ஜெயலலிதா மர்ம மரணத்தில் பாஜகவின் பங்கு என்ன..?

அறம் இணைய இதழ்

ஜெயலலிதா மர்ம மரணத்தில் பாஜகவின் பங்கு என்ன..?

ஜெயலலிதாவின் சிகிச்சையிலும், மரணத்திலுமான சந்தேகங்கள் இன்னும்  தொடர்கின்றன. அதற்கான ஆறுமுகசாமி கமிஷன் அப்போலோவையும், சசிகலாவையும் குற்றம் சாட்டியது. ஆனால், கமிஷனின் விசாரணையில் வெளியான தகவல்களோ ஜெயலலிதாவின் மர்ம மரணத்தில் பாஜக அரசுக்கும் பங்கிருக்கலாம் என்ற சந்தேகத்தை வலுப்படுத்துகிறது;

உடல் நலக்குறைவால் ஜெயலலிதா செப்டம்பர் – 22,.2016 இரவு 10:30 மணிக்கு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் சிகிச்சையில்  பலனின்றி டிசம்பர் -5, 2016 இரவு 11:30 மணிக்கு மரணம் அடைந்தார்.

ஆறுமுகசாமி ஆணையம் தனது இறுதி அறிக்கையில், ”சசிகலாவும், அப்போலோ மருத்துவமனையும் இணைந்து திட்டமிட்டு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்காத வகையில், அவரது மரணத்திற்கு காரணமாயினர்” என்று கூறியது. அதே சமயம், அன்றைய சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் வழியாக ஜெயலலிதாவின் ஒட்டு மொத்த சிகிச்சை நடைமுறைகளையும் மத்திய பாஜக அரசு கட்டுப்படுத்தி செய்த சூழ்ச்சிகளை கண்டும் காணாமலே கடக்கிறது, ஆணையம்!

2014 இறுதியிலிருந்து உடல்நிலை  பாதிப்பிற்காக ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்தார். அவரது உடல்நிலை மோசமடைந்தால் அவர் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே. அப்படியான நேரத்தில் அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்தை தன் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான முயற்சியாக  2016 ஜனவரி மாதத்தில் இந்தியாவிலுள்ள அனைத்து அப்போலோ மருத்துவமனைகளிலும் வருமான வரி துறை  சோதனை நடத்தப்பட்டது. அப்போதே அப்போலோ மருத்துவமனையை மத்திய மோடி அரசு  தங்களுடைய கட்டுப்பாட்டு வளையத்தில் கொண்டு வந்துவிட்டனர்.

ஜனவரி-5 , 2016 ஆம் ஆண்டு சென்னை உள்ளிட்ட இந்தியாவில் உள்ள அனைத்து அப்போலோ மருத்துவமனைகளிலும் ரெய்டு!

ஜெயலலிதா அட்மிட்டான காலகட்டத்தில் அவருக்கு தரப்பட்ட சிகிச்சை குறித்து அப்போலோ நிர்வாகம் உண்மைக்கு மாறாக தொடர்ந்து முரண்பட்ட தகவல்களை வெளிப்படுத்தி வந்தது.

செப்டம்பர்- 22,2016 அன்று இரவு சுமார் 9.30  மணி அளவில் ஜெயலலிதாவிற்கு உடல்நிலை மோசமாகி அவர் அப்போலோ மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில்  கொண்டு வரப்பட்டு இரவு 10:30 மணி அளவில் அனுமதிக்கப்பட்டார் என்பது அனைவரும் அறிந்த உண்மை!

ஆனால், அப்போலோ மருத்துவமனை ஜெயலலிதா அவர்களுக்கு சிகிச்சை அளித்த இலண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலேவுக்கு மருத்துவ கட்டணம் கொடுத்த ரசீதில் (Bill No CMH-ICR 52738/A date 14.12.2016) ஜெயலலிதா  அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேதி 23.09.2016 என்றும் நேரம் அதிகாலை 1.10 AM என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ரசீதின் நகல் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் 237- ஆம் பக்கத்தில் உள்ளது.

ஜெயலலிதா அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட பின்பு அப்போலோ மருத்துவமனை முதல்வரை வெளி உலகத்திலிருந்து தனிமைப்படுத்தியது. அவருக்கு அளிக்கப்படும்  சிகிச்சையில் வெளிப்படைத் தன்மை இல்லை.

அடுத்ததாக அவர் வெளிநாடு சென்று மருத்துவ சிகிச்சை பெறுவதை தடுத்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி தமிழக அரசு  அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட ஒரு பொதுநல வழக்கும்  அடுத்ததாக ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று மேல் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு பொதுநல  வழக்கும் சுய விளம்பரத்திற்காக  போடப்பட்ட வழக்குகள் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷ்ன் கவுல் அவர்களால் தள்ளுபடி செய்யப்பட்டன. இதன் மூலம் அப்போலோ நிர்வாகத்தின் செயல்பாடுகளுக்கு நீதிமன்ற பாதுகாப்பும் அமைந்தது. அதே போல  ஆளுநர்  வித்யாசாகர் ராவ் தன் அதிகாரத்தின் வழி நிர்வாக பாதுகாப்பையும் உறுதிப்படுத்தினர்.

தமிழக ஆளுநர் அக்டோபர்-01, 2016 அன்று ஜெயலலிதாவை அப்போலோ மருத்துவமனையில் சந்திக்க சென்று அவரை சந்திக்க இயலாமலேயே திரும்பினார் என்ற செய்தியின் மூலம், ஆளுநராலேயே பார்க்க முடியாத ஜெயலலிதாவை அரசியல் தலைவர்கள், முக்கியஸ்தர்கள் யாரும் நேரில் சென்று  பார்க்க முடியாது என மத்திய அரசு உணர்த்தியது.

பிரதம மந்திரி ஆன பின்பு மரபுகளை ஒதுக்கி வைத்து விட்டு ஜெயலலிதா அவர்கள் வீட்டிற்கு வந்து விருந்துண்டவரான மோடி அவர்கள் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் 75 நாட்களாக உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் ஒருமுறை கூட ஜெயலலிதாவை நேரில் வந்து சந்திக்கவில்லை.

ஆனால், இதே மோடி அவர்கள் கலைஞர் கருணாநிதி  உடல் நலம் இல்லாமல் இருந்த போது கோபாலபுரம்  வீட்டிற்கு  நேரில் சென்று கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார் என்பது கவனத்திற்குரியது.

செப்டம்பர் -24, 2016 அன்று மாலை 5 மணிக்கு சுகாதாரத் துறைச் செயலாளர்  ஜே ராதாகிருஷ்ணன் அப்போலோ மருத்துவமனையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் முதல்வரை வெளிநாட்டிற்கு  அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க அவசியம் இல்லை எனத் தெரிவித்தார்.

தமிழக அரசு ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கும் அப்போலோ மருத்துவமனை மருத்துவர்களுக்கு உதவும் வகையில்  ஆறு அரசு மருத்துவர்களை  30.09.2016 நாளிட்ட அரசாணையின்படி நியமித்தது. ஆறுமுகசாமி ஆணையத்தில்  டாக்டர் பிரதாப் ரெட்டி, அரசு மருத்துவர்கள் குழு ஜெயலலிதாவை பரிசோதித்து ஆலோசனை கூற அனைத்து உதவிகளையும் அப்போலோ மருத்துவமனை செய்தது எனக் கூறினார். ஆனால், அரசு  மருத்துவர்கள் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஜெயலலிதாவை பார்க்கவோ, பரிசோதிக்கவோ அப்பல்லோ மருத்துவமனை தங்களை கடைசிவரை அனுமதிக்கவில்லை என்று சாட்சியம் அளித்தனர்.

ஆனால், அதே சமயம் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து மருத்துவ குழுவை வரவழைத்தார். மத்திய அரசால் அனுப்பி வைக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவக் குழுவினர் ஜெயலலிதா அவர்களை பார்த்து பரிசோதித்து, ”ஜெயலலிதாவிற்கு அப்போலோ மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சை சரியான முறையில் அளிக்கப்படுகின்றது” என்று சான்று அளித்தனர்.

டாக்டர் பிரதாப் ரெட்டி ஆணையத்திடம் ஜெயலலிதா மருத்துவ சிகிச்சை  அனைத்தும் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பார்வைக்கு வைக்கப்பட்டு அவர் அங்கீகரித்த பின்னர் தான் பத்திரிக்கைகளுக்கு வெளியிடப்பட்டன என்று கூறினார்.  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் ஆறுமுகசாமி ஆணையத்திடம், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அப்போலோவில் அளிக்கப்பட்ட சிகிச்சையில் அமைச்சரான எனக்கோ,  உடன் இருந்த சசிகலாவிற்கோ எந்த பங்கும் இல்லை என்று கூறியுள்ளார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஒரு எம்.பி.பி.எஸ் மருத்துவர். ஆனால், அதிகாரி ராதாகிருஷ்ணனோ கால்நடை மருத்துவம் படித்தவர். சுகாதாரத்துறை அமைச்சரும், மருத்துவருமான  விஜயபாஸ்கரால் தனக்கு கீழ் வேலை செய்யும் அதிகாரி  ராதாகிருஷ்ணன் நடவடிக்கைகளில் தலையிடவோ, கட்டுப்படுத்தவோ முடியாத சூழல் ஆச்சரியமளிக்கிறது.

இதே போல தலைமைச் செயலாளர்  ராம் மனோகர் ராவும் சுகாதாரத் துறை செயலாளர் அமைச்சர்கள் யாருக்குமே ஜெயலலிதாவிற்கு வழங்கப்படும் சிகிச்சை பற்றி தகவல்கள் தரவில்லை எனக் கூறியுள்ளார். ஆக, தலைமை செயலாளரே ஒன்றும் செய்ய முடியவில்லை.

இவையாவும் சுகாதாரத் துறை செயலாளரான ஒரு ஐஏஎஸ் அதிகாரி வழியாக மத்திய அரசு ஜெயலலிதாவின் மருத்துவ சிகிச்சை விவகாரத்தை யாரும் சுலபத்தில் அறியாத வகையில் மறைமுகமாக கையாண்டது என்பது ஒருபுறமிருக்க , மறுபுறம் அரசியல் ரீதியாக பாஜகவின் வெங்கய்யா நாயுடு நேரடியாக தொடர்ந்து அப்போலோ மருத்துவமனைக்கு வந்து போய்க் கொண்டிருந்தார் என்பதும் கவனத்திற்கு உரியது.

ஆறுமுகசாமி கமிஷன்  விசாரணையில் இலண்டன் மருத்துவர் டாக்டர் ரிச்சர்ட் பீலே சென்னை வந்து ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த இரண்டு முறையும்  ஜெயலலிதாவை இலண்டனுக்கு அழைத்துச் சென்று மேல் சிகிச்சை அளிப்பதற்கு தயாராக இருந்தார். ஆனால் அப்போலோ மருத்துவமனை தடுத்து விட்டனர்  என்பது தெரிய வருகிறது.

சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆறுமுகசாமி கமிஷனில் விசாரிக்கப்பட்டபோது, ”முதல்வரை வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று மருத்துவ சிகிச்சை அளிப்பது என்பது இந்திய மருத்துவர்களை அவமானப்படுத்தும் செயலாகும் அப்படிப்பட்ட ஒரு செயலை தன்னால் ஊக்குவிக்க முடியாது” என்று கூறினார். முதலமைச்சரை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று மருத்துவ சிகிச்சை அளிப்பது தொடர்பான முடிவு கூட தமிழக அமைச்சரவையிடம் இருந்து அதிகாரி வசம் முற்றிலும் சென்ற விவகாரம் இதன் மூலம் அம்பலமாகியுள்ளது.

06.10.2016 அன்று அப்போலோ மருத்துவமனை தனது மருத்துவ அறிக்கையில் முதலமைச்சர் நீண்ட நாட்களுக்கு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டி இருக்கும் என்று அறிவித்ததைத் தொடர்ந்து அரசு நிர்வாகம் சீராக இயங்க, ஜெயலலிதாவுக்கு மாற்றாக தற்காலிக முதல்வர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று அடுத்த நாளே ஆளுநர்  ஓ பன்னீர்செல்வத்தையும் எடப்பாடி பழனிசாமியையும் தமிழக தலைமைச் செயலாளர் உடன் ஆளுநர் மாளிகைக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். எடப்பாடி பழனிசாமி  தற்காலிக முதல்வர் போட்டியிலிருந்து விலகுமாறு அறிவுறுத்தப்பட்டார். எடப்பாடி பழனிசாமி போட்டியிலிருந்து விலகினார்.

11.10.2016 அன்று ஆளுநர் அவர்கள் முதல்வர் இலாக்காக்களை முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஆலோசனையின் பேரில் இந்திய அரசியல் சாசன சட்டம் பிரிவு 166(3)படி ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கு ஒதுக்குவதாக ஆணை பிறப்பித்தார். இது ஒரு அரசியல் சாசன மோசடி ஆகும்.

இதைப் பற்றி ஆறுமுகசாமி ஆணையம் தன் அறிக்கையில் 27.09.2016 அன்று துறை மாற்றம் குறித்து தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவிற்கு அறிவுறுத்தியது மறைந்த முதல்வர் எடுத்த மற்றொரு முடிவாகும். அட்வகேட் ஜெனரலின் பரிந்துரையை ஏற்று 11.10.2016 அன்று ஆளுநர் கோப்பில் ஆணைகளை பிறப்பித்தார் என மேலோட்டமாக குறிப்பிடுகிறது.

சசிகலா அவர்கள் தமிழகத்தின் நலனை கருத்தில் கொண்டு ஜெயலலிதாவின் துறைகளை கவனிக்க ஓ பன்னீர் செல்வத்தை நியமிக்க கழக மூத்த நிர்வாகிகளும் அமைச்சர்களும் சசிகலாவிடம் கூறியதாகவும் அதை ஜெயலலிதாவிடம் தெரியப்படுத்தியதாகவும்.  ஜெயலலிதா அவர்களும் சரி என சொன்னதாகவும், அதன்படி ஆளுநர் அதை ஏற்றுக் கொண்டு 11.10.2016 அன்று உரிய ஆணை பிறப்பித்தார் எனவும் கூறினார்.

அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா  அடுத்த நாள் 23.09.2016 அன்றே குணம் அடைகிறார். ஆனால் மருத்துவர்கள் அவரை மேலும் ஒரு நான்கு ஐந்து நாட்கள் மருத்துவமனையில் இருந்து விட்டு செல்லுமாறு அறிவுறுத்துகிறார்கள். அதன்படி அவர் மருத்துவமனையில் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்கிறார். 27ஆம் தேதி அன்று அவர்  உடல்நலத்துடன் இருக்கிறார். டெல்லியில் நடக்கவிருக்கும் காவிரி நதிநீர் கூட்டத்தில், தமிழக அரசு சார்பாக டெல்லியில் படிக்க வேண்டிய அறிக்கையை ஜெயலலிதா கூற அவருடைய செயலாளர் குறிப்பு எடுத்துக் கொள்கிறார். அதில் ஜெயலலிதா  தன் கையாலே சில திருத்தங்களை செய்கிறார். இந்த அறிக்கை ஜெயலலிதாவின் அறையில் தயார் செய்யப்படுகிறது அதில் தலைமைச் செயலாளர் அட்வகேட் ஜெனரல் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர். இந்த கூட்டம் மாலை 4:30 மணிக்கு நடக்கின்றது.

இந்த கூட்டத்தில் முதலமைச்சர் இலாகக்களை பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்குவதற்கு எந்த ஒரு ஆலோசனையும்  நடக்கவில்லை. எனவே, 27.09.2016 அன்று ஜெயலலிதா அவர்கள் தனது துறைகளை பன்னீர்செல்வம் அவர்களுக்கு ஒதுக்குவதற்கு எந்த முடிவையும் எடுக்கவில்லை. அதற்கு வேண்டிய தேவையும் ஏற்படவில்லை. ஆனால், அன்றைய இரவு ஜெயலலிதாவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு சுயநினைவை இழந்ததாகவும், வென்டிலேட்டர் இணைக்கப்பட்ட பின்பு ஒரு மாதத்திற்கு மேல் கை கால்களை அசைக்கவோ, பேசவோ முடியாத நிலைக்கு சென்றதாகவும் சொல்லப்படுகிறது..

அப்போலோ மருத்துவமனையில் முதல்வரின் இதயத்தில் 14 மி.மீ அளவில் வெஜிடேஷன் இருப்பதை  28.09.2016 அன்று கண்டறிந்தனர். இதை குணப்படுத்த டாக்டர் ரிச்சர்ட் பீலே, டாக்டர் ரஸ்ஸல் மற்றும் சில மருத்துவர்கள் முன்கூட்டியே வால்வு அறுவை  சிகிச்சைக்கு பரிந்துரைத்தனர். இதை அப்போலோவில் உள்ள டாக்டர் ராம.கோபாலனும் பரிந்துரைத்தார்.

அவர்கள் கூறியதாவது; பொதுவாக இப்படிப்பட்ட நோயாளிகளுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகள்  இரண்டு முதல் நான்கு வாரங்களுக்கு வழங்கப்பட வேண்டும். அதில் குணமாகாவிட்டால் அறுவை சிகிச்சை மட்டுமே மாற்று வழி. இல்லையெனில் அந்த வெஜிடேஷன் வெடித்து அதில் மாரடைப்பு  வாய்ப்பாகும் எனவே, போன்ற நிலையில்  முதல்படியாக ஆஞ்சியோ அறுவை சிகிச்சையும், அதைத் தொடர்ந்து இதய வால்வு அறுவை சிகிச்சையும் செய்ய வேண்டும். மேலும், இப்படிப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு மருத்துவ குழுவில் கட்டாயம் கார்டியோ தொராசிக் அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் இடம்பெற்று இருக்க வேண்டும்’’ என்றனர்.

இவை எதையுமே அப்போலோ மருத்துவமனை ஏற்று செயல்படுத்தவில்லை.

எய்ம்ஸ் மருத்துவர்கள் குழுவில் ஒரு தொராசிக் அறுவை சிகிச்சை நிபுணர் கூட இடம்பெறவில்லை. மேலும் அப்போலோ மருத்துவமனை மறைந்த முதல்வரின் வாழ்நாளில் தொராசிக் அறுவை சிகிச்சை நிபுணர் எவரும் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை தர அனுமதிக்கவில்லை என ஆறுமுகசாமி ஆணையம் தனது அறிக்கையில் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளது.

ஆனால் இதையும் மீறி சசிகலா 25.11.2016 அன்று அமெரிக்காவில் இருந்து டாக்டர் ஷமீன் சர்மா என்ற கார்டியோ தெராசிக் அறுவை சிகிச்சை நிபுணரை  ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க வரவழைத்தார். ஷமீன் சர்மா  ஜெயலலிதாவை பரிசோதித்த பின்னர் அன்றே ஆஞ்சியோ அறுவை சிகிச்சை செய்வதற்கு தான் தயார் என்றார். ஆனால் அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் சாக்கு போக்கு சொல்லி இதை தடுத்து விட்டனர்.

