கிரீன்லாந்து: பனிப் பிரதேசத்தில் வெப்பமடையும் மறுபங்கீட்டுப் போர்

சமரன்

கிரீன்லாந்து: பனிப் பிரதேசத்தில் வெப்பமடையும் மறுபங்கீட்டுப் போர்

சென்ற ஆண்டின் துவக்கத்தில் அமெரிக்காவில் மீண்டும் ஆட்சிக்கு வந்த டிரம்ப் கும்பல், சீனாவை பிரதான எதிரியாக வரையறுத்து வர்த்தகப் போர், அகண்ட அமெரிக்கா, ஆகியவற்றை உள்ளடக்கிய “அமெரிக்கா முதன்மை (America first)” எனும் பாசிசக் கொள்கையை செயல்படுத்தத் துவங்கியது. அமெரிக்காவை மாபெரும் வல்லமை படைத்த சக்தியாக மீண்டும் மாற்றுவதற்கான திட்டத்தை (Make America Great Again –MAGA) முன்வைத்தது. இத்திட்டத்தின் முக்கியமானதொரு அங்கமாக அகண்ட அமெரிக்கா திட்டம் உள்ளது. அதில், மெக்சிகோ, பனாமா, கொலாம்பியா, கனடா, கிரீன்லாந்து மற்றும் ஆர்க்டிக் பகுதிகளை ஆக்கிரமிப்பதும் அடங்கும்.

டிரம்பின் அகண்ட அமெரிக்கா திட்டம்

“கல்ப் ஆஃப் மெக்சிகோ”வை “கல்ப் ஆஃப் அமெரிக்கா” என்று அமெரிக்கா தனது அனைத்து ஆவணங்களிலும் பயன்படுத்தி வருகிறது. கனடா தனி நாடு அல்ல, அது அமெரிக்காவின் ஒரு மாகாணம் என்றார் ட்ரம்ப். பனாமா கால்வாய் அமெரிக்காவுக்கு சொந்தமானது என்றும் கொலாம்பியாவையும் அமெரிக்கா கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடுவோம் என பேசினார். அதைத் தொடர்ந்து கிரீன்லாந்து வட அமெரிக்காவின் ஒரு பகுதி என்றும் நாங்கள் கிரீன்லாந்தை எப்படியாவது அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடுவோம் என்றும் பேசினார். 

கிரீன்லாந்தை ஏதோ ஒரு வழியில் – இராணுவ நடவடிக்கையின் மூலமாகவோ அல்லது விலைக்கு வாங்கியோ - தன்னுடன் இணைத்துக்கொள்ளப்போவதாக மிரட்டியுள்ளார் ட்ரம்ப். இது டென்மார்க்கை மட்டுமல்லாமல், நேட்டோ (NATO) கூட்டணியையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கிரீன்லாந்தை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதன் மூலம் அமெரிக்காவின் நவீன ஆதித்திரட்டல் ஆக்டோபஸ் கரங்களை ஆர்க்டிக் பகுதி வரை விரிவுபடுத்த உள்ளது டிரம்ப் கும்பல். சென்ற ஆட்சியின் போதே இந்த முயற்சியில் ஈடுபட்டு வந்தாலும் தற்போது அதற்கான தேவையும் நெருக்கடியும் டிரம்ப் அரசுக்கு அதிகரித்துள்ளது. கிரீன்லாந்தில் கொட்டிக் கிடக்கும் கனிமவளங்கள் நவீன உயர்தொழில்நுட்பங்களுக்கு அத்தியாவசியமானவை. மேலும் துருவப் பகுதியில் பயணிக்கும் கப்பல்களையும், ஏவுகணைகளையும் கண்காணிப்பதற்கான இராணுவதளங்களையும் நிறுவுவது உள்ளிட்ட இராணுவ நடவடிக்கைகளுக்கும், புவிசார் அரசியலுக்கும் கிரீன்லாந்து இன்று முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. பசிபிக் பெருங்கடலையும் அட்லாண்டிக் பெருங்கடலையும் மிக நெருக்கமாக இணைக்கும் புள்ளியாக கிரீன்லாந்து மாறியுள்ளது. கிரீன்லாந்தை கைப்பற்றுவதன் மூலம் ஆர்க்டிக் பிராந்தியம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் துடிக்கிறது டிரம்ப் அரசு.

கிரீன்லாந்தும் ஆர்க்டிக் பிராந்தியமும்

கிரீன்லாந்து, ஆர்க்டிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு இடையில் ஆர்க்டிக் வட்டத்திற்குள் அமைந்துள்ளது. ஆர்க்டிக் வட்டம் என்பது பூமியின் வடக்கு முனையான வட துருவத்தை உள்ளடக்கிய 66.5 டிகிரி வடக்கில் உள்ள ஒரு கற்பனை கோடு ஆகும். கனடா, பின்லாந்து, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே, ரஷ்யா, ஸ்வீடன், அமெரிக்கா ஆகிய 8 நாடுகள் இந்தப் பிராந்தியத்திற்குள் பகுதியளவிலான நிலப்பரப்பைக் கொண்டுள்ளன. கிரீன்லாந்தின் மிக நெருக்கமான அண்டை நாடு கனடா ஆகும், நாரெஸ் நீரிணைப்பின் (Nares Strait) குறுகிய பகுதியில் இரு நாடுகளும் வெறும் 26 கிமீ இடைவெளியில் மட்டுமே உள்ளன. பல ஆண்டுகாலமாக சர்ச்சையாக இருந்த ஹான்ஸ் தீவை (Hans Island) பாதியாகப் பிரித்துக்கொண்டதன் மூலம் கனடாவும் கிரீன்லாந்தும் தங்களது நில எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன. ஆர்க்டிக் பிராந்தியத்தில் ரஷ்யாவும் அமெரிக்காவும் கூட அண்டை நாடுகளாக உள்ளன; அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் பெரிங் நீரிணைப்பின் (Bering Strait) டையோமெட் தீவுப் பகுதியில் உள்ள இடைவெளி 4 கிமீ.க்கும் குறைவேயாகும். ஆனால் இந்தத் தீவு சர்வதேச நேர கோட்டினால் பிரிக்கப்பட்டுள்ளதால், 21 மணிநேரம் கால வித்தியாசம் ஏற்படுகிறது. மேலும் இக்கோடுதான் வட அமெரிக்காவிற்கும் ஆசியாவிற்கும் இடையிலான எல்லையையும் குறிக்கிறது. 

 

ஆர்க்டிக் பகுதியில் அமைந்துள்ள கிரீன்லாந்து - உலகின் மிகப்பெரிய தீவு ஆகும். சுமார் 2.2 மில்லியன் சதுர கிமீ பரப்பளவு கொண்ட இது, ஜெர்மனியை விட சுமார் ஆறு மடங்கு பெரியது. இதன் மக்கள் தொகை மிக்குறைவாக உள்ளது - சுமார் 56,000 பேர் மட்டுமே வாழ்கின்றனர், அவர்களில் பெரும்பாலோர் இன்யூட்(Inuit) பழங்குடிகள். கிரீன்லாந்தின் 80% சதவிகிதத்திற்கும் மேற்பட்ட பகுதி பனிப்பாறைகளால் சூழப்பட்டுள்ளது, நகரங்களுக்கு வெளியே, கிரீன்லாந்து பெரும்பாலும் வனப்பகுதியாகவே உள்ளது. இதனால் பெரும்பாலான மக்கள் தலைநகர் நூக் மற்றும் அதன் அருகிலுள்ள தென்மேற்கு கடற்கரைப் பகுதிகளில்தான் வசிக்கின்றனர். இதன் பொருளாதாரம் பிரதானமாக மீன்பிடித் தொழிலை அடிப்படையாகக் கொண்டுள்ளது. கிரீன்லாந்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 25% சதவிகிதத்திற்கும் அதிகான பங்களிப்பை மீன்வளத்துறையே வழங்குகிறது. 

கிரீன்லாந்து, டென்மார்க் கட்டுப்பாட்டின்கீழ் இருப்பதன் வரலாற்றுச் சுருக்கம்

இன்யூட் (Inuit) பழங்குடிகள் கி.மு. 2500 வாக்கில் கிரீன்லாந்தில் குடியேறினர். கி.பி. 10ம் நூற்றாண்டில், நார்வே இங்கு வந்து தனது குடியேற்றங்களை நிறுவியது. சுமார் 15ம் நூற்றாண்டு வரை கிரீன்லாந்தின் தெற்கு பகுதிகளை நார்வே கட்டுப்படுத்தி வந்தது. அதன் பிறகு மெல்ல டென்மார்க் தனது குடியேற்றங்களை துவங்கி, 1721-ல் கிரீன்லாந்தை தனது காலனியாதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தது. கிரீன்லாந்து, வட அமெரிக்கக் கண்டத்தின் ஒரு பகுதியாக இருந்தாலும் - சுமார் 3,000கிமீ தொலைவில் உள்ள - டென்மார்க்கால் சுமார் 300 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் தீவு 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை டென்மார்க்கின் காலனியாகத்தான் இருந்தது. இரண்டாம் உலகப் போரின்போது நாஜி ஜெர்மனி டென்மார்க்கை ஆக்கிரமித்தது. அப்போது, ஜெர்மனி கிரீன்லாந்தைப் பயன்படுத்துவதைத் தடுக்க மன்ரோ கோட்பாட்டை (Monroe Doctrine)* முன்னிறுத்தி அமெரிக்கா அத்தீவை ஆக்கிரமித்தது. (*மன்றோ கோட்பாடு என்பது 1823ல் அமெரிக்க அதிபர் ஜேம்ஸ் மன்ரோவால் முன்வைக்கப்பட்ட வெளியுறவுக் கொள்கை ஆகும். இது அமெரிக்க கண்டத்தில் ஐரோப்பிய நாடுகள் புதிய காலனிகளை உருவாக்குவதை அமெரிக்கா எதிர்க்கும் என்றும் ஐரோப்பிய உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிடாது என்றும் வலியுறுத்தியது) அமெரிக்கா கிரீன்லாந்தில் நுழைந்து இராணுவத்தளங்களையும், ராடார் கண்காணிப்பு நிலையங்களையும் நிறுவியது. ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க அமெரிக்கா கிரீன்லாந்தை ஆக்கிரமித்து இராணுவத் தளங்களை அமைக்க டென்மார்க்கும் ஒப்புக்கொண்டது. டென்மார்க் காலனியாதிக்கத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, தற்போதைய தலைநகரான நூக் அருகே புதிய குடியேற்றங்கள் உருவானது. இரண்டாம் உலகப் போரின் இறுதிகளில், அமெரிக்காவும் டென்மார்க்கும் நேட்டோவின் நிறுவன உறுப்பினர்களாக மாறின. மேலும் அமெரிக்க துருப்புக்கள் கிரீன்லாந்தில் நிரந்தரமாக தங்குவதற்கு டென்மார்க் உடன்பட்டது. ஆதலால், போருக்குப் பிறகும் அமெரிக்கப் படைகள் கிரீன்லாந்தில் நீடித்திருந்தன. போருக்குப் பின்னர் பிடுஃபிக் (Pituffik) எனும் இடத்தில் அமெரிக்கா தனது மிக முக்கியமான ராடார் நிலையங்களில் ஒன்றை உருவாக்கியது. அது சோவியத் யூனியனின் ஏவுகணைகளை கண்காணிப்பதற்காக பிரத்தியேகமாக நிறுவப்பட்டதாகும். 1951 ஆம் ஆண்டில் அமெரிக்கா – டென்மார்க் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில் ராணுவத் தளங்களை உருவாக்குவதற்கும் பராமரிப்பதற்குமான உரிமைகளை அமெரிக்காவிற்கு அந்த ஒப்பந்தம் வழங்கியது. அது இன்றும் நடைமுறையில் உள்ளது. இரண்டாம் உலகப் போரின்போது, அமெரிக்கா கிரீன்லாந்தில் 15 இராணுவத் தளங்களையும் 10,000 இராணுவத்தினரையும் குவித்திருந்தது. (கிரீன்லாந்தில் டென்மார்க் ராணுவத்தின் இருப்பும் அமெரிக்க ராணுவத்தின் இருப்பும் தற்போதும் உள்ளது. இப்போது அங்கு ஒரு இராணுவத் தளமும் சுமார் 200 இராணுவத்தினரும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது) 

