மேகதாது அணை திட்டத்தை முறியடிப்போம்
கார்ப்பரேட் நலன்களுக்காகக் காவிரி மீதான உரிமையை முற்றாகப் பறித்து தமிழகத்தைப் பாலைவனமாக்கும் மேகதாது அணை திட்டத்தை முறியடிப்போம்
காவிரியுடன் அர்க்காவதி ஆறு சேரும் இடமாகிய மேகதாதுவில் (மேகேதாட்டு) அணை கட்டுவதற்கான நடவடிக்கையில் கருநாடக பாஜக அரசு இறங்கிவிட்டது. கருநாடக அரசின் இந்த அடாவடித்தனத்திற்கு மத்திய மோடி அமித்ஷா ஆட்சி முழு ஒத்துழைப்பு தந்து வருகிறது. மேகதாது அணை கட்டப்பட்டால் வெள்ளக் காலத்தில் வழிந்து வரும் காவிரி நீரும் இனி தடுத்து நிறுத்தப்பட்டு தமிழகம் பாலைவனமாகும். பெங்களூருவின் குடிநீர்த் தேவை மற்றும் மின்சார உற்பத்திக்காக இந்த அணை கட்டப்படுவதாகக் கருநாடக அரசு கூறுகிறது. பெங்களூர் குடிநீர் விநியோகம் 'சூயஸ்' என்ற பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நீர் கார்ப்பரேட் நிறுவனத்திடமும் "தோஷிபா" என்ற ஜப்பான் நாட்டு நீர் கார்ப்பரேட் நிறுவனத்திடமும் கருநாடக அரசால் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மின்சார சட்டத் திருத்த மசோதா-2020 மூலம் மின்சார உற்பத்தி மற்றும் விநியோகம் கார்ப்பரேட் மயமாக்கப்பட்டுள்ளது. எனவே மேகதாது அணை திட்டம் கார்ப்பரேட் நலன்களுக்காகத் தமிழகத்தைப் பாலைவனமாக்கும் மக்கள் விரோத திட்டமாகும். 50 ஆண்டுகளாகத் தமிழகத்தில் நடந்து வரும் காவிரி உரிமைப் போராட்டங்களைக் காலில் போட்டு நசுக்கும் திட்டமாகும்.
மேகதாது அணை திட்டம் என்றால் என்ன?
காவிரி ஆறு கருநாடகத்தில் உள்ள குடகில் தோன்றி தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள பூம்புகார் வழியாக வங்காள விரி குடாவில் கலக்கிறது. கருநாடகத்தில் 320 கிலோ மீட்டர் தூரமும், கருநாடகம் மற்றும் தமிழகத்தின் எல்லையாக 64 கிலோ மீட்டர் தூரமும், தமிழ்நாட்டில் 416 கிலோ மீட்டர் தூரமும் காவிரி பயணிக்கிறது. காவிரி ஆற்றில் ஹேமாவதி, கபிணி, அர்க்காவதி, ஹாரங்கி, லட்சுமண தீர்த்தம் போன்ற ஆறுகள் துணையாகச் சேர்ந்து காவிரியை வளப்படுத்துகின்றன.
குடகு மாவட்டத்தில் ஹாரங்கி காவிரியுடன் இணைந்து கிருஷ்ண ராஜசாகர் அணையை வந்தடைகிறது. ஹேமாவதி, லட்சுமண தீர்த்தம் ஆகிய துணை ஆறுகளின் நீர் கிருஷ்ண ராஜசாகர் வந்து சேருகின்றன. ஹாரங்கி ஆற்றின் மீது ஓர் அணையும், ஹேமாவதி ஆற்றின் மீது ஓர் அணையும் அந்த ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டிருக்கின்றன. கிருஷ்ண ராஜசாகர் அணைக்கு வந்த காவிரி நீர் ஸ்ரீரங்கப்பட்டணத்தை ஒரு தீவாக உருவாக்கிவிட்டு மேலும் பயணிக்கிறது. சுவர்ணவதி, அர்க்காவதி ஆகியவையும் காவிரியில் இணைகின்றன. கேரளாவில் உற்பத்தியாகும் கபினி ஆற்றின் மீது கருநாடக அரசு ஒரு அணையைக் கட்டி உள்ளது. அணையை நிரப்பிவிட்டு கபினி ஆறு வழிந்தோடி காவிரியில் இணைகிறது. இதன் பிறகு சிம்சா, அமராவதி ஆகிய ஆறுகளும் காவிரியில் இணைகின்றன. இதன்பிறகு காவிரி ஆறு தமிழகத்தின் எல்லையை நோக்கிப் பயணிக்கிறது. தமிழக எல்லையிலிருந்து 3.5 கிலோ மீட்டர் மேலே குறுகிய ஒரு பாறை இடுக்கின் வழியாக காவிரி ஆறு பாய்ந்து வருகிறது. அந்த இடம் 'ஆடு தாண்டும் காவிரி' (மேகேதாட்டு) என்று அழைக்கப்படுகிறது. இங்கு தான் மேகதாது அணைக் கட்டப்படுகிறது.
வெள்ளப்பெருக்கு எடுக்கும் காலங்களில் கபினி அணை நிரம்பி வழிந்து வரக்கூடிய தண்ணீரும், கிருஷ்ண ராஜசாகர் அணையில் இருந்து வழிந்து வரக்கூடிய வெள்ள நீரும், இதுவரை அணைக் கட்டி தடுக்கப்படாத அர்க்காவதி ஆற்றின் நீரும் காவிரி என்ற ஆறாக மேகதாது வழியாகப் பாய்ந்து தமிழக எல்லைக்குள் நுழைகிறது. கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணையிலிருந்து வழிந்து செல்லக்கூடிய நீரையும் அர்க்காவதி ஆற்றிலிருந்து தடுக்கப்படாமல் சென்று கொண்டிருக்கக்கூடிய நீரையும் தடுத்து கருநாடக எல்லைக்குள் முடக்கிவிட வகுக்கப்பட்ட திட்டம்தான் மேகதாது திட்டமாகும். பெருவெள்ளம் ஏற்பட்டு அணைகள் உடைந்து விடாமல் காக்க உபரி நீரை வெளியேற்றினால் கூட அந்த நீரும் தமிழகத்திற்கு சென்றுவிடாமல் முடக்கப்பட வேண்டும் என்பதற்காகவே திட்டமிடப்பட்டிருக்கும் அணைதான் மேகதாது அணை.
கபினி அணையின் கொள்ளளவு 15.67 டிஎம்சி, ஹேரங்கி அணையின் கொள்ளளவு 8.07 டிஎம்சி, கிருஷ்ண ராஜசாகரின் கொள்ளளவு 45.05 டிஎம்சி, ஹேமாவதியின் கொள்ளளவு 35.76 டிஎம்சி. புதியதாகத் திட்டமிடப்பட்டுள்ள மேகதாதுவின் கொள்ளளவு 67.16 டிஎம்சி. இது பழைய அணைகள் எல்லாவற்றையும் விட அதிகம் ஆகும். கிட்டதட்ட மேட்டூர் அணைக்கு இணையானதாகும். அதாவது மேட்டூர் அணைக்கு வரும் நீர் மொத்தத்தையும் மேகதாது தேக்கிக்கொள்ளும். கிருஷ்ன ராஜசாகர் அணைக்குக் கீழ் உள்ள வடிநிலப் பகுதி, கபினி அணைக்குக் கீழ் உள்ள பகுதி, சிம்சா, அர்க்காவதி, சுவர்ணவதி வடிநிலப்பகுதி ஆகியவற்றிலிருந்து தமிழகத்துக்கு வரக்கூடிய நீர் முற்றிலுமாக முடக்கப்படும் வகையில் மேகதாது அணை திட்டமிடப்பட்டுள்ளது. எனவே தமிழகத்திற்கு மட்டுமின்றி கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கும் காவிரி வராமல் முடக்கப்படும் நிலை உருவாகும்.
மேகதாது அணையைக் கட்டவிடாமல் அதை முறியடிப்பதில்தான் தமிழகத்தின் எதிர்கால வாழ்வு அடங்கியிருக்கிறது. மேகதாது அணையைக் கட்டுவதன் மூலம் இத்துணை ஆண்டுகளாக (சுமார் 50 ஆண்டுகளாக) நடத்தப்பட்ட சட்டப் போராட்டங்களும், மக்கள் போராட்டங்களும் வீணாகும் சூழலை கருநாடக-மத்திய அரசுகள் ஏற்படுத்த விரும்புகின்றன. அணை கட்டப்பட்டால் ஒரு சொட்டு காவிரி நீர் கூட கிடைக்காமல் தமிழகம் பாலைவனமாகும். பெங்களூர் குடிநீர்த் தேவை 14.75 டிஎம்சி என்று கூறி 2018 உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கேட்டுப்பெற்ற கருநாடக அரசு மீண்டும் ஏன் பெங்களூர் குடிநீர்த் தேவையைக் காரணம் காட்டி 67.16 டிஎம்சி கொள்ளளவு கொண்ட மேகதாது அணையைக் கட்ட வேண்டும்? கார்ப்பரேட் நலன்களைத் தாண்டி எதுவுமில்லை.
கார்ப்பரேட் நலன்களுக்காகப் பாலைவனமாக்கப்படும் தமிழகம்!
ஒருபுறம் ஹைட்ரோ கார்பன்/மீத்தேன் திட்ட கார்ப்பரேட் முதலாளிகள் காவிரிப் படுகைகளின் அழிவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வேளாண்மை அழிந்துவிட்டால் அவற்றையே காரணம் காட்டி இத்திட்டங்களை நடைமுறைப்படுத்திவிட இயலும். மறுபுறம் மேகதாது அணை திட்டம் மூலம் பெங்களூர் குடிநீர் விநியோகம் சூயஸ் மற்றும் தோஷிபா பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேகதாது அணை மூலம் நடக்கவிருக்கும் மின்சார உற்பத்தி அதானி குழுமத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது. கருநாடக மாநிலத்தின் மொத்த குடிநீர்த் தேவையில் 50% பெங்களூர் உறிஞ்சுகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பூங்காக்கள், கோல்ப் மைதானங்கள், கிரிக்கெட் மைதானங்கள், செயற்கைக் கடல்கள், இன்போசிஸ் போன்ற ஜ.டி நிறுவனங்கள், பெரும் வணிக மால்கள் இவைதான் மேகதாது அணை மூலம் பயன்பெறப் போகின்றன. எனவே மேகதாது திட்டம் கார்ப்பரேட் நலன்களுக்காகத் தமிழகத்தைப் பாலைவனமாக்கும் திட்டமாகும்.
