சுழல்: ஏணியா! புதைகுழியா!

சினிமா : ஒரு சித்தாந்த பார்வை - விஜயன்

சுழல்: ஏணியா!  புதைகுழியா!
சுழல்: ஏணியா! புதைகுழியா!
சுழல்: ஏணியா!  புதைகுழியா!

தமிழில் தயாரிக்கப்பட்டு சமீபத்தில் வெளிவந்த இணையத் தொடர் தான் "சுழல்: தி வொர்டக்ஸ்". திரைப்படக் கலையியல் சார்ந்த அடிப்படையில பார்த்தால் இந்த படம் மனமகிழ்வூட்டுவனவாக இருந்தாலும் அது தாங்கி வந்துள்ள சித்தாந்தம்(கருத்தியல்) என்பதென்னவோ நஞ்சை தந்து செல்வதாக அமைந்து உள்ளது. தொழிற்சாலை வேலைநிறுத்தம் நடந்த இரவன்று அங்கு தீ விபத்து ஏற்படுவதும், அதே இரவில் தொழிற்சங்க தலைவரின் பள்ளி செல்லும் வயதில் உள்ள மகள் காணாமல் போய்விடுவதுமாக படத்தின் துவக்க காட்சிகள் அமைந்துள்ளது.  இந்த இரண்டு பிரச்சனைகளையும் விசாரனை செய்து குற்றவாளியை கண்டுபிடிக்க முயலும் உதவி ஆய்வாளரின் பார்வையில் கதை நகர்கிறது. காட்சியின் ஒவ்வொரு திருப்பமான நிகழ்வுகளிலும், சரியாகவே உள்ள பொது மதிப்பீடுகளையும்/நம்பிக்கைகளையும்(சில தவறாகவும் இருக்கின்றன) விறுவிறுப்பாக உடைத்துக்கொண்டே காட்சிகள் செல்கின்றன. பின்நவீனத்துவ கருத்தியலின் அடிநாதமான, முழுமையான/சார்பற்ற உண்மைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு ஒரு சிக்கலின், பகுதியை மட்டும் முதன்மையாகக் எடுத்துக்கொண்டு அந்ததந்த வரலாற்றுக் கட்டத்துக்கு உட்பட்ட பேருண்மைகளை/சார்பற்ற உண்மைகளை மறுதலிக்க/பொய்யாக்க பல்வேறு கட்டுடைத்தல்களை காட்சிப்படுத்தி இருப்பார்கள். அப்படி அவர்கள் உடைக்க முயன்ற பலவற்றில் முதலாளி - தொழிலாளி பற்றிய வர்க்க உறவும் உள்ளடங்கியிருந்தது. தொடரின் தத்துவார்த்த உள்ளடக்கத்தை விளக்கிவிட்டால் அது நமது மனதில் ஏற்படுத்தும் தாக்கத்தை புரிந்துகொள்ள முடியும் எனும் நோக்கில் அறிவியல் உதாரணங்களுடன் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

சுழல் வெப் சீரிஸ் பார்த்து புகழாத வாய்களே இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். புகழாத வாய்கள் (நீல சட்டை) கூட புத்தியில்லாமல், புகழ்ந்து தள்ளியது. உலகப் பொருளாதாரமே புதைகுழியில் சிக்கித் தவிக்கும்பொழுது நமது புத்தி மட்டும் சுதந்திரமாக சினிமா பாட்டுகளை கேட்டு சிறகடிக்குமா என்ன! ஆனால், இந்த சுரண்டும்(ஆளும்) வர்க்க கருத்துக்களை ஏற்றுக் கொண்ட அறிவாளிகள் பொருளாதார சிக்கல்களை மறந்து, திசையை மட்டுமல்ல மனிதனின் இயல்பான பகுத்தறியும் நுண்ணறிவைக்கூட மழுங்கச் செய்து மனிதத்தன்மையை இழக்கச் செய்துவிடுகிறார்கள்.

இந்த வெப் சீரிஸ் அப்படி என்னத்தைத்தான் இந்த உலகிற்கு சொல்ல விழைகிறது. புதிதாக எதையுமே சொல்லவில்லையா? ஆம். புதிதாக ஏதுமில்லை; நாம் அன்றாடம் பார்த்தும், கேட்டும், தகவல் பரிமாறிக்கொண்டும், உறவாடிக் கொண்டும் வருகின்ற அனைத்து ஊடகங்களிலும் பல்வேறு நச்சுக் கருத்துக்களில் ஒன்றாக இதையும் பார்த்திருப்போம். நமது சக நண்பர்கள், உறவினர்கள் கூட இதுபோன்ற கருத்துக்களை 'வாட்ஸ் ஆப் ஸ்டேடஸி'ல் வைத்துகொண்டும் இருந்திருப்பார்கள். அது இது தான்: "Don't be Judgemental", யாரையும் தப்பா Judge  பன்னாதீங்க,’ ‘எத பத்தியும் முழுசா தெரிஞ்சுக்காமா தப்பா முடிவு பன்னாதீங்க,’ என இது போன்ற எண்ணற்ற உள்ளடக்கங்களை வைத்துகொண்டு எக்கச்சக்க 'Quotes'களை கொண்ட படங்கள் இணையவெளியில் மலிந்து கிடக்கின்றன. இது போன்ற கருத்துகள் பெரும்பாலும் சரியாகவும், நமது புதைந்துபோன பொருளாதார வாழ்வுக்கு பொருந்துவதுபோல் தோன்றினாலும், அது முற்றிலும் நமது அன்றாட வாழ்க்கையைக் கூட ஆத்மார்த்தமாக(அறிவுப்பூர்வமாக) வாழவிடாமல் இவர்களது சுரண்டல்வாத சிந்தனை என்னும் 'சுழல்' குழிக்குள் தள்ளிவிடுகிறது. இந்த முதலாளித்துவ ஏகபோக கும்பல்களின் சுரண்டல் எப்படி நம்மை பொருளாதார வாழ்வில் மேலேறவிடுவதில்லையோ, அதே போலத்தான் இவர்களுடைய இந்த "சுழல்" குழியும்.

இத்தொடர் நெடுகிலும் எல்லாச் சாதாரண மனிதர்களின் அப்பாவித்தனமான யதார்த்தவாதத்தை (Naive Realism) கட்டுடைத்துக்கொண்டே (Deconstruct) சென்று இறுதியில் மெய்ப்பிக்கப்பட்ட ஒரு புள்ளியல் தரவைக் கொண்டு முடித்து வைத்திருப்பார்கள். அவர்கள் அப்பாவித்தனமான அல்லது குறுகலான யதார்த்தவாதத்தை எதிர்ப்பதாக சொல்லிக் கொண்டு படத்தின் எடுப்பு முதல் முடிப்பு வரையிலும் உண்மைக்கு பல முகங்கள் உண்டு; பல தன்மைகள் உண்டு; பார்ப்பவர்களது நம்பிக்கைகளுக்கு எற்பவும், பார்க்கும் கோணத்திற்கு ஏற்பவும் மாறுபடக்கூடயதாகவே உண்மை இருக்கிறது. நாம் ஐம்புலன்களால் தொட்டும், சுவைத்தும், நுகர்ந்தும், கண்டும், கேட்டும் ஏன் மனக்கண்ணால் பகுத்தறிந்தும் பார்க்கக்கூடிய புற உலகம் என்பதெல்லாம் நம் 'டப்பா' அறிவுக்கு எட்டாத ஒன்று. "சிகப்பா இருக்கவன் பொய் சொல்லமாட்டான்" என்ற கருத்திற்கு மறுப்பாக இவர்கள் ஒரு முதலாளி தொழிலாளர்களை சுரண்டுறவனாதா இருக்கனுமா?; ஒரு யூனியன் / தொழிற்சங்கத் தலைவன்னா எப்பவும் நியாயமாதா தன்னோட உரிமைக்காக போராடனுமா?; வெள்ளைத்தோல் - டவுன்காரன் - இங்கிலீஸ் பேசிட்டு குழந்தைங்கள பாலியல் துன்புறுத்தல் செய்றவனாத்தான் இருக்கனுமா?; என்பன போன்ற எண்ணற்ற துடுக்கு கேள்விகளைக் கேட்கக்கூடிய காட்சிகளை தொடரின் நெடுகிலும் தொகுத்து வைத்திருப்பார்கள். இதனை சோதித்தறியும் வகையில் ஒரு இருட்டறை ஆய்வையும் கூட ஒரு காட்சியிலே வைத்திருப்பார்கள். முற்றிலும் அறிவியல் அணுகுமுறையை மறுக்கக்கூடிய காட்சி அது. ஒளியின் துகள் தன்மையை நிருபித்துக்காட்டிய ஐன்ஸ்டைன், அது வரையிலும் மதிப்பிடப்பட்ட, நிருபிக்கப்பட்ட, ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தை(ஒப்பீட்டளவிலான உண்மை - ஒளியின் அலைத் தன்மை) கட்டுடைக்கவில்லை; மாறாக ஒளியின் ஆற்றலை சுமந்து கொண்டு வருவதே இந்த ஒளி அணுக்கள் (Photons) தான் என்றும் அது இயக்கத்தில் இருக்கும் போது அலை போலும், ஒப்பீட்டளவிலான ஓய்வில் இருக்கும் போது துகள் தன்மையைப் போலவும் இருப்பதாக அதன் பேருண்மையை விளக்கினார்.

