உலக மறுபங்கீட்டிற்கான பனிப்போரை தீவிரப்படுத்தும் குவாட்-ன் ஆறாவது உச்சி மாநாடு
செந்தளம்
சென்ற வாரம் சனிக்கிழமையன்று, (செப்-21) அமெரிக்காவின் டெலாவர் மாகானத்திலுள்ள வில்மிங்டன் எனும் துறைமுக நகரத்தில் குவாட் கூட்டமைப்பின் ஆறாவது உச்சி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அமெரிக்க அதிபருக்கான தேர்தல் வரவிருக்கிற சமயத்தில் பைடன் தலைமையில் அவரின் சொந்த ஊரான வில்மிங்டனில் இந்த மாநாடு நடந்துள்ளது. சென்றமுறை, ஜப்பான் பிரதமர் கிஷிடோவின் சொந்த ஊரான ஹிரோஷிமாவில் குவாட்-ன் ஐந்தாவது உச்சி மாநாடு நடந்துள்ளது. பைடனைப் போல் கிஷிடோவிற்கும் இந்தாண்டோடு பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. குவாட் கூட்டமைப்பு தொடருமா அல்லது சீன ஏகாதிபத்தியம் சொல்வது போல கடல் நுரைப்போல கரைந்துவிடுமா என்று சர்வதேசிய அரசியல் நிபுணர்கள் ஒருபக்கம் விவாதித்து வருகின்றனர். ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணு குண்டு தாக்குதலை மறவாத ஜப்பானிய மக்கள் குவாட் உச்சி மாநாடிற்கு எதிராக சென்றாண்டு போராட்டம் நடத்தியதையும் நாம் செய்திகளில் பார்த்திருப்போம். இதுபோல், உலகெங்கிலும் உள்ள மக்கள் அனைவரும் வீதியிலிறங்கி ஏகாதிபத்திய போர்களுக்கு எதிராக போராடி வருவதையும் செய்திகளில் பார்க்கும் போது, மக்கள் போரை விரும்பவில்லை, ஏகாதிபத்தியங்களும், அவற்றின் அடிவருடிகளுமே போரை விரும்புகின்றனர் என்பதை நம்மால் விளங்கிக் கொள்ள முடியும்.
அமெரிக்கா சொல்வது என்ன?
இந்தியா மீது இறுகும் அமெரிக்காவின் புதிய-காலனிய ஆதிக்கம்
“கடல் நுரையைப் போல் குவாட் கூட்டமைப்பு காணாமல் போய்விடும் என்று எங்களைப் பார்த்து சொன்னார்கள், இதோ இன்றும் எங்கள் கூட்டணி தொடர்கிறது, எங்கள் கூட்டணி ஆழப்பட்டுள்ளது” என்று எக்காளமிட்டுச் சொல்லியுள்ளார் பைடன். “எத்தனை சவால்கள் வந்தாலும், உலகில் எவ்வளவு மாற்றங்கள் வந்தாலும், குவாட் கூட்டமைப்பு தொடர்ந்து செயல்படும்” என்கிறார் பைடன்.
குவாட் நாடுகளுக்கு இடையிலான உறவு வலுவடைந்துள்ளதோ இல்லையோ இந்திய அமெரிக்காவிற்கு இடையிலான ஏகாதிபத்திய-அடிமை உறவு மேன்மேலும் ஆழமடைந்துள்ளதாக தெரிய வருகிறது. குவாட் மாநாட்டில் பங்கேற்பதற்கு சென்ற மோடி, கார்ப்பரேட் CEOக்களுடன் வட்டமேசை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். எதிர்காலத்திற்கான மாநாடு(SOF) என்ற பெயரில் ஐ.நா. ஏற்பாடு செய்திருந்த மாநாட்டிலும் கலந்து கொண்டுள்ளார். அதேபோல், ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடன் முக்கியமான இருதரப்பு கூட்டங்களிலும் பங்கேற்றுள்ளதாக செய்திகள் வந்திருக்கின்றன.
