காஷ்மீர் தேசிய இனப்பிரச்சினை குறித்து ஏஎம்கே

ஏஎம்கே தேர்வு நூல்கள்

காஷ்மீர் தேசிய இனப்பிரச்சினை குறித்து ஏஎம்கே

காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டமும் இந்தியா-பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையில் போர் மூளும் அபாயமும்

 

காஷ்மீர் மக்களின் தனி நாட்டிற்கான போராட்டம் காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் காட்டுத்தீபோல் பரவியிருக்கிறது. பாகிஸ்தான் அரசும் அதன் ஊடுருவல்காரர்களும் தூண்டிவிட்டு காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைத்துக் கொள்வதற்கான ஒரு போராட்டம் என இதை இந்திய அரசும், ஆளும் வர்க்கமும் சித்தரிக்கின்றன. நமது காஷ்மீர் சகோதரர்கள் எதற்காகப் போராடுகிறார்கள் என்பதை இந்திய மக்கள் அறியாமல் இருக்கும் பொருட்டு காஷ்மீர் மக்களின் இயக்கத்தைப் பற்றிய அனைத்துச் செய்திகளையும் இருட்டடிப்புச் செய்கின்றனர். காஷ்மீரைக் கைப்பற்றுவதற்கு 1947ல் சென்ற படைகள் அங்கிருந்து திரும்பப் பெறப்படாதது மட்டுமல்லாமல் அண்மைக்காலத்தில் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் வலுவடைந்தவுடன் மேலும் படைகள் குவிக்கப்பட்டன. அங்கு ஒரு சுத்தமான இராணுவ ராஜ்ஜியம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த இராணுவ அரசு, காஷ்மீரில் என்ன நடக்கிறது என்பதை, ஆய்ந்தறியும் எந்தவொரு இந்தியனையும் அங்கே சென்று சுதந்திரமாகச் செய்திகளைச் சேகரிக்கும் வாய்ப்புகளுக்கு அனுமதி மறுக்கிறது. இத்தகைய சூழலில் நமது காஷ்மீர் சகோதரர்கள் என்ன நோக்கத்தையும், லட்சியத்தையும் அடைவதற்காகப் போராடுகிறார்கள் என்ற உண்மையை நமது இந்திய மக்கள் அறிவது கடினமானதாக உள்ளது.

ஆசாத் காஷ்மீர்

காஷ்மீரிலுள்ள பெரும்பான்மையான மக்களும், மக்கள் செல்வாக்குப் பெற்ற அமைப்புகளும் தனி நாட்டிற்காகவும், சுதந்திரத்திற்காகவுமே போராடுகின்றன. பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியையும், இந்தியாவின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியையும் ஒன்றிணைத்த ஆசாத் காஷ்மீரை அடைவதே அவர்கள் நோக்கமாக உள்ளது. காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைப்பது தங்கள் நோக்கமல்ல; அவ்வாறு இணைத்தால் காஷ்மீர் மக்களின் சுதந்திரம் பறிபோய்விடும் எனக் கருதுகிறார்கள். அம்மாநிலத்தில் இந்துக்களும், முஸ்லீம்களும் 40 ஆண்டுகளாக ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு இந்து-முஸ்லீம் ஒற்றுமையைக் காத்து வந்திருப்பது உலகம் முழுவதற்கும் ஒரு புகழ்மிக்க உதாரணமாகும் என அவர்கள் பெருமிதத்துடன் கூறிக் கொள்கின்றனர். காஷ்மீர் மக்களில் பெரும்பான்மையோர் முஸ்லீம்களாக இருப்பதால் தாங்கள் அமைக்க விரும்புகின்ற அரசு ஒரு முஸ்லீம் அரசாக இருப்பினும், அது பாகிஸ்தானோடு இணைந்த அரசாக இருக்காது எனக் கூறுகின்றனர். தாங்கள் இஸ்லாமியர்கள் என்றும், இந்துக்கள், சீக்கியர்கள் அல்லது கிறிஸ்துவர்களுக்கு எதிரானவர்கள் அல்ல எனக் கூறுகின்றனர். "நாங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் இந்திய அரசுக்கு (ஏகாதிபத்தியத்துக்கு) எதிரானவர்கள் என்பதை உங்கள் மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்" என ஒரு போராளி இயக்கத்தின் தலைவர் ஒரு பத்திரிகை செய்தியாளரிடம் கூறினார். "உங்கள் செயல்களால் இந்திய நாட்டின் பிற பகுதிகளிலுள்ள முஸ்லீம்களுக்கு பாதிப்பு ஏற்படாதா?" என்று கேட்டபோது, "அது உங்கள் பிரச்சினை; எங்கள் பிரச்சினையல்ல. அந்நாட்டு முஸ்லீம்கள் வேறுபட்டவர்கள். அவர்கள் இந்தியாவைச் சேர்த்தவர்கள். ரஷ்யாவிலுள்ள முஸ்லீம்களுக்குள்ள பிரச்சினையும், ஆப்கானிஸ்தானிலுள்ள முஸ்லீம்களுக்குள்ள பிரச்சனையும் எவ்வாறு அந்தந்த நாட்டுப் பிரச்சினையாக இருக்கிறதோ, அதைப்போன்றே இந்திய முஸ்லீம்களின் பிரச்சினையும் இந்தியாவின் பிரச்சினையாகும் - அது எங்கள் பிரச்சினை அல்ல" என ஒரு போராளி இயக்கத்தின் தலைவர் செய்தியாளரிடம் பதிலளித்துள்ளார். நிலைமைகள் இவ்வாறு இருக்கும்போது காஷ்மீர் பிரச்சினையை ஒரு மதப்பிரச்சினையாக இந்திய ஆட்சியாளர்கள் சித்தரிக்கின்றனர். இதன் மூலம் காஷ்மீர் தேசிய இனப் பிரச்சினையைச் சிறுமைப்படுத்துகின்றனர். இந்திய மக்கள் அனைவரையும் காஷ்மீர் மக்களுக்கு எதிராகத் திருப்பிவிட முயலுகின்றனர். காஷ்மீரில் போராடும் சில அமைப்புகள் முஸ்லீம் அடிப்படை மதவாதத்தால் உந்தப்பட்டுள்ளதும் அவற்றில் சில பாகிஸ்தான் ஆட்சியாளர்களுடன் நெருக்கமாக இருப்பதும் உண்மையே. இந்த அமைப்புகள் ஒரு பொதுவான தத்துவத்தாலும், திட்டத்தாலும் இணைக்கப்படாவிட்டாலும் 'காஷ்மீர் அடைவது' என்பதில் ஒன்றுபட்டுள்ளன. இன்று காஷ்மீர் இயக்கத்திற்கு உந்து சக்தியாக இருப்பது மதவாதமல்ல; அதற்கு மாறாக பிரிவினை நோக்கமே அடிப்படையாக அமைந்துள்ளது.

காஷ்மீர் மாநிலத்தில் ஏறக்குறைய 30 போராளி அமைப்புகள் உள்ளன. அவற்றில் பத்து அமைப்புகளே மதவாதக் கருத்துக்களுக்கு ஆதரவாக இருக்கின்றன. காஷ்மீர் விடுதலை முன்னணி, ஹில்புல் முஜா, மக்கள் லீக் போன்ற மூன்று அமைப்புகள் மக்கள் செல்வாக்கு பெற்றவையாகும். காஷ்மீர் விடுதலை முன்னணி, இந்தியா-பாகிஸ்தான் ஆகியவைகளின் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரை இணைத்த தனிநாட்டிற்காகப் போராடுகிறது. ஹில்புல் முஜா இஸ்லாமிய அரசு ஒன்றை அமைப்பதை தன் நோக்கமாகக் கொண்டுள்ளது. மக்கள் லீக் பாகிஸ்தான் ஆதரவோடு துவக்கப்பட்டது. போராளி அமைப்புகள் பல்வேறு இலக்குகளை கொண்டவை. எனினும் காஷ்மீர் சுயநிர்ணய உரிமை அடைவதில் ஒன்றுபட்டிருக்கின்றன. இவ்வமைப்புகள் அல்லாமல் 80 சதம் பெண்களின் ஆதரவைப் பெற்ற டக்டரேனி-மிலாத் என்ற அமைப்பும் இயங்குகிறது. இவ்வமைப்பும் காஷ்மீர் பாகிஸ்தானோடு இணைவதை ஆதரிக்கவில்லை. தத்தம் கணவன் பிள்ளைகளையும் போராட்டத்தில் பங்கு கொள்வதற்கும், தலைமறைவுப் பணிகளை மேற்கொள்வதற்கும் ஆதரவாக இயங்குகிறது. இது ஆயுதந்தாங்கிய அமைப்பல்ல. ஆனால் ஆயுதப் போராட்டத்தை ஆதரிப்பதாகும். ஜம்மு-காஷ்மீர் மாணவர் விடுதலை முன்னனி என்ற மாணவர் அமைப்பும் இன்று தேசிய இனப் போராட்டத்தில் பங்கு கொள்கிறது. இவ்வாறு காஷ்மீர் மக்கள் பல்வேறு அமைப்புகளில் திரண்டு தேசிய இன விடுதலைக்காகப் போராடுகின்றனர்.

காஷ்மீரில் ரரணுவ ஆட்சி

பாசிச இராஜிவ் கும்பல் காஷ்மீரில் பெரும் படையைக் குவித்து ஒரு இராணுவ ஆட்சியை நடத்தி வந்தது. அதன் எடுபிடியான பரூக் அப்துல்லாவின் அரசாங்கம் மக்களிடம் தனிமைப்பட்டுப்போய் செயலற்று கிடந்தது. காஷ்மீரின் சுயநிர்ணய போராட்ட இயக்கத்தை ஒடுக்குவதற்காகப் பாசிச ராஜிவ் கும்பல் அரசு பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டது. அரசு பயங்கரவாதத்திற்கு இடையேதான் காஷ்மீரிலுள்ள போராளி அமைப்புகளும், மக்களும் தமது சுயநிர்ணய உரிமைக்கான இயககத்தைத் தொடர்ந்து நடத்தி வந்தனர். ராஜிவ் அரசாங்கத்தின் அந்திமக் காலத்திலிருந்து காஷ்மீர் சூழ்நிலை எவ்வாறு இருந்தது என்பதைத் தற்போதுள்ள உள்துறை அமைச்சர் முப்தி முகமத் சையத் நாடாளுமன்றத்தில் வைத்த அறிக்கையின் பின்வரும் பகுதியே தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

"காஷ்மீரில் 1988ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து நிலைமை சீர்கெடத் தொடங்கியது.

சமீபத்திய தேர்தல் ஏறத்தாழ முழுக்க புறக்கணிக்கப்பட்டதும், தீவிரவாதிகளுக்கு பொதுமக்கள் ஆதரவு அதிகரித்ததும் இதனை உறுதி செய்யும்.

பாரூக் அரசு ராஜினாமா செய்தபொழுது நிர்வாக எந்திரம் முழுக்கச் செயலிழந்து கிடந்தது. பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கு அமைப்புகளும் சீர்குலைந்து கிடந்தன.

மாநில அரசுக்கு மன உறுதியும், செயல்படும் திறனும் இல்லாதது போலத் தோன்றியது". (தினமணி 14-3-1990)

நிலைமைகள் இவ்வாறு இருக்கும்போது காஷ்மீரில் நடப்பதெல்லாம் ஏதோ பாகிஸ்தான் ஊடுருவல்காரர்களும், அதிருப்தி கொண்ட சில போராளி குழுக்களும் செய்கின்ற அராஜக செயல் மட்டுமே என்பது போலவும், காஷ்மீரின் சுயநிர்ணய உரிமைக்கு மக்களின் ஆகரவு இல்லாதது போலவும், இந்திய அரசும், ஆளும் வர்க்கங்களும், அரசியல் கட்சிகளும், செய்தித் தாள்களும், ஒரு எண்ணத்தை மக்கள் மத்தியில் பரப்ப முயற்சிக்கின்றன. காஷ்மீர் விடுதலை போராளிகள் அரசியல் கைதிகளாக வைக்கப்பட்டிருக்கும் தங்கள் தோழர்களை விடுவிக்கும் நோக்கத்திற்காக இந்திய அதிகார வர்க்கத்தினரைப் பணயக் கைதிகளாக வைத்துக் கொண்டு பேரம் பேசும் செய்திகளை மட்டுமே வெளியிட்டு அங்கு நடப்பதெல்லாம் வெறும் அராஜக செயல்கள் மட்டுமே நடைபெறுவதாக கூறுகின்றன. இந்தியப் பாசிசக் கும்பலின் தேசிய இன ஒடுக்குமுறையை எதிர்த்து காஷ்மீர் போராளி அமைப்புகளும் மக்களும் நடத்தும் ஆயுதந்தாங்கிய, அரசியல் மற்றும் வெகுசன போராட்டங்களையும் பண்பாட்டு நடவடிக்கைகளையும் அவற்றிற்கு மக்கள் அளிக்கும் பேராதரவையும் மூடிமறைக்கின்றன.

காஷ்மீர் போராளிகளின் போராட்ட நோக்கம்

காஷ்மீர் அரசு எந்திரத்தைச் செயல்படவிடாமல் அதை ஸ்தம்பிக்கச் செய்வதுதான் போராளிகள் இயக்கம் நடத்தும் போராட்டத்தின் நோக்கமாக உள்ளது. இப்போராட்டங்களில் அவர்கள் வெற்றி கண்டிருக்கின்றனர். காஷ்மீரிலுள்ள அனைத்து அரசாங்க நிறுவனங்களையும் திறந்து வைப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. அரசாங்க ஊழியர்கள் தங்கள் குடும்பங்களைக் காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு வெளியே வைத்துக் கொள்ள கோரப்படுகின்றனர். தொலைபேசி அலுவலகம் மற்றும் மின்சார அலுவலகங்களுக்குப் பணியாளர்கள் வருவதில்லை என்றும், நாளொன்றுக்கு ரூ.200/-சம்பளம் வழங்குவதாக அறிவித்தாலும் பணியாளர் வருவதில்லை என்றும் முதலாளித்துவ பத்திரிகைகளே தகவல் அளிக்கின்றன. காஷ்மீர் மக்களின் போராட்டத்தின் விளைவாக அரசு எந்திரம் செயலற்றுக் கிடக்கிறது என்பதை இச்செய்திகள் தெளிவாகக் காட்டவில்லையா?

மத்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள்  போன்றவைகளிலுள்ள பெயர் பலகைகளிலுள்ள 'இந்தியா', 'பாரதம்' போன்ற பெயர்ச் சொற்களை அகற்றுகிறார்கள். அனைத்தும் உருதுமொழியில் எழுத வேண்டும் எனக் கோருகிறார்கள் என செய்தித்தாள்கள் கூறுகின்றன. இவை அனைத்தும் இந்திய அரசின் தேசிய இன ஒடுக்குமுறையை எதிர்த்து காஷ்மீர் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்திற்கு மக்கள் அளிக்கும் ஆதரவைக் காட்டவில்லையா?

இராமாயணம், மகாபாரதம் போன்ற புராணக் கதைகள் இந்திய தொலைக்காட்சியில் காட்டப்படுவது இந்தியாவின் பண்பாட்டுத்துறை அக்கிரமிப்பு எனக் கருதி அவற்றைப் பார்க்கக்கூடாது என்று காஷ்மீரில் போராளி அமைப்புகளால் தடை செய்யப்படுகிறது. அதேபோன்று சாராய கடைகள், அழகுசாதன நிலையங்கள் ஆகியவைகளும் தடை செய்யப்படுகின்றன. மக்களும் இதை ஏற்றுக் கொள்கின்றனர். இத்தகைய பண்பாட்டுச் செயல்கள் எல்லாம் மக்கள் ஆதரவின்றி எவ்வாறு தடை செய்ய முடியும்? வன்முறைச் செயல்களுக்கு அஞ்சி தரப்படும் ஆதரவு என இந்திய ஆளும் வர்க்கம் கூறுகிறது. போராளிகளின் ஆயுத படையைக் காட்டிலும் பன்மடங்கு இந்தியப் படையைக் குவித்து அரசு பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டு இருக்கும்போது, இப்பெரும் படைக்கு அஞ்சாது அச்சிறுபடைக்கு ஆதரவு தருவதாகக் கூறுவது காஷ்மீர் மக்கள் சுயநிர்ணய உரிமை பிரச்சினைக்குப் பின்னால் ஆதரவாகத் திரண்டிருக்கின்றனர் என்பதை மூடி மறைப்பதற்காகச் சொல்லப்படும் வாதமே ஒழிய வேறொன்றுமல்ல.

மார்ச் 8ம் தேதியன்று சி.ஆர்.பி யைச் சேர்ந்தவர்கள் 8 பெண்களை கற்பழித்ததை எதிர்த்து மாதர் அமைப்பு ஆர்ப்பாட்டத்திற்கு அறைகூவல்விட்டது. 14ம் தேதி பல்லாயிரக்கணக்கான பெண்கள் அறைகூவலை ஏற்றுக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இம்மாதர் அமைப்பு முஸ்லீம் பெண்கள் பர்தா அணியவேண்டும் எனவும் இந்து பெண்கள் சேலை அணிந்து பொட்டு இட்டுக் கொள்ள வேண்டும் எனவும் கட்டுப்பாட்டை விதிக்கிறது. இக்கட்டுப்பாடு தேவையற்றது; எனினும் அவர் அவர்கள் மதப்படியே அணிய வேண்டும் என்பது, இந்து மதத்திற்கு எதிராக இல்லை என்பதை மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. இவ்வமைப்பால் பெண்கள் ஆசாத் காஷ்மீருக்கு ஆதரவாகத் திரட்டப்படுகிறார்கள்.

இவ்வாறு பெண்கள் உள்ளிட்டு அனைத்துப்பகுதி மக்களின் ஆதரவு பெற்ற இயக்கமாகக் காஷ்மீர் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் நடைபெறுகிறது.

வி.பி.சிங் அரசின் நிலைபாடு

பாசிச ராஜீவ் கும்பல் ஆட்சியிலிருந்தபோது மத்திய அரசாங்கத்தில் அனைத்து அதிகாரங்களையும் குவித்துக் கொள்ளும் கொள்கைகளையும் எதேச்சதிகார போக்குகளையும் வி.பி.சிங்கும், தேசிய முண்ணனியும் எதிர்த்து வந்தனர். ஆனால் வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி ஆட்சிக்கு வந்த பின்பு அரசாங்கத்தின் ஒடுக்குமுறை நிறுவன அமைப்பில் எவ்விதமான மாற்றத்தையும் செய்யவில்லை. போலித்தனமான மோதல்கள், கற்பழிப்புகள் தொடர்ந்தன. எந்த வித விசாரணையும் இன்றி காவல், சிறைத் தண்டனை தொடர்கிறது. அரசு எந்திரம் இராணுவ மயமாக்கப்பட்டுள்ளதில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்பதைக் ஏற்க மறுக்கின்றனர். அரசியல் சாசனத்தின்படியோ சட்டப்படியான ஆட்சி முறையின்படியோ செயல்பட வேண்டும் என்பதைக்கூட ஏற்றுக் கொள்ளவில்லை. வன்முறைக்குத் தூண்டுதலாக இருக்கக்கூடிய ஒடுக்குமுறையையும் கைவிடவில்லை. அரசாங்கத்தின் ஒடுக்குமுறையே இன்னும்கூட பிறரின் வன்முறைச் செயல்களுக்கு அடிப்படையாக இருக்கிறது. வி.பி.சிங் ஆட்சி வந்த பிறகும்கூட காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஸ்ரீநகர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவுகள் கால வரையறையின்றி நீடித்து வந்தது. இவ்வாறு ராஜீவ் கடைப்பிடித்த பாசிச ஒடுக்கு முறைகளையே வி.பி.சிங் அரசும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றது. எதற்கெடுத்தாலும் நல்லிணக்கம் காண அனைத்து கட்சிகளின் மாநாட்டை கூட்டும் வி.பி.சிங் அரசாங்கம், எப்பிரச்சினைக்கும் அரசியல் தீர்வு காணவேண்டும் என சொல்லும் வி.பி.சிங் அரசாங்கம் ஜம்மு காஷ்மீர் விடுதலை இயக்கப்பேராளிகளுடன் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என அறிவித்து இருக்கிறது. காஷ்மீர் சுயநிர்ணய உரிமை இயக்கத்தை ஒடுக்குவதற்கு ஒருபுறம் பொருளாதார சலுகைகளைத் தருவதும் மறுபுறம் போராளிகளுக்கு எதிராக அரசியல் திரட்டலைச் செய்தும், இராணுவ நடவடிக்கைகளை ஏவி விடுவதும் என்ற இந்திய அரசால் கடந்த 40 ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த அதே உளுத்துப்போன கொள்கைகளை வி.பி.சிங் அரசும் இப்போது புதிய முயற்சிகள் என்ற பெயரால் கடைப்பிடிக்கின்றது. இதற்கேற்ப ஒரு ஏழு அம்சத் திட்டத்தை முன் வைக்கிறது:

1. நாச சக்திகளை குறிப்பிட்ட காலத்திற்குள் ஒடுக்குவதற்கான ஜம்மு காஷ்மீரிலுள்ள அரசியல் கட்சிகள், மதச்சார்பற்ற சக்திகளிடையே ஒற்றுமையை ஊக்குவித்தல்;

2. காஷ்மீர் மக்களிடையே அமைப்பு ரீதியாக செல்வாக்குப் பெற்ற அரசியல் கட்சிகளை ஊக்குவித்தல்;

3. காஷ்மீரில் அரசியல் நடைமுறையை ஊக்குவிக்கத் தகுந்த திறன் உள்ள அமைப்புகளை கண்டறிதல்;

4. மக்கள் மத்தியில் கிளர்ச்சியைத் தோற்றுவிக்கும் அம்சங்களைக் கண்டறிந்து அவற்றை நீக்குவதற்கான நிர்வாக அரசியல் திட்டங்களை வகுத்தல்;

5. மக்களிடம் அபிப்பிராயத்தை உருவாக்கும் செல்வாக்குப் பெற்ற நபர்களையும், இளைஞர் தலைவர்களையும் கண்டறிந்து அவர்களை அரசியல் நடவடிக்கைக்கு ஈர்த்தல்;

6. இளைஞர்கள் மத்தியில் ஆதரவைப் பெற பிரச்சாரம் மேற்கொள்ளுதல்; காஷ்மீரின் முக்கிய மையங்களில் அனைத்துக் கட்சி இளைஞர்கள் மாநாடு நடத்துதல்;

7. இந்தியாவுக்கு எதிரான உணர்வுகளை பரப்பிவரும் பல்வேறு அமைப்புகளின் பலத்தை அரசியல் ரீதியாக மதிப்பிடுதல்; அதே நேரத்தில் பயங்கரவாதிகளின் செல்வாக்கை ஒழிக்க எத்தகைய அணுகுமுறையைக் கையாள்வது எந்த அளவுக்கு நிர்ப்பந்தம் தரலாம் என்பதைத் தீர்மானிக்க அடித்தள நிலையில் அரசியல் கட்சிகளின் பலத்தை மதிப்பிடுதல்;

இந்த ஏழு அம்ச திட்டத்தின் நோக்கம் என்னவென்றால் நாச சக்திகளைக் குறிப்பிட்ட காலத்திற்குள் ஒடுக்குவது என்ற பெயரால் காஷ்மீர் தேசிய விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தை இந்திய இராணுவம் பயங்கரவாத முறையில் நசுக்குவதற்கு-அரசு பயங்கரவாதத்திற்கு-ஆதரவாக அனைத்துச் சக்திகளையும் திரட்டுதல்; தேசிய இனப்பிரச்சினையை எதிர்த்து செயலிழந்துபோன சக்திகளுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் புத்துயிர் ஊட்ட முயற்சித்தல்; மக்கள் மத்தியில் கிளர்ச்சியைத் தோற்றுவிக்கும் அம்சங்களைக் கண்டறிந்து அவற்றை நீக்குவது என்ற பெயரால் தேசிய ஜனநாயக சக்திகளை நசுக்குதல்; இப்பாசிச அரசு பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு இளைஞர்கள் மத்தியில் ஆதரவு திரட்டுதல்; இந்தியாவுக்கு எதிரான உணர்வுகளை பரப்பிவரும் பல்வேறு அமைப்புகளின் பலத்தை மதிப்பீடு செய்வதும், அதே நேரத்தில் பயங்கரவாதிகளின் செல்வாக்கை ஒழிப்பது என்ற பெயரால் காஷ்மீர் பிரிவினைக்காகப் போராடும் அனைத்துச் சக்திகள் மீதும் பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விடுவதற்கு அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பிறசக்திகளின் ஆதரவு திரட்டல்; இராணுவ நடவடிக்கைக்கு ஆதரவாக ஐந்தாம் படையை திரட்டுதல் என்பனவேயாகும்.

எனவே வி.பி.சிங் அரசாங்கம் ராஜீவ் காந்தி அரசாங்கத்தைப் போலவே காஷ்மீர் தேசிய இனப்பிரச்சினையை அங்கீகரிக்க தயாராக இல்லை. காஷ்மீர் மக்கள் தங்கள் தலைவிதியை நிர்ணயித்துக் கொள்வதற்குக்கு 'கருத்தறியும் வாக்கெடுப்பு' மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்பதை மதிக்கவுமில்லை. அரசு பயங்கரவாதத்தின் மூலமாகக் காஷ்மீர் தேசிய இன உரிமைக்கான இயக்கத்தை ஒடுக்குவதற்காகவே அனைத்துக் கட்சிகளையும் தன் பின்னால் திரட்டுகின்றது என்பது தெளிவாகத் தெரிகின்றது.

அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோருவதற்காகப் போராளி அமைப்புகள் இந்திய அதிகார வர்க்கப் பிரமுகர்களைக் கடத்திச் சென்று பேரம் பேசுதல் மற்றும் அண்மைக்காலத்தில் இந்நோக்கத்திற்காகப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் மற்றும் அவரது செயலர், அதிகாரி கேரா ஆகியோர் கொலை செய்யப்பட்ட சம்பவங்களை எடுத்துக்காட்டி, பயங்கரவாதச் செயல்களை நசுக்குவது என்ற பேரால் இராணுவ நடவடிக்கையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. தொடர்ச்சியாக ஊரடங்குச் சட்டங்களை அமுல்படுத்துதல்; போராளிகளைத் தேடிக் கண்டறிதல் என்ற பெயரால் ராணுவம் வீடு வீடாகப் புகுந்து துன்புறுத்தல்; அடிப்படை மதவாத சக்திகளை நசுக்குவது என்ற பெயரால் அனைத்து இஸ்லாமியர்கள் மீதும் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுதல்; காஷ்மீர் ஊடுருவல்காரர்களை அடக்குவது என்ற பெயரால் சட்டப்படியான ஆட்சி என்பதையெல்லாம் காற்றில் பறக்க விட்டுவிட்டு தன் விருப்பம் போல் எவரையும் கைது செய்தல்; எவ்விசாரணையும் இன்றி சுட்டுக் கொல்லுதல் ஆகியவைகளை இவ்வரசாங்கம் மேற்கொள்கிறது. மக்களின் அமைதியான சமூக வாழ்வு நசுக்கப்பட்டு விட்டது. இந்திய அரசுப்படை காஷ்மீர் மக்களை எதிர்த்து ஒரு உள்நாட்டு யுத்தத்தை நடத்துகின்றது. இந்த அரசின் அரசு பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவாக அனைத்துப் பாராளுமன்ற கட்சிகளும் திரண்டிருக்கின்றன என்பதை மாநிலங்களவையில் இ.காங், தலைவர் சிவசங்கர் கொண்டு வந்த தீர்மானத்தை ஏகமானதாக ஆதரித்ததன் மூலம் நிரூபித்தனர்.

இந்தியா - பாகிஸ்தான் மோதல்

ஜம்மு காஷ்மீர் 65 லட்சம் மக்களே கொண்ட சிறிய மாநிலம். இந்த சிறிய மாநிலத்தின் தேசிய சுயநிர்ணய உரிமை இயக்கத்தை அனைத்து வழிகளையும் பயன்படுத்தியும் ஆட்சியாளர்களால் ஒடுக்க முடியவில்லை. இப்பிரச்சினையை ஜனநாயக ரீதியில் தீர்வு காண மறுத்துவிட்டு, இப்பிரச்சினைக்குக் காரணம் பாகிஸ்தான் ஊடுருவல்காரர்கள்தான் என்றும் காஷ்மீரைப் பாகிஸ்தான் கைப்பற்ற விரும்புகின்றது என்றும் கூறுகின்றார்கள். மேலும் பிப்.5 அன்று 4000க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் இந்தியாவில் புகுந்துவிட்டனர் என்றும், "இந்தியாவுடன் நேரடி மோதலைத்தவிர்த்து, காஷ்மீரில் ஆயுதந்தாங்கிய கிளர்ச்சியை தொடர்ந்து விசிறி விடுவதும், சூழ்நிலைமைகள் அவர்களுக்குச் சாதகமாக இருக்கும்போது அமுலா கான் போன்ற காஷ்மீர் விடுதலை இயக்கங்களின் மூலம் காஷ்மீரின் சுதந்திரத்தைப் பிரகடனப்படுத்துவதும் அதற்கு ஆதரவாக பாகிஸ்தான் தலையீடு செய்வதும் என்பது பாகிஸ்தானின் யுத்ததந்திரமாக உள்ளது" என வி.பி.சிங் கூறுகிறார். மேலும் தரைப் படை 2 மடங்காகவும், விமானப்படை இரண்டரை மடங்காகவும் கடற்படை 3 மடங்கு எனவும் பாகிஸ்தான் அதிகரித்து தன் இராணுவத் துறையைப் பலப்படுத்தி இந்திய இராணுவத்தோடு சமநிலைப்படுத்தியுள்ளதாக வி.பி.சிங் கூறுகிறார். காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதியாகிவிட்டது என்றும், இந்தியாவுடன் இணைக்கப்பட்ட பின்பு பல முறை நடந்த தேர்தல்களில் காஷ்மீர் மக்கள் 'ஜனநாயக பூர்வமாக' தனக்கான அரசை தேர்ந்தெடுத்தார்கள் என்றும், இந்தியாவிலிருந்து காஷ்மீரைப் பாகிஸ்தான் துண்டாடுவதை அனுமதிக்க முடியாது என்றும், இந்திய அரசியல், இராணுவத் தலைவர்கள் கூறுகின்றார்கள்.

பாகிஸ்தான் தரப்பிலும்கூட இதே போன்ற பகைமையான உணர்வுகளே வெளிப்படுகின்றன. பாகிஸ்தான் அரசாங்கம் காஷ்மீர் போராளிகளுக்கு உதவி என்ற இந்தியாவின் குற்றச்சாட்டை மறுக்கிறது. அதே நேரத்தில் "காஷ்மீர் பிரச்சனை இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினை" என இந்தியா சொல்வதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஜனவரி 21 அன்று பெனாசீர் அவர்கள் "காஷ்மீர் மக்களின் நியாயமான லட்சியத்தை தனது அரசாங்கம் தொடர்ந்து ஆதரிக்கும்" எனச் சொல்கிறார். அதோடு மட்டுமல்லாமல் "காஷ்மீரில் நடக்கும் இந்திய அரசின் நடவடிக்கை பாகிஸ்தானிலுள்ள மக்களிடையே மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயத்தின் ஆத்திரத்தை தூண்டுவதாக அமைந்துள்ளது" எனக் கூறுகிறார்.

"பாகிஸ்தான் எப்போதும் காஷ்மீர் பிரச்சனை மீதான கோட்பாடு ரீதியிலான நிலைப்பாட்டை ஒருபோதும் கைவிடாது என்றும், காஷ்மீர் மக்களின் எழுச்சிக்கு பாகிஸ்தான் காரணம் என்ற இந்தியாவின் குற்றச்சாட்டை மறுத்தும் காஷ்மீர் மக்கள் சுயநிர்ணய உரிமைக்காக கிளர்ச்சி செய்கிறார்கள்" என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் யாகூப் கான் கூறுகிறார். "காஷ்மீர் மீது இந்திய அரசு கொடுமை செய்வதாகவும் இந்திய அரசின் ஒடுக்குமுறையே மக்களின் போராட்டத்தை தீவிரப்படுத்தியது" என அவர் கூறுகிறார். காஷ்மீர் மீது இந்திய அரசு எடுக்கும் நடவடிக்கையை உலகிற்கு நியாயப்படுத்த பாகிஸ்தான் காரணம் என இந்திய அரசு சொல்வதாகக் குறிப்பிடுகிறார். பாகிஸ்தான் எப்போதும் காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமை உள்ளிட்டு எந்த அடிப்படை உரிமைகளையும் பேரம் பேசாது என அறிவிக்கிறார். இந்திய அரசாங்கத்தின் அச்சுறுத்தலைக்கண்டு பாகிஸ்தான் அஞ்சாது எனக் குறிப்பிடுகிறார்.

இன்று இருநாடுகளுமே மக்களிடையே யுத்தவெறியைத் தூண்டி போருக்கு ஆயத்தம் செய்து வருகின்றன. இஸ்லாமாபாத்தில் நடந்த அனைத்து கட்சிகளின் கூட்டமும் காஷ்மீருக்கு ஆதரவாக ஒற்றுமை வார இயக்கமும், பாகிஸ்தான் தேசியப் பேரவையில் (நாடாளுமன்றம்) நடந்த வாதங்களும், பாகிஸ்தானில் அனைத்துச் சக்திகளையும் காஷ்மீர் பிரச்சினை மீது அவ்வரசாங்கத்திற்கு ஆதரவு திரட்டுவதையும் யுத்தவெறியைத் தூண்டுவதையுமே காட்டுகின்றது. இந்தியாவுடன் 1000 ஆண்டு யுத்தம் நடத்த தயார் என பாகிஸ்தான் பிரதமர் முழங்குகிறார். அதேபோல் இந்தியப் பாராளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் பாகிஸ்தானை எதிர்த்து ஒரே குரலில் கூக்குரல் எழுப்பின. பாகிஸ்தான் 1000 மணி நேரமாவது யுத்தத்தில் தாக்குப் பிடிக்குமா? என வி.பி.சிங் சவால் விடுகிறார். காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி என்றும், காஷ்மீரில் கருத்து வாக்கெடுப்புக்கு அவசியம் இல்லை என்றும் கூறி இந்திய அரசு காஷ்மீர் சுயநிர்ணய உரிமையை மறுக்கின்றது. ஐ.நா தீர்மானத்தின்படி காஷ்மீரில் கருத்தறிய வாக்கெடுப்பு நடத்தக்கோரும் பாகிஸ்தான் அரசு, அக்கருத்து வாக்கெடுப்பு காஷ்மீர் இந்தியாவுடன் சேருவதா, பாகிஸ்தானுடன் சேருவதா என்பதுதான் பொருள். காஷ்மீர் மக்கள் தனிநாடு அமைத்துக்கொள்வது என்ற பேச்சுக்கே இடமில்லை என பாகிஸ்தான் அரசு கூறுவதன் மூலம் பாகிஸ்தான் அரசும், காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமையை மறுக்கிறது. இவ்விரு அரசுகளும் இப்போது யுத்தத்திற்கு தயாரிப்பதன் நோக்கம் காஷ்மீர் இந்தியாவுடன் இருப்பதா அல்லது பாகிஸ்தானுடன் இருப்பதா என்பதைத் தவிர காஷ்மீர் மக்களின் சுயநிர்னய உரிமைக்காக அல்ல.

ராடார்களையும், கொலைகார ஆயுதங்களையும் பாகிஸ்தான் இந்திய எல்லையின் அருகாமையில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. அவர்கள் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீர் பகுதியில் யுத்தத்திற்கான செயல்தந்திரங்களை வகுத்துத் தயார் நிலையில் உள்ளது. அவர்கள் எல்லை கடந்து பஞ்சாபிலும் தீவிர இராணுவ நடவடிக்கைகளுக்குத் திட்டமிட்டிருக்கிறது. தனது சிவில் பாதுகாப்பு யூனிட்டுகளை முன்னேறிச் செல்வதற்கான தயார் நிலையில் வைத்திருக்கிறது. பாகிஸ்தான் ஒரு யுத்தத்தைத் தொடுப்பதற்குத் தயாரித்துவிட்டது என்று இந்திய ஆட்சியாளர்கள் கூறுகின்றனர். இத்தகைய சூழ்நிலையில் நாம் யுத்தத்திற்காக சிந்தனை ரீதியாக நம்மைத் தயாரித்துக்கொள்ள வேண்டும் என வி.பி.சிங் கூறுகிறார். இத்தகைய ஒரு சூழ்நிலையில் அமைதிகால அரசியலுக்கு இடமில்லை. உட்கட்சிப் பூசலுக்கு இடமில்லை. மக்களின் உரிமைபற்றிப் பேச்சுக்கு இடமில்லை. மற்ற எல்லாப் பிரச்சினைகளையும் மூட்டைகட்டி ஒரு பக்கத்தில் வைக்க வேண்டும். பாகிஸ்தான் நம்மீது திணிக்கின்ற சூழ்நிலையைச் சந்திப்பதற்கு அரசியல் கட்சிகள் தம் கவனத்தையும் சக்தியைச் செலுத்த வேண்டும் என ஆட்சியாளர்களும் அவர்களின் ஊதுகுழலான செய்தித்தாள்களும் கூக்குரல் இடுகின்றன. பாகிஸ்தானை எதிர்த்து ஒரு போருக்கு அறை கூவல் விடப்படுகின்றது. ராஜீவ் கும்பலும், காங்கிரஸ் கட்சியும் வி.பி.சிங் அரசாங்கம் மெத்தனமாக இருக்கின்றது என குற்றம் சாட்டுகின்றது. பாரதிய ஜனதாக் கட்சி "பாகிஸ்தானிலுள்ள இராணுவ பயிற்சி முகாம்களை இந்தியா தாக்கி கைப்பற்ற வேண்டும்" எனக் கூறி யுத்தத்தைத் தூண்டுகின்றது.

"பாகிஸ்தானுக்கு எதிரான யுத்தம் இரண்டு நாட்டிற்குமே நன்மை செய்யாது. இதை எதிர்த்து இடதுசாரிச் சக்திகள் மட்டுமல்ல, தேசப்பற்றும், மதச்சார்பற்ற சக்திகளும் இதையொரு சவாலாக ஏற்றுக்கொண்டு சந்தித்தாக வேண்டும்" என யுத்த எதிர்ப்பாளனாக காட்டிக் கொள்ளும் மார்க்சிஸ்ட் கட்சியின் அறைகூவல் கடைசி வரை நீடிக்குமா? என்பது சந்தேகமே! இவ்வாறு இருதரப்பினரும் யுத்தத் தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். நாம் யுத்த அபாயத்தை எதிர் கொண்டிருக்கிறோம்.

பாட்டாளி வர்க்கத்தின் நிலைபாடு என்ன?

இத்தகைய நிலைமைகளில் இந்தியப் பாட்டாளி வர்க்க இயக்கம் காஷ்மீர் சுயநிர்ணய உரிமை பிரச்சினை குறித்தும், இந்திய பாகிஸ்தான் போர் அபாயம் குறித்தும் என்ன நிலைப்பாடுகளை மேற்கொள்வது என்பது நம்முன் உள்ள உடனடிப் பிரச்சினையாக உள்ளது.

இவ்விரு பிரச்சினைகளின் ஸ்தூலமான வரலாற்று அம்சங்களை முதலில் நாம் கவனிக்க வேண்டும். இரண்டாவதாக பாட்டாளி வர்க்கத்தை எதிர்நோக்கியுள்ள கடமைகளை கவனிக்க வேண்டும்.

II. காஷ்மீர் சுயநிர்ணய உரிமைப் போராட்ட வரலாறு

1947 ஆகஸ்ட் 15ல் இந்தியத் துணைக் கண்டம் பிரிட்டன் ஏகாதிபத்திய காலனி ஆட்சியிலிருந்து அதிகார மாற்றம் ஏற்பட்டு இந்தியா-பாகிஸ்தான் என இரு அரசுகளாக அமைந்தது. இக்காலத்தில் பெரும்பான்மையான முஸ்லீம்களைக் கொண்ட காஷ்மீர் சமஸ்தானத்தை ஆண்ட இந்து மன்னரோ, மக்களோ இவ்விரண்டு நாடுகளுடனும் சேராமல் தனித்தே இருக்க விரும்பினர். இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுமே காஷ்மீர் சமஸ்தானத்தை வலுக்கட்டாயமாகத் தங்களுடன் இணைத்துக் கொள்வதை நோக்கமாக கொண்டிருந்தனர். காஷ்மீர் சமஸ்தானத்தின் ஒரு பகுதியைச் சேர்ந்த பழங்குடி மக்கள் பாகிஸ்தான் ஆதரவுடன் ஆயுதத் தாக்குதலில் ஈடுபட்டபோது சமஸ்தான மன்னர் ஹரிசிங் இந்தியாவின் உதவியை நாடினார். இந்தியாவுடன் இணைந்தால்தான் ஆதரவு தரப்படும் என இணைப்புக்கான ஒப்பந்தத்தை இந்திய அரசு செய்து கொண்டது. இந்த ஒப்பந்தத்தின் பெயரில் இந்தியப்படை காஷ்மீருக்குள் நுழைந்தது. இதன் விளைவாக இந்தியா பாகிஸ்தானிடையே போர் மூண்டது. இந்தியப்படை காஷ்மீரின் 3-ல் 2 பகுதியை பிடித்துக் கொண்டது. காஷ்மீர் பிரச்சினை ஐ.நா-விற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இது குறித்து ஐ.நா-விற்குள் விவாதித்துக் கொண்டிருக்கும் பொழுதே காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என இந்தியா அறிவித்துவிட்டது. எனினும் ஐக்கிய நாட்டு பாதுகாப்புச் சபை இவ்விரு நாடுகளுக்கிடையே போர் ஓய்வு கொண்டு வந்ததுடன் காஷ்மீர் இந்தியாவுடன் சேருவதா அல்லது பாகிஸ்தானுடன் சேருவதா என்பதை ஒரு கருத்து வாக்கெடுப்பின் மூலம் தீர்வு காண வேண்டும் என முடிவு செய்தது. இம்முடிவை இரு அரசுகளும் ஏற்றுக்கொண்டன. ஒருபுறம் ஜம்மு காஷ்மீரின் இந்தியாவுடனான இணைவு அம்மக்களின் விருப்பங்களுக்கு மாறான வலுக்கட்டாயமான ஒரு இணைப்பாகவும், மறுபுறம் காஷ்மீர் இந்தியாவுடன் இணைவதா அல்லது பாகிஸ்தானுடன் இணைவதா என்பது கருத்தறியும் வாக்கெடுப்பின் மூலம் தீர்க்க வேண்டிய ஒன்றாகவே அமைந்தது.

காஷ்மீரின் தனி அந்தஸ்து

போர் ஓய்வு அறிவிக்கப்பட்டிருந்தும் கூட அம்மாநிலத்தில் வழக்கத்திற்கு மாறாக அசாதாரண நிலைமைகள் நிலவி வந்தது. அமைதி திரும்பவில்லை. அம்மாநிலத்தில் ஒரு பகுதி இன்னும் கூட கிளர்ச்சியாளர்களின் கைகளிலும், ஆசாத் காஷ்மீர் கையிலும் இருந்தது. ஐ.நா சபையில் எழுந்த சர்ச்சையிலிருந்து இந்தியா எப்பொழுது விடுபடும் என்று இன்னும் சொல்ல முடியாத நிலைமையில் இருந்தது. வேறுவிதமாக சொல்வதெனில் அம்மாநிலத்து மக்களின் மனம் உவந்து ஏற்றுக் கொள்ளப்படாத ஒரு வல்லிணைப்பு, இந்தியா பாகிஸ்தானுக்கிடையில் காஷ்மீர் சிக்கல் தீர்வு காணப்படாத நிலை, இத்தகைய சூழலில்தான் இந்த இணைவு நடந்தது. மேலும் காஷ்மீர் மாநிலத்தைப் பொறுத்தவரை பிற மாநிலங்களைப் போல் அல்லாமல் அதற்கென ஒரு அரசியல் நிர்ணய சபையும் தனிக்கொடியும் உண்டு. மேற்கண்ட காரணங்களால்தான் பிற சமஸ்தானங்கள் இந்தியாவோடு இணைந்ததுபோல் அல்லாமல் ஒரு தனித்தன்மை வாய்ந்த இணைப்பாகவும், அதற்கேற்பவே காஷ்மீருக்கு இந்திய அரசியல் சட்டத்தில் ஒரு பிரத்தியேகமான அந்தஸ்தும் கொடுக்கப்பட்டது. இந்த பிரத்தியேக அந்தஸ்துதான் இந்திய அரசியல் சட்டம் 370 பிரிவில் வரையறை செய்யப்பட்டுள்ளது.

இந்திய அரசியல் சட்டப்படி சட்டம் இயற்றும் அதிகாரம் மத்திய, மாநில, பொதுப்பட்டியல் என மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மத்திய பட்டியலில் உள்ள விஷயங்கள் குறித்து நாடாளுமன்றத்திற்கும், மாநில பட்டியலிலுள்ள விஷயங்கள் குறித்து சட்டமன்றத்திற்கும் சட்டம் இயற்ற அதிகாரம் உண்டு. பொதுப்பட்டியலில் உள்ள விஷயங்கள் குறித்து இரு அவைகளும் சட்டம் இயற்ற உரிமை உண்டு என்று சொன்னாலும், ஒரு பிரச்சினையில் பாராளுமன்றம் ஒரு சட்டம் இயற்றி விட்டால் அச்சட்டத்திற்கு முரணாக மாநில சட்டம் இருக்குமேயானால் அது செல்லாது. இது இந்திய சட்டப்படி எல்லா மாநிலங்களுக்கும் பொதுவான ஒன்று. ஆனால் காஷ்மீர் விஷயத்தில் பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றும் அதிகாரம் இந்திய சட்டத்தின் 370 பிரிவின்படி கட்டுப்படுத்தப்படுகின்றது. இப்பிரிவின்படி இணைப்பு ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் சட்டங்களை மட்டுமே இயற்றுவதற்கு நாடாளுமன்றத்திற்கு உரிமை உண்டு. இந்திய அரசியல் சட்டத்தின் 370 பிரிவைப் பெயரளவில் வைத்துக்கொண்டு மற்றெல்லா பிரிவுகளும் அந்த மாநில அரசை நிர்ப்பந்தப்படுத்தி பல்வேறு சட்டங்கள் மூலம் திணிக்கப்பட்டு விட்டன. இவ்வாறு அந்த மாநில அரசு இணைக்கும் பொழுது கொடுக்கப்பட்டிருந்த பிரத்தியேக அந்தஸ்து எல்லாம் பெயரளவுக்கு மாற்றப்பட்டுவிட்டது. இவையனைத்தும் அம்மாநில மக்களின் ஒப்புதல் இன்றி செய்யப்பட்டன.

இந்திய அரசின் எதேச்சதிகாரமும் ஷேக் அப்துல்லாவும்

இவ்வாறு அம்மாநிலத்திற்கு உரிய பிரத்தியேக அந்தஸ்துகள் ஒழிக்கப்பட்டது மட்டுமல்லாமல், இந்திய அரசு அந்த மாநிலத்தில் கருத்து வாக்கெடுப்பு கோரும் எந்த இயக்கத்தையும் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கவில்லை. காஷ்மீரின் பிரதமராய் இருந்த ஷேக் அப்துல்லா கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என இந்திய அரசை வற்புறுத்தியதற்காகத் தேசத் துரோகி எனக் கூறப்பட்டு, 1956ல் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டார். அதே ஆண்டு நேரு அவர்கள் பாராளுமன்றத்தில் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தப்படும் வாக்குறுதியைத் திரும்பப் பெற்றார். இவற்றை எதிர்த்து எழுந்த மக்கள் இயக்கங்கள் இந்திய அரசால் கொடுமையாக ஒடுக்கப்பட்டன. அதற்குப் பின் வந்த சாஸ்த்ரி-இந்திரா-ராஜிவ் ஆகிய அனைவருமே அம்மாநில அரசை சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்காமல் தமக்கெதிரான அரசுகளைக் கவிழ்த்தார்கள், கலைத்தார்கள். இவ்வாறு 370-ல் கொடுக்கப்பட்ட பிரித்தியேக உரிமைகளைக் காலில் போட்டு நசுக்கினார்கள். பொம்மை அரசாங்கங்களை உருவாக்கினார்கள். மேலும் இவ்வரசியல் அடக்குமுறை மட்டுமல்லாமல் கடந்த 40 ஆண்டுகளில் எந்தவிதத் தொழில் முன்னேற்றத்தையும் ஏற்படுத்தாமல் பொருளாதாரரீதியில் பின்தங்கிய நிலையில் அம்மாநிலம் வைக்கப்பட்டிருந்தது. அதே நேரத்தில் ஏராளமான சில்லறைச் சலுகைகள் வழங்குவதன் மூலம் அம்மாநில மக்களின் கருத்தறியும் வாக்கெடுப்புக் கோரிக்கையை கைவிடச் செய்துவிடலாம் என மனப்பால் குடித்தார்கள். அடுத்தடுத்து சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளதால் கருத்தறியும் வாக்கெடுப்பு தேவையில்லை என இந்திய ஆட்சியாளர்கள் கூறுகின்றார்கள். சட்டமன்ற நாடாளுமன்றத் தேர்தல் என்பது வேறு. கருத்தறியும் வாக்கெடுப்பு என்பது வேறு. சட்டமன்ற நாடாளுமன்றத் தேர்தல்கள் ஒரு சில ஆண்டுகளுக்கொருமுறை யார் அரசாங்கத்தை அமைப்பது என்பதைத் தீர்மானிப்பதற்காக நடத்தப்படுவதாகும். ஆனால் கருத்து வாக்கெடுப்பு என்பது ஜம்மு-காஷ்மீர் மக்கள் இந்தியாவோடு இருப்பதா அல்லது தனிநாடு அமைத்துக் கொள்வதா என்ற தமது தேசிய இன உரிமையை நிர்ணயிப்பது ஆகும். இரண்டும் ஒன்றல்ல. எனவே தேர்தல் நடத்தப்பட்டுள்ளதால் கருத்தறியும் வாக்கெடுப்பு தேவையில்லை என்பது ஏமாற்றுப் பேச்சாகும். மேலும் நடத்தப்பட்ட தேர்தல்கூட ஜனநாயக ரீதியில் நடத்தப்பட்டது என்பது உண்மையல்ல. எல்லா பித்தலாட்டங்களையும் சூழ்ச்சிகளையும் கையாண்டு நடத்தப்பட்டது மட்டுமல்ல, அம்மாநிலத்தில் பெரும் இராணுவக் குவிப்பிற்கிடையில் தேர்தல்கள் நடத்தப்பட்டன. மேலும் அண்மையில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலையும்கூட மக்கள் முற்றாக புறக்கணித்துவிட்டனர். இவ்வாறு இந்திய ஆட்சியாளர்கள் கொடுத்த வாக்குறுதியை ஜனநாயக முறையில் அடைவதற்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டதோடு அல்லாமல் தேசிய சுயநிர்ணய உரிமைக்காகப் போராடும் இயக்கங்களின் மீது அரசு பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டது. மேலும் சுயநிர்ணய உரிமை என்ற முழு நிறைவான ஜனநாயகக் கோரிக்கையை சகித்துக்கொள்ள முடியாதது மட்டும் அல்லாமல் அவர்கள் உரிமையை ஒவ்வொன்றாகப் பறிக்கப்படுவதை எதிர்த்த, மிகவும் மிதவாதமான எதிர்ப்பைக்கூட இந்திய ஆட்சியாளர்கள் விட்டுவைக்கவுமில்லை. அது நசுக்கப்பட்டது. இதன் விளைவாக இந்திய அரசு தனக்கு எந்த சமூக அடித்தளமும் அன்றி மக்களிடமிருந்து அந்நியப்பட்டு தனிமைப்பட்டு நிற்கின்றது.

இவ்வாறு தனிமைப்பட்டு நிற்கும் இந்திய அரசும், ஆளும் வர்க்கங்களும் அங்கிருக்கும் எல்லா சமரச சக்திகளுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் புத்துயிர் ஊட்ட முயற்சிக்கின்றனர். இந்நோக்கத்திற்காகத்தான் நாம் முன்பே குறிப்பிட்ட ஏழு அம்சத் திட்டத்தையும் கொண்டு வந்திருக்கிறார்கள். இவ்வாறு செய்வதன் மூலமே ஒரு தேர்தல் நடத்துவதற்கான சாதகமான சூழ்நிலைமையை உருவாக்கித் தேர்தல் நடத்திடவும்,போராடும் மக்களை எவ்வாறாவது சட்டவாத்ததிற்குள் இழுத்து வரவும், முயற்சிக்கிறார்கள். இத்தகைய முயற்சிகள் காஷ்மீர் மக்கள் அறியாத ஒன்றல்ல. கடந்த காலத்தில் தேசிய மாநாடும் அதன் தலைவராக இருந்த ஷேக் அப்துல்லாவும் கருத்து வாக்கெடுப்புக்கு வலியுறுத்தியிருந்தும்கூட அவர்களின் சமரச போக்கிற்கேற்ப எவ்வாறு இந்திய அரசின் நிர்ப்பந்தங்களுக்கு பணிந்து ஜம்மு-காஷ்மீர் மக்களின் உரிமையை ஒன்றன்பின் ஒன்றாக விட்டுக்கொடுத்து இறுதியாக காஷ்மீரின் தேசிய இன உரிமைக்கு எதிராகச் சென்று, எவ்வாறாகிலும் பதவியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமெனத் தாழ்ந்து விட்டார்கள் என்பது காஷ்மீர் மக்கள் சொந்த அனுபவத்தில் அறிந்ததொன்றாகும். குலாம் அகமத், ஷாதிக் போன்ற அகில இந்திய ஆளும் வர்க்கத்தின் எடுபிடிகள் எவ்வாறு தேசிய இன உரிமை இயக்கங்களை ஒடுக்குவதற்கு இந்திய அரசின் கருவிகளாகச் செயல்பட்டார்கள் என்பதையும் மக்கள் அறிவார்கள். தமிழகத்தில் உள்ள தி.மு.க, அ.தி.மு.க போல பரூக் அப்துல்லாவும் பிறரும் ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸின் எடுபிடிகளாகத் தாழ்ந்துவிட்டார்கள் என்பதையும் புரிந்தே உள்ளார்கள். எனவே இத்தகைய சமரசவாத சக்திகளை தனிமைப்படுத்தாமலும் இந்திய அரசின் நாடாளுமன்ற மோசடிகளை ஒதுக்கித் தள்ளாமலும் தேசிய இன உரிமையைப் பெற முடியாது என்பது ஒரு வரலாற்று உண்மையாக இருக்கிறது.

இந்து-முஸ்லீம் மோதலை ஏற்படுத்த சதி!

மேலும் இவ்வாறு அனைத்து சமரச சக்திகளும் தனிமைப்பட்டுப் போனதின் விளைவாகத் தனது சமூக அடித்தளத்தை இழந்துவிட்ட இந்திய அரசு ஜம்மு காஷ்மீரில் இந்து-முஸ்லீம் மதங்களுக்கிடையில் மோதல் ஏற்படுத்துவதன் மூலமாக இந்துக்களின் ஆதரவைப் பெற்று தனக்கான சமூக அடித்தளத்தை உருவாக்கிக் கொள்ள முயற்சிக்கிறது. காஷ்மீரில் பெரும்பான்மையான முஸ்லீம்களும், ஜம்முவில் இந்துக்கள் 55%மும்; புத்த மதத்தையும் பழங்குடியினரையும் சேர்த்து 15%மும் வாழ்கின்றனர். ஜம்முவில் 3-ல் 1 பங்கு முஸ்லீம்கள் உள்ளனர். 1956ம் ஆண்டில் நேரு ஜம்முவிலுள்ள இந்துக்களுக்கு பாதுகாப்பு அளிப்பது எனக்கூறி, இந்துக்கள் வாழக்கூடிய பகுதிக்கு தன்னாட்சி உரிமை பெற்ற ஒரு பிரதேசத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக ஒரு சுமிஷன் அமைத்தார். உண்மையிலேயே முஸ்லீம்களுக்கோ, இந்துக்களுக்கோ பாதுகாப்பு அளிப்பது என்பது ஒரு மதச்சார்பற்ற அரசை உருவாக்குவதும், அத்தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதின் மூலம்தான் அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பும் ஜனநாயக உரிமைகளும் கிடைக்கும். ஆனால் நேரு அவ்வாறு செய்யாமல் இந்துக்கள் வாழும் பகுதியை தன்னாட்சி உரிமை பெற்ற பிரதேசமாக அமைக்க கமிஷன் அமைத்ததே காஷ்மீர் மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்தி தேசிய சுயநிர்ணய இயக்கத்தை ஒடுக்குவதற்கான ஒரு சதித்திட்டம்தான். இக்கமிஷன் செயலற்றுக் கிடந்தது. இப்போது காஷ்மீரில் முஸ்லீம் மத அடிப்படைவாதிகள் இந்துக்களை அங்கிருந்து விரட்டியடிக்கின்றனர் எனக்கூறி ஜம்முவில் இந்துக்கள் மத்தியில் முஸ்லீம் எதிர்ப்பு உணர்வை தூண்டி விடுகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில் இந்திய ஆளும் வர்க்கம் காஷ்மீர் தேசிய இனத்தை ஒடுக்குவதற்கு அரசு பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விடுவதைத் தன் வழியாக தேர்ந்தெடுத்துள்ளது. காஷ்மீர் மக்களும் தங்களது சுயநிர்ணய உரிமையை அடைய ஆயுதம் ஏந்திப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை.

இந்திய அரசியலமைப்பின் ஜனநாயக விரோதத் தன்மை

இந்திய அரசு காஷ்மீர் மக்களுடைய தனிநாட்டுக் கோரிக்கையை ஒடுக்குகின்ற ஒன்றாக மட்டுமே இருக்கவில்லை. இந்திய அரசியலமைப்புமுறை, அதற்குள் வாழ்கின்ற அனைத்துத் தேசிய இனங்களுடைய சுயநிர்ணய உரிமையை மறுக்கின்ற ஒன்றாகவே இருக்கின்றது என்பதை இந்திய அரசியல் சட்டத்தினுடைய முதல் பிரிவே தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது. இந்தியா ஒரு ஒன்றியமாகத்தான் வரையறை செய்யப்படவேண்டும் என்றும், அதை கூட்டாட்சியாக வரையறை செய்யக்கூடாது என்பதற்கான அரசியல் சட்டத்தின் முதல் பிரிவுக்கு அளித்த விளக்கங்களும் இதைத் தெளிவாகவே எடுத்துக்காட்டுகின்றது. அதற்காக அம்பேத்கார் கூறிய காரணங்கள்:

1. இந்திய யூனியன் ஒப்பந்தத்தின் விளைவாக ஏற்பட்ட ஒன்றல்ல என்பதால் எந்தவொரு மாநிலத்திற்கும் அதிலிருந்து பிரிந்து போவதற்கு உரிமையில்லை.

2. நாடும் மக்களும் நிர்வாக வசதிக்காகத்தான் வெவ்வேறு மாநிலங்களாக பிரிக்கப்படுகின்றன.

3. நாட்டினுடைய ஐக்கியத்தை பாதுகாப்பதற்கு நிர்ணய சபை கொண்டிருக்கும் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் அடையாளமாக யூனியன் என்ற சொல் பயன்படுத்தப்படுகின்றது.

