அறிவியல் தொழில்நுட்பத்தின் மூலம் நிகழ்த்தப்படும் உழைப்பு சுரண்டல்

லெனின்

அறிவியல் தொழில்நுட்பத்தின் மூலம் நிகழ்த்தப்படும் உழைப்பு  சுரண்டல்

மற்றெல்லா நாடுகளையும் விட அமெரிக்கா முன்னணி முதலாளித்துவமாக வளர்ந்து நிற்கிறது. தொழில்நுட்பத்தில் மகத்தான முன்னனேற்றமும், அதிவேகமான பொருளாதார வளர்ச்சியும் அமெரிக்கா கண்டுள்ளது. இதன் காரணமாக பழைய முதலாளித்துவ உலகமான ஜரோப்பாவையும் தன் வழியை பின்பற்ற தூண்டுகிறது. அமெரிக்க முதலாளித்துவத்திடமிருந்து ஜனநாயக கட்டமைப்புகளை சுவீகரித்துக்கொள்ள ஐரோப்பிய முதலாளித்துவ நாடுகள் விரும்பவில்லை; அரசியல் சுதந்திரத்தையோ அல்லது குடியரசு பாணியிலான அரசமைப்பையோ இரவலாக பெற விரும்பவில்லை; மாறாக தொழிலாளர்களை நவீன பாணியில் சுரண்டுவதற்கான (டெய்லரின் அறிவியல் பூர்வமான சுரண்டல் நிர்வாக முறையையே - மொ-ர்) வழிமுறைகளையே  இரவலாக பெற விரும்புகின்றது.

அமெரிக்க பொறியியலாளர் ஃப்ரெட்ரிக் டெய்லர் (Frederick Taylor) என்பவரால் உருவாக்கப்பட்ட “இந்த நிர்வாக முறை” பற்றியே இன்று ஐரோப்பாவில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. ரஷ்யாவிலும் கூட இங்கொன்றும் அங்கொன்றுமாக தனி விவாதப் பொருளாக மாறியுள்ளது. புனித பீட்டர்ஸ்பர்க் பகுதியில் அமைந்துள்ள இரயில்வே பொறியியல் கழகத்தின் அரங்கத்தில் இந்த நிர்வாக முறை பற்றி திரு.செம்யோனோவ் என்பவர் சிறிது நாட்களுக்கு முன்பு உரையாற்றியிருந்தார். ஏன் டெய்லர் கூட தனது நிர்வாக முறை என்பது “அறிவியல் பூர்வமானது” என்றே விவரித்துள்ளார். அவரது நூல் பேராவலுடன் ஐரோப்பிய நாடுகளில் மொழிப்பெயர்க்கப்பட்டு, பரவலான விற்பனைக்கும் தயாராகி வருகிறது.

இவர்கள் சொல்லும் “அறிவியல் பூர்வமான நிர்வாக முறை”யின் லட்சணம் என்ன? இதற்கு முன்னதாக ஒரு நாளில் ஒரு தொழிலாளி எவ்வளவு நேரம் வேலை செய்தாரோ அதே வேலை நேரத்திற்குள்ளாக அவரிடமிருந்து மூன்று மடங்கு அதிகமான உழைப்பை பிழிந்து எடுப்பதே இந்த நிர்வாக முறையின் நோக்கமாகும். உடலளவிலும், மனதளவிலும் கொடுக்கிற வேலையை திறம்பட செய்யக்கூடிய ஒரு தொழிலாளியை பணியில் சேர்க்க வேண்டுமாம்; ஒரு நொடியில், ஏன் கண் இமைக்கும் நேரத்திற்கும் குறைவான நேரத்தை கூட பதிவு செய்யும் ஒரு சிறப்பு கடிகாரத்தை எடுத்துக்கொள்ள வேண்டுமாம்; ஒவ்வொரு வேலையிலும், ஒவ்வொரு அசைவிலும் எவ்வளவு நேரம் செலவிடப்படுகிறது என்பதை அந்தக் கடிகாரம் பதிவு செய்துக்கொள்ளுமாம். இதன் மூலமாக மிக மிகக் குறைந்த நேரத்தில், குறைந்த கூலியில், திறம்பட செயலாற்றும் வேலை முறை உருவாக்கப்படுமாம்; இவ்வாறு மிகச் சிறப்பாக வேலை செய்த தொழிலாளியின் வேலைமுறை படம்பிடிக்கப்படும்; அதன் பிறகு ஒவ்வொரு தொழிலாளியும் எவ்வாறு இதே போல செம்மையாக வேலை செய்ய வேண்டும் எனப் புரிய வைப்பதற்கு இந்த படக்காட்சியை பயன்படுத்திக் கொள்வார்களாம்.

இதற்கு முன்னதாக ஒன்பது மணிநேரமோ, பத்து மணி நேரமோ ஒரு தொழிலாளி வேலை செய்திருப்பார். இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, ஈவிரக்கமின்றி அவரின் அத்துனை ஆற்றலும் உறிஞ்சப்படும்; கூலி அடிமையின் உடல் பலமும், மன பலமும் சொட்டுச் சொட்டாக உறிஞ்சப்படும் வேகம் மும்மடங்கு அதிகரிக்கும்; இதனால் ஒரு தொழிலாளியிடமிருந்து மும்மடங்கு அதிகமான உழைப்பை பிழிந்து எடுக்க முடியும். ஒரு வேளை பணிச்சுமை தாங்க முடியாமல் இறந்தே விட்டாலும் முதலாளிக்கு பிரச்சினையில்லை. எனெனில், இந்த வேலைக்கூட கிடைக்காதா என்று அலுவலகத்தின் வெளியே பலரும் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

முதலாளித்துவ சமூகத்தில் அறிவியலும், தொழில்நுட்பமும் ஒரு படி முன்னேறுகிறது என்றால், உழைப்புச் சுரண்டலும், ஒடுக்குமுறையும் ஒரு படி முன்னேறுகிறது என்று அர்த்தமாகும்.

டெய்லர் எழுதிய நூலில் குறிப்பிடப்பட்ட உதாரணம் ஒன்றை இங்கு பார்ப்போம்.

வார்ப்பிரும்பை தள்ளுவண்டியில் ஏற்றிக் கொண்டு நமக்கு தேவையான பொருளாக தயார் செய்யும் செயல்முறையை பற்றி பேசும் டெய்லர், பழைய நிர்வாக முறைக்கும் இந்த புதிய “அறிவியல் பூர்வமான” நிர்வாக முறைக்கும் இடையிலான வேறுபாடுகளை பட்டியலிடுகிறார்.

 

பழைய முறை

புதிய முறை

தள்ளுவண்டியில் வார்ப்பிரும்பை ஏற்றுவதில் ஈடுபட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை

500

140

ஒரு தொழிலாளியால் சராசரியாக எவ்வளவு டன் வார்ப்பிரும்பு எடுத்துச் செல்லப்படுகிறது

16

59

சராசரியாக ஒரு தொழிலாளிக்கு கிடைக்கும் கூலி(ரூபிள்களில்)

2.30

3.75

ஒரு டன் வார்ப்பிரும்பை ஏற்றிச்செல்வதற்காக ஆலை முதலாளிக்கு ஆகும் செலவு(கோபக்குகளில்)

14.4

6.4

 

இந்த புதிய முறையின் மூலம் செலவு பாதியாகவோ அல்லது பாதிக்கும் குறைவாகவோமிச்சம்பிடிக்கப்படுகிறது. முதலாளிக்கு இலாபம் அதிகமாகிறது. இதனால் பெருமகிழ்ச்சியடைந்த ஒரு முதலாளி டெய்லரையும் அவரைப் போன்ற ஆசாமிகளையும் எப்படி போற்றிப் புகழாமல் இருப்பான்.

துவக்கத்தில் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்கப்படும். பிறகு நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிலிருந்து தூக்கியெறியப்படுவார்கள். மீதமிருக்கும் தொழிலாளர்கள் நான்கு மடங்கு அதிகமாக முதுகெலும்பு உடையும் அளவிற்கு தீவிரமாக வேலை செய்யும் நிலை ஏற்படும். அந்தத் தொழிலாளர்களிடமிருந்து உழைப்புச் சக்தி முழுவதும் உறிஞ்சப்பட்ட பிறகு அவர்களும் தூக்கியெறிப்படுவார்கள். மீண்டும் இளந்துடிப்புடன், திறமையாக வேலை செய்யக்கூடிய தொழிலாளர்கள் மட்டுமே பணிக்கு சேர்த்துக் கொள்ளப்படுவர்.

இவ்வாறுதான் டெய்லர் வகுத்துத் தந்த ‘அறிவியல் பூர்வமான’ கோட்பாட்டின் அடிப்படையில் ழைப்பு உறிஞ்சப்படுகிறது.

 லெனின்

நூல்திரட்டு, தொகுதி 18, பக்கங்கள் 594-595

(1913, மார்ச் 13 அன்று பிராவ்தா பத்திரிக்கையில் வெளியான கட்டுரை)

- விஜயன்

(தமிழில்)