புரட்சிகர ஒழுக்கம் பற்றி - ஹோ சி மின்

ஹோ சி மின்

புரட்சிகர ஒழுக்கம் பற்றி - ஹோ சி மின்

மனித இனம் தோன்றியதிலிருந்தே, தான் தொடர்ந்து வாழ கொடிய விலங்குகளையும், இயற்கைச் சீற்றங்களையும் எதிர்த்துப் போராட வேண்டியிருந்தது. இந்தப் போராட்டத்தில் வெற்றி பெற ஒவ்வொரு தனிநபரும் பெரும்பான்மையான மக்களின் சக்தியையும், கூட்டுத் தன்மையையும், சமுதாயத்தையும் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தன்னந்தனியாக மனிதன் இயற்கையின் பெரும்பலனை அடைந்து அனுபவித்து வாழ்வது முடியாத காரியமாகும்.

தொடர்ந்து உயிர் வாழ வேண்டுமானால் உணவு, உடை கிடைக்க மனிதன் கட்டாயமாக உற்பத்தியில் ஈடுபட வேண்டும். உற்பத்தியும் கூட, சமுதாயத்தையும் அதன் கூட்டுத் தன்மையையும் அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. தன்னந்தனியே மனிதன் உற்பத்தியில் ஈடுபட முடியாது.

நமது சகாப்தம் நாகரிகமான, புரட்சிகரமான சகாப்தமாக இருப்பதினால், எல்லாப் பொதுப்பணிகளுக்கும் ஒருவர் மிகவும் அதிகமாக சமூகத்தின் கூட்டுவாழ்க்கையை சார்ந்து இருக்க வேண்டியது கட்டாயமாகிறது. மற்றெப்போதைக் காட்டிலும், தற்சமயம், தனிநபர் ஒருவர் கூட்டு முயற்சியிலும், சமுதாயத்திலும் சேர்ந்திருப்பதை விட்டுவிட்டு ஒதுங்கி நிற்க முடியாது. 

தனிநபர்வாதம், கூட்டுத்தன்மைக்கு எதிராக இருக்கிறது. தனிநபர்வாதம் மறையும்போது கூட்டுவாழ்க்கையும் சோசலிசமும் நிச்சயமாக வெற்றிபெற்று செல்வாக்குப் பெறும்.

வர்க்க சமுதாயமும் வர்க்கச் சார்பும்

உற்பத்தி முறையும், உற்பத்தி சக்தியும் முடிவின்றி தொடர்ந்து வளர்ச்சியுற்று மாறும். அவ்வாறு மாறுவதால், மனித சிந்தனையும், சமுதாய முறைகளும், மற்றவைகளும் கட்டாயமாக மாறுகிறது.

நாம் எல்லோரும் கடந்த காலத்திலிருந்து நிகழ்காலத்தை அறிகிறோம். உற்பத்திக் கருவிகள் மரக்கிளைகள், கற்கோடரிகளிலிருந்து, இயந்திரங்கள், மின்விசை, அணுசக்தி வரை படிப்படியாக வளர்ச்சி பெற்றுள்ளது. சமுதாய முறைகளும்கூட ஆரம்பகாலப் பொதுவுடைமைச் சமுதாயத்திலிருந்து, அடிமைச் சமுதாயம், நிலப் பிரபுத்துவச் சமுதாயம், முதலாளித்துவச் சமுதாயம் என்று வளர்ச்சிபெற்று மாறியுள்ளது. இன்று மானுட சமுதாயத்தின் சரிபாதி மக்கள் தொகையினர் சோசலிசத்தை நோக்கியும், கம்யூனிசத்தையும் நோக்கியும் நகர்ந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த வளர்ச்சியையும், மாற்றத்தையும் எவராலும் தடுக்க முடியாது.

புராதன பொதுவுடைமை மாறி தனி உடைமை உருவானதிலிருந்து "சமுதாயம் வர்க்க அடிப்படையில் சுரண்டும் வர்க்கங்கள், சுரண்டப்படும் வர்க்கங்கள் என்று இரண்டாகப் பிரிந்துவிட்டது. இதனால் சமுதாய முரண்பாடுகளும், வர்க்கப் போராட்டங்களும் தோன்றின. எந்த ஒரு மனிதனும் கட்டாயமாக இதில் ஏதாவது ஒரு வர்க்கத்தைச் சார்ந்தவனாக இருக்கவேண்டும். வர்க்கங்களுக்கு அப்பாற்பட்டு எந்தவொரு மனிதனாலும் இருக்க முடியாது. அதே போல ஒவ்வொரு மனிதனும் தான் சார்ந்துள்ள வர்க்க சித்தாந்தத்திலிருந்து வெளியே ஒதுங்கி நிற்க முடியாது.