எனவே இந்திய அரசமைப்பு இந்தியாவில் இனங்களை அங்கீகரிக்கவுமில்லை; அவற்றின் பிரிந்து போகும் உரிமையை ஏற்கவும் இல்லை. இதற்குப் பின்னால் மக்களின் பெரும் போராட்டத்தின் விளைவாக மொழிவழி அடிப்படையில் மாநிலங்கள் திருத்தியமைக்கப்பட்டாலும் இந்திய அரசியல் சட்டம் எந்தவொரு மாநிலத்திற்கும், அல்லது தேசிய இனத்திற்கும் பிரிந்து போகும் உரிமையை அங்கீகரிக்கவில்லை. எனவே இந்திய அரசியலமைப்பு காஷ்மீர் மக்களுடைய சுயநிர்ணய உரிமைக்கு மட்டுமல்லாமல் அனைத்துத் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்கும் எதிராக இணக்கம் காண முடியாத பகைமை கொண்டதாகவே இருக்கிறது. இப்பொதுத் தன்மையின் காரணமாகவேகூட காஷ்மீரின் தேசிய இனப்பிரச்சினை இந்த அரசமைப்பிற்குள் தீர்த்துக் கொள்ள முடியாத ஒன்றாகவே உள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் போர்கள்

சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்காததால் எழும் காஷ்மீர் மக்களின் கிளர்ச்சியைப் பாகிஸ்தானின் ஊடுருவல்தான் காரணம் எனக்கூறி, கிளர்ச்சிக்காரர்களுக்குப் பயிற்சியளிக்கும் பாகிஸ்தானின் முகாம்களைத் தாக்கி அழிக்க வேண்டுமென்றும், மேலும் பாகிஸ்தான் இந்தியாவின் மீது யுத்தம் தொடுக்கத் தயாரித்துக் கொண்டிருப்பதாகவும், எனவே இந்தியா பாகிஸ்தானோடு போருக்குத் தயாராக வேண்டுமென இந்திய அரசாங்கமும், ஆளும் வர்க்க அரசியல் கட்சிகளும், இந்திய இராணுவத் தலைவர்களும் கூறுகின்றார்கள். இக்கூற்று இந்திய பாகிஸ்தான் போருக்கான அபாயத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறோம் என்பதைக் காட்டுகின்றது. இப்போர் அபாயமும், யுத்தமும் இப்போது மட்டுமல்லாமல் கடந்த மூன்று முறையும் நடந்த யுத்தங்களும் காஷ்மீர் பிரச்சினையை ஒட்டியே நடத்தன. 1965ல் நடந்த இரண்டாவது யுத்தமும் "பாகிஸ்தான் ஊடுருவல்காரர்கள் காஷ்மீரைக் கைப்பற்றிக் கொள்வதற்காகக் கிளர்ச்சி செய்கிறார்கள் என்றும், ஆகவே பாகிஸ்தான் எல்லை கடந்து இராணுவப் பயிற்சி முகாம்களைத் தாக்கவேண்டும்" என கூறித்தான் அந்த யுத்தமும் நடந்தது. அப்போரின் முடிவைத் தொடர்ந்து இருநாடுகளுக்கிடையே 1966 ஜனவரியில் தாஸ்கண்டில் ஒப்பந்தம் நடந்தது. 'யுத்தத்திற்கு முன்னால் இருந்த நிலைமைக்கே இரு தரப்பாரும் சென்றிடுவது; இருவருக்கும் உள்ள பிரச்சினைகளை அமைதியாகப் பேசித் தீர்த்துக் கொள்வது' என சாஸ்திரியும், ஐயூப்கானும் கையொப்பமிட்டனர். அப்போதும்கூட 'காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி' என பாகிஸ்தான் ஏற்றுக் கொள்ளவில்லை. காஷ்மீர் பிரச்சினையும் தீரவில்லை.

1971ம் ஆண்டு மூன்றாவது முறையாக இரு நாடுகளுக்கிடையே போர் மூண்டது. இம்முறை இரண்டு முனைகளில் போர் நடந்தது. ஒன்று வடகிழக்கு (வங்காளம்) முனை, மற்றொன்று வடமேற்கு (ஜம்மு) முனை. கிழக்கு பாகிஸ்தானுடைய சுதந்திரத்தை இந்தியா ஆதரிக்கிறது என்றும் ஏராளமான அகதிகள் இந்தியாவில் நுழைவதைத் தடுத்து நிறுத்திட வேண்டும் எனக் கூறி இந்தியப் படைகள் கிழக்கு பாகிஸ்தானுக்குள் நுழைந்து போரிட்டது. கிழக்கு பாகிஸ்தானில் பாகிஸ்தான் படைகள் தோல்வியுற்று சரணடைந்த பிறகே இந்திய அரசு ஓய்வை அறிவித்தது. இப்போரின் விளைவாக இந்தியா பாகிஸ்தானை இரண்டாகப் பிளவுபடுத்தி வங்காளத்தைத் தனி நாடாக அமைத்தது. இப்போர் ஓய்வின் முடிவில் சிம்லாவில் 1971ல் இருநாடுகளுக்கிடையே ஒப்பந்தம் செய்யப்பட்டது. இவ்வொப்பந்தத்தின்படி இரண்டு நாடுகளும் "வன்முறையைக் கைவிடுவது என்றும், மற்றவர்கள் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதில்லை என்றும், மற்ற நாட்டினுடைய ஐக்கியத்தையும், சுதந்திரத்தையும் மதிப்பது. மேலும் வன்முறையின் மூலமோ அல்லது வன்முறையைப் பயன்படுத்துவதாக அச்சுறுத்தியோ பங்கம் விளைவிப்பதில்லை" என்றும் முடிவுக்கு வந்தனர். இவ்வொப்பந்தத்தின் போதும் 'இந்தியாவின் ஒரு பகுதி காஷ்மீர்' என பாகிஸ்தான் அங்கீகரிக்கவில்லை. காஷ்மீர் பிரச்சினையும் தீரவில்லை. ஆக முதல் போர் காஷ்மீர் பிரச்சினையின் மீதே நடந்தது. காஷ்மீர் இந்தியாவுடன் சேரவேண்டுமா? அல்லது பாகிஸ்தானுடன் சேரவேண்டுமா? எனக் 'கருத்தறியும் வாக்கெடுப்பது' என்ற ஐ.நா தீர்மானத்தில் முடிந்தது. ஆயினும் கருத்தறியும் வாக்கெடுப்பு நடைபெறாததின் காரணமாக 1965, 1972 என மூன்று போர்கள் நடந்துள்ளன. பாகிஸ்தான் ஊடுருவல் மூலம் காஷ்மீரைக் கைப்பற்ற நினைப்பதாகக்கூறும் இந்திய அரசு கிழக்கு பாகிஸ்தானில் நடந்த கிளர்ச்சியைப் பயன்படுத்திக் கொண்டு இராணுவ ரீதியில் தலையிட்டு வங்காளத்தை உருவாக்கி பாகிஸ்தானைத் துண்டாக்கியது. இப்பொழுதும் காஷ்மீரில் பாகிஸ்தான் ஊடுருவி காஷ்மீரைக் கைப்பற்ற முயற்சிக்கிறது எனக் கூறித்தான் பாகிஸ்தானை எதிர்த்து போர் அபாயம் தோன்றியுள்ளது.

III. "தேசிய இன சுயநிர்ணயம்" பற்றிய லெனினிய அணுகுமுறை

இந்தியா மட்டுமல்லாமல் ஆசியாவின் பெரும்பாலான நாடுகள் இன்னும் "பெரும் வல்லரசுகளின்" அரைக்காலனி நாடுகளாகவோ அல்லது தேசிய நோக்கில் படுமோசமாக சார்ந்திருக்கிற, ஒடுக்கப்படுகின்ற அரசுகளைக் கொண்டிருக்கின்ற நாடுகளாகவோ இருக்கின்றன. இந்நாடுகளில் அரை நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகளே மிகுநிலை பெற்றுள்ளன. பூர்ஷ்வா ஜனநாயக முறையில் அரசு சீரமைப்பு இந்நாடுகளில் இன்னும் நிறைவேறவில்லை. இன்று இக்கண்டத்திலுள்ள பல நாடுகளில் தேசிய இனங்களின் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இவ்வியக்கங்கள் தேசிய ரீதியில் சுயேச்சையான, தேசிய நோக்கில் ஒருமையுடைய அரசுகளை உண்டுபண்ண முயல்கின்றன. இந்நிகழ்வுப் போக்குக்கு எடுத்துக்காட்டாக காஷ்மீர், அசாம், பஞ்சாப் மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் போராட்டங்கள் அமைந்திருக்கின்றன. காஷ்மீர் மக்களின் தனிநாட்டுக்கான போராட்டம் இந்திய மக்கள் அனைவரையும் உடனடியாக ஒருநிலை எடுக்குமாறு வற்புறுத்துகிறது. இத்தகைய நிலைமையில் இப்பிரச்சினை குறித்து ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சி தன்னை எதிர் நோக்கியுள்ள கடமையை மார்க்சிய- லெனினிய கோட்பாட்டின் அடிப்படையில் எவ்வாறு வகுத்துக் கொள்ள வேண்டும் என்பதே இன்று நம் முன்னுள்ள பிரச்சினை.

தேசிய அரசு

தேசிய அரசு என்பது முதலாளித்துவத்தின் விதியும் "பொது வழக்கும்" ஆகும். முதலாளித்துவ வளர்ச்சிக்கான மிகச் சிறந்த நிலைமைகளைத் தேசிய அரசுதான் உண்டு பண்ண முடியும் என்பதில் சந்தேகமில்லை. ஆயினும் பூர்ஷ்வா உறவுகளின் மேல்கட்டப்படும் அத்தகையதொரு அரசு தேசிய இனங்களைச் சுரண்டுவதையும், ஒடுக்குவதையும் அகற்றிவிடும் என்பதல்ல இதன் பொருள். தேசிய அரசுகளை உண்டாக்குவதற்குத் தூண்டும் சக்தியைத் தோற்றுவிக்கக் கூடியதாக இருக்கின்ற பலம் வாய்ந்த பொருளாதாரக் காரணிகளை மார்க்சியவாதிகள் மறந்துவிடக் கூடாது என்பதுதான் இதன் பொருள் என்றார் லெனின். வரலாற்று-பொருளாதாரக் கண்ணோட்டத்திலிருந்து பார்த்தால், மார்க்சியவாதிகளின் செயல் திட்டத்திலுள்ள "தேசிய இனங்களின் சுயநிர்ணயம்" என்பதற்கு அரசியல் சுயநிர்ணயம், அரசின் சுயேச்சைத்தன்மை, ஒரு தேசிய அரசு அமைத்தல் என்கிற பொருள்தான் உண்டு. வேறு ஒரு பொருள் இருக்க முடியாது.

கம்யூனிஸ்டுகள் தேசிய சுய நிர்ணயம் குறித்துக் கடைப்பிடிக்க வேண்டிய கோட்பாட்டை லெனின் பின்வருமாறு கூறுகிறார்: "எல்லாத் தேசிய இனங்களுக்கும் பிரிந்து போகிற உரிமையை ஒப்புக் கொள்வது; பிரிந்து போகிற பிரச்சினை எழுகின்றபோது எல்லா ஏற்றத் தாழ்வுகளையும், எல்லா விசேஷ உரிமைகளையும் எல்லா தனித்துவப் போக்கையும் நீக்கும் நோக்கத்துடன் அதை அணுகிச் சீர்தூக்கிப் பார்ப்பது". ஒருபுறத்தில் எல்லாத் தேசிய இனங்களுக்கும் கயநிர்ணய உரிமையை நேரடியாகவும், ஐயத்துக்கிடமின்றியும் முழுமையாக ஏற்றுக்கொள்வது; மறுபுறம் தொழிலாளர்கள் தங்களது வர்க்கப் போராட்டத்தில் சர்வதேசிய ரீதியில் ஐக்கியப் படவேண்டுமென்று அதேபோல் ஐயத்துக்கிடமின்றியும் திட்டவட்டமாகவும் வேண்டுகோள்விடுவது என்று 1896ம் ஆண்டு லண்டன் சர்வதேசக் காங்கிரஸ் தீர்மானம் கூறுகின்றது இத்தீர்மானம் முழுக்க முழுக்க சரியானது என லெனின் கூறினார். தேசிய சுயநிர்ணயம் பற்றி மேலே கூறப்பட்டுள்ள கோட்பாட்டை இன்றைய இந்தியாவின் குறிப்பான நிலைமைகக்கு ஏற்ப எவ்வாறு பிரயோகிப்பது என்பது பற்றி லெனினியம் முன்வைத்துள்ள அணுகுமுறையை ஆய்ந்தறிவது அவசியமாகும்.

தேசிய அரசுகளின் தோற்றம்

மேற்கு ஐரோப்பாவில், நிலப்பிரபுத்துவத்தை அகற்றிவிட்டு முதலாளித்துவம் வளர்ச்சியுறும் செயல்போக்குடன் மக்கள் தேசங்களாக அமையும் செயல்போக்கு நிகழ்ந்தன. முதலாளித்துவம் வெற்றிகரமாக முன்னேறி அது நிலப்பிரபுத்துவத்தை வென்றபோதுதான் பிரிட்டானியர்களும், பிரெஞ்சுகாரர்களும், ஜெர்மானியர்களும், இத்தாலியர்களும் இன்னும் பிறரும் தேசங்களாக அமைந்தனர். இங்கே தேசங்கள் சுதந்திரமான தேசிய அரசுகளாக தோன்றின.

ஆனால் கிழக்கு ஐரோப்பாவில் நிகழ்வுப் போக்கு  வேறுவிதமாக அமைந்தன. மேற்கு ஐரோப்பாவில் தேசங்கள் சுதந்திர அரசுகளாக அமைந்ததைப் போன்றல்லாமல், கிழக்கு ஐரோப்பாவில் பல தேசிய இனங்களைக் கொண்ட அரசுகள் அமைந்தன. உதாரணமாக ஆஸ்திரியா, ஹங்கேரியும், இரசியாவும் இத்தகைய அரசுகளே.

எங்கெல்லாம் நிலப்பிரபுத்துவம் அகற்றப்படவில்லையோ, எங்கெல்லாம் தேசிய இனங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு அவை இன்னும் ஒருங்கிணைந்த தேசங்களாகப் பொருளாதார ரீதியில் திடப்படவில்லையோ அத்தகைய இடங்களில் இவ்வாறு தனித் தன்மையான முறையில் பலதேசங்களைக் கொண்ட அரசுகள் உருவாயின.

ஆயினும் கிழக்கு ஐரோப்பிய அரசுகளின் கீழ் முதலாளித்துவம் வளர்ச்சியடையத் துவங்கியது. வர்த்தகமும் போக்குவரத்து சாதனங்களும் வளர்ச்சியடையத் துவங்கின. பெரும் நகரங்கள் தோன்றின. பொருளாதார ரீதியில் தேசங்கள் திடப்படலாயின. பின்னுக்கு தள்ளப்பட்டிருந்த தேசிய இனங்களின் அமைதியான வாழ்வில் கொந்தளிப்புகள் ஏற்பட்டு அவற்றை உசுப்பிவிட்டு, தேசங்களைக் கிளர்ந்தெழச் செய்தன. அச்சு மற்றும் திரை அரங்குகளின் வளர்ச்சியும், நாடாளுமன்றங்களின் செயல்பாடுகளும் "தேசிய உணர்வுகள்" வலிமை பெறுவதற்குத் துணை புரிந்தன. எழுச்சியுற்ற "அறிவாளிகள்" தேசியக் கருத்துக்களால் உந்தப்பட்டு இத்திசையில் செயல்படத்துவங்கினர். ஆயினும் பின்னுக்குத் தள்ளப்பட்டிருந்த தேசிய இனங்கள், பிறகு சுதந்திர வாழ்வுக்குத் தட்டி எழுப்பப்பட்டிருந்தாலும், அவற்றால் சுதந்திரமான தேசிய அரசுகளாக அமைத்துக் கொள்ள முடியவில்லை. நீண்ட காலத்திற்கு முன்னரே அரசைத் தமது கட்டுபாட்டிற்குள் கொண்டுவந்து விட்ட ஆதிக்கம் செலுத்தும் தேசங்களின் ஆளும் வர்க்க பிரிவினரின் சக்தி வாய்ந்த எதிர்ப்பை அவை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இவ்வாறுதான் ஆஸ்திரியாவில் செக்குகளும், போலந்து காரர்களும், ஹங்கேரியில் குரோட்டுகளும், ருசியாவில் லித்துவேனியர்களும், உக்ரேனியர்களும், ஜார்ஜியர்களும், ஆர்மேனியர்களும் மற்றும் பிறரும் தேசங்களாக அமைந்தனர்.

மேற்கு ஐரோப்பாவில் அயர்லாந்து (ஒரு) விதிவிலக்கான ஒன்றாக இருந்தது. ஆனால் கிழக்கு ஜரோப்பாவில் அது ஒரு பொது விதியாக ஆகிவிட்டது. மேற்கு ஐரோப்பாவில், அயர்லாந்தின் விதிவிலக்கான நிலைமைகளின் காரணமாக அங்கே ஒரு தேசிய இயக்கம் தோன்றிற்று. கிழக்கு ஐரோப்பாவில் விழிப்புணர்ச்சி பெற்ற தேசங்களில் அதே முறையில் தேசிய இயக்கங்கள் தோன்றின. இத்தகைய சூழ்நிலைமைகள்தான் கிழக்கு ஐரோப்பாவில் தேசிய இனங்களைப் போராட்டப்பாதைக்கு இட்டுச்சென்றன.

நிச்சயமாக, இப்போராட்டம் ஒட்டு மொத்தமான தேசிய இனங்களுக்கு இடையிலான ஒரு போராட்டமாக கிளம்பவில்லை. அதற்கு மாறாக ஆதிக்கம் செலுத்தும் தேசங்களின் ஆளும் வர்க்கங்களுக்கும் பின்னுக்குத்  தள்ளப்பட்ட தேசங்களின் ஆளும் வர்க்கங்களுக்கும் இடையிலான போராட்டமாகவே எழுந்தன.

வழக்கமாக இப்போராட்டம் ஆதிக்கம் செலுத்தும் (தேசத்தின்) பெருமுதலாளிகளை எதிர்த்து ஒடுக்கப்பட்ட தேசங்களின் நகர்புற குட்டி முதலாளிகளாலோ, அல்லது ஆதிக்கம் செலுத்தும் தேசத்தின் நிலப்பிரபுக்களை எதிர்த்து ஒடுக்கப்பட்ட தேசங்களின் கிராமப்புற முதலாளிகளாலோ, அல்லது ஆதிக்கம் செலுத்தும் தேசத்தை ஆளும் பிரபுகுலத்தினரை எதிர்த்து ஒடுக்கப்பட்ட தேசங்களின் மொத்த "தேசிய" முதலாளிகளாலோ நடத்தப்பட்டது. முதலாளிகள் தலைமைப் பாத்திரத்தை ஆற்றினர்.

முதலாளித்துவம் எழுச்சியுறும் நிலைகளில் தேசியப் போராட்டம் முதலாளிகள் தங்களுக்கிடையில் நடத்தும் ஒரு போராட்டமாகவே இருந்தது என ஸ்டாலின் கூறினார்.

தேசிய பிரச்சினையைப் பொறுத்தவரையில், முதலாளித்துவம் ஒன்றுக்கொன்று தீவிரமாக மாறுபடுகின்ற இரண்டு கட்டங்களைப் பெற்றிருக்கிறது என்றும், இவ்விரண்டு கட்டங்களுக்கிடையில் ஒரு தெளிவான எல்லைக் கோட்டை வரைந்துகொள்ள வேண்டும் என்று மார்க்சியம் கோருகிறது என்பதை லெனின் வலியுறுத்தினார். இவ்வாறு தெளிவாக மாறுபட்டிருக்கின்ற கட்டம் ஒவ்வொன்றின் தனி விசேஷ அம்சங்களையும் எடுத்துக்காட்டினார். தேசிய சுயநிர்ணயத்தைப் பற்றி பரிசீலனை செய்வதற்காக, தேசிய இயக்கம் கடந்தகால நிகழ்வுப்போக்காக ஆகிவிட்ட நாடுகள் (மேற்கு ஐரோப்பாவைச் சேர்ந்த நாடுகளும் அமெரிக்காவும்) என்றும், தேசிய இயக்கம் தற்காலத்து நிகழ்வுப் போக்காகக் கொண்டிருக்கும் நாடுகள் (கிழக்கு ஐரோப்பிய நாடுகள்) என்றும், தேசிய இயக்கம் எதிர்காலத்தில் தோன்றவிருக்கின்ற நாடுகள் (அரைக்காலனிய - காலனிய நாடுகள்) என்றும் உலக நாடுகளை மூன்றாக வகைப்படுத்தினர். மேற்கத்திய ஐரோப்பிய கண்டப் பகுதியில் பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சியின் சகாப்தம் 1789லிருந்து 1871வரையிலான காலப் பகுதியுடன் முடிவடைந்து விட்டது. ஆகையால் 1896ஆம் ஆண்டு லண்டன் சர்வதேச காங்கிரஸ் தீர்மானம் இப்பகுதியைச் சேர்ந்த நாடுகளுக்கு இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே பொருந்தாததாகிவிட்டது. ஆயினும் கிழக்கு ஐரோப்பாவிலும், ஆசியாவிலும் பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சியின் சகாப்தம் 1905ல்தான் தொடங்கிற்று. ஆகையால் 1896-ஆம் ஆண்டு லண்டன் சர்வதேச காங்கிரஸ் தீர்மானம் முன்வைத்த இரு கடமைகள் கிழக்கு ஐரோப்பாவிற்கும், ஆசியாவிற்கும் பொருந்தும் என்றார் லெனின். 1913ம் ஆண்டு கோடையில் நடைபெற்ற ருஷ்ய மார்க்சியவாதிகளின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 1896ம் ஆண்டு லண்டன் தீர்மானத்தின் அதே கோட்பாட்டின் அடிப்படையில்தான் இருந்தது. அந்த நேரத்தில் மார்க்சியவாதிகளின் கண்ணோட்டத்தில், தேசிய இனப் பிரச்சினையானது இன்னமும் உலகரீதியில் முக்கியத்துவம் கொண்டதாக ஆகவில்லை. அச்சமயத்தில் சுயநிர்ணய உரிமை குறித்து மார்க்சியவாதிகளின் அடிப்படைக் கோரிக்கை இன்னும் உலக சோசலிசப் புரட்சியின் பகுதியாகக் கருதப்படவில்லை. அது இன்னும் பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சியின் ஒரு பகுதியாகவே அன்றைய தேரத்தில் கருதப்பட்டது. இக்காலப் பகுதியில்தான், 1912ம் ஆண்டு இறுதியில், "மார்க்சியமும் தேசிய இனப் பிரச்சினையும்" என்ற நூலை ஸ்டாலின் எழுதினார். அந்த நூலில் "முதலாளித்துவம் வளர்ந்து கொண்டிருக்கும்போது நடைபெறும் தேசியப் போராட்டம், பூர்ஷ்வா வர்க்கங்களுக்கிடையில் நடைபெறும் போராட்டமாகும்" என்று அவர் சொன்னார். ஆனால் அதன்பிறகு சர்வதேசிய நிலைமைகளில் ஒரு அடிப்படையான மாற்றம் ஏற்பட்டது. ஒரு புறத்தில் உலகப் பெரும் போரும், மறுபுறத்தில் ரஷ்யாவின் அக்டோபர் புரட்சியின் வெற்றியும் அதுவரை பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சியின் ஒரு பகுதியாகவே இருந்து வந்த தேசிய இனப்பிரச்சினையை உலகப்பாட்டாளி வர்க்க சோசலிசப் புரட்சியின் பகுதியாக மாற்றிவிட்டது. 1916ம் ஆண்டில், "சுயநிர்ணய உரிமை பற்றிய விவாதத்தின் சாராம்சம்" என்ற தனது கட்டுரையில் லெனின், தேசிய பிரச்சினையின் முக்கிய அம்சமும் சுயநிர்ணய உரிமையும் பொதுவான ஜனநாயக இயக்கத்தின் ஒருபகுதியாக இதுவரை இருந்து வந்தது முற்றுப்பெற்றுவிட்டது என்றும், அது பொதுவாக பாட்டாளி வர்க்க சோசலிசப் புரட்சியின் பிரிக்கமுடியாத பகுதியாக ஏற்கனவே மாறிவிட்டது என்றும் கூறினார். எவ்வாறு ஒடுக்கப்படும் வர்க்கத்தின் சர்வாதிகாரம் என்ற இடைநிலைக் காலகட்டத்தின் மூலமாகத்தான் வர்க்கங்களை மனித சமுதாயம் ஒழிக்க முடியுமோ அதேபோல் எல்லாத் தேசங்களுக்கும் முழுவிடுதலை என்ற அதாவது, பிரித்து போவதற்கு சுதந்திரம் உண்டு என்ற இடைநிலைக் கட்டத்தின் மூலம்தான் தவிர்க்க முடியாத வகையில் ஒருமைப்படுவது என்ற நிலையை அடைய முடியுமென அவர் எடுத்துரைத்தார். அதற்குப் பிறகு தேசிய இயக்கத்தின் முக்கியத்துவம், தேசிய இனப்பிரச்சினையின் சாராம்சம் ஆகியவற்றில் மாற்றம் ஏற்பட்டுவிட்ட பிறகு ஸ்டாலின் 1912-ம் ஆண்டில் கூறிய சூத்திரம் பொருந்தாததாக ஆகிவிட்டது. ஒருநாட்டின், உள்நாட்டு அரசின் பிரச்சினையாக இருந்துவந்த தேசிய இனப்பிரச்சனையை, ஒரு பொதுவான பிரச்சினையாக, சர்வதேசப் பிரச்சினையாக, ஏகாதிபத்தியத்தின் நுகத்தடியிலிருந்து காலனிநாடுகள், ஒடுக்கப்பட்ட மக்களை விடுவிக்கும் உலகப் பிரச்சினையாக லெனினியம் மாற்றிற்று என்று ஸ்டாலின் கூறினார்.

இப்பிரச்சினைக் குறித்து மாசேதுங் பின்வருமாறு கூறுகிறார்: "இதிலிருந்து இரண்டுவகைப் புரட்சிகள் உள்ளன என்று அறிகிறோம். முதலாவது, முதலாளித்துவ அல்லது பூர்ஷ்வா வகைப்பட்டதாகும். இப்புரட்சி 1914ல் வெடித்த முதல் ஏகாதிபத்திய உலகப் போருக்குப் பிறகு - குறிப்பாக 1917ம் ஆண்டின் அக்டோபர் புரட்சிக்குப் பிறகு - இறந்த காலப் பொருளாகிவிட்டது. அது முதல் இரண்டாவது வகைப்பட்ட உலகப் புரட்சி தொடங்கிற்று. இது முதலாளித்துவ நாடுகளில் உள்ள பாட்டாளி வர்க்கத்தைப் பிரதான சக்தியாகவும், காலனி, அரைக்காலனி நாடுகளின் ஒடுக்கப்பட்ட மக்கள் தொகையை நேச சக்திகளாகவும் கொண்ட உலகப் பாட்டாளி வர்க்க அல்லது உலக சோஷலிசப் புரட்சியாகும்".

மேலும் சிறுபான்மை தேசிய இனங்களின் பிரச்சினை பற்றி அவர் பின்வருமாறு கூறுகிறார். 1924ல் டாக்டர் சன்யாட்சென் கோமிண்டாங்கின் முதலாவது தேசிய மாநாட்டின் கொள்கை அறிக்கையில் - "கோமிங்டாங்கின் தேசியக் கோட்பாட்டிற்கு இரட்டை அர்த்தம் உண்டு. முதலாவது சீன தேசத்தின் விடுதலை, இரண்டாவது சீனாவில் உள்ள எல்லாத் தேசிய இனங்களுக்குச் சம்த்துவம்" எனவும், "கோமிங்டாங் சீனாவில் உள்ள அனைத்து தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கிறது என்று பிரகடனம் செய்கிறது என்றும், ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் பிரபுக்கள் எதிர்ப்புப் புரட்சி வெற்றியடையும்போது ஒரு சுதந்திரமாக ஐக்கியப்பட்ட சீனக் குடியரசு (அனைத்து தேசிய இனங்களின் ஒரு விருப்பமான ஒன்றியம்) நிறுவப்படும் என்றும் பிரகடனம் செய்கிறது" எனவும் எழுதினார். சீனக் கம்யூனிஸ்டு கட்சி இங்கே கூறப்பட்டுள்ளபடி தேசிய இனங்கள் பற்றி டாக்டர் சென்னின் கொள்கையுடன் முழு உடன்பாடு கொண்டுள்ளது. இதற்காகப் போராட அனைத்து சிறுபான்மை தேசிய இனங்களது மக்களுக்கும் கம்யூனிஸ்டு கட்சிகள் தீவிரமரக உதவி செய்ய வேண்டும். வெகுஜனங்களுடன் தங்களை இணைத்துக் கொண்டிருக்க அவர்களது தலைவர்கள் உட்பட, அந்த மக்களுக்கு அவர்கள் தங்கள் அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார விடுதலைக்கும், அபிவிருத்திக்கும் மக்கள் நலன்களைப் பாதுகாக்கக் கூடிய சொந்த ராணுவங்களை நிறுவவும், கம்யூனிஸ்டுகள் உதவி செய்ய வேண்டும். அவர்களது பேச்சு மற்றும் எழுத்து மொழிகளும் அவர்களது நடை உடை பாவனைகளும், பழக்க வழக்கங்களும், அவர்களது மத நம்பிக்கைகளும் மதிக்கப்பட வேண்டும். (கூட்டு அரசாங்கம் பற்றி பக்கம் 101, 102)

அரைக்காலனிய, சார்பு நாடுகளில் தேசிய சுய நிர்ணயம்

இதுவரை நடந்த விவாதத்தைத் தொகுத்துப் பார்ப்போமானால், தேசிய சுயநிர்ணயம் பற்றிய லெனினியத் தத்துவம், ஸ்டாலின் மற்றும் மாவோவும் அதற்கு அளித்துள்ள விளக்கங்கள் ஆகியவற்றின்படி, அரைக் காலனிய மற்றும் சார்பு நாடுகளின் சுயநிர்ணய உரிமைப் பிரச்சினையில் இரண்டு கோட்பாடுகள் இருப்பதைக் காணலாம். ஒன்று, தேசிய சுயநிர்ணய உரிமை உலகப் பாட்டாளி வர்க்க சோசலிசப் புரட்சியின் பகுதியாக மாறிவிட்டபிறகு, இந்நாடுகளின் சுய நிர்ணய உரிமையும் உலக சோசலிசப் புரட்சியின் பகுதியாக மாறிவிட்டது. ஆகையால் இந்நாடுகளின் சுயநிர்ணய உரிமை புதிய ஜனநாயகப் புரட்சியின் பகுதியாக ஆகிவிட்டது. இரண்டாவது, இந்நாடுகளின் தேசிய கோட்பாட்டுக்கு இரட்டை அர்த்தங்கள் உண்டு. ஒன்று, இந்நாடுகளின் தேச விடுதலை மற்றொன்று, இந்நாடுகளில் உள்ள அனைத்து தேசிய இனங்களுக்குச் சமத்துவம் - அனைத்து தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரித்தல், இந்நாடுகளின் தேச விடுதலை என்று நாம் கூறம்போது, இந்நாடுகள் பல, ஒரே அரசின் கீழ் வாழும் பல தேசிய இனங்களைக் கொண்ட ஒரு நாடாக இருப்பதும், அவை ஏகாதிபத்தியங்களின் - குறிப்பாக அமெரிக்க, சோவியத் சமூக ஏகாதிபத்தியங்களின், ஒரு அரைக்காலனியாகவோ, அல்லது ஒரு நவீன காலனியாகவோ, அல்லது ஒரு சார்பு நாடாகவோ இருப்பத்திலிருந்து தேச விடுதலையைப் பெற வேண்டும் என்ற அர்த்தத்தில் கூறுகிறோம். அதாவது இந்நாடுகளின் தேசிய விடுதலைப் புரட்சி ஒரு புதிய ஜனநாயகப் புரட்சியே ஆகும் என கூறுகிறோம். இந்நாடுகளிலுள்ள தேசிய இனங்களுக்குச் சமத்துவமும் தேசிய இனங்களின் சுயநிர்ணயமும் புதிய ஜனநாயகப் புரட்சியின் ஒரு பகுதி என்று நாம் கூறும்போது, தேசிய சுயநிர்ணய உரிமை உள்நாட்டு ஆளும் வர்க்கங்களுக்கு எதிரானது மட்டுமல்லாமல் ஏகாதிபத்தியத்திற்கும் எதிரானது என்றும், அதற்குத் தலைமை அளிப்பது பாட்டாளி வர்க்கத்தின் கடமை என்றும் பொருள்படும். பாட்டாளி வர்க்க இயக்கத்தின் தலைமையின்றி தேசிய இனங்கள் தமது சுயநிர்ணய உரிமை - அந்நிய ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட ஒருநாட்டின் தேசிய விடுதலையும், அதைப் போலவே அத்தகைய ஒரு நாட்டிலுள்ள ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையும் - புதிய ஜனநாயகப் புரட்சியின் மூலமே, பாட்டாளி வர்க்க இயக்கத்தின் தலைமையின் கீழ் மட்டுமே அமையக்கூடியது என்பதாகும்.

IV. தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமையும் பிரிவினையும்

தேசங்களின் சுயநிர்ணய உரிமை என்பது ஒடுக்கும் தேசத்திலிருந்து ஒடுக்கப்படும் தேசம் அரசியல் ரீதியில் பிரிந்துபோவதற்கான உரிமையை - அரசியல் சுதந்திரம் பெறும் உரிமையைக் குறிக்கிறது. அரசியல் ஜனநாயகத்துக்கே உரிய பல கோரிக்கைகளில் இதுவும் ஒன்று. ஒடுக்கப்படும் தேசம் பிரிந்து போவதற்குக் கிளர்ச்சி செய்ய முழுச்சுதந்திரம் வேண்டும். பிரிந்து போவதுபற்றி ஒரு பொது வாக்கெடுப்பு (கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு) என்பதற்குச் சுதந்திரம் வேண்டும் என்பது உட்பொருளாகும். இதற்கு மாறாக, ஒரு தேசம் எவ்வித நிபந்தனையுமின்றி தனியே பிரிந்துபோக வேண்டும் தனிநாடு - தனி அரசு அமைத்துக் கொள்ளவேண்டும் என்பதே பிரிவினைக் கோரிக்கையாகும். எனவே, அரசியல் ரீதியில் பிரிந்துபோக உரிமை வேண்டும் என்ற தேசிய சுயநிர்ணய உரிமையும், தனியே பிரிந்து போகவேண்டும், தனி அரசு, தனி நாடு அமைக்க வேண்டும் என்ற பிரிவினை கோரிக்கையும் ஒன்றல்ல.

எல்லா தேசிய அபிலாஷைகளையும் ஆதரிப்பது தான் செயல்பூர்வமானது என கூறிக்கொண்டும், தங்களின் சொந்த தேசிய இனத்துக்கு விசேஷமான உரிமைகளையும் விசேஷமான ஆதாயங்களையும் அடைய விரும்பியும் பூர்ஷ்வா வர்க்கத்தினர் ஒவ்வொரு தேசிய விஷயத்திலும் தனியே பிரிந்துபோகும் பிரச்சினை பற்றி "சரி" அல்லது "இல்லை" என பதில் அளிக்க வேண்டுமென கோருகின்றனர். இவ்வாறு பதிலளிப்பது மிகவும் செயல் பூர்வமானதாக தோன்றலாம். ஆனால் அது சித்தாந்த ரீதியில் மாறாநிலை வகைப்பட்டது ஆகும். நடைமுறையில் பூர்ஷ்வாக்களின் கொள்கைக்குப் பாட்டாளி வர்ககததைக் கீழ் படுத்துவதுமாகும்.

தேசிய அமைதியையும், தேசிய சம உரிமையையும் பெறுவதற்காகவும் வர்க்கப் போராட்டத்துக்குச் சிறந்த நிலைமைகளையும் தோற்றுவிப்பதற்காகவும்தான் தொழிலாளிவர்க்கம் தேசிய இனப்பிரச்சினையில் பூர்ஷ்வாக்களுக்கு நிபந்தனையுடன் கூடிய ஆதரவை அளிக்கிறது. எனவே, பூர்ஷ்வாக்களின் செயல்பூர்வ வாதத்தை எதிர்த்துதான், தேசிய இனப் பிரச்சினை பற்றி பாட்டாளி வர்க்கம் தனது கோட்பாடுகளைக் கொண்ட கொள்கைகளை வகுத்துக் கொள்கிறது. தங்களின் தேசிய இனத்துக்கு விசேஷ உரிமைகளும் விசேஷ ஆதாயங்களும் வேண்டும் என்பதை எதிர்க்கிறது. வர்க்கப் போராட்டத்துக்கு கீழ்பட்டதாகத்தான் இக்கோரிக்கையைக் கருதுகிறது. சித்தாந்த ரீதியில் பார்த்தால், ஜனநாயகப் புரட்சியானது ஒரு குறிப்பிட்ட தேசிய இனம் இன்னொரு தேசிய இனத்திலிருந்து பிரிந்துபோவதில் முடியுமா அல்லது சமத்துவம் பெறுவதில் முடியுமா என்பதை முன்கூட்டியே சொல்ல முடியாது என அது கூறுகிறது. முடிவு இரண்டில் எது ஒன்றானாலும் தனது வர்க்கத்தின் அபிவிருத்திக்கு வழி செய்வதுதான் பாட்டாளி வர்க்கத்துக்கு முக்கியமானதாகும். எந்த தேசிய இனத்துக்கும் உத்திரவாதம் செய்யாமலும் இன்னொரு தேசிய இனத்துக்கு எதையும் செய்வோம் என்ற உத்திரவாதம் அளிக்காமலும், சுயநிர்ண உரிமையை அங்கீகரிக்க வேண்டும் என்ற எதிர்மறைக் கோரிக்கையுடன் தன்னை நிறுத்திக் கொள்கிறது. அனைத்திலும் மிகவும் ஜனநாயகப் பூர்வமான ஒரு தீர்வைப் பெறுவதற்கு இது ஒன்றுதான் சிறந்த முறையில் உத்திரவாதமளிக்கிறது.

தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைப் பிரச்சினை ஒரு தனித்து இயங்கும் தன்னோடு நின்று கொள்ளும் ஒரு பிரச்சினை அல்லவென்றும் அது தொழிலாளி வர்க்கப் புரட்சி என்ற பொது பிரச்சினையின் ஒரு பகுதியே ஆகும் என்றும் மார்க்சியம் கூறுகிறது. பகுதி முழுமைக்குக் கீழ்படிந்துதான் இருக்கவேண்டும் என்பதால், பொதுப் பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டே இப்பிரச்சினையைப் பரிசீலிக்க வேண்டும். அரசியல் சுதந்திரம் அரசியல் ஜனநாயகம் என்பதற்கு ஒரு தேசத்தின் பிரிவினை சேவை செய்கிறதா என்பதைப் பொறுத்தே தீர்மானிக்க வேண்டும் என மார்க்சியம் கூறுகிறது. சான்றாக, சென்ற நூற்றாண்டில், மார்க்ஸ் ஹங்கேரி, போலந்து தேசிய விடுதலை இயக்கங்களை ஆதரித்தார். செக், தெற்கு ஸ்லாவியர்கள் தேசிய இயக்கங்களை எதிர்த்தார். ஏனெனில் ஐரோப்பிய புரட்சி இயக்கத்திற்கு ஜாரிய எதேச்சதிகாரம் பரம எதிரியாக இருந்தது. முன்னர் கூறப்பட்ட இரண்டு தேசிய இயக்கங்கள் எதேச்சதிகார ஆட்சியை எதிர்த்துப் போராடின. பின்னர் கூறப்பட்ட இரண்டும் ஜாரிய எதேச்சதிகாரத்தின் புறக்காவல் நிலையங்களாக இருந்தன. எனவேதான் லெனின் பின்வருமாறு கூறினார்:

"சுயநிர்ணய உரிமை கோரிக்கை உட்பட, ஜனநாயகத்தின் பல்வேறு கோரிக்கைகளும், தனி நிலையில் இயங்குபவை அல்ல. அதற்குப் பதிலாக, பொதுவான ஜனநாயக (இப்போது பொதுவான சோசலிச) உலக இயக்கத்தின் ஒரு சிறுபகுதியே. அவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட சில திட்டவட்டமான சமயங்களில், பகுதி என்பது பொது பிரச்சினைக்கு முரணாகப் போகக்கூடும். அப்படி முரண்படுகிறபோது, அதை நிராகரித்து விடவேண்டும்".

பிரிவினையை எதிர்க்க வேண்டுமா?

அனைத்து தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும் என்ற எதிர்மறைக் கோரிக்கையுடன் பாட்டாளிவர்க்க இயக்கம் தன்னை நிறுத்திக் கொள்கிறது என்ற காரணத்தால், அனைத்து பிரிவினை - தனிநாடு (தனி அரசு) கோரிக்கைகளையும், அது விதிவிலக்கின்றியும், நிபந்தனையின்றியும் எதிர்க்க வேண்டும் என்று பொருள் கொள்ளத் தகுமா? அல்லது அது நடுநிலை வகிக்க வேண்டும் என்று கூறத் தகுமா? மார்க்சிய-லெனினியம் அவ்வாறு கூறவில்லை. அதற்கு மாறாக, ஏதாவது ஒரு தேசிய இனம் பிரிந்து போவதைப் பற்றிய பிரச்சினை எழுகின்றபோது, பாட்டாளி வர்க்க இயக்கம் தேசிய இனங்களுக்கிடையில் உள்ள ஏற்றத் தாழ்வுகளையும், எல்லாவித விசேஷ உரிமைகளையும், எல்லா தனித்துவப் போக்குகளையும் நீக்கும் நோக்கத்துடன் அப்பிரச்சினையைச் சீர் தூக்கி பார்க்க வேண்டும் என லெனின் கோருகிறார். ஸ்தூலமானதொரு தேசிய சுதந்திர கோரிக்கையை பிரித்து எவ்வாறு உண்மையில் ஒரு மார்க்சிய கண்ணோட்டத்திலிருந்து ஆராய வேண்டும் என்பதை எடுத்துக் காட்டுவதற்குச் சான்றாக அயர்லாந்து பிரச்சினையை எடுத்துக் காண்பித்தார். பிரிவினை பிரச்சினை பற்றி எழுந்த மோதலில் நார்வே, ஸ்வீடன் ஆகிய இரு நாடுகளின் பாட்டாளி வர்க்கம் என்ன நிலையை மேற்கொண்டன என்பதை அவர் எடுத்துக் காட்டியுள்ளார். முதலாவதாக, அயர்லாந்து உதாரணத்தை எடுத்துக் கொள்ளலாம். அயர்லாந்து பிரிந்து போவதை மார்க்ஸ் ஆதரித்தார். அதற்கான காரணத்தை அவர் பின்வருமாறு கூறுகிறார்: "அயர்லாந்தை விட்டுத்தொலைக்கும் வரை ஆங்கிலேயேத் தொழிலாளி வர்க்கம் எதையும் சாதிக்க முடியாது... இங்கிலாந்தில் ஆங்கிலேயேப் பிற்போக்குவாதத்துக்கு மூல காரணம் அது அயர்லாத்தை அடிமைப்படுத்தியதுதான்" (அழுத்தம் மார்க்சினுடையது).

அயர்லாந்து தேசிய இனத்தின் தேசிய இயக்கத்தினால் அல்லாமல் இங்கிலாந்தின் தொழிலாளர் வர்க்க இயக்கத்தின் வெற்றியால்தான் அயர்லாந்து விடுதலையடையும் என்று மார்க்ஸ் முதலில் நினைத்தார். ஆனால் ஆங்கிலேயே தொழிலாளர் வர்க்கம் பூர்ஷ்வா மிதவாதக் கொள்கையில் மூழ்கி தலைமை பாத்திரத்தை இழந்துவிட்டது; அதே சமயம் அயர்லாந்தின் பூர்ஷ்வா விடுதலை இயக்கம் வலிமை பெற்று புரட்சிகர வடிவங்களை எடுத்துக் கொண்டது. மார்க்ஸ் தனது கருத்துக்களைப் பரிசீலித்து திருத்திக் கொண்டார். அயர்லாத்தை இங்கிலாந்து அடிமைப்படுத்தும்வரை, இங்கிலாத்தில் பிற்போக்கு வலுப்பெறும். இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டத்திற்குச் சிறப்பான நிலைமைகளைத் தோற்றுவிப்பதற்கு அயர்லாந்தின் பிரிவினை ஒரு முன்நிபந்தனையாக ஆகிவிட்டது என அவர் கருதினார். ஆகையால் அயர்லாந்தின் பிரிவினையை அவர் ஆதரித்தார்.

நார்வே-ஸ்விடன் பிரச்சினை

அடுத்ததாக, ஸ்வீடனிலிருந்து நார்வே பிரிந்து சென்ற பிரச்சினையை எடுத்துக்கொள்வோம். நார்வே ஸ்வீடனுடன் இணைந்தது. நார்வேயின் இணைப்பு அந்நாட்டு மக்கள் சுயவிருப்பத்தால் செய்து கொண்ட ஒரு ஒப்பத்தத்தால் ஏற்பட்டதல்ல. நெப்போலியனை எதிர்த்து நடந்த  போர்களின்போது, நார்வே மக்களின் விருப்பத்திற்கு எதிராக, ஸ்வீடனுக்கு மன்னர்களால் நார்வே அளிக்கப்பட்டது.

அதற்கு பிறகு நார்வேவை அடக்கி அதை கீழ்படிய வைப்பதற்கு ஸ்வீடன் தனது படைகளை நார்வேவுக்கு அனுப்பியது. நார்வேவுக்கு மிக விரிவான சுயநிர்வாக உரிமை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்ட பிறகு பல ஆண்டுகள் இரண்டு தேசங்களுக்கு இடையில் தகராறுகளும், மோதல்களும் இருந்து வந்தன. ஸ்வீடனின் உயர்குடியினருடைய ஆட்சியை உதறி எறிவதற்கு நார்வே மக்கள் தீவிரமாக முயன்றார்கள். கடைசியில் 1905 ஆகஸ்டில் அவர்கள் வெற்றி பெற்றனர். பின்னர் நடந்த பொது மக்கள் வாக்கெடுப்பில் மிகப் பெரு வாரியான நார்வே மக்கள் ஸ்வீடனிலிருந்து நார்வே அறவே பிரிந்து போவதற்கு ஆதரவாக வாக்களித்தனர். சிறிது காலம் முடிவு செய்யாமல் இருந்தபின், ஸ்வீடன் பிரிவினையை ஏற்றுக் கொண்டது.

ஸ்வீடனிலிருந்து நார்வே பிரிந்து போனதற்கான ஸ்தூலமான வரலாற்று அம்சங்களை லெனின் ஆய்வு செய்தார். இந்தப் பிரிவினை சம்பந்தமாக இந்த இரு நாடுகளின் பாட்டாளி வர்க்கத்தை எதிர்நோக்கிய கடமைகளையும் அவர் கணக்கிலெடுத்துக் கொண்டார். அவற்றின் அடிப்படையில், இப்பிரிவினையிலிருந்து உலகப் பாட்டாளி வர்க்கம் கற்றுக் கொள்ளவேண்டிய படிப்பினைகளை பின்வருமாறு (அவர்) தொகுத்து வைத்துள்ளார்.

"நவீன பொருளாதார, அரசியல் உறவுசுளின் கீழ் எந்த அடிப்படையில் தேசிய இனங்கள் பிரிந்து போகுதல் நடைமுறைச் சாத்தியமாகிறது, உண்மையில் ஏற்படுகிறது என்பதையும், அரசியல் சுதந்திரம், ஜனநாயகம் என்கிற நிலைமைகளில் சில சமயங்களில் பிரிவினை எந்த வடிவத்தைக் கொடுக்கிறது என்பதையும் இந்த உதாரணம் நமக்குக் காண்பிக்கிறது. தேசிய இனங்கள் பிரிந்து போவது பற்றி எழக்கூடிய மோதல்களை "ருஷ்ய முறையில்" தீர்க்காமல், நார்வேக்கும் ஸ்வீடனுக்கும் இடையில் 1905ல் அது தீர்க்கப் பட்டதே அதே முறையில் தீர்ப்பதற்கு முறையாகப் பிரச்சாரம் செய்வதும், மக்களைத் தயார் செய்வதும் வர்க்க உணர்வு கொண்ட தொழிலாளர்களின் கட்டாயக் கடமை என்பதை எந்த சோஷியல்-டெமாகிரேட்டும் மறுக்க முடியாது. இதை மறுக்கும் ஒரு சோஷியல்-டெமாகிரேட்டு அரசியல் சுதந்திரம், ஜனநாயகம் ஆகிய பிரச்சினைகளைப் பற்றி அக்கறையில்லாதவராக இருக்க வேண்டும் (அப்படியானால் அவர் அப்போது சோஷியல்-டெமாகிரேட்டே அல்ல).

தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமையை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று செயல் திட்டம் கோருவதின் உண்மையான பொருள் இதுதான். பிரிதல் பிரச்சினை பற்றி எழுந்த மோதலில் நார்வே, ஸ்வீடன் ஆகிய நாடுகளின் பாட்டாளி வர்க்கம் என்ன நிலைமையை மேற்கொண்டது? என்ன நிலைமையை மேற்கொள்ள வேண்டியிருந்தது? நார்வே பிரிந்த பிறகு, நார்வேயின் வர்க்க உணர்வு கொண்ட தொழிலாளர்கள் குடியரசு அமைக்க வேண்டுமென்றுதான் வாக்களித்திருப்பார்கள். சில சோசலிஸ்டுகள் அதற்கு மாறாக வாக்களித்திருப்பார்கள் என்றால், ஐரோப்பிய சோசலிச இயக்கத்தில் எவ்வளவு மடத்தனமான பிலிஸ்டைன் சந்தர்ப்பவாதம் சிற்சில சமயங்களில் காணப்படுகிறது என்பதைத்தான் அது காண்பிக்கிறது......... பிரிதல் பிரச்சினை பற்றி நார்வேயின் சோஷியல்-டெமாகிரேட்டுகள் குறிப்பிட்ட கருத்துக்களைத்தான் கொண்டிருக்க வேண்டுமென்று நார்வே சோசலிஸ்டுச் செயல்திட்டம் வலியுறுத்தியதா என்பது - நமக்குத் தெரியவில்லை. அது அவ்வாறு செய்யவில்லை என்று நாம் வைத்துக் கொள்வோம். வர்க்கப் போராட்டத்தைத் தடையின்றி நடத்துவதற்கு நார்வேயின் சுயநிர்வாக உரிமையானது எந்த அளவுக்கு வகை செய்தது என்பதைப் பற்றியும், அல்லது ஸ்வீடிஷ் உயர்குடி மக்கள் ஆட்சியுடனான முடிவற்ற மோதல்களும், பூசல்களும் எந்த அளவுக்கு பொருளாதார வாழ்வின் சுதந்திரத்துக்குத் தடையாக விளங்கின என்பதைப் பற்றியும் அது ஒன்றும் கூறவில்லை என்று நாம் வைத்துக் கொள்வோம். ஆனால் நார்வேயின் பாட்டாளி வர்க்கம் ஸ்வீடன் உயர் குடியினரின் ஆட்சியை எதிர்த்து, நார்வேயின் குடியானவர் ஜனநாயகத்தை (அதிலுள்ள பிலிஸ்டைன்வாத குறைபாடுகளுடன்) ஆதரிக்க வேண்டியிருந்தது".

"ஸ்வீடிஷ் பாட்டாளி வர்க்கம் என்ன செய்தது......... ஸ்வீடிஷ் சோஷியல்-டெமாகிரேட்டுகள் தங்கள் சக்தி முழுவதையும் கொண்டு நிலப்பிரபுக்களுடையவும் "கோக் கோஷ்கினுடையவும்" கொள்கை வாதத்துக்கும் கொள்கைக்கு எதிராகவும் போராடாமலும், பொதுவாகத தேசிய இனங்களுக்குச் சம அந்தஸ்து வேண்டும் (இக் கொள்கையை கோக் கோஷ்கின்களும் ஏற்றுக் கொள்கிறார்கள்) என்று கோரியது மட்டுமின்றி, அவைகளுக்குச் சுயநிர்ணய உரிமை வேண்டும் என்றும், நார்வே பிரிந்து போவதற்கு உரிமைவேண்டும் என்றும் கோராமலும் இக்கோரிக்கைகளை எழுப்பாமலும் இருப்பார்களேயானால், அவர்கள் சோசலிஸம், ஜனநாயகம் ஆகியவற்றின் நலன்களுக்குத் துரோகம் செய்தவர்களாகி இருப்பார்கள் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

நார்வே, ஸ்வீடன் தொழிலாளர்களிடையிலான நெருங்கிய கூட்டும், அவர்களது பூரணமான சகோதர வர்க்க ஒருமைப்பாடும்தான் நார்வே மக்களின் பிரிந்து போகும் உரிமையை ஸ்வீடிஷ் தொழிலாளர்கள் ஏற்றுக் கொண்டதன் மூலம் லாபமடைந்தது. ஸ்வீடிஸ் தேசியவாதம் என்ற தொற்று

நோயினால் ஸ்வீடிஷ் தொழிலாளிகள் பீடிக்கப்படவில்லை என்பதையும், அவர்கள் ஸ்வீடிஷ் பூர்ஷ்வாக்களின், உயர் குடியினரின் விசேஷ உரிமைகளைவிட நார்வே தொழிலாளர்களுடனான சகோதரப் பற்றை மேலானதாகப் போற்றினர் என்பதும் இது நார்வேத் தொழிலாளிகட்கு நம்பிக்கை அளித்தது. ஐரோப்பிய மன்னர்களாலும் ஸ்வீடிஷ் உயர் குடியினராலும் நார்வேயின்மீது திணிக்கப்பட்ட உறவுகள் கலைந்ததால் நார்வே, ஸ்வீடன் தொழிலாளிகளின் உறவுகள் வலுவடைந்தன. பூர்ஷ்வாக் கொள்கைப் போக்கில் ஏற்படும் மாற்றங்கள், திருப்பங்கள் மீறி பூர்ஷ்வா உறவுகளின் விளைவாக நார்வேயானது மீண்டும் ஸ்வீடனுக்குக் கீழ்படுத்தப்படுவதும் சாத்தியமே! - ஸ்வீடிஷ், நார்வே ஆகிய இரு பூர்ஷ்வாக்களுக்கெதிரான போராட்டத்தில் இரு தேசிய இனங்களையும் சேர்ந்த தொழிலாளர்களின் சம அந்தஸ்தையும் வர்க்க ஒருமைப்பாட்டையும் தங்களால் பேணிப் பாதுகாக்க முடியும் என்பதை ஸ்வீடிஷ் தொழிலாளர்கள் நிரூபித்து விட்டார்கள்".

இம்மேற்கோளிலிருந்து லெனின் பின்வருவனவற்றை கூறியுள்ளதைக் காணலாம்:

சில வரலாற்று நிலைமைகளில் அரசியல் சுதந்திரம், ஜனநாயகம் என்ற கோரிக்கை, ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் பிரிவினை வடிவத்தை எடுத்துக்கொள்கிறது.

தேசிய இனங்கள் பிரிந்து போவது பற்றி எழக்கூடிய மோதல்களை வாக்கெடுப்பின் மூலம் தீர்ப்பதற்கு முறையாகப் பிரச்சாரம் செய்வதும் மக்களைத் தயார் செய்வதும் வர்க்க உணர்வு பெற்ற தொழிலாளர்களின் கட்டாயக் கடமையாகும். இதை மறுப்பவர் அரசியல் சுதந்திரம், ஜனநாயகம் ஆகிய பிரச்சினைகளைப் பற்றி அக்கறையில்லாதவர். அவர் ஒரு சோசலிஸ்டே அல்ல. செயல் திட்டத்தில் இக்கோரிக்கையை முன்வைப்பதன் உண்மையான பொருள் இதுதான். (அதாவது வாக்கெடுப்பு நடத்தும் சுதந்திரம்)

ஓர் ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் (நார்வேயின்) பாட்டாளி வர்க்கம் பிரிவினையை ஆதரிக்க வேண்டுமா? இல்லையா? என தீர்மானிப்பதற்குப் பின்வரும் நிலைமைகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது:

1. வர்க்கப் போராட்டத்தை தடையின்றி நடத்துவதற்கு சுயநிர்வாகம் வகை செய்ததா? அல்லது தடையாக இருந்ததா?

2. ஒடுக்கும் தேசிய இனத்தின் ஆட்சியுடனான முடிவற்ற மோதல்களும், பூசல்களும் எந்த அளவிற்கு பொருளாதார வாழ்வின் சுதந்திரத்திற்கு தடையாக இருந்தது?

3. ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் (நார்வேயின்) தொழிலாளி வர்க்கம் தம் நாட்டு குடியானவரின் ஜனநாயகத்திற்கு ஆதரவு அளித்தல்.

ஒடுக்கும் தேசிய இனத்தின் (ஸ்வீடனின்) பாட்டாளி வர்க்கம் பின்வரும் கடமைகளை நிறைவேற்றியது:

1. தன் சொந்த தேசிய இனத்தின், நாட்டின் ஆளும் வர்க்கங்களை (நிலப்பிரபுகளையும், கொக்கோஷ்கின்களையும்) எதிர்த்து போராடியது.

2. தேசிய இனங்களின் சம அந்தஸ்துக்காகவும், சுயநிர்ணய உரிமைக்காகவும் ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் (நார்வேயின்) பிரிந்துபோகும் உரிமைக்காகவும் போராடியது.

3. ஒடுக்கும் தேசிய இனத்தின் (ஸ்வீடனின்) தொழிலாளர்கள் தங்கள் சொந்த தேசிய இனத்தின் (நாட்டின்) பூர்ஷ்வாக்களின் விசேஷ உரிமைகளைவிட ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் (நார்வேயின்) தொழிலாளர்களுடனான சகோதரப்பற்றை மேலானதாகப் போற்றினர்.

ஒடுக்கும் தேசிய இனத்தின் (ஸ்விடன்) ஆளும் வர்க்கத்தினரால் ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் (நார்வேயின்) மீது திணிக்கப்பட்ட உறவுகள் கலைந்ததால், இரு தேசிய இனங்களின் தொழிலாளர்களின் உறவுகள் வலுவடைந்தன.

சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்ததனால்தான் இரு தேசிய இனங்களின் தொழிலாளர்களுடைய சம அந்தஸ்தும் வர்க்க ஒருமைப்பாடும் பாதுகாக்க முடிந்தது.

தேசிய சுயநிர்ணய உரிமை பற்றிய மார்க்ஸ், லெனின் ஆகியோரின் தத்துவம் மற்றும் கோட்பாடுகளைப் பற்றிய நமது இந்த பரிசீலனையானது, ஒடுக்கப்படுகின்ற தேசிய இனங்கள் பிரிந்து போவது சரியா, இல்லையா என்ற விசயத்தில் பாட்டாளி வர்க்க இயக்கம் நடுநிலை வகிக்கவேண்டும் என்ற கோட்பாடும் அனைத்து பிரிவினைக் கோரிக்கைகளை எதிர்க்க வேண்டும் என்கின்ற கோட்பாடும் மார்க்சிய-லெனினிய வகைப்பட்டதல்ல என தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என்பதின் உண்மையான பொருள்

எனவே, மார்க்சிய-லெனினியத்தின்படி அனைத்து தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும் என்பதன் உண்மையான பொருள் என்னவென்பதைத் தொகுத்து கூறுவோம்.

1. ஒரு குறிப்பிட்ட நாட்டிலுள்ள அனைத்து தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும் என மார்க்சிய லெனினியவாதிகள் கூறுவதன் பொருள், பின்வருவன அவர்களிடமிருந்து கோரப்படுகின்றன என்பதே ஆகும்.

