உக்ரேன் மீதான இரசியாவின் ஆக்கிரமிப்பு யுத்தம்

கை நழுவும் உக்ரேன் காலனியாதிக்கத்தை காக்க போராடும் நேட்டோ நாடுகள்

உக்ரேன் மீதான இரசியாவின் ஆக்கிரமிப்பு யுத்தம்

இரசியா, உகரேன் மீதான தாக்குதலை தொடர்ந்ததிலிருந்து மேற்கு உலக நாடுகள் இரசியா மீது பலகட்ட பொருளாதாரத் தடைகளை அமல்படுத்தி வருகின்றனர். இந்தப் போர் இரசியாவிற்கும் உக்ரேனுக்குமான போராக இல்லாமல், இரசியாவிற்கும் நேட்டோ நாடுகளுக்கு இடையிலான போராகத்தான் நடந்து வருகிறது. இதில் உக்ரேன் அதிபரான ஜெலென்ஸ்கி நேட்டோவின் படைத் தளபதியாகத்தான் செயல்பட்டு வருகிறார். ஆயுதங்கள், போர் பயிற்சிகள், போர்த்தளவாடங்கள், போர் வியூகம், போருக்கான தொழில்நுட்ப உதவிகள் என்ற சகலவிதமான போர் நடவடிக்கைகளும் அமெரிக்க தலைமையிலான நேட்டோ நாடுகளே முடிவு செய்து வருகின்றனர்.

குறிப்பாக அமெரிக்கா இந்தப் போரை தொடரச் செய்து இரசியாவை பலவீனப்படுத்தி ஒன்றுமில்லாமல் செய்வதைதான் நோக்கமாக் கொண்டுள்ளது என்று பல விமர்சகர்கள் கூறி வருகின்றனர். நேட்டோ நாட்டு ஆளும் வர்க்க நலன்களுக்காக உக்ரைன் மக்களை காவு கொடுக்கின்றனர். இன்னொரு பக்கம் போரை காரணம் காட்டி இரசியாமீது பல கட்ட பொருளாதாரத் தடைகள் அமல்படுத்தி வருவதால் இரசியாவின் கச்சா எரிசக்தி பொருட்கள், வங்கிகள், உணவு பொருட்கள், உரங்கள் என்று சகலவிதமான இரசியாவின் பலம்பெற்ற வர்த்தகம் அனைத்தையும், வர்த்தகத்திற்கான அனைத்து வழிகளையும்கூட அமெரிக்க தலைமையிலான நேட்டோ நாடுகளும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியமும் பொருளாதார தடைக்குள் கொண்டு வந்துள்ளனர். இதனால் இரசியாவின் உள்நாட்டு உற்பத்தி, ஏற்றுமதி, வர்த்தகச் சங்கிலிகள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளானது. இதைச் சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த அதே சமயத்தில் இந்த நடவடிக்கைகளால் சிறிதும் பின்வாங்காமல் உக்ரேனில் மேற்குலகத்திற்கு எதிரான தன்னுடைய போரை பலப்படுத்தியது இரசியா.

பின்னர் இந்த பொருளாதார தடை கொள்கைகள் வரலாற்றிலேயே இவ்வளவு பலவீனமாகவும், எதிர்தாக்கத்தை உடையதாகவும் மாறியுள்ளதை பல மேற்குலக அரசியல் விமர்சகர்கள் மற்றும் பொருளாதார வள்ளுனர்களின் குரல்கள் மேற்குலக முகாம்களிலேயே வலுக்க ஆரம்பித்துள்ளது. உலக எரிசக்தி பொருட்களின் விலை வின்னை முட்டுகிறது. வரலாறு காணாத அளவிற்கு பணவீக்கம் ஏற்றம் பெற்று வருகிறது. உற்பத்தி, உணவு மற்றும் மூலப்பொருள் சங்கிலிகள் வரலாறு காணாத குழப்பத்தில் உள்ளது. ஏற்கெனவே இருந்த சங்கிலிகள் அறுபட்டும், புதிய சங்கிலிகள் அமைக்க வாய்ப்பற்றும் குழம்பியப்படி யாருடன், எப்படி, எதனுடன் கைகோர்த்து போவது என்று புரியாமல் தத்தளித்து வருகிறது. இதனால் உலகம் முழுவதும் உற்பத்தி மிகக் கடுமையாக பாதித்துள்ளது.

 

உலக நாணய நிதியத்தின் முக்கிய பொருளாதார நிபுனரான பியரி-ஆலிவியர் கௌரின்சாஸ் ”உலகளாவிய மந்தநிலையின் விளிம்பில் தத்தளித்து கொண்டுள்ளது உலகம். அது மிக விரைவில் சிக்கிக்கொள்ளும், அதுவும் கடந்த மந்த நிலை முடிந்து இரண்டே ஆண்டுகள்தான் ஆகிறது” என்று கூறுகிறார்.

ஐஎம்எஃப் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தனது சமீபத்திய வலைப்பதிவில் 2023 வரை நீடிக்க போகும் பொருளாதார இருள் பற்றிய முன்னறிவிப்பை வரைந்துள்ளார். "வளர்ச்சி கடந்த ஆண்டு (2021) 6.1 சதவீதத்தில் இருந்து இந்த ஆண்டு (2022) 3.2 சதவீதமாகவும், அடுத்த ஆண்டு (2023) 2.9 சதவீதமாகவும் குறைகிறது, ஏப்ரலில் இருந்து எதிர்பார்க்க பட்டதிலிருந்து  0.4 மற்றும் 0.7 சதவீத புள்ளிகள் தொடர்ந்து குறைந்துள்ளது. இது உலகின் மூன்று பெரிய பொருளாதாரங்களின் ஸ்தம்பிதமான வளர்ச்சியை பிரதிபலிக்கிறது" என்று சமீபத்திய வலைப்பதிவில் தெரிவித்துள்ளார்.

பல்வேரு நாடுகளில் உற்பத்தி நெருக்கடி, அதனால் பொருள் தட்டுப்பாடு, அதைத் தொடர்ந்து விலைவாசி உயர்வு, இதன் விளைவாக மக்கள் வாங்கும் சக்தி இழப்பு என்று தொடர் சங்கிலியாக மக்கள் சொல்லொன்னா துயரங்களை அனுபவித்து வருகின்றனர். ஐரோப்பிய மற்றும் வளர்ந்த நாடுகளானாலும் சரி, மூன்றாம் உலக ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளானாலும் சரி, மக்கள் எரிபொருள் (எரிவாய்வு மற்றும் கச்சா எண்ணெய்) கிடைக்காமல் வரலாறு காணாத தட்டுப்பாட்டில் உள்ளனர். உலகம் முழுக்க குறிப்பாக தென் அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் ஆப்பிரிக்க கண்ட மக்கள் தானிய மற்றும் உரத் தட்டுப்பாட்டால் வறுமையை நோக்கி கோடிக்கணக்கான மக்கள் தள்ளப்பட்டுள்ளதாக ஐ.நா கூறியுள்ளது. ஏற்கெனவே பெருந்தொற்று கொரொனாவின் பாதிப்பால பல கோடிக்கணக்கான மக்கள் வறுமைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், இரசிய-உக்ரைன் போரின் விளைவு மேலும் பல கோடி மக்களை வறுமைக்குத் தள்ளியுள்ளதை ஐ.நா உறுதிபடுத்தியுள்ளது. உலக சுகாதார அமைப்பு, உணவு மற்றும் விவசாய அமைப்பு, உலக உணவுத் திட்டம் உள்ளிட்ட ஏஜென்சிகள் வெளியிட்ட ஐநா வின் உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து அறிக்கை 2022 ஜூன் மாத பதிப்பில், 2020-ஐ விட 46 மில்லியன் மக்கள் மற்றும் 2019-ஐ விட 150 மில்லியன் மக்கள், கடந்த ஆண்டு 828 மில்லியன் மக்கள் அல்லது உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 10 சதவீதம் பேர் பசியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுட்டிக்காட்டியுள்ளது.

இது போன்ற உலக மக்களின் சொல்லொன்னா துயரத்துக்கும் அவதிக்கும் அமெரிக்க தலைமையிலான நோட்டோ நாடுகள் தங்கள் ஒழுங்கமைவுக்கு உலகத்தை நிலை நிறுத்தும் முயற்சிகளில் போர்களையும் பல நாடுகளுக்கு பல கட்ட பொருளாதாரத் தடைகளையும் அமல்படுத்துவதன் விளைவாகவும், அதேபோல இரசிய-சீன முகாம் உலகத்தை தன்னுடைய ஒழுங்கமைவுக்கும் ஏகாதிபத்திய கொள்ளைக்கும் புதிய விரிவாதிக்க முயற்சிகளுக்கும் போர்களையும், ஆட்சி கவிழ்ப்பையும், கடன் மூலம் கட்டுப்படுத்துவதன் விளைவாகவும் ஏற்பட்டுள்ளது. இரண்டு முகாம்களும் தங்கள் ஒழுங்கமைவுக்காக போராடுவதையும் போட்டி போடுவதையும்தான் பல முனை ஒழுங்கமைவு என்று பல உலக ஊடகங்கள் குறிப்பிடுகிறது. ஆனால் அதிலுள்ள முக்கிய அம்சத்தை எந்த ஊடகங்களும் பேச மறுக்கின்றனர். பல முனை உலக ஒழுங்கமைவு என்பது ஒருசார் ஒழுங்கமைவின் காலனிகளை, மற்றொருசார் உலக ஒழுங்கமைவு முகாம் கைப்பற்ற நடத்தும் மறுபங்கீடு போராட்டமாகும். அமெரிக்க நேட்டோவின் செல்வாக்கிற்கும் சந்தைக்கும் உட்பட்டு இருக்கும் உக்ரேனை இன்னொரு முகாமான இரசியா தன்னுடைய செல்வாக்கிற்கும் சந்தை நலனிற்கும் உட்படுத்த முயற்சிக்கிறது. பலமான முகாம் பலவீன மடையும்போதும், புதிய முகாம் உலகத்தில் தோன்றி பலம் பெறும்போதும், உலக நாடுகளையும் சந்தைகளையும் தங்கள் பலாபலனுக்கு ஏற்ப பங்குபோட்டுக் கொள்ள நடக்கும் போராட்டமே உலக ஒழுங்கமைவிற்கான யுத்தங்கள். ஏகாதிபத்திய முகாம்கள் புதிய காலனிய மறுபங்கீட்டை காலனி நாடுகளில் பல முறைமைகளில் செயல்படுத்துகிறது. இரு / பல தரப்பு ஒப்பந்தங்கள் மூலமோ (அரசியல் ரீதியாகவோ / அமைதியாகவோ) அல்லது பொருளாதார தடைகளைக் கொண்டோ (பொருளாதாரப் போர்), இராணுவ நடவடிக்கைகள் மூலமோ (ஆயுதங்களை ஏந்திய போர்கள்) எந்த வடிவத்தில் என்பது அந்த குறிப்பிட்ட நாடுகளுக்கிடையிலான மற்றும் புவிசார் அரசியல் பொருளாதார நடவடிக்கையை சார்ந்து முடிவு செய்யப்படுகிறது. ஆனால் இந்த முறைமைகள் அனைத்திலும் விளைவுகள் ஒன்றேதான்.

மேற்குலக நாடுகளின் பொருளாதார தடைகளை விமர்சனம் செய்வது என்பது உலக அமைதிக்கும், ஜனநாயகத்திற்கு எதிரான செயலாக காட்ட முயற்சிக்கப்படுகிறது. அதனால் மேற்குலக நாடுகளிலேயே உள்ள பாதுகாப்பு ஆலோசகர்கள் இந்த விசயத்தில் வாய்மூடி மௌனியாக இருக்கின்றனர். மூல உக்தி வகுப்பவர்கள் அமைதி காக்கின்றனர். பிரிட்டன் பிரதம வேட்பாளர்களான லிஸ் ட்ரஸ் மற்றும் ரிஷி சுனாக், தங்கள் போட்டி மேடையில், ஏற்கெனவே போட்ட பொருளாதார தடைகளின் விளைவுகளைப் பற்றி ஒரு வார்த்தைகூட பேசாமல், மேலும் கடுமையான பொருளாதார தடைகள் போடப்படும் என்று சூளுரைக்கின்றனர். இன்னும் சொல்வதென்றால், இந்த பொருளாதார கட்டுப்பாடுகளுக்கு எதிரான விமர்சனத்தை முன்வைப்பதாக நினைத்தாலோ அல்லது அறிகுறி தெரிந்தாலோ, உடனேயே நம்மை  “புட்டின் ஆதரவாளர்கள்”,  “உக்ரைனுக்கு எதிரானவர்கள்” என்று முத்திரை குத்தி விடுகின்றனர்.” என்று கார்டியன் பத்திரிக்கையின் அரசியல் விமர்சகர் சைமன் ஜென்கின்ஸ் தன்னுடைய கட்டுரை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க தலைமையிலான நேட்டோ நாடுகள், குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியம் போட்ட இரசியா மீதான பொருளாதாரத் தடைகளின் மூலம் தங்களுக்குத் தானே புதைகுழிக்குள் சிக்க வைத்துக்கொண்டதாக நிலைமைகள் மாறியுள்ளது. இந்த பனிக்காலத்தில் ஐரோப்பாவை உறையச்செய்ய புதினுக்கு முழுச் சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாக இத்தடைகள் மாற்றியுள்ளது. இரசிய அரசு கார்ப்பரேட் நிறுவனமான காஸ்ப்ரோம் நார்ட் ஸ்ட்ரீம் -1 குழாய் வழியாக வழங்கி வந்த எரிவாயுவை ஆயுதமாக மாற்றி ஐரோப்பிய நாடுகளை வஞ்சித்து வருகிறார். உக்ரைன் போருக்குப் பின்னர் 40% கொடுத்த எரிவாயுவை படிப்படியாக குறைத்து இந்த மாத தொடக்கத்தில் ஆண்டு பராமரிப்பு என்று கூறி முழுவதுமாக இரசியா நிறுத்தியது. ஒரு பக்கம் அமெரிக்க – நேட்டோ நாடுகள்  போரின் தொடக்கத்தின்போது இரசியா எரிசக்தி ஏற்றுமதி மூலம்தான் பெரும் வருமானம் ஈட்டி வருவதால், உலகம் முழுக்கவுள்ள நாடுகள் இரசியாவினுடனான வர்த்தகத்தை முழுவதுமாக தடை செய்ய வேண்டும் என்று உலக நாடுகளை வற்புறுத்தி பணிய வைக்க முயன்றனர். அப்படி இறக்குமதி தடையை அம்ல்படுத்தாத நாடுகள் இரசியாவின் ஆக்கிரமிப்புப் போருக்கும் அதனால் ஏற்படும் மதி அழிவுக்கும் இறக்குமதி செய்யும் நாடுகள் போருக்கு நிதி அளிக்கின்றது என்று தான் பொருள் என்று கூறு வந்தனர். ஆனால் ஆண்டு பராமரிப்பு என்று கூறி நார்ட் ஸ்ட்ரீம் – 1 குழாயை இரசியா நிறுத்தியபோது, இரசிய எரிசக்தியை ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக ஆயுதமாக பயன்படுத்துகிறது என்று கூறி உலக அரங்கில் எரிவாய்வை திருப்பிப் பெற பல ஐரோப்பிய நாடுகள் மன்றாடின. உலக நாடுகள் வாங்கினால் அது போருக்கான நிதி அளிப்பதாக மாறிவிடும், ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் வாங்கினால் அது உலக அமைதிக்கும் ஜனநாயகத்திற்கானதா?.  ஆண்டு பராமரிப்பு தொடங்கிய பத்து தினங்களுக்குப் பிறகு மீண்டும் எரிவாயு வழங்குதலை தொடங்கிய இரசியா 40% அளவுக்கு வழங்கியது. ஆனால் மீண்டும் சில தினங்களிலேயே 20% குறைத்துள்ளது இரசிய காஸ்ப்ரோம்.  இந்த தடைகள் உலக கச்சா எண்ணெய் விலையை கடுமையாக உயர்த்தியுள்ளது. கிழக்கு ஐரோப்பாவிலிருந்து ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பப்படும் கோதுமையும் மற்ற உணவு பொருட்களும் தடைபடுத்தப்பட்டுள்ளது.

பிரிட்டன் மக்களின் எரிவாய்வு மாத கட்டணம் ஒரே வருடத்தில் மூன்று மடங்காக உயர்ந்துள்ளது. கடுமையான எரிவாய்வு தட்டுப்பாட்டின் காரணமாக ஐரோப்பிய ஒன்றியம் முழுக்க 15% எரிவாய்வை கடந்த ஆண்டை ஒப்பிட்டு மிச்ச படுத்த வேண்டும் என்று சட்டம் கொண்டுவதுள்ளனர். இதனால் ஐரோப்பிய ஒன்றியத்தில் பல நாடுகள் இருளில் மூழ்கியுள்ளது. எரிசக்தியை சேமிக்க இரவு நேரங்களில் தெரு விளக்குகள், குளிக்க ஹீட்டரை நிறுத்தி வைத்தல், குளிர் சாதனத்தை வழக்கத்தை விட 5 டிகிரி செல்சியஸ் குறைத்து வைத்தல் போன்று எரிசக்தியை மிச்சப்படுத்தும் பல வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் இந்த பொருளாதார தடைகளின் மூலம் மிகப் பெரும் பலனடைந்தது இரசியேவே என்றும் தனது எரிசக்தியை ஆசியா மற்றும் பல்வேறு உலக நாடுகளுக்கு மடைமாற்றி ஏற்றுமதியில் பெரும் இலாபத்தை பார்த்து வருகிறது என்றும் அரசியல் விமர்சகர்களும், பொருளாதார வள்ளுனர்களும் கூறி வருகின்றனர். ரூபிள் நாணயம் உலகில் வலுவான நாணயங்களில் ஒன்றாகவும், இந்த ஆண்டு ஜனவரி மாதத்தை கணக்கிடும்போது 50% அதன் நாணய மதிப்பு உயர்ந்திருப்பதையும் கவணிக்க வேண்டும். மாஸ்கோவின் வெளிநாட்டு சொத்துக்கள் 650 பில்லியன் டாலர்கள் அளவுக்கு ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளால் முடக்கப்பட்டுள்ளதையும், இரசிய செல்வந்தர்கள் தங்கள் சொத்துக்களை பாதுகாத்துகொள்ள வேறு நாடுகளுக்கு குடியுரிமை வாங்கி ஓடுகின்றனர் என்றும் சமீபத்தில் ஒரு ஆய்வு முடிவு குறிப்பிட்டுள்ளது.  புதினின் உக்ரைன் மீதான தாக்குதலாகட்டும் அல்லது நேட்டோ நாடுகளுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளாகட்டும் புதினுக்கு எதிராக ஒரு வலுவான எதிர்க்கட்சித் தலைவர் இல்லாததால், அவர் உள் நாட்டில் வலுவான சவால்களை எதிர்கொள்ள வேண்டியதாயில்லை. அமெரிக்க தலைமையிலான நேட்டோ விரிவாதிக்கத்திற்கும் அதற்கு எதிரான புத்தினின் விரிவாதிக்கத்திற்கும் இடையிலான போட்டியில் உலகளவில் மக்கள் கடும் பாதிப்பை எதிர் கொண்டு வருகின்றனர். 

உலக ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையில் ஒரு கட்டுண்ட வலைபின்னலும் சார்புநிலையும் என்பது ஏகாதிபத்தியங்களுக்கு இடையில் அல்லது ஏகாதிபத்திய முகாம்களுக்கிடையில் அமைதி வழியில் மறுபங்கீடு காலகட்டமாகவும், பலவீனமாகி வரும் அமெரிக்க - நேட்டோ அணி காலனிய போரில் ஈடுபட்டிருந்த காலமாகவும், பலம் பெற்று வரும் இரசிய-சீன அணி பொருளாதாரத்தை கட்டியமைத்து போருக்கு தயாராகும் காலமாகவும் இருந்தது. இப்போது கட்டுண்ட வலைபின்னலே போருக்கான ஆயுதமாக மாற்றப்பட்டும் உள்ளது. உலகம் ஒவ்வொரு முறையும் ஏகாதிபத்தியங்களின் பலாபலத்திற்கு ஏற்ப மறுபங்கீடு செய்வது தவிற்கவியலாது. அமைதிவழி பங்கீடு சாத்தியமற்றதாகிவிட்டது. பலம்பெற்று வரும் ஏகாதிபத்திய முகாம் பலம் பெற்றுவரும் ஏகாதிபத்திய முகாமுக்கு அமைதிவழி சாத்தியமற்றதாகிவிடும்போது ஏகாதிபத்தியங்களுக்கிடையில் யுத்தங்கள் தவிர்க்க இயலாத்தாகி விடுகிறது. 

இப்போது உக்ரேன் யுத்தத்தில், அமெரிக்க-நேட்டோ அணியே போரை நடத்திக்கொண்டிருக்கிறது. ஆனால் நேரடியாக ஆயுதம் தாங்கி நடத்தாமல், இரசியாவிற்கு எதிராக ஒரு பனிப்போரை நடத்திக்கொண்டிருக்கிறது. நேட்டோ மேடையில் அமர்ந்த அரசியலாளர்கள் தாங்கள் உக்ரேனுக்கு அளிக்கும் இராணுவ உதவிகளை மிகக் கவணமாகவும் எச்சரிக்கையாகவும் அணுகி வருகின்றனர்.  நேட்டோ நாடுகள் தாங்கள் போரில் நேராக ஈடுபடாமல், அதே நேரத்தில் போரை தொடர்ந்து நடத்தி இரசியாவை பலவீனப்படுத்தி அடிப்பணிய வைக்க பல கட்ட முயற்சிகள் செய்து வருகின்றனர். அவர்கள் தெளிவாக இந்த இராணுவ நடவடிக்கையின் விளைவுகளை புரிந்து வைத்துள்ளனர்.  நேட்டோ நாடுகளின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டபோதிலும், உக்ரைனுக்கு தொடர்ந்து உதவிகளையும் ஆயுதங்களை வழங்கிவருகின்றனர். இதன் மூலம் அவர்கள் இரசியாவின் பொருளாதாரத்தை கற்காலத்திற்கு கொண்டு செல்லும் அளவிற்கு அழிக்க விரும்புகின்றனர்.

நேட்டோ நாடுகள் பெரும்பாலும் பொருளாதார தடைகளை கையாண்டே தனது எதிரிகளை ஒடுக்குவது வரலாற்றில் பல சான்றுகள் உள்ளன.  இப்படியும் இயலாத நேரத்தில் மட்டும்தான் நேரடியா போர்களை நடத்தி தன் உலக ஒழுங்கமைவை நிலை நிறுத்தியும் உள்ளது. மேற்குலக நாடுகள் தனது புதிய ஏகாதிபத்திய ஒழுங்கமைவின் அடிப்படையில் தங்கள் விருப்பப்படி உலகத்தை ஆணையிட தலையிடுகின்றனர். அவர்கள் போர்படகுகள் மூலமாக செய்யவில்லையென்றால், அதை உலகமய பொருளாதாரக் கொள்கையின் வடிவில் தங்களின் முதலாளித்துவ சக்தியைக் கொண்டு திணிக்கின்றனர் அல்லது அடிப்பணிய வைக்கின்றனர். பின்னர் அதற்கும் பணியவில்லை என்றால் பல கட்ட பொருளாதார தடைகள் மூலம் போர் புரிந்து ஒடுக்குகின்றனர். இப்படி இதுவரை அவர்கள் பெரும்பாலும் சிறிய, பலவீனமான அரசுகளிடம் திணித்து அடக்கி ஒடுக்கினர்.  அது அவர்களின் நோக்கத்திற்கு பெருமளவில் சாதகமாக அமைந்தது என்றும் கூறலாம். 

அமெரிக்க ‘வரலாற்று பொருளாதாரத்தில்’ சிறந்த மாணவரான நிகோலஸ் முல்டர், “நேட்டோ நாடுகள் கடந்த 50 வருடத்தில் 30க்கும் மேற்பட்ட பொருளாதார தடைகளைக் கொண்ட “போர்”களை நடத்தி மிகக் குறைந்த பாதிப்புகளையே பெற்றனர் அல்லது எதிர்தாக்குதலின்றி வெற்றி கண்டதாக குறிப்பிடுகிறார். இதுபோன்ற நடவடிக்கைகளின் மூலம் பொருளாதார தடைகளில் பாதிக்கப்பட்ட நாட்டு மக்களை மிரட்டி அம்மக்களின் ஆட்சியாளர்களிடம் இருந்து விலக்கி வைக்க முயற்சிக்கின்றனர். ஆனால் நடந்தது என்னவோ இதற்கு எதிரான விளைவுள்தான். க்யூபாவிலிருந்து கொரியா வரை, மியான்மரிலிருந்து ஈரான் வரை, வெனிசுலாவிலிருந்து இரசியா வரை  அந்தந்த நாட்டு ஆட்சியாளர்கள் முன்னிலும் பலமாக வேரூன்றி வளர்ந்துள்ளனர். அதில் பெரும்பாலான நாடுகளில் உள்ள ஆளும் வர்க்கத்தில் முக்கிய நபர்களும் தலைமைகளும் மக்களின் உரிமைகளையும் ஜனநாயகத்தையும் நசுக்கி முன்னிலும் பலம் பெற்றுள்ளனர். இத்தடைகள் அனைத்தும் பலவீனமான அரசுகளைக்கூட தற்சார்பும், ஸ்திரத்தன்மையும் தொடர்ச்சியாக பலப்படுவதாகத்தான் தெரிகிறது. பெரும்பாலும் எல்லா உலக சர்வாதிகாரிகள் அரசும் மேற்குலக நாடுகளின் தடைகள் மூலம் இலாபமடைந்தேயுள்ளனர்” என்று கூறுகிறார். இப்படி சிறு நாடுகளிலும் அமெரிக்க-நேட்டோ விதித்த பொருளாதார தடைகளைத் தாண்டி அந்த ஆளும் வர்க்க பலப்பட காரணம், அதற்கெதிரான முகாமின் பின்புலமே. குறிப்பாக ஷாங்காய் கூட்டமைப்பு உருவானதற்குப் பிறகு பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்ட நாடுகளுடன் இரசிய-சீன முகாமின் அரசியல்-பொருளாதார-இராணுவ பின்புலமே அந்த நாட்டு ஆளும் வர்க்கம் பலம் பெறுவதற்கு காரணமாக அமைந்தது. 

இந்த வரலாற்று அனுபவத்தில் இருந்து பார்க்கும்போது மாஸ்கோ அரசு பலவீனமானதும் இல்லை; சிறியதும் இல்லை. இன்னொரு அரசியல் பார்வையாளரான ரிச்சர்ட் கனோலி, தி ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிட்டியூட்டின் இரசியா குறித்த விசயத்தில் நிபுணரான அவர் 2014ல் க்ரீமியா மற்றும் டொன்பாஸ் ஆக்கிரமிப்புக்கு பிறகு இரசியா மீது அமல்படுத்தப்பட்ட தடைக்கு புதினின் பதில் நடவடிக்கையை எடுத்துரைத்துள்ளார்.  “அவர்களின் நோக்கம் அப்பகுதியில் (உக்ரேனில்) இரசியாவின் நடவடிக்கை மாற்ற வேண்டும் அல்லது மேலும் ஆக்கிரமிப்பதிலிருந்து விலக்கி வைக்க வேண்டும் என்பதுதான். ஆனால் மேற்குலக நாடுகளின் தோல்வி கண் முன் தெரிவதை தடுக்க முடியவில்லை. தோல்வியுற்ற ஏகாதிபத்திய முகாம், தங்களின் இந்த பொருளாதார தடை நடவடிக்கையின் தோல்விக்கு காரணம் கட்டுப்பாடுகள் அல்லது தடைகள் மிக பலவீனமாக இருந்ததே காரணம என்று கூறுகின்றனர். ஆனால் இப்போது விதிக்கப்பட்டுள்ள தடைகள், ஒரு பெரிய உலக வல்லரசின்மீது போடப்பட்டுள்ள மிகக் கடுமையான தடைகளாகும். ஆனால் இப்போது அதன் தாக்கம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் கண்டிப்பாக ஒரு கட்டத்தில் வேலை செய்யும். அவர்கள் இரசியா மைக்ரோ சிப் மற்றும் ட்ரோன்களின் பாகங்களுக்காக தவிக்கும் நாள் வரும் என்று நம்புகின்றனர். மிக விரைவில் புதின் அமைதியை வேண்டி கெஞ்சி நிற்க்கும் சூழல் வரும் என்றும் கூறுகின்றனர்” என்று அரசியல் விமர்சகர் ரிச்சர்ட் கன்னோலி கூறுகிறார். 

மேலும் அவர் “புதின் கெஞ்சுவதாக இருந்தால், அது போர்களத்தில் வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் அவரின் சொந்த நிலத்தில் அதாவது இரசியாவில், புதின் இந்த புதிய சூழ்நிலைக்கு எப்படி “மெதுவாக மாற்றத்திற்கு பர்ணமித்து முன்னேறி” செல்கிறார் என்பதை தெளிவாக விளக்குகிறார். பொருளாதார தடைகளுக்குப் பிறகு சீனா, ஈரான் மற்றும் இந்தியாவுடன் வர்த்தகம் ஊக்கம் பெறறுள்ளது. புத்தினுடன் தொடர்பிலுள்ள மற்ற நாட்டு காரியவாதிகளும் மற்றும் ஆளும் தரப்பினரும், இறக்குமதியில் கழிவுகள் மூலம் பெரும் இலாபத்தை ஈட்டி வருகின்றனர்.  நாடு முழுக்க இருக்கும் மெக்டொனால்ட் நிறுவனம் வுகுஸ்னோ & டொச்கா (Vkusno & Tochka) என்ற இரசியற்கு சொந்தமான நிறுவனமாக மாற்றியமைக்கப் பட்டுள்ளது அவ்வளவே. நிச்சயமாக பொருளாதார பலவீனம் இருக்கத்தான் செய்கிறது; ஆனால் இரசியா மீதான பொருளாதாரத் தடைகளின்போது எதெல்லாம் இரசியாவிற்கு பலமாக இருந்தததோ, அவைகள் இப்போது ஆசியா முழுவதும் புதிய பொருளாதார எதார்த்தமாக ஒத்திசைந்து இருக்கிறது. சீனா என்றும் இல்லாத அளவிற்கு புதிய மேம்பட்ட பாத்திரத்திற்கு தயாராகியுள்ளது. இவைகள் எதிர்ப்பார்க்கப்பட்டதா?” என்று கேள்வி எழுப்பி விமர்சிக்கிறார். 