சுகாதார உதவி, மருத்துவ உதவி என்ற பெயரில் அமெரிக்காவின் ஆதிக்கம்:
ஏற்கனவே சீனா சுகாதார பட்டுச்சாலை(Health Silk Road) திட்டத்தின் வாயிலாக பல்வேறு ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளின் சுகாதாரத் துறையை தனது பிடியின் கீழ் கொண்டு வந்திருந்தது. இதன் உச்சக்கட்டமாகத்தான் கொரோனா பெருந்தொற்று காலத்தில் சீனாவில் தயாரிக்கப்பட்ட Sinovac மற்றும் Sinopharm தடுப்பு மருந்துகளை 83 நாடுகளுக்கு மேல் விற்பனை செய்தது. அதோடு கூடவே, மேற்குலக நாடுகள் மூலமாக வழங்கப்பட்டு வந்த தடுப்பு மருந்துகளை எக்காரணம் கொண்டு வாங்கக் கூடாது என்ற வஞ்சகமான ஒப்பந்தமும் சீனா செய்து கொண்டது. கொரோனா காலத்தில், இந்திய மக்களின் வரிப்பணத்தில் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்யும் நிலைக்கு மோடி கும்பல் தள்ளப்பட்டதற்கு அமெரிக்க –சீன போட்டியே காரணமாக இருந்திருக்கிறது. அதாவது, மோடி ஆட்சியின் தடுப்பூசி ஏற்றுமதி குவாட் ஆணைகளின் ஒரு அம்சமே. இப்போது, இந்தியா தடுப்பு மருந்துகளை ஏற்றுமதி செய்வதற்கும் இதே போட்டிதான் காரணம். மேலும், கருப்பை வாய் புற்றுநோய்க்கான மருந்துகளை வழங்கும் வேலையையும் சீனா 2022-ம் ஆண்டிலே துவங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேற்கண்ட சீனாவின் ஆதிக்க நிலையை சமாளிப்பதற்குத்தான், முதற்கட்டமாக, கருப்பை வாய் புற்றுநோய் ஒழிப்பதில் கவனம் செலுத்தப் போவதாக வில்மிங்டன் மாநாட்டில் கூறியுள்ளனர். குவாட் புற்றுநோய் ஒழிப்புக்கான இலட்சியத் திட்டம்(Quad Cancer Moonshot) என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதோடு, பால்வினை பாபில்லோமா வைரஸை(HPV) கண்டறிவதற்கான கருவிகள், கருப்பை வாய் புற்று நோய்க்கான தடுப்பு மருந்துகளை வழங்குவதற்கு இந்தியா மட்டும் 7.5 மில்லியன் டாலர்கள் நிதி தருவதாக ஒப்புக்கொண்டுள்ளது. அதேபோல, ஐந்து ஆண்டு காலத்திற்குள் குறைந்தபட்சம் 1.58 பில்லியன் டாலர்கள் தருவதாக அமெரிக்கா முன்பே ஒப்புக் கொண்டிருந்தது.
சோலார் மின் திட்டங்களில் டாட்டாவை குவாட் நலனிற்காக தயார்படுத்தும் அமெரிக்கா:
பிஜி, கொமோரோஸ், மடகாஸ்கர், செசல்ஸ் போன்ற தீவு நாடுகளில் 2 மில்லியன் டாலர்கள் செலவில் புதிய சோலார் மின் திட்டங்களை துவங்குவதற்கு குவாட் மாநாட்டில் இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது. குவாட் மாநாட்டில் மட்டுமல்ல, எங்கும் எப்போதும் இந்தியா என்பது இந்திய தரகுப் பெரு முதலாளி வர்க்கத்தையே உருவகப்படுத்துகிறது என்பதற்கு பின்வரும் ஒப்பந்தமே அத்தாட்சி.
இந்திய தரகுப் பெரு முதலாளியான டாட்டா குழுமத்தின் நிறுவனங்களுள் ஒன்றான Tata Power Solar என்ற நிறுவனத்திற்கு 250 மில்லியன் அமெரிக்க டாலர்களை கடனாக தருவதாக பைடன் கூறியுள்ளார். இதன்படி, சோலார் மின்கலங்கள்(Solar Cell) தயாரிப்பதற்கான ஆலை இந்தியாவில் நிறுவப்படும் என்கிறார்கள். இதோடு, சோலார் மின்தகடு(Solar Module) தயாரிப்பதற்கான ஆலையை இந்தியாவில் நிறுவுவதற்கு 500 மில்லியன் டாலர் அளவிலான நிதியை First Solar என்ற அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனத்திற்கு கடனாக தருவதற்கும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. சோலார் மின்தகட்டின் ஒரு பகுதியே சோலார் மின்கலம் என்பது கவனிக்கத்தக்கது. அதன்படி, டாட்டா அமெரிக்க கம்பனிக்கு ஒரு பகுதியை மட்டுமே தயாரித்து தரவிருக்கிறார்.
காலநிலை மாற்றம், சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிசக்தி உற்பத்தி என்ற பெயரில் சீன ஆதிக்கத்திற்கு சவால்விடும் குவாட்:
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அரசுத், தனியார் நிறுவனங்கள் மூலமாக சுற்றுச்சூழலுக்கு உகந்த, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை துவங்குவதற்கு வேண்டிய மானியங்களையும், கடன்களையும் வழங்குவதற்கு 122 மில்லியன் டாலர்கள் தருவதாக ஜப்பான் ஒப்புக் கொண்டுள்ளது.
இன்றியமையாத எரிசக்தி தேவைகளுக்கு ரஷ்ய-சீன ஏகாதிபத்திய முகாமை மட்டுமே சார்ந்திருக்கும் நிலையை தவிர்ப்பதற்காக ஆஸ்திரேலியாவும் ஒரு மூலதன ஏற்றுமதி திட்டத்தை வருகிற நவம்பர் முதல் துவக்க இருப்பதாக அறிவித்துள்ளது. சோலார் தகடுகள், ஹைட்ரஜன் எரிபொருள், மின்கலங்களை தயாரிப்பதில் சீன முகாம் அல்லாத பிற நாடுகளின் மூலதனத்தையும் சார்ந்து நிற்கும் வகையில் குவாட் தூய எரிசக்தி விநியோக சங்கிலி பரவலாக்க திட்டம்(Quad Clean Energy Supply Chains Diversification Program) என்ற பெயரில் ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது. சோலார் தகடுகள், மின்கலங்கள் சந்தையில் 80 சதவீதம் சீனாவின் பிடியில் இருப்பதையும் இதோடு ஒப்புநோக்கத்தக்கது.
ஏகாதிபத்திய அடிவருடிகளை தயார்படுத்தும் இந்தியாவின் கல்வி உதவித் தொகை திட்டம்:
இந்திய அரசின் நிதியுதவியின் கீழ் இயங்கும் உயர்தரமான கல்வி நிறுவனங்களில் 4 ஆண்டுகால இளநிலை பொறியியல் கல்வி பெறுவதற்கு 4 கோடி ரூபாய் செலவில் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை சேர்ந்த 50 பேருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப் போவதாக இந்தியா அறிவித்துள்ளது. இதன்மூலம், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தெற்காசிய மறுபங்கீட்டு நலனிற்கு சேவை செய்யக்கூடிய அறிவுஜீவிகளை இந்தியா மக்களின் வரிப்பணத்தில் தயார் செய்வதற்கு மோடி ஒப்புதல் அளித்துள்ளார்.
சீனாவும் இதுபோன்று பல்வேறு கல்வி உதவித் தொகைத் திட்டங்களை வழங்கி வருகிறது. உதாரணத்திற்கு, 2020-ல் ASEAN-China Young Leaders Scholarship (ACYLS) திட்டத்தின் மூலம் மட்டும் ஆசியான் நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை திட்டங்களை சீனா வழங்கி வருகிறது. ஆமெரிக்கா தலைமையில் முன்னெடுக்கப்படும் சீனாவிற்கு எதிரான கருத்தியல் ரீதியிலான பிரச்சாரங்களை முறியடிப்பதற்காக இதுபோன்ற கல்வி உதவித் தொகைத் திட்டங்கள் மூலம் நன்னம்பிக்கையை விதைப்பதற்கு சீனா முயற்சிப்பதோடு, தனக்கு வேண்டிய அடிவருடிகளையும் இதன்மூலம் பொறுக்கியெடுத்துக் கொள்கிறது. அப்படித்தான் தற்போது இந்தியா வழங்கும் குவாட் கல்வி உதவித் தொகை மூலமாக அமெரிக்கா தனக்கு வேண்டிய அடிவருடிகளை தயாரிக்கப் போவதாக அறிவித்துள்ளது.
கடற்பரப்பில் சீனாவின் ஆதிக்கத்திற்கு எதிரான அமெரிக்காவின் ஆதிக்கம்:
90 சதவீத தென் சீனக் கடலும் சீனாவிற்கே சொந்தம் என்கிற சீனாவின் Nine-dash line எல்லைக் கோட்டை ஐ.நா.வின் கடல்வழிக்கான சர்வதேச சட்ட தீர்ப்பாயம் 2016-ம் ஆண்டின் போதே நிராகரித்திருந்தது. இவை எதையும் ஏற்காமல், கடலோர ரோந்துக் கப்பல்களின் எண்ணிக்கையை அதிப்படுத்துவது, தீவுகளை உருவாக்குவதோடு அவற்றை இராணுவத் தேவைக்காக பயன்படுத்தும் நோக்கில் மாற்றுவது, பிலிப்பைன்ஸ் இந்தோனேசியா போன்ற நாடுகளின் கடல்வழி உரிமைகளை மறுத்து அடாவடியில் ஈடுபடுவதன் மூலம் அந்நாடுகளின் ஆளும் வர்க்கங்களை அச்சுறுத்தி வருவது உலகறிந்த செய்தியாக இருக்கிறது. இதற்கு போட்டியாகத்தான், அடுத்தாண்டு முதல் இந்தியா உள்ளிட்ட குவாட் கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் கடலோர காவல்படை வீரர்கள் இனி அமெரிக்காவின் ரோந்து கப்பலில் குறிப்பிட்ட நேரம் பணியாற்றும் வகையில் ஒரு திட்டத்தை(Quad-at-Sea Ship Observer Mission) அறிவித்துள்ளனர்.
இத்திட்டத்திற்கு வேண்டிய ஆட்களுக்கு தனிப் பயிற்சி கொடுக்கும் வகையில் அதாவது, அமெரிக்கா வகுத்தளிக்கும் விதிகளுக்குட்பட்டு கடல்வழிகளை கண்காணிப்பது, கடல்பரப்பை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது, அமெரிக்கா கட்டளையிடும் கடல் சட்டங்களை செயல்படுத்துவது என்பது மட்டுமல்லாது, இந்த சட்ட விதிகளுக்கு புறம்பாக எந்தவொரு நடவடிக்கையையும் முறியடிப்பது பற்றிய சிறப்பு பயிற்சிகளை வழங்குவதற்கு MAITRI (Maritime Initiative for Training in the Indo-Pacific) என்ற திட்டமும் இந்தாண்டே துவங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இராணுவ மற்றும் இராணுவம் அல்லாத பணிகளுக்கான நகர்திறனையும், இயங்கு திறனையும் துரிதப்படுத்துவதற்காக குவாட் இந்தோ-பசிபிக் லாஜிஸ்டிக்ஸ் நெட்வொர்க் (Quad Indo-Pacific Logistics Network) உருவாக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளனர். இது நேரடியாக சீனாவின் BRI என்னும் பொருளாதார வழித்தடத் திட்டத்திற்கு சவால் விடுவதாக இருக்கிறது என்று வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால், குவாட் நாடுகளோ இதை பேரிடர் காலங்களில் மக்களின் மீட்புப் பணிக்காகவும் பயன்படுத்துவோம் என்று மனிதாபிமான சாயம் பூசப் பார்க்கிறார்கள். 2021-ல் இந்தியப் பெருங்கடலை ஒட்டி கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள டிஜிபைத்தியில் சீனா ஒரு இராணுவத் தளத்தை கட்டியமைத்துள்ளது. இந்தியாவில், உலக வங்கி மூலமாக அமெரிக்க தலைமையிலான ஏகபோக கார்ப்பரேட்டுகள் ஸ்மார்ட் சிட்டிகளை உருவாக்குவது போல, சீனாவும் பாகிஸ்தானில் ஸ்மார்ட் சிட்டிகளை உருவாக்கி வருகிறது. ஆப்பிரிக்காவில் பாதுகாப்பு நகரங்களை(safe city) உருவாக்கியுள்ளது. சீனா இரண்டாவது இராணுவ தளம் அமைப்பதற்கும் தீவிரம் காட்டி வருகிற நிலையில், எவ்வளவுதான் குவாட் கூட்டமைப்பு இராணுவ கூட்டணி அல்ல, ஆசியாவின் நேட்டோ அல்ல என்று பூசி மொழுகி வந்தாலும், தவிர்க்கமுடியாமல் இது ஆசிய நேட்டோவாகவே செயல்படும் நிலைக்கு இன்று வந்து நிற்கிறது என்பதே உண்மை.
புதிய தலைமுறை தொழில்நுட்பங்களிலும் ஆதிக்கத்திற்கான போட்டி
60-க்கும் மேற்பட்ட நாடுகளில் சீனாவின் ஹூவாய் நிறுவனம் 5ஜி சேவைக்கான ஒப்பந்தத்தை கைப்பற்றியுள்ளது. டிஜிட்டல் சாலை திட்டம்(Digital Silk Road) மூலமாக தரவு மையங்கள் மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருவதாகச் சொல்லி மின்னணு வடிவிலும் சீனாவின் ஆதிக்கம் ஒருபுறம் வளர்ந்து வருகிறது. இதன் உச்சமாக 2020ல் தரவு பாதுகாப்பிற்காக உலகளாவிய முன்னெடுப்பு(Global Initiative On Data Security) என்ற யோசனையை சீனா முன்மொழிந்தது. சீனத் தயாரிப்புகளுக்கு ஏற்ற தரநிலைகளை சர்வதேச தொழில்நுட்ப தரநிலைகளாக மாற்றியமைப்பதற்காகவே சீனா இத்திட்டத்தை முன்மொழிந்திருப்பதாக அமெரிக்கா அப்போது குற்றம்சாட்டியது. அதைதொடர்ந்துதான், அமெரிக்காவின் சீன செல்போன் செயலிகள் ஆபத்தானவை என்ற பிரச்சாரத்தை ஊதிப் பெருக்கி இந்தியா உட்பட அமெரிக்காவின் செல்வாக்கின் கீழ் உள்ள உலக நாடுகளிடம் கூறி சீன செயலிகளுக்கு தடை விதிப்பதற்கு அடிகோலியது. இதன் தொடர்ச்சியாக சமீபத்திய குவாட் மாநாட்டில் டிராக் 1.5 பேச்சுவார்த்தை குழுவை அமைக்கப் போவதாக அறிவித்துள்ளனர். டிராக் 1-ல் அரசாங்கத்தை சேர்ந்தவர்களும், டிராக் 2-ல் தொழில் அதிபர்கள், வல்லுநர்கள், தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் இடம்பெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஒருகிணைந்து செயல்படுவதற்காகவே டிராக் 1.5 எனும் கூட்டு பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்படுவதாக கூறுகின்றனர். அப்பட்டமாக இது நிதி மூலதன கும்பல்களின் மறுபங்கீட்டிற்கான போட்டி என்பதையே இந்த ஏற்பாடு அம்பலப்படுத்துகிறது. இவர்களின் முதன்மையான வேலை சர்வதேச அளவில் அமெரிக்கா சொல்லக்கூடிய தரநிலையை சீனா உள்ளிட்ட உலக நாடுகளை ஏற்கச் செய்ய வேண்டும் என்பதாகவே இருக்கிறது. உதாரணத்திற்கு, வேகமாக வளர்ந்து வரும் AI தொழில்நுட்பம், 5ஜி, அதிநவீன தகவல் தொடர்பு சாதனங்கள் என பல துறைகளிலும் அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு துணை செய்வதற்காகவே ஒரு பணிக்குழுவையும்(Standards Sub-Group) இந்த குவாட் மாநட்டில் உருவாக்கியுள்ளனர்.
தொலைத்தொடர்பு சந்தையில் ஆதிக்கத்திற்கான போட்டி
அமெரிக்க சார்பு கார்ப்பரேட்களை விட லாபகரமான விலையில் வன்பொருள் முதல் மென்பொருள் வரையுள்ள அனைத்தையும் தங்களிடம் பெற்றுக்கொள்ளலாம், அதற்கான கடனையும் சீன வங்கிகள் ஏற்பாடு செய்து தரும் என்று சொல்லி ஹூவாய், ZTE நிறுவனங்கள் பல்வேறு நாடுகளின் சந்தையை கைப்பற்றிவிட்டன. முழு ஒப்பந்தம்(Turnkey Solutions) என்ற பெயரில் முழுமையாக தென்கிழக்கு ஆசிய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள், லத்தீன் அமெரிக்க நாடுகளில் தனது BRI திட்டத்தின் மூலமாக சீனா தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்தி வருகிறது. தென் ஆப்பிரிக்கா, பிரேசில், மலேசியா போன்ற நாடுகள் நேரடியாகவே அமெரிக்காவின் அழுத்தங்களை சந்தித்த போதும், சீனாவின் 5ஜி சேவையையே முழுமையாக பயன்படுத்தி வருகிறது.
இதற்கு எதிராகத்தான் அமெரிக்கா தலைமையிலான குவாட் கூட்டமைப்பு இந்த வில்மிங்டன் மாநாட்டில் Open RAN(Radio Access Network) என்ற தொலைத்தொடர்பு வலைப்பின்னலை அறிமுகப்படுத்தியுள்ளது. தொலைத்தொடர்பு சேவைகளை வழங்க வேண்டும் எனில் குறிப்பிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களிடம் மட்டுமே அதற்குரிய வன்பொருள்களையும், மென்பொருள்களையும் கொள்முதல் செய்யும் நிலையிருந்தது. அதாவது, நாம் பயன்படுத்தும் ஜியோ சேவைக்கு வேண்டிய வன்பொருள்கள்(செல்போன் கோபுரங்கள்), இதை இயக்குவதற்கு வேண்டிய மென்பொருள்களை ஹூவாய், நோக்கியா, எரிக்சன் உட்பட பல்வேறு பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இதில், தற்போது, ஹூவாய் நிறுவனத்தின் ஆதிக்கம் அதிகமாகி வருவதை எதிர்ப்பதற்காகவே அமெரிக்கா தற்போது திறந்தநிலை அலைபரப்பு சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, இவர்களின் அலைபரப்பு சேவை எந்தவொரு வன்பொருள், மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்தோடும் ஒத்திசைந்து இயங்கும் வகையில் ஒரு திறந்தநிலை தரக்கட்டுப்பாடுகள் கொண்டு உருவாக்கியிருப்பதாக அமெரிக்கா விளம்பரப்படுத்தி வருகிறது. இதை ஆசியா முழுவதும் கொண்டு செல்வதற்கு தனியாக ஒரு நிறுவனத்தையே அமெரிக்கா உருவாக்கியிருக்கிறது. ஆசிய ஒபன் ரான் அகாடமி(AORA- Asia Open RAN Academy) என்பதை 7 மில்லியன் டாலர்கள் முதலீட்டில் அமெரிக்கா துவக்கியுள்ளதோடு, இதன் ஊழியர்களுக்கு வேண்டிய பயிற்சி திறன்களை வழங்குவதாக இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. துவாலு டெலி கம்யூனிக்கேசன்ஸ்(Tuvalu telecommunications) என்ற கார்ப்பரேட் நிறுவனத்தின் மூலமாக குவாட் கூட்டமைப்பு நாடுகள் 5ஜி சேவையை சீன ஆதிக்கத்திற்கு எதிராக களமிறக்கி யிருப்பதாகவும் வில்மிங்டன் மாநாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குவாட் நாடுகளில் உள்ள இயற்கை வளங்கள் குறித்து ஆய்வதற்கும், வகைதொகை செய்து சேகரிப்பதற்கும் Bio Explore Initiative என்ற முன்னெடுப்பு துவங்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். முதற்கட்டமாக இதற்கு 2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
குவாட் கூட்டமைப்பு என்பது ‘நன்மைக்கான சர்வதேச சக்தி’ என்று மோடி மெய்சிலிர்க்க பேசியுள்ளார். மேற்கண்ட செய்திகள், அமெரிக்கா ஏகாதிபத்தியத்தின் மறுபங்கீட்டு நன்மைக்கான சர்வதேச சக்தி என்பதையே நிரூபிக்கிறது.
- செந்தளம்