வர்க்கப் போராட்டமும் புரட்சிகர கட்சியும்

சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட சமூகங்களில் நிலப்பிரபுக்கள், முதலாளிகள், ஏகாதிபத்தியவாதிகள் எல்லோரும் தொழிலாளிகள், விவசாயிகளான இதர சமூகப் பிரிவினரை ஈவு இரக்கமின்றி அடக்கி, ஓடுக்கிச் சுரண்டுகிறார்கள். சமூகம் முழுமையிலும் உற்பத்தி செய்யப்பட்ட பொதுச் சொத்தைக் கொள்ளையிடுகின்றனர். அதைத் தங்களுடைய உடைமையாக்கிச் சொகுசான இன்ப வாழ்வு வாழ்கின்றனர். ஆனால் அவர்கள் “நியாயம்-தர்மம்”, “சுதந்திரம்”, “ஜனநாயகம்” என்றவாறெல்லாம் அரட்டை அடித்து வருகின்றனர்.

இந்தச் சுரண்டலும், ஒடுக்குமுறையும் எப்பொழுதும் உறுதிப்படுத்தப்பட்டு நீடிப்பதை எதிர்த்துத் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் இதர உழைக்கும் மக்கள் தங்களைத் தாங்களே விடுதலை செய்யப் போராடுகிறார்கள். இந்தப் பிற்போக்கான பழி பாவத்திற்கு அஞ்சாத அவக்கேடான சமூகத்தை மாற்றி உழைக்கும் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழவும், மனிதனை மனிதன் சுரண்டும் வழக்கத்தை ஒழிக்கவும், ஒரு புதிய மேலான சமுதாயத்தை அமைக்கவும் வீரதீரத்துடன் கிளர்ச்சிகள் செய்கின்றனர். புரட்சி நடத்துகின்றனர்.

இதில் வெற்றிபெற, மிகவும் முன்னேறியதும், வர்க்க உணர்வுடன் கூடியதும், உறுதியான, தீர்மானமான ஒழுங்குமுறையுடன் மிகவும் மேலான அமைப்பு ரீதியாகத் திரட்டப்பட்டதுமான தொழிலாளி வர்க்கம்தான் தலைமை தாங்கி அந்தப் புரட்சியை நடத்த வேண்டும். அதை வழிநடத்திச் செல்லும் தலைமையான, உழைக்கும் மக்களின் புரட்சிகரமான கட்சி வேண்டும். ரசியா, சீனா உட்பட பல நாடுகளில் நடைபெற்ற புரட்சிகள் இந்த உண்மையை விவாதத்திற்கு இடமின்றித் தெளிவுபடுத்தியுள்ளது.

உறுதியான அடித்தளம்

பழைய பிற்போக்கான சமுதாயத்திலிருந்து ஒரு புதிய முன்னேறிய சமுதாய அமைப்பை உருவாக்க ஒரு புரட்சியை நடத்துவது என்பது மகத்தான செயலாகும். அதே சமயத்தில், அது மிகவும் கடினமானதும், சிக்கலானதுமான ஒரு நீண்ட நெடிய போராட்டமாகவும் விளங்குகிறது.ஒரு பலம் மிக்க மனிதன்தான் தன்னுடைய முதுகில் பெரும் சுமையைத் தூக்கிக்கொண்டு நெடுந்தூரம் பயணம் செய்ய முடியும். ஒரு புரட்சியாளன் தன்னுடைய மகத்தான புரட்சிகர கடமையை நிறைவேற்ற புரட்சிகர ஒழுக்கநெறி, புரட்சிகர பண்பாட்டின்பாற்பட்ட உறுதியான அடித்தளத்தை கொண்டிருக்க வேண்டும்.

பழைய சமுதாயத்தில் பிறந்து வளர்ந்த நம் அனைவருக்குள்ளும் வேறுபட்ட அளவில் பழைய சமுதாயத்தின் சிந்தனை முறையும், பழக்க வழக்கங்களும் குடிகொண்டிருக்கவே செய்கிறது. பழைமையானதும், பிற்போக்கானதுமான ஒரு சுரண்டும் சமூக அமைப்பில் மிகவும் படுமோசமான அபாயகரமான கழிசடைக் குணம் தனிநபர் வாதமாகும். தனிநபர் கோட்பாடு, புரட்சிகரமான ஒழுக்கநெறி மற்றும் பண்பாட்டிற்கு நேர் எதிரானதாகும்.

பழைய சமூகத்தின் மிச்ச சொச்சங்களைக் களைந்தெறியக் கற்போம்

தனிநபர் வாதமென்னும் குணத்தின் மிகக் குறைந்த அளவிலான மிச்ச சொச்சமும், முதலில் வளரும். பின் புரட்சிகரமான ஆன்மாவைத் தூசியடையச் செய்து மங்கச் செய்யும். இறுதியில் புரட்சியின் வெற்றிக்காக முழுமூச்சுடன் போராடுவதிலிருந்து நம்மைத் தடுத்து நிறுத்தும்.

இந்த தனிநபர்வாதம் என்பது மிகவும் ஏமாற்றுத் தன்மையுடையதும், நயவஞ்சகத் தன்மையும் நிறைந்த சிந்தனா முறையாகும். அது ஒருவரை வஞ்சகமாகப் பின்னோக்கிச் செல்லவே தூண்டும். முன்னோக்கிச் செல்வதைக் காட்டிலும் பின்னால் நிற்பது இலகுவான காரியம் என்பது ஒவ்வொருவருக்கும் தெரிந்த விசயம் தான். எனவே தான் அது மிகவும் அபாயகரமானதாக விளங்குகிறது.

புரட்சிகரப் ஒழுக்க நெறியை வளர்க்கவும், பழைய, பிற்போக்கான சமூக அமைப்பின் மிகமிக மோசமான குணாம்சங்களின் மிச்சசொச்சங்களைக் களைந்தெறியவும் நாம் கற்க வேண்டும். தொடர்ந்து முன்னேற, நாம் சுயமாகக் கஷ்டப்பட்டுப் படிக்க வேண்டும். பிறரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். நம்மை நாமே திருத்திக்கொள்ள வேண்டும். அவ்வாறில்லாவிடில், நாம் பின்தங்கி விடுவோம். முன்னேறிச் செல்லும் சமூகத்திலிருந்து நாம் பின்னுக்குத் தள்ளப்படுவோம்.

கட்சிப் பள்ளிக்குச் சென்றும், பயிற்சிப் பாடத் திட்டங்களில் பங்குகொண்டும்தான் படிக்கவேண்டும் என்பதில்லை. ஒவ்வொரு புரட்சிகரமான நடவடிக்கையிலும் பங்குகொள்வதினால் அதைச் செய்ய முடியும். செய்ய வேண்டும்.

தலைமறைவு வாழ்வு, பொதுவான புரட்சி இயக்கக் கிளர்ச்சிகள், ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்கள், எல்லாவிதமான ஒடுக்குமுறைகளுக்கும் அடிமைத்தனங்களுக்கும் எதிரான நடவடிக்கைகள், தேச விடுதலைக்கான போராட்டங்கள் எல்லாம் ஒருவர் பயிற்சிபெற வேண்டிய மிகவும் நல்ல பள்ளிகள் எனலாம். அவற்றிலிருந்து நாம் புரட்சிகரப் பண்புகளை கைவரப்பெற வேண்டும்.

துன்பத்தை எதிர்கொள்ளும் துனிவு வேண்டும்

புரட்சிகரமான பண்புகொண்ட மக்கள் துன்ப துயரங்களையும், கஷ்டங்களையும் கண்டு அஞ்சமாட்டார்கள். தோல்விகண்டும் துவளமாட்டார்கள். அவர்கள் ஊசலாடவும் மாட்டார்கள். பின்னோக்கிச் செல்லவும் மாட்டார்கள். நாட்டிற்காக, பாட்டாளி வர்க்கத்திற்காக, புரட்சிக்காக புரட்சிகரமான கட்சி முதலியவற்றின்  மேம்பாட்டிற்காகத் தங்கள் சொந்த நலனையும், ஏன் தங்களது உயிரைக் கூட தியாகம் செய்ய எப்பொழுதும் தயங்கியதில்லை. இதுவே, புரட்சிகரமான ஒழுக்கநெறி, புரட்சிகரமான பண்பாடு பற்றியதோர் மிகத் தெளிவான, மிக உயர்ந்த விளக்கமாகும்.

உலகம் முழுவதிலும் மனித குலத்தின் விடுதலைக்காகவும், உழைக்கும் மக்களின் நல்வாழ்வுக்காகவும் பல தோழர்கள் தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்துள்ளனர். துளியளவு சுயநலமின்றி பரிபூரண பொதுநலத்தோடும், மக்களின் நலனுக்காகத் தங்கள் வாழ்க்கையையும் அர்ப்பணித்துள்ள தலைசிறந்த முன்மாதிரிகளை இதன் மூலம் உருவாக்கிச் சென்றுள்ளனர்.

சாதகமான சூழ்நிலைகள் இருந்த நிலையிலும், வெற்றிகள் அடைந்தபோதும்கூட புரட்சிகரப் பண்பாளர்கள் எளிமையாகவும், தன்னடக்கம் உடையவராகவும், எப்பொழுதும் மிகவும் கடுமையான துன்ப துயரங்களை எதிர்நோக்குபவராகவும் இருந்து வருவர். மற்றவர்களைக் காட்டிலும் கடமையைப் பற்றி அளவுகடந்த அக்கறை கொள்வர். அதன்பின்தான் மகிழ்ச்சிபற்றி சிந்திப்பர். நமது கடமையை எவ்வாறு நல்ல முறையில் நிறைவேற்ற வேண்டுமென்று நாம் சிந்தனை செய்ய வேண்டுமேயன்றி, மிகப் பெரிய பரிசை எவ்வாறு அடைவது என்பது பற்றியல்ல. ஒழுக்கக்கேடு, இறுமாப்பு, அதிகாரவர்க்கப் போக்கு ஆகியவைகளில் மனம்போன போக்கில் ஈடுபடுவதும், விசேச முதல் மரியாதைக்கு உரிமை கொண்டாடுவதும், கடந்தகால சாதனைகளைப்பற்றி மிகைப்படுத்திக் கொள்வதையும் நாம் தவிர்த்தாக வேண்டும். புரட்சிகர பண்பாட்டோடு விளங்குவதற்கு இதுவும் ஓர் உதாரணமாகும்.

முன்னுதாரணமாகத் திகழ்வோம்

புரட்சிக்காகவும், புரட்சிகரமான கட்சிக்காகவும் போராடுவதில் ஒருவருடைய உயிரைத் தியாகம் செய்வது மிகவும் தேவையான ஒன்றாகும். கட்சிக்காக கடினமாக உழைப்பது, கட்சிக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து ஒழுகுவது மற்றும் கட்சிக் கொள்கைகளையும் வழிமுறைகளையும் அமுல் செய்வதும் மிகவும் தேவையானதாகும்.

தனிநபருடைய நலன்களுக்கு மேலாகக் கட்சி மற்றும் உழைக்கும் மக்களின் நலன்களை முன்னிறுத்தி முதன்மைப் படுத்துதல், மக்களுக்கு முழுமனதுடன் சேவை செய்வது, மக்களுக்காகவும் கட்சிக்காகவும் தன்னலமின்றிப் போராடுதல் என ஒவ்வொரு அம்சத்திலும் முன்னுதாரணமாகத் திகழ்தல் வேண்டும். மார்க்சியம் மற்றும் லெனினியத்தை கற்றுக்கொள்ளப் பெருமுயற்சி செய்வது, ஒருவருடைய சித்தாந்த அறிவுத் தரத்தை உயர்த்த இடைவிடாது சுயவிமர்சனம், விமர்சனம் செய்வது, மற்ற தோழர்களுடன் சேர்ந்து ஒருவருடைய வேலையையும் முன்னேற்றத்தையும் வளர்ச்சியுறச் செய்வதும் வேண்டும்.

கம்யூனிஸ்ட் கட்சி என்பது தொழிலாளி வர்க்கத்தின் மிகவும் முன்னேறிய கட்சியாக இருப்பதோடு ஒரு இரகசியக் கட்சியாகவும் விளங்குகிறது. மொத்தத்தில் உழைக்கும் மக்களின் தலைமையாக, தொழிலாளி வர்க்கத்தின் தலைமையாக நம் கட்சி விளங்குகிறது என்ற உண்மையை புரட்சியாளர்கள் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும். தற்சமயம் தொழிலாளி வர்க்கத்தின் எதிர்காலம் பெரிதாகவும் கீர்த்திமிக்கதாகவும் இருக்கிறது. அது தன்னையும் மாற்றிக்கொண்டு உலகத்தையும் மாற்றும். ஒவ்வொரு புரட்சியாளனும் இதை மிகத் தெளிவாக உணர வேண்டும். எல்லா உழைக்கும் மக்களுக்காகவும், தொழிலாளி வர்க்கத்திற்காகவும், சோசலிச நிர்மானத்திற்காகவும் முழுமனதுடன் போராடுவதற்கேற்ற வகையில் அவன் தொழிலாளிவர்க்க நிலையில் உறுதியாக இருக்கவேண்டும்.

புரட்சிகர ஒழுக்கநெறி புரட்சிக்கும், புரட்சிகர கட்சிக்கும் மக்களுக்கும் முழுமையான விசுவாசத்துடன் இருப்பதில்தான் அடங்கியுள்ளது. கட்சியின் குறிக்கோளை அடைவதற்கு கடும் முயற்சி செய்வதிலும் உழைக்கும் மக்களுக்கும், தொழிலாளி வர்க்கத்திற்கும் நம்பிக்கையுடன் சேவை செய்வதிலும், எப்பொழுதும் ஊசலாட்டமின்றி இருப்பதிலும் புரட்சிகரப் பண்பாடு என்பது அடங்கியுள்ளது.

போராட்டத்தில் உறுதி 

இயக்கத்தில் பலர் தங்களிடையே தனிநபர்வாதம் வளர்ச்சியடைய, தத்துவம் விடுகிறார்கள். ஓய்வும், சுகபோகமும் கோருகிறார்கள். அவர்களது ஸ்தாபனங்களால் நிச்சயிக்கப்பட்டு ஒப்புவிக்கப்பட்ட வேலைகளை நிறைவேற்றுவதற்குப் பதில் அவர்களே லேசான வேலைகளைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள விரும்புகிறார்கள். அவர்கள் கட்சியில் உயர்பதவியை விரும்புகிறார்கள். ஆனால், பொறுப்புகளைத் தட்டிக் கழிக்கிறார்கள். அவர்களின் போர்க்குணமிக்க தன்மையும் சக்தியும் படிப்படியாக வலுவிழக்கிறது. அவ்வாறே அவர்களின் புரட்சிகரமான உறுதியும் உயர்ந்த நற்பண்புகளும் வலுவிழக்கின்றன. புரட்சிக்காகவும், புரட்சிகரமான கட்சிக்காகவும் தன் வாழ்நாள் முழுவதும் போராட வேண்டுமென்ற உறுதியான பற்றுதான் ஒரு புரட்சியாளரின் அடிப்படைத் தத்துவம் என்பதை அவர்கள்.மறந்துவிடுகிறார்கள்.

மூன்று எதிரிகள்

ஏகாதிபத்தியமும் முதலாளித்துவமும் அபாயகரமான எதிரிகள் ஆகும். மூடப் பழக்கங்களும் பாரம்பரியமும் மிகப் பெரிய எதிரிகள்தான். ஏனென்றால், அவை கபடத்தனமாக, நயவஞ்சகமாகப் புரட்சியின் முன்னேற்றத்தைத் தடுக்கின்றன. இருந்தபோதிலும், அவைகளை உடனே அகற்றிவிட முடியாது. மிகுந்த முன்னெச்சரிக்கையுடனும், பொறுமையுடனும் நீண்ட போராட்டத்தில் அவைகளை அகற்ற முயற்சிக்க வேண்டும்.

மூன்றாவது எதிரி தனிநபர்வாதமாகும். அது இன்னும் நம் ஒவ்வொருவரிடமும் ஒளிந்து ஒட்டிக்கொண்டு இருக்கிற குட்டி முதலாளித்துவ மனப்பான்மையேயாகும். அது தன்னுடைய தலையை வெளியே நீட்ட வெற்றி, தோல்வி போன்ற ஒரு சந்தர்ப்பத்துக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது.

எப்படிப்பட்ட சூழ்நிலைகளிலும் இந்த எல்லா எதிரிகளையும் எதிர்த்து உறுதியாகப் போராடுவதிலும், ஒருவருடைய உஷார் தன்மையைப் பாதுகாப்பதிலும், தலைகுனியாமல், நிமிர்ந்த பார்வையுடன் அக்கிரமத்திற்கு அடிபணியாமல் எப்பொழுதும் போரிடத் தயாராக நிற்கும் நிலையிலும் புரட்சிகரப் பண்பாடுகள் அடங்கியுள்ளன. அவ்வாறு செய்வதன் மூலம்தான் நாம் எதிரிகளைத் தோற்கடித்து நமது புரட்சிகரக் கடமைகளை நிறைவேற்ற முடியும்.

ஒழுங்கும் கட்டுப்பாடும்

சரியான கொள்கைத் தெளிவும், ஒன்றுபட்ட தலைமையும் இருந்தால்தான் கட்சி, மக்கள் எல்லோரையும் தொழிலாளி வர்க்கத்தையும் சோசலிசத்தை நோக்கி அழைத்துச் செல்ல முடியும். அதனுடைய எல்லா உறுப்பினர்களுடைய சிந்தனை, செயல் இரண்டிலும் ஒற்றுமை ஏற்படுவதன் மூலமாகத்தான் ஒன்றுபட்ட தலைமை உருவாகும். இந்த ஒற்றுமை இல்லாவிட்டால் கட்சி ஒரு பஜனைக் கோஷ்டி போலத் தோற்றமளிக்கும். மக்களுக்குத் தலைமை தாங்கிப் புரட்சியை வெற்றிகரமாக நடத்திமுடிக்க இயலாமல் போய்விடும். இயக்கத்தில் சேர்ந்திருக்கிற பலர் புரட்சி வேலையில் தங்களுக்குரிய பங்கை முழுமையாகச் செலுத்துவதில்லை. அவர்கள் தங்கள் விருப்பம்போல் செயல்படவும் கட்சி ஸ்தாபனம் மற்றும் ஒழுங்கு கட்டுப்பாடு விதிகளுக்கு முரணாகச் செல்லத் தூண்டுவதும் தனிநபர்வாதம்தான். செருக்கும், ஆணவப் போக்கும்தான். தெரிந்தோ தெரியாமலோ அவர்கள் செய்யும் செயல்கள் கட்சியின் பெருமையை சேதப்படுத்துகிறது. கட்சியின் வேலைக்கு இடையூறாக இருந்து புரட்சியின் முன்னேற்றத்தைத் தடைசெய்கிறது.

ஒரு புரட்சிகர கட்சி உறுப்பினருக்கு என்ன துன்ப துயரங்கள் நேரிட்டாலும் மக்களின் நலன்களுக்கு உழைப்பதற்கான குறிக்கோள்களை உறுதியாக நிறைவேற்றுவதில்தான் புரட்சிகர ஒழுக்க நெறி அடங்கியுள்ளது. இதன் மூலம்தான் மக்களுக்கு ஒரு முன்மாதிரி உதாரணத்தை ஏற்படுத்த முடியும். ஒவ்வொரு கட்சி உறுப்பினரும் புரட்சிக்கும், புரட்சிகர கட்சிக்கும், மக்களுக்கும் உள்ள தன்னுடைய கடமை உணர்வை உயர்த்திக்கொள்ள வேண்டும்.

.

தனிநபர் அல்லது ஏதாவது ஒரு கோஷ்டியின் நலனில் நமக்கு அக்கறை இல்லை. உழைக்கும் மக்களின், தொழிலாளி வர்க்கம் முழுமையின் பொது நலனைத்தான் நாம் முன்நிறுத்துகிறோம். தொழிலாளி வர்க்கம் தன்னை மட்டும் விடுவிக்கப் போராடவில்லை. மனித சமுதாயம் முழுவதையும் சுரண்டல், ஒடுக்குமுறைகளில் இருந்து விடுவிக்கப் போராடுகிறது.

புரட்சிகரமான கட்சியில் இருந்தும் தனது வர்க்கத்தில் இருந்தும் தன்னைப் பிரித்துக்கொண்டு எந்தத் தனிநபரும் எவ்வளவு திறமையாளனாக இருந்தாலும் எதுவும் அடைந்துவிட முடியாது. கட்சி உறுப்பினர்களுக்குப் புரட்சிகர ஒழுக்கநெறி என்பது எல்லா சூழ்நிலைகளிலும் எல்லாவற்றிற்கும் மேலாக கட்சியின் நலனை நிலைநிறுத்துவதில் அடங்கும். தனிநபரின் நலன் கட்சியின் நலனுக்கு முரண்பட்டிருந்தால் தனிநபரின் நலன் கட்சியின் நலனுக்காக முழுமையாக விட்டுக் கொடுக்கப்பட வேண்டும். எதையும் எதிர்பார்க்காத அர்ப்பணிப்பு தனிநபர்வாதத்தில் இருந்து தங்களைத் தாங்களே தூய்மைப்படுத்திக் கொள்ளாமல் பல கட்சி உறுப்பினர்கள் கட்சிக்குத் தாங்கள் செய்த சேவையைத் தொடர்ந்து பீற்றிக் கொள்கிறார்கள். அதற்காக அவர்கள் கட்சியிடம் நன்றிக் கடனை எதிர்பார்க்கிறார்கள். உயர்பதவிகள், தனிச் சலுகைகள் போன்றவற்றை விரும்புகிறார்கள். அவர்கள் விருப்பம் நிறைவேறாவிட்டால் கட்சிக்கு எதிராகக் கோபம் கொண்டு வன்மம் கொள்கிறார்கள். தங்களுக்கு எதிர்காலம் இல்லை எனவும் தாங்கள் பலியிடப்பட்டிருக்கிறோம் எனவும் அவர்கள் புகார் கூறுகிறார்கள். படிப்படியாக கட்சியிலிருந்து ஒதுங்குகிறார்கள். கட்சியின் கொள்கைகளையும், கட்டுப்பாடு நியதிகளையும் அழிக்கிறார்கள்.

பல ஊழியர்கள் புரட்சிப் போராட்டங்களில் வீரமாகப் போர்புரிந்து தங்கள் இன்னுயிரை ஈந்தனர். அந்தத் தோழர்கள் பதவியோ, அந்தஸ்தோ ஒருபோதும் விரும்பியது இல்லை. கட்சியிடமிருந்து ஒருபோதும் நன்றியைக் கோரவில்லை.

சமுதாயத்தின் தற்போதைய நிலையின் காரணமாக கட்சி உறுப்பினர்களின் பெரும்பகுதி குட்டி முதலாளி வர்க்கத்திலிருந்து வருகின்றனர். இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஆரம்ப காலத்தில் இவர்கள் உறுதித் தன்மையற்று இருக்கின்றனர். இவர்களின் பார்வை குழப்பமாகவும் சிந்தனைகள் முற்றிலும் சரியாக இல்லாமலும் இருக்கின்றன. புரட்சிப் போராட்டங்களில் புடம்போட்டு எடுக்கப்படும் போதுதான் பலர் நல்ல புரட்சியாளர்களாகவும், புரட்சிக்கும், புரட்சிகர கட்சிக்கும் விசுவாசம் உள்ளவர்களாகவும் மாறுகின்றனர்.

விமர்சனம், சுயவிமர்சனம்

தவறு செய்யும் கட்சி உறுப்பினர்கள் மக்களை தவறான வழிகாட்டி அழைத்துச் செல்கின்றனர். எனவே, அவர்கள் ஏதாவது தவறு செய்தால் அதை உடனே திருத்திக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். சிறிய சிறிய தவறுகளாகச் சேர்ந்து ஒன்று குவிந்து பெரிய தவறுகள் உண்டாக அனுமதிக்கக் கூடாது. இதன்பொருட்டு, அவர்கள் உண்மையிலேயே சுயவிமர்சனம், விமர்சனம் ஆகியவற்றைக் கையாள வேண்டும்.

கூர்மையான ஆயுதங்களாகிய சுயவிமர்சனம், விமர்சனத்தைப் பயனுள்ள முறையில் பயன்படுத்த வேண்டும்.

இருந்தாலும் பல உறுப்பினர்கள் தனிநபர்வாதத்தை ஒதுக்கிவிட முடியாத நிலையில் தொடர்ந்து இருக்கின்றனர். தற்பெருமையைப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறார்கள். மற்றவர்களை விமர்சனம் செய்கிறார்கள். தாங்கள் மட்டும் மற்றவர்களால் விமர்சனம் செய்யப்படுவதை விரும்பாமல் இருக்கிறார்கள். சுயவிமர்சனத்தைத் தவிர்க்கிறார்கள். முக்கியமற்ற நிலையிலும் உண்மைக்குப் புறம்பாகவும் அதை உபயோகிக்கிறார்கள். சுயவிமர்சனத்தால் தங்கள் பெருமையும் மதிப்பும் போய்விடுமோ என்று பயப்படுகிறார்கள்.

ஊழியர் ஒருவரின் வேலையில் குறைபாடுகளே இல்லாமல் இருப்பது மிகவும் கடினம். தவறுகள், குறைகள் ஏற்படுவதைக் குறித்து நாம் பயப்படத் தேவையில்லை. ஆனால், தவறுகளைத் திருத்துவதில் தவறுவதைப் பற்றியே நாம் பயப்பட வேண்டியவர்களாய் இருக்கிறோம். சுயவிமர்சனத்திற்கு நாம் பழகிக் கொள்ளாவிட்டால் பின் தங்கிப் பின்னோக்கி செல்வோம். அது நம்மை மக்களால் ஒதுக்கித் தள்ளப்படும் நிலைக்கு இட்டுச் செல்லும். இதுதான் தனிநபர்வாதத்தின் தவிர்க்க முடியாத பின்விளைவாகும்.

மக்களிடம் கற்போம்

புரட்சிகரப் பண்பாடு என்பது மக்களின் கருத்துக்களுக்கு மதிப்புக் கொடுத்து அதில் கவனம் செலுத்தும் வகையில் அவர்களிடம் நம்பிக்கை வைப்பது, ஒரே அமைப்பில் அவர்களை ஒன்றிணைப்பது ஆகியவைகளில் அடங்கியுள்ளது. கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் தங்கள் சொல்லாலும் செயலாலும் மக்களின் நம்பிக்கையையும், நன்மதிப்பையும் அன்பையும் பெறவேண்டும். மக்களைப் புரட்சிகரமான கட்சிக்கு நெருக்கமாக ஒற்றுமைப் படுத்துதல், அமைப்பு ரீதியாகத் திரட்டுதல், அரசியல் கல்வி புகட்டல் ஆகியவற்றின் மூலமாக கட்சியின் கொள்கைகளையும் தீர்மானங்களையும் உற்சாகமாக அமுல்நடத்த வழிகாண வேண்டும்.

ஆனால், இன்று தனிநபர்வாதம் நமது தோழர்களில் பெரும்பாலோரை ஆட்கொண்டு இருக்கிறது. ஒவ்வொன்றிலும் கெட்டிக்காரத்தனமாக இருக்கிறோம் என்று கூறிக்கொண்டு மக்களிடமிருந்து விலகிச் செல்கின்றனர். அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள மறுத்து கற்றுக்கொடுக்க மட்டுமே விரும்புகின்றனர். மக்களிடையே வேலை செய்யவும், அமைப்பு, பிரச்சாரம், கட்சிக்கல்வி இவற்றில் முழுமையாக ஈடுபட விரும்பாமல் தயங்குகின்றனர். அவர்கள் அதிகார வர்க்கப் போக்காலும், கட்டளையிடும் போக்காலும் பீடிக்கப்பட்டுள்ளனர். இதன் விளைவாக மக்கள் இவர்களை நம்புவதும் இல்லை, மதிப்பதும் இல்லை. சந்தர்ப்பவசத்தால்கூட இவர்கள் நன்மையான காரியங்கள் எதுவும் செய்வதில்லை.

கூட்டு நலனுக்குள் தனிநபரின் நலன்கள்

சோசலிசத்திற்கான போராட்டத்தை தனிநபர்வாதத்தை களைந்தெறியும் போராட்டத்திலிருந்து தனியாகப் பிரிக்க முடியாது. தனிநபர்வாதத்தை எதிர்த்துப் போராடுவது என்பது தனிநபரின் நலன்களைக் காலில் போட்டு மிதிப்பது அல்ல. ஒவ்வொரு மனிதனுக்கும் சொந்த குணபாவங்கள், தனித் திறமை, சொந்த வாழ்க்கை மற்றும் குடும்பம் உண்டு. தனிநபர் ஒருவரின் நலன்கள் கூட்டு வாழ்க்கையின் நலன்களுக்கு நேர் எதிராகப் போகாதபோது அதனால் தீங்கு இல்லை. தனிநபரின் நலன்கள் கூட்டு நலன்களுக்கு முரண்பட்டு இருந்தால் முன்னது பின்னதற்கு விட்டுக் கொடுக்க வேண்டுமெனப் புரட்சிகரக் கோட்பாடு கோருகிறது. ஏனென்றால், கூட்டு நலனுக்குள் தனிநபரின் நலன்கள் அடங்கிவிடுகிறது. அதனுடைய பகுதியாகவும் ஆகிவிடுகிறது. கூட்டுநலன் பாதுகாக்கப் பட்டால் தனிநபரின் நலன் பூர்த்தியடைகிறது.

மார்க்சிச லெனினிசக் கல்வி

புரட்சி இடைவிடாமல் தொடர்ந்து முன்னேறுகிறது. அவ்வாறே புரட்சிகர கட்சியும் முன்னேறுகிறது. அதேபோல் புரட்சியாளனும் முன்னேற வேண்டும். புரட்சிகரமான இயக்கம் லட்சோப லட்சம் மக்களை இணைத்துக் கொண்டிருக்கிறது. புரட்சியை நடத்துவது என்பது ஆயிரம் ஆயிரம் சிக்கலான கடினமான கடமைகள் நிறைந்தது. சிக்கலான எல்லா நிலைமைகளையும் தெளிவாக நிர்ணயம் செய்யவும், முரண்பாடுகளைப் புரிந்துகொள்ளவும், எல்லா பிரச்சினைகளுக்கும் சரியான தீர்வு காணவும் மார்க்சிச லெனினிசத்தைக் கற்றுக்கொள்ள நாம் முயல வேண்டும்.

