லெனினியத்தின் அடிப்படை அம்சங்கள்
ஸ்டாலின்
லெனினியத்தின் அடிப்படையான அம்சங்கள் பற்றிய விஷயம் மிகப் பெரியது. அது முழுவதையும் விளக்க ஒரு முழுநூல் தேவைப்படும். உண்மையில், பல நூல்கள் தேவைப்படும். எனவே இயல்பாக, லெனினியத்தை முழுமையாக வெளிக் கொணர்வதாக எனது உரைகள் இருக்காது: இந்த சொற்பொழிவுகள் மூலம் எதையாவது சிறப்பாக சாதிக்க முடியும் என்றால், அது லெனினியத்தின் அடிப்படை அம்சங்களை சுருக்கமாக பொழிப்புரை செய்வது தவிர வேறு ஒன்றுமில்லை. இருந்தபோதிலும், இந்த பொழிப்புரை பயன் தருமென்றே நான் கருதுகிறேன். லெனினியத்தை வெற்றிகரமாகப் பயில்வதற்குத் தேவைப்படுகிற முறையில் எங்கிருந்து ஆரம்பிப்பது என்பதைச் சுட்டிக்காட்டும் குறிப்புகளை நிர்ணயிப்பதற்கு இந்த பொழிப்புரை பயன்படும்.
லெனினியத்தின் அடிப்படை அம்சங்களை விரிவுரை செய்வது என்றால், லெனினுடைய உலகக் கண்ணோட்டத்துக்கு ஆதாரமாக இருந்த தத்துவத்தை விளக்குவதென்று அர்த்தமாகாது. ஏனெனில், லெனினுடைய உலகக் கண்ணோட்டமும் லெனினியத்தின் அடிப்படைகளும் ஒரே எல்லைக்குள் இருப்பவையல்ல. லெனின் ஒரு மார்க்சியர்: எனவே அவரது உலகக் கண்ணோட்டத்துக்கு ஆதாரம் மார்க்சியம் ஆகும்.
அதனால் லெனினியத்தை விளக்குவதற்காக மார்க்கியத்தை விளக்குவதிலிருந்து ஆரம்பித்து வைக்கவேண்டும் என்று ஆகிவிடாது. லெனினியத்தை விளக்குவது என்றால், மார்க்சியம் என்ற பொதுவான தத்துவ கருவூலத்திற்கு லெனினால் அளிக்கப்பட்ட புதிய, விசேசமான தத்துவச் செல்வத்தை விளக்குவதென்றாகும்; லெனின் பெயரைத் தாங்கி நின்று விளங்கும் விளங்கும் புதிய விசேசமான அம்சங்களை விளக்குவதென்றாகும். இந்தப் பொருளில் மட்டுமே, என் உரைகளில் நான் லெனினியத்தின் அடிப்படையான அம்சங்களைப் பற்றி பேசப் போகிறேன்.
ஆக, லெனினியம் என்றால் என்ன?
சிலர் சொல்கிறார்கள்: ரஷ்யாவில் நிலவிய குறிப்பிட்ட நிலைமைகளையொட்டி நடைமுறைப்படுத்தப்பட்ட மார்க்சியமே லெனினியம் என்று குறிப்பிடுகிறார்கள். இந்த நிர்ணயிப்பில் பகுதியளவு உண்மையிருக்கிறது. எனினும் இது முழு உண்மையையும் சொல்லிவிடவில்லை. ரஷ்ய நிலைமைகளுக்குத் தகுந்தவாறு மார்க்சியத்தை லெனின் பயன்படுத்தினார் என்பது உண்மையே : அதுவும் மிக மிக சிறப்பாகப் பயன்படுத்தினார். ஆனால், ரஷ்ய நிலைமைகளில் கடைபிடிக்கப்பட்ட மார்க்சியமாக மட்டும் லெனினியம் இருந்திருந்தால், அது வெறும் தேசிய அம்சம் பொருந்தியதாக இருக்க வேண்டும்; ரஷ்ய தத்துவமாக மட்டும் இருக்க வேண்டும்; ஆனால் அது அப்படி இல்லை என்பது நமக்குத் தெரியும். அது வெறும் ரஷ்யத் தத்துவம் மட்டுமல்ல. அது சர்வதேசங்களிலும் நிலவக் கூடிய நிலைமைகளுக்கு பொருந்துவதாக இருக்கிறது.
அது சர்வதேசிய வளர்ச்சி முழுமையிலும் வேரூன்றியதாகுமென்பதை நாம் அறிவோம். அதனால்தான் அதை மேற்கண்டவாறு நிர்ணயிப்பு செய்வது பகுதிப் பார்வை என்று நான் கருதுகிறேன்.
1840 லிருந்து 1850 வரையில் மார்க்சியத்தின் பால் காணப்பட்ட புரட்சிகரமான அம்சங்களை திரும்ப உயிர்ப்பித்து இருப்பதே லெனினியம் என்று வேறு சிலர் குறிப்பிடுகிறார்கள். 1850 - க்குப் பிறகு மார்க்சியம் தன் புரட்சிக் கொள்கைகளைக் கைவிட்டு விட்டு, மிதமானதாகவும் புரட்சிகரமான தன்மை அற்றதாகவும் ஆகிவிட்டதற்கு மாற்றாக, லெனினியம் மார்க்சியத்தின் புரட்சிகரக் கூறுகளை உயிர்ப்பித்ததாகக் குறிப்பிடுகிறார்கள். மார்க்சின் போதனைகளை இவ்விதம் மதிகெட்ட ரீதியில் கொச்சையான முறையில் இரண்டு பகுதிகளாக அதாவது, புரட்சிகரமான பகுதி என்றும், மிதமான பகுதி என்றும் பாகுபடுத்துவதை நாம் புறக்கணிக்கிறோம். இருந்த போதிலும் இந்த முற்றிலும் தகாத அதிருப்திகரமான நிர்ணயிப்பு கூட ஒரு துளி உண்மையை வெளியிடுகிறதென்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். என்ன அந்த துளி உண்மை? இரண்டாம் அகிலத்தைச் சேர்ந்த சந்தர்ப்பவாதிகளால் மறைக்கப்பட்ட மார்க்சியதின் புரட்சிகர சாராம்சத்தை லெனின் மீட்டெடுத்தார் என்பதே அந்த துளி உண்மையாகும். இது உண்மையில் துளி அளவிலானதே. முழு உண்மை என்னவெனில், மார்ச்சியத்தை மீட்டெடுத்ததோடு மட்டுமின்றி முதலாளியத்தின் புதிய நிலைகளுக்கும் பாட்டாளி வர்க்கப் போராட்ட நிலைகளுக்கும் ஏற்ற விதத்தில் மார்க்சியத்தை மேலும் வளர்த்து அது ஒரு படி முன்னோக்கிக் கொண்டு சென்றது.
அப்படியானால், கடைசியாக அலசிப் பார்க்கிறபோது லெனினியம் என்றால் என்ன?
ஏகாதிபத்தியமும் பாட்டாளி வர்க்கப் புரட்சியும் நிலவும் காலகட்டத்தின் மார்க்சியமே, லெனினியம். இதைவிட இன்னும் திட்டமாகச் சொல்வதென்றால், பொதுவாக தொழிலாளி வர்க்கப் புரட்சியின் தத்துவமும் போர்த்தந்திரங்களும் லெனினியம்; குறிப்பாக, தொழிலாளி வர்க்க சர்வாதிகாரத்தின் தத்துவமும் போர்த்தந்திரங்களும் லெனினியம் ஆகும். மார்க்சும், ஏங்கல்சும் தங்களுடைய நடைமுறைகளை வகுத்துக் கொண்ட காலம், புரட்சிக்கு முற்பட்ட (பாட்டாளி வர்க்கப் புரட்சியைத்தான் மனதில் வைத்து நான் பேசுகிறேன்) காலமாகும். அந்தக் காலத்தில் நன்கு வளர்ந்து முதிர்ந்த ஏகாதிபத்தியம் இன்னும் ஏற்பட்டிருக்கவில்லை. அந்தக் காலத்தில் தொழிலாளிகள் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு தயாரிப்புகளைத்தான் செய்துகொண்டிருந்த காலம். பாட்டாளி வர்க்கப் புரட்சி தவிர்க்க முடியாதவாறு உடனடியாக ஏற்பட்டே தீரும் என்ற நிலைமை இருந்த காலம் அல்ல. ஆனால், மார்க்சு, ஏங்கெல்சு ஆகியோரின் வழித் தோன்றலான லெனின் தன் நடைமுறைகளை வகுத்துக்கொண்ட காலம், ஏகாதிபத்தியம் வளர்ந்து முதிர்ந்த காலமாகும். தொழிலாளி வர்க்கப் புரட்சி தோன்றிக் கொண்டிருந்த காலமாகும். தொழிலாளி வர்க்கப் புரட்சி ஒரு நாட்டில் வெற்றிக் கொடியை நாட்டி விட்ட காலம் முதலாளிய வர்க்க ஜனநாயகத்தை ஒழித்து விட்டு தொழிலாளிவர்க்க ஜனநாயகத்தின் காலகட்டம் சோவியத்துகளின் கால கட்டம் தோன்றிய காலமே லெனினின் காலமாகும்.
இதனால்தான் லெனினியத்தை மார்க்சியத்தின் வளர்நிலை என்கிறோம்.
லெனினியம் விசேஷமான, போர்க் குணமும் அலாதியான புரட்சிகரமான தன்மையும் கொண்டு இருப்பதாக சாதாரணமாகச் சுட்டிக் காட்டப்படுகிறது; இது முற்றிலும் சரியே. இந்தக் குணாதிசயம் அதனிடம் இருப்பதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. முதலாவதாக, தொழிலாளி வர்க்கப்புரட்சியில் உருவம் பெற்று எழுந்தது லெனினியம். இதனால் அப்புரட்சியின் முத்திரை இதன்மேல் பதியாமலிருக்க முடியாது. இரண்டாவதாக, இரண்டாவது அகிலத்தின் சந்தர்ப்ப வாதத்தை எதிர்த்து நடத்திய பல மோதல்களிலேயே லெனினியம் வளர்ந்து, வலுவடைந்தது. அந்த மோதல்கள், முதலாளித்துவத்தை வெற்றிகரமாக எதிர்ப்பதற்கு பூர்வாங்கமாக, கண்டிப்பாக நடத்தப்பட வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்தவையாக விளங்கின. எதிர்க்க முடியும். அன்றுமட்டு அவற்றில் முதலில் வெற்றியடைந்தாலே, முதலாளித்துவத்தை வெற்றிகரமாக எதிர்க்க முடியும். அன்று மட்டுமல்ல; இன்றைக்கும் இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்தவையாகவே அந்த போராட்டங்கள் இருக்கின்றன. இந்த சந்தர்ப்பத்தில் இதை மறக்கலாகாது. ஒரு பக்கம் மார்ச்சு ஏங்கல்சுக்கும், மறு பக்கம் லெனினுக்கும் மத்தியில் இருந்த இடைக்காலம் இரண்டாவது அகிலத்தின் சந்தர்ப்பவாதம் முழு ஆதிக்கம் செலுத்திய காலமாக இருந்தது. இந்த சந்தர்ப்பவாதத்தை எதிர்த்து ஈவிரக்க மில்லாத போராட்டத்தை நடத்துவது லெனினியத்தின் பிரதான கடமைகளில் ஒன்றாக விளங்கியது.
- ஸ்டாலின்
(லெனினியத்தின் அடிப்படை அம்சங்கள் நூலின் முன்னுரையிலிருந்து - தமிழில்: சென்னை புக் ஹவுஸ்)