அ. அரசியல் ரீதியில் பிரிந்து போக விரும்புகின்ற ஒரு தேசிய இனத்தின் மீது ஆதிக்கம் செலுத்துகின்ற தேசிய இனம் அல்லது அரசு எந்த வடிவத்தில் பலாத்காரத்தை பிரயோகித்தாலும் அதை மார்க்சிய-லெனினிய வாதிகள் (கம்யூனிஸ்டுகள்) நிபந்தனையின்றி எதிர்க்க வேண்டும்.

ஆ. ஒரு ஒடுக்கப்பட்ட தேசிய இனம் பிரிந்துபோக வேண்டும் என்ற பிரச்சினை எழும்போது, அப்பிரச்சினையை ஒரு சர்வஜன நேரடி சமவாக்கு என்றவற்றின் அடிப்படையில் அப்பிரதேச மக்களிடம் ஒரு ரகசிய வாக்கெடுப்பு (கருத்து கணிப்பு) நடத்தப்படுவதில் மூலம் மட்டுமே தீர்க்கப்பட வேண்டும் என அவர்கள் கோர வேண்டும்.

இ. பிற்போக்கான தேசியவாதிகள், பொதுவாக தேசிய இனங்கள் மீது கொண்டு வருகிற ஒடுக்குமுறையையும் அல்லது அதற்கு அளிக்கின்ற ஆதரவையும், குறிப்பாக அவர்கள் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை மறுக்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதை எதிர்த்து மார்க்சிய-வெனினியவாதிகள் தளராமல் தொடர்ந்து போராடவேண்டும்.

2. அனைத்து தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை மார்க்சிய-லெனினிய வாதிகள் அங்கீகரிப்பதை, ஒவ்வொரு தனி வழக்காக எடுத்துக் கொண்டு, ஒரு தேசிய இனம் பிரித்து போவது பொருத்தமானதுதான் என ஒரு சுயேச்சையான மதிப்பீட்டை மார்க்சிய- லெனினிய வாதிகள் செய்ய வேண்டுமென்பதை நிராகரிக்க வேண்டுமென நிச்சயமாக பொருள் கொள்ளக்கூடாது. அவ்வாறு (ஒரு சுயேச்சையான மதிப்பீடு) செய்வதை நிராகரிப்பதற்கு மாறாக, குறிப்பிட்ட நாட்டின் முதலாளித்துவ வளர்ச்சியின் நிலைமைகளையும், அனைத்து தேசிய இனங்களையும் சேர்ந்த பூர்சுவாக்கள் ஐக்கியப்பட்டு, பல்வேறு தேசிய இனங்களின் பாட்டாளி வர்க்கத்தின் மீது தொடுக்கின்ற ஒடுக்குமுறையையும், பொதுவான ஜனநாயகப் பணிகளையும், முதலாவதாகவும் எல்லாவற்றிற்கும் மேலாகவும் சோசலிசத்திற்கான பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு, மார்க்சிய-லெனினிய வாதிகள் ஒரு சுயேச்சையான மதிப்பீட்டைச் செய்யவேண்டும்.

காலனி நாடுகளில் தேசிய சுயநிர்ணயம்

முதலாளித்துவ நாடுகளில் உள்ள தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை பற்றியும், ஒரு ஒடுக்கப்பட்ட தேசிய இனம் ஒடுக்கும் தேசிய இனத்திலிருந்து அரசியல் ரீதியில் பிரிந்துபோக வேண்டும் என்ற பிரச்சினை எழும்போது பாட்டாளிவர்க்க இயக்கம் அப்பிரச்சினை குறித்து என்ன அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும் பரிசீலனை செய்தோம். அடுத்ததாக, காலனி நாடுகள் மற்றும் சார்பு நாடுகளின் சுயநிர்ணய உரிமை பிரச்சினையை எடுத்துக் கொள்வோம் ஏகாதிபத்தியத்தின் கீழ் ஒடுக்கும் தேசங்கள், ஒடுக்கப்படும் தேசங்கள் என பிரிக்கப்படுவது அடிப்படையானதாகும் என்றார் லெனின். ஏகாதிபத்திய (ஒடுக்கும்) நாட்டிலிருந்து ஒரு காலனி நாடு அல்லது சார்புநாடு அரசியல் ரீதியில் பிரிந்து போகும் உரிமை, அரசியல் சுதந்திரம் பெறும் உரிமை என்பதுதான் அந்த நாடுகளின் சுயநிர்ணய உரிமையாகும். காலனிகளுக்குப் பிரிந்து போகும் முழு சுதந்திரத்தை ஏகாதிபத்திய அரசாங்கங்கள் கொடுக்க வேண்டும். உண்மையான சுயநிர்ணய உரிமையை அளிக்க வேண்டும் என்று சொன்னார். ஒரு குறிப்பிட்ட அரசின் எல்லைகட்குள் ஒடுக்கப்படும் தேசங்கள் பலவந்தமாக பிடித்து வைத்துக் கொள்ளப்பட்டிருப்பதற்கு எதிராகப் பாட்டாளி வர்க்கம் போராட வேண்டும். அதாவது சுயநிர்ணய உரிமைக்காகப் போராட வேண்டும் என்றார். காலனி நாடுகள் மற்றும் சார்பு நாடுகள் சுயநிர்ண்ய உரிமையை பற்றி விளக்கி பின் வருமாறு லெனின் கூறினார்:

"மங்கோலியர்கள், பாரசீகர்கள், எகிப்தியர் மற்றும் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சமத்துவமற்ற தேசங்கள் அனைத்திற்கும் விதிவிலக்கின்றி அனைத்திற்கும் பிரிவினை சுதந்திரம் வேண்டும் என்று நாம் கோருகிறோம் என்றால் நாம் பிரிவினை விரும்புகிறோம் (பிரிவினைக்கு சாதகமானவர்கள்)" என்பதனால் அல்ல. ஆனால் வலுக்கட்டாயமாக ஒன்று சேர்வது, சேர்க்கப்படுவது என்பதற்கு மாறுபட்டதாக, சுதந்திரமாக தானாக வந்துசேரும் சேர்க்கையையும் ஒன்றாக கலப்பதையும் விரும்புகின்றோம். அதற்காக நாம் நிற்கின்றோம் என்பதனால் மட்டும்தான் - அது ஒன்றேதான் காரணமாகும்!"

தேசிய இனப்பிரச்சனையில் இரு போக்குகள் மற்றும் இருபக்கங்கள்

ஏகபோக மூலதனத்தின் - ஏகாதிபத்தியத்தின் கட்டத்தில், தேசிய இன பிரச்சனையில் இரண்டு பக்கங்களும், இரண்டு போக்குகளும் உள்ளன.

ஏகாதிபத்தியம் காலனி நாடுகளை ஒடுக்குதல், சுரண்டுதல் ஆகியவற்றின் விளைவாக, ஏகாதிபத்திய விலங்குகளிலிருந்து அரசியல் விடுதலைப் பெற்று தேசிய ரீதியில் தன் அரசை அமைக்க முயலும் போக்கு ஒன்று.

உலகச் சந்தையும் உலகப் பொருளாதார அமைப்பும் உண்டாக்கியிருப்பதின் விளைவாக பல்வேறு தேசங்கள் பொருளாதாரத் துறையில் நெருங்கிவரும் போக்கு மற்றொன்று.

இவ்விரண்டு போக்குகளும் முதலாளித்துவத்தின் பொது விதியாகும். எனினும் ஏகாதிபத்தியத்தின்கீழ் இவையிரண்டும் சமரசபடுத்த முடியாத முரண்பாடுகளாக ஆகியிருக்கின்றன.

ஏனெனில் காலனி நாடுகளை சுரண்டாமலும், அவற்றை வலுக்கட்டாயமாக ஒரே வட்டத்திற்குள்ளே வைத்துக்கொள்ளாமலும் ஏகாதிபத்தியத்தால் வாழ முடியாது. ஆக்கிரமிப்பு, படையெடுத்து கைப்பற்றுதல் ஆகியவற்றின் மூலம்தான் பல்வேறு தேசங்களை ஒரு வட்டத்திற்குள் கொண்டுவந்து அடக்கி அது தன் பிடியில் வைத்திருக்க முடியும். ஏகாதிபத்தியத்திற்கு இதைதவிர வேறு வழியில்லை.

இதற்கு மாறாக, பாட்டாளி வர்க்க இயக்கத்திற்கு இவை இரண்டும் ஒரே லட்சியத்தின் இரண்டு பக்கங்களாகும். ஒடுக்கப்பட்ட மக்களை ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கத்திலிருத்து விடுதலை செய்வது என்ற இலட்சியத்தின் இரண்டு பக்கங்கள்தான் இவை. பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையிலும், மனமுவந்த உடன்பாட்டின் அடிப்படையிலும்தான் எல்லா தேசங்களும் ஒரே உலகப் பொருளாதார அமைப்பிற்குள் ஒரு ஒன்றியமாக அமைவது சாத்தியம் என்பதை லெனினியம் அறிந்திருக்கிறது. ஏகாதிபத்தியப் பேரரசு வட்டத்திலிருந்து காலனிகள் பிரிவதின் மூலமாகதான் தேசங்கள் தங்களின் விருப்பத்தின்படி ஒரு ஒன்றியமாக அமைவது சாத்தியம். காலனித்துவ நிலையிலிருந்து தனி சுதந்திர நாடாக இந்நாடுகள் பண்பு ரீதியான மாறுபாடு அடைவதின் மூலமாகவேதான் இது சாத்தியமாகும் என்றும் லெனினியம் அறிந்திருக்கிறது.

காலனி நாடுகள் மற்றும் சார்பு நாடுகளைப் பொறுத்தமட்டில், அவற்றின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தல் என்கிற எதிர்மறை கோரிக்கையுடன் பாட்டாளி வர்க்கம் தன்னை நிறுத்திக் கொள்ள வேண்டுமென்று லெனினியம் கூறவில்லை. அதற்கு மாறாக காலனி நாடுகள் மற்றும் சார்பு நாடுகள் ஏகாதிபத்திய (ஒடுக்கும்) நாட்டிலிருந்து அரசியல் ரீதியில் பிரிந்து தனி அரசை அமைத்துக் கொள்வதை லெனினியம் ஆதரிக்கிறது.

V.தேசிய இனப் பிரச்சனையில் மார்க்சிய-லெனினிய அணுகுமுறை

1. நவகாலனித்துவ, அரைக்காலனித்துவ மற்றும் சார்பு நாடுகளில் இன்று எழுகின்ற தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை பிரச்சினையையும், ஒடுக்கும் தேசிய இனத்திலிருந்து அல்லது அரசிலிருந்து ஒரு ஒடுக்கப்படும் தேசிய இனம் அரசியல் ரீதியில் பிரிந்து போகும் பிரச்சினையையும் மார்க்சிய-லெனினிய அடிப்படையில் எவ்வாறு கையாள வேண்டும் என்பது நம்முன்னுள்ள பிரச்சினையாகும். 1916ம் ஆண்டு வரையில், தேசிய இனப் பிரச்சினை பற்றி லெனின் செய்த ஆராய்ச்சிகள், முதலாளித்துவ நாடுகளில் உள்ள தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் ஒடுக்கும் தேசிய இனத்திலிருந்து ஒரு ஒடுக்கப்படும் தேசிய இனம் பிரிந்து போவது பற்றியதாகவே உள்ளன. 1916ம் ஆண்டில் "தேசிய இனங்களின் சுயநிர்ணயம் பற்றிய விவாதத்தின் சாராம்சம்" என்ற நூலில்தான் அவர் காலனிநாடுகளும், சார்பு நாடுகளும் ஒடுக்கும் நாடுகளை விட்டு பரிபூர்ணமாக பிரிந்து போவதற்கான உரிமையை சுயேச்சையான அரசுகளை அமைத்துக்கொண்டு  சுதந்திரமாக வாழும் உரிமை என்று பொருள்படும் என விளக்கம் அளித்தார். அவர் காலத்தில் அரைக்காலனி மற்றும் சார்பு நாடுகளில் உள்ள தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை பிரச்சினை முக்கியத்துவம் பெறவில்லை. ஏனெனில் அப்போது அது ஒரு எதிர்கால நிகழ்வுப் போக்காக இருந்தது. அரை காலனிய சீனா பல ஆதிக்க மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. சீனாவை விடுதலை செய்வதும் அதை ஒன்றுபடுத்துவதும் சீன பாட்டாளி வர்க்க இயக்கத்தின் முக்கிய கடமையாக இருந்தது. ஆகையால் சீனாவில் உள்ள அனைத்து தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதும், சீனாவை ஐக்கியப்படுத்துவதம் சீன மக்கள் ஜனநாயக புரட்சியின் கடமைகளாக தீர்மானிக்கப்பட்டன. ஒரு ஒடுக்கப்படும் தேசிய இனம் அரசியல் ரீதியில் பிரிந்துபோக வேண்டும் என்கிற பிரச்சினை எழும்போது பாட்டாளி வர்க்க இயக்கம் எவ்வாறு கையாளவேண்டும் என்கிற பிரச்சனை அரைகாலனிய, அரை நிலப்பிரபுத்துவ சீனாவில் எழவில்லை. ஆகையால் இதைக்குறித்து ஒரு கோட்பாட்டு ரீதியான தீர்வு காண வேண்டிய பிரச்சினையை மாவோ எதிர்கொள்ளவில்லை. யூகோஸ்லாவிய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த செமிச் என்பவர் தேசிய இன சுயநிர்ணய உரிமைப் பிரச்சினை பற்றி முன்வைத்த கருத்துக்களை ஸ்டாலின் விமர்சனம் செய்தார். "மீண்டும் ஒருமுறை தேசிய இனப் பிரச்சினையை பற்றி" என்ற ஒரு கட்டுரையில் அவரை விமர்சித்து ஸ்டாலின் எழுதினார். ஒரு சார்பு நாட்டின் தேசிய இனப்பிரச்சினையை அந்நாட்டிலுள்ள வெவ்வேறு தேசிய இனங்களின் பூர்ஷ்வாக்களுக்கு இடையில் நடைபெறும் போராட்டமாக மட்டுமே குறுக்கி விடக்கூடாதென்றும், தேசியப் பிரச்சினை சாராம்சத்தில் ஒரு விவசாயிகளின் பிரச்சினையாகுமென்றும் எடுத்துக் காட்டினார். அரைகாலனித்துவ, நவகாலனித்துவ மற்றும் சார்பு நாடுகளின் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைப் பிரச்சினையைப் பற்றி ஆய்வு செய்யும்போது ஸ்டாலினுடைய மேற்கூறப்பட்ட கருத்தாக்கங்கள் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டியவைகளாக உள்ளன. இரண்டாம் உலகப் போருக்குபிறகு, குறிப்பாக சீன விடுதலைப் புரட்சி இறுதி வெற்றியை அடையும் தறுவாயில்தான், பழைய முறையிலான நேரடி காலனியாட்சி வடிவத்தை கைவிட்டு ஒரு புதியவகை காலனியாட்சியைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுமாறு ஏகாதிபத்தியவாதிகள் நிர்பந்திக்கப்பட்டார்கள். காலனி நாடுகளில் ஏகாதிபத்தியவாதிகளிடமிருந்து உள்நாட்டு ஆளும் வர்க்கங்களின் கையில் அதிகார மாற்றமும், பல காலனி நாடுகள் நவகாலனிகளாகவோ, அரைக்காலனிகளாகவோ, சார்பு நாடுகளாகவோ மாற்றமடைதலும் நிகழ்ந்தன. அண்மைகாலத்தில், பல நவகாலனிய, அரைக் காலனிய மற்றும் சார்பு நாடுகளில் உள்ள தேசிய இனங்கள் பிரிந்து போகவேண்டும் என்ற பிரச்சினை முன்னுக்கு வந்துள்ளன. சில நாடுகளில் தேசிய இனங்கள் பிரிந்து போவதற்கான போராட்டங்கள் ஒரு போர் குணமிக்க போராட்டங்களாக நடைபெறுகின்றன.

2. வெவ்வேறு காலங்களில், வெவ்வேறு நாடுகளில் தோன்றும் தேசிய பிரச்சினையை வரலாற்றுப் பூர்வமாக ஆராய வேண்டும் என லெனினியம் கோருகிறது. லெனினியம் கூறும் இம்முறையின்படிதான் இந்நாடுகளின் தேசிய இனப் பிரச்சினையை ஆராயவேண்டும். இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தில், ஏகாதிபத்தியமும் பாட்டாளி வர்க்க புரட்சியின் சகாப்தத்தில், இந்நாடுகள் புதிய ஜனநாயகப் புரட்சி என்ற கட்டத்தைக் கடந்து கொண்டிருக்கின்றன. எனவே, இந்நாடுகளிலுள்ள தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை கோரிக்கை தமது நாடுகளில் உள்ள தரகு முதலாளித்துவ பெரும் நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் கூட்டு சர்வாதிகாரத்துக்கு எதிரான கோரிக்கையாக மட்டும் இருக்கவில்லை; அத்துடன் இந்நாடுகளின் மீது ஆதிக்கம் செலுத்துகின்ற ஏகாதிபத்திய வல்லரசுகளை எதிர்த்த கோரிக்கையாகவும் இருக்கிறது. ஆகையால் இந்நாடுகளிலுள்ள பல்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்த முதலாளிகளுக்கு இடையிலான போராட்டமாக மட்டுமே தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைப் பிரச்சினையை குறுக்கிவிடமுடியாது. ஏகாதிபத்தியவாதிகளும் உள்நாட்டு ஆளும் வர்க்கங்களும் தேசிய இனங்களை அடிமைப்படுத்துதல் மற்றும் பண்பாட்டுத் துறையில் சீரழித்தலை எதிர்த்தும், ஏகாதிபத்தியவாதிகளின் நிதி மூலதனச் சரண்டலை எதிர்த்தும் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் பரந்துபட்ட மக்கள் குறிப்பாக விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில்தான் தேசிய இனப்பிரச்சினையின் சாரம் அடங்கியுள்ளது. இந்நாடுகளிலும், அவற்றின் பல்வேறு தேசிய இனங்களில் உள்ள பரந்துபட்ட மக்களை, எல்லாவற்றிற்கும் மேலாக விவசாயிகளை ஏகாதிபத்தியவாதிகள் ஒடுக்கிச் சுரண்டுவதின் மூலம், ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்திற்குள் அவர்கள் இழுத்து வரப்படுகிறார்கள்; இதன் மூலம் அவர்களை உலக பாட்டாளி வர்க்கப் புரட்சியின் கூட்டாளிகளாக மாற்றி விடுகிறார்கள். தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைப் பிரச்சினையின் முக்கியத்துவத்தை, இந்நாடுகளில் உள்ள பல்வேறு தேசிய இனங்களின் முதலாளிகளுக்கிடையிலே நடைபெறும் போராட்டமாக மட்டுமே நாம் குறுக்கிவிடுவோமானால், தேசிய இனப் பிரச்சினையை சாராம்சத்தில் ஒரு விவசாயப் பிரச்சினையாக கருதமுடியாது. தேசிய இன சுயநிர்ணய உரிமைப் பிரச்சினை சராம்சத்தில் ஒரு விவசாயிகளின் பிரச்சினை என கருதாமல், அதை வெவ்வேறு தேசிய இனங்களின் முதலாளிகளுக்கிடையிலான ஒரு போராட்டமாக மட்டுமே கருதுவதற்கு காரணம் தேசிய இனப்பிரச்சினையின் உள்ளார்ந்த வலிமையை குறைத்து மதிப்பிடுவதே ஆகும். தேசிய இனப் பிரச்சனையும், விவசாயிகள் பிரச்சினையும் ஒன்றாகக்கொள்ள முடியாது என்பதும் உண்மையே. ஏனெனில் தேசியப் பிரச்சினையில் விவசாயிகள் பிரச்சினைக்கு கூடுதலான தேசிய பண்பாடு, தேசிய அரசு என்பன போன்ற பிற பிரச்சினைகளும் அடங்கியுள்ளன. எனினும் விவசாயிகள் பிரச்சினைதான் தேசிய இனப்பிரச்சினைக்கு அடிப்படையும், அதன் சாராம்சமும் ஆகும் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. விவசாயிகள்தான் தேசிய இயக்கத்தின் படையாக அமைகின்றனர். விவசாயிகளின் படையின்றி சக்திவாய்ந்த ஒரு தேசிய இயக்கம் தோன்றவே முடியாது என்ற உண்மை இதைத் தெளிவுப்படுத்தும். தேசிய இனப் பிரச்சினை சாராம்சத்தில் ஒரு விவசாயிகளின் பிரச்சினையாகும் என்று சொல்லும்போது இந்தப் பொருளில்தான் சொல்லப்படுகிறது.

3. இந்நாடுகளிலுள்ள அரசுகளில் அனேகமானவை ஒன்றிற்கு மேற்பட்ட தேசிய இனங்களைக் கொண்ட அரசுகளாக இருக்கின்றன. இவ்வரசுகளின் கீழ் வாழும் வெவ்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்த மக்கள் தாங்களாக மனமுவந்து பிறிதொரு தேசிய இனத்துடன் இணைவதை ஏற்றுக் கொண்டு ஓர் அரசமைப்பிற்குள் வ ர வி ல் ை ல . ஏ க ா தி ப த் தி ய வ ா தி க ள் த ங் க ளி ன் காலனித்துவ அரசுகள் மூலம் பல பிரதேசங்களை வலுக்கட்டாயமாக இணைத்ததின் விளைவாக இந்நாடுகள் உருவாயின. ஏகாதிபத்தியவாதிகளை எதிர்த்து இந்நாடுகளின் மக்கள் தங்களின் தேசிய விடுதலைக்காகவும் ஜனநாயகத்துக்காகவும் போராடினார்கள். ஆனால் இந்நாடுகளின் தரகு முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ வர்க்கங்களும் அவற்றின் அரசியல் பிரதிநிதிகளும் அப்போராட்டங்களுக்கு துரோகம் செய்துவிட்டு ஏகாதிபத்தியவாதிகளுடன் சமரசம் செய்து கொண்டார்கள். அச்சமரசங்களின் பயனாக ஏகாதிபத்தியவாதிகளிடமிருந்து வரித்துக் கொண்ட அரசுகள்தான் இவை. உள்நாட்டு வர்க்கங்களின் கைகளுக்கு அதிகாரமாற்றம் ஏற்பட்ட பிறகும்கூட, சில அரசுகள் தமக்கு அண்டையிலுள்ள பிரதேசங்களை வலுக்கட்டாயமாக இணைத்துக் கொண்டுள்ளன. இந்நாடுகளில் முதலாளித்துவ ஜனநாயக முறையில் அரசு சீரமைப்பு நிறைவேறவில்லை.

இந்நாடுகள் தமது சொந்த மூலதனத்தைப் பெற்றிருக்கவில்லை. நிதிமூலதனத்தின் ஆதிக்கத்தின் கீழுள்ள இந்நாடுகளில் எது ஒன்றும் அரசியல் ரீதியில் கீழ்ப்டியும்படியான நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளாமல் ஏகாதிபத்தியவாதிகளிடமிருந்து மூலதனத்தைப் பெற முடியாது. ஆகையால் மூலதனத்தைப் பெறுவதற்காக இவ்வரசுகள் அரசியல் ரீதியில் கீழ்படியும் நிபந்தனைகளை ஏற்கின்றன. அ ை ர நி ல ப் பி ர பு த் து வ உ ற் ப த் தி உ ற வு க ை ள தக்கவைத்துக் கொண்டே ஏகாதிபத்திய நிதி மூலதன இறக்குமதியைச் சார்ந்து முதலாளித்துவ வளர்ச்சிக்கு திட்டமிடுகின்றன. ஆகையால் இவ்வரசுகள் அனைத்து பிற்போக்கையும் பாதுகாக்கின்றன. முதலாளித்துவ ஜனநாயக முறையில் அரசை சீரமைக்க மறுக்கின்றன. அரசியல் ரீதியில் கீழ்படியும்படியான நிபந்தனைகளை ஏற்றுக்கொளளுதல், பிற்போக்கைப் பாதுகாத்தல் ஆகியவற்றின் காரணமாக இந்நாடுகளின் ஆளும் கும்பல் எதேச்சதிகார முறையையும் மென்மேலும் அதிகமாக கடைபிடிக்கின்றன. எதேச்சதிகார ஆட்சிகளை நிலைநிறுத்திக் கொள்ளும் பொருட்டு பெரும் தேசிய வாதத்தைப் பின்பற்றுகின்றன. தேசிய இன ஒடுக்குமுறைகளைக் கடைபிடிக்கின்றன. தமது அரசுகளை மதவாத அரசாக மாற்ற முயல்கின்றன. மத ஒடுக்குமுறைகள் சில சூழ்நிலைமைகளில் தேசிய இன ஒடுக்குமுறை வடிவத்தைப் பெறுகின்றன. மேலும் இந்நாடுகளில் தேசிய இன உருவாக்கம் இன்னும் ஒரு நிகழ்வுப்போக்காக இருக்கின்றன. இவ்வரசுகள் இந்நிகழ்வுப் போக்கை சிதைக்க முயல்கின்றன. சுருங்கக்கூறின் இவ்வரசுகளின் ஜனநாயக விரோதமான போக்குகள் மற்றும் ஆளும் வர்க்கங்கள் முதலாளித்துவ ஜனநாயக முறையில் அரசை சீரமைக்க மறுத்தல் ஆகியவற்றின் காரணமாக ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் இவ்வரசிலிருந்து அரசியல் ரீதியில் பிரிந்து போகவேண்டும் என்ற பிரச்சினை - அரசியல் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்கான கோரிக்கை - தவிர்க்க முடியாமலே எழுகின்றன.

இந்நாடுகளிலுள்ள தேசிய இனங்கள் சமூக, அரசியல், பொருளாதார துறைகளில் ஏற்றத்தாழ்வான வளர்ச்சியைப் பெற்றவையாக இருக்கின்றன. பெரும்பாலான தேசிய இனங்களில் அல்லது பெரும் தேசிய இனத்தில் அரை நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகள் மிகு நிலையைப் பெற்றிருக்கினறன. என்றாலும், ஒரு சில தேசிய இனங்களில் முதலாளித்துவ உற்பத்தி உறவுகள் பிறவற்றைவிட ஒப்பீட்டளவில் அதிக வளர்ச்சி பெற்றிருக்கின்றன. மற்றும் சிலபிரதேசங்கள் பழங்குடி மக்கள் சமுதாயங்களைக் கொண்டவையாகவும் இருக்கின்றன. இந்நாடுகள் ஏகாதிபத்திய நிதிமூலதன ஆதிக்கத்தின் கீழ் உள்ளதால், இந்நாடுகளில் சமூக, அரசியல், பொருளாதாரத் துறைகளில் வளர்ச்சி மென்மேலும் ஏற்றத்தாழ்வான முறையில் நடைபெறுவது தவிர்க்க முடியாததாகும். அத்துடன், இந்நாடுகளில் உள்ள அரசுகள் பொருளாதார திட்டங்களை வகுப்பதில் தேசிய இனங்களுக்கிடையில் பாரபட்சமாகவும் நடந்து கொள்கின்றன.

சுருங்கக் கூறின் வலுக்கட்டாய இணைப்பு தேசிய இனங்கள் சமூக, அரசியல், பொருளாதாரத் துறைகளில் ஏற்றத்தாழ்வான முறையில் வளர்ச்சி பெற்றிருத்தல், மற்றும் எதேச்சதிகார ஆட்சிகள் தேசிய இன ஒடுக்கு முறையைக் கையாளுதல் ஆகியவற்றின் காரணமாக ஒடுக்கும் தேசிய இனத்திலிருந்து அல்லது அரசில் இருந்து ஒடுக்கப்படும் தேசிய இனம் அரசியல் ரீதியில் பிரிந்து போகும் பிரச்சினை எழுகின்றது.

4. அனைத்து தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தல் என்ற எதிர்மறை கோரிக்கையுடன் பாட்டாளி வர்க்க இயக்கம் தன்னை நிறுத்திக் கொள்வதால் ஒரு ஒடுக்கப்படும் தேசிய இனம் அரசியல் ரீதியில் பிரிந்துபோக வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பும்போது, அதை பரிசீலிக்கக் கூடாது என பொருள் கொள்ளக் கூடாது என்றும்; அதை ஒரு தனி வழக்காக எடுத்துக்கொண்டு, பாட்டாளி வர்க்க இயக்கம் ஒரு சுயேச்சையான மதிப்பீட்டைச் செய்ய வேண்டும் என்ற லெனினிய கோட்பாடு இந்நாடுகளுக்கும் பொருந்தும். மேலும் இந்நாடுகளின் தேசிய சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் உலக பாட்டாளி வர்க்கப் புரட்சியின் ஒரு பகுதி என்ற முறையில் அதற்குத் தலைமை அளிப்பது பாட்டாளி வர்க்க இயக்கத்தின் ஒரு கடமையாக இருப்பதால், ஒரு ஒடுக்கப்பட்ட தேசிய இனம் அரசியல் ரீதியில் பிரிந்து போவது ஏற்கத்தக்கது என பாட்டாளி வர்க்க இயக்கம் தனது சுயேச்சையான மதிப்பீட்டின் அடிப்படையில் தீர்மானிக்கும் பட்சத்தில், அத்தேசிய இனம் அரசியல் ரீதியில் பிரிந்து போவதை ஆதரிப்பது அதன் கடமையாகும்.

VI. இந்திய பொருளியல் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களும் – தேசிய இனப் பிரச்சனையும்!

தேசவிரோத – ஜனநாயக விரோத இந்திய அரசு அரைக்காலனிய அரை நிலப்பிரபுத்துவ இந்தியாவின் அரசு ஒரு ஒன்றிய அமைப்பு முறையிலான அரசாகவும், ஜனநாயக விரோத அரசாகவும் இருக்கிறது. தனது எல்லைகளுக்குள் வாழும் தேசிய இனங்களுக்குச் சுயநிர்ணய உரிமையை மறுக்கிறது. ஜம்மு காஷ்மீரை வலுக்கட்டாயமாக இணைத்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல், கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு நடத்துவதாக அளித்திருந்த வாக்குறுதியை அது மறுக்கிறது. இந்திய ஒருமைப்பாட்டைக் காப்பது என்ற பெயரால் சுயநிர்ணய உரிமை கோரும் தேசிய இனங்களை ஒடுக்குகிறது. தேசிய இனங்களுக்கு இடையில் பூசல்களையும் பகைமையையும் ஏற்படுத்துகிறது. இவ்வாறு செய்வதன்மூலம் ஏற்கனவே அவர்களுக்கடையில் இருந்த ஒற்றுமையை சீர்குலைகிறது. தேசிய இனங்களின் உரிமைகளுக்காகப் போராடும் இயக்கங்களை ஒடுக்குவதற்காக ஒருபுறம், அவற்றின் மீது அரசுபயங்கர நடவடிக்கைகளைக் கட்டவிழ்த்து விடுகிறது; மறுபுறம், ஒடுக்கப்படும் தேசிய இன மக்களுக்கிடையில் மதப்பூசல்களைத் தூண்டிவிட்டு அவர்களைப் பிளவுபடுத்தி நசுக்குகிறது. இந்தி மொழியை இந்திய அரசின் அதிகாரப் பூர்வமான அலுவல் மொழியாக ஆக்க முயல்கிறது. பிறமொழி பேசும் மக்களின் மீது அதைத் திணிக்கிறது. அதிகாரவர்க்கத் தரகு முதலாளித்துவம் அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசில் குவித்துக் கொள்வதற்கும், இந்திய அரசை ஒரு எதேச்சதிகாரத் தன்மை வாய்ந்த, காட்டுமிராண்டித்தனமான அரசாகக் கட்டியமைப்பதற்கும் தொடர்ந்து முயற்சி செய்கிறது. மேலும், இந்திய அரசு தென் ஆசியாவில் பிற்போக்கின் ஒரு கொத்தளமாகவும் இருக்திறது. இத்தகைய ஒரு தேச விரோத, ஜனநாயக விரோத அரசமைப்பு நீடிக்கும் வரையில் இந்தியாவில் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கை இருந்து கொண்டுதான் இருக்கும்.

இந்தியாவில் முதலாளித்துவ உற்பத்தி உறவுகளின் வளர்ச்சிப் போக்கு

ஆயினும் இந்தியாவில் தேசிய இனங்கள் ஏற்றத்தாழ்வான முறையில் வளர்ச்சி பெற்றிருப்பதற்கும், அண்மை காலத்தில் பல தேசிய இன இயக்கங்கள் தோன்றுவதற்கும், அவை அனைத்தும் ஒரே முழக்கத்தின் கீழ் அல்லாமல் வெவ்வேறு முழக்கங்களின் அடிப்படையில் தோன்றுவதற்கும், தேசிய இனங்களின் உரிமைக்கான போராட்டம் தீவிரமடைந்திருப்பதற்கும் நமது நாட்டின் பொருளாதார வாழ்வில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும், குறிப்பாக இந்திய சமுதாயத்தில் முதலாளித்துவ உற்பத்தி உறவுகள் (பரிணாம ரீதியில்) வளர்ச்சி பெறுவதும், அதன் விளைவாக ஏற்படும் புதிய வர்க்க முரண்பாடுகளும் காரணங்களாக இருக்கின்றன. எனவே இந்திய சமுதாயத்தில் முதலாளித்துவ உற்பத்தி உறவுகளின் வளர்ச்சிப் போக்குபற்றி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வோம்.

நேரடிக் காலனி ஆட்சி முடிவுக்கு வந்தபோது, இந்தியாவில் உற்பத்தி ரீதியான மூலதனம் வணிக மூலதனத்திற்கு உட்பட்டே (கீழ்ப்படிந்தே) இருந்தது. அத்துடன் முதலாளித்துவ உற்பத்தியின் மிக முக்கியமான இரண்டு துறைகளில் ஒன்றான உற்பத்திச் சாதனங்களை உற்பத்தி செய்யும் துறையை இந்திய முதலாளித்துவ வர்க்கம் பெற்றிருக்கவில்லை. இதில்தான் இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் பலவீனம் அடங்கியுள்ளது. மார்க்ஸ் சுட்டிக் காட்டியுள்ளதைப்போல், சமுதாயத்தின் மொத்த உற்பத்தியையும் இரண்டு முக்கியமான துறைகளாகப் பிரிக்கலாம்; உற்பத்தி சாதனங்களை உற்பத்தி செய்யும் துறை (முதலாவது துறை) மற்றும் நுகர் பொருட்களை உற்பத்தி செய்யும் துறை (இரண்டாவது துறை). உற்பத்தி நுகர்வுக்குப் பயன்படக் கூடிய பொருட்களை அதாவது மீண்டும் உற்பத்தியில் ஈடுபடுத்தக்கூடிய பொருட்கள், மனிதர்களால் நுகரப்படுவதல்ல. அதற்கு மாறாக மூலதனத்தினால்  நுகரப்படக்கூடிய பொருட்களை உற்பத்தி செய்வது முதலாவது துறையைச் சேர்ந்தது என்றும், நேரடியாக (மனிதர்களின்) நுகர்வுக்குப் பயன்படக் கூடிய பொருட்களை உற்பத்தி செய்வது இரண்டாவது துறையை சேர்ந்தது என்றும் லெனின் அதற்கு விளக்கம் அளித்தார். முதலாளித்துவ உற்பத்தியில் வளர்ச்சியும் அதன் விளைவாக உள்நாட்டு சந்தையின் வளர்ச்சியும் நுகர் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவதைப் பொறுத்தவை அல்ல; அதற்கு மாறாக உற்பத்தி சாதனங்களை உற்பத்திச் செய்யப்படுவதைப் பொருத்ததே ஆகும். இக்காரணத்தினால் உற்பத்தி சாதனங்களை உற்பத்தி செய்கின்ற சமூக உற்பத்தித் துறையானது நுகர்பொருட்களை உற்பத்தி செய்யும் துறையைவிட வேகமாக வளரவேண்டும் என்பதுதான் மார்க்சின் கைவரப் பெறுதல் பற்றிய தத்துவத்திலிருந்து லெனின் வந்தடைத்த முக்கியமான முடிவாகும். ஒரு துறையின் வளர்ச்சி மற்றொரு துறையைச் சார்ந்துள்ள போதிலும், இவை இரண்டில் ஆற்றல் மிக்கது முதலாவது துறையே ஆகும். என்றாலும், முதலாளித்துவத் தொழிற்சாலை உற்பத்திக்கு) தேவைப்படுகின்ற உற்பத்தி சாதனங்களை உற்பத்தி செய்யும் துறை இந்தியாவில் அப்போது இருக்கவில்லை. காலனி ஆட்சியே, உற்பத்திச் சாதனங்களை உற்பத்தி செய்யும் துறை இல்லாமல் போனதற்கும் இத்தகைய ஒரு ஏறுமாறான நிலைமைக்கும் உருச்சிதைந்த (அலங்கோலமான) நிலைமைக்கும் காரணமாகும். மேலும் இரும்பு, எஃகு, நிலக்கரி மற்றும் இராசயனப் பொருட்கள் சொற்பமான அளவில்தான் உற்பத்தி செய்யப்பட்டன. உற்பத்தி நுகர்வுக்குப் பயன்படக்கூடிய பொருட்கள் அரிதாகவே உற்பத்தி செய்யப்பட்டன. இயந்திரங்களை உற்பத்தி செய்யும் தொழில் இல்லவே இல்லை. இருப்பினும், இத்தகைய அலங்கோலமான பொருளாதாரத்தை மாற்றியமைக்கவோ அல்லது உற்பத்தி சாதனங்கள், மூலதனப் பொருட்கள் மற்றும் தொழில் நுட்பம் ஆகியவற்றிற்காக ஏகாதிபத்திய மூலதனத்தின் மீது சார்ந்திருப்பதை மாற்றியமைக்கவோ இந்திய முதலாளித்துவ வர்க்கம் முயற்சி செய்யவில்லை. இவ்வாறு செய்வதற்கு மாறாக புதிய தொழிற்சாலைகளைத் துவங்குவதற்கும் ஏற்கனவே அந்நிய மூலதனத்தினால் நடத்தப்பட்டுவந்த தொழிற்சாலைகளைப் பராமரிப்பதற்கும் அந்நிய மூலதனத்தை இறக்குமதி செய்தது. இந்திய அரசும், ஆளும் வர்க்கங்ளும் அந்நிய நிதி மூலதனத்தைச் சார்ந்து நமது பொருளாதாரத் திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தி வந்தன. அதிகாரப் பூர்வமான மூலதனம், தனியார் மூலதனம் என்ற இரண்டு வடிவங்களில் அந்நிய மூலதனம் இந்தியாவிற்குள் நுழைந்தது. இந்தியத் தனியார் இணையத்துறை மூலமாகவும், அரசு அதிகார வர்க்கத் துறையின் மூலமாகவும் - அதாவது இருவழிகளிலும் அந்நிய மூலதனம் இறக்குமதி செய்யப்பட்டது. முதலில் தனியார் அந்நிய மூலதனக் கம்பெனிகளின் மூலதனம் (பன்னாட்டு கம்பெனிகள்) இந்தியாவிலுள்ள தனியார் இணையத்துறை மூலமாக இறக்குமதி செய்யப்பட்டதைக் கவனிப்போம்.

பன்னாட்டுக் கம்பெனிகளின் பகல் கொள்ளை

1955 முதல் 1973 வரையிலான 18 ஆண்டுகளில் பன்னாட்டுக் கம்பெனிகள் (திசிஸிசி) நேரடி முதலீடு நாலரை மடங்கு பெருகியுள்ளது. ஏறக்குறைய ரூ.5000 மில்லியன் பெருகிற்று. ஆண்டொன்றிற்குச் சராசரி ரூ.280 மில்லியன் பெருகியது. இறக்குமதி செய்யப்பட்ட அந்நிய மூலதனத்தைவிட லாபம், ராயல்டி மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் பேரில், அவை இந்நாட்டில் இறக்குமதி செய்ததைவிட தமது நாடுகளுக்கு செய்த ஏற்றுமதி அதிகமானது என்பதைப் பின்வரும் தகவல் தெளிவாக எடுத்துக்காட்டும். 1963-64 முதல் 1969-70 வரையிலான ஏழு ஆண்டுகளில் அந்நிய நாடுகளிலிருந்து இப்பன்னாட்டுக் கம்பெனிகளில் முதலீடு செய்யப்பட்ட தொகை ரூ.966 மில்லியன் ஆகும். ஆனால் அதே காலத்தில் ரூ.1746 மில்லியன் இலாபத்தின் பங்கு என்ற முறையில் ஏற்றுமதி செய்யப்பட்டது. இறக்குமதி செய்யப்பட்ட மூலதனத்தைவிட 176 சதவிதம் லாபம் என்ற பெயரில் ஏற்றுமதி செய்யப்பட்டது. இலாபம் மட்டுமல்லாமல், ராயல்டி மற்றும் தொழில்நுட்பம் ஆகிய அனைத்திற்காகச் செலுத்தப்பட்டதையும் (ஏற்றுமதி செய்யப்பட்டதையும்) மொத்தமாக சேர்த்துக் கணக்கிடுவோமானால் ரூ.2102 மில்லியன் அந்நிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அதாவது 217.5 சதவிகிதம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இக்காலப்பகுதியில் (1957-58 முதல் 1972-73 வரையில்) இந்தியாவின் தனியார் இணையத்துறையின் மொத்த சொத்துக்கள், விற்பனை மற்றும் லாபம் ஆகியவற்றில் அந்நிய மூலதனக் கம்பெனிகளின் பங்கு அதிகரித்து வந்துள்ளன. இந்தியப் பெருமுதலாளித்துவம் இந்தியத் தனியார் துறையின்மீது தனது பிடிப்பையும் கட்டுப்பாட்டையும் பெற்றிருக்கவில்லை. இந்திய இணையத்துறையில் கணிசமான பங்கை அந்நிய மூலதனத்திற்கு அது விட்டுக் கொடுத்திருக்கிறது என்பதைப் பின்வரும் தகவலிலிருந்து அறியலாம். அந்நிய நிதிக் கம்பெனிகளின் பங்கு 1957-58ல் 21 சதவிகிதமாக இருந்தது. 1972-73ல் 26 சதவீதமாக உயர்ந்துவிட்டது. இதே காலப்பகுதியில் மொத்த விற்பனையில் அவற்றின் பங்கு இதே அளவிற்கு அதிகரித்துள்ளது. 1957-58ல் தனியார் இணையங்களின் மொத்தலாபத்தில் அந்நிய மூலதனக் கம்பனிகளின் பங்கு 26 சதவீதமாக இருந்தது. 1972-73ல் 40 சதவிதமாக உயர்ந்துவிட்டது. அதாவது உள்நாட்டு இணையங்களின் லாபத்தைக் காட்டிலும் அந்நிய மூலதனக் கம்பெனிகளின் மொத்த லாபம் அதிவேகமாக வளர்ந்துள்ளன. இவ்வாறு இந்தியப் பெருமுதலாளித்துவம் இந்தியத் தனியார் இணையத்துறையில் அந்நிய மூலதனம் ஆதிக்கம் வகிக்கும் நிலையை அனுமதிப்பதற்குக் காரணங்கள் என்னவென்பதை இந்தியப் பெருமுதலாளித்துவத்தைப் பற்றி பரிசீலிக்கும்போது காணலாம். மொத்த சொத்துக்கள், மற்றும் விற்பனை ஆகியவற்றில் 20 சதவிதத்திலிருந்து 25 சதவிதம் வரை மட்டுமே பெற்றுள்ள அந்நிய மூலதனக் கம்பெனிகளில், 1957-60ல் மொத்த லாபம் ரூ.43 மில்லியனாக இருந்தது. 1972-73ல் ரூ.4030 மில்லியனாக உயர்ந்துவிட்டது. அவற்றின் மொத்த லாபம் பத்துமடங்காக அதிகரித்துவிட்டன. இதே காலப்பகுதியில்தான், அதாவது அறுபதாவது ஆண்டுகளின் இடைக்காலத்தில்தான் இந்தியாவில் வேளாண்மைத் துறையில் புதிய தொழில் நுட்பமும், "பசுமைப் புரட்சியும்" புகுத்தப்பட்டன. இக்காலப் பகுதியிலிருந்துதான் அந்நிய மூலதனக் கம்பெனிகளின் லாபமும் பெருத்து வருகின்றன. இந்தியாவில் உள்ள மொத்த தனியார் இணையத்துறை பெற்ற லாபத்தில் அந்நிய மூலதனக் கம்பெனிகள் ஐந்தில் இரண்டு பங்கைப் பெறுகின்றன. இந்திய பொருளாதாரத்தில் அந்நிய மூலதனக் கம்பெனிகள் ஒரு தீர்மானகரமான பாத்திரத்தை வகிக்கின்றன. அவை தமது முதலீட்டில் பெரும்பகுதியை ஆலைத்தொழில் துறையில் செய்திருக்கின்றன. அந்நிய மூலதனக் கம்பெனிகளில் முதலில் பிரிட்டன் பிரதான பாத்திரத்தை வகித்துவந்தது. அதற்குப் பின்னர் அமெரிக்கா முக்கியமான பாத்திரத்தை வகித்து வருகிறது.

இவ்வாறு, தொழில் மற்றும் வணிகத்துறை பெருமுதலாளிகள், புதிய வகைப்பட்ட நிலப்பிரபுக்கள் மற்றும் அந்நிய மூலதனக் கம்பெனிகள் ஆகிய மூன்று வர்க்கங்களும் ஓரு பொதுநலன்களைக் கொண்டிருக்கின்றன. அவர்களிடையே ஓர் நேச அணி உருவாயிற்ற. ஆயினும் அவர்களிடையே மோதல்களும் பூசல்களும் இல்லாமல் இல்லை.

தனியார் துறையின் வளர்ச்சி நிலை

இந்திய ஆலைத் தொழிலைப் பொறுத்துவரையில்  பொதுத்துறை என்றும், தனியார் துறை என்றும் இரண்டு துறைகள் இருக்கின்றன. தனியார் துறையில் இணையத்துறை என்றும், இணையமல்லாத துறை என்றும் இரண்டு துறைகள் உள்ளன. இந்தியத் தனியார் இணையத்துறையைச் சேர்ந்த பெரிய மற்றும் நடுத்தர கம்பெனிகளின் விற்பனை விகிதமும் லாபவிகிதமும் சிறிய கம்பெனிகளின் விற்பனை விகிதத்தையும் லாபவிகிதத்தையும் விட இரு மடங்காக இருக்கின்றன. பெரிய கம்பெனிகள் வேகமாக வளர்கின்றன. சிறிய கம்பெனிகள் அதில் பாதி அளவு வேகத்தில்கூட வளர முடிவதில்லை. இந்தியத் தனியார் துறை வரலாறு இவ்வாறாகத்தான் இருந்து வருகிறது. கம்பெனிகளின் அளவிற்கு ஏற்றவாறு கம்பெனிகளின் லாபவிகிதம் வேறுபடுகிறது. ஒரு கம்பெனியின் அளவு எவ்வளவு பெரியதாக இருக்கிறதோ அந்த அளவிற்கு அதன் லாப விகிதம் அதிகமாக இருக்கிறது. தவிர சிறிய கம்பெனிகளின் லாபவிகிதம் பெரிய கம்பெனிகளின் லாபவிகிதத்தைவிட குறைவாக இருப்பதோடல்லாமல், அதன் லாபவிகிதம் நிலையற்றதாகவும் இருக்கிறது. ஆகையால் சிறிய கம்பெனிகளின் வாழ்வு நிச்சயமற்றதாக இருக்கின்றது. ஆகையால் சிறிய கம்பெனிகள் வளர்ச்சிபெற்ற பெரிய கம்பெனிகளாக ஆவது அரிதானதாகும்.

பெரிய மற்றும் நடுத்தர கம்பெனிகளின் நிகர மூலதன உருவாக்கம் குறைந்து கொண்டிருக்கின்றது. இருப்பினும் அவற்றின் லாபவிகிதம் நிலையாக இருக்கின்றது. ஆனால் சிறிய கம்பெனிகளின் லாபவிகிதம் குறைந்து கொண்டே வந்துள்ளது. அவற்றின் நிலைமை பரிதாபமானதாக இருக்கிறது. தனியார் துறையின் நிகர மூலதன உருவாக்கம் குறைந்து கொண்டிருக்கும் சூழ்நிலைமையிலும்கூட பெரிய கம்பெனிகள் தங்களது லாபவிகிதத்தை குறையாமல் வைத்துக் கொள்ள முடிவதற்கு காரணம் பணவீக்கம் ஏற்படும்போது மூலப் பொருட்களை தமது இருப்பில் வைத்துக் கொள்ள முடிவதினாலும், இடுப்பொருட்களின் மீது தமது ஏகபோகத்தை நிலைநிறுத்திக் கொள்வதினாலும் அவற்றால் தமது லாபவிகிதம் குறையாமல் வைத்துக் கொள்ள முடிகிறது. ஆனால் சிறிய கம்பெனிகளால் இவ்வாறு செய்ய முடியாது. ஆகையால் அவற்றின் லாபவிகிதம் குறைவானதாகவும் ஏற்ற இறக்கங்களை சந்திக்க வேண்டியதாகவும் இருக்கிறது.

தனியார் துறையின் நிகர மூலதன உருவாக்கம் குறைந்து வருகிறது என்பது மட்டுமல்ல. மொத்த உள்நாட்டு மூலதன உருவாக்கத்தில் அதன் பங்கு இன்னும் மோசமான நிலையில் உள்ளது. இவ்வாறு இருப்பதற்குக் காரணம் என்னவென்றால் இணையமல்லாத தனியார்துறை லாபத்தில் ஒரு கணிசமான பகுதியை உறிஞ்சி வெளியே எடுத்துச் சென்றுவிடுகிறது. இவ்வாறு இந்தியாவில் ஒழுங்கமைக்கப்பட்ட ஆலைத் தொழில்களில் உருவாகும் உபரி உற்பத்தி ஆயிரக்கணக்கான சின்னஞ்சிறு நிறுவனங்களுக்குக் (வணிக நிறுவனங்களுக்கு) கொண்டு செல்லப்பட்டு சிதறடிக்கப்படுகிறது.

அறுபதாவது ஆண்டுகளின் இடைக் காலத்திலிருந்து தனியார் இணையத்துறை தனது மூலதனச் சேர்க்கையின் விகிதத்தை குறைத்துக் கொண்டது. இவ்வாறு குறைந்து வருவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, அறுபதாவது ஆண்டுகளின் இடைக்காலத்திலிருந்து மூலதனத்தை மையப்படுத்தும் போக்கு தீவிரமடைந்தது. மற்றொன்று, அதற்கு அக்கம்பக்கமாக மற்றொரு செயல் போக்கும் வேகமடைந்தது. தனியார் இணையத் துறை தனது லாபத்தின் ஒரு பகுதியைப் பதிவு செய்யப்படாத நிறுவனங்களுக்கு (அதாவது வணிகத் துறைக்கு) திருப்பிவிட்டது.

இவ்விரு போக்குகளும் பல்வேறு முதலாளித்துவ பிரிவினர்களுக்கிடையில் முரண்பாடுகளைத்  தோற்றுவிக்கின்றன.

குவிதலும், மையப்படுத்தலும்

முதலாவதாக மையப்படுத்தலைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வோம். நேரடிக் காலனி ஆட்சிக்குப்பிறகு, உள்நாட்டு ஆளும் வர்க்கங்களின் கைகளில் அதிகார மாற்றம் ஏற்பட்ட பிறகு, ஐம்பது - அறுபதாவது ஆண்டுகளில், தொழில்மயமாக்கம், இறக்குமதிக்கு மாற்றாக இங்கேயே உற்பத்தி செய்தல், முதலீட்டில் பொது மக்கள் முதலீட்டிற்கு ஊக்கமளித்தல் போன்ற பொருளாதாரக் கொள்கைகளை ஆட்சியாளர்கள் கடைப்பிடித்தனர். இக்காலப்பகுதியில் பெருமுதலாளிகள் வளர்ச்சியடைந்தனர். இந்தியத் தனியார் இணையத்துறையின் நிகர மூலதனத்தில் இருபது பெரும் தொழில் குடும்பங்களின் பங்கு 1951ல் 24.8 சதவிகிதமாக இருந்தது. 1958-ல் 32.6 சதவிகிதமாக உயர்ந்து விட்டது. சச்சார் கமிட்டி அறிக்கையின்படி இந்த இருபது பெரும் தொழில் குடும்பங்களின் சொத்துக்களின் மதிப்பு 1972க்கும் 1975-ஆம் ஆண்டிற்கும் இடையில் 68.6 சதவிகிதம் அதிகரித்தது. குவிதல் அக்காலத்தில் ஒரு போக்காக இருந்தது. பெரும் குடும்பங்களின் கையில் பொருளாதார வலிமை குவிவதைத் தடை செய்வதற்கு எனக் கொண்டு வரப்பட்ட ஏகபோக தடைச்சட்டம் ஒரு கண்துடைப்புத்தானே ஒழிய, அதனால் எந்த விளைவும் ஏற்படவில்லை என்றாலும் இப்பெரும் குடும்பங்களின் வளர்ச்சி ஏற்றத் தாழ்வானதாக இருந்ததால், அவற்றிற்கிடையே ஒரு குறிப்பிட்ட அளவிற்கு போட்டியிருந்தது. ஆனால் இப்போட்டி வேறு ஒருவகையான போட்டியாகும். ஒப்பீட்டளவில் அவர்கள் வகித்த இடம் மாற்றங்களுக்குள்ளாயின. பெரும் மூலதனங்களுக்கிடையில் பூசலும் போட்டியும் கூர்மை அடைந்தன. அவை நாட்டின் அரசியல் மட்டத்திலும் பிரதிபலித்தன.

அறுபதாவது ஆண்டுகளின் இடைக்காலத்தில், மூலதனங்களுக்கிடையில் போட்டி கூர்மை அடைந்தது. ஏராளமான தொழில் நிறுவனங்கள் நலிவுற்றன. அரசின் கொள்கைகள் பெருமூலதனத்திற்குச் சாதகமாக இருந்தன. மையப்படுத்தலின் இக்கட்டத்தில் பெரும் முதலாளிகள் உற்பத்தி ரீதியான முதலீடு செய்வதற்கு மாறாக பிற மூலதனங்களைக் கைப்பற்றிக் கொள்வதில் முனைப்பாயிருந்தனர். இன்றைய இந்தியப் பொருளாதார நெருக்கடிக்கு இதுவும் ஒரு காரணம். பெரும் தொழில் குடும்பங்களுக்கிடையிலும், ஒருபுறம் பெரும் தொழில் குடும்பங்களுக்கும் மறுபுறம் சிறிய மூலதனங்களுக்கு இடையிலும் கடுமையான போட்டியும், மோதல்களும் ஏற்பட்டன. இரண்டு வழிகளில் - அதாவது கம்பெனியின் டைரக்டர் போர்டுகளை பிணைப்பதின் மூலமாகவும், இணையங்களுக்கிடையில் முதலீடு செய்வதின் மூலமாகவும் அவை சிறிய மூலதனங்களை விழுங்கத் தொடங்கிவிட்டன.

அறுபதாவது ஆண்டுகளின் இடைக்காலப் பகுதியிலிருந்து மூலதன மையப்படுத்துதல் தீவிரமாக அதிகரித்தது. இணையங்களுக்கிடையில் முதலீடு செய்யும் முறையின் மூலம் பெரிய மூலதனங்கள் சிறிய மூலதனங்களைத் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தன. பெரிய கம்பெனிகளினுடைய நிகர நிலையான சொத்துக்களின் குறையாமல் இருந்ததற்குக் காரணம் இக்கட்டத்தில் மூலதனச் சேர்க்கைக்காக, அவை மூலதன குவிப்பிற்குப் பதிலாக மூலதன மையப்படுத்தலைச் சார்ந்து இருந்தன என்பதே ஆகும். பெரும் மூலதனங்கள் தமது தொழிற்சாலைகளில் உற்பத்தியைப் பெருக்குவதின் மூலம் உபரிமதிப்பை அதிகரித்துக் கொள்வதற்கு மாறாக, சிறிய மூலதனங்கள் பெற்ற உபரி உழைப்பைப் பறித்துக் கொள்வதின் மூலமாகத் தமது லாபத்தைப் பெருக்கிக் கொண்டன. இதன் விளைவாக தொழில் துறையில் மந்தமும் தனியார் மூலதன உருவாக்கத்தில் ஒரு இருள் சூழ்ந்த நிலைமையும் ஏற்பட்டது.

மையப்படுத்தலின் இந்தக் கட்டத்தில் மூலதனத்தின் வெவ்வேறு பிரிவுகளுக்கிடையில் மோதல்கள் தீவிரமடைந்தன. இதிலிருந்து மீள்வதற்குப் பெருமுதலாளித்துவம் அந்நிய மூலதன இறக்குமதியை அதிகரிக்கத் துவங்கின. 1958 முதல் 1973 வரையில் இந்திய தனியார் இணையத் துறையின் மொத்த சொத்துக்கள் விற்பனை மற்றும் லாபம் ஆகியவற்றில் அந்நிய மூலதனக் கம்பெனிகளின் பங்கு அதிகரித்து வந்திருப்பது பெருமுதலாளித்துவம் மையப்படுத்தலுக்கு அந்நிய மூலதனத்தை சார்த்திருந்தது என்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

லாபத்தின் ஒரு பகுதியை வணிகத் துறைக்கு திருப்புதல்

மையப்படுத்தலுக்கு அக்கம்பக்கமாக மற்றொரு செயல்போக்கும் வேகமடைந்தது. தனியார் இணையத்துறை தனது லாபத்தின் ஒரு பகுதியை பதிவு செய்யப்படாத நிறுவனங்கள் போன்ற தனியார் இணையமல்லாதத் துறைக்கு அதாவது வணிகத்துறைக்கு திருப்பிவிட்டது. இதைத்தான் இரண்டாவது போக்கு என குறிப்பிடுகிறோம். 1957ல் பெரும் முதலாளித்துவ கம்பெனிகள் பதிவுச் செய்யப்பட்ட நிறுவனங்கள் மூலம் பெற்ற வருமானம் குறைவானதாகவே இருந்தது. ஆனால் 1970ம் ஆண்டில் அனைத்துக் கம்பெனிகள் பெற்ற மொத்த லாபத்தைக் காட்டிலும், அனைத்து பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் பெற்ற லாபம் அதிகமாக இருந்தது. 1957ல் மொத்தம் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை 11000ஆக இருந்தன. ஆனால் 1976ல் அவற்றின் எண்ணிக்கை 2,46,000மாக உயர்ந்து விட்டன. இவ்வாறு அவற்றின் எண்ணிக்கை உயர்ந்ததோடல்லாமல் மொத்தக் கம்பெனிகள் பெற்ற வருவாயுடன் ஒப்பிடும்போது அவற்றின் பங்கு அதிகமாக அதிகரித்து வந்துள்ளது. மொத்த லாபத்தில் பதிவு செய்யப்படாத நிறுவனங்கள் மற்றும் கம்பெனிகளின் பங்கு வெகுவாக குறைந்து விட்டன. 1957ல் பதிவுச் செய்யப்படாத நிறுவனங்கள் மற்றும் கம்பெனிகளின் பங்கு முறையே 10.2 சதவிகிதம், மற்றும் 73.6 சதவீதமாகவும் இருந்தன. 1965ல் அவை முறையே 6.7 சதவீதம், மற்றும் 58 சதவீதமாக குறைத்து விட்டது. 1967ல் மேலும் அது முறையே 3.3 சதவிகிதம் மற்றும் 41.7 சதவிகிதமாகவும் குறைந்துவிட்டது. மறுபுறம் மொத்த வருவாயில் பதிவு செய்யப்பட்ட வணிக நிறுவனங்களின் பங்கு அதிகரித்து வந்துள்ளன: 1957ல் 16.2 சதவிகிதமாக இருந்தது, 1965ல் 35.3 சதவிகிதமாக உயர்ந்து விட்டது; 1976ல் 55 சதவீதமாக மேலும் அது உயர்ந்து விட்டது.

