நூல் அறிமுகம்: இயக்கவியல் பொருள்முதல்வாதம்
மாரிசு கார்ன்போர்த்
கட்சித் தத்துவம்
ஒவ்வொரு தத்துவமும் ஒரு வர்க்கக் கண்ணோட்டத்தை வெளிப்படுத்துகிறது. சுரண்டும் வர்க்கங்கள் தமது வர்க்க நிலைபாட்டைப் பல்வேறு பொய்மைகள், ஏமாற்றுதல்கள் ஆகியவை மூலம் தூக்கி நிறுத்துவதிலும் நியாயப்படுத்துவதிலும் எப்போதும் விருப்பம் கொண்டு அலைகின்றன; ஆனால் அதற்கு மாறாகத் தொழிலாளர் வர்க்கம், விஷயங்களை அவற்றின் இயல்பிலேயே தெரிந்து கொள்ளவும் உணர்ந்து கொள்ளவும் விருப்பம் கொண்டுள்ளது. தொழிலாளி வர்க்கத்தின் நிலைபாடு, நோக்கங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் எழுந்த இத்தகைய விருப்பம், எவ்வித ஏமாற்றுதலும் பொய்மையும் இன்றி உள்ளது.
கட்சித் தத்துவமும் வர்க்கத் தத்துவமும்
இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை ஸ்டாலின் பின்வருமாறு விளக்கினார்: "இது மார்க்சிய - லெனினியக் கட்சியின் உலகக் கண்ணோட்டமாகும்"
(ஸ்டாலின்: இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்)
இந்த விளக்கம், பல அரசியல்வாதிகட்கும் தத்துவவாதிகட்கும் ஆச்சரியமாகத் தோற்றமளிக்கும். ஆனால், இந்த விளக்கத்தின் பின்னால் உறைந்து கிடக்கும் சிந்தனையை நாம் உணர்ந்து கொள்ளாவிட்டால், இயக்கவியலின் தொடக்கப் பாடத்தைக் கூட நம்மால் உணர்ந்து கொள்ள இயலாது.
முதன் முதலில் நாம் ஒரு கேள்வியைக் கேட்டுக் கொள்வோம். ஒரு கட்சி என்பது ஒரு வர்க்கத்தின் அரசியல் பிரதிநிதியாக எப்போதும் உள்ளது. இப்படி இருப்பதனால், கட்சித் தத்துவம் அல்லது வர்க்கத் தத்துவம் ஆகியவற்றின் வரையறையில் வெளிப்படும் கருத்தின் பின்னால் உள்ள தத்துவக் கருத்து என்ன என்பதே அக்கேள்வியாகும்.
உலக இயல்பு குறித்தும் அதில் மனித சமூகத்தின் பங்கையும் தகுதியையும் குறித்தும் உள்ள மிகப் பொதுவான கண்ணோட்டமே, தத்துவம் என வழக்கமாகச் சொல்லப்படும். அதாவது நமது உலகக் கண்ணோட்டமே, நமது தத்துவமாகும்.
இதை நாம் உணர்ந்துகொண்டால், அனைவரும் ஏதோ ஒரு தத்துவத்தை கொண்டுள்ளோம் என்பது தெளிவாகும். அத்தத்துவம் குறித்து விவாதிக்கின்ற அளவுக்கு நாம் அதைக் கற்றுக் கொள்ளவில்லை எனினும், ஏதோ ஒரு தத்துவத்தை நாம் அனைவரும் கொண்டுள்ளோம். இத்தகைய தத்துவக் கருத்துகள் நமக்காகவே உருவாக்கப்பட்டன என்பதை நாம் சிந்திக்காவிடினும் அத்தகைய கருத்துக்களை நாமே உருவாக்கவில்லை எனினும், நாம் அனைவருமே தத்துவக் கருத்துகளால் செல்வாக்குச் செலுத்தப்படுகின்றோம்.
எடுத்துக்காட்டாக. இந்த உலகமானது துன்பப் பெருங்காடாகவே உள்ளதென்றும், இந்த உலகத்தில் நாம் வாழ்வது அடுத்த உலகத்தில் நல்ல வாழ்க்கையையும் நல்ல உலகத்தையும் பெறுவதற்கான முயற்சிகளே என்றும் சிலர் நினைக்கலாம். இதன்படி, இவ்வுலகத்தில் எத்தகைய துன்பம் நேரிட்டாலும் அதைப் பொறுமையோடு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அதை எதிர்த்துப் போரிடக் கூடாதென்றும், ஆனால் நம்முடன் வாழும் பல உயிரினங்களுக்கு எல்லாவித நன்மைகளையும் செய்ய முயலவேண்டும் என்றும் இவர்கள் நம்புகின்றனர். இது ஒரு வகையான தத்துவம்; ஒரு வகையான உலகக் கண்ணோட்டம் ஆகும்.
வேறு சிலர், இவ்வுலகமானது வளமை மிகுந்த இடமென்றும் ஒவ்வொருவரும் தம் நலன்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும் நம்புகின்றனர். இது இன்னொரு வகையான தத்துவம் ஆகும்.
ஆனால் நமது தத்துவம் என்பது நமது உலகக் கண்ணோட்டம் என்பதால், நமது உலகக் கண்ணோட்டத்தை முறையாகவும் விளக்கமாகவும் செப்பனிடும் பணி தமக்கு உள்ளது. அதை நன்கு உருவாக்கப்பட்ட, சீரமைக்கப்பட்ட, ஒத்திசைவான கொள்கையாகவும் செப்பனிட வேண்டியுள்ளது. தெளிவற்ற முறையில் உள்ளதும் புகழ் பெற்றதுமான நம்பிக்கைகளையும் ஈடுபாடுகளையும், ஏறத்தாழ அமைப்பு ரீதியான கோட்பாடுகளாகச் செப்பனிடும் பணி உள்ளது. இதைத்தான் தத்துவவாதிகள் செய்தனர்.
இதற்கு இடையில் தத்துவவாதிகள் தம் கொள்கைகளை உருவாக்கும் போது, அவர்கள் இதை மிகவும் சிக்கலான ஒன்றாகவும், மிகவும் நுட்பமாகவும், உணர்வதற்கு மிகவும் கடினமானதாகவும் படைத்துவிட்டனர். ஆனால் தத்துவவாதியின் மூலப் படைப்புகளை மிகவும் வெகு சிலர் மட்டுமே படிப்பதற்கும் உள் உணர்ந்து கொள்வதற்கும் இயலும் எனினும் இத்தகைய படைப்புகள் மிகவும் பரந்துபட்ட செல்வாக்கைக் கொண்டுள்ளன. உண்மையில் பார்க்கப்போனால் மக்களிடத்தில் உள்ள நம்பிக்கைகளை ஒழுங்குபடுத்தியும், அவற்றுக்கு வலுத்தன்மை கொடுத்தும் உள்ளனர்; மிகவும் பரந்துபட்ட சாதாரண மக்களிடத்தில் அத்தகைய நம்பிக்கைகளைத் திணிப்பதற்கு உதவியாக உள்ளனர். எனவே, தத்துவவாதிகளின் படைப்புகளை ஒருபொழுதும் படித்திராத போதினும்கூட, அனைவரும் ஏதாவது ஒரு விதத்தில் அத்தத்துவவாதிகளினால் செல்வாக்குச் செலுத்தப்படுகின்றனர்.
இதுவே உண்மையானால், தத்துவவாதிகளின் படைப்புகளையும், கருத்து ஒழுங்கமைப்புகளையும், அவர்களது சுய அறிவினின்று முழுமையாகப் பெற்றவையாகவும், தனிப்பட்ட தத்துவவாதிகளின் சிந்தனையினின்று மட்டும் வெளிப்பட்டவையாகவும் நாம் கருதவியலாது. ஆனால், கருத்துகளைச் செறிவாக்குதல், அவற்றை நுணுக்கமாக ஆய்ந்து எழுதும் முறைகளில் உள்ள தனித்தன்மைகள் ஆகியவை ஒரு குறிப்பிட்ட தத்துவவாதியின் பணிகளாகவே உள்ளன. ஆனால் பரந்துபட்ட பொதுவான அம்சத்தில் காணும்போது, அக்காலத்திய சமூக நடவடிக்கைகளையும் சமூக உறவுகளையும் பிரதிபலிக்கின்ற கருத்துகளுக்கான சமூக அடித்தளத்தைக் கொண்டே அத்தகைய தத்துவங்கள் உள்ளன எனலாம்; எனவே, தத்துவவாதிகளின் மூளையிலிருந்து மட்டுமே திடீரெனத் தோன்றிய கருத்துகளாக அவை இல்லை.
இந்தத் தெளிவிலிருந்து, நாம் மேலே தொடர்வோம்.
- மாரிசு கார்ன்போர்த்
நூலினை பெற தொடர்பு கொள்ளவும்:
95437 38415
சென்னை புத்தக காட்சியிலும் (அரங்கு எண் 535 - புது உலகம்) கிடைக்கிறது.