1953 ஆம் ஆண்டில், கிரீன்லாந்து டென்மார்க் பேரரசின் (Kingdom of Denmark) பகுதியாக மாற்றப்பட்டது; கிரீன்லாந்து மக்களும் டென்மார்க் குடிமக்களாக மாறினர். 1979 ஆம் ஆண்டில், சுயநிர்ணய உரிமை குறித்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டு கிரீன்லாந்திற்கு பகுதியளவிலான தன்னாட்சிக் கொள்கைகளை உருவாக்கிக் கொள்ளும் உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது. 2009-இல் அது பெயரளவில் சுயராஜ்ஜியத்தை அடைந்திருப்பினும், வெளியுறவுத்துறை, பணவியல் மற்றும் பாதுகாப்புத்துறைகளை டென்மார்க் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டது.

கிரீன்லாந்து ஏன் இவ்வளவு முக்கியத்துவமுடையதாக மாறியுள்ளது? 

கிரீன்லாந்தை கைப்பற்றுவது 3 பிரதான அம்சங்களுக்காக இன்று அதிமுக்கியத்துவமுடையதாக மாறியுள்ளது:

1) கிரீன்லாந்தில் கொட்டிக்கிடக்கும் வளங்கள்

2) பருவநிலை மாற்றத்தால் பனிப்பாறைகள் உருகி வருவதால் ஆர்க்டிக் பிராந்தியம் முழுவதையும் மேலாதிக்கம் செய்ய கிடைக்கும் வாய்ப்பு

3) அட்லாண்டிக் பெருங்கடல் – பசிபிக் பெருங்கடலையும் ஆர்க்டிக் பெருங்கடல் வழியாக குறைவான தூரத்தில் கடக்கவும் அதன் மூலம் கடல் சாம்ராஜ்ஜியத்தை கட்டியமைக்கவும் உலகை மேலாதிக்கம் செய்யவும் கிடைக்கும் அரிய வாய்ப்பு 

கிரீன்லாந்தில் கொட்டிக்கிடக்கும் வளங்கள்

2023 ஆம் ஆண்டின் ஓர் ஆய்வு, இன்றைய அதிநவீன உயர் தொழில்நுட்பங்களுக்கு தேவையான 34 கனிமங்களில் 25 கனிமங்கள் அங்கு ஏராளமாக காணப்படுவதாக கூறியது. 

கிரீன்லாந்தின் கனிம வள ஆணையத்தின் தரவுகளின் அடிப்படையில், அதன் முக்கிய கனிம வைப்புகளின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

அருமண் தனிமங்கள் (Rare Earth Elements)

மின்சார வாகனங்கள் (EV) மற்றும் காற்றாலைகளில் பயன்படுத்தப்படும் நிரந்தர காந்தங்களுக்கு அத்தியாவசியமான மூன்று அருமண் தனிம படிமங்கள் கிரீன்லாந்தின் கார்டர் (Gardar), டான்ப்ரீஸ் (Tanbreez), குவான்னர்சூட் (Kuannersuit) ஆகிய பகுதிகளில் உள்ள சுரங்களில் ஏற்கெனவே எடுக்கப்பட்டு வருகின்றன. தெற்கு கிரீன்லாந்தில் கொட்டிக்கிடக்கும் குவானெப்ஜெல்ட் (Kvanefjeld) படிமங்கள் உலகின் இரண்டாவது மிகப்பெரிய அருமண் ஆக்சைடுகளின் (Rare Earth Oxides) மூலமாகும்

 

கிராஃபைட் (Graphite)

மின்சார வாகன பேட்டரிகள் மற்றும் எஃகு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் கிராஃபைட், அமிட்சோக் (Amitsoq) சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் ஷிஸ்ட் (schist) தீவின் பல இடங்களில் உள்ளது. 

தாமிரம் (Copper)

டிஸ்கோ-னுசுவாக்கில் (Disko-Nuussuaq) உள்ள படிமங்களில் தாமிரம், நிக்கல், பிளாட்டினம், கோபால்ட் ஆகியவை கிடைக்கின்றன.

நிக்கல் (Nickel)

நிக்கல் படிமங்களின் தடயங்கள் கிரீன்லாந்தில் பரவலாகவும் குறிப்பாக தென்மேற்கு கடற்கரை பகுதிகளில் ஏராளமாகவும் உள்ளன. 

துத்தநாகம் (Zinc)

துத்தநாகம் வடக்குப் பகுதியில் 2,500 கிமீக்கும் அதிகமான நீளமுள்ள புவிப்பரப்பு முழுவதிலும் காணப்படுகிறது. உலகின் மிகப்பெரிய தோண்டி எடுக்கப்படாத துத்தநாக வளங்களில் ஒன்றாக சிட்ரோனென் ஃபார்ட் (Citronen Fjord) பகுதியில் உள்ள படிமங்கள் கருதப்படுகின்றது. 

தங்கம் (Gold)

கிரீன்லாந்தின் தெற்கே உள்ள செர்மிலிகாட்சுக் (Sermiligaarsuk) கடல் இடுக்கு (fjord) பகுதிகள், குஜாலெக் (Kujalleq) நகரின் நலுனாக் (Mt Nalunaq) மலை, நானோர்டலிக் பகுதிகள் ஆகியவை தங்கம் அதிகமாக கிடைக்கும் இடங்களாக அறியப்பட்டு சுரங்கங்கள் அமைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வைரங்கள் (Diamonds)

அளவில் சிறியது முதல் மிகப்பெரிய வைரகற்கள் வரை நுக்கிற்கு வடக்கே மானிட்சோக் (Maniitsoq) பிராந்தியத்திலும், மேற்கு கிரீன்லாந்திலும், தீவின் பிற பகுதிகளிலும் குறிப்பிட்ட அளவில் உள்ளது.

இரும்புத் தாது (Iron Ore)

தெற்கு மேற்கு கிரீன்லாந்தின் இசுவா (Isua), மத்திய மேற்கு கிரீன்லாந்தின் இட்டில்லியார்சுக் (Itilliarsuk), வடமேற்கு கிரீன்லாந்தின் லாஜ் கோச் கிஸ்ட் (Lauge Koch Kyst) கடற்கரையோரங்களில் இரும்புத் தாது இருப்புகள் குவிந்துள்ளன.

 

டைட்டானியம்-வெனடியம் (Titanium-Vanadium)

டைட்டானியம் மற்றும் வெனடியத்தின் அறியப்பட்ட படிமங்கள் தென்மேற்கு, கிழக்கு மற்றும் தெற்கு கிரீன்லாந்தில் உள்ளன. டைட்டானியம் வணிகம், மருத்துவம் மற்றும் பிற தொழில்துறைகளில் பயன்படுத்தப்படுகிறது. வெனடியம் பிரதானமாக சிறப்பு எஃகு உலோகங்களை உருவாக்கப் பயன்படுத்தப்படுகிறது. வெனடியம் சேர்மமான வெனடியம் பென்டாக்சைடு, சல்பூரிக் அமிலம் தயாரிப்பில் வினையூக்கியாகவும் பயன்படுத்தப்படுகிறது.

டங்ஸ்டன் (Tungsten)

பல தொழில்துறை பயன்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படும் டங்ஸ்டன் பெரும்பாலும் நாட்டின் மத்திய-கிழக்கு மற்றும் வடகிழக்கில் காணப்படுகிறது; மேலும் தெற்கு மற்றும் மேற்கிலும் இதன் இருப்புகள் மதிப்பிடப்பட்டுள்ளன.

யுரேனியம் (Uranium)

யுரேனியம் மற்றும் பிற அருமண் தனிமங்கள் குவான்னர்சூட் சுரங்கங்களில் கிடைக்கிறது.

இதுவரை கண்டறியப்பட்ட அருமண் தனிமங்கள் (rare earths) மற்றும் இதர முக்கிய தாதுக்களின் மிகப்பெரிய இருப்புகளில் உலகளவில் எட்டாவது இடத்திலுள்ளது கிரீன்லாந்து. கிரீன்லாந்தில் 4 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள எண்ணெய் மற்றும் அரிய தாது இருப்புக்கள் உள்ளதாக இதுவரை கண்டறியப்பட்டுள்ளன. சுமார் 50 பில்லியன் பேரல் எண்ணெய், சுமார் 4500 டிரில்லியன் லிட்டர் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எரிவாயு இருப்புக்கள் ஏராளமாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது இன்னும் கண்டறியப்படாத வளங்கள் ஏராளமாக கொட்டிக்கிடக்கலாம் என்றும் கருதப்படுகிறது. 

பருவநிலை மாற்றமும் ஆர்க்டிக் பிராந்தியம் முழுவதையும் மேலாதிக்கம் செய்ய போட்டி

கிரீன்லாந்தை கட்டுப்படுத்துபவர் எவரோ அவரே ஆர்க்டிக் பிராந்தியத்தையும் கட்டுப்படுத்துகிறார். 

உலகளவில் தோண்டப்படாத எண்ணெயில் சுமார் 13% சதவிகிதமும், எரிவாயுவில் 30% சதவிகிதமும் ஆர்க்டிக்கில் உள்ளது. அதி நவீன தொழில்நுட்பத்திற்கு அத்தியாவசியமான 17 தனிமங்கள் அங்கு உள்ளன. மேலே பார்த்தபடி, இந்த தனிமங்கள் மின்னணு சாதனங்கள், மின்சார வாகனங்கள், கார்கள், கைபேசிகள், விளக்குகள், ஏர்-கண்டிஷனர்கள் உள்ளிட்டவற்றில் பயன்படுத்தப்படுகின்றன.ஏன் போர் விமானங்கள் தயார்பிலும் கூட முக்கிய பங்கு வகிக்கின்றன.

கிரீன்லாந்து வரலாற்றிலேயே மிக வெப்பமான ஜனவரி மாதத்தை இப்போது பதிவு செய்துள்ளது. பொதுவாக ஜனவரி மாதத்தில் கிரீன்லாந்தின் சராசரி வெப்பநிலை -7.7 டிகிரி செல்சியஸாக இருக்கும். ஆனால், 2026 ஜனவரியில் இது +0.2 டிகிரி செல்சியஸாக உயர்ந்துள்ளது. அதாவது 8 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப அளவு உயர்ந்துள்ளது. ஆர்க்டிக்கைப் போல உலகில் வேறு எந்தப் பகுதியும் இவ்வளவு கடுமையான பருவநிலை பாதிப்புகளை எதிர்கொள்ளவில்லை. உலகின் சராசரி வெப்ப அளவு உயர்வு 2 டிகிரி செல்சியசாக உள்ளதோடு ஒப்பிடுகையில் கிரீன்லாந்தின் வெப்ப உயர்வு நான்கு மடங்கு வேகமானது என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். 

“ஆண்டுதோறும் கோடைக்காலப் பனி குறைந்து கொண்டே வரும், பசுமைகுடில் வாயு வெளியேற்றம் இப்போதே நின்றாலும் கூட, வெப்பமயமாதல் தொடரும். இந்த மாற்றங்கள் பிராந்தியத்தின் புவியியல் தன்மையையும் மனிதர்கள் அதனுடன் தொடர்பு கொள்ளும் முறையையும் ஆழமாகப் பாதிக்கும். பனி உருகுவதானது நிலத்தையும் அதன் உள்கட்டமைப்புகளையும் ஆபத்தில் ஆழ்த்தும், மாறாக கடல் வழிப் போக்குவரத்தை எளிதாக்கும்” என்று கொலராடோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மார்க் செர்ரேஸ் (Mark Serreze) கூறுகிறார்.

மில்லியன் கணக்கான சதுர மைல் பனிப்பாறைகள் உருகி வருகின்றன. குளிர்காலத்தில் கடற்கரையோரம் உருவாகும் கடல் பனிக்கட்டிகளின் அளவு குறைந்துவிட்டது. உருவாகும் பனிக்கட்டிகளும் மிகவும் மெல்லியதாக இருப்பதால், அவற்றின் மீது பயணம் செய்வது ஆபத்தானதாக மாறியுள்ளது. இதனால் பனிச்சறுக்கு வாகனங்கள் (Snowmobiles) மற்றும் ஸ்கீயிங் (Skiing) மூலம் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் தொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. கிரீன்லாந்தின் பொருளாதாரத் தூணே மீன்பிடித் தொழில்தான். அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 25 சதவீதம் இறால் மற்றும் மீன் ஏற்றுமதி மூலமே கிடைக்கிறது. 15 சதவீத மக்கள் இத்தொழிலையே நம்பியுள்ளனர். தற்போது கடல் நீர் வெப்பமடைந்து வருவதால், சுற்றுச்சூழல் மண்டலம் (Ecosystem) மாறி வருகிறது. இதனால் மீன் வளங்கள் வெகுவாக குறைந்து நாட்டின் பொருளாதாரத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.

ஆனால் அது ஏகாதிபத்திய ஓநாய்களின் வேட்டைக்கு சாதகமாக அமைந்துள்ளது. பனிக்கட்டிகள் உருகுவது அங்குள்ள கனிம வளங்களை சுரண்டுவதை எளிதாக்குகிறது. 

பனி உருகுவது ஆண்டின் அதிக நாட்களுக்கு வடக்கு கப்பல் போக்குவரத்து வழிகளைப் பயன்படுத்தக்கூடியதாக மாற்றுகிறது. காலநிலை நெருக்கடி கிரீன்லாந்தின் புவியியல் தன்மையை மாற்றி வருவதால், அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஐரோப்பிய யூனியன் ஆகியவை ஆர்க்டிக் பிராந்தியத்தை கூறுபோடும் போட்டியில் ஈடுபட்டு வருகின்றன.

பெருங்கடல் சாம்ராஜ்ஜியத்தை கட்டியமைக்கவும் உலகை மேலாதிக்கம் செய்யவும் போட்டி

தற்போதே ஆர்க்டிக் வழியாக செல்லும் கப்பல்களின் எண்ணிக்கை 37% அதிகரித்துள்ளது. சூயஸ் கால்வாய் வழியாகச் செல்லும் வழியுடன் ஒப்பிடுகையில், ஆர்க்டிக் வழியாக வடக்கு வழித்தடத்தில் பயணம் செய்வது வாரக்கணக்கான பயண நேரத்தையும் எரிபொருள் செலவையும் மிச்சப்படுத்தும். கிரீன்லாந்து இந்த பாதையின் மையப்பகுதியில் உள்ளது. 

சூயஸ் கால்வாய் வழியாக ஷாங்காய் மற்றும் நெதர்லாந்தின் ரோட்டர்டாம் இடையேயான 20,000 கிலோமீட்டர் தூரப் பயணத்திற்கு சுமார் நான்கு வாரங்கள் ஆகும். ஆனால் 14,000 கிலோமீட்டர் நீளமுள்ள வடகிழக்குப் பாதையில் செல்வதற்கு மூன்று வாரங்களே ஆகும். 

மறுபுறம், தற்போதைய பனாமா கால்வாய் பாதை 20,000 கிலோமீட்டர் நீளம் கொண்டது. வடமேற்குப் பாதையானது ஷாங்காய் மற்றும் நியூயார்க் இடையேயான தூரத்தை 4,000 கிலோமீட்டர் மற்றும் ஒரு வார கால பயணத்தைக் குறைக்கிறது. 

‘ட்ரான்ஸ்-ஆர்க்டிக்’ (Trans-Arctic) கப்பல் போக்குவரத்துப் பாதை என்ற மூன்றாவது ஆர்க்டிக் பாதை ஆர்க்டிக் பகுதிக்குக் குறுக்காக, மற்ற இரு துருவப் பாதைகளுக்கு இடையில் வட துருவத்திற்கு மிக நெருக்கமாகச் செல்லும்; இது ஐரோப்பா ஆசியா பயணத்தை மேலும் இரண்டு நாட்கள் குறைப்பதோடு, எரிபொருள் நுகர்வையும் சுமார் 40 சதவீதம் வரை குறைக்கக்கூடும் மேலும், இந்தப் பாதையின் பெரும்பகுதி சர்வதேச கடல் எல்லைக்குள் செல்வதால், இது ஆர்க்டிக் நாடுகள் அனைத்தின் அனுமதியினையும் பெற வேண்டிய அவசியத்தை இல்லாமல் ஆக்குகிறது.

இன்றும், 80% முக்கிய வர்த்தகம் கடல் வழியாகவே நடைபெறுகிறது. எனவே கிரீன்லாந்தை ஆக்கிரமிப்பதன் மூலம் அட்லாண்டிக் பெருங்கடல் – பசிபிக் பெருங்கடலையும் ஆர்க்டிக் பெருங்கடல் வழியாக குறைவான தூரத்தில் ஆர்க்டிக் நாடுகளின் அனுமதியின்றி கடக்க முடியும். அதன் மூலம் சரக்குப் போக்குவரத்திலும் வளங்களை கொள்ளையடிக்கவும், உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்யவதிலும் உலகளாவிய ஏகபோகத்தை கட்டிமயைக்க உதவும் மிகப்பெரிய வாய்ப்பாக அமையும்.

இவையே கிரீன்லாந்தை இந்த ஏகாதிபத்திய ஓநாய்கள் ஆக்கிரமிக்கவும் கொள்ளையிடவும் துடிப்பதற்கான பொருளியல் அடிப்படைகள்.

கிரீன்லாந்தும் அமெரிக்காவும் 

அமெரிக்கா கடந்த காலத்திலும்கூட அதாவது 1867 மற்றும் 1946 ஆகிய ஆண்டுகளிலும்கூட கிரீன்லாந்தை வாங்க முயற்சி செய்துள்ளது. 1946 இல் அமெரிக்கா கிரீன்லாந்தை வாங்க 100 மில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கத்தை வழங்கியது, அப்போது டென்மார்க் அதை நிராகரித்தது. ஓபாமா அரசு, ஆர்க்டிக் பிராந்தியத்தின் இராணுவரீதியான நடவடிக்கைகளுக்கு மட்டுமே கிரீன்லாந்தை மையமாக கருதியது. டிரம்ப்க்கு முந்தைய பைடன் அரசு, அதிமுக்கியத்துவமுடைய கனிம வளங்களுக்கு (Critical Minerals and Resources) கிரீன்லாந்து  அச்சாணியாக அமையும் எனக் கருதி புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக கிரீன்லாந்தின் வளங்களை கைப்பற்ற முயற்சித்தது.  தற்போது மீண்டும் கிரீன்லாந்தை விலைபேசி வருகிறது ட்ரம்ப் அரசு. சீனா அச்சுறுத்தலை காட்டி கிரீன்லாந்தை தனது பிடியில் கொண்டுவர தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 

ட்ரம்பின் சமீபத்திய நடவடிக்கைகள் கிரீன்லாந்தை எவ்வாறு அனலாக்கி வருகின்றன? 

ஏற்கெனவே அமெரிக்காவின் கிரிட்டிக்கல் மெட்டல்ஸ் கார்ப்பரேஷன் (Critical Metal Corp), நியோ பெர்ஃபார்மன்ஸ் மெட்டீரியல்ஸ் (Neo Performance Materials) போன்ற பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் கிரீன்லாந்தில் அருமண் தனிமங்களை எடுக்கும் சுரங்கங்களில் முதலீடு செய்துள்ளன. சீன மற்றும் ரஷ்ய நடமாட்டங்களை கண்காணிக்க அலாஸ்காவில் ஓர் ஆழ்கடல் துறைமுகத்தைக் கட்ட அமெரிக்க நாடாளுமன்றம் நிதி ஒதுக்கியுள்ளது, ரஷ்யா - சீன நாடுகளிடம் சுமார் 50 பனி உடைக்கும் கப்பல்கள் உள்ள நிலையில் அமெரிக்காவிடம் இரண்டு கப்பல்கள் மட்டுமே உள்ளன. ஆகையால், அமெரிக்கா தனது பனி உடைக்கும் கப்பல்களை நவீனப்படுத்தவும் முயற்சித்து வருகிறது. 

தற்போது கிரீன்லாந்து மீது ட்ரம்ப் அரசு கவனம் செலுத்திய இந்த சிறிது காலத்திற்குள்ளேயே, உலகின் பல செல்வந்தர்களும் பெரும் நிறுவனங்களும் கிரீன்லாந்தில் வெளிப்படையான முதலீடுகளைச் செய்து வருகின்றனர். இந்த முதலீடுகள் கோபோல்ட் (KoBold) என்ற தனியார் நிறுவனம் மூலம் செய்யப்பட்டன. இதில் முதலீடு செய்ததில், பில் கேட்ஸ், மைக்கேல் ப்ளூம்பெர்க், ஜெஃப் பெசோஸ் ஆகியோரால் இயக்கப்படும் (காலநிலை மற்றும் தொழில்நுட்ப நிதி திரட்டும் நிறுவனமான) பிரேக் த்ரூ எனர்ஜியும் Breakthrough Energy) அடங்கும். அமெரிக்கவின் சில நிறுவனங்கள் கிரீன்லாந்தை ஏலத்தில் எடுக்க அதற்கு 200 மில்லியன் முதல் 1.7 டிரில்லியன் டாலர் வரை விலையை நிர்ணயம் செய்து வருகின்றன என்பது கொடுமையான விசயம்.

சமீபத்தில், அமெரிக்கா இன்னொரு அறிவிப்பையும் முன்வைத்தது – கிரீன்லாந்து டென்மார்க்கிலிருந்து பிரிந்து அமெரிக்காவுடன் இணைய ஒவ்வொரு கிரீன்லாந்து குடிமகனுக்கும் 10,000 டாலர் முதல் 1 லட்சம் டாலர் வரை பணமாக வழங்குவதாக அறிவித்தது. இது போக டிரம்ப் அனுதினமும் பல வாய்ச்சவடால்களை அள்ளித் தெளித்து வருகிறார்.

ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் (Truth Social) பதிவில் இவ்வாறு எழுதினார்: 

“கிரீன்லாந்திலிருந்து ரஷ்ய அச்சுறுத்தலை அகற்ற வேண்டும் என்று நேட்டோ டென்மார்க்கிடம் 20 ஆண்டுகளாக கூறி வருகிறது. துரதிர்ஷ்டவசமாக, டென்மார்க்கால் எதுவும் செய்ய முடியவில்லை. இப்போது அதற்கான நேரம் வந்துவிட்டது, அது செய்யப்படும்!!!” 

நார்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோரேவுக்கு டிரம்ப் அனுப்பிய குறுஞ்செய்தியில்: 

“2025 ஆம் ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசு தனக்கு வழங்கப்படாததால், அமைதியில் கவனம் செலுத்த வேண்டிய கடமை தனக்கு இருப்பதாக இனி உணரவில்லை” 

ஜனவரியின் முதல் வாரத்தில், “கிரீன்லாந்து முழுவதும் ரஷ்ய மற்றும் சீனக் கப்பல்கள் நிறைந்துள்ளன, தேசிய பாதுகாப்பின் அடிப்படையில் நமக்கு கிரீன்லாந்து தேவை, டென்மார்க்கால் அதை காக்க முடியாது” என்று டிரம்ப் மீண்டும் கூறினார்.

ஜனவரி 21 அன்று டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) உச்சி மாநாட்டில் பேசிய ட்ரம்ப்: 

“அமெரிக்காவால் மட்டுமே கிரீன்லாந்தைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும், சீரமைக்கவும் முடியும். இரண்டாம் உலகப் போரின்போது டென்மார்க் ஜெர்மனியால் ஆக்கிரமிக்கப்பட்ட பிறகு, அந்தப் பிராந்தியத்தைப் பாதுகாக்க அமெரிக்கா மேற்கொண்ட முயற்சிகளால்தான் டென்மார்க் மீண்டது. நாங்கள் இல்லாமல் இருந்திருந்தால், இப்போது நீங்கள் அனைவரும் ஜெர்மன் மொழி மற்றும் ஒருவேளை கொஞ்சம் ஜப்பானிய மொழியையும் பேசிக் கொண்டிருப்பீர்கள். ஆகையால் அமெரிக்கா கிரீன்லாந்திற்கு உரிமை கோர முடியும். போருக்குப் பிறகு, நாங்கள் கிரீன்லாந்தை மீண்டும் டென்மார்க்கிற்கு வழங்கினோம். அதைச் செய்த்து எவ்வளவு முட்டாள்தனம்? ஆனால் நாங்கள் அதைச் செய்தோம். அதைத் திருப்பிக் கொடுத்தோம். ஆனால் இப்போது அவர்கள் எவ்வளவு நன்றியற்றவர்களாக இருக்கிறார்கள்? கிரீன்லாந்து வட அமெரிக்காவின் ஒரு பகுதி என்றும் எனவே அது எங்கள் பிரதேசம். எனவே இது அமெரிக்காவின் மிக முக்கியமான தேசிய பாதுகாப்பு நலன் ஆகும். சொல்லப்போனால், வெளிநாட்டு அச்சுறுத்தல்கள் நமது அரைக்கோளத்திற்குள் நுழைவதைத் தடுப்பது நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நமது கொள்கையாக இருந்து வருகிறது. நேட்டோ (NATO) அமைப்பால் அமெரிக்கா மிகவும் அநீதியாக நடத்தப்படுகிறது. அமெரிக்கா அதிகமாக வழங்கியும் மிகக் குறைவாகவே பெறுகிறது. அமெரிக்கா கேட்பதெல்லாம் கிரீன்லாந்து என்று அழைக்கப்படும் ஒரு இடத்தைத்தான்” என்று பேசினார்.

அதற்கு முன்பாக, ஜனவரி 17 அன்று, டென்மார்க், நார்வே, ஸ்வீடன், பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, நெதர்லாந்து மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் தனது திட்டங்களுக்கு ஆதரவு அளிக்காவிட்டால், அந்த நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து பொருட்களின் மீதும் கூடுதலாக 10% வர்த்தக வரி விதிக்கப்போவதாக ட்ரம்ப் அச்சுறுத்தினார். இவை பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வரும் என்றும், ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஜூன் 1 முதல் இது 25% ஆக உயரும் என்றும் எச்சரித்தார். 

இது டென்மார்க் உள்ளிட்ட ஐரோப்பிய யூனியன் நாடுகளின் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அமைதியான பிராந்தியமாக இருந்த ஆர்க்டிக் இப்போது தீவிரமடைந்து வரும் ஆயுதப் போட்டியை எதிர்கொள்கிறது.

கிரீன்லாந்து - டென்மார்க்: நேட்டோ கூட்டணியில் அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் கூர்மையடையும் முரண்பாடுகள் 

ட்ரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய யூனியனுக்குமான முரண்பாடுகள் தீவிரமடைந்து ஐரோப்பிய யூனியன் தனி இராணுவக் கூட்டமைப்பை உருவாக்கும் நிலை எடுத்த்து. ஏற்கெனவே உக்ரைனை மையப்படுத்தி ஐரோப்பிய யூனியனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே முரண்பாடுகள் கூர்மையடைந்தன. அமெரிக்கா துரோகமிழைத்துவிட்டதாக கூறி உலக மறுபங்கீட்டுப் போட்டிக்கு தனித்து தயாராகி வருகிறது ஐரோப்பிய யூனியன்.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஐரோப்பிய யூனியன் நடத்திய அவசர மாநாட்டில் சில முக்கிய முடிவுகள் எட்டப்பட்டன.

நேட்டோ நாடுகளில் ஒன்றின் மீதான தாக்குதலை அமெரிக்கா தனது மீதான தாக்குதலாக கருதும் என்ற வாக்குறுதியை மீறியுள்ளது. அமெரிக்கா ஐரோப்பிய யூனியனுக்கு துரோகமிழைத்துள்ளது.

இனி அமெரிக்காவை மட்டும் நம்பி பலனில்லை; ஐரோப்பிய யூனியனுக்கான தனி இராணுவ – தொழில்நுட்ப கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்ற புதிய வரலாற்றுக்கடமை நம்மீது சுமத்தப்பட்டுள்ளது.

2030க்குள் இராணுவ – தொழில்நுட்ப கட்டமைப்பை பலப்படுத்தும் இத்திட்டத்திற்கு “ஐரோப்பிய யூனியன் ஆர்மி ரெடினெஸ் 2030 (EU Army Readiness 2030)” என பெயரிட்டுள்ளது.

இத்திட்டத்தில், வான் மற்றும் ஏவுகனை தடுப்பு அமைப்புகள், பீரங்கிகள், ஆயுதங்கள், ஏவுகனைகள், டிரோன்கள் மற்றும் டிரோன் தடுப்பு அமைப்புகள், இராணுவ ஆட்சேர்ப்பு, ஏஐ, குவாண்டம், சைபர் மற்றும் எல்க்ட்ரானிக் போர் தயார்நிலை, போர் விமானத் தளம், எரிபொருள் நிரப்பும் தளம், கடல்சார் மற்றும் விண்வெளி தளங்களில் யுத்தத்தந்திர உதவி மற்றும் உள்கட்டமைப்பு பாதுகாப்பை மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும். 

பிரிட்டனை ஐரோப்பிய யூனியனில் மீண்டும் சேர்த்துக் கொள்ளுதல்; துருக்கி போன்ற ஐரோப்பிய யூனியனுக்கு வெளியில் உள்ள நாடுகளையும் ஐரோப்பிய யூனியனில் சேர்த்துக் கொள்ளுதல்

இத்திட்டம் வட அட்லாண்டிக் பகுதி தாண்டி உலகளாவிய பாதுகாப்பையும் நோக்கமாக கொண்டு நடைமுறைப்படுத்தப்படும். மிகவும் பலமான, புதிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய, போட்டிப் போடும் திறன் மிகு கட்டமைப்பாக இது உருவாக்கப்படும். 

இத்திட்டத்தின் அடிப்படையில் ஐரோப்பிய யூனியனை இராணுவமயமாக்குதல் (Re-Arm Europe) எனும் திட்டம் நடைமுறைக்கு வந்து விட்டது. இதற்கு 800 பில்லியன் யூரோக்களை (866 பில்லியன் டாலர்) ஒதுக்கியுள்ளது. முதல்கட்டமாக இராணுவ பொருளாதார கட்டமைப்புப் பணிகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. 

மேலும், 

இந்நிகழ்வுக்கு முன்பாகவே 2019ம் ஆண்டிலிருந்து ஐரோப்பிய யூனியனுக்கான நவீன பசுமை வழி தொழிற்துறையை பலப்படுத்தும் நோக்கில் கிரீன் டீல் இண்டஸ்டிரியல் ப்ளான் (Green Deal Industrial Plan) –ஐ வெளியிட்டது. அதன் ஒரு அங்கமாக 2023ல் அதிமுக்கியத்துவம் வாய்ந்த கனிமவளங்களுக்கான சட்ட நடவடிக்கையை (Critical raw materials act 2023) கொண்டுவந்தது. அதன் படி  2030ம் ஆண்டுக்குள் அருமண் தனிமங்களின் பயன்பாட்டில் 40% சதவிகிதம் வரை ஐரோப்பிய யூனியனின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். எந்தவொரு தனிநாட்டையும் 65% சதவிகிதங்களுக்கு மேல் அருமண் தனிமங்களுக்காக சார்ந்திருக்க கூடாது என இலக்கு வைத்துள்ளது. 

டிரம்பின் சமீபத்திய அச்சுறுத்தலுக்கு பிறகு, 

ஐரோப்பிய யூனியன் கிரீன்லாந்திற்கான புதியதொரு முதலீட்டுத் திட்டத்தை வெளியிடுவோம் என்று கூறியுள்ளது. இந்த திட்டமானது கடலுக்கடியிலான யுத்த நடவடிக்கைகளுக்கான கட்டமைப்பை மேம்படுத்துதல், எரிசக்தி பாதுகாப்பு, தகவல் தொடர்பு மற்றும் தொலைத்தொடர்பு ஆகியவற்றில் புதிய முதலீடுகளையும், அதிமுக்கியத்துவமுடைய மூலப்பொருட்கள் தொடர்பான கூட்டு திட்டங்கள் போன்றவற்றை உள்ளடக்கியிருக்கும். 

2028 முதல் கிரீன்லாந்திற்கான நிதியளிப்பை இருமடங்காக உயர்த்த ஐரோப்பிய ஆணையம் முன்மொழிந்துள்ளது. 2028-ல் தொடங்கும் அடுத்த நீண்டகால பட்ஜெட்டின் கீழ் தனது நிதியளிப்பை சுமார் 530 மில்லியன் யூரோவாக (சுமார் 625 மில்லியன் டாலராக) உயர்த்த திட்டமிட்டுள்ளது. 

இவ்வாறு ஐரோப்பிய முகாம் அமெரிக்க சார்பின்றி தனித்த போட்டி முகாமாக 2030க்குள் உருவாகும் இலக்கை முன்வைத்து செயல்பட்டு வருகிறது.

நேட்டோ கூட்டணியின் விதிகள் 5ன் (Article 5) படி, நேட்டோ கூட்டணியிலுள்ள ஒரு நாட்டின் மீது நடத்தப்படும் தாக்குதல் அதில் அங்கம் வகிக்கும் அனைத்து 32 நாடுகளின் மீதான தாக்குதலாகக் கருதப்படுகிறது. கிரீன்லாந்திற்கு எதிரான அமெரிக்காவின் எந்தவொரு இராணுவ நடவடிக்கையும் டென்மார்க் மீதான தாக்குதலாக இருக்கும். அதாவது ஒரு நேட்டோ உறுப்பினர் மற்றொரு நேட்டோ உறுப்பினரைத் தாக்குவதாகும். கிரீன்லாந்து அல்லது டென்மார்க் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் நேட்டோ கூட்டமைப்புக்குள் முரண்பாடுகள் தீவிரமடையும் – அமெரிக்காவின் இதுபோன்ற நடவடிக்கைகள் டென்மார்க்குக்கு மட்டுமல்லாமல் நேட்டோ கூட்டமைப்பிலுள்ள ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக மாறிவருகிறது. 

ஆப்கானிஸ்தானையும், ஈராக்கையும் அமெரிக்கா கபளீகரம் செய்ய பிற நேட்டோ நாடுகளை காட்டிலும் டென்மார்க்கே அமெரிக்காவுக்கு உறுதுணையாக இருந்தது. அதே போல உக்ரைன் ஆக்கிரமிப்பு போரிலும் நேட்டோ தரப்பில் டென்மார்க் அதிக பங்காற்றியது. ஆனால் சமீபத்தில், டென்மார்க் அமெரிக்காவுடனான தனது உறவுகளை மறுபரிசீலனை செய்தது. டென்மார்க் உளவுப்பிரிவின் (Danish Defence Intelligence Service) ஆய்வை கணக்கில் கொண்டு டென்மார்க் அரசின் 2025 ஆண்டு அறிக்கையில், அமெரிக்காவை டென்மார்க் மற்றும் ஐரோப்பாவின் தேசிய பாதுகாப்பிற்கான குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலாக வகைப்படுத்தியுள்ளது.

மேலும், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், பிரிட்டன் மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள் இணைந்து ஒரு அறிக்கையை வெளியிட்டன. அதில், டென்மார்க்கும் கிரீன்லாந்தும் மட்டுமே கிரீன்லாந்து தொடர்பான முடிவுகளை எடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளன. கிரீன்லாந்தில் தனது இருப்பு மற்றும் இராணுவத் தளத்தை அமெரிக்கா அதிகரிக்க வேண்டும் என்றால், அமெரிக்கா டென்மார்க்கிடம் கேட்டாலே போதுமானது. அதற்கு இராணுவத் தளம் உள்ளது; டென்மார்க்குடனான பாதுகாப்பு ஒப்பந்தம் உள்ளது. எனவே, பாதுகாப்பு நோக்கங்களுக்காக அமெரிக்கா கிரீன்லாந்தைக் கைப்பற்ற முயல்வது கிரீன்லாந்து மக்களுக்கு அர்த்தமற்றதாகத் தோன்றுகிறது. கனிம வள சுரண்டலுக்காக கிரீன்லாந்தை அமெரிக்காவின் பெரும் கார்ப்பரேட்களிடம் ஒப்படைப்பதே அதன் குறிக்கோளாக உள்ளது என்று ஐரோப்பிய யூனியன் தரப்பு வாதிடுகிறது.

இதற்கிடையில் அமெரிக்காவின் வரிவிதிப்பு மற்றும் இராணுவ மிரட்டல்களும் ஐரோப்பிய யூனியனை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

அமெரிக்காவின் இத்தகைய அச்சுறுத்தல்களால் ஐரோப்பிய யூனியனின் அவசரக் கூட்டத்தை கூட்டின. அதில் அமெரிக்காவுக்கு எதிராக - அமெரிக்க நிறுவன உரிமங்களை ரத்து செய்வது, அமெரிக்க சேவைகளுக்கு வரி அதிகரிப்பது ஆகியவை அடங்கிய - 'டிரேட் பசூகா ' வை (trade bazooka)* நடைமுறைப்படுத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. அமெரிக்க-ஐரோப்பிய வர்த்தக ஒப்பந்த அங்கீகரிப்பும் முடக்கப்பட்டது. (ஐரோப்பிய ஒன்றியத்தின் “டிரேட் பசூகா” (Trade Bazooka) என்பது, ஐரோப்பிய உறுப்பு நாடுகள் அல்லது நிறுவனங்கள் மீது தேவையற்ற நெருக்கடிகளை விதிக்கும் நாடுகளுக்கு எதிராக, அந்நாடுகளின் பொருட்களை இறக்குமதி செய்யத் தடைகள், அதிக வரிகள் விதித்தல், சந்தை அணுகலை முழுமையாக தடுப்பது போன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுக்க செய்யும் வர்த்தக ஆயுதமாகும்).

டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து அதிகாரிகள் நேட்டோ நாடுகளின் ஒத்துழைப்புடன் கிரீன்லாந்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இராணுவ குவிப்பை அதிகரிப்பதாகத் தெரிவித்தனர். அப்பகுதியில் 2026 ஆம் ஆண்டு முழுவதும் போர் பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபடவும் திட்டமிடப்பட்டுள்ளனர்.

இதனால், அமெரிக்காவும் நேட்டோவும் கிரீன்லாந்து தொடர்பானதொரு ஒப்பந்தத்திற்கான திட்டத்தை முன்வைத்தன. அதன் பிறகு அமெரிக்கா தனது அச்சுறுத்தல்களிலிருந்து பின்வாங்கிக் கொண்டது.

டாவோஸில் நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டேவுடன் நடந்த சந்திப்பை தொடர்ந்து வர்த்தக வரி அச்சுறுத்தலை டிரம்ப் திரும்பப் பெற்றார்: 

"நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டேவுடன் நான் நடத்திய மிக பயனுள்ள சந்திப்பின் அடிப்படையில், கிரீன்லாந்து மற்றும் ஒட்டுமொத்த ஆர்க்டிக் பிராந்தியம் தொடர்பான எதிர்கால ஒப்பந்தத் திட்டத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம்" என்று டிரம்ப் ட்ரூத் சோஷியல் (Truth Social) தளத்தில் எழுதினார். 

“இந்த திட்டம் குறித்த விவாதங்கள் கூட்டு முயற்சிகள் மூலம் ஆர்க்டிக் பாதுகாப்பை உறுதி செய்வதில் கவனம் செலுத்தும், ரஷ்யாவும் சீனாவும் கிரீன்லாந்தில் பொருளாதார ரீதியாகவோ அல்லது இராணுவ ரீதியாகவோ ஒருபோதும் காலூன்றக் கூடாது என்பதை உறுதி செய்யும் நோக்கில் டென்மார்க், கிரீன்லாந்து மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் முன்னெடுத்துச் செல்லப்படும்” என்றும் நேட்டோ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

கிரீன்லாந்தை மறுபங்கீடு செய்துகொள்வதில் அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் இடையில் இடைக்கால சமாதான ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் அது நிரந்தரமானதாக இருக்கப்போவதில்லை. அது 2030 வரையிலான அதாவது ஐரோப்பிய யூனியன் தனிமுகாமாக மறுபங்கீட்டு போட்டியில் முழுவீச்சாக இறங்க திட்டமிட்டுள்ள காலம் வரைக்கும் மட்டுமானதாக இருக்கலாம். நேட்டோவின் முக்கிய உறுப்பினரான கனடாவும் 2024 டிசம்பரில், ஆர்க்டிக் பகுதியில் தனது ராணுவம் மற்றும் இராஜதந்திர இருப்பை அதிகரிப்பதற்கான திட்டங்களை விளக்கும் கொள்கை ஆவணத்தை வெளியிட்டது. அதேசமயம் தற்போது ஐரோப்பிய யூனியனில் இணைய விருப்பம் தெரிவித்திருக்கும் நேட்டோவின் மற்ற நாடான துருக்கியோ கிரீன்லாந்து விசயத்தில் அமெரிக்க ஆதரவு நிலை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே நேட்டோ அணிகளுக்குள்ளே முரண்பாடுகள் கூர்மையடைந்து வருகின்றன. அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் இடையில் கூர்மையடைந்திருக்கும் இந்த முரண்பாடுகள் கிரீன்லாந்தில் மட்டுமல்லாத உலகம் முழுவதிலுமான மறுபங்கீட்டுப் போட்டியில் தீவிரமடைய உள்ளன.

மறுமுனையில் கிரீன்லாந்து - ஆர்க்டிக் பிரதேசத்தை நோக்கி மெல்ல காய் நகர்த்தி கொண்டிருக்கும் சீன-ரஷ்ய முகாம்

ரஷ்யாவின் நிலப்பரப்பில் கால் பகுதிக்கும் மேலான பகுதி ஆர்க்டிக் வட்டத்திற்குள் இருப்பதால், ஆர்க்டிக் பிராந்தியம் முழுவதையும் ரஷ்யா தனது கட்டுப்பாட்டுக்கு கீழானதாகவே கருதுகிறது. சமீபத்திய ஆண்டுகளில் சீனாவும் இந்த போட்டியில் இறங்கியுள்ளது. 2018-ஆம் ஆண்டில் தன்னை “ஆர்க்டிக்கிற்கு அருகிலுள்ள நாடு” என்று அறிவித்துக் கொண்டது. எனவே “வடக்கு கடல் வழித்தடத்தை” (Northern Sea Route - NSR) 2010-களிலிருந்து ரஷ்யாவும் சீனாவும் மேம்படுத்தி வருகின்றன.

ரஷ்யா

2022-ல் உக்ரைன் போரைத் தொடர்ந்து, ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு மீது விதிக்கப்பட்ட அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளின் தடைகளை ஈடுகட்டவும், ஆசியாவுடனான தனது வர்த்தகத்தை மேம்படுத்தவும் ஆர்க்டிக் பகுதி அத்தியாவசியமானது என்று ரஷ்யா கருதுகிறது. பருவநிலை மாற்றத்தால் பனிக்கட்டிகள் உருகுவதால், கப்பல்கள் எளிதாகப் பயணம் செய்யக்கூடிய NSR வழித்தடம் மூலமான கப்பல் போக்குவரத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளிலும் அது ஈடுபட்டு வருகிறது. தற்போது ரஷ்யா இதைப் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை (LNG) கொண்டு செல்லப் பயன்படுத்துகிறது. இந்த வழித்தடம் கிரீன்லாந்திலிருந்து தொலைவில் உள்ள ரஷ்யாவின் ஆர்க்டிக் கடற்கரை ஓரமாகச் செல்கிறது. அட்லாண்டிக், பசிபிக் மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல்களை இணைப்பதன் வாயிலாக தென்கிழக்கு ஆசியாவிற்கு எண்ணெய் ஏற்றுமதியை அதிகரிக்க முயல்கிறது. அதற்காக, தடிமனான பனிக்கட்டிகளை உடைத்து அகற்றும் திறன் கொண்ட, அணுசக்தியால் இயங்கும் 'ஐஸ்பிரேக்கர்' (icebreakers) கப்பல்களை ரஷ்யா உருவாக்கியுள்ளது (உலகில் வேறு எந்த நாட்டினிடமும் இவ்வகை கப்பல்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது). தற்போது சூயஸ் கால்வாய் வழியாகச் செல்லும் சரக்குகளை ஒப்பிடுகையில் இந்த வழித்தடத்தின் வழியாக செல்லும் சரக்குகளின் அளவு மிகக் குறைவே. இருப்பினும், ஆர்க்டிக்கில் இயங்கும் கப்பல்களின் எண்ணிக்கை 2013 மற்றும் 2023ம் ஆண்டுகளுக்கு இடையில் 37% சதவீதம் அதிகரித்துள்ளது என மேலேயே பார்த்தோம். எதிர்காலத்தில் இது இன்னும் அதிகரிக்கக் கூடும். எனவேதான் இந்த வழித்தடத்தில் ஆதிக்கம் செலுத்த இப்போதே தீவிரம் காட்டி வருகின்றது. 

இந்த வழித்தடத்தின் கட்டுப்பாடு ரஷ்யாவின் ரோசாட்டம் (Rosatom) பொதுத்துறை அணுசக்தி நிறுவனத்திடம் உள்ளது. இது மற்றநாடுகளின் இராணுவப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் திறனை ரஷ்யாவிற்கு வழங்குகிறது. கிழக்கு ஆர்க்டிக்கில், பெரிங் நீரிணைப்பு வழியாகச் செல்லும் பாதைகள், ரேடார் கவரேஜ், விமானத் தளங்கள், கண்காணிப்பு, மீட்பு ஆகிய திறன்களை விரிவுபடுத்த ரஷ்யாவைத் தூண்டியுள்ளது. ஆகையால ரஷ்யா இந்த வழித்தடத்தை மேம்படுத்த 2035-ஆம் ஆண்டு வரை சுமார் 20 பில்லியன் யூரோக்களை (23.4 பில்லியன் டாலர்) முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

மேலும், ரஷ்யா ஆர்க்டிக் எல்லைகளை வேகமாக இராணுவமயமாக்கி வருவதோடு அதன் வடக்கு கடற்கரையோரம் பல இராணுவத் தளங்களை உருவாக்கி வருகிறது.

மத்திய ஆர்க்டிக்கில், ரஷ்யா தனது இராணுவத் தடத்தைப் பலப்படுத்தியுள்ளது. நடமாடும் பாதுகாப்பு அமைப்புகளான பாஸ்டன்-பி (Bastion-P), பான்ட்சீர்-எஸ்1 (Pantsir-S1) ஆகியவை நோவாயா செம்லியா மற்றும் கோடெல்னி தீவுகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. மேற்கு ஆர்க்டிக்கில், தாக்குதல் அபாயங்களை கண்காணிக்கும் வகையில் இரண்டாவது வடக்கு கடற்படையை கொண்ட இராணுவத் தளத்தை செவெரோமோர்ஸ்கில் ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் அப்பிராந்தியம் முழுவதுமே விமானத் தளங்கள், ரேடார் நிலையங்கள் மற்றும் கண்காணிப்பு மையங்களை ரஷ்யா உருவாக்கியுள்ளது.

2021- ல், ரஷ்யாவின் வடக்கு முனையில் உள்ள 'ஃபிரான்ஸ் ஜோசப் லேண்ட் (Franz Josef Land)' தீவுகளில், அணுகுண்டு தாங்கிய விமானங்கள் உட்பட அனைத்து வகையான விமானங்களும் வந்துசெல்லக்கூடிய 3.5 கிலோமீட்டர் நீளமுள்ள விமான ஓடுதளத்தை அமைத்துள்ளது ரஷ்யா. 2019-ல், ஆர்க்டிக் பகுதியில் அதிநவீன எஸ்-400 (S-400) போர் விமான்ஙகளை குவித்துள்ளது; 'நோவயா செம்லியா' (Novaya Zemlya) தீவுகளில் புதிய ரேடார் தளத்தை நிறுவியுள்ளது. 

2025 செப்டம்பரில், ஆர்க்டிக் பகுதிகளில் வீரர்களைத் தரையிறக்குதல், கப்பல்கள் மற்றும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களிலிருந்து துப்பாக்கிச்சூடு நடத்துதல் உள்ளிட்ட இராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டது. 2024ல், ரஷ்ய-சீன போர் விமானங்கள் அமெரிக்காவின் அலாஸ்காவிற்கு அருகில், ஆசிய-அமெரிக்க கண்டங்கள் சந்திக்கும் பகுதியில் கூட்டு ரோந்துப் பணியில் ஈடுபட்டன. 

சீனா

2014-ல், ஆழ்கடல், விண்வெளி, இணையவெளி போன்றவையோடு துருவப் பகுதியையும் “மூல உத்திக்கான புதிய களம் (Strategic New Domain)” என்று வகைப்படுத்தியது சீனா. 2018-ல், 'ஆர்க்டிக் வெள்ளை அறிக்கை' (Arctic White Paper) என்ற யுத்தத்தந்திரத்தை வெளியிட்டது. துருவப் பகுதிகளில் பயன்படுத்தப்படாத இயற்கை வளங்கள் உள்ளன என்பதை சீனா நீண்ட காலமாகவே அறிந்து வைத்துள்ளது. பருவநிலை மாற்றத்தால் தனக்கு கிடைக்கும் அனுகூலங்கள் குறித்து சீனாவும் நன்கு அறியும். ரஷ்ய பனி உடைக்கும் கப்பல்களின் துணையுடன், சீனக் கப்பல்கள் இப்போது ஒவ்வொரு கோடைகாலத்திலும் “வடக்கு கடல் வழித்தடத்தை” பயன்படுத்துகின்றன. தற்போது சீனாவும் அப்பிராந்தியத்தில் பல ஐஸ்பிரேக்கர் கப்பல்களையும் சிறியரக நீர்மூழ்கிக் கப்பல்களையும் இயக்குகிறது. ஆர்க்டிக் கண்காணிப்பு செயற்கைக்கோள்களையும் செயல்படுத்துகிறது. 2022க்கு முன்பு வரை ஆர்க்டிக் பகுதியில் சீனாவின் இராணுவ இருப்பு குறைவாக இருந்தாலும் ரஷ்யாவின் ஒத்துழைப்புடன் தனது இருப்பை சீனா வளர்ந்துள்ளது. 

ஆர்க்டிக் பிராந்தியத்தில் “மனிதகுலத்திற்கான ஒரு பொதுவான எதிர்காலத்தை உருவாக்குவது” எனும் பெயரில்தான் 'ஆர்க்டிக் வெள்ளை அறிக்கையை வெளியிட்டது. கிரீன்லாந்து அரசாங்கத்திடம் உள்ள வரைபடத்தை விட மிகத் துல்லியமான கிரீன்லாந்து வரைபடத்தைச் சீனா கொண்டுள்ளது. ஆக்கிரமிப்பாளனை போல அல்லாது அமைதியான ஒத்துழைப்பை நாடும் நேர்மறையான பங்காளியாக தன்னை காட்டிக் கொண்டது; கிரீன்லாந்து மக்கள் பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ப மாற உதவும் உயர் தொழில்நுட்பப் பங்காளியாகவும் சீனா தன்னை முன்னிறுத்தியது. அப்பகுதியின் துயரத்தை துடைக்க வந்த மீட்பாளனாக வேசமிட்டது சீனா. ஆனால் ஆர்டிக் பகுதிகளின் இயற்கை வளங்களை சுரண்டுவதில் கவனத்தைக் குவித்தது. “துருவ அல்லது பனி பட்டுச் சாலை (Polar Silk Road or Ice Silk Road)” எனப்படும் திட்டத்தை முன் வைத்து செயல்படுத்தி வருகிறது. இது சீனாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே ஆர்க்டிக் பிரதேசம் வழியாக ஒரு புதிய கடல்வழிப் பாதையை உருவாக்கும் சீனாவின் திட்டமாகும். இது சீனாவின் கடல்சார் பட்டுப் பாதையின் (Maritime Silk Road) ஒரு பகுதியாகும். மற்றொன்று சீனா-ஓசியானியா-தென் பசிபிக் பாதையாகும். இவை இரண்டும் சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

ஆர்க்டிக் பகுதியில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கான உட்கட்டமைப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

மத்திய கிழக்கிலிருந்து வரும் எரிசக்தி விநியோகத்தை குறைத்து, தனது எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது

சீனாவும் டென்மார்க்கும் இணைந்து சினோ –டானிஷ் பசுமை இணைப்புத் திட்டத்தை (Sino-Danish Green joint work programme) வெளியிட்டு கனிம வளங்கள், மீன் வளங்கள், தூய வடிவிலான எரிசக்தி வளங்கள், சுற்றுலாத்துறை உள்ளிட்டவற்றில் பல்வேறு இருதரப்பு ஒப்பந்தங்களையும் மேற்கொண்டு வருகின்றன.

ஆர்க்டிக் பகுதிகளில் சீன முதலீடுகள் 10 பில்லியன் டாலர்களாக உள்ளன; இதில் யமால் எல்என்ஜி (Yamal LNG) குழாய் மற்றும் ஆர்க்டிக் எல்என்ஜி 2 திட்டம் போன்ற முக்கியமான எரிசக்தி திட்டங்களும் அடங்கும். சீன பொதுத்துறை நிறுவனமான சீன நேஷனல் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (CNPC) இந்தத் திட்டங்களில் 20 சதவீத பங்குகளைக் கொண்டுள்ளது. CNPC மற்றும் சீனா நேஷனல் ஆயில் ஆகியவை இந்தத் திட்டங்களின் ரஷ்ய நிறுவனமான நோவாடெக் (NOVATEK)-உடன் 20 ஆண்டு கால ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன - இந்த ஒப்பந்தங்களின்படி உற்பத்தியில் 50 சதவீதம் சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும். இதன் மூலம் ஆர்க்டிக் பகுதியின் எல்என்ஜி எரிவாயு மற்றும் எண்ணெய் வளங்களை கைப்பற்றுகின்றன. 

சீனக் கப்பல் நிறுவனமான ஹைனான் யாங்பு நியூநியூ ஷிப்பிங் மற்றும் ரஷ்ய அணுசக்தி நிறுவனமான ரோசாட்டம் (Rosatom) ஆகியவை இணைந்து ஆர்க்டிக் பனி உடைக்கும் கடற்படையைக் கூட்டாக இயக்குவதற்கும், NSR வழித்தடத்திக்கான பனி உடைக்கும் கப்பல்களை நவீன முறையில் மேம்படுத்தி உருவாக்குவதற்கும் ஒப்பந்தம் செய்தன

கிரீன்லாந்து, பெலாரஸ் உட்பட பல ஆர்க்டிக் நாடுகளுடன் சீனா இருதரப்பு கனிமவள மற்றும் எரிசக்தி ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. கிரீன்லாந்தில் இராணுவத் தளங்களையும் கூட நிறுவியுள்ளது சீனா. சீனா கிரீன்லாந்து மீன்வளப் பொருட்களை வாங்குவதை அதிகரித்தது, சொகுசுச் சுற்றுலாப் பயணிகளை கிரீன்லாந்திற்கு அழைத்து வந்தது. 

ஆர்க்டிக் பகுதிக்கு 10 அறிவியல் ஆய்வுப் பயணங்களை அனுப்பியுள்ளதுடன், ரஷ்யாவிற்கு வடக்கே உள்ள பனி படர்ந்த நீர்நிலைகளை ஆய்வு செய்ய ஆராய்ச்சி கப்பல்களையும் கட்டியுள்ளது.

2030-ஆம் ஆண்டிற்குள் “துருவப்பகுதியின் மேலாதிக்க சக்தியாக (polar power)” உருவெடுக்க இலக்கு வைத்துள்ள சீனா, ஐஸ்லாந்து மற்றும் நார்வேயில் அறிவியல் ஆராய்ச்சி நிலையங்களையும் நிறுவியுள்ளது.

இவ்வாறு கிரீன்லாந்து உள்ளிட்ட ஆர்டிக் பகுதிகளில் சீனா ஏற்கெனவே தனது மேலாதிக்கத்தை சத்தமே இல்லாமல் நிறுவி உள்ளது. 

உலகளாவிய அரிய கனிம வளங்களில் 70% சதவிகிதத்தை சீனா கொண்டுள்ளது. அவ்வகையான கனிமங்களை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தில் 90% சதவிகிதம் ஏகபோகத்தை சீனா பெற்றுள்ளது. மேலும் சுத்திகரிக்கப்பட்ட இயற்கை கிராஃபைட், டிஸ்ப்ரோசியம் விநியோகத்தில் 100% சதவிகிதமும், கோபால்ட் விநியோகத்தில் 70% சதவிகிதமும், மெருகேற்றப்பட்ட லித்தியம் மற்றும் மாங்கனீஸ் விநியோகத்தில் 60% சதவிகிதம் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆப்பிரிக்கா, ஆசியா, தென்அமெரிக்க நாடுகளில் சுரங்கங்களின் உரிமையை வைத்திருக்கும் சீனா, அரிய தனிமங்கள் (Rare Earth Elements) மற்றும் முக்கிய உலோகங்களை உலகெங்கும் உற்பத்தி செய்து வழங்குவதில் தனி ராஜாங்கமே நடத்தி வருகிறது. இதில் அமெரிக்காவே சீனாவையே சார்ந்திருக்க வேண்டிய நிலை நீடிக்கிறது. ஐரோப்பிய யூனியன் 90% சதவிகிதத்திற்கும் மேலாக அருமண் தனிமங்களுக்காகவும், குறிப்பாக 98% சதவிகிதம் அளவுக்கு அருமண் காந்தங்களுக்காகவும் சீனாவையே சார்ந்துள்ளது. அமெரிக்கா 80% சதவிகிதம் அளவுக்கு அருமண்தனிமங்களுக்கு சீனாவையே சார்ந்திருக்கிறது. அமெரிக்காவின் எஃப்-35 (F-35) போர் விமானங்களை உற்பத்தி செய்ய கூட அரிய வகை தாதுக்கள் தேவைப்படுகின்றன. ஆகையால் அத்தகைய தனிமங்கள் மீதும் அவற்றின் சுத்திகரிப்பு மையங்கள் மீதும் சீனா தனது ஏகபோகத்தை தக்க வைத்திருப்பதால் அமெரிக்கா பெரிதும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. மே 2025 இல், வர்த்தகப் போர் தீவிரமடைந்த நிலையில், அமெரிக்காவிற்கான அரிய வகை காந்தங்களின் ஏற்றுமதியை சீனா குறைத்தது. இது அமெரிக்கத் தொழில்துறையை கடுமையாகப் பாதித்தது. 

சீனாவை மறித்து தனது மேலாதிக்கத்தை நிறுவும் நோக்கில்தான் கிரீன்லாந்து உள்ளடக்கிய அகண்ட அமெரிக்காத் திட்டத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்த துடிக்கிறது டிரம்ப் அரசு.

யுத்த தயாரிப்பு களமாக மாறிவரும் கிரீன்லாந்து

ட்ரம்பின் அச்சுறுத்தலை தொடர்ந்து, ஐரோப்பிய யூனியன் 'ஆபரேஷன் ஆர்க்டிக் என்டூரன்ஸ்' (Operation Arctic Endurance), 'ஆர்க்டிக் சென்ட்ரி' (Arctic Sentry) போன்ற பெயர்களில் கூட்டு இராணுவ பயிற்சிகளில் இறங்கியுள்ளது. ஜெர்மனி சிறிய அளவிலான இராணுவப் படைக்குழுவையும், A400M போர்விமானத்தையும், நான்கு யூரோபைட்டர் (Eurofighter) ஜெட் விமானங்களையும் கிரீன்லாந்தின் தலைநகர் நூக்கிற்கு அனுப்பியது. ஸ்வீடன் JAS 39 Gripen போர் விமானத்தை அனுப்பியது. டென்மார்க் நான்கு எஃப்-35 (F-35) போர் விமானங்களை களமிறக்கியது. இங்கிலாந்தும் நார்வேயும் 2,000 இராணுவத்தினர் வரை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்துள்ளன. ஐரோப்பிய ஆணையத்தின் தலைவரான் வாண்டர் லெயென் (Von der Leyen) 19.02.2026 அன்று பேசுகையில், கிரீன்லாந்தில் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கை அச்சுறுத்தலை எதிர்கொள்ள மார்ச் மாதத்தில் சிறப்பு இராணுவ நடவடிக்கைக்கான கூட்டத்தை ஆர்க்டிக் பிராந்தியத்தில் நடத்தவுள்ளதாகவும், கிரீன்லாந்திற்கான இத்தகைய நடவடிக்கைகளுக்கான நிதியை 2028ம் ஆண்டிற்குள் இரட்டிப்பாக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.   

ஏற்கெனவே அமெரிக்கா கிரீன்லாந்தில் ஒரு இராணுவதளத்தையும் நிறுவியுள்ளது என நாம் மேலேயே பார்த்தோம். தற்போது அமெரிக்கா தனது 'கோல்டன் டோம்' (Golden Dome) ஏவுகணை பாதுகாப்புத் திட்டத்தை கிரீன்லாந்தில் நிறுவுவதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.  

இதை ரஷ்யா தரப்பு கடுமையாக எதிர்த்து வருகிறது. அமெரிக்காவின் ‘கோல்டம் டோம்’ திட்டம் செயல்படுத்தப்பட்டால், ரஷ்யா இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. மேலும், ரஷ்யாவைக் குறிவைத்து அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் கிரீன்லாந்தை ராணுவமயமாக்கினால், ராணுவ-தொழில்நுட்ப நடவடிக்கைகள் உட்பட தகுந்த எதிர் நடவடிக்கைகளை நாங்களும் முன்னெடுப்போம் என்றும் ரஷ்ய தரப்பு தெரிவித்துள்ளது. 

 ஆனால், ஏற்கெனவே ஆர்க்டிக் பிராந்தியம் முழுவதும் ரஷ்யா இராணுவ தளங்களை நிறுவியுள்ளதையும், ரஷ்யாவும் - சீனாவும் இணைந்து அப்பிராந்தியத்தில் கூட்டு கடற்படை மற்றும் விமானப்படை பயிற்சிகள் உள்ளிட்ட இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதை  நாம் மேலேயே பார்த்தோம். 

இவ்வாறு கிரீன்லாந்து அருமண் தனிமங்கள், எண்ணெய் எரிவாயு உள்ளிட்ட வளங்களுக்கான வேட்டைக்காடாக மட்டுமல்லாமல், ஆர்க்டிக் பிராந்தியத்தின் யுத்த தயாரிப்பு மையமாகவும் வேகமாக மாறியுள்ளது.  

கிரீன்லாந்து மக்கள் என்ன கருதுறார்கள்?

கிரீன்லாந்தை விலைக்கு வாங்கவிருப்பதாக கூறிய டிரம்பின் அறிவிப்புக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கிரீன்லாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் கென்னெத் ஹோக் “கிரீன்லாந்தில் எந்தவொரு தனிநபரும் நிலத்தை சொந்தமாக வைத்திருக்க அனுமதிக்க முடியாது, இது எங்கள் நாட்டை ஒரு ரியல் எஸ்டேட்டாகப் பார்க்கும் பார்வை. இது எங்களை மேலும் ஆத்திரமூட்டுகிறது” என்று கூறினார். 

கிரீன்லாந்து நூக் நகரில் சுமார் 5,000 போராட்டக்காரர்களுக்கும் மேலாக - இது அந்தப் பகுதியின் மக்கள் தொகையின் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையாகும் – திரண்டனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் டென்மார்க்கில் நடந்த போராட்டங்களில் இணைந்தனர். புதியதாக உருவாக்கப்பட்ட “மேட் ஓ'மீட்டர்” (Made O'Meter) செயலியின் மூலம் அமெரிக்க நிறுவனங்களின் தயாரிப்புகள் கிரீன்லாந்து மற்றும் டென்மார்க் மக்களால் அடையாளம் காணப்பட்டு புறக்கணிக்கப்படுகின்றன. 

பெரும்பாலான கிரீன்லாந்து மக்கள் தங்கள் தீவை அமெரிக்கா கைப்பற்றுவதை எதிர்த்துள்ளனர்: 

கிரீன்லாந்து குடிமக்களில் சுமார் 85% பேர் டென்மார்க் ராஜ்ஜியத்திலிருந்து வெளியேறி அமெரிக்காவின் ஒரு பகுதியாக மாற விரும்பவில்லை; வெறும் 6% பேர் மட்டுமே அமெரிக்காவைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அதேசமயம் 84% பேர் இப்போதைக்கு டென்மார்க்குடன் இருக்க விரும்பினாலும் இறுதியாக சுதந்திர தனி கிரீன்லாந்தைலையே விரும்புகின்றனர். என்றொரு சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

கிரீன்லாந்து குரல்கள் தாங்கள் டேனிஷ் மக்களும் அல்ல, அமெரிக்கர்களும் அல்ல என்பதை மீண்டும் மீண்டும் எதிரொலித்தன.

தொகுப்பாக

சீன- ரஷ்ய ஏகாதிபத்திய முகாமின் வளர்ச்சி அமெரிக்காவிற்கு உள்ளேயும் புறத்திலும் மிகப்பெரிய நெருக்கடியை தோற்றுவித்துள்ளது. இந்த நெருக்கடி இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஒரே முகாமாக இருந்த அமெரிக்க-நேட்டோ அணிகளுக்கிடையே கூட பிளவினை உருவாக்கி ஐரோப்பிய யூனியனை தனியொரு முகாமாக நிறுத்தியுள்ளது. இந்த நெருக்கடியை தீர்க்க வழி தேடி டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு பாசிச நடவடிக்கைகளை மூர்க்கமாக செயல்படுத்தி வருகிறது. செல்வாக்கு மண்டலங்களையும், காலனிகளையும் கைப்பற்றும் மறுபங்கீட்டுப் போட்டியில் தீவிரமாக இறங்கியுள்ளது. தனது மேலாதிக்கம் சரியும் பகுதிகளில் அதனை தக்க வைக்க வரிப் போர், இராணுவ நடவடிக்கை, ஆட்சி கவிழ்ப்பு, தொழில்நுட்ப யுத்தம் உள்ளிட்ட செயல்தந்திரங்களை மேற்கொண்டு வருகிறது. இதன் பகுதியாகத் தான் அகண்ட அமெரிக்கா திட்டத்தை தீவிரமாகவும் பாசிச முறையிலும் செயல்படுத்தி வருகிறது. இதற்கென பிரத்தியேகமாக தற்போது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு எனும் பெயரில் புதிய யுத்ததந்திரக் கொள்கையை உருவாக்கி வெனிசுலா மீது தாக்குதல் தொடுத்து வருகிறது – கிரீன்லாந்தை ஆக்கிரமிக்க முயற்சித்து வருகிறது. 

அதே போல், ஐரோப்பிய யூனியன் முகாம் ரஷ்யாவை தனது பிரதான எதிரியாக வரையறுத்து போர்த்தந்திர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அமெரிக்க எவ்வளவு இடையூறு கொடுத்தாலும் அதன் மீது இப்போதைக்கும் தாக்குதல் நிலை எடுக்காமல் தற்காப்பு நிலை என்ற செயல்தந்திரங்களை மேற்கொள்கிறது. தாக்குதல் நிலை எடுக்கும் அளவுக்கு தன்னை தயார்படுத்தி வருகிறது என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான மாற்றமாகும் – அது கிரீன்லாந்தில் வெளிப்படுகிறது. அதே போல சீனாவிடமும் சமரசப் போக்கையே கடைபிடிக்கிறது ஐரோப்பிய முகாம். இது சீனாவுக்கு மேலும் பலத்தை கொடுக்கிறது. 

எனவேதான் அமெரிக்கா கிரீன்லாந்தில் சீன இருப்பை கண்டு பெரிதும் அஞ்சுகிறது. ஆர்க்டிக் பிராந்தியம் முழுவதும் குறிப்பாக கிரீன்லாந்தும் யுத்த தயாரிப்பு மையமாக மாற்றப்பட்டுள்ளது.

பல் இளிக்கும் பல்துருவ ஒழுங்கமைப்பு ஆதரவு

2026 ஜனவரி தொடக்கத்தில் வெனிசுலாவின் மீதான அமெரிக்காவின் ராணுவத் தாக்குல், அந்நாட்டின் அதிபர் மதுரோவையும் அவரது மனைவியையும் அமெரிக்காவிற்கு கடத்தி சென்றது ட்ரம்ப் கும்பல். ரஷ்யாவின் எண்ணெய் வள சார்பை குறைக்க வெனிசுலாவை கைப்பற்ற முயற்சிக்கிறது. சீனாவின் அருமண் தனிமங்கள் சார்பை குறைக்க கிரீன்லாந்தை கைப்பற்ற முயற்சிக்கிறது. தனது புதிய காலனிகளான இந்தியா உள்ளிட்ட நாடுகளையும் ரஷ்யாவின் எண்ணெய் சார்பை குறைக்க மிரட்டி வருகிறது. ஒருபக்கம் உக்ரைன் விசயத்தில் ரஷ்யாவுடன் சமரசம் செய்து கொண்டு ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதியிலுள்ள கனிம வளங்களை பங்கிட்டுக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. மறுபக்கம் இந்தியாவை ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்காதே என்று மிரட்டுகிறது. சென்ற ஆண்டு முழுவதும் இழுத்தடித்து பேரம் பேசி வந்த மோடி - அம்பானி கும்பலை, எப்ஸ்டீன் பைல் மற்றும் சில ஊழல் வழக்குகளை கிளப்பிவிட்டு அடி பணிய வைத்துள்ளது ட்ரம்ப் அரசு. வெனிசுலா மதுரோ கைது குறித்தோ, கிரீன்லாந்து ஆக்கிரமிப்பு குறித்து மோடி அரசு அறவே வாய்திறக்கவில்லை. மாறாக, அமெரிக்க – இந்திய வர்த்தக ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டு, இந்திய விவசாயிகளையும் தொழிலாளர்களையும் வரலாறு காணாத நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது மோடி அரசு. 

உக்ரைன், பாலஸ்தீனம், ஈரானை தொடர்ந்து தைவான், வெனிசுலா, கிரீன்லாந்து போன்ற நாடுகளிலும் உலகின் அனைத்து பிராந்தியங்களிலும் போரும் – போருக்கான தயாரிப்பு பணிகளும் முன்பை விட தற்போது தீவிரமடைந்துள்ளன. 

லெனின் கூறியவாறு ஏகாதிபத்தியம் என்றாலே போர் என்பதற்கு சான்றாக போர் நடவடிக்கைகள் உக்கிரமடைந்து வருகின்றன. 

ஆனால் லெனினியத்தை துறந்த காவுத்ஸ்கியவாதிகள் சிலர், ஒற்றைத் துருவ மேலாதிகத்தை விட  பல்துருவ உலக ஒழுங்கமைப்பு ஜனநாயகமானது என ஆருடம் கூறிவந்தனர். அவர்களின் முகத்தில் கரியை பூசும் விதமாக பல்துருவ உலக ஒழுங்கமைப்பின் ஜனநாயக வேசம் பல் இளித்து நிற்கிறது. அதன் கோரப் பற்கள் முழுவதும் உலக மக்களின் குருதி படிந்துள்ளது. பல்துருவ உலக ஒழுங்கமைப்பு போரையும் போர்தயாரிப்புகளையும்தான் தீவிரப்படுத்தியுள்ளது. 

எனவே பல்துருவ உலக ஒழுங்கமைப்பானது ஒற்றைத்துருவ உலக ஒழுங்கைப்புக்கு மாற்றுமில்லை; அது ஜனநாயகமானதுமில்லை. ஒடுக்கப்பட்ட நாடுகளின் அணிசேர்க்கையே ஜனநாயகத்தை கொண்டு வரும். அதுவே உலக மறுபங்கீட்டு போட்டிக்கும் பதிலடி கொடுக்கும். அதை முன்னெடுப்பதே பாட்டாளி வர்க்கத்தின் இன்றைய சர்வதேச கடமையாகியுள்ளது. 

சமரன்

(பிப்ரவரி - மார்ச் 2026 இதழ்)