மொழி பிரச்சனையில் பாட்டாளி வர்க்க நிலைபாடு - பகுதி 1

ஏ.எம்.கே

மொழி பிரச்சனையில் பாட்டாளி வர்க்க நிலைபாடு - பகுதி 1

1. மத்திய அரசு பல்வேறு வழிகளில், பல்வேறு துறைகளில் இந்தி பேசாத இனங்களின் மீது இந்திமொழி திணிப்பை அரசு அதிகாரத்தின் மூலமாக திணித்துவருகிறது. தற்போது இந்திவாரம் கொண்டாடும்படி மத்திய அரசு அலுவலகங்களுக்கு ராஜீவின் பாசிச அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. புதிய கல்விக் கொள்கையின் மூலமும் இந்தியை திணிக்கும் முயற்சியை இந்திய அரசு மேற்கொண்டுள்ளது. 

 

2. இந்தி மொழியை கட்டாய ஆட்சி மொழியாக்கும் முயற்சியின் தொடர்ச்சியே மேற்கூறிய நடவடிக்கைகள் ஆகும். இந்திய அரசியல் சட்டத்திலேயே இந்தியை கட்டாய ஆட்சிமொழியாக்க இந்திய ஆளும் வர்க்கங்கள் பிரகடனப்படுத்தியுள்ளன. அதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுவதற்கும் அரசியல் சட்டத்திலேயே ஷரத்துக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 

 

3. கட்டாய ஆட்சி மொழி என்ற பிரச்சனையில் - இந்திய ஆளும் வர்க்கங்கள், இந்திதான் இந்தியாவின் ஆட்சி மொழி என்ற நிலைபாட்டை உறுதியாக எடுத்துள்ளன. இந்தி மொழி பேசப்படாத மாநிலங்களில் உள்ள பிரதேச (மாநில) தரகு முதலாளிய கட்சிகள் இந்தியுடன் ஆங்கிலத்தையும் தக்கவைக்க வேண்டும் என்ற நிலைபாட்டை மேற்கொண்டுள்ளன.

 

இந்திய அரசின் தேசிய இனங்களின் மீதான ஒடுக்கு முறையை எதிர்த்து அனைத்து தேசிய இனங்களுக்கும் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை என்ற புரட்சிகர தீர்வுக்கு மாறாக அனைத்து இனங்களுக்குமான சமத்துவத்திற்கு மாறாக மாநில ஆட்சிகளுக்கு அதிக அதிகாரம் கோரும் சமரச தீர்வை முன்வைப்பதும் அதேபோல் மொழித்துறையிலும் ஒரு அகில இந்திய அரசு அதிகார மொழி இருக்க வேண்டுமெனவும், அதுவும் இந்தியைவிட ஆங்கிலமே இருக்க வேண்டுமெனவும் கோரி அந்நிய மொழி ஆதிக்கத்திற்கு உத்தரவாதம் செய்யும் கொள்கையை மேற்கொள்கின்றன. ஒரு ஆட்சி அதிகார மொழி கூடாது என்ற, அனைத்து தேசிய இன மொழிகளுக்கும் சமத்துவம் வேண்டும் என்ற ஜனநாயக தீர்வை இவை எதிர்க்கின்றன. அல்லது ஆதரிப்பது இல்லை. இவ்வாறு தேசிய இனப் பிரச்சனை, மொழி பிரச்சனை இரண்டிலும் ஆதிக்கத்திற்கான ஒரு பாதையை ஏற்கின்றன. அனைத்து இனங்களுக்கான சமத்துவத்தை மறுக்கின்றன. எனவே இத்தகைய ஜனநாயக விரோத போக்குகளை ஆதரித்து சமரசம் செய்யும் சக்திகளை, கட்சிகளை அம்பலப்படுத்தி தனிமைப்படுத்தாமல், முறியடிக்காமல் ஒரு உண்மையான இனங்களின் ஜனநாயகத்திற்கான போராட்டத்தை வளர்க்க முடியாது. எதிரியை எதிர்த்து மக்களைத் திரட்டவும் வெல்லவும் முடியாது. 

 

4. கட்டாய ஆட்சி மொழி பிரச்சனை தேசிய இனங்களின் சுயநிர்ணய பிரச்சனையின் ஒரு பகுதியாகும். இந்தியாவில் தேசிய இனங்கள் ஒடுக்கு முறைக்கு உட்பட்டுள்ளன. அவைகளுக்கு எவ்வித சுயநிர்ணய உரிமையும் கிடையாது. இதற்கு காரணம் இந்திய அரசு ஆட்சி முறையின் தன்மையே ஆகும். இந்திய அரசு ஆட்சிமுறை ஜனநாயகமற்ற ஆட்சி முறை இந்த ஜனநாயகமற்ற ஆட்சி முறைக்கு அடிப்படை இந்திய ஆளும் வர்க்க நலன்களே. இந்திய ஆளும் வர்க்கங்களான தரகு முதலாளி வர்க்கமும் நிலபிரபுத்துவ வர்க்கமும் அன்னிய ஏகாதிபத்தியங்களுக்கு சேவை புரிகின்ற வர்க்கங்களாகும். அரை காலனிய, அரை நிலபிரபுத்துவ சமூக அமைப்பை தக்கவைத்து அதன் மூலம் அன்னிய ஏகாதிபத்திய நலன்களுக்குச் சேவை செய்து வருகின்றன. இச்சமூக அமைப்பின் தன்மைதான்-அரைகாலனிய அரை நிலபிரபுத்துவத் தன்மை அரசு ஆட்சி முறையின் தன்மையை தீர்மானிக்கிறது.

 

அதிகார வர்க்க தரகு முதலாளித்துவம், இந்தியா முழுவதையும் ஒரு ஐக்கியப்படுத்தப் பட்ட சந்தையாக தன் பிடியில் கொண்டுவர முயற்சிக்கிறது. பல்வேறு தேசிய இனங்களுடைய தேசிய வேட்கைகளை எல்லா நசுக்குகிறது, மத்திய அரசின் கைகளில் அரசியல், பொருளாதாரம் அனைத்தையும் குவிப்பதன் மூலமாகவும், ஒடுக்கப்பட்ட இனங்களின் வளர்ச்சியை புறக்கணித்தும், அனைத்து தேசிய இனங்களுடைய தாய் மொழியை நசுக்கியும், அவர்களின் மீது இந்தியை திணிப்பதன் வாயிலாக பண்பாட்டுத் துறையில் ஒடுக்குமுறையை செலுத்துவதன் மூலமும் இவ்வாறு பாசிச முறையில் அதிகாரங்களை குவிக்கும் பணியில் ஈடுபட்டு இருக்கிறது, ஜனநாயகமற்ற பாசிச அரசு ஆட்சி முறை தேசிய இனங்களின் சமத்துவத்தை ஏற்றுக் கொள்ளாது. அது தேசிய இனங்களின் மீதான ஒடுக்கு முறையையே சார்ந்துள்ளது. தேசிய இனங்களின் ஒடுக்கு முறையின் ஒரு பகுதிதான் ஒரு மொழியை-இந்தியை கட்டாய ஆட்சி மொழியாக்குவதும் பிற தேசிய இன மொழிகளின் வளர்ச்சியை தடுப்பதும் ஆகும். எனவே இந்தி கட்டாய ஆட்சிமொழி என்ற பிரச்சனையானது ஜனநாயகமற்ற பாசிச இந்திய ஆட்சி முறையின் விளை பொருளேயாகும். ஜனநாயக விரோத அரைகாலனிய அரை நில பிரபுத்துவ பாசிச இந்திய அரசை தூக்கி எறியாமல் தேசிய இனங்கள் விடுதலை பெற முடியாது. மொழிகளுக்கிடையேயும் சமத்துவம் நிலவ முடியாது. 

 

5. வேறுபட்ட தேசிய இனங்கள் கொண்ட ஒரு நாட்டில் தேசிய சுயநிர்ணய உரிமையை உள்ளடக்கிய ஒரு முழுமையான ஜனநாயகம் அவசியமாகும் என்பதும், எந்த ஒரு இனத்திற்கும் அல்லது எந்த ஒரு மொழிக்கும் எவ்வித தனிச் சலுகையும் இருக்கக் கூடாது என்பதுமே லெனினிய கோட்பாடு. கட்டாய ஆட்சி மொழி என்ற ஒன்றே கூடாதென்பதுதான் லெனினியக் கோட்பாடு. இதுதான் பாட்டாளி வர்க்க ஜனநாயகத்தின் முக்கிய கோட்பாடுகளாகும் எனவே மொழி பிரச்சனையில் கட்டாய ஆட்சிமொழி என்ற ஒன்று கூடாது என்பதும், அனைத்து மொழிகளுக்கிடையேயும் சமத்துவம் நிலவவேண்டும் என்பதுமே பட்டாளி வர்க்க நிலைபாடாகும். ஒவ்வொரு குடிமகனுக்கும் தனது தாய் மொழியை அனைத்து துறைகளிலும் பயன்படுத்த முழு வாய்ப்பும், உரிமையும் அளிக்கபடவேண்டும் என்று லெனினிய கோட்பாடு வலியுறுத்துகிறது. 

 

6. இந்தியா ஒரு சமச்சீரற்ற அரை காலனிய அரை நிலபிரபுத்துவ நாடு, புதிய ஜனநாயக புரட்சி கால கட்டத்தில் உள்ள ஒரு நாடு. தேசிய இனங்கள் தேசங்களாகப் பரிணமித்துக் கொண்டிருக்கிற ஒரு நாடு. எனவே தேசிய இனபிரச்சனை ஒரு முக்கியமான பிரச்சனையாக இன்று இந்தியாவில் - நீடிக்கிறது. ஏகாதிபத்திய தரகு முதலாளிய நில பிரபுத்துவ கூட்டங்கள் தேசிய இனப் பிரச்சனையை பாசிச முறையில் அடக்க முயற்சிக்கின்றன. இந்நிலையில் பாட்டாளி வர்க்க கட்சி தேசிய இனப் பிரச்சினைக்கு தனது வேலை திட்டத்தில் ஒரு முக்கியமான இடம் அளிப்பது அவசியமானது. கட்டாய மொழி பிரச்சனையும் தேசிய இனப் பிரச்சனையின் பகுதியே. ஆகையால் மொழிப் பிரச்சனையில் பாட்டாளி வர்க்க ஜனநாயக நிலைப்பாட்டில் இருந்து தீர்வை தெளிவாக முன் வைப்பது மிக அவசியமானதாகிறது. 

 

7. தரகு முதலாளிய, நிலபிரபுத்துவ பாசிச அரசை தூக்கி எறிவதன் மூலமே, ஒரு மக்கள் ஜனநாயக அரசை நிறுவுவதன் மூலமே தேசிய இனப் பிரச்சனையில் பாட்டாளி வர்க்க ஜனநாயக தீர்வை செயல்படுத்த முடியும். மக்கள் ஜனநாயக அரசின் கீழ் தேசிய இனங்கள் அரசியல் சுயநிர்ணய உரிமை பெறும்போது மட்டுமே தேசிய மொழிகளிடையே சமத்துவத்தையும் கொண்டு வரமுடியும். எனவே அரசு அதிகார பிரச்சனைக்கும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை, மொழி பிரச்சனை ஆகியவற்றிற்கும் இடையே உள்ள உறவை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். 

 

8. பாட்டாளி வர்க்க ஜனநாயக கோட்பாடுகளின் அடிப்படையில் மொழி பிரச்சனையில் கீழ்க்கண்ட தீர்வை பாட்டாளி வர்க்க இயக்கம் முன்வைக்கிறது. 

1. எந்த ஒரு குறிப்பிட்ட மொழியும் - இந்தி உட்பட- கட்டாய ஆட்சி மொழியாக இருக்கக் கூடாது. 

2. அனைத்து தேசிய மொழிகளும் ஆட்சி மொழிகளாக ஆக்கப்பட வேண்டும். 

3. அனைத்து தேசிய மொழிகளின் வளர்ச்சிக்கு வாய்ப்பும் வசதியும் முழுமையாக அளிக்கப்பட வேண்டும். 

4. எந்த ஒரு குடிமகனும் தனது தாய் மொழியை அனைத்து துறைகளிலும் பயன்படுத்த முழு உரிமை அளிக்க வேண்டும். 