இதன் விளைவே கடைசியில் ஜெயலலிதா அவர்கள் இதய செயலிழப்பு ஏற்பட்டு டிசம்பர்-  05,.2016  மரணம் அடைந்தார்.

சாட்சியங்களின்ன் அடிப்படையில் ஆறுமுகசாமி கமிஷன் ஜெயலலிதா  இறந்தது டிசம்பர்4,2016 மாலை 3.50 என்ற முடிவிற்கு வந்தது.

ஜெயலலிதா இறந்த அன்றே ஓ பன்னீர்செல்வம் அவர்கள் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், அடுத்த இரண்டு மாதங்களுக்குள் சசிகலா சாமர்த்தியமாக காய் நகர்த்தி பன்னீர்செல்வத்தை ராஜினாமா செய்ய வைத்து விட்டு தானே முதலமைச்சராக பதவியே ஏற்க முயன்றார். அதற்குள் சொத்து குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் அவருக்கு தண்டனையை உறுதி செய்யும் சூழல் உருவாக்கப்பட்டு அவர் சிறை சென்றார். அதே சமயம் அவர் பாஜகவின் விருப்பத்திற்கு எதிராக எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்கிவிட்டு சிறை சென்றார்.

முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பன்னீர்செல்வம் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியை நேரில் சந்தித்தார். குருமூர்த்தியே இது பற்றி கூறியுள்ளதாவது;  நீங்கள்ளாம் ஆம்பிளையா? போய் அந்த அம்மா சமாதியில் உட்காருங்கள் சார். உங்களுக்கு ஏதாவது வழி பிறக்கும் என்றேன். அவரும் அதே மாதிரி போய் உட்கார்ந்தார். அதன் பிறகு தமிழக  அரசியலிலே தலைகீழாக மாறிப்போனது.”

பன்னீர்செல்வம் பிப்ரவரி 7ஆம் தேதி இரவு  9:30 மணிக்கு ஜெயலலிதா சமாதிக்கு சென்று 45 நிமிடங்கள் மௌன விரதம் மேற்கொண்டு  இது சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் என்றார்.

இதற்கும் முன்பாக சசிகலா சார்பில் டிடிவி தினகரனும் ஜனவரி 8, 2017 அன்று குருமூர்த்தியை சந்தித்தார். அந்த சந்திப்பை பற்றி குருமூர்த்தி அவர்கள் தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிடுகிறார். நான் தினகரனிடம் நீங்களோ உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ நேரடியாக அரசியலுக்கு வராதீர்கள். பதவி ஏற்காதீர்கள். நீங்கள் அரசியலில் மறைமுகமாக லாபம் அடைவதே நல்லது என்று கூறியதாகக் கூறுகிறார். மேலும் குருமூர்த்தி தினகரனிடம் என்னுடைய வார்த்தையை மீறி, நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் நேரடியாக அரசியலில் ஈடுபட்டு பதவியை அடைய வேண்டும் என்று ஆசைப்பட்டால் உங்க குடும்பத்திற்கு பெரிய ஆபத்து உண்டாகும் என்று எச்சரித்தாராம்…!

ஆனால், சசிகலா குருமூர்த்தியின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டார். அவர் எச்சரித்தது போலவே சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் சசிகலாவுக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

இந்த சம்பவங்களை அவதானிக்கையில் பாஜகவானது அதிகாரி ராதாகிருஷ்ணன் துணையோடு, அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்தை கட்டுப்படுத்தி  ஜெயலலிதாவுக்கு உரிய சிகிச்சை கிடைக்காமல் தடுத்ததுடன், ஜெயலலிதா மரணத்திற்கு பிறகான அரசியலையும் கட்டமைத்தனர் என உணரலாம்.

கட்டுரையாளர்; பா.பாலமுருகன்  IRS ( ஓய்வு)

அறம் இணைய இதழ்

https://aramonline.in/24042/jayalalitha-death-bjp-involvement/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு