ஊழல் செய்து சொத்து சேர்ப்பதில் உச்சம் தொட்ட எ.வ.வேலு!

அறம் இணைய இதழ்

ஊழல் செய்து சொத்து சேர்ப்பதில் உச்சம் தொட்ட எ.வ.வேலு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கும், எ.வ.வேலுவிற்கும் ஒரு ஒற்றுமை உண்டு!

இருவருமே பேருந்து நடத்துனர்களாக இருந்து பெரும் புள்ளி ஆனவர்கள்!

ஆனால், எ.வ.வேலுவின் பொருளாதார சாம்ராஜ்ஜியத்தின் முன்பு ரஜினிகாந்தின் 50 ஆண்டுகால உழைப்பின் மூலம் சேர்ந்த பொருளாதாரம் ஜுஜுபி தான்!

உண்மையில் தன் சாம்ராஜ்ஜியத்தின் சொத்து மதிப்பு குறித்த துல்லியமான தகவல் எ.வ.வேலுவுக்கே முழுமையாக தெரிய முடியாத அளவுக்கு அது பரந்து விரிந்தது.

அருணை பொறியியல் கல்லூரி, கம்பன் பொறியியல் கல்லூரி, அருணை மருத்துவ கல்லூரி, மற்றும் ஏகப்பட்ட நர்சிங், பார்மசி கல்லூரிகள்,  புகழ் பெற்ற அருணை மருத்துவமனை.., ஆழ்வார்பேட்டை பங்களா, தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ரியல் எஸ்டேட் நிறுவன சொத்துக்கள், குறிப்பாக தென் மாத்தூர் பகுதியில் பல்லாயிரம் ஏக்கர் நிலங்கள், பைனன்ஸ் நிறுவனம், ஸ்பின்னிங் மில், கிரானைட் நிறுவனம், கல் குவாரிகள்..போன்றவை அதிகார பூர்வமானவை. மற்றும் பல பினாமி நிறுவனங்கள் உள் நாட்டிலும், வெளி நாடுகளிலும் உள்ளன..என அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன!

இப்படிப்பட்ட ஒரு சாம்ராஜ்ஜிய சக்கரவர்த்தி மீது வெறும் 3.23 கோடி ஊழல் புகார் பதிவு செய்வது என்பதே அவமானகரமானதாகும்!

முன்னதாக, 2023 நவம்பரில் மத்திய அரசின் வருமான வரித்துறை நடத்திய அதிரடி ரெய்டில் ரூபாய் 400 கோடிகள் கணக்கில் காட்டப்படாதவையாக உள்ளதே.. என குற்றம் சாட்டப்பட்ட போது, ’’பூ.. இவ்வளவு தானே என்ன செட்டில்மெண்ட் பண்ண வேண்டும் சொல்லுங்க’’ என சிம்பிளாக சமாளித்துவிட்டார்.

தற்போதைய குற்றச்சாட்டை  சுருக்கமாகச் சொல்லிவிடுகிறேன்;

கரூர் மாவட்டத்தில்  ஈசா நத்தம் சாலை உள்ளிட்ட பல இடங்களில் சாலை போடாமலே பணம் பெற்றுக் கொண்ட காண்டிராக்டர் சங்கரானந்த், செந்தில் பாலாஜியின் நண்பராவார். மொத்தப் பணம் ரூ 4.7 கோடி. இதில் நெடுஞ்சாலைத் துறை செட்டில்மெண்ட் செய்த பணம் 3.23 கோடி. நபார்டு வங்கி மூலம் பெற்ற பணம் 1.5 கோடி.

இதில் தற்போதைய தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை 3.23 கோடியை மட்டுமே கவனத்தில் கொண்டு, இன்னொன்றை தவிர்த்ததன் காரணம் தெரியவில்லை.

அடுத்ததாக இந்த ஊழலை முதன்முதலில் வெளிக் கொண்டு வந்தது அன்றைய கரூர் அதிமுக பிரமுகர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். இவர் சரியாக 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி அன்றைய தலைமை செயலாளர் இறையன்புவை கோட்டையில் சந்தித்து கரூர் மாவட்டத்தில் சாலை போடாமலே 4.7 கோடி பணம் தரப்பட்டுள்ளது. இந்தப் பணம் தரப்பட்டு சுமார் ஒரு மாதகாலம் ஆகிவிட்டது என புகார் தந்து, அதை ஊடகங்களுக்கும் தெரிவித்தார்.

துரதிர்ஷ்டவசமாக இதை அன்றைய ஊடகங்கள் பெரிதுபடுத்தவில்லை. ஆனால்,தலைமை செயலாளர் இறையன்பு நேர்மையானவர் என்ற வகையில் நடவடிக்கையில் இருந்து தப்ப முடியாது என்று அன்றைய இரவே போர்க்கால வேகத்தில் அத்தனை சாலைகளும் அவசர, அவசரமாக போடப்பட்டது என்பது தான் நம்ப முடியாத உண்மை.

அப்போது நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எவ.வேலு அவர்கள், ”ஐயோ பாவம், அந்த காண்டிராக்டர். அவர் வங்கிக் கணக்கில்  செலுத்தப்பட்ட பணம் குறித்து அவருக்கு எதுவும் தெரியாது. ஆனால், தற்போது சாலை போடப்பட்டுவிட்டது. ஆகவே, அவரை குற்றம் சொல்லக் கூடாது என பேட்டி தந்து விவகாரத்தை முடித்தார்.

அதெப்படி இதை விடுவது? எந்த அடிப்படையில் சாலை போடாமல் முழுப் பணமும் தரப்பட்டது. சாலை போட்டு விட்டாலுமே கூட, நெடுஞ்சாலைத் துறையிடம் இருந்து உடனே பணம் பெற முடியாமல் பல காண்டிராக்டர்கள் தவித்துக் கிடக்க, இவருக்கு தந்தது எப்படி? என அறப்போர் இயக்கம் தகவல் அறியும் உரிமைசட்டம் உள்ளிட்டவற்றை கையில் எடுத்து களம் கண்டது.

ஆகவே, இதையெல்லாம் சமாளிக்க கோட்டப் பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், உதவி இள நிலை பொறியாளர்கள்..என ஒன்பது பேர் தற்காலிகமாக ஓராண்டு பணி நீக்கம் செய்யப்பட்டதோடு, அவர்களின் சம்பள உயர்வையும் நிறுத்திவிட்டார்கள்.

இப்படி சாதாரண நிலையில் உள்ளவர்களை பலி கொடுத்து விட்டு இதற்கு உண்மையான காரணகர்த்தாவான தலைமை பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர் மற்றும் இவர்களுக்கு கட்டளையிட்ட அமைச்சர் மூவரும் தப்பித்துக் கொண்டனர்.

ஆனால், அறப்போர் இயக்கம் அசரவில்லை.  லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் தந்தது. முதல்வர் ஸ்டாலின் விசாரணைக்கு எ.வ.வேலு மீதான இசைவு தெரிவிக்கவில்லை. அதனால் விவகாரம் கிடப்பில் போடப்பட்டது.

எ.வ.வேலுவை பொறுத்த வரை திமுக தலைமை குடும்பத்தின் கஜானாவாக அவர் இருந்தார். இப்படி செந்தில் பாலாஜி, சேகர் பாபு எனப் பலர் இருந்தாலும், இவரை மட்டுமே திமுக தலைமை குடும்பத்தினர் ’படி அளக்கும் பரமசிவம்’ என்று அழைப்பார்கள். திருவண்ணாமலைக்காரர் என்பதால் சிவனோடு சேர்த்து சொல்கிறார்களோ.. என்னவோ!

எ.வ.வேலுவிற்கு ஒரு தனிச் சிறப்பு உள்ளதாக கலைஞர் சொல்லியதாக திமுக வட்டாரத்தில் பேசப்படுவது,  நமது எண்ணம் அறிந்து வலிந்து தருபவர் வேலு என்பாராம். உண்மையில் இதுவே அவரது வீழ்த்த முடியாத செல்வாக்கிற்கு காரணமாகும்.

எம்.ஆர். விஜயபாஸ்கர் இந்த ஊழலை அதன் பிறகு பேசவேயில்லை. எடப்பாடி பழனிச்சாமி அதற்கு தடை போட்டதோடு, சட்ட சபையிலும் இதை தங்கள் கட்சிக்காரர்கள் யாரும் பேசக் கூடாது என கட்டளை போட்டுவிட்டார்.

பத்து ஆண்டுகளாக நெடுஞ்சாலைத்  துறையில் எடப்பாடி பழனிசாமி செய்த ஊழல் விவரங்களை  தான் பொறுப்பேற்றதும் அதிவேகமாக  அறிந்து கொண்ட எ.வ.வேலு, அப்போதே அதிமுக தலைமையிடம் டீலிங் செய்து முடித்துவிட்டார்.

சமீபத்திய தேர்தலில்  கடும் சவாலாக இருந்த தவெக வேட்பாளர் விவசாயப் போராளி அருள் ஆறுமுகத்திடம் தோற்று இருக்க வேண்டிய எ.வ.வேலு தனது தொகுதியில் உள்ள பூத்துகளில் வேலை பார்க்கும் அரசு ஊழியர்கள் தொடங்கி தவெக ஏஜெண்டுகள், உள்ளுர் தவெக நிர்வாகிகள்..என பலரையும் தூக்கி, கொடுக்க வேண்டியதைக் கொடுத்து அருள் ஆறுமுகத்தின் நியாயமான வெற்றியை தடுத்து, தனதாக்கிக் கொண்டார்.

அதே போலத் தான் லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை பாயும் என்பதை அந்த துறையின் தலைமை பொறுப்பில் உள்ளவர் மூலமே தெரிந்து கொண்டு ரெய்டுக்கு வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே சிங்கப்பூர் செல்ல விமான டிக்கெட் எடுத்துவிட்டார்.

கடந்த ஜூன் 25-ம் தேதி சென்னை ஆழ்வார்ப் பேட்டையில் உள்ள எ.வ.வேலுவின் பங்களா, திருவண்ணாமலையில் உள்ள அவரது கல்வி நிறுவனங்கள் மற்றும் வீடு, கரூர், திண்டுக்கல், கோவை என 20 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தி ஏமாந்தது தான் கண்ட பலன்.

அப்போது, முக்கிய ஆவணங்கள், மின்னணு ஆதாரங்கள் மற்றும் வழக்கிற்கு தொடர்புள்ள நெடுஞ்சாலைத்துறை ஆவணங்கள், மற்றும் ரூ.40 லட்சம் கைப்பற்றப்பட்ட தாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதை எவ.வேலு முற்றிலுமாக மறுத்தார்.

”40 லட்சம் பறிமுதல் என்பது வடிகட்டிய பொய்.சோதனையால் நாங்கள் பயந்துவிடுவோம் என தவெக அரசு நினைக்கிறது. நாங்கள் மிசாவையே பார்த்த இயக்கம். நான் நிரபராதி என்பதைக் கட்டாயம் நிரூபிப்பேன். நான் எந்தத் தவறும் செய்யாதவன். என்னுடைய வீடு உள்ளிட்ட எங்கேயும் ஒரு பைசா பணம் கூட பறிமுதல் செய்யப்படவில்லை…’’ என ஒரே போடாக போட்டுவிட்டு அடுத்த நாளே சிங்கப்பூர் பறந்தார்.

”திருவண்ணாமலையை இன்னொரு சிங்கப்பூராக மாற்றிக் காட்டுகிறேன். அயல் நாட்டு மருத்துவமனைகளுக்கு இணையாக எங்கள் அருணை மருத்துவமனையில் சிகிச்சை தருகிறோம்” என்ற எ.வ.வேலு தற்போது சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சை பெறுவதாக சொல்வதைக் கேட்டு திருவண்ணாமலையே சிரிக்கிறது!

லஞ்ச ஒழிப்புத் துறையின் ரெய்டு ஒரு வாரத்திற்கு முன்பே தெரிவிக்கப்பட்டுவிட்டதால், அனைத்து ஆவணங்கள், கரன்சிகள், சொத்து விபரங்கள், நகைகள் அனைத்தையும் தனி கப்பலில் சிங்கப்பூருக்கு அனுப்பிவிட்டு தான் அங்கு சென்றார் என்ற பேச்சும் நெடுஞ்சாலைத் துறை வட்டாரங்களில் நிலவுகிறது.

எ.வ.வேலுவுக்கு தற்போது திடீர் நெஞ்சு வலியாம்!

எ.வ.வேலு நெடுஞ்சாலைத் துறையில் அடித்த கொள்ளைகளை எழுதினால் கேட்போருக்கு நெஞ்சு வலி வந்துவிடும். தைரியசாலிகள் தொடர்ந்து வாசிக்கலாம். பல அத்தியாயங்களாக பட்டியல் போட வேண்டிய ஊழல் முறைகேடுகளை ரத்தின சுருக்கமாகச் சொல்கிறேன்;

நெடுஞ்சாலைத் துறையில் ஒவ்வொரு ஆண்டும் ரூபாய் 20, 000 கோடிகள் சாலை போடுவதற்கு செலவழிக்கப்படுகிறது. இதில் 35 சதவிகிதம்  கமிஷனாக கைமாறுகிறது. அமைச்சர் 20 சதவிகிதத்தை எடுத்துக் கொண்டு, 15 சதவிகிதத்தை பல்வேறு மட்டங்களில் உள்ள அதிகாரிகள், பொறியாளர்கள் பங்கு பிரித்து எடுத்துக் கொள்ள தந்துவிடுகிறார். அந்த வகையில் ஆண்டுக்கு ரூபாய் 4,000 கோடிகள் என ஐந்தாண்டுகளில் எ.வ.வேலு நெடுஞ்சாலைத் துறையில் மாத்திரம் அடித்த கொள்ளை  ரூபாய் 20,000 கோடிகள்!

உண்மையில் தேவையில்லாத இடங்களில் சாலை, சாலை விரிவாக்கம் அல்லது சாலை மீதே சாலை என கொள்ளை அடிப்பதற்காகவே ரூபாய் 20,000 கோடிகள் நெடுஞ்சாலைத் துறைக்கு ஒதுக்குகிறார்கள். உண்மையில் நியாயமான வகையில் சாலை போடவும், பராமரிக்கவுமாக அதிகபட்சம் ரூபாய் 2,500 கோடிகள் போதுமானது என நெடுஞ்சாலைத் துறையில் உள்ள  சில நேர்மையான மூத்த பொறியாளர்கள் சத்தியம் செய்து சொல்கிறார்கள்.

இன்றைக்கு நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக வந்துள்ள ஆதவ் அர்ஜுனா  உண்மையிலேயே நேர்மையாக செயல்பட விரும்பினால், ஊழல் செய்வதற்காகவே விரையமாக்கப்படும் இந்தப் பணத்தை சேமித்து அரசு கஜானாவிற்கு பலம் சேர்க்க வேண்டும். செய்வாரா?

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

https://aramonline.in/25058/e-v-velu-thiruvannamalai/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு