நூல் அறிமுகம்: மனித இனங்கள்
"இனக் கொள்கை விஞ்ஞான நோக்கில் ஆதாரம் அற்றது, பிற்போக்கான வர்க்கத் தன்மை கொண்டது"
முன்னுரை
மனித இனங்கள் பற்றிய பிரச்சினை மானிட இயலின் மிக முக்கியப் பிரச்சினைகளில் ஒன்று. மானிட இயல் என்பது வயது, பால், பூகோளம் ஆகிய வகைகளிலும் பிற வகைகளிலும் மனித இயல்பின் வரலாற்றை ஆராயும் விஞ்ஞானம். இனங்களோ, எதார்த்தத்தில், தற்கால மனிதனது உடல் மாதிரியின் வரலாற்றுப் போக்கில் உருவான பூகோள (பிரதேச) வகைகளே.
தற்கால மக்கள் இனங்கள் அனைத்தினுடையவும் நெடுந் தொன்மைக்கால மூதாதையரான ஆதி மனிதர்களின் இயற்கை, பூகோள வாழ்க்கை நிலைமைகளுக்கும் இனங்களின் தோற்றத்துக்கும் உள்ள தொடர்பு, வரலாற்று வளர்ச்சிப் போக்கில் இன வேறுபாடுகள் படிப்படியாகத் தேய்ந்து மறைந்துவிடுவது, இனக் கொள்கை முற்றிலும் ஆதாரம் அற்றது, விஞ்ஞானத்துக்கு முரணானது என்பது, நாட்டினங்கள் வெவ்வேறு வகை மனித இனங்கள் அடங்கியவையாக இருப்பது ஆகிய விஷயங்கள் பற்றிய பொருள் பொதிந்த கருத்துரைகளை மார்க்ஸீய-லெனினீய சித்தாந்த முதல்வர்களின் நூல்களில் பார்க்கக் காணலாம்.
காலனி ஆட்சி முறை முற்றிலும் தகர்ந்து சிதறிக் கொண்டிருக்கும் இந்தக் காலப் பகுதியில், சுயாதீனம் அற்ற, காலனி ஆட்சிக்கு உட்பட்ட மக்களின் தேசீய விடுதலைப் போராட்டம் முன் ஒருபோதும் இல்லாத அளவு ஏற்றம் பெற்றிருக்கும் இந்தக் காலப் பகுதியில், மனித இனங்கள் பற்றிய சரியான கருத்து மிக உடனடியான அரசியல், விஞ்ஞான முக்கியத்துவம் உள்ளது ஆகிவிட்டது.
வர்க்க, நாட்டின, காலனி ஆட்சி வகைப்பட்ட ஒடுக்கு முறைக்கு ஆதாரம் காட்டுவதற்காக ஏகாதிபத்தியக் கொள்கைவாதிகள் பொய்யான "சித்தாந்தம்" ஒன்றைப் பரப்பி வருகிறார்கள். மனித இனங்கள் உடலியல் நோக்கிலும் உளவியல் நோக்கிலும் சமம் அற்றவை, "உயர்ந்தவையும்" "தாழ்ந்தவையும்", சுதந்திர சமூக - பொருளாதார, பண்பாட்டு வளர்ச்சி பெற வல்லமை உள்ளவையும் இல்லாதவையும் அவற்றிடையே இருக்கின்றன என்பதே இந்தப் போலிச் சித்தாந்தம்.
இனக் கொள்கை பிற்போக்குள்ள நாட்டுவெறியுடனும் இனவெறியுடனும் மிக நெருக்கமாகப் பின்னிப் பிணைந்திருக்கிறது. நாட்டுவெறி காரணமாக விளையும் காழ்ப்புக்களும் கடந்தகால நாட்டின முரண்பாடுகளின் மீதமிச்சங்களும் சமுதாய முன்னேற்றத்துக்கு எதிர்ப்பு மிக நீடித்ததாகவும் விடாப்பிடியாகவும் தீவிரமாகவும் சமயோசித சாமர்த்தியம் உள்ளதாகவும் இருக்கும் களமாக விளங்கும் என்று சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் 22வது காங்கிரசில் ஏற்கப்பட்ட கட்சிச் செயல் திட்டத்தில் சிறப்பாக வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
இனக் கொள்கைவாதிகளின் மனித வெறுப்பு நிறைந்த புனைந்துரைகள் எதார்த்தத்துக்கும் முற்போக்குள்ள பொருள்முதல்வாத மானிட இயல் விவரங்களுக்கும் வெட்கக் கேடான முறையில் முரண்படுகின்றன.
எனவே, சோவியத் மானிட இயல் அறிஞர் மிஹயீல் நெஸ்தூர்ஹ் எழுதியுள்ள மனித இனங்கள் பற்றிய சுலப விஞ்ஞான நூல் மிகவும் பயனுள்ளது என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.
இந்த நூல் சோவியத் மானிட இயலின் ஆராய்ச்சி முறை, மெய் விவரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் வெளிநாட்டு மானிட இயல் விவரங்களைக் கருத்தில் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது. மனித இனங்கள் உருவானதை மனிதனது தோற்றத்துடன் உரிய முறையில் இணைத்து, இந்தப் பிரச்சினைகளின் தற்கால நிலையை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார் ஆசிரியர்.
மனிதர்களின் மிக நெருக்கமான மூதாதைகள் உள்ளிட்ட புதைபடிவ மனிதக் குரங்குகள், பித்திக்காந்தி ரோப்பஸ், சீனாந்திரோப்பஸ் போன்ற மிகத் தொன் மைக்கால மனித விலங்குகள், பண்டை மனிதர்களான நியாண்டெர்தல்கள், அவர்களுடைய சந்ததிகள்-தற்கால வகை மனிதர்களின் புதைபடிவங்கள்-ஆகியவை பற்றிய மிகப் புதிய மெய் விவரங்கள் புத்தகத்தில் தரப்பட்டுள்ளன.
இதன் பிறகு ஆசிரியர், இனங்கள் உருவானதற்கு உரிய காரணிகளையும், புதைபடிவ மனிதர்களிடையே இயற்கைத் தேர்வு ஆற்றிய பங்கையும், பூகோள ஒதுக்க நிலை, கலப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் ஆராய்கிறார். பெரிய மனித இனங்கள் உருவான காலம், இடம், அவை குடி பெயர்ந்த வழிகள் ஆகியவற்றை விவரிக்கிறார். இனக்குழுக்கள், மக்கள் இனங்கள், நாட்டினங்கள் ஆகியவற்றுடன் மனித இனங்களின் பரஸ்பரத் தொடர்பு பற்றிய பிரச்சினையைப் பரிசீலிக்கிறார்.
மனிதனின் வளர்ச்சிப் போக்கில் உயிரியல் விதிகளின் பாதிப்பு குறைந்து தன்மையில் புதியவையான சமூக விதிகளின் பாதிப்பு அதிகரித்ததை ஆசிரியருடன் வாசகர்களும் படிப்படியாகக் கண்டு அறிகிறார்கள்.
மிஹயீல் நெஸ்தூர்ஹ் தமது நூலில் இயல்பாகவே மானிட இயல் விவரங்கள் மீது முதன்மையாகக் கவனம் செலுத்துகிறார். ஆயினும், "மனிதனும் அவனுடைய இனமும் உரு அமைப்பு இயலிலும் உடலியலிலும் இருந்து வரலாற்றுக்குப் பரிணமிப்பதே" மானிட இயல் என்ற ஃபிரீட்ரிஹ் எங்கெல்ஸின் பிரபல சூத்திரத்துக்கு முற்றிலும் ஏற்ப ஆசிரியர் ஒப்பு உடலமைப்பு இயல், உடலியல், புதைபடிவ இயல் ஆகிய இயற்கை விஞ்ஞானங்களின் விவரங்களை மட்டுமே இன்றி, தொல்பொருள் இயல், மானிட வகை வருணனை இயல், உளவியல், மொழி இயல் முதலான சமூக விஞ்ஞானங்களின் விவரங்களையும் விரிவாகக் கையாள்கிறார்.
தம் கருத்துக்களை விளக்குகையில், இனக் கொள்கைக் கருத்துக்களை உரிய சந்தர்ப்பங்களில் கண்டனம் செய்யவும் ஆசிரியர் தவறவில்லை. இனக் கொள்கையைக் கண்டிப்பதற்காகவே தனிப்பட எழுதப்பட்ட இறுதி அத்தியாயத்தில், "இனமும் மொழியும்", "இனமும் உளப்பாங்கும்" என்பன போன்ற முக்கியமான விஞ்ஞானப் பிரச்சினைகளில் அவர் கவனம் செலுத்துகிறார். மனித குலத்தின் இன, மொழிக் குழுக்களுக்கு இடையே கட்டாயமான தொடர்பு நிலவாமை, தற்காலத்து எல்லா இனங்களதும் மக்களதும் உளப்பாங்கில் ஒற்றுமை, அவர்களிடையே பொதுவான சிந்தனை விதிகள் நிலவுதல் ஆகியவை நம்பிக்கை ஊட்டும் விதத்தில் காட்டப்பட்டிருக்கின்றன. பல நாட்டினங்கள் கொண்ட சோவியத் யூனியனில் சோஷலிஸமும் கம்யூனிஸமும் சோஷலிஸ முகாமைச் சேர்ந்த பிற நாடுகளில் சோஷலிஸமும் நிறுவுவதில் பெறப்பட்டுள்ள பெருத்த வெற்றிகள் மனித குலம் "உயர்ந்த" இனங்களாகவும் "தாழ்ந்த" இனங்களாகவும் பிரிக்கப்பட்டிருக்கிறது என்ற பிற்போக்கான கட்டுக் கதையை முற்றிலும் பொய்ப்படுத்திவிட்டன என்பது இங்கேயே சரியாக வலியுறுத்தப்பட்டுள்ளது. காலனி ஆட்சி நுகத்தைத் தூக்கி எறிந்துவிட்ட இளம் அரசுகளின் பொருளாதார, அரசியல், பண்பாட்டு நிர்மாண வெற்றிகளின் காரணமாகவும் விஞ்ஞானக் கேடான இனக்கொள்கைக் கருத்துக்கள் தகர்ந்து விட்டன.
முன்னாள் காலனிகள், அரைக் காலனிகளின் மக்களது விடுதலைப் போராட்டம் தற்போதையக் காலப் பகுதியில் முக்கியமான தனிச் சிறப்பு பெற்றுள்ளது. "முக்கியமானது என்னவென்றால், பல நாடுகளில் தேசிய விடுதலைப் போராட்டம் நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ வகைப்பட்ட சுரண்டுவோர் உறவுகளுக்கு எதிரான போராட்டமாக நடைமுறையில் வளரத் தொடங்கி இருப்பதே" என்று சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது காங்கிரசில் சுட்டிக் காட்டினார், கட்சி மத்தியக் கமிட்டிப் பொதுச் செயலாளர் லெ. இ. பிரேழ்னிவ்.1
எல்லா மக்களும், அவர்கள் எந்த இனத்தவராயினும் முற்போக்குப் பண்பாட்டையும் பொருளாதாரத்தையும் வளர்க்கத் திறன் படைத்தவர்களே, தங்கள் விதியைத் தாமே நிர்ணயிக்க உரிமை உள்ளவர்களே.
1971, ஜூன் 1, மாஸ்கோ
மிக்ளூஹா-மக்ளாய் பரிசு பெற்ற வரலாற்று இயல் டாக்டர், பேராசிரியர் என். செபக்ஸாரவ்
=================================================
தோற்றுவாய்
மொத்தத்தில் மானிட இயலின் பிரச்சினைகளையும், சிறப்பாக மனித இனங்களையும் அவற்றின் வளர்ச்சியையும் குறித்த பிரச்சினையையும் தெளிவுபடுத்திக் கொள்வதற்கு முக்கியமான வழிகாட்டும் கருத்துக்கள் முதன்மையாக மார்க்ஸீய-லெனினீய சிந்தாந்த முதல்வர்களின் நூல்களில் நமக்குக் கிடைக்கின்றன.
உதாரணமாக, சுற்றியுள்ள இயற்கையுடன் உறவை நிர்ணயிக்கும் குறித்த உடல் அமைப்பு பெற்ற உயிருள்ள மனிதர்கள் நிலவுவது மனிதகுல வரலாற்றுக்கு முதன்மையான முன் நிபந்தனை என்று கார்ல் மார்க்ஸும் ஃபிரீட்ரிஹ் எங்கெல்ஸும் ஜெர்மன் கொள்கைவாதம் என்னும் நூலில் வலியுறுத்துகிறார்கள்.
இயற்கை இயல் சித்தாந்தத்தின் அனேக மூலப் பிரச்சினைகளை ஃபிரீட்ரிஹ் எங்கெல்ஸ் ஆராய்ந்தார். தம் காலத்தில் இயற்கை
விஞ்ஞானங்கள் பெற்றிருந்த மிக முக்கியச் சாதனைகளை இயக்க இயல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்திலிருந்து பொதுமைப்படுத்தி, இயற்கை விஞ்ஞானங்களுக்குப் பொருந்துமாறு மார்க்ஸீயத்தின் தத்துவ அடிப்படைகளை விரிவுபடுத்தினார். மானிட இயல் என்பது 'மனிதனும் அவனுடைய இனமும் உரு அமைப்பு இயலிலும் உடலியலிலும் இருந்து வரலாற்றுக்குப் பரிணமிக்கும் இடைப் பகுதியைச் சேர்ந்தது" என்று எழுதினார் எங்கெல்ஸ்.
மனிதன் பற்றிய விஞ்ஞானத்தின் தனிப் பிரிவான இன ஆராய்ச்சி இயல் இனங்களை ஆராய்கிறது. இனங்களின் தன்மையைச் சித்திரிப்பது, அவற்றை வகைப்படுத்துவது, அவற்றின் வளர்ச்சி நிகழ்முறையை விளக்குவது, உயிரியல் காரணிகளும் சமூக -பொருளாதாரக் காரணிகளும் இந்த நிகழ்முறையில் ஆற்றும் பங்கை மதிப்பிடுவது என்ற சிக்கலான கடமை இன ஆராய்ச்சி இயலுக்கு எதிர் நிற்கிறது.
இனங்கள் என்பவை, சிக்கலான நீண்டகாலப் பரிணாமப் போக்கில் மனிதகுலத்தில் உண்டான உயிரியல் உட்பிரிவுகள் என்ற கருதுகோள் சோவியத் மானிட இயலின் அடிப்படையாக விளங்குகிறது. உடலமைப்பு இயலையும் உடலியலையும் முளைக்கரு இயலையும் புதை படிவ இயலையும் முதன்மையாக ஆதாரமாகக் கொண்டே விஞ்ஞானிகள் இனங்களை ஆராய்கிறார்கள். ஆனால் மானிட வகை வருணனை இயலையும் தொல்பொருள் இயலையும் வரலாற்றையும் மொழி இயலையும் கருத்தில் கொள்வது மானிட இயல் அறிஞனுக்கு இவ்வளவே முக்கியமானது.
"இனம்" என்ற சொல்லையும் இனக் குழுக்கள், மக்கள் இனங்கள், நாட்டினங்கள் போன்ற சமூகக் குழுக்களுக்கும் அதற்கும் உள்ள தொடர்பையும் புரிந்து கொள்வதற்கு நாட்டினப் பிரச்சினை குறித்து மார்க்ஸீயவாதிகள் எழுதியுள்ள நூல்கள் பெரிதும் உதவுகின்றன.
மானிட இயல் விவரங்களின்படி மனித இனங்கள் பற்றிய கருதுகோளை வரையறை செய்து பகுத்து ஆய்வதே நமது நூலின் நோக்கம்.
பெரும்பாலான சோவியத் மானிட இயல் அறிஞர்கள் மூன்று பெரிய மனிதகுலத்தை இனங்களாகப் பிரிக்கிறார்கள். அவையாவன மங்கோலிய வகை (மஞ்சள்), இனம், ஐரோப்பிய வகை (வெள்ளை) இனம், நீக்ரோ- ஆஸ்திரேலிய வகை (கறுப்பு) இனம். ("மஞ்சள்", "வெள்ளை", "கறுப்பு" என்ற சொற்கள் ழோர்ழ் குவியே [Cuvier) (1800) கையாண்டவை. நவீன மானிட இயலார் இவற்றை வழக்கொழிந்தவையாகக் கருதுகிறார்கள். - இதுவும் பிற அடிக்குறிப்புக்களும் மீர் பதிப்பகத்தாருடையவை.). பெரிய இனங்கள் உடல் தன்மைகளில் முற்றிலும் ஒரு வகையானவை அல்ல. அவற்றைக் கிளைகளாகவும் சிறு இனங்களாகவும் மாதிரிகளாகவும் பிரிக்கலாம். இனங்களுக்கு இடையே பரிணமிப்புக் குழுக்கள் நிலவுகின்றன. எனவே தற்கால மனிதகுலம் முழுமையாக ஒரே உயிரியல் வடிவாகும் பற்பல இனக் குழுக்களின் தனிவகைப் பின்னல் என்று கருதலாம். ஒரு மக்கள் இனத்தில் பல்வேறு மனித இனங்களின் பிரதிநிதிகள் காணப்படுவதும் மாறாக, ஒரே மனித இனம் பல்வேறு மக்கள் இனங்களில் பரவி இருக்க முடிவதும் இந்தக் காரணத்தாலேயே. மனித குலத்தின் மானிட வகை வருணனை இயல் பிரிவு வரைகளும் மானிட இயல் பிரிவு வரைகளும் ஒருங்கு சேர்வதில்லை.
இனங்களும் இன வேறுபாடுகளும் நிலையானவையோ, மாறாதவையோ, மனிதனுக்கு என்றென்றும் இயல்பானவையோ அல்ல. சமூக - பொருளாதார, இயற்கைக் காரணிகளின் பாதிப்பினால் மனித உடலிலும் உள்ளத்திலும் இடையறாது மாறுதல்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என்ற தங்கள் பொதுக் கருத்துக்கு இணங்க மார்க்ஸும் எங்கெல்ஸும் பின்வருமாறு கூறினார்கள்: "இன வேறுபாடுகள் முதலியன போன்ற... இயற்கையாகத் தோன்றும் தனிப்பட்ட மக்கள் குழுக்களுக்கு உரிய வகை வேறுபாடுகள்கூட, வரலாற்று வளர்ச்சிப் போக்கில் நீக்கப்பட முடியும், நீக்கப்பட வேண்டும்."4 இந்தத் திசையில் சிறப்பாக வெகுவான முன்னேற்றம் சோவியத் யூனியனில் காணப்படுகிறது. ஏனெனில் மனித இன அடையாளங்களின் அடிப்படையில் ஜார் காலத்தில் விதிக்கப்பட்டிருந்த எல்லா வகைச் செயற்கைத் தடைகளும் இங்கே நீக்கப்பட்டுவிட்டன.
இனக் கொள்கை விஞ்ஞான நோக்கில் ஆதாரம் அற்றது, பிற்போக்கான வர்க்கத் தன்மை கொண்டது என்பதை அம்பலப்படுத்துவது நமது நூலின் மிக முக்கியமான கடமை என்று நாம் எண்ணுகிறோம்.
முதலாளித்துவ நாடுகளின் பிற்போக்கு விஞ்ஞானிகளிடையே இனச் சித்தாந்தம் எனப்படுவது விரிவாகப் பரவி இருக்கிறது. தங்கள் மக்களின் எல்லைகளுக்குள் ஆளும் வர்க்கத்தினரை "உயர்ந்த" இனமாகவும் உழைப்பாளிகளைத் "தாழ்ந்த" இனமாகவும் இனக்கொள்கைவாதிகள் மதிக்கிறார்கள். தங்கள் அரசின் எல்லைகளுக்கு வெளியே உள்ள மக்களை இனக்கொள்கைவாதிகள் "தாழ்ந்த" இனங்களில் சேர்க்கிறார்கள். அந்தச் சந்தர்ப்பத்தில் தங்கள் மக்களை அவர்கள் "உயர்ந்த" இனத்தவராக மதிக்கிறார்கள். இவ்வாறு செய்கையில் அவர்கள் மனிதர்களின் வர்க்க வகைப்பட்டவையும் சமூக - பொருளாதார வகைப்பட்டவையுமான குழுப்பிரிவுகளை உயிரியல் குழுப்பிரிவுகளுடன் தவறாகக் கலந்து குழப்புகிறார்கள்.
இன அடையாளங்களின்படி பெரும்பாலும் மங்கோலிய வகை அல்லது நீக்ரோ-ஆஸ்திரேலிய வகை இனங்களைச் சேர்ந்தவர்களான காலனி மக்களை அடிமைப்படுத்துவதையும் சுரண்டுவதையும் "வெள்ளை" ஏகாதிபத்தியவாதிகள் இனக்கொள்கைச் சித்தாந்தங்களாலேயே சரி என்று காட்ட முயன்றார்கள், இன்னமும் முயல்கிறார்கள்.
அமெரிக்க ஐக்கிய நாட்டு ஏகாதிபத்தியவாதிகள் பல ஆண்டுகளாக வியத்நாமிய மக்களுக்கு எதிராக மனிதத் தன்மையற்ற போர் நடத்தினார்கள். ஆசியாவில் சோஷலிஸத்தின் ஒரு முன் அரணான வியத்நாமிய ஜனநாயகக் குடியரசை நசுக்கவும் வியத்நாமிய மக்களின் தேசீய விடுதலை இயக்கத்தை ஒடுக்கவும் அவர்கள் இவ்வாறு முயன்றார்கள். தங்கள் இனச் சித்தாந்தத்துக்குப் பெயர் போன அமெரிக்க ஐக்கிய நாட்டு ஏகாதிபத்தியவாதிகள் வியத்நாமில் இன அழிப்புக் கொள்கையை - உலகப் பொது ஜனப் பிரதிநிதிகளால் கடுமையாகக் கண்டிக்கப்பட்டதும் சர்வதேச ஒப்பந்தங்களின் மூலம் தடை செய்யப்பட்டதுமான இன அழிப்புக் கொள்கையைக் கடைப்பிடித்தார்கள்.
வியத்நாமில் போர் நிறுத்தம் செய்யப்பட்டதும், சமாதானம் மீண்டும் நிலைநாட்டப்பட்டதும் ஆக்கிரமிப்புவாத ஏகாதிபத்தியச் சக்திகள் மீது வீர வியத்நாமிய மக்கள் பெற்ற சிறந்த வெற்றி ஆகும். உலகம் எங்கணும் உள்ள சமாதானம் விரும்பும் முற்போக்குச் சக்திகளின் போராட்ட ஒருமைப்பாடு பெற்ற வெற்றி ஆகும்.
சோஷலிஸ நட்பு மண்டலத்தின் உண்மை மனிதாபிமானம் நிறைந்த கொள்கைவாதம் இனச் "சித்தாந்தங்களுக்கு" நேர் எதிரானது. சோவியத் யூனியனும் பிற சோஷலிஸ நாடுகளும் இனக் கொள்கையையும் எல்லா வித நாட்டின ஒடுக்கு முறையையும் எதிர்த்துச் சமரசம் அற்ற போராட்டம் நடத்தி வருகின்றன. எல்லா மக்கள் இனங்களும் முழுமையான சமத்துவம் பெற வேண்டும் என்பதற்காக அவை போராடி வருகின்றன. "இனக் கொள்கையும் இன ஒதுக்கக் கொள்கையும் எல்லோரது கண்டனத்துக்கும் பகிஷ்காரத்துக்கும் உரியவை" என்று சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது காங்கிரசில் கூறினார் லெ. இ. பிரேழ்னிவ்.
பிற மக்களினங்களுக்கும் இனங்களுக்கும் உள்ள உரிமைகளை மதிப்பது ருஷ்ய மக்களிடையே தொன்றுதொட்டு நிலவி வரும் பழக்கம். சோவியத் மானிட இயலார் தங்கள் நூல்களில் இந்த வழக்கத்தையே பிரதிபலிக்கிறார்கள். எல்லா இனங்களும் மக்கள் இனங்களும் சம உரிமை கொண்டவை என்ற கருத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் மாபெரும் ருஷ்ய விஞ்ஞானி மிஹயீல் வஸீலியெவிச்லமனோஸவால் வெளியிடப்பட்டது. உதாரணமாக, ஸ்லாவியர்களும் சுத் எனப்பட்ட ஃபின் இனத்தவரும் சேர்ந்து ருஷ்ய மக்கள் இனம் உருவானது குறித்து அவர் பின்வருமாறு எழுதினார்:
"ருஷ்யர்கள் அமைவதில் வெவ்வேறு அளவுகளில் பங்கு ஆற்றிய இந்த மக்கள் இனங்களைப் பற்றி முடிந்த வரையில் முழுமையாகத் தெரிந்து கொள்வது அவசியம். ஏனென்றால் அவற்றின் தொன்மையையும் அவை ஆற்றிய செயல்கள் நம் மூதாதையருக்கும் நமக்கும் எவ்வளவு மிகுந்த தொடர்பு உள்ளவை என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். ருஷ்யாவை அமைத்துள்ள பல்வேறு இனக் குழுக்களைப் பற்றிச் சிந்தனை செய்கையில் எந்த இனமும் ருஷ்யாவை இழிவு செய்தது என்று எண்ண ஒருவராலும் முடியாது. ஏனென்றால் எந்த மக்களும் தொடக்கத்தில் தாங்கள் எவ்விதக் கலப்பும் இன்றித் தன்னந்தனி இனத்தவராக இருந்ததாக உறுதி கூற இயலாது."
எல்லா இனங்களும் சமமானவை, சம உரிமை உள்ளவை என்ற கோட்பாடு 19ம் நூற்றாண்டில் பெரிய ருஷ்ய மானிட இயல் அறிஞர் நிக்கலாய் நிக்கலாயெவிச் மிக்ளூஹா-மக்ளாயாலும் வெகு தீவிரமாக ஆதரிக்கப்பட்டது. "தாழ்ந்த" இனங்களும் "உயர்ந்த" இனங்களும் உண்டு என்ற சித்தாந்தத்தை அவர் தக்க ஆதாரங்களுடன் எதிர்த்தார். ருஷ்யப் புரட்சிகர ஜனநாயகவாதிகளும் இம்மாதிரிக் கருத்தோட்டத்தையே கடைப்பிடித்தார்கள். இங்கு முதன்மையாகக் குறிக்கப்பட வேண்டியவர்கள் அலெக்ஸாந்தர் நிக்கலாயெவிச் ரதீஷெவும், நிக்கலாய் னிஷேவ்ஸ்கியும், கவ்ரீலவிச் செர் ஆவர். மானிட இயல் குறித்த பிரச்சினைகளை இவர்கள் தங்கள் நூல்களில் பகுத்து ஆராய்ந்தார்கள்.
வி. இ. லெனினின் நூல்களில் ஆழ்ந்த காரணங்கள் காட்டி விளக்கப்பட்டுள்ள இனங்களின் சம உரிமைக் கோட்பாடு சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியும் சோவியத் அரசாங்கமும் கடைப்பிடிக்கும் நாட்டினக் கொள்கையில் வெளியீடு பெற்றுள்ளது, சோவியத் யூனியன் அரசியல் சட்டத்தில் நிலைப்படுத்தப்பட்டிருக்கிறது.
- மி.நெஸ்தூர்ஹ்
நூலினை பெற தொடர்பு கொள்ளவும்:
95437 38415
சென்னை புத்தக காட்சியிலும் (அரங்கு எண் 535 - புது உலகம்) கிடைக்கிறது.