 

9. கட்டாய ஆட்சிமொழி பிரச்சனையில் இந்திய ஆளும் வர்க்கங்கள் இந்திதான் கட்டாய ஆட்சி மொழி என்ற நிலைப்பாட்டில் உறுதியாக நிற்கின்றன. இந்தியை கட்டாய ஆட்சி மொழியாக மாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் இந்திய பாசிச அரசு மேற்கொண்டு வருகிறது. இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள பிரதேச தரகு முதலாளிய கட்சிகளின் வற்புறுத்தலினால் ஆங்கிலத்தையும் சிறிது காலம் வரை துணை ஆட்சி மொழியாக நீடிப்பதை இந்திய பாசிச அரசு அனுமதிக்கிறது. 

 

10. இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள பிரதேச தரகு முதலாளிய கட்சிகளும், அவற்றின் மாநில அரசாங்கங்களும் ஆங்கிலமும் இந்தியுடன் ஆட்சி மொழியாக தொடர்ந்து நீடிக்க வேண்டுமென கோருகின்றன. அதற்கு அரசியல் சட்ட உத்தரவாதத்தை கோருகின்றன. அவை இந்தி கட்டாய ஆட்சி மொழி என்பதை நீக்க கோருவதில்லை. இந்தி பேசாத மக்கள் விரும்புகிற வரை ஆங்கிலம் தொடர்ந்து நீடிக்கும் என்ற நேருவின் மோசடி வாக்குறுதியை நிறைவேற்றவே அவை கோருகின்றன. ஒரு குறிப்பிட்ட மொழி ஆட்சி மொழியாக இருக்கக்கூடாது; அனைத்து இந்திய மொழிகளுக்கும் சமத்துவம் வேண்டும். அனைத்து இந்திய மொழிகளும் ஆட்சி மொழியாக்கப்பட வேண்டும் என்று அவை கோருவதில்லை. அதாவது தேசிய மொழிகளின் சமத்துவம் என்ற ஜனநாயக கோட்பாட்டை அவை முன்வைப்பதில்லை. இடது, வலது போலி கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட திருத்தல்வாத - கட்சிகளின் நிலைப்பாடும் இதுவே. 

 

11. இந்திய பாசிச அரசின் மொழி ஒடுக்குமுறை கொள்கையை, இந்தியாவின் கட்டாய ஆட்சிமொழி என்ற கொள்கையை பாட்டாளி வர்க்க இயக்கம் உறுதியாக எதிர்த்து போராடுகிற அதேவேளையில் ஆங்கிலத்தையும் இந்தியுடன் ஆட்சிமொழியாக வைக்க வேண்டும் என்ற பிற்போக்கு கட்சிகளின் கொள்கையையும் அது எதிர்க்கிறது. தேசிய மொழிகளின் சமத்துவம் என்ற பாட்டாளி வர்க்க ஜனநாயக கோட்பாட்டை பாட்டாளி வர்க்க இயக்கம் உயர்த்தி பிடிக்கிறது. 

 

12. பாட்டாளி வர்க்க இயக்கம் கீழ்க்கண்ட முழக்கங்களை இன்று மக்கள் முன் வைக்கிறது. 

1. இந்தியை கட்டாய அரசு மொழியாக்கும் அரசியல் சட்டத்தை தகர்த்தெறிவோம்! 

2. அனைத்து மொழிகளின் சமத்துவத்திற்கும், அனைத்து மொழிகளை அரசு மொழியாக்கவும் போராடுவோம்! 

3. அனைத்து துறையிலும் இந்தி திணிப்பு முயற்சிகளை முறியடிப்போம்! 

4. இந்தி மொழி ஆதிக்க, ஜனநாயக மறுப்பு, உடைமை வர்க்க ஏகபோக, பிற்போக்கு புதிய கல்விக் கொள்கையை முறியடிப்போம்! 

5. இந்தி மொழியை திணிக்கும் தரகு பெருமுதலாளித்துவ, நிலபிரபுத்துவ வர்க்கங்களின் கூட்டு சர்வாதிகார, ஜனநாயக விரோத பாசிச ராஜீவ் அரசு ஒழிக!

 

சமரன், நவம்பர், 1986

ஏ.எம்.கே.