பெங்களூர் குடிநீர் விநியோக உரிமை பிரான்சு நாட்டைச் சேர்ந்த சூயஸ் என்ற பன்னாட்டு நீர் கார்ப்பரேட் நிறுவனத்திற்கும், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு ஏஜென்சி (JICA- Japan International Corporation Agency) - யின் நிதியுதவியில் இயங்கும் தோஷிபா நீர் உள்கட்டமைப்பு நிறுவனத்திற்கும் 7 ஆண்டுகளுக்குத் தாரை வார்க்கப்பட்டுள்ளது. இதற்கான நீர் உலை (Water Treatment Plant) கருநாடகத்தின் டி.கே ஹள்ளியில் (T.K Halli) கட்டப்பட்டு வருகிறது. இது 7 ஆண்டுகளுக்கான ஒப்பந்தமாகும். இதற்கான நீர் காவிரியிலிருந்து உறிஞ்சப்படுகிறது.
இது குறித்து சூயஸ் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அலுவலர் ஷியாம் ஜே.பான் கூறுவதாவது: "சூயஸ் நிறுவனம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் தனது சேவையை' செய்து வருகிறது. நாட்டின் பல பெருநகரங்களில் குடிநீர் விநியோக உரிமையைப் பெற்று மக்களுக்குச் சேவை செய்து வருகிறது. பெங்களூர் குடிநீர் விநியோக உரிமையை வழங்கிய கருநாடக நீர் விநியோக துறைக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். முதல் ஒப்பந்தத்தை நாங்கள் 1999-ல் பெற்றோம். 2009 மற்றும் 2015-ல் அடுத்தடுத்த ஒப்பந்தங்களைப் பெற்றோம். தற்போது மீண்டுமொரு (5.11.2020) ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளோம். இதன் மூலம் 2,350 MLD கொள்ளளவில் நீர் உலை அமைக்கப்பட்டு பெங்களூர் நகரத்திற்கு 2023 ம் ஆண்டில் குடிநீர் வழங்கப்படும். நாங்கள் இதை தோஷிபா நிறுவனத்துடன் இணைந்து செய்ய உள்ளோம்" என்கிறார்.
இது குறித்து தோஷிபா நிறுவனத்தின் நிர்வாக அலுவலர் கோய்ச்சி மேர்சூயி (Kolchi Marsui) கூறுவதாவது "இந்தியாவிலும் உலகளவிலும் முன்னேறிய சமூகங்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். பெங்களூருவில் சூயெஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். தோஷிபா நீர் நிறுவனம் இப்பணியை இந்தியா மட்டுமின்றி வட மற்றும் மத்திய அமெரிக்கா, மத்திய கிழக்கு, மேற்கு ஆசியா, தென் கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளின் தொழில் நகரங்களிலும் செய்து வருகிறது. இந்தியாவின் மிக முக்கிய தொழில் நகரமான பெங்களூருவிற்குத் தரமான குடிநீர் சேவையை வழங்குவோம்" என்கிறார்.
எனவே மேகதாது திட்டம் சூயெஸ், தோஷிபா போன்ற பன்னாட்டு நீர் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் அதானி குழுமத்திற்கும் கருநாடக பெருமுதலாளிகளுக்கும் பயன்படும் திட்டமே ஆகும்.
காவிரி தமிழகத்தின் வடிகாலாகத்தான் ஏற்கனவே மாற்றப்பட்டுள்ளது. தற்போது இந்த அணையின் மூலம் கருநாடக அரசு காவிரியின் வடிகாலாகக் கூட தமிழகத்தைக் கருதவில்லை. காவிரி காணா பாலை நிலமாகத் தமிழகத்தை மாற்றுகிறது. காவிரி நீர் மறுப்பால் ஏற்கனவே தமிழகப் பாசனப் பரப்பு குறைந்து கொண்ட வருகிறது. பாசனப் பரப்பு தற்போது 24.21 இலட்சமாகச் சுருங்கி விட்டது. மேகதாது அணை கட்டப்பட்டால் இந்த பாசனப் பரப்பும் காவிரி நீரின்றி பாலைவனமாகும்.
தமிழ்நாட்டின் குறுவை சாகுபடி 4 லட்சம் ஏக்கராக இருந்தது. இது 1.18 லட்சம் ஏக்கராகக் குறைந்து போனது. அதுவும் டெல்டாவில் உள்ள ஆழ்துளைக் கிணறுகள் மூலம் தான் நடக்கின்றது. டெல்டா மாவட்டங்கள் வேளாண்மையை மட்டுமே நம்பியுள்ளன. தமிழ் நாட்டில் 10 ஏழ்மையான மாவட்டங்களின் பட்டியலில் டெல்டா மாவட்டங்கள் இருக்கின்றன. தனி நபர் வருமானத்தின் அடிப்படையில் 32 மாவட்டங்களில் 30வது இடத்தில் திருவாரூர், 27வது இடத்தில் நாகை மாவட்டம், 23வது இடத்தில் தஞ்சை மாவட்டம் ஆகியவை உள்ளன. இங்கு வேளாண்மை அழிந்தால் மக்களின் வாழ்வே அழிந்து போகும்.
மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்தின் 20 மாவட்டங்களில் குடிநீர் அற்றுப்போய் 10 கோடி மக்கள் பாதிக்கப்படுவார் 10 மாவட்டங்களில் சுமார் 25 லட்சம் ஏக்கர் வேளாண்மை நிலம் நீரின்றி பாலைவனமாகும். தமிழகத்தின் விவசாயத்திற்கு ஆதாரமாக விளங்கி வருவது காவிரி ஆறுதான். தமிழகத்தின் உணவுத்தேவையை 60 விழுக்காட்டைக் காவிரிதான் நிறைவு செய்து வந்தது. காவிரி ஆற்று நீர் தமிழகத்திற்கு கருநாடக, மத்திய அரசால் மறுக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது உணவுத் தேவையில் 34 விழுக்காடு மட்டுமே காவிரிப்படுகை நிறைவு செய்கிறது. மேகதாது அணை கட்டப்பட்டால் மிச்சமிருக்கும் 34 விழுக்காடும் பறிபோகும். விவசாயிகளின் தற்கொலைகளும் பட்டினிச் சாவுகளும் அதிகரிக்கும்.
காவிரி நீரை மேகதாது திட்டத்தின் மூலம் கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்த்துவிட்டு இத்திட்டம் மக்களுக்கானது என்றும், இதற்குத் தமிழகம் எதிராக உள்ளது என்றும் கன்னட தேசிய இன வெறியைத் தூண்டி வருகின்றது கருநாடக பாஜக அரசு. இதற்கு மோடி கும்பல் துணை நிற்கிறது. இத்திட்டத்தால் தமிழக மக்கள் மட்டுமின்றி கருநாடக விவசாயிகளும் பயன்பெறப் போவதில்லை. இந்தியாவில் விவசாயிகளின் தற்கொலை அதிகமாக நடக்கும் மாநிலங்களில் கருநாடகமும் ஒன்று. இவ்வாறு மேகதாது திட்டத்தின் மூலம் நான்கு மாநில (தமிழகம், கருநாடகம், கேரளா, புதுச்சேரி) விவசாயிகளுக்கும் மத்திய-மாநில அரசுகள் துரோகம் இழைக்கின்றன.
காவிரி மீதான தமிழக உரிமையை முற்றாகப் பறிக்கும் கருநாடகம் மற்றும் பாஜக அரசுகளின் கூட்டுச் சதி!..
காவிரிப் பிரச்சினையில் கருநாடக அரசு தேசிய இறையாண்மைக் கோட்பாட்டின் அடிப்படையில் காவிரி ஆற்று நீர் அனைத்தும் தங்களுக்கே சொந்தம் என்று உரிமை கோருகிறது. இது தேசிய இனவெறிக் கோட்பாடாகும். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு, உச்சநீதிமன்ற தீர்ப்பு, காவிரி மேலாண்மை ஆணையம் என எதையும் மதிக்காமல் தொடர்ந்து அடாவடித்தனமாகச் செயல்பட்டு வருகிறது கருநாடக அரசு. தனது கார்ப்பரேட் சேவையை மூடிமறைக்கக் கன்னட தேசிய இனவெறியைத் தூண்டி கருநாடக உழைக்கும் மக்களை, தமிழக விவசாயிகளுக்கு எதிராகத் திருப்பி விடுகிறது. மேகதாது அணைக்கு அனுமதி தர மாட்டோம் என்று தமிழக முதல்வரிடம் கூறிய மத்திய பாஜக அரசு கருநாடக அரசின் மேகதாது திட்டத்திற்குக் கள்ளத்தனமாக அனுமதி அளிக்கிறது.
1980 களிலேயே மேகதாது என்ற புதிய அணையைக் கட்ட வேண்டும் என்று கருநாடக அரசு திட்டமிட்டது. ஆனால் அது நடைமுறை வடிவம் பெறவில்லை. பிறகு 2013- ல் மீண்டும் அதற்கான நடைமுறையில் இறங்கியது 2013ஆம் ஆண்டு காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட வேண்டும் என்று கருநாடக அரசு முயன்றபோது அன்றைய முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கடிதம் ஒன்றை ஒப்புக்கு எழுதிவிட்டு அமைதியாகி விட்டார். சட்டரீதியாக வழக்கு ஏதும் தொடுக்கவில்லை. இத்திட்டம் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிரானது என்று அவர் போராடத் தயாரில்லை. 2014 இல் காவிரி உரிமையை விட்டுத்தர முடியாது; அணையைக் கட்டியே தீருவோம் என்று கருநாடக-காங்கிரஸ் அமைச்சர் சிவக்குமார் அறிவித்தார். அன்றைய கருநாடக காங்கிரஸ் அரசுக்கு மத்திய காங்கிரஸ் அரசு ஒத்துழைத்தது. இதை எதிர்த்து 2015ஆம் ஆண்டு டெல்டா முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. 2015ஆம் ஆண்டு மேகதாது திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்யக் கருநாடக அரசு 25 கோடி ரூபாய் ஒதுக்கியது. 2016 இல் ஜெயலலிதா இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு மீண்டும் ஒரு கடிதம் எழுதினார். வழக்கம்போல கடிதத்தைக் குப்பைத்தொட்டியில் எறிந்து விட்டு மத்திய அரசு கருநாடக அரசிற்கு ஆதரவு வழங்கியது. ஆகவே 2017 பிப்ரவரியில் அப்போதைய கருநாடக காங்கிரஸ் முதல்வர் சீதாராமையா மேகதாது அணை கட்ட நிதி ஒதுக்கீடு செய்தார்.
இதற்கிடையில் காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்திற்குத் துரோகம் விளைவிக்கும் வகையிலும் கருநாடக அரசின் அடாவடித்தனத்திற்கு ஆதரவாகவும் ஒரு தீர்ப்பை வழங்கியது. காவிரி தேசிய சொத்து (அதாவது இந்திய அரசின்) என்று கூறி பெங்களூர் குடிநீர்த் தேவைக்காகத் தமிழகத்தின் பங்கிலிருந்து 192 டிஎம்சி-இல் 14.75 டிஎம்சி கருநாடகத்திற்கு வழங்க உத்தரவிட்டது. தமிழகத்தின் நிலத்தடி நீர் மட்டத்தை 1970களின் கணக்கீட்டின்படி கணக்கில் எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம் கருநாடகத்தின் நிலத்தடி நீர்மட்டத்தைக் கணக்கில் கொள்ளவே இல்லை. காவிரி நீர் வராததால் தமிழகத்தின் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக அற்றுப் போய்விட்டது என்பதையே அண்மை கணக்கீடுகள் காட்டுகின்றன. தனது தீர்ப்பிற்கு ஆதரவாக ஐநாவின் பெர்லின் மற்றும் கேம்பியோன் விதிகளை எடுத்துக்காட்டியது உச்சநீதிமன்றம். உலகமய, தனியார்மய, கார்ப்பரேட்மயக் கொள்கைகளுக்கு ஏற்றவாறு ஐநாவால் உருவாக்கப்பட்ட இவ்விதிகளைக் கோடிட்டுக் காட்டி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு கார்ப்பரேட் நலன்களுக்கான தீர்ப்பாகும். இந்த தீர்ப்பே கருநாடக அரசுக்கும் மத்திய அரசுக்கும் மேகதாது அணையைப் பெங்களூர் குடிநீர்த் தேவையை காரணம் காட்டி கட்டிவிடலாம் என்ற துணிச்சலைத் தந்துள்ளது. குடிநீர்த் தேவைக்காக அணையைக் கட்டலாம் என்று உச்ச நீதிமன்றத்தின் 2018 தீர்ப்பு உணர்த்துவதாக மத்திய-கருநாடக அரசுகள் கருதுகின்றன. இக்கருத்தை மத்திய நீர்வளத்துறை அமைச்சர் அண்மையில் வெளிப்படுத்தியுள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக ஆளும் வர்க்கக் கட்சிகள் திமுக அதிமுக உட்பட எதுவும் பேசவில்லை. சட்டரீதியான போராட்டத்தையும் கூட முன்னெடுக்கவில்லை. இதன் பிறகே 2018 ஆம் ஆண்டு மேகதாதுவில் புதிய அணை கட்ட விரிவான திட்ட அறிக்கையைக் கருநாடகம் தயாரித்து அளிக்க மத்திய பாஜக அரசு ஒப்புதல் அளித்தது. அந்த திட்ட வரைவு அறிக்கை இன்றளவும் மத்திய அரசின் நீர்வளத்துறையிடம் உள்ளது. மத்திய நீர்வளத்துறை அமைச்சர் அணை கட்ட வேண்டிய பகுதிகளை அண்மையில் பார்வையிட்டுச் சென்றுள்ளார். கருநாடக அரசு இத்திட்டத்திற்கு 9,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.
மேகதாது திட்டத்தை எதிர்த்து சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து தமிழக அரசு (எடப்பாடி அரசு) 2018இல் வழக்கு தொடர்ந்தது. அவ்வழக்கு நிலுவையில் உள்ளது. இது குறித்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் 2019ஆம் ஆண்டு பதில் மனுத் தாக்கல் செய்தது. மேகதாது அணை கட்ட இதுவரை மத்திய அரசு அனுமதி தரவில்லை எனவும், ஆகவே தமிழக அரசின் மனு அர்த்தமற்றது எனவும், தமிழ்நாட்டின் மனு தள்ளுபடி செய்யப்பட வேண்டும் எனவும் மத்திய பா.ஜ.க. அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.
இதனைத் தொடர்ந்து கருநாடக அரசு அணை கட்டுவதற்கான கட்டுமான பொருட்களை மேகதாதுவில் குவிக்கத் துவங்கியது. 2021ம் ஆண்டு மே மாதம் தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் தானாக முன்வந்து இது குறித்து விசாரணை துவங்கியது. மத்திய அரசு, தமிழக அரசு மற்றும் கருநாடக அரசுகளுக்கு இது குறித்து பதில் அளிக்க உத்தரவிட்டது. மேகதாது அணை கட்டப்படுவது குறித்தும், அதனால் ஏற்படும் சுற்றுச் சூழல் பாதிப்புகள் குறித்தும் ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைத்தது. ஜூலை 5ஆம் தேதிக்குள் விரிவான அறிக்கையை அளிக்கக் கருநாடக அரசுக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து கருநாடக அரசு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஜூன் 11ஆம் தேதி வழக்குத் தொடர்ந்தது. மத்திய அரசின் ஒத்துழைப்புடன் தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவைத் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் மூலம் இரத்து செய்தது. அதற்குப் பிறகு அணையைக் கட்டுவதற்கான கட்டுமான பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது கருநாடக அரசு.
திமுக அரசின் மெத்தனமும் பாஜகவுடனான சமரசவாதமும்!
கருநாடக அரசு மத்திய பாஜக அரசின் ஒத்துழைப்புடன் அணை கட்டுவதற்கான கட்டுமானப் பணிகளைத் துவங்கிய பின்பும் திமுக அரசு மெத்தனமாகச் செயல்பட்டு வருகிறது. பிரதமருக்கு கடிதம் எழுதி விட்டுத் தூங்கிக் கொண்டிருக்கிறது. முந்தைய எடப்பாடி அரசு உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதை முதன்மை வழக்காக எடுத்து விசாரிக்க கோரி சட்டப் போராட்டம் நடத்த இதுவரை முயற்சிக்கவில்லை. மக்கள் திரள் போராட்டங்களையும் முன்னெடுக்கத் தயாரில்லை; முன்னெடுக்கவும் செய்யாது. இந்துத்துவ பாசிச மோடி அரசுக்குப் பல்லக்கு தூக்கிக் கொண்டு ’ஒன்றிய அரசு’ என்று கூறுவதையே பெரும் புரட்சியாக வாய்ச்சவடால் அடிக்கிறது. ஒன்றிய அரசு பாரத நாட்டிலுள்ள மாநிலங்களின் ஒன்றறக் கலந்த ஒற்றை ஆட்சி முறை என்று கூறும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்குப் புனித முலாம் பூசிக் கொண்டிருக்கிறது.
கடந்த ஜூன் 17ஆம் தேதி டில்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்து மேகதாது அணை கட்ட அனுமதி தரக் கூடாது என்று மு.க. ஸ்டாலின் வலியுறுத்தினார். ஜூலை 16ஆம் தேதி அணை கட்ட அனுமதி தரக் கூடாது என்று மத்திய (அ) ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திடம் தமிழ்நாடு அனைத்துக் கட்சிகள் குழு வலியுறுத்தியது. அதற்கு முன்னதாக ஜூலை 12ஆம் தேதி தமிழகச் சட்டமன்றத்தில் மேகதாது அணை குறித்து தமிழக அரசு சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டு, மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி (2018) தமிழ்நாடு அரசின் முன் அனுமதியின்றி கருநாடகம் மேகதாதுவில் அணை கட்ட கூடாது எனவும், மேகதாதுவில் அணை கட்ட கருநாடக அரசிற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக மக்களுக்குத் துரோகமிழைத்த 2018 உச்ச நீதிமன்ற தீர்ப்பையும், மத்திய அரசையும் நம்பி இருப்பது திமுக அரசின் மெத்தனத்தையும் பாஜகவுடனான சமரசப் போக்கையுமே காட்டுகிறது.
ஜூலை 15 அன்று சட்டமன்ற அனைத்துக் கட்சியினர் டெல்லி சென்று ஜூலை 16ஆம் தேதி மத்திய நீர்வளத்துறை அமைச்சரைச் சந்தித்தனர். தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்துக் கட்சியினரின் பிரதிநிதிகள் கீழ் பாசன மாநிலங்களின் அனுமதி இல்லாமல் மேகதாதுவில் அணை கட்டக்கூடாது; காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதலும் தேவை எனவும், மேகதாது அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்திப் பேசினர். காவிரி மேலாண்மை ஆணையம் உச்சநீதிமன்ற உத்தரவின் பெயரில் 2018 ஜூனில் அமைக்கப்பட்டாலும், அதை இன்றும் மோடி அரசு செயல்படுத்தவில்லை. ஆணையத்தின் உறுப்பினர்களை நியமிக்கவில்லை. அது அதிகாரமற்ற ஆணையாக, செயல்படாத அணையாக உள்ளது. விரிவான திட்ட அறிக்கைக்கு அனுமதி அளித்துவிட்டு தமிழக சட்ட மன்ற குழுவிடம் அணை கட்ட அனுமதி தரமாட்டோம் என்று இரட்டை வேடம் போடுகிறது மத்திய பாஜக அரசு.
ஜூலை 16ஆம் தேதி மத்திய நீர்வளத்துறை அமைச்சரைத் தமிழக அனைத்துக் கட்சி குழுவினர் சந்தித்த அன்றே, டில்லியில் எடியூரப்பா மோடியைச் சந்தித்துப் பேசினார். அதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, மேகதாது அணை கட்ட கருநாடகத்திற்கு முழு உரிமை உள்ளது; அந்த அணையைக் கட்டுவோம் என்று தெரிவித்தார். தனது கோரிக்கையை மோடி ஏற்றுக் கொண்டதாக எடியூரப்பா அறிக்கை விட்டார். அண்மையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் குடிநீர்த் தேவைக்காக உச்சநீதிமன்றம் அணை கட்டலாம் என்று தீர்ப்பு வழங்கியிருந்தால் அணைக் கட்டிக் கொள்ளலாம் எனவும், கருநாடகம் தனது எல்லையில் அணை கட்டுவதில் தமிழகத்திற்கு என்ன பிரச்சினை எனவும் பேசியுள்ளார். கருநாடகத்தின் புதிய முதல்வரான பசவராஜ் பொம்மையும் அணையை கட்டியே தீருவோம் என்று அறிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேகதாது திட்டத்தை எதிர்த்து உண்ணாவிரதம் போராட்டத்தை நடத்தினார். கருநாடக அரசை பெயரளவுக்கு கண்டித்துவிட்டு மோடி கும்பலை பற்றி வாய்த்திறக்கவே இல்லை. அண்ணாமலையின் இந்த அறிவிப்பை கணக்கில் கொள்ளத் தேவையில்லை என்று கருநாடக முதல்வர் கிண்டலடித்தார். அண்ணாமலை-எச்.ராஜா கும்பலின் இந்த கோமாளித்தனங்களை அவர்களின் கட்சி மட்டுமல்ல தமிழக மக்களும் பொருட்படுத்தவில்லை.
இதையெல்லாம் திமுக அரசு இதுவரை கண்டிக்கவுமில்லை. மோடி கும்பலின் இரட்டை நாடகத்தை அம்பலப்படுத்தவுமில்லை. சட்டப் போராட்டமோ மக்கள் திரள் போராட்டமோ எதுவும் நடத்தாமல் தமிழக மக்களுக்குத் துரோகம் இழைக்கிறது. கோயம்புத்தூர் குடிநீர் விநியோக உரிமையை சூயெஸ் நிறுவனத்திற்கு திமுக அரசு அனுமதி வழங்கி உள்ளது. எனவே சூயெஸ் நிறுவனத்திற்காகக் கட்டப்படும் மேகதாது திட்டத்தை மு.க.ஸ்டாலின் அரசு எதிர்த்துப் போராடுமா? சாத்தியமில்லை. தமிழக மக்கள் திமுக அரசை நம்பாமல் போராடுவதன் மூலமாக இத்திட்டத்தை முறியடிக்க முடியும்.
நீரை தனியார்மயமாக்கும் பெர்லின் - கேம்பியோன் விதிகள்
1966-ல் கீன்சிய சமூக நல அரசு கொள்கைக்கு ஏற்றவாறு வளமான காலத்திலும் வறட்சிக் காலத்திலும் நதிநீரை சமமாக பங்கிட்டுக்கொள்ளும் ஹெல்சிங்கி கோட்பாடு உருவாக்கப்பட்டு நதிநீர் பிரச்சினைகள் தீர்வு காணப்பட்டன. பிறகு நீரை தனியார்மயமாக்கும் திட்டம் என்பது 1980களில் 'காட்' ஒப்பந்தத்தின் மூலம் காங்கிரசு ஆட்சி துவக்கி வைத்தது. 1990களுக்குப் பிறகு உலகமயம் - தாராளமயம் - தனியார்மயக் கொள்கைகளை ஏகாதிபத்தியவாதிகள் அமல்படுத்தத் துவங்கிய பிறகு நதிகள், ஆறுகள் போன்றவற்றைத் தனியார்மயமாக்க ஹெல்சிங்கி கோட்பாடு தடையாக இருப்பதைக் கண்டு ஐ.நாவின் சர்வதேச சட்ட ஆணையத்தின் (ILA) மூலம் புதிய விதிகளை ஏகாதிபத்திய நாடுகள் உருவாக்கின. அவையே பெர்லின் மற்றும் கேம்பியோன் விதிகள் எனப்படுகின்றன. இந்த விதிகளை மேற்கோள் காட்டியே உச்ச நீதிமன்றம் 2018 தீர்ப்பில் பெங்களூர் குடிநீர்த் தேவைக்காகக் காவிரியில் தமிழகத்தின் பங்கை (14.75 டிஎம்சி) குறைத்து தமிழகத்தை வஞ்சித்தது. இது மேகதாது திட்டத்தைக் கட்டுவதற்கான உத்வேகத்தைக் கருநாடக அரசுக்கு வழங்கி உள்ளது.
1999-ல் இத்தாலியின் கேம்பியோன் நகரில் கூடிய ஐ.நாவின் சர்வதேச சட்ட ஆணையம் வகுத்த விதிகளே கேம்பியோன் விதிகள் எனப்படுகின்றன. இவை வறட்சி காலத்திலும் வளமான காலத்திலும் நதிநீரை சமபங்கீடு செய்து கொள்ளும் ஹெல்சிங்கி கோட்பாட்டை மறுக்கின்றன. வறண்ட காலங்களில் நதிநீர் பங்கீடுகளில் நிலத்தடி நீரைக் கணக்கில் கொள்ள வேண்டும் என்று கூறுகின்றன. அதனடிப்படையிலேயே தமிழகத்தின் நிலத்தடி நீரைக் காரணம் காட்டி உச்சநீதிமன்றம் 14.75 டிஎம்சி நீரைக் குறைத்தது.
அதேபோன்று 2004-ம் ஆண்டு ஜெர்மனியின் பெர்லின் நகரில் ஜ.நாவின் சர்வதேச சட்ட ஆணையம் பெர்லின் விதிகளை உருவாக்கியது. இவை நீர்நிலைகளை கார்ப்பரேட் மயமாக்குவதை 'குடிநீர் பற்றாக்குறை - தரமான குடிநீர்' போன்ற வஞ்சக வார்த்தைகளால் ஆதரித்தன. பெர்லின் விதியின் முதலாவது பிரிவு சர்வதேச அளவில் பாயும் ஆற்றுப்படுகையில் உள்ள நீரை நிர்வகிப்பதில் சமபங்கு என்று கூறுகிறது. நிர்வகிப்பது என்பது பற்றி விளக்கும்போது வளர்ச்சி, பயன்பாடு, பாதுகாப்பு, பங்கீடு, ஒழுங்கு முறைப்படுத்துதல், கட்டுப்பாடு செலுத்துதல் என்று கூறுகிறது. மேலும் பெர்லின் விதி 18.1 மேற்கண்ட பணிகளை மேற்கொள்வதற்கான தண்ணீர் நிர்வாகத்தில் பொதுமக்கள் பங்கேற்பு தேவை என்கிறது. பொது மக்கள் பங்கேற்பு (PPP) எனும் பெயரில் பன்னாட்டு நீர் கார்ப்பரேட்டுகள் பங்கேற்கும் திட்டத்தை முன்வைக்கிறது. சாரம்சத்தில் பெர்லின் மற்றும் கேம்பியோன் விதிகள் குடிநீர் மற்றும் தொழிற்துறைக்கான நீர் தேவையை முதன்மைப்படுத்தி வேளாண்மையைப் புறக்கணிக்கின்றன. இதனடிப்படையிலேயே இந்திய அரசால் 2002 தேசிய நீர்க் கொள்கை உருவாக்கப்பட்டது. அண்மையில் பாஜக அரசு தேசிய அணைக் கொள்கை, ஒற்றைத் தீர்ப்பாயம் போன்றவற்றின் மூலம் அணைகள், மாநில தீர்ப்பாயங்கள் மற்றும் நீர்நிலைகள் மீதான மாநில உரிமைகளைப் பறித்து மையப்படுத்துகின்றன.
மேகதாது திட்டத்தை முறியடிப்போம்!
ஏற்கனவே தென்பெண்ணையாற்றின் குறுக்கே கருநாடக அரசு யார்கோள் அணையைக் கட்டி முடித்துவிட்டது. இதன் மூலம் தமிழகத்தின் வடமாவட்டங்கள் குடிநீர் - வேளாண்மைக்கு நீரின்றி வறண்டு போகும் நிலைமையை உருவாக்கியுள்ளது. இதற்கும் மத்திய பாஜக அரசு ஒத்துழைத்தது. தற்போது காவிரியாற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட துவங்கியுள்ளது. இதைத் துவக்க நிலையிலேயே முறியடிக்க வேண்டும். இல்லாவிடில் காவிரி மீதான தமிழகத்தின் உரிமை முற்றாகப் பறிக்கப்பட்டு தமிழகம் பாலைவனமாகும்.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அமல்படுத்துவதற்கு நாம் உடனடியாக போராடியாக வேண்டும்; ஏனெனில் மேகதாது அணை கட்டப்பட்டால் இத்தீர்ப்பை அமல்படுத்துவது சாத்தியமேயில்லை. ஏற்கனவே அதிகாரமற்ற காவிரி மேலாண்மை ஆணையம் ஒன்றினை அமைத்து காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அமல்படுத்த முடியாத நிலையை மோடி கும்பல் உருவாக்கியுள்ளது. எனவே காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை (192 டிஎம்சி) அது கட்டப்பஞ்சாயத்துத் தீர்ப்பாக இருப்பினும் அதை அமல்படுத்துவதற்கு நான்கு மாநில விவசாயிகள், ஜனநாயக சக்திகளை உள்ளடக்கிய அதிகாரமுள்ள காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப் போராடுவது உடனடிக் கடமையாகும்.
நதிநீரை தனியார்மயமாக்கும் மத்திய - மாநில அரசுகளின் துரோகத்தனமான கொள்கைகளை எதிர்ப்பது மட்டுமின்றி, வேளாண் துறையை கார்ப்பரேட் மயமாக்கும் புதிய காலனிய வேளாண் கொள்கைகள், வேளாண் சட்டங்கள் அனைத்தையும் எதிர்த்துப் போராடுவதுதான் விவசாயப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக அமையும். இந்தியா முழுக்க இதுவரை 8 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் மாண்டு போனதற்குக் காரணம் இக்கொள்கைகளே ஆகும். ஆகவே தேசிய இனங்களுக்கு இடையில் தூண்டப்படும் இனவெறியை மாய்க்க வேண்டும். டெல்லியில் நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டம் அதற்கான சாத்தியப்பாட்டை எடுத்துக் காட்டுகின்றது. நான்கு மாநில விவசாயிகள் வர்க்கமாய் அணிதிரளும் போது கண்டிப்பாக மேகதாது திட்டத்தை முறியடிக்க முடியும். அதற்கான முன்னெடுப்பைத் தமிழக விவசாயிகள், ஜனநாயக சக்திகள், தொழிலாளிகள், மா-லெ இயக்கங்கள் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்.
- சமரன், மே-செப்டம்பர் 2021 இதழ்