மார்க்சிச லெனினிசத்தைக் கற்பதின் மூலம்தான் புரட்சிகர ஒழுக்கநெறியை நாம் ஒருங்கிணைக்க முடியும். நமது நிலையை உறுதியாகப் பாதுகாக்க முடியும். சித்தாந்த அரசியல் தரத்தை உயர்த்த முடியும். கட்சியால் நம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள கடமைகளை நிறைவேற்ற முடியும்.

ஒருவர் பிரச்சினைகளை எவ்வாறு அணுகுகிறார் என்பதைப் பொறுத்தும், எந்த முறையில் அணுகுகிறார் என்ற அனுபவங்களைக் கற்றுக் கொள்வதன் மூலமும் மார்க்சிய லெனினியத்தைப் புரிந்துகொள்ள முடியும். ஒரு நாட்டின் தனிப்பட்ட நிலைமைகளுக்கேற்ப படைப்பாற்றலுடன் அதைப் பயன்படுத்துவதற்கு உலக முழுமைக்குமான மார்க்சிய லெனினிய உண்மைகளைக் கற்க வேண்டும். செயலில் அதாவது நடைமுறையில் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் நாம் கற்க வேண்டும். தத்துவமும் நடைமுறையும் ஒன்றோடொன்று இணைந்து இரண்டும் கைகோர்த்துச் செல்ல வேண்டும்.

ஆனால், பல தோழர்கள் மார்க்சிய லெனினியம் பற்றிய புத்தகங்கள் சிலவற்றை மனப்பாடம் செய்துகொள்கிறார்கள். மற்றவர்களைக்காட்டிலும் அவர்கள்தான் மார்க்சிய லெனினியத்தைப் புரிந்து கொண்டவர்கள் என நினைக்கிறார்கள். நடைமுறையில் பிரச்சினைகளை நேரில் சந்திக்கும்போது எந்திரகதியில் செயல்படுகிறார்கள், அல்லது குழப்பத்தில் தள்ளப்படுகிறார்கள். அவர்களுடைய செயல்கள் சொல்லுக்குப் பொருத்தமாக இருப்பதில்லை. மார்க்சிய லெனினிய புத்தகங்களைப் படிக்கிறார்கள். ஆனால், அதன் சாரத்தைப் புரிந்து கொள்வதில்லை. தங்களின் படிப்பாளித் தனத்தை வெளிச்சம் போடுகிறார்களேயன்றி நடைமுறையில், புரட்சி நடவடிக்கைகளில் அவைகளை அவர்கள் பயன்படுத்துவதில்லை. இதுவும்கூட தனிநபர்வாதம்தான்.

தியாகமே அடிப்படை

தனிநபர்வாதம் நூற்றுக்கணக்கான பயங்கர நோய்களைப் பரவச் செய்கிறது. அதிகார வர்க்க மனப்பான்மை, கட்டளையிடும் போக்கு, வறட்டுத்தனம், தன்னோக்கு நிலை, லஞ்ச லாவன்யம், வீண் விரயம் போன்றவற்றிற்குப் பலியானவர்கள் கை கால்கள் கட்டுண்டு முடமாக்கப்பட்டு கண்மூடித்தனமாகத் தன்னுடைய அந்தஸ்து மற்றும் பெருமையை உயர்த்திக் கொள்ளும் விருப்பத்தால் வழி நடத்தப்பட்டு மக்களுடையவும், வர்க்கத்தினுடையவும் நலன்களைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் செயல்படுவர். தனிநபர்வாதம் சோசலிசத்தின் கொடிய எதிரி. புரட்சியாளர்கள் இதைக் களைந்தெறிய வேண்டும்.

புரட்சிக்காகவும், புரட்சிகர கட்சிக்காகவும் போராடுவதில் ஒவ்வொரு புரட்சியாளரும் தன்னுடைய உயிரையும், உடைமைகளையும் தியாகம் செய்வது மிகவும் அவசியமானதாகும். இதுவே புரட்சியாளர்களின் நற்பண்பு. இதுவே புரட்சிகரப் பண்பாடு.

புரட்சிகரப் பண்பாடு என்பது திடீரென்று வானத்தில் இருந்து கீழே விழுந்துவிடாது. தினந்தோறும் கடும் முயற்சியில் போராட்டத்தில் கடைப்பிடிப்பதன் மூலம் அது வளர்ச்சியுற்று ஒருங்கிணைக்கப் படுகிறது. பூமியிலிருந்து எடுக்கும் உலோகத்தைப் போல உருக்க உருக்க அது மின்னுகிறது. புடம் போடப் போடத் தங்கம் மாத்து வருவது போல, தியாகத்தின் மூலமாகப் புரட்சிகரப் பண்பாடு வளருகிறது.

மனித சமுதாயத்தை விடுவிப்பதற்கும் சோசலிசத்தை நிர்மாணிப்பதற்குமான உயர்ந்த பங்கை ஆற்றுவதற்கு ஏற்ற முறையில் புரட்சிகர ஒழுக்க நெறியை வளர்ப்பதைக் காட்டிலும் சிறந்த பெருமையும் மகிழ்ச்சியும் வேறு என்ன இருக்க முடியும்?

- ஹோ சி மின்