இவை அனைத்தும் தனியார் இணையத்துறை தனது லாபத்தின் ஒரு பகுதியைப் பதிவு செய்யப்படாத நிறுவனங்களுக்கு - அதாவது வணிகத் துறைக்குத் திருப்பிவிட்டிருக்கிறது என்பதைத் தெளிவாக காட்டுகின்றன. இவற்றின் மூலம் அது ஊக வாணிகம் மற்றும் கள்ளச் சந்தையில் ஈடுபடுகிறது.

இந்தியப் பெருமுதலாளிகளின் தரகுத் தன்மை

இந்தியப் பெருமுதலாளித்துவம் உபரி மதிப்பை அதிகரித்து தொழில் மூலதனத்தைப் பெருக்குவதற்கு மாறாக இந்தியாவின் தனியார் இணையத் துறையின் மொத்த சொத்துக்கள் விற்பனை மற்றும் லாபம் ஆகியவற்றில் அந்நிய மூலதனக் கம்பெனிகளின் பங்கு அதிகரிப்பதை முன்னரே பார்த்தோம். பெருமுதலாளிகளின் கம்பெனிகளிலும் கூட அந்நியரின் (ஏகாதிபத்தியவாதிகளின்) முதலீடு உயர் விகிதத்தில் இருக்கிறது. 1967-69 ஆண்டுகளில் சில முக்கியமான இந்தியப் பெருமுதலாளிகளின் கம்பெனிகளில் அந்நியர் முதலீடு உயர் விகிதத்தில் இருப்பதைப் பின்வரும் தகவலில் இருந்து காணலாம்.

 

உண்மையில் இத்தகைய இந்தியக் கம்பெனிகள் ஏராளமாக உள்ளன. அந்நிய நிதி மூலதனத்திற்கும் டாட்டா, பிர்லா, மபத்லால், லால்சந்த், கோயங்கா போன்ற பெருமுதலாளிகளுக்கும் இடையில் உள்ள ஒரு கூட்டின் நேரடியான கட்டுப்பாட்டில்தான் இந்த கம்பெனிகளின் நிர்வாகம் இருக்கிறது. இந்தியப் பெருமுதலாளிகள் ஒரு வர்க்கம் என்ற முறையில் வாழ்வதற்கும், வளர்வதற்கும் அந்நிய மூலதனத்தையே சார்ந்திருக்கின்றனர். பெரு முதலாளிகள் இந்திய இணையத்துறையிலும், தனித்தனி பெருங் கம்பெனிகளிலும் கூட அந்நிய மூலதனம் ஆதிக்கம் வகிக்கும் நிலைமையை அனுமதித்து விட்டு, பிரதானமாக, தமது பழைய வணிகத்துறை நடவடிக்கைகளுடன் திருப்திக் கொள்கின்றனர். இந்தியப் பெருமுதலாளிகளின் தரகுத்தன்மையை இதன்மூலம் தெளிவாக புலப்படுத்துகின்றனர்.

வ . எண்

அந்நியர் முதலீடு செய்துள்ள இந்திய பெரும் கம்பெனிகள்

அந்நிய மூலதன பங்கின் விகிதம்

இந்திய முதலாளியின் மூலதனப் பங்கின் விகிதம்

1

2

3


4

5

6

7

8

9

10

11

12

13

14

டாடா அயர்ன் அண்ட் ஸ்டீல்

ஆந்திரவேலி பவர் கம்பெனி

டாடா எஞ்ஜினியரிங் அண்டு லோகோ மோடிவ்

சென்சரி ஸ்பின்னிங்

ஒரியன்ட் பேப்பர்

இந்துஸ்தான் மோட்டார்

இந்துஸ்தான் அலுமினியம்

ரேணுசாகர் பவர் கம்பெனி

டெல்லி கிளாத் மில்ஸ்

பிரிமியர் ஆட்டோமொபைல்ஸ்

இந்தியன் அயர்ன் அன்ட் ஸ்டீல்

அசோக் லேலண்ட்

மபத்லால் பைன் ஸ்பின்னிங்

நேஷனல் ஆர்கானிக் கெமிகல்

1.2

3


1.6

6.9

13.8

2.8

3.5

4

10.2

1

1.3

2.4

4.5

1.5

1

1


1

1

1

1

1

1

1

1

1

1

1

1

                                   

வணிகமூலதனம் முதலாளித்துவ வளர்ச்சிக்கு தடையே

மேலும் வணிக மூலதனம் ஒரு சுயேச்சையான நிலைப்பைப் பெற்றிருக்கிறது என்பதையும் அது இன்னும் தொழில் மூலதனத்திற்குக் கீழ்ப்படுத்தப் படவில்லை என்பதையும் இது தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. உண்மையில் வணிகரின் லாபம் உபரி உற்பத்தியைப் பங்கிட்டுக்கொள்வதில் ஒரு முக்கியமான இடத்தைப் பெற்றிருப்பதையும் காணலாம். தொழில்துறை உற்பத்தியில் ஏற்படும் பற்றாக் குறையைப் பயன்படுத்திக் கொண்டு வணிகரின் மூலதனம் கொழுத்துக் கொண்டு வருகிறது. இணையத்துறையின் லாபத்தின் ஒரு பகுதி வணிகத்துறைக்குத் திருப்பி விடப்படுவதால் ஊக வாணிகமும், கள்ளச் சந்தையும் பெருகுகிறது. கள்ளப்பணம் (கருப்புப் பணம்) ஏராளமாகப் புழங்குகிறது. இதன் விளைவாக, பண வீக்கமும், வட்டி விகிதமும் அதிகரிக்கின்றன. வணிக வங்கிகளின் வட்டி விகிதமும் அதிகரிக்கின்றன. வணிக வங்கிகளின் வட்டி விகிதம் 18 சதவிகிதத்திலிருந்து 10 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுவிட்டது. நீண்டகால அடிப்படையில் பார்த்தால், தனியார் இணையத் துறையைச் சேர்ந்த (தொழில் துறை) பெரிய கம்பெனிகளின் லாபவிகிதம் 10 சதவிகிதமாகவும், சிறிய கம்பெனியின் லாபவிகிதம் 5 சதவிகிதமாகவும் இருக்கின்றன. வட்டி விகிதம் இந்த அளவிற்கு உயர்வாக இருக்கும்போது, ஐந்திலிருந்து பத்து சதவிகிதம் வரை லாபம் பெறுகின்ற தொழில்துறை கம்பெனிகளால், தமது லாபத்தைவிட இரண்டு மடங்கு வட்டிக்குக் கடனைப் பெற்று புதிய தொழில்களையோ அல்லது நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய தொழில்களையோ துவக்க முடிவதில்லை. சிறிய முதலாளிகள் பெரிய முதலாளிகளாக வளர்வதற்கோ, புதுவகைப்பட்ட நிலப்பிரபுக்களும், பணக்கார விவசாயிகளும் வேளாண்மைத் துறையில் முதலாளித்துவ முறையில் முன்னேறுவதற்கோ அல்லது நகர்புறத் தொழில்களைத் துவக்குவதின் மூலம் தொழில்துறை முதலாளித்துவத்தின் அணியில் சேர்ந்து விடுவதற்கோ வாய்ப்புகள் மிக அரிதாகவே இருக்கின்றன. சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால், வணிக மூலதனம் ஒரு சுயேச்சையான நிலைப்பைப் பெற்றிருப்பது - தொழில்துறை மூலதனத்திற்கு அது இன்னும் கீழ்ப்படுத்தப்படாமல் இருப்பது - பொதுவாக முதலாளித்துவ வளர்ச்சிக்கும், குறிப்பாக, சிறுமுதலாளிகள் மற்றும் புது வகைப்பட்ட நிலப்பிரபுக்களும் பணக்கார விவசாயிகளும் முதலாளித்துவ முறையில் முன்னேறுவதற்கு ஒரு தடையாக இருக்கிறது.

ஆலைத் தொழில் துறையில் விரல்விட்டு எண்ணக்கூடிய சிலதரகு பெரு முதலாளித்துவ குடும்பங்கள் மூலதனத்தை தங்களின் கைகளில் மையப்படுத்திக் கொள்ள முயல்கின்றன. ஏகபோக தரகு முதலாளித்துவ சிறுகும்பல் தங்களின் தொழில் நிறுவனம் உற்பத்தியைப் பெருக்குவதின் மூலம் லாபத்தைப் பெருக்குவதைவிட பிற கம்பெனிகளில் முதலீடு செய்தல், பிற கம்பெனிகளின் டைரக்டர் போர்டுகளைப் பிணைத்தல், நெருக்கடிக்குள்ளான கம்பெனிகளை விழுங்கிவிடுதல், தங்களுக்குப் போட்டியாக இருக்கின்ற தொழில் நிறுவனங்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருதல், இவை யாவற்றிற்கும் பொது நிதி நிறுவனங்களைப் பயன்படுத்துதல் ஆகிய வழிமுறைகளைக் கையாண்டு ஏகபோக நிலையை அடைவதின் மூலம் இலாபத்தை பெருக்கிக் கொள்வதை தங்களின் நோக்கமாகக் கொண்டுள்ளன.

தனியார் துறை மூலதனங்கள் மென்மேலும் ஒரு சில குடும்பங்களின் கைகளில் மையப்படுவதும், பெயரளவிலான மூலதனம் அரசின் கையில் மையப்பட்டிருப்பதும், இவை தங்களுக்குள் நெருக்கமாக பிணைக்கப்பட்டிருப்பதுடன், ஏகாதிபத்தியங்களுடன் மொத்தமாக பிணைக்கப்பட்டிருப்பதும் இந்திய முதலாளித்துவத்தில் மிக முக்கியமான அம்சமாகும். இந்த அதிகாரவர்க்க தரகு முதலாளித்துவ கும்பல்தான் ஏகாதிபத்தியங்களுக்கும், சமூக ஏகாதிபத்தியத்திற்கும் நாட்டை அடகு வைக்கிறது. ஏகாதிபத்திய மூலதனம், அரசு மூலதனம், தரகுப் பெரு மூலதனம் ஆகிய மூன்றும் பின்னிப் பிணைந்த வலிமைமிக்க ஒரே மூலதனக் குவியலாக ஆகியுள்ளது. இந்த அதிகாரவர்க்க தரகுமூலதனம் அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசில் மையப்படுத்த விரும்புகின்றது. இதன் விளைவாக அதிகார வர்க்க ஏகபோக மூலதனத்திகும் பிற தரகு முதலாளித்துவ பிரிவினர்களுக்கும் மத்திய அரசில் ஆதிக்கம் செலுத்துகின்ற முதலாளித்துவ பிரிவினர்களுக்கும் பல்வேறு தேசிய இனங்களில் உள்ள ஆளும் முதலாளித்துவ பிரிவினர்களுக்கும், அதிகார வர்க்க தரகு முதலாளித்துவத்திற்கும் தேசிய முதலாளிகளுக்கும் இடையிலுள்ள முரண்பாடுகள் கூர்மையடைகின்றன.

அதிகார வர்க்க தரகு மூலதனம் தமது நலனுக்காகவும், இந்திய அரசின் மீது ஆதிக்கம் செலுத்தும் இரு மேலாதிக்க வல்லரசுகளின் நலன்களுக்காகவும் அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசில் குவிக்க முயல்கிறது. அகில இந்திய அளவில் அவர்களுடன் அதிகாரத்திற்காகப் போட்டியிடும் பிற தரகு முதலாளித்துவ பிரிவினர்களும், பல்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்த ஆளும் முதலாளித்துவ பிரிவினர்களும் மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் என்ற முழக்கத்தை முன்வைக்கின்றனர். பல்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்த மாநிலமட்ட ஆளும் வர்க்கப் பிரிவினர் மாநிலத்தில் சுய ஆட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற முழக்கத்தின் பின்னால் தமது தேசிய இன மக்களைத் திரட்டுகின்றனர். வேளாண்மைத் துறையில் ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கம் உணவு தானியங்கள் மற்றும் மூலப் பொருட்களின் உற்பத்தியைப் பெருக்குவதற்காக இந்திய அரசு நில சீர்திருத்தம், கூட்டுறவு மற்றும் சமுதாய வளர்ச்சி திட்டம் என்ற மூன்று அம்சங்களைக் கொண்ட வேளாண்மைக் கொள்கைகளைக் கடை பிடித்தது. இந்த அரசு கொண்டு வந்த நில சீர்திருத்தங்களால் நில உடமை உறவுகளில் அடிப்படையான மாற்றம் ஏற்படவில்லை. அரை நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகளே தொடர்ந்தது. இந்திய அரசு கடைபிடித்த இக்கொள்கைகளால் உணவு நெருக்கடி தீரவில்லை. இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு ஏகாதிபத்தியவாதிகள் வகுத்துக் கொடுத்த திட்டத்தின் அடிப்படையில் வேளாண்மைத் துறையில் ஒரு புதிய தொழில் நுட்பத்தைப் புகுத்தும் "பசுமை புரட்சியை" அரசு அமல்படுத்திற்று. இந்த புதிய தொழில் நுட்பம் ஏராளமான ரசாயன உரம், வீரிய விதை, நவீன உழு கருவிகள் (டிராக்டர்கள்) ஆகியவற்றை பயன்படுத்தும் தொழில்நுட்பமாகும். நிலப்பிரபுக்களையும் பெரும் நில உடமையாளர்களையும் முதலாளித்துவ வேளாண்மை முறையை மேற்கொள்ள செய்வதின் மூலம் வேளாண்மைத் துறையில் முதலாளித்துவ வளர்ச்சிக்குத் திட்டமிடும் பாதையை அடிப்படையாக கொண்டதுமாகும். அந்நிய கடன் பெறுதல் மற்றும் அந்நிய மூலதன இறக்குமதி செய்தலையும் சார்ந்து இந்திய அரசு இத்திட்டத்தை செயல்படுத்தத் துவங்கியது.

1983 ஜூன் வரையில் இந்தியாவிற்கு உலகவங்கி வேளாண்மை அபிவிருத்தி மற்றும் நீர்பாசன திட்டங்களுக்காக மொத்தம் 5031.20 மில்லியன் டாலர்கள் கடனாக அளித்துள்ளது. உலக வங்கியிடமிருந்து இந்திய அரசு பெற்ற மொத்த கடனில் வேளாண்மை மற்றும் நீர்பாசனத்திற்காக பெற்ற கடன் 29.4 சதவிகிதமாகும். இவ்வாறு அந்நிய கடன் உதவியையும் ஏகாதிபத்தியவாதிகளின் நிதிமூலதன இறக்குமதியையும் சார்ந்துதான் இந்திய அரசு வேளாண்மைத் துறையில் புதிய நுட்பத்தை புகுத்தும் திட்டங்களையும் "பசுமை புரட்சி"யையும் செயல்படுத்தியது. IDA (சர்வதேசிய வளர்ச்சி கழகம்)-யின் முன் முயற்சியினாலும், அதன் அனுமதி பெற்றும், இந்திய அரசு 1969ல் கிராமபுற மின் கழகம் (Rural Electrification Corporation) என்ற ஒரு பொதுத்துறை நிறுவனத்தை அமைத்தது. இதேபோல், 1960வது ஆண்டுகளில் உலகவங்கி மற்றும் IDA ஆய்வு அறிக்கைகளின் ஆலோசனைகளின்படி விவசாய விலைகள் கமிஷன் (Agricultural Prices Commission), இந்திய உணவுக் கழகம் (The food corporation of India), தேசிய மற்றும் மாநில விதைக் கழகம் (National and State seed Commission) ஆகிய அமைப்புகள் இந்திய அரசால் அமைக்கப்பட்டன. நீர்ப்பாசன பணிகள் விரிவுபடுத்தப்பட்டன. புதிய உரத்தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டன அல்லது ஏற்கெனவே இருந்தவை விரிவுபடுத்தப்பட்டன. வேளாண்மை மற்றும் கிராம வளர்ச்சிக்கான தேசிய வங்கி (National Bank For Agriculture and Rural Development) சர்வதேச நிதிமூலதனத்திற்கும் இந்தியாவில் அவற்றின் உதவியுடன் செயல்படுத்தும் திட்டங்களுடன் தொடர்புடைய வங்கிகளுக்கும் இடையில் பிரதான இடைத்தரகனாக செயல்படுகிறது. இந்த வங்கியின் மூலமாகப் பல்வேறு விவசாய அபிவிருத்தி திட்டங்களுக்கு நிதி அளிக்கப்படுகின்றன. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் இந்திய வேளாண்மைத்துறை மென்மேலும் சர்வதேச நிதி மூலதனத்தின் ஆதிக்கத்திற்குள் கொண்டு வரப்படுகிறது.

"பசுமைப் புரட்சியால்'' பயனடைந்தவர் யார்?

புதிய தொழில் நுட்பத்தைப் புகுத்தும் இத்திட்டங்களால் ''பசுமை புரட்சியால்'' நிலப்பிரபுக்களும் பெரும் நில உடமையாளர்களும் பெரும் அளவிற்கு பயனடைந்தனர். இந்திய ரிசர்வ் வங்கியினால் வெளியிடப்பட்ட கிராமப்புற கடன் மற்றும் முதலீடு பற்றிய ஆய்வறிக்கைகளை கவனித்தால் நாம் இதை அறியலாம். கிராமப்புற குடும்பங்களின் சராசரி சொத்து மதிப்பு 1961-62 ஆண்டிலிருந்து 1971-72 ஆண்டிற்கிடையில் ரூ.5370 லிருந்து 11,311க்கு உயர்ந்திருக்கிறது என அந்த அறிக்கைகள் கூறுகின்றன. 1961-62 கிராமப்புற குடும்பங்களில் மேல்மட்டத்தைச் சேர்ந்த 10 சதவிதத்தினர் மொத்த கிராமப்புற சொத்துக்களில் 58.71 சதவிகிதத்தைப் பெற்றிருந்தனர். பத்தாண்டுகளில் அவர்களின் பங்கு 61.79 சதவிகிதமாக அதிகரித்துவிட்டது. ஆனால் அதே காலப் பகுதியில் மற்றெல்லா பிரிவினர்களின் பங்குகள் சுருக்கிவிட்டன. ஒரு பிரிவு எவ்வளவுக்கு எவ்வளவு ஏழ்மையாக இருக்கின்றதோ அந்த அளவிற்கு மொத்த சொத்தில் அதன் பங்கு குறைந்து விட்டது. சொத்துகளின் சராசரி மதிப்பு அதிகரித்து இருந்தாலும் சமச்சீரற்ற விகிதத்தில்தான் அவை அதிகரிக்கின்றன. கீழ்மட்ட (மிக ஏழ்மையான) 5 பிரிவுகளின் சராசரி மதிப்பு சுமார் 80 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. ஆனால் அக்காலப் பகுதியில் பொதுவான விலைகள் அதிகரித்துள்ளன. மேல்மட்டத்தைச் சேர்ந்த 10 சதவிகிதத்தினர்

- நிலப்பிரபுகளும் பணக்கார விவசாயிகளும் கிராமப்புற சொத்துக்கள் உருவாக்கத்தினால் கிடைத்த முழு பயனையும் அடைந்து வந்துள்ளனர். இந்தியாவின் கிராமப்புறங்களில் நடைபெறும் மாற்றங்களின் சாரம் இவ்வாறாகத்தான் இருந்து வருகின்றன. பத்து ஏக்கரும் அதற்கு அதிகமாகவும் நில உடைமை பெற்றிருப்போரும், கிராமப்புற குடும்பங்களில் 15 சதவிகிதத்தினரும் ஆன நிலப்பிரபுகளும் பணக்கார விவசாயிகளும் பயிர் செய்யப்படும் நிலத்தில் ஐந்தில் மூன்று பங்கை தமது உடமையாகக் கொண்டிருப்பதால் வேளாண்மை அபிவிருத்தி திட்டங்களின் பயனை அடைந்தனர்.

பசுமைப்புரட்சியும் சமச்சீரற்ற வளர்ச்சியும்

''பசுமைப்புரட்சி'' தீவிரமாக செயல்படுத்தப்பட்ட பகுதிகளில் நிலப்பிரபுகள் குத்தகை விவசாயிகள் மற்றும் வார விவசாயிகளிடமிருந்து நிலத்தைப் பறித்துக் கொண்டு நவீன உழுக் கருவிகளையும் புதிய வேளாண்மை தொழில் நுட்பத்தையும் பயன்படுத்தி கூலித் தொழிலாளரைக் கொண்டு நேரடி விவசாயத்தில் ஈடுபடத் துவங்கினர். நிலவுகின்ற அரை நிலப்பிரபுத்துவ உறவுகள் மற்றும் ஒழுங்கு முறைக்குள் சில நிலப்பிரபுக்கள் டிரேக்டர்களையும், கூலி உழைப்பையும் பயன்படுத்திக் கொண்டு முதலாளித்துவப் பண்ணை முறையை மேற்கொள்ளத் துவங்கினர். வீரிய வித்துக்கள் புதிய வேளாண்மை தொழில் நுட்பம் புகுத்தப்பட்ட பிறகு இந்தியாவில் பரவலாக முதலாளித்துவ வேளாண்மை முறைக்கு ஊக்கம் அளிக்கப்பட்டது. ஆயினும் "பசுமைப் புரட்சி'' ஏற்றத் தாழ்வான முறையில்தான் அமல்படுத்தப்பட்டது. நிலவளம் நீர்வளத்தைச் சார்ந்தும், புதிய தொழில் நுட்பத்தை மேற்கொள்வதற்குத் தேவையான அந்நிய முதலீட்டைச் சார்த்தும் அரை நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகளைத் தக்க வைத்துக் கொண்டே செயல்படுத்தப்படுவதன் விளைவாக பசுமைப்புரட்சியை அமல்படுத்தலும் பிரதேச ரீதியில் ஏற்றத் தாழ்வாகவே அமைந்தது. ஆகையால், இந்தியாவில் வேளாண்மைத் துறையில் முதலாளித்துவ உற்பத்தி உறவுகளின் வளர்ச்சி ஏற்றத்தாழ்வாகவே நிகழ்ந்துள்ளன. பஞ்சாப், அரியானா மற்றும் மேற்கு உத்திர பிரதேசம் ஆகிய பிரதேசத்தில் இப்புதிய தொழில் நுட்பத்தை புகுத்துவதற்குத் தேவையான நீர் வளமும் நிலவளமும் இருப்பதுடன் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக அளிக்கப்பட்டதால், இப்பிரதேசத்தில் "பசுமைப் புரட்சி" தீவிரமாக அமல்படுத்தப்பட்டது. இப்பிரதேசத்தை, மற்றப் பிரதேசங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில், இங்கே முதலாளித்துவ உற்பத்தி உறவுகள் அதிகமாகவும், பரவலாகவும் வளர்த்துள்ளன.

இந்தியாவில் 5.38 கோடி பழங்குடி மக்கள் வாழ்கின்றனர். இவர்கள் இந்திய மக்கட் தொகையில் 7.78 சதவிதத்தினர் ஆவர். வடகிழக்குப் பிரதேசத்தில் உள்ள மிசோரம், நாகாலாந்து, மேகலாயா மற்றும் அருணாசலப் பிரதேசம் ஆகியன பழங்குடி மக்கள் சமுதாயங்களைக் கொண்டவையாக இருக்கின்றன. இப்பழங்குடி மக்கள் சமுதாயங்கள் அரை நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகளாக மாறுவதில் பல்வேறு கட்டங்களில் உள்ளன. பிற தேசிய இனங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இவை இன்னும் அவற்றிற்கு முந்தைய வளர்ச்சிக் கட்டத்தில்தான் இருக்கின்றன. "பசுமைப்புரட்சி" இப்பிரதேசங்களில் குறிப்பிடத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.

மேற்கூறப்பட்டவை நீங்கலாக, மற்ற பிரதேசங்களில் வேளாண்மைத் துறையில் புதியதொழில் நுட்பம் புகுத்தப்பட்டது. "பசுமைப்புரட்சி" அமல்படுத்தப்பட்டது என்றாலும் மாநிலங்களுக்கிடையிலேயும் மா நிலங் களு க்குள் ளும் ச மச்சீ ரற் ற முை றயி ல்தா ன் அமல்படுத்தப்பட்டது. ஆகையால் இப்பிரதேசங்களைச் சேர்ந்த தேசிய இனங்களில் பிரதேச ரீதியில் முதலாளித்துவ உற்பத்தி உறவுகளின் வளர்ச்சி ஏற்றத் தாழ்வுடன் நிகழ்ந்துள்ளன. இப்பிரதேசத்தைச் சேர்ந்த தேசிய இனங்களில் அரை நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகள் மிகுநிலை பெற்றிருக்கின்றது. ஆகையால் மேற்கூறப்பட்ட இரு பிரதேசங்களைத் தவிர, பெரும்பாலான தேசிய இனங்களிலும் இந்தியா முழுவதுமாக எடுத்துக்கொண்டு பார்த்தாலும் ஆகப் பெரும்பான்மையான பகுதியில் அரை நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகளே மிகுநிலை பெற்று இருக்கின்றன.

இதன் விளைவாக, இந்தியாவில் தேசிய இனங்கள் ஏற்றத் தாழ்வான முறையில் வளர்ச்சி பெற்றிருக்கின்றன. வேளாண்மைத் துறையில் முதலாளித்துவ உற்பத்தி உறவுகள் இந்தியா முழுவதிலும், எல்லா மாநிலங்களிலும் ஒரே சீரான முறையில் வளர்ச்சி பெறவில்லை; ஏற்றத்தாழ்வான முறையில்தான் வளர்ச்சி பெறுகின்றன. மாநிலங்களுக்கிடையில் மட்டுமல்ல, மாநிலங்களுக்குள்ளேயும் கூட ஏற்றத்தாழ்வான முறையில் தான் வளர்ச்சி அடைந்துள்ளன. இந்தியாவின் கடந்தகால காலனியாட்சியின் காரணமாகவும், இன்னும் அது தொடர்ந்து அந்நிய நிதிமூலதன ஆதிக்கத்தின் கீழ் இருப்பதன் காரணமாகவும், அரை நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகளைத் தக்க வைத்துக் கொண்டே சீர்திருத்த முறையில் வேளாண்மைத் துறையில் முதலாளித்துவ உறவுகள் புகுத்தப்படுவதின் காரணமாகவும் முதலாளித்துவம் ஏற்றத் தாழ்வான முறையில் வளர்ச்சியுறுகிறது. இந்திய அரசு செயல்படுத்திய "பசுமைப் புரட்சி'' வேளாண்மைத் துறையில் தேசிய இனங்களுக்கிடையில் ஏற்றத் தாழ்வான வளர்ச்சியை தீவிரப்படுத்தியுள்ளது.

வேளாண்மைத் துறையில் இருவகை முரண்பாடுகள்

அரைக் காலனிய அரை நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் அந்நிய மூலதனத்தைச் சார்ந்து சீர்திருத்த முறையில் நிகழும் முதலாளித்துவ உற்பத்தி முறையின் வளர்ச்சியும் கூட புதிய வர்க்கங்களையும் புதிய வர்க்க முரண்பாடுகளையும் தோற்றுவிக்கின்றன. உடமையாளர்கள் தங்களுக்குச் சொந்தமான உழுகருவிகளையும் சாதனங்களையும் கொண்டு கூலித் தொழிலாளர்களால் நிலத்தைச் சாகுபடி செய்யும் முறை ஒரு முதலாளித்துவ பண்ணை முறையாகும். (முதலாளித்துவ சாகுபடி முறையாகும்.)

நிலவுடமையாளர்கள் விவசாயிகளை அடிமைப்படுத்தி, விவசாயிகளை நிர்பந்தித்து அவர்களுக்குச் சொந்தமான கால்நடைகளையும் (உழவு மாடுகளையும்) அவர்களுக்குச் சொந்தமான உழுகருவிகளையும் கொண்டு நிலப்பிரபுக்களின் நிலங்களைச் சாகுபடி செய்யும் முறை ஒரு நிலப்பிரபுத்துவ பண்ணை முறையாகும். புதிய தொழில் நுட்பம்

புகுத்தப்பட்ட பிறகு, நிலப்பிரபுக்களும் (பணக்கார விவசாயிகளும்கூட) தமக்குச் சொந்தமான உழுகருவிகளையும் சாதனங்களையும் கொண்டு கூலித் தொழிலாளர்களால் சாகுபடி செய்யும் முறைக்கு மாறிச் செல்கின்ற போக்கு, சரக்கு உற்பத்தியாளர்களாக மாறிவரும் போக்கு நிகழ்கின்றன. அந்நிய நிதி மூலதனத்தைச் சார்ந்து நடைபெறும் முதலாளித்துவ வளர்ச்சியாக இது இருக்கின்ற காரணத்தினால், விவசாயம் தொழில் ஆகிய இரண்டிற்குமிடையில் வர்த்தக நிலைமை ஆலைத் தொழிலின் மீது ஆதிக்கம் செலுத்தும் ஏகாதிபத்தியம் மற்றும் தரகு பெருமுதலாளித்துவம் ஆகியவற்றிற்கு சாதகமாக இருக்கின்றன.....

மேலும் வணிக முதலாளித்துவமும் வேளாண்மைத் துறை உபரி உற்பத்தியில் ஒரு பகுதியை சுவிகரித்துக்கொள்கிறது. இத்தகைய நிலைமைகளில் இருவகை முரண்பாடுகள் தோன்றியுள்ளன. ஒருபுறம் சரக்கு உற்பத்தியாளர்களான பெரும் நிலவுடமையாளர்களுக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் இடையிலான முரண்பாடு, மறுபுறம் சரக்கு உற்பத்தியாளர்களான பெரும் நிலவுடமையாளர்களுக்கும் ஏகாதிபத்தியவாதிகள், தரகு பெரும் முதலாளிகள் மற்றும் வணிக முதலாளிகள் ஆகியோர்களுக்கும் இடையிலான முரண்பாடு ஆகிய இருவகையான முரண்பாடுகள் தோன்றின. இவ்விருவகை முரண்பாடுகளும் தன்மையில் வேறுபட்டவையாகும். புதிய தொழில் நுட்பம் புகுத்தப்பட்டதன் விளைவாக பணக்கார விவசாயிகள் மட்டுமல்லாமல், விவசாயிகளும் சந்தைக்காக உற்பத்தி செய்வோராக - சரக்கு உற்பத்தி செய்வோராக மாற்றம் அடைதலும் நிகழ்கிறது. மேற்கூறப்பட்ட அதே காரணத்தினால், விவசாயிகளுக்கும் ஏகாதிபத்தியம், தரகு பெரு முதலாளித்துவம் மற்றும் வணிக முதலாளித்துவம் ஆகியோருக்கும் இடையிலுள்ள முரண்பாடும் தீவிரமடைந்துள்ளது. வேளாண்மைத் துறையில் முதலாளித்துவ உற்பத்தி உறவுகளின் வளர்ச்சியானது, வேளாண்மைத் துறை சரக்கு உற்பத்தியாளர்களுக்கும் ஏகாதிபத்தியம், தரகு பெரு முதலாளித்துவம் மற்றும் வணிக முதலாளித்துவம் ஆகியோருக்கு இடையிலுள்ள முரண்பாட்டை தீவிரமடையச் செய்துள்ளது.

இவ்வாறு அரைக் காலனி அரை நிலப்பிரபுத்துவ இந்தியாவின் வேளாண்மைத் துறையில் பல முரண்பாடுகளும் சிக்கலான நிலைமையும் நிலவுகிறது. என்றாலும், இந்தியா முழுவதையும் எடுத்துக்கொண்டு பார்த்தால் அரை நிலப்பிரபுத்துவ உறவுகளே மிகு நிலை வகிக்கிறது. அதே சமயம், பசுமைப் புரட்சி தீவிரமாகவும், விரிவாகவும் செயல்படுத்தப்பட்ட பிரதேசங்களான பஞ்சாப், அரியானா மற்றும் மேற்கு உத்திரபிரதேசம் ஆகியவற்றில் நிலைமை வேறுபட்டுள்ளது.

உதாரணமாக பஞ்சாப் மாநிலத்தை எடுத்துக் கொள்வோம்.1967-68 ஆம் ஆண்டில் வீரியவிதை பயன்படுத்தப்பட்டுகோதுமை பயிர் செய்யப்பட்ட நிலம் 35 சதவிகிதத்திலிருந்து 1978-79ல் 96 சதவிகிதமாக அதிகரித்துவிட்டது. இதே காலப் பகுதியில் வீரிய விதை பயன்படுத்தப்பட்டு நெல் பயிர் செய்யப்பட்ட நிலம் ஐந்திலிருந்து 95 சதவிகிதமாக அதிகரித்துவிட்டது. இந்தியா முழுவதும் சராசரி ஒரு ஹெக்டேர் நிலத்திற்கு 32 கிலோகிராம் பயன்படுத்தப்பட்டபோது பஞ்சாப்பில் ஒரு ஹெகடேர் நிலத்திற்கு 132 கிலோ கிராம் உரம் பயன்படுத்தப்பட்டது. பஞ்சாப்பில் சாகுபடி செய்யப்படும் நிலத்தில் 80 சதவிதம் நீர்ப்பாசன வசதி செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்தியா முழுவதிலும் 28 சதவிகிதம் நிலம்தான் நீர்பாசன வசதி செய்யப்பட்டிருந்தது. பஞ்சாப்பில் 100 சதவிகிதம் கிராமங்கள் மின்சாரம் வழங்கப்பட்டிருந்தபோது அகில இந்திய மட்டத்தில் 56 சதவிகிதம் கிராமங்களே மின்சாரம் வழங்கப்பட்டிருந்தது. 1965-67ம் ஆண்டிற்கும் 1976-77ம் ஆண்டிற்கும் இடையில் பஞ்சாப்பில் ஒரு ஹெக்டார் நிலத்தின் விளைச்சல் 1236 கிலோ கிராம்களிலிருந்து 1432 கிலோ கிராம்களாக உயர்ந்துவிட்டது. பஞ்சாப் மாநிலத்தில்1970-71ம் ஆண்டில் 174000 டன் சராசரியான உரங்கள் நுகரப்பட்டன. 1981-82ஆம் ஆண்டில் 812000 டன்களாக நுகர்வு அதிகரித்துவிட்டது. அதாவது பத்தாண்டுகளில் ஏறக்குறைய ஐந்து மடங்கு அதிகரித்தது. 1977-78ம் ஆண்டில் இந்தியாவின் சராசரி நபர்வாரி வருமானம் ரூ.1190 ஆக இருந்தபோது பஞ்சாபில் நபர்வாரி வருமானம் ரூ.1965 ஆக இருந்தது. 1984-85ம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பயிர்களின் அகில இந்திய ரீதியில் சராசரி ஒரு ஹெக்டர் நிலத்தில் விளைந்த விளைச்சலுடன் பஞ்சாப் மாநிலத்தில் ஒரு ஹெக்டார் நிலத்தின் சராசரி விளைச்சலை ஓப்பிட்டுப் பார்ப்போம்.

(ஒரு ஹெக்டார் நிலத்தில் விளைந்த விளைச்சல் - கிலோ கிராம் கணக்கில்)

                              நெல்  கோதுமை     சிறு பயிர்கள் மொத்த தானியங்கள் எண்ணெய் வித்துக்கள்   கரும்பு  பருத்தி

பஞ்சாப்                     3074     3289              737                    3006                                         999                            62.25       44.7

அகில இந்தியா         1425     1873             536                    1154                                        660                            58.01       19.3

இந்தியாவின் பிறபகுதிகளோடு பஞ்சாபை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, வேளாண்மைத் துறையில் அது முன்னேறி இருப்பதையும் உற்பத்தி அதிகமாக இருப்பதையும் காணலாம். வேளாண்மைத் துறைக்கும் தொழிற்துறைக்கும் இடையில் பரிவர்த்தனை அதிகரிப்பதிலிருந்து இங்கே சரக்கு உற்பத்தி பெருகி இருப்பதையும் காணலாம்.

நிலச்சீர்திருத்தங்களால் நிலப்பிரபுக்களிடமிருந்து நிலம் எடுத்து வினியோகம் செய்யப்படவில்லை. நிலப்பிரபுக்கள் பல்வேறு வழிகளில் நிலத்தைத் தக்க வைத்துக் கொண்டார்கள். 1961ம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் 13.5 லட்சம் நிலத்தைச் சாகுபடி செய்யும் குடும்பங்கள் (நிலவுடமைக் குடும்பங்கள்) இருந்தன. அதிலிருந்து பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நிலத்தைச் சாகுபடி செய்யும் குடும்பங்கள் (நில வுடமைக் குடும்பங்கள்) 10 லட்சம் குடும்பங்களாக குறைந்து விட்டன. மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் குடும்பங்கள் தங்களின் நிலங்களை பணக்கார விவசாயிகளுக்கும் பெரும் நிலவுடமையாளர்களுக்கும் விற்றுவிட்டன அல்லது குத்தகைக்கு விட்டுவிட்டன. நடுத்தர அல்லது எளிய விவசாயிகளிடமிருந்து நிலத்தைப் பறித்துக் கொண்டு பெரும் நிலவுடமையாளர்கள் நிலத்தைத் தமது கரங்களில் குவித்துக் கொண்டுவிட்டார்கள்.

பஞ்சாப் மாநிலத்தில் வங்கிகள் விவசாயிகளுக்குக் கொடுத்த மொத்த கடனில் 79 சதவிகிதத்தை பெரும் நிலவுடமையாளர்கள் பெற்றுக் கொண்டார்கள். தவிர அவர்கள் சொந்தமான மூலதனத்தையும் பெற்றிருந்தார்கள். இக்காலத்தில் இந்திய வேளாண்மைத் துறையில் பயன்படுத்தப்பட்ட மொத்த டிராக்டர்களில் 30 சதவிகிதம் பஞ்சாபில் பயன்படுத்தப்பட்டது. இவை பெரு நிலவுடமையாளர்களுக்குச் சொந்தமானவை ஆகும். நிலப்பிரபுக்கள் குத்தகை விவசாயிகளையும், விவசாயிகளையும் நிலத்தை விட்டு வெளியேற்றிவிட்டு, வங்கிகள் அளித்த கடனையும் தமக்குச் சொந்தமான மூலதனத்தையும் முதலீடு செய்தும் இரசாயன உரங்களையும், நவீன உழுகருவிகளையும் (டிராக்டர்களை) மற்றும் பிற நவீன இடுபொருட்களையும் தொழில் நுட்பத்தையும் பயன்படுத்திக் கொண்டும், கூலித் தொழிலாளர்களைக் கொண்டு தங்கள் நிலத்தில் விவசாயம் செய்யத் துவங்கினர். சந்தைக்காக உற்பத்தி செய்தார்கள்.

முதலாளித்துவப் பண்ணையார்

பஞ்சாப்பில் நிலப்பிரபுக்கள் தங்கள் நிலத்தை வார மற்றும் குத்தகை விவசாயம் செய்வது பெரும் அளவிற்கு குறைந்துவிட்டது. இதன் விளைவாக நிலப்பிரபுக்கள் முதலாளித் துவ முறையில் பண்ணைகளில் விவசாயம் செய்வோரகவோ அல் லது இரு முறைகளையும் இணைப்போர்களாகவோ மாறிவிட்டார்கள். முதலாளித்துவ முறையில் பண்ணை விவசாயம் செய்வதற்கு மாறிச் செல்வது பெரும் போக்காயிற்று. நடுத்தர விவசாயிகள் மற்றும் எளிய விவசாயிகளின் நிலங்களை பணக்கார விவசாயிகள் விலைக்கு வாங்கிக் கொள்வது அல்லது குத்தகைக்கு எடுத்துக் கொள்வதின் மூலமாக நிலத்தை தங்கள் கைகளில் குவித்துக் கொள்வதும் பெரும்போக்காக ஆயிற்று. அவர்கள் முதலீடு செய்து புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தினார்கள். தங்கள் குடும்ப உழைப்பைவிட அதிகமான அளவிற்கு கூலி உழைப்பைப் பயன்படுத்தி நிலத்தில் பயிர் செய்கிறார்கள்; சந்தைக்காக உற்பத்தி செய்கிறார்கள். முதலாளித்துவ பண்ணையார்களாக ஆகி விட்டார்கள். வார விவசாயிகள் மற்றம் குத்தகை விவசாயிகள் மூலம் நிலப்பிரபுக்கள் தங்களின் நிலத்தை விவசாயம் செய்வது சொற்பமாகவே உள்ளது. மிகப்பெரும் அளவிற்கு குறைத்துவிட்டது. இதன் விளைவாக பஞ்சாப்பில் அரை நிலப்பிரபுத்துவத்திற்கு மாறாக நிலப்பிரபுத்துவ எச்சங்களே உள்ளன.

வேளாண்மைத் துறையில் உபரி உற்பத்தி முதலாளிகளின் (முதலாளித்துவ பண்ணையார்களின்) லாபமாக மட்டும் மாற்றம் பெறவில்லை. நிலப்பிரபுக்கள், வணிகர்கள் மற்றும் முதலாளிகள் (அதிகாரவர்க்க தரகு முதலாளிகள் மற்றும் ஏகாதிபத்தியவாதிகள்) ஆகியோரும் அதைப் பகிர்ந்து கொள்கின்றனர். நிலப்பிரபுக்கள் உபரி உற்பத்தியின் ஒரு பகுதியை வாடகை என்ற வடிவத்தில் எடுத்துக் கொள்கின்றனர். வணிகரின் மூலதனம் இன்னும் தொழில்துறை மூலதனத்திற்கு கீழ்ப்படுத்தப்படாமல் ஒரு சுயேச்சையான நிலைப்பை பெற்றிருக்கிறது. வணிகரின் இலாபம் உபரி உற்பத்தியில் ஒரு முக்கியமான பங்கை வகிக்கின்றன. ஏகபோக மூலதனம் சாதாரண இலாபத்துடன் மன நிறைவு கொள்வதில்லை; சாதாரண இலாபத்தைவிட மிக அதிகான இலாபத்தை - அதீத இலாபத்தை உறுஞ்சி விடுகிறது.

வேளாண்மைத் துறையில் முதலாளித்துவ நெருக்கடி

வேளாண்மைத் துறையில் முதலாளித்துவ வளர்ச்சிக்கு முற்றான வாடகையும், கிராமத்திற்கும் நகரத்திற்கும் இடையிலான முரண்பாடும் இரு தடைகளாக இருப்பது பொதுவான ஒன்றாகும். ஆனால் இங்கே அவற்றுடன் ஏகபோக மூலதனத்தின் அதீத இலாபமும் வணிகரின் இலாபமும் கூடுதலான தடைகளாக உள்ளன. இவ்விரு தடைகளின் காரணமாக தேக்க நிலை ஏற்படுகிறது. மேலும் இந்திய அரசு பின்பற்றும் ஏகபோக முலத்தினத்திற்கு ஆதரவான விலைக் கொள்கைகளும், பணவீக்கம் மற்றும் கள்ளச்சந்தையின் விளைவாக வணிக வங்கிகளின் உயர்வான வட்டி விகிதமும் வேளாண்மைத் துறையில் முதலாளித்துவ நெருக்கடியை தீவிரப்படுத்துகிறது. விவசாயிகள் நெருக்கடிக்குள்ளாகின்றனர். ஒரு நிலையான மற்றும் துரிதமான வளர்ச்சி பெறவேண்டும் என்ற நடுத்தர விவசாயிகளின் வேட்கைகள் நிராசையாக ஆகிவிடுகிறது. சிறிய விவசாயிகள் கடன் சுமையால் நசிவடைகின்றனர். முதலாளித்துவ பண்ணையார்கள் நெருக்கடியின் சுமையை ஒருபுறம் விவசாய தொழிலாளர்கள் மீது சுமத்தி விடுகின்றனர். மறுபுறம் உபரி உற்பத்தியில் தங்களின் பங்கை அதிகரிப்பதற்காக அதிகார வர்க்க தரகு பெரு முதலாளித்துவத்தையும் வணிக மூலதனத்தையும் எதிர்த்து போராடுகின்றனர்.

தேசிய இனப்பிரச்சனையின் விவசாய அடிப்படை

அதிகாரவர்க்க தரகு ஏகபோக மூலதனம் இந்தியச் சந்தை முழுவதையும் மென்மேலும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்காக அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசில் குவிக்க முயல்கிறது. வேளாண்மைத் துறையில் முதலாளித்துவ நெருக்கடி கூர்மை அடையும் அளவிற்கு ஒருபுறம் ஏகாதிபத்தியவாதிகள், தரகு பெருமுதலாளித்துவம் மற்றும் வணிகர்கள் ஆகியோருக்கும் மறுபுறம் புதிய வகைப்பட்ட நிலப்பிரபுக்களை உள்ளிட்டு அனைத்து விவசாய வர்க்கத்தினருக்கும் இடையிலான முரண்பாடு கூர்மை அடைகிறது. இதன் விளைவாக, அத்தேசிய இனத்தின் வேளாண்மைத் துறையில் முதலாளித்துவ உற்பத்தி உறவுகள் வளர்ச்சியடைந்திருக்கின்ற காரணத்தினால், விவசாயிகளின் பிரச்சனை அத்தேசிய இனத்திற்கும் மத்திய அரசுக்கும் இடையிலான முரண்பாட்டை கூர்மை அடையச் செய்வதுடன், விவசாயிகள் பிரச்சனை ஒரு தேசிய இனப் பிரச்சனை என்ற வடிவத்தை எடுத்துக் கொள்வதற்கு ஒரு பொருளியல் அடிப்படையை வழங்குகின்றது.

எனினும் வேளாண்மைத் துறையில் இரு வகையான போக்குகள் எழுகின்றன. ஒன்று புதிய வகைப்பட்ட நிலப்பிரபுக்களின் போக்கு; மற்றொன்று விவசாயிகள் மற்றும் பரந்துபட்ட மக்கள் போக்கு ஆகும். புதிய வகைப்பட்ட நிலப்பிரபுக்களும் முதலாளித்துவ பண்ணையார்களும் நிலத்தில் தனிவுடமையைக் காக்க விரும்புகின்றனர். ஆனால் முதலாளித்துவ வளர்ச்சி பெற்ற பஞ்சாப் போன்ற தேசிய இனத்தில் முற்றான வாடகையை ஒழித்துக் கட்டாமல் வேளாண்மைத் துறையில் முதலாளித்துவ முன்னேற்றத்தைக் காணமுடியாது என்பதால் விவசாயிகளின் ஜனநாயகத்தைக் கருதி தொழிலாளி வர்க்க இயக்கம் நிலத்தை தேசிய மயமாக்கும் கொள்கையை கடைபிடிக்கும் என்ற காரணத்தால் அவர்கள் தொழிலாளி வர்க்க இயக்கத்தைக் கண்டு அஞ்சுகின்றனர். மேலும், புதிய வகைப்பட்ட நிலப்பிரபுக்கள் அந்நிய மூலதனத்தைச் சார்ந்தே முதலாளித்துவப் பாதையில் முன்னேற விரும்புகின்றனர். ஆகையால் அவர்கள் தேசிய இனப்பிரச்சனையில் ஒருமுழுமையான ஜனநாயகத் தீர்வைக் கண்டு அஞ்சுவதுடன், பிற ஆளும் வர்க்கங்களுடன் அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதற்கு ஏற்ப ஒரு சமரசத் தீர்வை முன்வைக்கின்றனர். விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் பரந்துபட்ட மக்களைப் பொறுத்தவரையில் வேளாண்மைத் துறையில் தங்கு தடையற்ற முதலாளித்துவ வளர்ச்சியைக் கருதி, உபரி உற்பத்தியை முற்றான வாடகை, ஏகபோகத்தின் அதீதலாபம், வணிகரின் லாபம் ஆகியவை பகிர்ந்து கொள்வதற்கு முடிவு கட்டுவதுடன், தேசிய இனப்பிரச்சனையில் ஒரு ஜனநாயக தீர்வே அவர்களின் நலனுக்கு உகந்ததாக இருக்கின்றது. விவசாயிகளின் ஜனநாயகத்தை ஆதரிப்பதே ஒரு பாட்டாளி வர்க்க இயக்கத்தின் கடமையாகும். விவசாயிகளின் ஜனநாயகம் பிரிவினை வடிவத்தை மேற்கொள்வது சூழ்நிலைமைகளைப் பொறுத்த ஒன்றாகும்.

முதலாளித்துவ வளர்ச்சியால் தோன்றியுள்ள முரண்பாடுகள்

இந்தியாவின் பொருளாதார வாழ்வில் நிகழும் மாற்றங்களையும், குறிப்பாக முதலாளித்துவ உற்பத்தி உறவுகளின் வளர்ச்சிப் போக்கின் விளைவாக தோன்றியுள்ள முரண்பாடுகளையும் பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்.

ஏகாதிபத்தியவாதிகளின் நிதி மூலதனம் இந்தியாவின் பொருளாதார வாழ்வில் ஆதிக்க நிலைபெற்றிருக்கிறது. குறிப்பாக, இந்தியப் பெருமுதலாளித்துவ நிறுவனங்களில் ஆதிக்க நிலை வகிக்கிறது. வேளாண்மைத்துறையில் முதலாளித்துவ உற்பத்தி உறவுகளின் வளர்ச்சியும் அந்நிய நிதிமூலதனத்தைச் சார்ந்தே நடைபெறுகிறது. இவை இந்தியாவில் சுயேச்சையான முதலாளித்துவ வளர்ச்சிக்குத் தடைகளாகவே இருக்கின்றன. இந்தியாவின் விடுதலைக்கும், தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்கும் அவை எதிராக உள்ளன.

தரகு ஏகபோக முதலாளிகள் அந்நிய நிதிமூலதனத்தைச் சார்ந்து ஒருபுறம் மூலதனத்தை மையப்படுத்துகின்றனர். தம்முடன் போட்டியிடும் பிற மூலதனங்களைத் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவும், சிறிய மூலதனங்களை விழுங்குவதற்கும் முயல்கின்றனர். மறுபுறம், அந்நிய மூலதனத்தைப் பெருமுதலாளித்துவ நிறுவனங்களில் ஆதிக்க நிலை வகிப்பதற்கு அனுமதித்துவிட்டு, இணையத்துறையின் லாபத்தின் ஒருபகுதியை வணிகத்துறைக்குத் திருப்பிவிடுகின்றனர்.

மூலதன மையப்படுத்தலின் விளைவாக ஏகபோக தரகு முதலாளிகளுக்கும், ஏகபோகமல்லாத தரகு முதலாளித்துவப் பிரிவினருக்கும் இடையிலுள்ள முரண்பாடும், அகில இந்திய ஆளும் முதலாளித்துவ பிரிவினருக்கும் மாநில மட்டத்தில் உள்ள ஆளும் தரகு முதலாளித்துவ பிரிவினருக்கும் இடையிலான முரண்பாடும் தரகுப் பெரு முதலாளித்துவத்திற்கும் தேசிய முதலாளித்துவத்தினருக்கும் இடையிலுள்ள முரண்பாடும் கூர்மை அடைகின்றன.

வணிக மூலதனம் தொழில் துறை மூலதனத்திற்குக் (உற்பத்தி ரீதியான மூலதனத்திற்கு) கீழ்படுத்தப்படாமல் ஒரு சுயேச்சையான நிலைப்பைப் பெற்றிருப்பதால் சிறு மூலதனக் கம்பெனிகள் பெரிய கம்பெனிகளாக வளர்வதற்குத் தடையாக இருக்கின்றன. புதுவகைப்பட்ட நிலப்பிரபுக்களும், முதலாளித்துவ பண்ணையார்களும் வேளாண்மைத் துறையில் முதலாளித்துவ முறையில் முன்னேறுவதற்கும், தொழில்துறை கம்பெனிகளைத் துவக்குவதற்கும் தடையாக இருக்கின்றனர். ஆகையால் ஒருபுறம் தரகுப்பெரு முதலாளித்துவம் மற்றும் பெரும் வணிக முதலாளித்துவத்திற்கும் மறுபுறம் சிறு முதலாளிகள் மற்றும் புது வகைப்பட்ட நிலப்பிரபுக்கள், முதலாளித்துவப் பண்ணையார்களுக்கும் இடையிலான முரண்பாடு கூர்மை அடைகிறது.

வேளாண்மைத்துறையில் பசுமைப் புரட்சி (புதிய தொழில் நுட்பம் புகுத்துதல்) அமல்படுத்தப்பட்ட பிறகு, முதலாளித்துவ உற்பத்தி உறவுகள் வளர்ச்சியடைந்துள்ளன. பசுமைப் புரட்சியால் பெரும் நிலவுடமையாளர்களும் பணக்கார விவசாயிகளும் பயனடைந்தனர். பசுமைப் புரட்சி செயல்படுத்தப்பட்ட பிரதேசங்களில் நிலப்பிரபுகள் முதலாளித்துவ சாகுபடி முறைக்கு மாறிச் செல்கின்றனர்.

வேளாண்மைத்துறை உபரி உற்பத்தியில் ஏகபோக மூலதனம் (ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் தரகுப் பெருமுதலாளிகள்) ஒரு பகுதியை அதீதலாபம் என்ற வடிவத்தில் எடுத்துக்கொள்கிறது; வணிக மூலதனமும் ஒரு பகுதியை லாபம் என்ற வடிவத்தில் எடுத்துக் கொள்கிறது. இதன் விளைவாக ஒருபுறம் ஏகாதிபத்தியவாதிகள், தரகுப்பெருமுதலாளிகள் மற்றும் பெரும் வணிகர்கள் ஆகியோருக்கும் மறுபுறம் புதிய வகைப்பட்ட நிலப்பிரபுக்கள் பணக்கார விவசாயிகளுக்கும் இடையிலான முரண்பாடு கூர்மை அடைவதால் இருதரப்பினருக்கிடையில் மோதல்களும் பூசல்களும் ஏற்படுகின்றன.

மேலும், பசுமைப்புரட்சி (புதிய தொழில் நுட்பத்தைப் புகுத்தல்) நாடு முழுவதும் ஒரே சீரான முறையில் அமுல்படுத்தப்படாமல், ஏற்றத்தாழ்வான முறையில் அமுல்படுத்தப்பட்டதால் வேளாண்மைத் துறையில் முதலாளித்துவ உற்பத்தி உறவுகள் ஏற்றத்தாழ்வான முறையிலேயே வளர்ச்சி பெற்றிருக்கின்றன. இதன் விளைவாக தேசிய இனங்களும் ஏற்றத்தாழ்வான முறையில் வளர்ச்சி பெற்றிருக்கின்றன. பசுமை புரட்சி தீவிரமாகவும் விரிவாகவும் அமுப்படுத்தப் பட்ட பஞ்சாப், அரியானா போன்ற மாநிலங்களில் வேளாண்மைத்துறையில் முதலாளித்துவ உற்பத்தி உறவுகள் அதிகமாக வளர்ச்சி பெற்றிருக்கின்றன. உதாரணமாக பஞ்ச ாப்பில் அ ரை நி லப்பிரபுத்துவ உற்பத்திக்கு மாறாக நிலப்பிரபுத்துவ எச்சங்களே உள்ளன. இங்கே இருவகை முரண்பாடுகள் எழுந்துள்ளன. ஒன்று புதிய, பழைய நிலப்பிரபுக்கள் மற்றும் முதலாளித்துவ பண்ணையார்களுக்கும் விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் எளிய விவசாயிகளுக்கும் இடையிலான முரண்பாடு. மற்றொன்று ஏகாதிபத்தியம் தரகுப் பெரு முதலாளித்துவம் மற்றும் பெரும் வணிக முதலாளிகளுக் கும் பு திய நிலப்பிரபுக்கள் மற்றும் முதலாளித்துவ பண்ணையார்களுக்கும் இடையிலான முரண்பாடு ஆகிய இரண்டு முரண்பாடுகள் எழுந்துள்ளன. இங்கே வேளாண்மைத்துறை முதலாளித்துவ நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இது இந்தியாவின் பொது நெருக்கடியின் ஒரு பகுதியாக இருப்பினும் இது கூர்மை அடைவதால் வர்க்க அணிசேர்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. ஏகாதிபத்தியம், தரகுப் பெருமுதலாளித்துவம், வணிக முதலாளித்துவம் மற்றும் புதிய பழைய நிலப்பிரபுக்கள் ஒருபுறமும், அதற்கு எதிராக தொழிலாளர்கள், விவசாயிகள், நடுத்தரவர்க்கத்தினர் மற்றும் தேசிய முதலாளிகள் மறுபுறமும் எதிர் எதிரான அணிகளாக அமைகின்றனர். பஞ்சாப் வேளாண்மைத்துறையில் முதலாளித்துவ நெருக்கடியிலிருந்து மீண்டு முதலாளித்துவ முறையில் முன்னேறுவதற்கு இந்தியாவின் தரகுப் பெரு முதலாளித்துவ பெரும் நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் சர்வாதிகாரம் தூக்கியெறியப்படுவது உடனடித் தேவையாக இருக்கின்றது.

பஞ்சாப்பின் குறிப்பான நிலை

பஞ்சாப் தேசிய இனம் வேளாண்மைத் துறையில் பிறதேசிய இனங்களைவிட அதிகமாக முதலாளித்துவ உற்பத்தி உறவுகள் வளர்ச்சிப் பெற்றதன் விளைவாக அங்கே அரை நிலப்பிரபுத்துவத்துக்கு மாறாக நிலப்பிரபுத்துவ எச்சங்களே நீடிக்கின்றன. ஆகையால் அது ஒரு ஒடுக்கப்பட்ட தேசிய இனம் என்ற முறையில் இந்தியாவின் பிறதேசிய இனங்களுடன் சேர்ந்து இந்திய அரசைத் தூக்கி எறிந்துவிட்டு ஒரு புதிய ஜனநாயக அரசை அமைப்பதின் மூலம் தேசிய சுயநிர்ணயம் பெறுவதா அல்லது அரசியல் ரீதியில் பிரிந்து சென்று தனிநாடு அமைத்துக் கொள்வதின் மூலம் அது அரசியல் சுதந்திரத்தைப் பெறுவதா (விடுதலையைப் பெறுவதா) என்பது இந்தியாவின் ஒட்டு மொத்தமான சூழ்நிலையைப் பொறுத்தே இருக்கிறது.

தேசிய இனப்பிரச்சினை எழும் சூழல்

சமுதாய வர்க்கங்களிடையே நடைபெறும் அனைத்துப் போராட்டங்களும் பொருளாதார நெருக்கடிகளும் நேரடியாக தேசிய இனப் பிரச்சினையை எழுப்பிவிடுவதில்லை. நாட்டில் நிலவும் அரசு முறையைப் பொறுத்தும் பிற வரலாற்று சூழ்நிலைமைகளைப் பொறுத்தும் அவை சில திட்டவட்டமான சூழ்நிலைமைகளில் தேசிய இனப்பிரச்சினை என்ற வடிவத்தை எடுக்கினறன. அரைக்காலனிய அரை நிலப்பிரத்துவ இந்திய அரசு ஒரு ஒன்றிய அமைப்பு முறையிலான ஜனநாயக விரோத அரசாக இருப்பதினாலும், இவ்வரசின் அதிகார பகிர்வு முறை மாநில அரசுகளுக்கு எதிராக இருப்பதினாலும், அதிகார வர்க்க தரகு மூலதனம் அனைத்து அதிகாரங்களை மத்திய அரசில் குவித்துக் கொள்ள முயல்வதாலும், அரசு அதிகாரத்தில் உள்ள பிரிவினரை எதிர்த்து பிற முதலாளித்துவ பிரிவுகள் அதிகாரத்தில் பங்கு பெறுவதற்கான போராட்டத்தில் தங்கள் வர்க்க நலன்களுக்கு உகந்த முறையில் தேசிய இனப்பிரச்சினையை எழுப்புகின்றன. இந்திய அரசு பின்பற்றும் பெரும் தேசியவாதமும் தேசிய இன ஒடுக்கு முறையும் பல்வேறு தேசிய இன இயக்கங்களை தீவிரப்படுத்துகின்றன.

- ஏஎம்கே
(ஏஎம்கே தேர்வு நூல்கள், தொகுதி -2, பக்-64-145, சமரன்)