இவ்வாறு ஒரு அறிவியல்பூர்வமான உண்மைகள் தொடர்ச்சியாக நிரூபிக்கப்பட்டு வருவதோடு மட்டுமல்லாமல், ஒப்பீட்டளவிலான உண்மை நிலையிலிருந்து, சார்பற்ற பேருண்மையை நோக்கி நகர்வதோடு மனிதனின் சகல-நிகழ்வுகளிலும் பெரும் மாற்றத்தையும், ஏற்றத்தையும் கொண்டு வருவதானாலேயே கம்யுனிஸ்ட்டுகள் அறிவியலை கொழுகொம்பு போல பற்றி நிற்கிறார்கள். மேலும் அறிவியல் சரியானதை மேம்படுத்தி தரப்படுத்துவதோடு போலியான அறிவியல்களை காலாகாலத்திற்கு ஏற்ப துடைத்தெரியவும் செய்திருக்கிறது. தீர்மானகரமான மதிப்பீடுகளின்றி அறிவியல் கண்டுபிடிப்புகள் இல்லை. இதற்கு ஒரு சமீபத்திய உதாரணத்தை சொல்ல வேண்டுமானால் "மங்கள்யான்" பற்றிய அறிவுக்கொவ்வாத சர்ச்சைக்குறிய கருத்தை பரப்பிய நடிகர் மாதவன் கூற்றைத்தான் இங்கு குறிப்பிட வேண்டும்.

2013-நவம்பரில் ஏவப்பட்ட ராக்கெட் ஒரு வருடம் கழித்து 2014 செப்டம்பரில் தான் புதன் கோளின் சுற்று வட்டப் பதையில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. ஏகாதிபத்திய நாடுகள் எரிபொருளுக்கு அதிகம் செலவு செய்து நேரடியாகவே அதற்குரிய சுற்றுப்பாதையில் நிறுத்திவிடுவார்கள். இந்திய போன்ற புதிய காலனிய நாடுகள் பொருளாதார தன்னிறைவும் தற்சார்பும் அடையாத நாடுகள், குறைந்தளவிலேயே அறிவியல் ஆய்வுகளுக்கும், அறிவியல் வளர்ச்சிக்கும் நிதி ஒதுக்குகின்றன. அவ்வகையில் குறைந்த செலவில் எரிபொருள் செலவை மிச்சப்படுத்தும் பொருட்டு, பூமியின் ஈர்ப்பு விசையை மட்டுமல்லாமல், சூரியன் மற்றும் புதன் கோளின் ஈர்ப்புவிசையை பயன்படுத்தி இந்த ங்கள்யான் செயற்கைகோளை அதன் சுற்றுப் பாதையில் நிலைநிறுத்தினார்கள். இதற்கு அவர்களுக்கு உதவியது ஜெர்மன் அறிவியலாளர் 'வால்டர் ஹோமன்' என்பவரால் வகுத்தளிக்கப்பட்ட சுற்றுப்பதை மாற்ற போட்பாடு தான் (Hohmann transfer orbit). நாள்களை சரியாக கணக்கிட வேண்டும்; ஒவ்வொரு கோளின் ஈர்ப்பு விசையை துல்லியமாக கணக்கிட வேண்டும்; சுற்றுப்பாதையை அளவிட்டு வைத்திருக்க வேண்டும்; வேகம் மற்றும் திசைவேகம் சரியாக மதிப்பிடப்பட்டிருக்க வேண்டும்; எந்த நேரத்தில் எப்போது ஒரு கோளின் சுற்றுப்பாதையிலிருந்து மற்றொன்றிற்கு தாவி மாறிப்போக வேண்டும்; தகவல் தொடர்பை எவ்வாறு தொடர்ந்து உறுதிபடுத்த வேண்டும்; என்பன போன்ற பலதரப்பட்ட தீர்மானகரமான மதிப்பீடுகளில் இருந்து மட்டுமே 'மங்கள்யான்' திட்டம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதற்கு மாறாக நடிகர் மாதவன் அவர்கள் கூறியது போல பல கோணப் பார்வையில் பஞ்சாங்கத்தை பார்த்து அல்ல.

இது போன்றே நமது அன்றாட வாழ்வுகளிலும் பலவகைப்பட்ட மதிப்பீடுகள், அனுமானங்கள், யாதார்த்த உண்மைகளைக் கொண்டு சிறிய-பெரிய சிக்கல்களுக்கான தீர்வு கண்டுபிடித்து, தவறை சரிசெய்து முன்னோக்கி செல்ல முனைகிறோம். சரி-தவறை மறுக்கவும், சார்பற்ற, சார்புடைய உண்மைகள் இருப்பதை மறுக்கும் வகையில் மனிதனின் சிந்தனை போராட்டத்தை "சூழல்" - குழிக்குள் தள்ள முயல்கின்றனர்.

(படக் குறிப்பு: வெப் தொடரில் காட்டப்பட்ட இருட்றை ஆய்வுக் காட்சியின் கேள்வி

இந்தக் தொடரில்(Web series) காட்டப்பட்ட இருட்டறை ஆய்வு என்னவென்றால் ஒரு கதாபாத்திரம் உருளை வடிவில் இருக்கக்கூடிய ஒரு பொருளின் மீது செல்போன் டார்ச் அடித்து என்ன வடிவத்திலான நிழல்கள் உனக்குத் தெரிகிறது எனக் கேட்கும். இதற்கு மற்றொரு கதாப்பாத்திரம் இங்கு காட்டப்பட்டுள்ள படத்தில் உள்ளது போல செவ்வகம் மற்றும் உருண்டை நிழல் உருவங்கள் சுவரில் தெரிவதாக கூறும்; அதாவது ஒரு கோணத்தில் இருந்து பார்க்கும் பொழுது ஒரு தன்மையுடனும் பல கோணத்திலிருந்து பார்க்கும் பொழுது பல்வேறு தன்மையுடனும் தெரியும் என முடிந்துரைக்கிறார்கள்(Judgement). இவர்கள் சொல்வதை பார்த்தால் உலகில் உள்ள 700 கோடி மக்களும் வான்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தால், 700 கோடிக்கும் மேற்பட்ட ஆராய்ச்சி முடிவுகள் கிடைத்திருக்குமோ என்னவோ! பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை மறுப்பவர்கள், ஆதரிப்பவர்கள் என இவை இரண்டையும் தவிர வேறு எந்தவொரு புதிய கோணத்தில் பார்த்தும் புத்தம் புதிய கருத்துக்களை இதுவரை யாரும் வெளியிட முடியவில்லை தானே.

 

(படக் குறிப்பு: வெப் சீரிஸில் காட்டப்பட்டது போன்ற பின்நவீன கருத்தியலை விளக்கும் படம்)

இத்தொடருக்கு திரைக் கதை எழுதிய புஷ்கர்-காய்த்திரி இணையரின் ஆய்வுப் பொருள் என்ன? சிந்தனா முறை என்ன? என்பதை அவர்களே சமீபத்தில் நடந்த ஒரு யூடியுப் பேட்டியில் கூறியிருப்பார்கள். அதாவது: "கதாபாத்திரங்கள் ஏதோவொரு கருத்தியலை நம்பிகொண்டிருகிறார்கள்; அது கடவுள் ஏற்பு, கடவுள் மறுப்பு, கடவுள் நம்பிக்கையின்மை, கம்யுனிஸம் என எந்தவொரு கருத்தியலில் வேண்டுமானாலும் நம்பிக்கை கொண்டிருக்கலாம்; அதை அவர்கள் உலக நோக்கு என்றோ தன்னையறிதல் என்றோ சொல்லிக் கொள்ளலாம்; நாங்கள் அந்த நம்பிக்கையை கட்டுடைக்க முயன்றுள்ளோம்; நம்பிய ஒன்று இல்லையெனத் தெரியவரும்போது, அதாவது நம்பிக்கை கட்டுடைக்கப்படும் பொழுது அந்த கதாபாத்திரம் எவ்வாறெல்லாம் எதிர்வினையாற்றுகிறது என்பதை காட்சிப்படுத்த விரும்பினோம்; மனித இருப்பிற்கு அந்த நம்பிக்கைதானே ஊன்றுகோலாக உள்ளது; வாழ்வில் வரும் பெரிய சிக்கல்கள் எல்லாம் நாம் உண்மையாக நம்பிக்கொண்டிருக்கும் ஒன்று உடையும் பொழுது வருவதுதானே”; என்றே கூறிச் சென்றுள்ளார்கள்.

(படக் குறிப்பு: பின்நவீனத்துவ எதிர்புரட்சிகர கருத்தின் மூல-மூளைகள்)

மருந்திற்கு வேண்டுமானால் காலாவதி தேதியிருக்கலாம்; மருந்தை கண்டுபிடிக்க பயன்படுத்தப்பட்ட அணுகுமுறைக்கும், ஆய்வுமுறைக்கும் நிச்சயமாக காலாவதி தேதி இருக்க முடியாதல்லவா; அது போலத்தான் நம்பிக்கையின் அடிப்படையில் வெளிப்படுத்தக்கூடிய கருத்துகளுக்கும், ஆய்வு முறையின் அடிப்படையில் வெளிப்படுத்தக்கூடிய கருத்துகளுக்கும் இடையில் உள்ள அடிப்படை வேறுபாடுகளைக்கூட புரிந்துகொள்ளத் தவறியவர்கள் தான் இன்று நமக்கு தொடர்ச்சியாக பல கோணப் புதையல்

(புதைகுழிப்) பார்வையை திணிக்க முயல்கிறார்கள். இவர்கள் சமூக மாற்ற, சமூக இயக்க விதிகளை கண்டறிந்து மார்க்ஸ், ஏங்கெல்ஸ் வெளியிட்ட கம்யூனிஸக் கொள்கையை நம்பிக்கை என்ற 'டப்பா'க்குள் அடைக்க முயல்கிறார்கள்; அறிவு என்பதே சுழல் ஏணிதனே; தவறான மதிப்பீடுகளில் இருந்து, சரியான மதிப்பீடுகளுக்கு ஏறிச்சொல்லும் இந்த அறிவொளிப் பயணத்தில் அறிவியல் ஆய்வு முறையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட மதிப்பீடுகளை மெய்பிக்கவோ/பொய்யாக்கவோ நமக்கு கட்டுடைத்தல் தேவையில்லை தானே; இவர்கள் சொல்து போல நமக்கு மூடநம்பிக்கைகள் தேவையில்லை; ஆனால் அறிவியல் முறையில் நிரூபிக்கப்பட்ட ஆராரங்கள் தேவைதானே (அவர்களது கட்டுடைத்தலை நியாயப்படுத்த தேவைப்பட்ட ஒரு புள்ளியல் ஆதாம் போல); நமது உடலில் காயம் ஏற்பட்டு அடிபட்டு, இறந்துபோன பழைய தோல்களை பிரித்துக் கொண்டுதானே புதிய தோல்கள் உருவாகின்றன, இங்ஙனம் இருந்த பழைய தோல் இல்லவே இல்லை என்றும்; பார்ப்பவர்களது நம்பிக்கைக்கு ஏற்ப பல முகங்களையும், தோற்றத்தையும் வெளிப்படுத்தலாம் என்பதாக கட்டுடைக்கலாமா என்ன?;

(படக் குறிப்பு: படத்தின் முடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட புள்ளியல் தரவு)

அமாவாசை இருட்டில் பெருச்சாளிக்கு போன இடமெல்லாம் வழிதான் என்பது போல நம்மை இருக்க வைக்க முயல்கிறார்கள்; ஒரு பொருளின் வடிவத்தை / புற தோற்றத்தை வைத்து மட்டுமே அதற்கு பல தன்மைகள் இருப்பதாக புனைய முயல்கிறார்கள்; கொரோனா தீநுண்மையை எத்தனை கோணத்தில் பார்த்தாலும் அதனுடைய தீய பண்பு இல்லாமல் போய்விடுமா என்ன!; கண்ணுக்கு தெரியாத தீநுண்மியையும், வாழ்வில் பலரும் இதுவரையிலும் நேரடியாக பார்த்திராத வான்வெளியையும் ஆய்ந்து அளந்த அறிவியலுக்கு அன்றாட வாழ்க்கை பிரச்சினையை தீர்மானகரமாக மதிப்பிட தெரியாது; தீர்மானகரமாக மதிப்பிடப்பட்டவை எல்லாம் தவறாகவும் இருக்கலாம், இல்லையெனில் அது வேறு தன்மையுடையதாகவும் இருக்கலாம் என முடிந்துரைப்பது சரியாகுமா என்ன?

"ஏதொன்றையும் பற்றிக் பிடிக்காமல்

எப்படித்தான் கடப்பது;
பின்நவீன கட்டுடைத்தலை கட்டிப்பிடித்துக் கொண்டு திரியும்
உங்களைப் பார்த்துத்தான் . . . சொல்லுங்கள்!"

-    - விஜயன் (கட்டுரையாளர்)

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. விவாதத்திற்காக இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு