறவில் கவனம் செலுத்துகிறது.
2) மார்க்சிய மானுடவியல் முதலாளித்துவத்தை விமர்சிக்கிறது, பண்பாடுகளின் வளர்ச்சிக்கு, பொருளாதார காரணிகளின் பங்கை எடுத்துக்காட்டுகிறது.
3) பொருள்முதல்வாதம், வர்க்கப் போராட்டம், சரக்குகளின் மாய்மாலம் ஆகிய கருத்தாக்கங்கள் முதன்மையாக மார்க்சிய மானுடவியலில் இடம் பெற்றுள்ளது.
4) எந்தவொரு பொருளாதார அமைப்பும் அதிகார உறவுகளை அடிப்படையாகக் கொண்டது என்ற கருத்தை மார்க்சிய மானுடவியல் அடிநிலையாகக் கொண்டுள்ளது. இது இறுதியில் வர்க்கப் போராட்டத்துக்கு வழிவகுக்கிறது.
இதைதான் மார்க்சிய மானுடவியலாக கூகுல் செயற்கை நுண்ணறிவு கூறுகிறது.
கூகுல் என்கிற முதலாளித்துவ இயந்திரம் மார்க்சியத்தில் இருந்து விலகாமல்தான் மார்க்சிய மானுடவியலுக்கு விளக்கம் கொடுத்துள்ளது. இடதுசாரிகளான நாம் விலகாமல் மார்க்சியத்தில் ஊன்றி நின்றால் போதும், நமக்கு வெற்றி நிச்சயம்.
“சமூக பண்பாட்டு மானுடவியலில் கோட்பாடுகள் மற்றும் முறைகள்” என்கிற தலைப்பில் ஒர் ஆங்கில இணைய தளத்தைப் பார்த்தேன். அதில் பல்வேறு கோட்பாடுகள் பற்றிய கட்டுரைகள் காணப்படுகிறது.
பின்நவீனத்துக் கோட்பாடும் அதில் இடம் பெற்றுள்ளது.
https://ebooks.inflibnet.ac.in/antp10/chapter/post-modernism/
21-வதாக இடம் பெற்றிருப்பது “மானுடவியலில் மார்க்சியம்” (Marxism in Anthropology)
https://ebooks.inflibnet.ac.in/antp10/chapter/marxism-in-anthropology/
இந்த இணைய தளம் கல்விபுலம் சார்ந்ததாக இருப்பதால், ஒரு கோட்பாட்டின் கருத்துக்கள் அதன் மீதான விமர்சனங்கள் இரண்டும் இடம் பெற்றுள்ளது.
இதில் மார்க்சிய மானுடவியல் பற்றிய விமர்சனமும் இடம் பெற்றுள்ளது, ஆனால் இதில் மார்க்சிய மானுடவியலைப் பற்றி சரியாகவும் தெளிவாகவும் கூறப்பட்டுள்ளது.
மார்க்சிய மானுடவியல் என்பது உலகெங்கிலும் உள்ள பல்வேறு பண்பாடுகளைப் படிக்க பயன்படுத்தப்படும் மிக முக்கியமான மானுடவியல் கோட்பாடுகளில் ஒன்றாகும்.
மார்க்சிய மானுடவியல் ஐரோப்பிய-அமெரிக்க முதலாளித்துவ மேலாதிக்கத்தின் விமர்சனமாக வளர்ந்தது.
மார்க்சிய மானுடவியல் எந்த ஒரு பண்பாடு அல்லது சமூகம் மாறுவதற்கு முதன்மைக் காரணமாக உள்ள பொருளாயத நிலைமைகளை விவாதிக்கிறது.
மார்க்சியத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால், எந்தவொரு பொருளாதார அமைப்பும் அதிகார உறவுகளை அடிப்படையாகக் கொண்டது, அது இறுதியில் வர்க்கப் போராட்டத்திற்கு வழிவகுக்கிறது, எனவே, சமூகத்தில் காணப்படும் வர்க்கம், வர்க்க போராட்டம், பொருளாதாரம், உற்பத்தி - விநியோக வழிமுறைகள் ஆகியவைகளை சமூக மாற்றத்துக்கு வழிவகுக்கும் விதத்தில் மார்க்சிய மானுடவியல் ஆய்வு செய்கிறது,
இவைகளே அந்த இணையத் தளத்தில் கூறப்பட்டுள்ளது, இது ஒரு கல்வி புலம் சார்ந்த இணையதளம், இருந்தாலும் மார்க்சிய அணுகுமுறையை சரியாகப் புரிந்து தொகுத்துத் தரப்பட்டுள்ளது.
மார்க்சியம் புதிய நிலைமைக்கு ஏற்ப வளர்ச்சி அடையக்கூடியது. அதே போல எந்தப் புதிய துறையாக இருந்தாலும் அதனைப் பின்பற்றி மார்க்சிய அணுகுமுறையில் விளக்கம் கொடுப்பதின் மூலமே மார்க்சியம் வளம் பெறும். அவ்வாறு நாம் செயல்படாது போனால் அந்தத் துறையில் மார்க்சியம் விமர்சிக்கப்பட்டு அதற்கு பதிலளிக்காமல் விடுபட்டு போகும்.
இந்த உண்மையை அறிந்து மார்க்சியம் அனைத்துத் துறைகளிலும் நுழைந்து மார்க்சியத்தை நிலைநிறுத்த வேண்டும். மானுடவியல் என்கிற புதியத் துறையிலும் மார்க்சியம் நுழைந்து விளக்கம் கொடுத்து, மார்க்சியத்தை மேம்படுத்த வேண்டும்.
- அ.கா.ஈஸ்வரன்
9884092972
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு