மூளை தொழில்நுட்பத்தில் அமெரிக்காவிற்கு நிகராக வளர்ந்து வரும் சீனா

தமிழில்: விஜயன்

மூளை தொழில்நுட்பத்தில் அமெரிக்காவிற்கு நிகராக வளர்ந்து வரும் சீனா

பீஜிங் மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஓர் அரசு மருத்துவமனையில், 'லூ கெஹ்ரிக் நோய்' என்று பரவலாக அறியப்படும் நரம்பு மண்டல சிதைவு (ALS) நோயினால், தம் பேசும் திறனை முற்றிலும் இழந்திருந்த அறுபத்தேழு வயது மூதாட்டி ஒருவர் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அங்கேயிருந்த ஒரு கணினித் திரையில், "நான் சாப்பிட விரும்புகிறேன்" எனும் சீன எழுத்துகள் சட்டெனத் தோன்றின. அந்த வார்த்தைகள் அவரது எண்ணங்களிலிருந்து நேரடியாகவே உதித்தவை.

ஓர் மருத்துவ ஆய்வுப் பரிசோதனையின் போது பெய்ஜிங் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலையத்தால் மார்ச் மாதம் இச்சம்பவம் காணொலியில் பதிவு செய்யப்பட்டது. ஒரு நாணயத்தின் அளவே இருக்கும் மிகச் சிறியதொரு சிப் மூளையில் பொருத்தப்பட்டிருந்த ஐந்து நோயாளிகள் இப்பரிசோதனையில் பங்கேற்றனர். இச்சில்லுக்கு 'பெய்னோ-1' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது, மூளை-கணினி இடைமுகம் (BCI) எனப்படும் ஓர் புதிய கம்பியில்லா தொழில்நுட்பத்தின் மூலம் மூளையின் சமிக்ஞைகளைக் கொண்டு ஒரு கணினியைக் கட்டுப்படுத்த முடியும் என்பது எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

மூளை-கணினி இடைமுக (BCI) தொழில்நுட்ப வளர்ச்சியில் அமெரிக்கா தலைமை தாங்கி வந்துள்ள போதிலும், சீனா மின்னல் வேகத்தில் அதனைப் பின்தொடர்ந்து முன்னேறி வருவதாக வல்லுநர்கள் ஒருமித்த குரலில் கூறுகின்றனர். சீன மூளை ஆராய்ச்சி நிறுவனத்தின் (CIBR) இயக்குநரும், இப்பரிசோதனைக்குத் தலைமை தாங்கும் முதன்மை விஞ்ஞானியுமான லூவோ மின்மின் அவர்கள், BCI தொழில்நுட்பத்திற்கு அபரிமிதமான தேவை நிலவுவதாகவும், இத்தகைய அரியதோர் சேவையை நாடி வரும் மக்களின் எண்ணிக்கையால் தாங்கள் திக்குமுக்காடிப் போனதாகவும் தெரிவித்திருந்தார்.

மே மாதத்தில், பரிசோதனை நிகழ்ந்த பீஜிங் ஷுவான்வு மருத்துவமனையிலிருந்து ஏறத்தாழ ஒரு மணி நேரப் பயண தூரத்தில் அமைந்துள்ள தனது ஆய்வகத்தில் CNN-க்கு ஒரு பிரத்யேக நேர்காணலை லூவோ மின்மின் அளித்தபோது, நோயாளிகள் இந்த அனுபவம் அதி அற்புதமானதாக இருந்ததாகக் குறிப்பிட்டனர். தங்கள் தசைகளின் கட்டுப்பாட்டை மீண்டும் தங்கள் வசப்படுத்திக் கொண்டதைப்போல் உணர்ந்ததாக அவர்கள் தெரிவித்தார்கள்.

நோயாளிகளின் மூளை சிக்னல்களைப் படித்து, அந்தச் சிக்னல்களை உரைவடிவமாகவோ, பேச்சாகவோ அல்லது இயந்திர அசைவுகளாகவோ மாற்றுவதில் இந்தத் தொழில்நுட்பம் "அதி துல்லியத்தைக்" காட்டுவதாக லூவோ மின்மின் விளக்கினார். அடுத்த ஆண்டில் மேலும் 50 முதல் 100 நோயாளிகளுக்குச் சிப்களைப் பொருத்துவதன் மூலம் மனிதர்களிடத்தில் சோதனைகளை விரைவுபடுத்த அவரது குழு திட்டமிட்டுள்ளது.

"இந்தச் செயல்முறையைத் துரிதப்படுத்த நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். இது பாதுகாப்பானது, பயனுள்ளது என நிரூபிக்கப்படும் பட்சத்தில், இதை உலகெங்கிலும் சிகிச்சைக்காகப் பயன்படுத்த முடியும்," என அவர் மேலும் கூறினார்.

மே மாதம் நிலவரப்படி, பீனாவோ-1 தொழில்நுட்பம் ஐந்து நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டுள்ளது — இது எலான் மஸ்க்கின் நியூராலிங்க் நிறுவனத்தின் எண்ணிக்கைக்குச் சமமானது. ஜெஃப் பெசோஸ் மற்றும் பில் கேட்ஸ் போன்றோரை முதலீட்டாளர்களாகக் கொண்டுள்ள மற்றொரு அமெரிக்க நிறுவனமான சின்க்ரோன், 10 நோயாளிகளிடம் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளது: அமெரிக்காவில் ஆறு பேரும், ஆஸ்திரேலியாவில் நான்கு பேரும் இச்சோதனைகளில் பங்கேற்றுள்ளனர்.

பீனாவ் ஆய்வுப் பணிகளில் நேரடியாகப் பங்கேற்காத, ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் துறைப் பேராசிரியரான மாக்சிமிலியன் ரீசன்பர் என்பவர், மூளை-கணினி இடைமுக (BCI) ஆராய்ச்சியில் அமெரிக்காவை விட சீனா தாமதமாகவே களமிறங்கியிருப்பினும், தற்போது பெரும் வீச்சுடன் முன்னேறி வருவதாக CNN ஊடகத்திடம் தெரிவித்தார்.

“சீனா தன் ஆரம்பப் பின்னடைவைக் களைந்து, சாதகமாகப் போட்டியிடுவது மட்டுமல்லாமல், மேம்பட்ட நிலையில் திகழ முடியும் என்பதையும் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபித்துள்ளது. குறிப்பிட்ட சில களங்களில், சீனா ஆராய்ச்சியில் முன்னோடியாக செயல்படவும் துவங்கியுள்ளது” என்று அவர் மேலும் விவரித்ததார். “சீனாவும் அமெரிக்காவும் பல்லாயிரக்கணக்கான ஆராய்ச்சித் திட்டங்களை மேற்கொண்டு வருவது மிகவும் ஊக்கமளிப்பதாக உள்ளது; ஏனெனில், இவ்விரு நாடுகளும் BCI தொழில்நுட்பத்தின் பெரும் ஆற்றலை ஆழமாகப் புரிந்துகொண்டுள்ளன” என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

சந்தை நிலவரங்கள் குறித்து  ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் பிரசிடென்ஸ் ரிசர்ச் நிறுவனத்தின் அறிக்கையின்படி, கடந்த ஆண்டு உலகளாவிய மூளைத் தொழில்நுட்பச் சந்தையின் மதிப்பு சுமார் 2.6 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடையதாக இருந்தது. இது 2034 ஆம் ஆண்டுக்குள் 12.4 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆயினும், சீனா மற்றும் அமெரிக்காவைப் பொறுத்தவரை, இத்தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் வெறும் பொருளாதார மதிப்பையும் விஞ்சிய விஷயங்களை உள்ளடக்கியுள்ளன.

சீன அதிபர் ஜி ஜின்பிங், சீனாவை அறிவியல் மற்றும் பொருளாதாரத் துறைகளில் முன்னணி நாடாகத் திகழச் செய்வதையே தனது நீண்டகாலப் பெருங்கனவாகக் கொண்டுள்ளார். கடந்த மார்ச் மாதம், உலகளாவிய போட்டியில் தொழில்நுட்பத் துறைதான் தற்போது “முன்னணிப் படைக்களமாகவும்” “தலைமைப் போர்முனையாகவும்” திகழ்கிறது என்று அரசு அங்கீகாரம் பெற்ற ஊடகங்களில் அவர் பிரகடணப்படுத்தி பேசியிருந்தார். அவரது இத்தகைய உறுதிமிக்க இலக்குகள் அமெரிக்காவில் பெருங்கவலையைத் தோற்றுவித்துள்ளன, இது குறிப்பாக செமிகண்டக்டர் சில்லுகள் தொடர்பான தொடர்ச்சியான தொழில்நுட்பப் போராகப் பரிணமிக்க வழிவகுத்துள்ளது.

சீன மூளை ஆராய்ச்சி நிறுவனம் (CIBR) 2018 ஆம் ஆண்டு பெய்ஜிங் நகர அரசாலும், அப்பகுதியில் உள்ள பல பல்கலைக்கழகங்களின் கூட்டுறவோடும் தோற்றுவிக்கப்பட்டது. சான் பிரான்சிஸ்கோ அருகே எலான் மஸ்க் நியூரலிங்க் நிறுவனத்தைத் தொடங்கிச் சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரே இந்நிறுவனம் செயல்படத் தொடங்கியது.

2023ஆம் ஆண்டில், சீன மூளை ஆராய்ச்சி நிறுவனம் (CIBR) 'நியூசைபர் நியூரோடெக்' (NeuCyber NeuroTech) என்னும் தனியார் நிறுவனத்தைத் தொடங்கியது. இந்நிறுவனம் பீனாவோ-1 (Beinao-1) போன்ற அதிநவீன மூளைத் தொழில்நுட்பத் தயாரிப்புகளை உருவாக்குவதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. மே மாதத்தில், இந்த ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானியான லூவோ மின்மின், சி.என்.என். செய்தி நிறுவனத்திற்கு அந்த ஆய்வகத்தைப் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கியிருந்தார்.

லூவோவின் கூற்றுப்படி, பல ஆண்டுகளாக, அறுபது வயதை எட்டிய, ஏ.எல்.எஸ். (அமையோடிராபிக் லேட்டரல் ஸ்களீரோசிஸ்) எனும் கொடிய நோயால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்மணி, தனது எண்ணங்களை எவரிடமும் வெளிப்படுத்த இயலாமல் பெரும் அல்லல்பட்டு வந்தார். “அவர் கண் விழித்த நிலையில்தான் இருந்தார்; தன் தேவைகளைத் துல்லியமாக உணர்ந்திருந்தார்; ஆயினும், அவரால் ஒரு வார்த்தைகூட உரைக்க இயலவில்லை,” என்கிறார் லூவோ. பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் நரம்பியலில் முனைவர் பட்டம் பெற்று, ஏறத்தாழப் பத்தாண்டுகள் அமெரிக்காவில் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்ட லூவோ, தொடர்ந்து இவ்வாறு கூறினார்: “அந்த நுண்ணிய சிப் பொருத்தப்பட்ட பின்னர், அந்தப் பெண்மணி இப்போது இந்தச் தொழில்நுட்பத்தின் துணையுடன், மிகவும் துல்லியமாக எளிமையாகவும் தான் நினைப்பதை வெளிப்படுத்த முடிகிறது.”.

மூளை-கணினி இடைமுகத் தொழில்நுட்பங்களில் (BCI) ஆழமாகப் பணிபுரியும் அனைத்து ஆய்வாளர்களும், ஆபத்துக்களைக் குறைப்பதற்கும், அதேசமயம் அமைப்பின் செயல்திறனைப் பன்மடங்கு மேம்படுத்துவதற்கும் இடையே ஒரு நேர்த்தியான சமநிலையைக் கண்டறிவது அத்தியாவசியமானது.

நரம்பியல் பேராசிரியரான மாக்சிமிலியன் ரீசென்ஹூபர் கூறியபடி, பெரும்பாலான அமெரிக்க நிறுவனங்கள், தங்கள் நுண்ணிய சிப்களை மூளையையும் முதுகுத் தண்டையும் சூழ்ந்துகொண்டிருக்கும் உறுதியான மேல் சவ்வான டியூரா மேட்டருக்குள் (dura mater) பொருத்துகின்றன. இது மூளை மற்றும் தண்டுவடத்தை மூடிப் பாதுகாக்கும் ஒரு மெல்லிய திசுப் படலமாகும். அங்கு சிப்களைப் பதிப்பது, மிகத் தெளிவான சமிக்ஞைகளை அளித்தாலும், அதை செய்வதற்கு மிகுந்த ஆபத்தான அறுவை சிகிச்சை தேவைப்படுத்துகிறது. “டியூரா மேட்டர் வழியாகக் கூட போதுமான மூளையின் தகவல்களைப் பெற்று, குறிப்பிட்ட சொற்களைப் பிரித்தறியும் திறன் சீன 'நியூசைபர்' நிறுவனத்திடம் உள்ளது என்பது உண்மையிலேயே பாராட்டத்தக்கது,” என்று அவர் மேலும் வியப்புடன் கூறினார்.

ALS நோயாளி மீது மார்ச் மாதத்தில் தொடங்கப்பட்ட சோதனை, பீனாவ்-1 சிப்பிற்கான மூன்றாவது மனிதச் சோதனையாகப் அறியப்படுகிறது. இதனை உருவாக்கியவர்கள் வெளியிட்ட ஓர் ஊடக அறிக்கையில், இச்சோதனைகள் மனிதர்களிடம் பொருத்தப்பட்ட உலகின் முதல் பகுதியளவு உள்நுழைக்கப்படுகிற, கம்பியில்லா மூளை-கணினி இடைமுக (BCI) கருவிகளின் ஆய்வாக அமைந்தன என்று அறிவித்தனர். மே மாதத்திற்குள், மேலும் இரு சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு, மொத்த எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்தது.

நாடுகளுக்கிடையே பதற்றம் உச்சம் கொள்ளும் வேளைகளில், தொழில்நுட்பத் துறையில் அமெரிக்கா மற்றும் சீனாவின் சாதனைகளை அறிஞர்கள் ஒப்பிட்டுக் காண்பது இயல்பு. மூளை-கணினி இடைமுக (BCI) தொழில்நுட்பம் 1970களில் அமெரிக்க மண்ணில் முதன்முதலில் கருக்கொண்டு உருவானது.

பல்லாண்டுகளுக்குப் பிறகு, 2013ஆம் ஆண்டில், ஒபாமா நிர்வாகம் ‘மூளை முன்முயற்சி’ என்ற திட்டத்தைத் தொடங்கியது. அதன் பின்னர், தேசிய சுகாதார நிறுவனம் (National Institute of Health) உரைத்தபடி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட நரம்பியல் தொழில்நுட்பத் திட்டங்களுக்கு ஆதரவளிக்க, 3 பில்லியனுக்கும் அதிகமான அமெரிக்க டாலர்கள் செலவழிக்கப்பட்டுள்ளன.

நியூயார்க்கை தளமாகக் கொண்ட சின்க்ரோன் (Synchron) நிறுவனம், ஜூலை 2021 இல் மனிதர்கள் மீது சோதனைகளைத் தொடங்கிய முதல் நிறுவனமாகத் திகழ்ந்தது. மூன்றே ஆண்டுகளுக்குப் பின்னர், அமெரிக்காவின் யு.சி. டேவிஸ் ஹெல்த் (UC Davis Health) நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு புதிய BCI அமைப்பு, ஒரு ALS நோயாளியின் மூளைச் சமிக்ஞைகளைப் பேச்சாக மொழிபெயர்த்து காட்டியது. பல்கலைக்கழகத்தின் கூற்றுப்படி, மூளைச் சமிக்ஞைகளைப் பேச்சாக மொழிபெயர்ப்பதில் இந்த அமைப்பு 97% துல்லியத்தை எட்டியது – இத்தகைய அமைப்புகளில் இதுவே ஆகச் சிறந்த துல்லியமாகும்.

அதே காலகட்டத்தில், எலான் மஸ்க் தலைமையிலான நிறுவனம், தனது முதல் மனிதச் சோதனையை வெற்றிகரமாகப் நிறைவு செய்தது. இச்சோதனையின் மூலம், ஒரு தன்னார்வலர், மூளையில் பொருத்தப்பட்ட கருவி வழியாக, கணினி மவுஸைக் கட்டுப்படுத்திக் காட்ட முடிந்தது.

சீனா மூளைத் தொழில்நுட்ப ஆய்வுப் பணிகளில் அடியெடுத்து வைத்தது 1990களில்தான்; இது அண்மைக் கால நிகழ்வே. இருப்பினும், இத்துறையில் சீனாவின் வளர்ச்சி வியக்கத்தக்க முனைப்புடன் அமைந்துள்ளது. 2014 ஆம் ஆண்டில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வரும் மாபெரும் திட்டங்களுக்கு இணையாக, மூளைத் தொழில்நுட்பத்திற்கான ஒரு தேசிய அளவிலான திட்டத்தைத் தொடங்க வேண்டும் எனச் சீன விஞ்ஞானிகள் முன்மொழிந்தனர். இந்தக் கருத்தை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகமும் மனமுவந்து ஏற்றது. இரண்டாண்டுகளுக்குப் பின்னர், 2016 ஆம் ஆண்டில், மூளைத் தொழில்நுட்பம் குறித்த அத்தியாயம் சீனாவின் ஐந்தாண்டுத் திட்டத்தில் முக்கிய இடம்பிடித்தது. ஒவ்வொரு ஐந்தாண்டு காலத்திற்கும் நாட்டின் மிக முக்கியமான இலக்குகளையும், தலையாய முன்னுரிமைகளையும் விரிவாகப் பட்டியலிடும் ஓர் நடைமுறையே ஐந்தாண்டுத் திட்டம் எனப்படுகிறது.

"மூளை அறிவியல் தொழில்நுட்பம் என்பது சீனாவுக்குப் புதியதொரு அத்தியாயம்," என்று 2021 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் சீனாவின் தலைசிறந்த நரம்பியல் ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றில் ஆராய்ச்சி உதவியாளராகப் பணியாற்றிய லிலி லின் விளக்கினார். அவர் மேலும் கூறுகையில், "பிற நாடுகளைக் காட்டிலும் சீனா சற்று தாமதமாக அடியெடுத்து வைத்த போதிலும், இத்துறையில் அதன் வளர்ச்சி அசுர வேகத்தில் முன்னேறியுள்ளது. அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களுக்குப் பேரளவிலான நிதியுதவியை அரசு வழங்கி வருகிறது, மேலும் ஆண்டுதோறும் நிதி ஒதுக்கீட்டின் அளவு அளப்பரிய வகையில் அதிகரித்துக்கொண்டே செல்கிறது" என்றார்.

2023ஆம் ஆண்டில், சீன அரசாங்கம், மூளைத் தொழில்நுட்ப ஆய்வுகளுக்காக, வரலாற்றிலேயே முதன்முறையாக, அதிகாரப்பூர்வமான நெறிமுறைக் கோட்பாடுகளை வெளியிட்டது. அதேவேளையில், பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட பெருநகரங்களின் உள்ளாட்சி அமைப்புகளும், ஏனைய முக்கிய நகரங்களின் உள்ளாட்சி அமைப்புகளும் இம்முயற்சிகளுக்குப் பக்கபலமாகத் திகழ்கின்றன. இந்த உள்ளூர் நிர்வாகங்கள், மூளைத் தொழில்நுட்ப நிறுவனங்களுக்குப் பன்முக வழிகளில் உதவிகளை நல்கி வருகின்றன – குறிப்பாக, ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கும், புதிய சிகிச்சை முறைகளை நோயாளிகளிடம் சோதிக்கும் மருத்துவ ஆய்வுகளுக்கும், அத்துடன் தங்கள் தயாரிப்புகளைச் சந்தையில் அறிமுகப்படுத்தவும் உறுதுணையாகச் செயல்படுகின்றன.

ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்களான ரைசென்ஹூபர் மற்றும் அவரது குழுவினர், 2024ஆம் ஆண்டில், சீனாவின் BCI (மூளை-கணினி இடைமுகம்) வளர்ச்சியைக் குறித்து விரிவான ஓர் ஆய்வை மேற்கொண்டனர். BCI என்பது, மூளையை நேரடியாக கணினிகளுடன் பிணைக்கும் ஒரு தொழில்நுட்பமான "மூளை-கணினி இடைமுகம்" என்பதன் சுருக்கக் குறியீடாகும். சீன ஆய்வாளர்களின் பணிகள், அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் நடைபெற்று வரும் ஆய்வுகளுக்கு, "தரத்திலும் மேம்பாட்டிலும் சரிநிகராக" உள்ளன என்பதைத் அவர்களின் ஆய்வறிக்கையில் தெளிவாக எடுத்துரைத்தனர்.

"சீனாவின் உள்நுழைத்தல் இல்லாத BCI ஆய்வுகள், அறிவியல் ரீதியாகப் பன்னெடுங்காலமாக முன்னேறியுள்ள பிற நாடுகளின் ஆய்வுகளுக்கு ஒப்பானவை என்பதை நாங்கள் கண்டறிந்தோம். தொழில்நுட்பத்தின் துல்லியத்தை மேம்படுத்தவும், வேகத்தை அதிகரிக்கவும், அதன் பயன்பாட்டு வரம்பைப் பரவலாக்கவும் உள்ள சவால்களைத் தீர்ப்பதில் சீனா முனைப்புடன் செயல்பட்டு வருகிறது," என்று அந்த ஆய்வறிக்கை மேலும் வலியுறுத்தியது. உடல் அல்லது மூளையில் எவ்வித அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்படாமல், தொழில்நுட்பம் இயங்குவதைக் குறிப்பதே உட்செலுத்துதல் இல்லாத BCI தொழில்நுட்பம் ஆகும். "முன்னர், சீனாவில் உட்செலுத்துவதன்கூடிய BCI ஆய்வுகள், உட்செலுத்துதல் இல்லாத ஆய்வுப் பணிகளைக் காட்டிலும் சற்றே பின்தங்கியிருந்தன. எனினும், தற்போது அவை அதிவேகமாக வளர்ச்சி கண்டு, உலக நாடுகளின் முன்னேற்ற நிலையை எட்டி வருகின்றன," என்று அந்த அறிக்கை மேலும் சுட்டிக்காட்டியது. மூளையினுள் சாதனங்களை பொருத்துவதற்கு அறுவை சிகிச்சை கட்டாயமாகத் தேவைப்படுவதை உட்செலுத்தும் BCI தொழில்நுட்பம் எனலாம்.

அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளிலும் பணியாற்றிய அனுபவமிக்க லூ, உட்செலுத்துதல் மற்றும் உட்செலுத்துதல் இல்லாத மூளைத் தொழில்நுட்பம் ஆகிய இரண்டிலும் அமெரிக்காவே "முன்னிலை வகிப்பதாகத்" தெரிவிக்கிறார். ஆயினும், சீனாவின் பீனாவோ-1 (மூளைச் சில்லு) மற்றும் அமெரிக்காவின் நியூராலிங்க் (மூளைச் சில்லு) ஆகியவற்றை ஒப்பிடுவது, "ஆப்பிளையும் ஆரஞ்சையும் ஒப்பிடுவதற்கு ஒப்பானது" என்றார் அவர். இதன் உட்கருத்து யாதெனில், அவற்றின் அடிப்படைப் பண்புகளே வேறுபடுவதால், அவற்றை நேரடியாக ஒப்பிடுவது அபத்தமானதாகும்.

இந்த இரண்டு சாதனங்களும் பல்வேறு அம்சங்களில் வேறுபடுகின்றன. முதலாவதாக, அவை மூளையின் வெவ்வேறு பகுதிகளில் பொருத்தப்படுகின்றன. இரண்டாவதாக, அவை வெவ்வேறு வகையான மூளைச் சமிக்கைகளை (signals) பதிவு செய்கின்றன. மூன்றாவதாக, அவை மூளையிலிருந்து வெளிப்புறச் சாதனங்களுக்குத் தரவுகளைப் பரிமாற வெவ்வேறு வழிமுறைகளைக் கையாளுகின்றன. சீனச் சில்லு, மூளையின் பரந்ததொரு பகுதியிலிருந்து மூளைச் செயல்பாடுகளைப் பதிவு செய்கிறது. ஆனால், அது தனிப்பட்ட ஒவ்வொரு மூளைச் செல்லையும் குறித்த நுட்பமான தகவல்களைக் குறைவாகவே வழங்குகிறது.

"சுருங்கக் கூறின், இந்த இரண்டு சாதனங்களும் ஒன்றுடன் ஒன்று போட்டியிடுவதாகவோ, அல்லது ஒன்றுக்கொன்று மாற்றாக அமைய முயல்வதாகவோ நான் கருதவில்லை" என லூ தெளிவுபடுத்தினார். "தீர்மானகரமான முடிவு இன்னும் வெளியாகவில்லை. ஏனெனில், நோயாளிகளுக்கு எந்த அணுகுமுறை இறுதியாகச் சிறந்த பலனைத் தரும் என்பது இன்னும் திட்டவட்டமாகத் தெரியவில்லை".

- விஜயன் (தமிழில்)

மூலக்கட்டுரை: https://cnn.it/4kHKSnb

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு