தேர்தல் பங்கேற்பு குறித்து லெனின் கூற்றும் - சு.ப.வீ.யின் கிழம்பருவக் கோளாறும்!

துரை. சண்முகம்

தேர்தல் பங்கேற்பு குறித்து லெனின் கூற்றும் - சு.ப.வீ.யின் கிழம்பருவக் கோளாறும்!

சுபவீ அவர்கள் ஒரு தேர்ந்த சொற்பொழிவாளர். வார்த்தைகளை வைத்து கோபுரங்கள் எழுப்பும் திராவிடக் கட்டடக்கலை நிபுணர் என்பதையும் அவருடைய ஒரு காணொளி பேச்சில் காண முடிந்தது. 

தேர்தல் - திமுகவுக்கு ஆதரவு எனும் ஏதோ ஒரு சொற்பொழிவில் தேர்தல் புறக்கணிப்பு என்று பேசும் மெல்லிய குரலும் உலகெங்கும் இருக்கிறது என்கிறார். 

கூடவே தேர்தலை புறக்கணிக்க சொல்லும் அரசியலை மறுப்பதற்கான நோக்கில் தோழர் லெனின் எழுதிய "இடதுசாரி கம்யூனிசம் இளம்பருவக் கோளாறு" எனும் நூலைக் குறிப்பிட்டும் ரஷ்யாவில் லெனினே! பாராளுமன்றத்தில் பங்கு பெற்றது பற்றியும் குறிப்பிட்டு செல்கிறார்.

இரண்டுமே நடந்த உண்மைகள் தான், மறுப்பதற்கு இல்லை. 

ஆனால் அந்த இரண்டிலுமே தோழர் லெனின் சொன்ன மையமான விசயத்தை பேசும் தேவை அவருக்கு இல்லை. ஆனால் நாம் அதில் கவனம் கொள்ள வேண்டும். 

முதலில் தோழர் லெனின் உடைய அந்த நூல் தேர்தல் புறக்கணிப்பு பார்வைக்காக மட்டும் எழுதப்பட்டது அல்ல.

பிற்போக்கான நிலைமைகளில் தொழிற்சங்கங்கள் பாராளுமன்றங்கள் வரை ஒரு கருவியாக கம்யூனிஸ்டுகள் எப்படி பயன்படுத்த வேண்டும்? என்பது பற்றிய செயல் தந்திர அரசியல் கண்ணோட்டம் பற்றியது அது. வெகுமக்கள் இன்னும் நம்பிக்கை வைத்து பங்குபெறும் இதில் ஒன்றிலும் வினையாற்றாது ஒதுங்கிக் கொள்ளும் அராஜகவாத சிந்தனை நடத்தை பற்றியது.

தேர்தலில் பங்கேற்பது 

என்றவுடன் ஓட்டு போடுவது என்பதாக மட்டும் புரிந்து கொள்ளும் அபத்தம் அல்ல அது.

முதலாளித்துவம் முன்வைக்கும் தேர்தல் அமைப்பு முறைக்குள் நாம் என்ன வகை அரசியல் செய்வது என்பது பற்றியது அது.

தொழிற்சங்க நிலைமைகளிலும் பங்கு பெற வேண்டும் என்பதை சுபவீ நினைவு தப்பியும் பேசப்போவதில்லை. தேர்தல் மட்டுமே அவருக்கு தேவையானதாக இருப்பதால் 

அதை ஒட்டிய மேற்கோளாக மட்டும் பயன்படுத்திச் செல்கிறார் .

உண்மையில் தோழர் லெனின் அந்த நூலில் குறிப்பாக ஜெர்மானிய இடதுசாரிகள் மற்றும் சில நாடுகளில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் பாராளுமன்ற வாதம் என்பதை ஒரு மாறா நிலை பார்வையாக கொண்டு ஒன்று புறக்கணிப்பது அல்லது அதிலேயே விழுந்து கிடப்பது எனும் நிலைமையை சுட்டிக்காட்டி ஒன்று இடது தவறாகிறது, ஒன்று வலது சந்தர்ப்பவாதமாக போகிறது என வரையறுத்து சொல்லுவார்.

இதற்கு மாறாக இந்த மாறா நிலை கண்ணோட்டம் இன்றி தொழிலாளர் வர்க்கம் முதலாளி வர்க்கத்தை அம்பலப்படுத்துவதற்காகவும் அதற்கான அரசியல் பயிற்சி அளிப்பதற்காகவும் பாட்டாளி வர்க்கக் கட்சி பாராளுமன்றத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? எனும் விரிவான பொருளில் அந்த நூலில் சொல்கிறார். 

மேலும் சட்டபூர்வ சட்டவிரோத அமைப்பு முறையில் செயல்படுவதற்கு தயாரான நிலையில் இருந்து இதை செய்ய வேண்டும் என்பதையும் வழிகாட்டுகிறார். 

ரஷ்ய அனுபவத்தில் கூட குறிப்பிட்ட சூழலில் ஜாரியவாதிகள் மென்ஷ் விக்குகள் ஜனநாயகம் அளிப்பது போல நடந்த பாசாங்கை அம்பலப்படுத்தவும் வெகு மக்களின் உணர்வை பயன்படுத்தி திரட்டவும் பாராளுமன்றத்தை பயன்படுத்தினார்கள். ஆனால் அங்கே ஜனநாயக உரிமை பறிக்கப்பட்ட போது அதிலிருந்து வெளியேறி மக்கள் திரள் புரட்சி செய்யவும் போல்சவிக் கட்சி நாடெங்கும் கிளர்ச்சி அமைப்புகளை கொண்டிருந்தது.

மக்கள் சோவியத்துக்கள் என்ற மாற்று அமைப்பு முறை நிறுவப்பட்டு அதன் மூலம் தொழிலாளர் வர்க்கத்தை தங்களது தலைமையின் கீழ் திரட்டி ஜாரை, மற்றும் சகல முதலாளித்துவ சந்தர்ப்பவாதிகளையும் வீழ்த்தி சோசலிச புரட்சியை சாதித்தார்கள் லெனின் தலைமையிலான கம்யூனிஸ்டுகள்.

எனவே பாராளுமன்றத்தை தேர்தலை பயன்படுத்துவது என்பது புரட்சிகர செயல்திட்டத்திற்கான வழிமுறைகளில் ஒன்றே ஒழிய, 

கம்யூனிஸ்டுகளுக்கான கட்சி கொள்கை நடத்தைகளுக்கான வழியே இன்றி போய் முதலாளித்துவ பட்டியில் அடையும் ஆட்டுமந்தை அரசியல் அல்ல. 

இங்கே அத்தகைய நல்லெண்ண மேய்ப்பரின் குரல் தான் சுபவீ போன்றவர்களுடையது.

எப்போதுமே தேர்தலை புறக்கணிப்பது ! அல்லது எப்போதுமே அதை ஆதரிப்பது! என்பதல்ல கம்யூனிஸ்டுகளின் நிலைப்பாடு.

தொழிலாளர் வர்க்க அரசியல் உரிமைகள் பேசுவதற்கான ஒரு ஜனநாயக வழிமுறையாக உறுதி செய்வதற்கு பயன்படுத்திக் கொள்ளத்தான்,

அது.

இங்கே இந்திய தேர்தல் முறையின் நிலவரம், மக்கள் தேர்தலை புறக்கணிப்பதல்ல! தேர்தல் அமைப்பு முறையே மக்களை புறக்கணிக்கும்  எதேச்திகார கட்டத்திற்கு வந்திருக்கிறது.

தேர்தலில் வென்று ஜனநாயகத்தை நிலை நாட்டுவது இருக்கட்டும். 

தேர்தலில் ஜனநாயகமாக ஓட்டு போடும் உரிமையையே SIR வாக்காளர் திருத்தம் பல மோசடிகள் வழியாக கேலிக்கூத்தாக்கியுள்ளது. 

தோழர் லெனின் வழிகாட்டி பங்கு பெற்ற தேர்தல் முறைகளும் கூட அனைவருக்குமான ஜனநாயக உரிமை என்ற அடிப்படையில் தான், அதை உருவாக்கும் அரசியல் நிர்ணய சட்ட முறையை உறுதி செய்வதற்கான கோரிக்கையுடன்தான் பங்கேற்றார்கள். அது அங்கு நடக்க முடியாது என்பதை அம்பலப்படுத்தி வெளியேறி புரட்சி செய்யவும் மாற்றுத்திட்டத்தோடு மாற்று அமைப்பு பலத்துடன் இருந்தார்கள். 

ஏற்கனவே பாராளுமன்றத்தில் பயன்படுத்த போன இடது வலது கட்சிகள் வழக்கொழிந்து இளைத்துப் போன நிலையிலும், இடதுசாரிகளுக்கான ஒரு தனித்துப் போட்டியிடும் தேர்தல் தெம்பும் இல்லாத நிலையில் 

தேர்தலுக்கு முன்பே! பாராளுமன்றம் போவது இருக்கட்டும், கோபாலபுரத்துக்கு போவதற்கு முன்பே அன்னவர்க்கே சரண் நாங்களே! என எந்த கொள்கை திட்ட ஒப்பந்தமும் இல்லாமல் இது என்ன கிழம்பருவக் கோளாறா?!

எனவே வரலாற்றின் சுழற்சியில் அதைவிட பின்தங்கிய எந்த கோரிக்கையும் நிபந்தனையும் இல்லாமல், ஐயப்பனுக்கு மாலை போட்டாலே நல்லது நடக்கும்! என்பது போல திராவிட இடதுசாரி இளம் பருவக் கோளாறுகளை பார்க்கையில் சுபவீ போன்றவர்கள் இன்னும் அடித்துவிடத்தான் செய்வார்கள்.

   - துரை. சண்முகம்

https://www.facebook.com/story.php?story_fbid=916167817756682&id=100080904177819&rdid=epBumMZBxIjSlZpA

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு