உண்மையான பிரச்சினை வெறும் இந்தி கற்பிப்பது சம்பந்தப்பட்டதே அல்ல!
சாவித்திரி கண்ணன்

அறிக்கை போரெல்லாம் செம ஜோராத் தான் இருக்கிறது!
ஆனா, இரு தரப்புமே சில உண்மைகளை மறைக்குது!
உண்மையான பிரச்சினை வெறும் இந்தி கற்பிப்பது சம்பந்தப்பட்டதே அல்ல!
ஒட்டுமொத்த பள்ளிக் கல்வித் துறையின் அதிகாரத்தையும் மத்திய ஆட்சியாளர்கள் தங்கள் கண்ட்ரோலில் வைக்க துடிக்கின்றனர்.
கடந்த கால் நூற்றாண்டாகவே இந்த முன்னெடுப்பு நடக்கிறது. ’சர்வ சிக்ஷ்யா அபியான்’ என்ற பெயரில் இங்கு பள்ளிக் கல்வித் துறைக்குள் நுழைந்து இளம் சிறார்களின் கல்வித் திறனை முடக்கினார்கள்.
அதன் தொடர்ச்சியாக வரும் திட்டங்களை தான் இங்கு EMIS அப்டேட், எண்ணும் எழுத்தும், இல்லம் தேடிக் கல்வி, ஆன்லைன் கல்வி, நம்ம ஸ்கூல் பவுண்டேசன், நான் முதல்வன்..என வெவ்வேறு பெயர்களில் மாநில கல்வித் துறை அமல்படுத்தி பள்ளிக் கல்வித் துறையை பாழடித்து வருகிறது. நிதி கிடைக்கிறதே என்பதற்காக இவற்றை எல்லாம் ஏற்றது பெரும் பிழையாகும்.
இவை போதாதென்று, பிரதம மந்திரி ஸ்ரீ திட்டம் வேறு! குறிப்பிட்ட சில அரசு பள்ளிகளை மட்டும் மிக உயர்ந்த பைவ் ஸ்டார் கல்வி தரத்துடன் நடத்த வேண்டும் என்பதே இது. மற்ற அரசு பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு கூட இல்லாதது பற்றியெல்லாம் கவலையில்லை.
அத்துடன் மூன்று வயதிலேயே இந்துத்துவ கொள்கையை திணிக்கும் பாடத் திட்டங்கள், ஆறாம் வகுப்பில் தொழிற்கல்வி, 10 ஆம் வகுப்பு பொது தேர்வு வேண்டாம். 12 ஆம் வகுப்பு தேர்வு கூட முக்கியமில்லை. உயர்கல்வி அனைத்திற்குமே நீட் போன்ற நுழைவு தேர்வு..ஆகியவையே பி.எம்.ஸ்ரீயின் ஆபத்தான அம்சங்களாகும்.
’’இவற்றை எல்லாம் அமல்படுத்தமாட்டோம். எதிர்க்கிறோம்’’ என்று தமிழக அரசு சொன்னதாக தகவல் இல்லை.
நியாயப்படி மேற்படியானவற்றைத் தான் எதிர்க்க வேண்டும். இதையெல்லாம் எதிர்க்காமல் மும்மொழி கல்வித் திட்டத்தை மாத்திரம் எதிர்ப்பது ஏன் என்பதும் புரியவில்லை.?
’’இந்தியை கற்பிக்க மாட்டோம்’’ என தமிழக முதல்வர் சொல்ல,
’’ஏன் இந்தியை கற்பிக்கக் கூடாது…’’ என அண்ணாமலை ஆவேசம் காட்ட,
ஐயா துரைமார்களே, ஒரு உண்மையை இருதரப்புமே ஏன் பேசாமல் மறைக்கிறீர்கள்!
அது என்னவென்றால், தமிழகத்தின் ஆயிரக்கணக்கான அரசு பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களே நியமிக்கப்படுவதில்லை. தாய் மொழியாம் தமிழ் இங்கு புறக்கணிக்கப்பட்டு வருவதை கேள்வி கேட்க இங்கு நாதியில்லை.
இது மட்டுமின்றி, பல சப்ஜெக்ட்களுக்கும் ஆசிரியர்கள் இல்லை. பல பள்ளிகளில் துப்புறவு பணியார்களை நியமிக்கக் கூட துப்பில்லாத நிலைமை உள்ளது.
இந்த அவல நிலையை மாற்றாமல், தனியார் பள்ளிகளில் 25 இடங்களில் ஏழை மாணவர்களை சேர்ப்பதற்கான பல நூறு கோடி கல்வி கட்டணத்தை தூக்கி கொடுக்கிறது அரசு. பணத்தில் கொழுத்து திளைக்கும் தனியார் பள்ளிகளுக்கு ஏன் மக்கள் வரிப் பணத்தை வாரி இறைக்க வேண்டும். அந்த நிதியைக் கொண்டு அரசு பள்ளிகளின் பற்றாகுறைகளை சரி செய்யலாமே!
’இதையெல்லாம் துணிந்து செய்வதற்கு முதலில் கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும்’ என்ற ஒற்றைக் கொள்கைக்கு அழுத்தம் கொடுத்து, அனைத்து மாநிலங்களையும் ஒருங்கிணைத்து வலுவாக குரல் கொடுக்க வேண்டும் தமிழக அரசு.
தமிழக மக்களிடம் வசூலித்த வரியின் ஒரு சிறு பகுதியைத் தான் மாநில அரசு கேட்கிறது. அதை தருவதற்கு நிபந்தனையாக, ’மத மூட நம்பிக்கை கோட்பாடுகளை பள்ளி பாடத் திட்டங்களில் போதிக்க சொல்வது ஏற்புடையதல்ல’ என்று சொல்லி இருக்க வேண்டும் தமிழக அரசு.
சாவித்திரி கண்ணன் (முகநூலில்)
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு