கவிதை: மயான அமைதி பூங்கா

துரை. சண்முகம்

கவிதை: மயான அமைதி பூங்கா

அமைதிப் பூங்கா!

தொழிலாளர்க்கு 
பாதுகாப்பு 
இல்லாத நாடு 
என்ன நாடு? 
வெட்கக்கேடு!

கல்லுக்கும் மண்ணுக்கும்
இரும்புக் கம்பிக்கும் 
காவலிருக்க 
எங்கிருந்தோ 
பீகாரிலிருந்து 
வந்தது குடும்பம்
கல்லுக்கும் 
மண்ணுக்கும் 
உள்ள பாதுகாப்பும் இன்றி
கௌரவ்குமார்- மனைவியும் 
இரண்டு வயது குழந்தையும் 
பாலியல் மிருகங்கள்
வேட்டையாட தரமணிக் காடு!

பணியாளர்களுக்கு உரிய
பாதுகாப்புச் சூழல் வழங்காத
முதலாளியை தூக்கி 
முதலில் உள்ளே போடு!

ஆபத்துக்கு உதவ 
ஆள் நடமாட்டம் இல்லை!

குதறப்பட்ட 
பெண்ணின் அலறல் 
அவள் குருதியிலேயே
புதைக்கப்பட்டது 
அமைதியாக!

கொல்லப்பட்ட 
அவள் கணவனின் துடிப்பு
சாக்கு மூட்டைக்குள் 
அடங்கிப் போனது
அமைதியாக! 

எதற்குச் சாகிறோம்?
என்பது தெரியாமலேயே
பயத்தில் 
வீறிட்ட குழந்தை
அனைத்தின் மீதும் 
நம்பிக்கை இழந்து 
இருண்ட அதன் விழிகள்
இமைக்க 
அஞ்சி அடங்கியது
அமைதியாக!

ஆம்!
இது 
அமைதி பூங்காதான்!

தொழிலாளர்களின்
அலறல்கள்
தொண்டைக் 
குழிக்குள்ளேயே
அமைதியாக 
பலி கொல்லப்படும் 
அமைதி பூங்காதான்!

ஆம் !
நினைத்துப் பார்க்கவே 
நெஞ்சம் நடுங்கும்
பயங்கரமான 
மயான அமைதி! 

  - துரை. சண்முகம்

https://www.facebook.com/100080904177819/posts/923074120399385/?rdid=8JOVmPmGlvzU9WQJ