அதே நேரத்தில், மேற்குலக நாடுகளும் அதன் மக்களும் பொருளாதார மந்தநிலையில் சிக்கியுள்ளனர். பிரிட்டன், பிரான்சு, இத்தாலி மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் தலைமைகள் ஆட்டம் கண்டு பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. போரிஸ் ஜான்சன் சொந்த கட்சியிலேயே நம்பிக்கை இழந்து பதவியிலிருந்து தூக்கி எறியப் பட்டுள்ளார். இத்தாலி பிரதமர் கூட்டணி கட்சியின் கடும் குழப்பத்திற்கிடையில் ஜூலை மாதம் பதவி விலகினார். பிரான்சு அதிபர் மேக்ரோன் ஒரு பெரும்பான்மை இல்லாமல் தொடர்ந்து ஆட்சியில் நீடித்து வருகிறார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரலாறு காணாத அளவில் சொந்த நாட்டில் செல்வாக்கு குறைந்துள்ளது. இப்படி பல நேட்டோ நாடுகளும் ஐரோப்பிய நாடுகளும் விலைவாசி ஏற்றம், அரசியல் குழப்பம், பணவீக்கம் என்று பல முணைகளில் ஸ்திரத்தன்மையற்று இருக்கிறது. கடும் எரிவாய்வு தட்டுப்பாட்டில் இருக்கும் ஜெர்மனி மற்றும் ஹங்கேரி புதினின் இசைவுக்கு கிட்டதட்ட தாளம் இடும் நிலைக்கு சென்றுள்ளது. உலகம் முழுவதிலும் மக்களின் வாழ்வாதார செலவுகள் எகிறி வருகிறது. பிரிட்டன், பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி ஸ்பெயின், டென்மார்க், நார்வே என்று பல நாடுகளில் மக்கள் பல்வேறு தளங்களில் பெருமளவு போராடி வருகின்றனர். இப்படி உலகமே ஆட்டம் கண்டுள்ள நிலையில், நேட்டோ நாடுகளில் உள்ள பல ஆளும் வர்க்க பிரிவேகூட இப்போது இரசியா மீதான பொருளாதார தடைகளின் தோல்விகளை விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர். அவர்கள் வரலாற்று ரீதியாக இந்தப் பொருளாதாரத் தடைகளைக் கொண்டு தனது உலக ஒழுங்கமைவிற்கு வெற்றியை அளித்து வந்தது. ஆனால் இப்போது பெரும் தோல்வியடைந்து வருவதாக அல்லது பின்னடைந்து வருவதாக விமர்சித்து வருகின்றனர். தற்போதைய நேட்டோ தலைமையிலான ஒழுங்கமைவின் பலவீனம் கண்கூடாக மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் அந்த இடத்தைப் பிடிக்க இரசிய-சீன முகாம் கடுமையாக முயற்சித்து வருகிறது. உலக ஜனநாயகத்திற்கும் சுதந்திரத்திற்கும் கடும் அச்சுறுத்தலாக இருந்துவந்த அமெரிக்க நேட்டோ முகாமின் பாத்திரத்தை சம பலத்துடனும் அச்சுறுத்தலாகவும் மாறியிருக்கிறது இரசிய-சீன முகாம். ஏகாதிபத்திய நாடுகளை தவிர்த்து மற்ற உலக நாடுகள் இந்த ஏகாதிபத்திய முகாம்களுக்குள் நடக்கும் போட்டியிலிருந்தும், ஆதிக்கத்திலிருந்தும் விலகி நின்று தங்கள் இறையாண்மைக்கும், வளர்ச்சிக்கும் வழிகோல மூன்றாம் உலக நாடுகளுக்கிடையில் முன்பிருந்ததைப் போல அணிசேராக் கூட்டணியை ஏற்படுத்தி தற்காத்துக்கொள்வதுதான் இன்றுள்ள ஒரே வழி! அனைத்து நாடுகளுக்கும் உழைக்கும் மக்களுக்கு விடிவு என்பது உள்நாட்டு புரட்சியே தீர்வு என்று கூறுகிறார் லெனின்.  

 

 

சான்றாதாரம்

https://www.aljazeera.com/news/2022/7/7/inflation-pushed-71m-people-into-poverty-since-ukraine-war-undp#:~:text=It%20estimated%20that%2051.6%20million,line%20of%20%243.20%20a%20day.

https://www.statista.com/chart/27278/military-aid-to-ukraine-by-country/

https://www.fraugster.com/resources/post/russia-sanctions-peps-lists-require-new-tools-for-compliance

https://www.reddit.com/r/dataisbeautiful/comments/v9esnz/inflation_in_g7_countries_oc/

https://www.theguardian.com/commentisfree/2022/jul/29/putin-ruble-west-sanctions-russia-europe

https://news.un.org/en/story/2022/07/1123342

https://www.timesofisrael.com/russia-doing-better-than-expected-despite-sanctions-says-imf/

https://www.indiatoday.in/world/story/europe-on-energy-saving-mode-as-russian-gas-dries-up-1983528-2022-08-04