எம்மை பற்றி

எம்மை பற்றி

2008ம் ஆண்டு அமெரிக்காவை மையம் கொண்ட பொருளாதார நெருக்கடி, ஐரோப்பிய யூனியனையும் மற்றும் அமெரிக்காவுடன் பொருளாதாரத்தில் கட்டுண்ட பல நாடுகளையும் கடுமையாக பாதித்தது. அன்றிலிருந்து இன்றுவரை மீளமுடியாமல், மீள்வதற்கு வழி தெரியாமல் ஏகாதிபத்தியவாதிகள் விழி பிதுங்கி நிற்கின்றனர். கடும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக உலகம் முழுவதும் பல நாடுகள் மக்கள் நல திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்துவிட்டன. ஆனால் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக என்று கூறி பல பில்லியன் மற்றும் ட்ரில்லியன் டாலர்கள் அந்தந்த நாடுகளின் பலாபலத்திற்கேற்ப கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை (Stimulus Package), மானியங்கள் (Subsidy), வரிச் சலுகைகள் (Tax reduction) ஆளும் வர்க்கங்கள் வாரி கொடுக்கின்றன. அரசு இன்னொரு பக்கம் மக்கள் மீது வரியை கூட்டுதல், மானியங்களை வெட்டுதல், மக்கள் நலனை காக்கும் திட்டங்களை ஒழித்துக்கட்டுதல் அல்லது கைகழுவுதல் என்று ஏகாதிபத்திய மற்றும் உள் நாட்டு கார்பரேட் நிறுவனங்களின் நெருக்கடியின் சுமைகளை மக்கள் மீது சுமத்த முயற்சிக்கின்றன. இதன் விளைவு, உலகின் பல்வேறு நாடுகளில் வரலாறு காணாத போராட்டங்களும், கலகங்களும் தோன்றுகின்றன. இப்படி மக்கள் மீது சுமத்தப்படும் சுமைகளிலிருந்து திமிறி எழும் மக்கள் போராட்டங்களை ஒடுக்க, அரசுகளுக்கு பாசிச கட்டமைப்பு தேவைப்படுகிறது. இந்த பாசிச கட்டமைப்பு கடுமையான சட்டங்களையும், மக்கள் போராட்டங்கள் மீதான ஒடுக்குமுறைகளையும் நிகழ்த்துகிறது. மட்டுமின்றி மக்கள் பிரச்சனைகளை வெளிகொண்டுவரும் ஊடகங்கள் மீதும் தாக்குதல் நடத்தி தனது கோர தாண்டவத்தை கட்டவிழ்த்து விடுகின்றது. இதனால் அரசு கடைபிடிக்கும் இந்த பாசிச போக்குகளை கண்டிக்க பல்வேறு முன்னணி செய்தி ஊடகங்கள் மறுக்கின்றன. இல்லையெனில் அரசின் பிரச்சார பீரங்கிகளாக மாறி அதன் தொங்குசதைகளாக செயல்படுகின்றன. இந்த பாசிச போக்குகளின் ஒரு பகுதியாகவே இந்திய ஆளும் வர்க்கங்கள் இந்திய மற்றும் அந்நிய ஊடகங்களான ட்விட்டர் மற்றும் முகநூல் போன்ற சமூக ஊடகங்களின் குரல் வலைகளையும் நெரிக்கின்றன.

பல்வேறு பத்திரிக்கைகள் இன்று நடுநிலை பத்திரிக்கைள் என்று தங்களை அறிவித்து கொள்கின்றன. எது நடுநிலை? ஒடுக்குபவர்களுக்கும் ஒடுக்கப்படுபவர்களுக்கும், சுரண்டுபவர்களுக்கும் சுரண்டப்படுபவர்களுக்கும், முதலாளித்துவத்துக்கும் உழைக்கும் வர்க்கத்துக்கும் இடையில் நடுநிலை என்று ஒன்று இருக்க முடியுமா? முடியாது. முடியும் என்று சொல்வதே சாராம்சத்தில் ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்வதாகத்தான் அமையும். ஆகவே, ஒடுக்கப்படும் மக்களின் பக்கம் நின்று செய்திகளையும், அரசியல் கருத்துக்களையும் கொண்டு வருவதும், ஆளும் வர்க்கத்தின் மக்கள் விரோத கொள்கைகளை அம்பலப்படுத்துவதும் செந்தளம் வலைதளத்தின் முக்கிய பணியாகவும், இலட்சியமாகவும் இருக்கும். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்து, தொடர்ந்து நமது செய்தி நிறுவனத்தை வளர்க்க வாசகர்கள் முடிந்த அளவுக்கு இதன் செய்திகளை பரப்பியும் உங்களின் மேலான கருத்துக்களையும் நிதியையும் கொடுத்து உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புக்கு

சந்தா செலுத்த

இப்படிக்கு


செந்தளம் செய்தி பிரிவு.